About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, September 21, 2011

அட்டெண்டர் ஆறுமுகம்


அட்டெண்டர் ஆறுமுகம்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


நூற்றுக்கணக்கான பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலக வேலை நேரம் முடிந்து அநேகமாக எல்லோரும் வெளியேறிய பின் மிகவும் தயங்கியவாறே, மேனேஜர் அறைக்குள் மிகவும் பெளவ்யமாக நுழைந்தார் அட்டெண்டர் ஆறுமுகம். 

வயது ஐம்பத்தாறு. சற்றே கருத்த நிறம். ஒல்லியான தேகம். நெட்டையான உருவம்.   இடுங்கிய கன்னங்கள். முரட்டு மீசை. காக்கியில் யூனிஃபாஃர்ம் பேண்ட், சட்டை; கழுத்துக்காலரில் எப்போதும் ஒரு கர்சீஃப். அடுத்தவருக்கு இரக்கம் ஏற்படுவதுபோல ஒருவித புன்னகையுடன் கூடிய ஏக்கப்பார்வையும், கூழைக் கும்பிடுவும் தான் ஆறுமுகத்தின் அங்க அடையாளங்கள்.

”கும்புடறேன் எஜமான்” ஆறுமுகம் குழைந்தார்.

”என்ன ஆறுமுகம்? என்ன தயங்கித் தயங்கி நிற்கிறீங்க! என்ன வேணும் சொல்லுங்க!!” மேனேஜர் அவர்கள் கனிவுடன் வினவினார்.

”ஐயா, என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கேன். புரோக்கர் நல்ல இடமா ஒன்னு பார்த்துச் சொல்லியிருக்காரு. மேற்கொண்டு பேசி முடிக்கணும். சரிப்பட்டு ஒத்து வந்தால் வரும் தை மாசமே முடிச்சுடலாம்னு நினைக்கிறேன்” என்றார்.

”ரொம்ப சந்தோஷம், ஆறுமுகம். ஏதாவது பி.எஃப். லோன் அவசரமா சாங்ஷன் செய்யணுமா? வேறு ஏதாவது உதவிகள் தேவையா? நீங்க தான் இந்த ஆபீஸிலேயே ரொம்ப நாள் சர்வீஸ் போட்ட பழைய ஆளு. சங்கோஜப்படாம எந்த உதவி வேண்டுமானாலும் தைர்யமாக கேளுங்க” என்றார் மேனேஜர். 

“உங்க புண்ணியத்திலேயும், கடவுள் புண்ணியத்திலேயும், வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, பொண்ணு பிறந்த நாளிலிருந்து இன்னிக்கு வரை, அவள் கல்யாணத்துக்கு வேண்டிய, பணம், நகை நட்டு, பாத்திரம் பண்டம் எல்லாம் ஓரளவு சேர்த்து வைச்சுட்டேனுங்க, ஐயா” என்றார் ஆறுமுகம்.

”வெரிகுட், அப்புறம் என்ன ஆறுமுகம்; சீக்கிரமாப்போய் பேசி முடிச்சுட வேண்டியது தானே” என்றார் மேனேஜர்.

“பேசி முடிச்சுட்டா, பத்திரிகை அடிக்கணுமே, ஐயா” என்றார் ஆறுமுகம்.

”பத்திரிகை அடிப்பதிலே என்ன பெரிய பிரச்சனை? நானே வேண்டுமானால் என் செலவிலேயே அடித்துத் தரட்டுமா? டிசைன் செலெக்ட் செய்யணுமா? வாசகம் ஏதாவது அழகாக எழுதித்தரணுமா? ப்ரூஃப் கரெக்ட் செய்து தரணுமா? சொல்லுங்க ஆறுமுகம்! என்னிடம் நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க? 

”ஐயா, நானும் இந்த ஆபீஸிலே சேர்ந்து இன்னியோட முப்பத்து ஆறு வருஷமாச்சு. இருபது வயசுலே இங்கே வேலைக்குச்சேர்ந்தேன். இன்னும் இரண்டு வருஷத்திலே ரிடயர்ட் ஆகப்போகிறேன்; 

நானும் உங்களை மாதிரி என் சர்வீஸிலே ஒரு இருபது மேனேஜர்களைப் பார்த்து விட்டேன்.  டிரான்ஸ்ஃபரில் இங்கே வருவீங்க. ஒரு வருஷமோ இரண்டு வருஷங்களோ இங்கே இருப்பீங்க. பிறகு மூணாவது வருஷத்திற்குள் பிரமோஷனில், இங்கிருந்து வேறு ப்ராஞ்சுக்கு மாற்றலாகிப் போயிடுவீங்க;

ஆனால் என் நிலைமையை சற்றே யோசனை செய்து பாருங்க.  1975 இல் நான் இந்த ஆபீஸிலே சேரும்போது அட்டெண்டர்.  1990 இல் எனக்கு ஒரு பொஞ்சாதி அமைந்தபோதும் நான் அட்டெண்டர். இப்போ 2011 இல் என் பொண்ணைக் கட்டிக்கொடுக்க நினைக்கும் போதும் அதே அட்டெண்டர். நாளைக்கே நான் ஒரு வேளை ரிடயர்ட் ஆனாலும், (முன்னாள்) அட்டெண்டர்; 

எனக்கே என்னை நினைக்க ஒரு வித வெட்கமாகவும், வேதனையாகவும், வெறுப்பாகவும் உள்ளது; இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எப்போதும் ஒருவித மன உளைச்சலைத் தந்து வாட்டி வருகுது, ஐயா ;

வருஷாவருஷம் இன்க்ரிமெண்ட் கிடைக்குது. சம்பளம் உயருது. பஞ்சப்படியும் உயருது, ஓவர்டைம் பணம் கிடைக்குது, போனஸும் கிடைக்குது;

இவையெல்லாமே கிடைத்து ஓரளவுக்கு கெளரவமாக வாழ்ந்தும்,  என் பொண்ணுக்கு சம்பந்தம் பேசும் இடத்தில் நான் இன்ன கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்று பெருமையாகச் சொன்னவுடன், அங்கு என்ன வேலை பார்க்கிறீங்க என்று எதிர் கேள்வி கேட்குறாங்க;

நாளைக்கு மாப்பிள்ளையா வரப்போகிறவருக்கும், தன் மாமனார் ஒரு அட்டெண்டர் என்றால், அவரிடமிருந்து எனக்கு ஒரு மரியாதை கிடைக்குமா என்றும் நினைக்கவே சற்று சங்கடமாக உள்ளது,  ஐயா;

இதையெல்லாம் ஐயா கொஞ்சம் நினைத்துப்பார்த்து மேலிடத்தில் சொல்லி ஏதாவது ஒரு மாற்று வழி பண்ண வேண்டும்” என்றார் ஆறுமுகம்.


அதிகம் படிக்காதவராக இருப்பினும், அனுபவ அறிவினாலும், ஆர்வத்தினாலும் பல விஷயங்களில் மிகவும் கெட்டிக்காரரான ஆறுமுகத்தின் கோரிக்கையிலுள்ள நியாயமானதொரு சமூகப்பிரச்சனையை முற்றிலும் உணர்ந்து கொண்டார், மனிதாபிமானம் மிக்க அந்த மேனேஜர். 








அடுத்து வந்த இயக்குனர்கள் கூட்டத்தில் இந்த விஷயத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்துப் பேசி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி செய்தார், அந்த மேனேஜர்.


படிக்காதவர்களாக இருப்பினும், கடைநிலை ஊழியர்களில் 10 ஆண்டுகள் பணியாற்றி முடித்தவர்களுக்கு ஜிராக்ஸ் ஆப்பரேட்டர்கள் என்றும், 20 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு ரிக்கார்டு கிளார்க்குகள் என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அலுவலக குமாஸ்தாக்கள் [Office Clerk] என்றும் உடனடியாக பதவி மாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.


ஆர்டரை கையில் பெற்ற ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேனேஜரை தனிமையில் சந்தித்து நன்றி கூறினார்.


”பெண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்து, மாப்பிள்ளை வரப்போகும் அதிர்ஷ்ட வேளை தான், நம் அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு பிரமோஷன் வந்துள்ளது” என்று அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.




-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

52 comments:

  1. //மனிதாபிமானம் மிக்க அந்த மேனேஜர். //
    He is really Great .கதை ரொம்ப நல்லா இருக்கு .

    ReplyDelete
  2. சிறிதான நல்ல கதை . பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. அன்பின் வை.கோ - பொதுவாக சில வருடங்கள் கழிந்த உடனேயே - இது மாதிரி பதவி மாற்றங்கள் தரப்படுகின்றன. தனியார் நிறுவனங்களீல் எப்படியோ தெரியவில்லை.

    ஒரு சிறு குறை கண்ணை உறுத்தியது. அட்டெண்டர ஆறுமுகத்தினை அவன் இவன் என்ற ஏக வசனத்திலேயே எழுத வேண்டுமா ? சற்றே சிந்திக்கலாமே !

    கதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. பெயரில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் பெயரிலும் இருக்கிறது சூட்சுமம்.

    ReplyDelete
  5. கடைநிலை ஊழியர்களின் மனக் குறையைச் சொல்லும் கதை. ஆறுமுகம் அங்க வர்ணனை-ரசித்தேன்.

    ReplyDelete
  6. புத்திசாலித்தனமான அட்டெண்டடர்
    தன் கோரிக்கை ஞாயமானதாக இருந்தால் கூட
    அதை சொல்லுகிறவிதம்மும் அதன் காரணமாகவே
    செய்ய நினைக்கிறவர்களும் மனமுவந்து செய்துதர
    எண்ணுகிற மாதிரி நடந்து கொண்ட விதமும்
    அனைவருக்குமான அருமையான படிப்பினை
    தரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  7. கதை எதார்த்தம். வருடக்கணக்கில் இப்படி இருந்தால் அது சங்கடப்படுத்தும் என்பது உண்மை. தனியார் நிறுவனங்களில் இருபது வருடங்களாய் ஒரே பதவியில் இருப்பது (நல்லவேளை) சாத்தியமில்லை.

    நன்றாக இருக்கிறது! :-)

    ReplyDelete
  8. அட, என்னமாய் மனதை நெகிழ வைத்து விட்டது கதை!

    ReplyDelete
  9. அட, என்னமாய் மனதை நெகிழ வைத்து விட்டது கதை!

    ReplyDelete
  10. ஒரு சிறு விஷயத்தையும் கதையாகப் படைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.வழக்கம்போல் அருமை

    ReplyDelete
  11. நல்ல கதை.... கடைநிலை ஊழியரின் மனதைப் புரிந்து கொண்ட மனிதாபிமானம் மிக்க மேனேஜர்.... எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரே பதவியில் இருப்பதன் சோகம்.... எல்லாவற்றையும் அழகாய்ச் சொல்லிச் சென்ற உங்கள் பாங்கு நன்று....

    ReplyDelete
  12. ஒரு கடைநிலை ஊழியரின் மன நிலையை வெகு அழகாக விவரித்து உள்ளீர்கள்.
    மனிதாபிமான மிக்க அந்த மேஜேருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஒரு சமுதாய சிந்தனையை தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அதிகம் படிக்காதவனாக இருப்பினும், அனுபவ அறிவினாலும், ஆர்வத்தினாலும் பல விஷயங்களில் மிகவும் கெட்டிக்காரரான ஆறுமுகத்தின் கோரிக்கையிலுள்ள நியாயமானதொரு சமூகப்பிரச்சனையை முற்றிலும் உணர்ந்து கொண்டார், மனிதாபிமானம் மிக்க அந்த மேனேஜர்//


    அருமையான கதாபாத்திரம் இந்த மேனேஜர் ...
    மனதை நெகிழச் செய்த பதிவு..

    ReplyDelete
  15. யதார்த்தமான அருமையான கதை.

    ReplyDelete
  16. சின்ன கதைதான் ஆனாலும்
    மன நிறைவைத் தந்த
    முடிவு அன்றே சொன்னேன்
    நீங்கள் வைகோ அல்ல
    கதைக்கோ
    வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. I can visualize the attender with his dress and manners - great description of characters!

    ReplyDelete
  18. சிறுகதையின் தொகுப்பு அருமை

    இந்த கதையில் வரும் ஆறுமுகத்தின் நிறை என்று பார்த்தால் தனது மகளின் எதிர்காலத்திற்காக துணிந்து சென்று மேலாளரை பார்த்து பேசிய விதம்...

    குறை என்று பார்த்தால் அவருக்குள் தோன்றிய தாழ்வு மனப்பான்மைதான் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    எந்த வேலையாக இருந்தால் என்ன? அட்டெண்டராக இருந்தாலும் தன் மகளை நன்றாக வளர்த்து நல்ல இடத்தில் வரன் பார்த்திருக்கின்றாரே என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் தான் இன்னமும் அதே அட்டெண்டர் தானா என்று அவர் நினைத்திருக்க கூடாது...

    ReplyDelete
  19. உழைப்பிற்கு இதுபோல மரியாதை கிடைப்பது மிக நல்ல விசயம். தனியார் நிறுவனங்கள் அவர்களை இன்னும் மட்டமாக மதிக்கின்றனர். என்னுடைய அனுபவத்தில் - அட்டெண்டர் என்றால் கடைசிவரை அட்டெண்டர்தான். நேரம் காலமில்லாமல் உயர் அதிகாரிகள் வேலை வாங்கிவிட்டு, ஊதிய உயர்வு சமயத்தில் நீ என்ன படிச்சியா என்று கேள்வி வேறு கேட்பார்கள். இதுவும் ஒரு சமூக அநீதிதான்.

    ReplyDelete
  20. ஆறுமுகத்தின் கவலையை தீர்த்து வைத்த மானேஜர் நல்ல மனிதர்.

    நல்ல கதை.

    த.ம 8 , இண்ட்லி 16.

    ReplyDelete
  21. ஆறுமுகத்தின் பொறுமை,பணிவு,அனுகியவிதம் , மேனேஜரின் நல்ல மனது மனதைக் கவர்ந்தது

    ReplyDelete
  22. இது ஒரு உண்மைக் கதை.. சரிதானா ”கதைக்கோ” ஸார்..

    ReplyDelete
  23. cheena (சீனா) said...

    //ஒரு சிறு குறை கண்ணை உறுத்தியது. அட்டெண்டர ஆறுமுகத்தினை அவன் இவன் என்ற ஏக வசனத்திலேயே எழுத வேண்டுமா ? சற்றே சிந்திக்கலாமே ! //

    குறைகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள், ஐயா. தவறுக்கு வருந்துகிறேன். இப்போது அதை சரிசெய்து விட்டேன்.

    //கதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    நன்றிகள் ஐயா. அன்புடன் vgk

    ReplyDelete
  24. மிக அருமையான குட்டி கதைல ஒரு பெரிய மெசெஜ் இருக்கு.....

    திருட கூடாது பொய் பேச கூடாது ஏமாத்த கூடாது... ஆனால் தன் உழைப்பை சொல்லி அதுவும் பவ்யமாவே ஐம்பத்தி ஆறு வயது ஆஜானுபாவ மனிதருக்கு அத்தனை பவ்யம்னா அப்ப அவர் இத்தனை வருஷம் வேலை செய்து எத்தனை நல்லப்பெயர் பெற்றிருப்பார்?

    அடக்கமா ஒழுக்கமா இருந்ததால் தானே மேனேஜர் இவருக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருந்ததும்?

    இப்படி ஒரு அட்டெண்டரை பார்க்கமுடியுமா இனி வரும் காலத்தில்?

    நேர்மை, உழைப்பு, பொறுமை இது தான் அட்டெண்டர் போஸ்ட்ல இருந்து பிரமோஷன் கிடைக்க வெச்சது....

    இப்படி ஒருத்தருக்காக இத்தனை பெரிய மீட்டிங் வெச்சு சுமுகமான முடிவு எடுக்கனும்னா இத்தனை வருஷ சர்வீஸ் ஏனோ தானோன்னு வேலை செய்யாம மனசாத்மார்த்தமா அவர் உழைச்ச உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரம் இது.

    இனிதலைநிமிர்ந்து கம்பீரமா சொல்லிக்கலாம் மாப்பிள்ளை வீட்டாரிடம்..

    சுபம்

    அன்பு நன்றிகள் சார் அருமையான பகிர்வுக்கு.

    ReplyDelete
  25. அலுவலக உதவியாளர் மேலாளர் என பத்திரப்படைப்புகளுடன் தொடங்கும் உங்களின் படைப்பு மிக சிறந்த படைப்பு பாராட்டுகள் கதொடர்க கதை சொல்லுகிறவிதம்மும்நல்லா இருக்கு

    ReplyDelete
  26. அருமை! அருமை!!

    தங்கத் தேராட்டம் வந்ததே பதவி உயர்வு!

    வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  27. வல்லவருக்கு புல்லும் ஆயுதமல்லவா? மிகச்சிறிய நிகழ்வை அலங்காரமாக்கி அருமையான கதையாக்கி அளித்த திறமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. அடுத்தவருக்கு இரக்கம் ஏற்படுவதுபோல ஒருவித புன்னகையுடன் கூடிய ஏக்கப்பார்வையும், கூழைக் கும்பிடுவும் தான் ஆறுமுகத்தின் அங்க அடையாளங்கள்.
    ”கும்புடறேன் எஜமான்” ஆறுமுகம் குழைந்தார்.//

    கண்முன் நிறுத்திய சித்திரமான வரிகள் அருமை.!

    ReplyDelete
  29. நியாயமானதொரு சமூகப்பிரச்சனையை முற்றிலும் உணர்ந்து கொண்டார், மனிதாபிமானம் மிக்க அந்த மேனேஜர். /

    மனிதாபமானமிக்க அருமையான கேரக்டரை சந்தித்த திருப்தி.

    ReplyDelete
  30. மாப்பிள்ளை வரப்போகும் அதிர்ஷ்ட வேளை தான், நம் அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு பிரமோஷன் வந்துள்ளது” /

    எப்படியானால் என்ன மகிழ்ச்சியான பிரமோசன்.

    ReplyDelete
  31. ஒரு மரியாதை கிடைக்குமா என்றும் நினைக்கவே சற்று சங்கடமாக உள்ளது, ஐயா;//

    சங்கடத்திற்கு விமோசனம் கிடைத்ததே!
    மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!

    ReplyDelete
  32. கதை அருமை.

    வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  33. கதை ரொம்ப சூப்பர்...

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  34. இந்த சிறுகதைக்கு, அன்புடன் வருகை தந்து, அருமையான கருத்துக்கள் கூறி, மனதாரப் பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ள அனைத்துத் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  35. ஆறுமுகத்தின் உழைப்பிற்கு வந்த ப்ரமோஷன், மாப்பிளையின் அதிர்ஷ்டம் என்று வர்ணிக்கப் படுவது - இதுதான் இயற்கையின் நியதி போலும்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, உலக இயற்கையின் நீதியை நன்றாகப் புரிந்து கொண்டு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      Delete
  36. காபீஸில் நடக்கும் பிரச்சினைகளும், அழகாக எப்படி சமாளிக்கலாம் என்ற அய்டியாக்களும், பிரமாதம்.

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. Ms. PATTU Madam

      //ஆபீஸில் நடக்கும் .....//

      தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான பிரமாதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

      Delete
  37. தன் மனதில் உள்ளதை மேனேஜரிடம் சொன்னதால் நல்ல பலன் கிடைத்தது

    ReplyDelete
  38. சாமர்த்தியமான அட்டெண்டர்
    மனிதாபிமானம் உள்ள மானேஜர்
    அழகான சிறுகதை
    உயிரோட்டமுள்ள எழுத்துக்கள்

    அருமையான எழுத்தாளர் (அட நீங்க தான்)

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya June 9, 2015 at 5:19 PM

      //சாமர்த்தியமான அட்டெண்டர்
      மனிதாபிமானம் உள்ள மானேஜர்
      அழகான சிறுகதை
      உயிரோட்டமுள்ள எழுத்துக்கள்

      அருமையான எழுத்தாளர் (அட நீங்க தான்)//

      :))))) மிகவும் சந்தோஷம் ஜெயா. மிக்க நன்றி :)))))

      Delete
  39. கரீட்டுதா அவங்களுக்கும் பிரமோஷன் கொடுத்துதான ஆவோண்ம் அவரு போயி தன்னோட நெலம சொல்லினதால தான கெடச்சிச்சி

    ReplyDelete
  40. இவ்வளவு வருஷங்கள் தன் பதவியை பற்றி எதுவுமே சிந்திக்காதவர் கல்யாணம் என்ற விஷயம் குறுக்கிட்டதும் மேலதிகாரியிடம் மனம் விட்டு பேசி பதவி உயர்வும் பெற்று விட்டார். வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

    ReplyDelete
  41. பணிவு - மரியாதை தரும் பலன்கள்...சொல்லில் அடங்காது...இதுவும் ஒரு உதாரணம்..

    ReplyDelete
  42. பெண்ணைப்பெற்றத் தந்தையின் பெரிய கவலையை மிகவும் அழகாகச் சித்தரித்து சொன்ன விதம் அருமை!

    ReplyDelete
  43. "குறைகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள், ஐயா. தவறுக்கு வருந்துகிறேன். இப்போது அதை சரிசெய்து விட்டேன்." - உண்மையாகவே கதையில் நான் ரசித்தது மேனேஜர் மிகுந்த தன்மையாக அட்டெண்டரிடம் பேசுவது. அதுவே மேனேஜரைப் பற்றிய உயர் அபிப்ராயத்துக்கும், அவர் அட்டெண்டரின் குறை சார்பாக பேசுவதில் ஒரு நல்ல லாஜிக்கையும் கொடுத்தது.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் July 2, 2017 at 4:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உண்மையாகவே கதையில் நான் ரசித்தது மேனேஜர் மிகுந்த தன்மையாக அட்டெண்டரிடம் பேசுவது. அதுவே மேனேஜரைப் பற்றிய உயர் அபிப்ராயத்துக்கும், அவர் அட்டெண்டரின் குறை சார்பாக பேசுவதில் ஒரு நல்ல லாஜிக்கையும் கொடுத்தது.//

      இதே கதை 2014 சிறுகதை விமர்சனப்போட்டியின் போது சற்றே மாற்றி (அதாவது கொஞ்சம் வரிகளைக் கூட்டி .. இன்னொரு கதாபாத்திரத்தை நடுவில் புகுத்தி) என்னால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29.html

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete