என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
சிறுகதை - சிறு தொடர்கதை [ பகுதி 2 of 4 ] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை - சிறு தொடர்கதை [ பகுதி 2 of 4 ] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 அக்டோபர், 2011

மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]



மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ பகுதி 2 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




பகுதி 1 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html


முன் கதை முடிந்த இடம்:






“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா! ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க” அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள். 




அனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ. 


சட்டெனத் துள்ளி எழுந்தான் மனோ.

===================================


சட்டென துள்ளி எழுந்தான் மனோ, தன் படுக்கையிலிருந்து. 




இதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்.



மாடியிலிருந்து கீழ் வீட்டு வாசலை நோக்கினான். அனு வழக்கம் போல கோலம் போட அமர்ந்திருப்பதை அறிந்து கொண்டான்.  




இந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு, சற்று முன்பு புடவையுடன், நிறை மாத கர்ப்பிணியாய், என் மனைவியாய், என்னுடன் எப்படி என் கைப்பிடிக்குள் சிக்கினாள். நினைக்க நினைக்க அவனுக்கு ஒரே சிரிப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. 


சதா சர்வ காலமும் நம் மனதிலும், நினைவிலும், அன்பிலும், ஆசையிலும் இருப்பவர்கள், கனவிலும் வரக்கூடும் என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.


அனு வீட்டு மாடிப்போர்ஷனில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் மன நல மருத்துவ மனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ.


உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 


வெள்ளைப்பணம், கறுப்புப்பணம் என பணத்திற்காக பேயாக அலையும் மனிதர்கள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர், சாமி பெயரைச் சொல்லி கோயில் பணத்தைக் கொள்ளையடிப்போர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போர், கஞ்சா கடத்துவோர், எதைப்பற்றியும் கவலையின்றி சதாசர்வ காலமும் குடி போதையில் மிதப்போர், பொடி, புகையிலை, வெற்றிலை பாக்கு, பீடி சிகரெட் சுருட்டுப் பிரியர்கள், காதல் போதையில் காமக்களியாட்டம் போடுவோர், காதல் தோல்வியால் மனம் உடைந்தோர்; 


கம்ப்யூட்டர், லாப்டாப், சாட்டிங், கார், பைக், செல்போன், சினிமா, டி.வி, டி.வி.சீரியல்கள், புடவைகள், நகைகள், புத்தகம், அரசியல், லாட்டரி, சூதாட்டம், சீட்டாட்டம், ஷேர்மார்க்கெட், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; 


கற்பனை உலகில் மிதப்போர், திடீரென இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைச் சந்திப்போர், நெருங்கிய சொந்தங்களின் மரணங்களால் அன்பை இழப்போர், விபத்துகள், கொலை, கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் நஷ்டங்களால் பாதிக்கப்பட்டோர் என பலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். 



கீழ் வீட்டுப்பெண் அனுராதாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அவனுக்குத் தோன்றியது, இங்கே அவன் புதிதாகக் குடிவந்த சமயம். அவள் ஒரு கோலப்பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் தான், மனோ.



அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலைப்பெருக்கி சாணத்துடன் கூடிய நீர் தெளித்து, கோலம் போடக் குனிந்தால் என்றால், சுமார் ஒரு மணி நேரம் குத்துக்காலிட்டு, இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாகக் கோலம் போடுபவள்.   



விடியற்காலம் எழுந்து வாக்கிங் போய் விட்டுத் திரும்பும் மனோவை அன்றைய தினம் அனுவால் போடப்பட்ட அழகிய புத்தம் புதிய மிகப்பெரிய கோலம் வரவேற்று, அவனை மிகவும் வியப்படையச் செய்யும்.  




நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கின.  



”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.



கோலத்தைச் சற்று நேரம் நின்று ரசித்துப்பார்த்து விட்டு, மாடி ஏறிப்போகும் மனோவை, சில நேரங்களில் அனுவும் வீட்டுக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியாகவோ, ஜன்னல் இடுக்கு வழியாகவோ பார்ப்பதுண்டு.



எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்!



மார்கழி மாதம் நெருங்கி விட்டது. பனி அதிகமாகக் கொட்டுகிறது. விடியற்காலம் வாக்கிங் போவதையே மனோ அடியோடு நிறுத்தி விட்டான். காரணம் கொட்டும் பனி மட்டுமல்ல. 




வாசலில் கோலம் போடும் அனுவை தன் அருகே அழைத்து ரசித்திட நேற்று அவன் புத்தம் புதியதாக வாங்கி வந்திருக்கும் பவர்ஃபுல் பைனாக்குலரும் தான்.



தினமும் அதிகாலை மனோதத்துவ டாக்டரின் மனதிற்கும், கண்களுக்கும் விருந்தளித்தது அந்த பைனாக்குலர். பருவமங்கையான அனுவின் அழகை அணுஅணுவாக அள்ளிப்பருகி ரசிக்க முடிந்தது, அவனின் மாடி அறையின் ஜன்னலிலிருந்தபடியே. 



பாவாடை, சட்டை, தாவணியில், காதில் தொங்கும் ஜிமிக்கிகளுடன், காலில் கொஞ்சும் கொலுசுகளுடன், வாழைத்தண்டு போன்ற வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமென்று தோன்றியது மனோவுக்கு. 



அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. 



அந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.  




தொடரும்