என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 8 மே, 2011

எங்கெங்கும் எப்போதும் என்னோடு [ பகுதி 3 of 3 ] இறுதிப்பகுதி



தாழ்வான அந்தத் திண்ணையிலிருந்து எழும் போதே என்னைத் தள்ளி விடுவது போல உணர்ந்தேன்.  இனிமேலும் நடந்தால் சரிப்பட்டு வராது என்று அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். 

ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு, என் குடியிருப்பை நோக்கி நடக்க நினைக்கையில், டாக்டர் எதிரில் தென்பட்டார்.  வணக்கம் தெரிவித்தேன்.  

“என்ன....இன்னிக்கு வாக்கிங் போனீங்களா?” என்று கேட்டார்.  

”இப்போது வாக்கிங் போய் விட்டுத் தான் திரும்ப வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன்.   

”வெரி குட் - கீப் இட் அப்” என்று சொல்லிப்போனார்.


பழக்கமே இல்லாமல் இன்று ரொம்ப தூரம் நடந்து விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைப்பிலேயே, இரவு பலகாரம் சாப்பிட்டு விட்டு, இரண்டு கால்களுக்கும் ஆயிண்மெண்ட் தடவிகொண்டு, படுத்தவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.  

அடுத்த இரண்டு நாட்களுக்கு வாக்கிங் போக வேண்டாம் என்று முடிவு எடுக்குமாறு, சற்றே மழை பெய்து உதவியது.  அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் ஏதோ சோம்பலில் வாக்கிங் போக விரும்பவில்லை.  

மறுநாள் ஆங்கில முதல் தேதியாக இருந்ததால், நாளை முதல் தொடர்ச்சியாக வாக்கிங் போக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டேன். 


மறுநாள் மழை இல்லை.  வெய்யிலும் மிதமாகவே இருந்தது. எனக்குள் என்னவோ அந்தப் பெரியவரை மீண்டும் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  

நடந்து போக மிகவும் சோம்பலாக இருந்ததால், போகும் போது ஆட்டோவில் சென்று விட்டு, திரும்ப வரும் போது நடந்தே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோவில் ஏறினேன்.  அந்தச் சந்தின் அருகே இறங்கிக் கொண்டேன்.  

அந்த முதல் வீட்டுத் திண்ணைக்கு இன்னும் அந்தப் பெரியவர் வந்து சேரவில்லை.  கொஞ்சம் நேரம் வெயிட் செய்து பார்ப்போம், பிறகு அவர் வீட்டுக்கே சென்று அழைத்து வந்து விடலாம் என்ற யோசனையுடன் நான் மட்டும் அந்தக் குட்டைத் திண்ணையில் குனிந்து அமர்ந்தேன். 

சற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.   

ஆனால் அவர் தானே நடந்து வரவில்லை.   மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில்.  சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.    


இதைக்கண்ட எனக்கு ஏனோ என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.  வண்டியைச் சற்று நிறுத்தி அந்தப் பெரியவரின் முகத்தை நன்றாக ஒரு முறை உற்று நோக்கிவிட்டு, அவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன்.  

“வாங்கய்யா .. வாங்க, வணக்கம், உட்காருங்க” என்று வாய் நிறைய  அன்று  என்னை வரவேற்றவர், இன்று பேரமைதியுடன் ஆனால் சிரித்த முகத்துடன் படுத்திருப்பது  என் மனதைப் பிசைவதாக இருந்தது.


முன்னால் தீச்சட்டியை தூக்கிச்சென்ற நபர் அந்தப் பெரியவரின் மாப்பிள்ளையாகத் தான் இருக்க வேண்டும்.  என்னை, யார் நீங்கள்? என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.  பெரியவரின் உடலுக்கு அருகே அவர் உபயோகித்த கைத்தடியும் இருந்தது.

“அந்தக் கைத்தடியை பெரியவரின் ஞாபகார்த்தமாக நான் வைத்துக் கொள்கிறேன்” என்ற என் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்தக் கைத்தடி என் கைக்கு மாறியது.  அதை ஊன்றியபடியே, பெரியவரின் இறுதி ஊர்வலத்தில் நானும் நடந்தே சென்று கலந்து கொண்டேன்.

ஆற்றில் குளித்து விட்டு அவரின் வீடு இருக்கும் சந்து வரை மீண்டும் நடந்தே வந்தேன். 

அன்று வந்த இளநீர் வியாபாரி இன்றும் என்னிடம் வந்தார்.  இரண்டு இளநீர் சீவச் சொன்னேன்.  சீவிய ஒன்றை பெரியவர் அன்று அமர்ந்திருந்த திண்ணையில் படையலாக வைத்தேன்.  மற்றொன்றை நான் குடித்தேன்.  

இன்றைக்கு நான் குடித்த இளநீர் அன்று போல இனிப்பாக இல்லை.  மனதில் எதையோ பறிகொடுத்தது போல இருந்தது.  என் வீடு நோக்கி மீண்டும் நடக்கலானேன்.

எங்கெங்கும், எப்போதும், என்றென்றும், என்னோடு பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது.  தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன். 

கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது. 

-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

40 கருத்துகள்:

  1. //
    கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது. //

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. கண்ணீரை கட்டுபடுத்த முடியலங்க.....

    பதிலளிநீக்கு
  3. நாஞ்சில்மனோ வலைப்பூ தனது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறது....

    பதிலளிநீக்கு
  4. எங்கெங்கும், எப்போதும், என்றென்றும், என்னோடு பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது.//
    ஏனோ என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது/

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. அன்பென்றால் என்னவென்று கேட்டு நம் இருவருக்கும் பொதுவான பதிவுலக நண்பர் GMB அவர்கள் அவர் பாணியில் கேள்வி எழுப்பி என்னை சிந்தனையில் ஆழ்த்திவிட்டார். கஷ்டமான கேள்வி CHOICE லே விட்டுடலாமென்று முடிவு செய்தும் விட்டேன்.

    பதில், இந்தக் கதையில் எவ்வளவு அழகாக வடித்திருகிறீர்கள்.

    சூப்பரோ சூப்பர் சார்.( தமிழில் இணையான சொல் கிடைக்கவில்லை)

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா8 மே, 2011 அன்று PM 3:41

    பெரியவருக்கு எனது அஞ்சலிகள்... இறுதி வரிகள் ஆழ்ந்த அமைதியை தந்துவிட்டது என்னுள் ((

    பதிலளிநீக்கு
  7. யார் யாரோ சொல்லியும் எத்தனையோ சங்கல்ப்பித்தும் நடக்க யத்தனிக்காத நமது ஹீரோவை அந்தப் பெரியவரின் பேரமைதி கைத்தடி கொடுத்து நிரந்தரமாக நடக்கவைத்துவிட்டது கோபு சார்.

    இதைத்தான்-

    நடக்குமென்பார் நடக்காது
    நடக்காதென்பார் நடந்துவிடும்

    என்று கண்ணதாசன் பாடினாரோ?

    பதிலளிநீக்கு
  8. அருமை அருமை
    இப்படித்தான் வாழ்வில் ஏதோ ஒரு நொடியில்
    அல்லது ஏதோ ஒரு நிகழ்வில்
    நம்முடன் தொடர்புகொண்டவர்கள்
    நம்மிடம் மிகப் பெரிய பாதிப்பை
    ஏற்படுத்திப் போய்விடுகிறார்கள்
    மனிதர்கள் மட்டும் அல்ல
    சில படைப்புகளும் கூட
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. கோபு சார், நகைச்சுவையாக மட்டுமல்ல, சீரியஸாகவும் எழுதி கலக்குகிறீர்கள். சில நிகழ்வுகளின் பாதிப்புகள் கற்பனைக் கலந்து கதையாக உருவாகும்போது, அதன் தாக்கம் எந்த வாசகனையும் ச்ற்றே சிந்திக்கச் செய்யும். தரமான பதிவு, நீரோட்டமான நடை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. பழக ஆரம்பிக்கும்போது தெரிய வராது. சில நாட்கள் பழகியதும் சிலர் நம்முள் ஒரு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி போய் விடுவார்கள். நம் பிறவியை அர்த்தப்படுத்தும் அம்மாதிரி ஜீவன்களால்தான் இன்னமும் வாழ்க்கைக்கு சுவாரசியம் கிடைக்கிறது.
    சூப்பர் கதை.

    பதிலளிநீக்கு
  11. அனுபவம் மிக்க பெரியவர்களுடன் பத்து நிமிட சந்திப்பு கூட நம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    கம்பன் வீட்டு கைத்தடியும் கவி பாடும் என்பது போல தங்கள் சிந்தனையில் தோன்றிய கைத்தடியும் காவியம் படைக்கிறது.

    சிறந்த படைப்பு . வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  12. எதிர்பாராத ஒரு முடிவு. நல்ல கதை. வாழ்வில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் இப்படித்தான் நம்மில் ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டு சந்தடியில்லாமல் சென்று விடுகிறார்கள். நல்ல கதை கொடுத்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சிலர் ஒரே சந்திப்பில் மனதுக்கு பிடித்துப் போய் விடுவார்கள். அப்படி அந்தப் பெரியவரும் கதாநாயகருக்கு பிடித்து எங்களுக்கும் பிடித்து விட்டார். கதாநாயகரை வேறு 'எதையும்' நினைக்காமல் நடைப்பயணமும் செய்ய வைத்துவிட்டார்!

    பதிலளிநீக்கு
  14. நமக்கு வாழ்வில் எத்தனை அனுபவங்கள். அதையும்
    மனதில் பதியும்படி எழுத்தில் கொண்டுவருவது அவ்வ
    ளவு சுலபமில்லைதான். அதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிரீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. எங்கெங்கும், எப்போதும், என்றென்றும், என்னோடு பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது. தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன்.

    கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது.



    ......very touching story. நகைச்சுவையாக மட்டும் அல்ல, மனதில் சோக சாயல் விட்டு செல்லும் கதைகளையும் எழுத முடியும் என்று உணர்த்தி விட்டீங்க.

    பதிலளிநீக்கு
  16. எதிர்பாராத உருக்கமான முடிவு

    பதிலளிநீக்கு
  17. நம்முடைய சில சங்கல்பங்களுக்கு பின்னே சற்றும் சம்பந்தமில்லாத மனிதர்கள் தூண்டுகோலாக இருப்பார்கள். அது போன்ற வினாடிகளை நாம் யாருக்காவது தோற்றுவித்திருந்தால் வாழ்க்கையின் அர்த்தம் அதுதான். இதுதா இந்த கதை எனக்கு சொன்ன நீதி. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  18. periyavar iranthathil naanum peramaithiyaakitten sir,tamil type writer ai activite sivatharkul porumai illai,athaan thanglish comment.

    ippadiyoru mudivai ethir paarkkavillai.ungalin iththnai padaippukalil intha pathivu en manathil aazamaaka pathinthu vittathu.

    பதிலளிநீக்கு
  19. உண்மையான சம்பவம் போல் இருக்கு.. உணர்வுப்பூர்வமான நடை..

    பதிலளிநீக்கு
  20. அந்தப் பெரியவருக்கு எனது அஞ்சலிகள்! உண்மையில் இதனை வாசிக்கும் போது எமக்கே மனசுக்கு கஷ்டமா இருக்கு! உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? என்று யோசித்துப் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  21. உங்களின் மடை திறந்த
    எங்களின் மனம் திறந்த - மனித அபிமானம்
    சிகரத்தில் சிங்கமென இருக்கீங்க ஐயா
    மலரட்டும் எங்களிடையேயும்
    உங்களின்
    உயர்
    உன்னத எண்ணம்

    பதிலளிநீக்கு
  22. கதை நெகிழ்ச்சி.

    பெரியவரின் கைத்தடி ஊடாக உடல்நலத்துக்கு நடைப்பயிற்சியும் அவசியம் என்பதை வலுவுறுத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. தொடர்ந்து இந்த இறுதிப்பகுதிக்கும் வருகை தந்து சிறப்பித்து, தங்கள் மேலான கருத்துக்களைக் கூறி பின்னூடம் அளித்து, பாராட்டுக்கள் தெரிவித்து, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு உடன்பிறப்புக்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் வோட்டு அளித்துள்ள அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  24. நெஞ்சை கனக்க வைத்தது பெரியவரின் இறப்பு. சில மனிதர்கள் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  25. கோவை2தில்லி said...
    //நெஞ்சை கனக்க வைத்தது பெரியவரின் இறப்பு. சில மனிதர்கள் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விடுகிறார்கள்.//

    ஆம் நீங்கள் சொல்வது மிகவும் சரி தான்.
    தங்கள் வருகை+கருத்துக்கு மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  26. //சற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    ஆனால் அவர் தானே நடந்து வரவில்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில். சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.// உங்களுக்கு மட்டுமல்ல சார், எனக்கும் தான் கண்ணீர் பெருகுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. nunmadhi October 16, 2011 10:49 AM
      ***சற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

      ஆனால் அவர் தானே நடந்து வரவில்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில். சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.***

      // உங்களுக்கு மட்டுமல்ல சார், எனக்கும் தான் கண்ணீர் பெருகுகிறது.//

      அன்பின் நுண்மதி, வாருங்களம்மா, வணக்கம்.

      கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். முகத்தினைப் பளிச்சென்று அலம்பிக்கொண்டு, மேக்-அப் போட்டு, கண்ணாடியில் பார்த்து கலகல்ப்பாகச் சிரியுங்கோ.

      ஆஹா, சிரிப்பொலியில் தான் என் கெளரிலக்ஷ்மி
      அழகோ அழகாகத் தோன்றுகிறாள்.

      மிக்க மகிழ்ச்சி .... ராணி.

      அன்புடன்
      கோபு அண்ணா

      நீக்கு
  27. நெகிழ்வடையச் செய்துவிட்ட உயிர்க்காவியம். சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்.
    நகைச்சுவை இருந்தாலும் பெரியவரும் அவரோடு இக்கதை நாயகனுக்கு வந்த தொடர்பும் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

    கதை முடிவில் அந்தப் பெரியவரின் இறுதி ஊர்வலம் என்னை உறைய வைத்துவிட்டது.

    நாம் சந்திக்கும் எம்மைக்கடந்து போகும் எத்தனையோ நபர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறையப் பாடங்கள் உள்ளன என்னும் உயரிய கருத்தை கூறியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  28. இளமதி October 17, 2012 3:53 PM

    வாங்கோ இளமதி. செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

    //நெகிழ்வடையச் செய்துவிட்ட உயிர்க்காவியம்.//

    அடடா, எனக்கு இப்போ தான் உயிர் வந்தது போல உள்ளது.

    //சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்.//

    அதெல்லாம் தேடிக் கஷ்டப்படாதீங்கோ, ப்ளீஸ்.

    //நகைச்சுவை இருந்தாலும் பெரியவரும் அவரோடு இக்கதை நாயகனுக்கு வந்த தொடர்பும் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.//

    இதெல்லாம் வாழ்க்கையில், ஒரு க்ஷணத்தில், ஏதோ ஓர் ஈர்ப்பில், ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்பட்டுவிடும் தொடர்பே தான். சமயத்தில் இத்தகைய தொடர்புகளில் சில, தாங்கள் சொல்வது போல மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிடுவதும் உண்டு தான்.

    //கதை முடிவில் அந்தப் பெரியவரின் இறுதி ஊர்வலம் என்னை உறைய வைத்துவிட்டது.//

    கதை எழுதிய எனக்கும் தான். அப்படியே பனிக்கட்டிபோல உறைந்து போய் விட்டேன். நள்ளிரவு நேரம் அது. சூரிய ஒளி இருந்தாலாவது உறையாமல் உருகி இருக்கலாம். ;)

    //நாம் சந்திக்கும் எம்மைக்கடந்து போகும் எத்தனையோ நபர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறையப் பாடங்கள் உள்ளன என்னும் உயரிய கருத்தை கூறியுள்ளீர்கள்.//

    அப்படியா இளமதி! சந்தோஷம். நாம் சந்திக்கும் மற்றும் கடந்து போகும் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன தான். கற்றது கைமண் அளவே. ஆனால் கல்லாதது: உலகலவு MINUS கைமண் அளவு. ;)))))

    //மிக்க நன்றி ஐயா!//

    அன்புடன் வருகை தந்து அழகாக கருத்துக்கள் கூறியுள்ள தங்களுக்குத் தான் நான் நன்றி கூற வேண்டும்.

    நன்றியோ நன்றிகள். மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  29. அருமையான நினைவாஞ்சலி. அவருடைய கைத்தடியுடன் நடக்கும்போது அவரும் கூட வருகிறாப்போல் இருந்தால் எந்த அளவிற்கு ஒரு நாள் பழக்கமே ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
  30. அந்த பெரியவரின நட்பால் அவரின் கைத்தடியடன் தினசரி வாக் போகணும் என்று தோன்றி இருக்கிறதே. இது நல்ல திருப்பம் தானே.

    பதிலளிநீக்கு
  31. ஒரு முறையோ, பல முறையோ நம்மால் சிலருடன் தான் ஆத்மார்த்தமாகப் பழக முடியும். போன ஜென்மத்து விட்ட குறை, தொட்ட குறையாகத்தான் இருக்கும்.

    //கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது. //

    என்ன ஒரு வரிகள். நெஞ்சைத் தொட்ட வரிகள்.

    நெஞ்சைத் தொட்ட கதையும் கூட.

    கதையைக் கதையாகப் பார்க்க முடியாத கதை.

    அருமை அண்ணா.

    HATS OFF TO YOU

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 2, 2015 at 10:00 PM
      ஒரு முறையோ, பல முறையோ நம்மால் சிலருடன் தான் ஆத்மார்த்தமாகப் பழக முடியும். போன ஜென்மத்து விட்ட குறை, தொட்ட குறையாகத்தான் இருக்கும். //

      மிகச்சரியாகச் சொல்லிட்டீங்கோ, ஜெயா.

      என்ன ஒரு வரிகள். நெஞ்சைத் தொட்ட வரிகள்.
      நெஞ்சைத் தொட்ட கதையும் கூட.
      கதையைக் கதையாகப் பார்க்க முடியாத கதை.
      அருமை அண்ணா.
      HATS OFF TO YOU//

      மிகவும் சந்தோஷம் + மகிழ்ச்சி ஜெயா.

      நீக்கு
  32. பாவம் தா. 80-- வயசான வயசாளிக நெரய கஸ்டங்க பட்டிருப்பாக.
    அந்த ஆளோட நெனவுககா கைத்தடியாச்சும் கெடச்சிச்சே. அது வச்சு வாக்கிங்கு போயி எட கொரைக்கோனும்.

    பதிலளிநீக்கு
  33. நல்ல கதை. முடிவு சோகமென்றாலும்திண்ணை வைத்த வீடுகள் இளநீர் காரர் பஜ்ஜி கடைக்காரர் ஆட்டோகாரர் கடைசியாக பெரியவர் நினைவாக கைத்தடி எல்லாமே நினைவில் நிறைந்தது

    பதிலளிநீக்கு
  34. //
    எங்கெங்கும், எப்போதும், என்றென்றும், என்னோடு பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது. தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன்.

    கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது. // அற்புதம்...சில மனிதர்களை இப்படித்தான் நம் மனம் கவர்ந்தவர்களாக இருந்தாலும் இரண்டாம் முறை சந்திக்கவே முடியாமல் போய்விடுகிறது...பெரிய மனிதர் ... ஊன்றுகோல்...அருமை...

    பதிலளிநீக்கு
  35. //எங்கெங்கும், எப்போதும், என்றென்றும், என்னோடு பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது. தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன். //
    சோகமான முடிவு! மனம் கவர்ந்த கதை!

    பதிலளிநீக்கு
  36. இறுதி பகுதி பெரியவரின் இறுதி யாத்திரையாக அமைந்து விட்டதே.. ஆத்மார்த்தமான நட்புகள் நம்மை விட்டு விலகி செல்லும்போது நம் வேதனை வலிகளை வார்த்தைகளில் விளக்கி சொல்ல முடியாதுதான் அவரின் ஞாபகார்த்தமாக அவரின் கைத்தடியாவது கிடைத்ததே என்று ஆறுதல் பெற வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... August 8, 2016 at 11:28 AM

      வாங்கோ .... வணக்கம்.

      //இறுதி பகுதி பெரியவரின் இறுதி யாத்திரையாக அமைந்து விட்டதே..//

      ஆம். அது என்னவோ, நான் சற்றும் எதிர்பாராமல், அது போலத்தான் அமைந்து விட்டது.

      //ஆத்மார்த்தமான நட்புகள் நம்மை விட்டு விலகி செல்லும்போது நம் வேதனை வலிகளை வார்த்தைகளில் விளக்கி சொல்ல முடியாதுதான்.//

      மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அதே... அதே... !

      //அவரின் ஞாபகார்த்தமாக அவரின் கைத்தடியாவது கிடைத்ததே என்று ஆறுதல் பெற வேண்டியதுதான்..//

      என் மீது அளவு கடந்த ஆத்மார்த்தமான பிரியம், சிலரின் மனதில் இன்றும் இன்னும் இருப்பினும்கூட, பல்வேறு தனிப்பட்ட சொந்தக் காரணங்களாலும், அவர்களின் குடும்ப சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லாததாலும், இன்று என்னைவிட்டு சற்றே பிரிய நேர்ந்துள்ள அந்த அன்புள்ளம் கொண்ட வாசகர்களின் அழகான, அருமையான, அசத்தலான பின்னூட்டங்களை (இந்தக்கதையில் வரும் கைத்தடி போல நினைத்து) அடிக்கடி நான் படித்துப்பார்த்து இன்புற்று ஆறுதல் பெற்று வருகிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு