என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 28 செப்டம்பர், 2011

ச கு ன ம் [சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2]ச கு ன ம் 

சிறுகதை [பகுதி 2 of  2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:

இந்த அவசர யுகத்தில், விஞ்ஞான உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை அந்த இரு பெரியவர்களுக்கும், நாசூக்காக உணர்த்தி விட்டோம் என்பதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி ஏற்பட்டது.

ரயிலில் வந்திறங்கிய என் மாமியாரை ஆட்டோவில் கூட்டிவந்து என் வீட்டில் விட்டுவிட்டு, அவசர அவசரமாக ஆபீஸுக்குப் புறப்பட்ட நான் ஏழு மணி பஸ்ஸையும் ஓடிப்போய் பிடித்து விட்டேன்.

=========================

ஆபீஸுக்கு வந்த எனக்கு சிறிது நேரத்திலேயே, என் மனைவியிடமிருந்து டெலிபோனில் அவசர அழைப்பு வந்தது. 

“காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, படித்துறையில் படியேறி வந்த ஸ்ரீமதி பாட்டி கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த அடி பட்டுவிட்டதாம். பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்களாம். டாக்டர் வந்து பார்த்துவிட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்கு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று சொல்லி விட்டாராம்.  சொந்தபந்தம் எல்லோருக்கும் தகவல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். மூத்த பிள்ளையும், நாட்டுப்பெண்ணும் (மருமகளும்), பேரன் பேத்தியும் பம்பாயிலிருந்து கிளம்பி விட்டார்களாம்; 


எது எப்படியிருந்தாலும் நானும் என் அம்மாவும் ஸ்ரீரங்கம் போய் வைகுண்ட ஏகாதசியான இன்று பெருமாளை ஸேவித்து விட்டு வந்துவிடுகிறோம்” என்று தகவல் சொல்லிவிட்டு, தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள்.


ஆபீஸ் முடிந்து மாலை நான் வீட்டுக்கு வந்தேன். உள்ளே நுழையும் போதே சமையலறையிலிருந்து கும்முனு ஏதோ ஒரு புதிய வாசனை. என் மாமியார் வந்தாலே இப்படித்தான். சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது புதுசுபுதுசாக திண்பண்டங்கள் செய்து அசத்தி விடுவார்கள். 


திரட்டுப்பால் செய்து கொண்டிருப்பது போலத்தெரிய வந்தது. அந்த திரட்டுப்பாலை மாப்பிள்ளைக்கு மாமியார், ஒரு பெரிய வெள்ளி டவரா நிறைய வெள்ளி ஸ்பூன் போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, சுவையாக நானும் ருசித்தேன். என் அருகே குடிநீர் கொண்டு வந்து வைத்த மனைவியிடம் “நீயா செய்தாய்? சூப்பரா இருக்கு!” என்று சும்மாவாவது கேட்டு வைத்தேன்.


அவள் வழக்கம் போலவே, ”உங்க மாமியார் தான் ஆசை ஆசையாக உங்களுக்குப் பிடிக்குமேன்னு செய்திருக்கிறார்கள்; எனக்கு இதெல்லாம் பொறுமையாக, பதமா செய்ய வராதுங்க” என்று ஒப்புக்கொண்டாள்.


அம்மா சமையலில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தால், அவர்களின் பெண் நேர்மாறாகத்தான் இருப்பார்கள். இது பல இடங்களில் நான் சோதித்துக் கண்டு பிடித்த உண்மை. 


தன் மகள் நன்றாக படித்து முன்னேறட்டும் என்று மிகவும் செல்லமாக வளர்த்து, சமையல் அறைப்பக்கமே அவர்களை வரவிட மாட்டார்கள். சமையல் சம்பந்தமாக எதுவும் சொல்லித்தரவும் மாட்டார்கள். தானே ஒண்டியாக சமாளித்துக்கொள்வார்கள். இது போன்று செல்லமாகவே வளர்ந்துவிட்ட பெண்களுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் ஆகிவிடும். புகுந்த வீட்டிற்குப்போகும் அந்தப் புதுப்பெண்ணுக்கு தினப்படி சமையல் செய்யப் பழகுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.  =================================================
[திரட்டுப்பால் பற்றிய ஒரு சிறு விளக்கம்:  


நல்ல கெட்டியான தரமான பாலை நன்கு சுண்டக்காய்ச்சி அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து, செய்யப்படும் ஒரு இனிப்பான தின்பண்டம். முறைப்படி பக்கத்திலேயே இருந்து, நல்ல பதமாகச் செய்தால் சுருள் சுருளாக, திரித்திரியாக ஜோராக அமையும். கையில் ஒட்டாதவாறு,சுருண்டு பாகுபதமாக தித்திப்பாகவும், பால் வாசனையாகவும் மிகவும் சுவையாக இருக்கும். பக்குவமாக பதமாகச் செய்யாவிட்டால் வெங்காயச்சட்னி போல் ஆகி வாயில் ஆங்காங்கே ஈஷிக்கொள்ளும். அது ருசிப்படாது.


சாகும் தருவாயில் இருக்கும் மிகவும் வயதான பெரியவர்களுக்கு, வாய்க்கு ருசியாக இதுபோல திரட்டுப்பால் செய்து சாப்பிடக் கொடுப்பது அந்தக்கால வழக்கம். 


இப்போதும் கூட திருமணங்களில் பிள்ளை வீட்டார் முதன் முதலாக திருமண மண்டபத்திற்குள் நுழையும் போது மாலையிட்டு, பன்னீர் தெளித்து சந்தனம், சர்க்கரை, கல்கண்டு தட்டை நீட்டி வரவேற்றவுடன், முதல் வேலையாக, மாப்பிள்ளையைப் பெற்ற தாயார் கையில், பெண்ணைப் பெற்ற தாயார், முதன்முதலில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய கொண்டுவந்து கொடுப்பது, இந்த திரட்டுப்பால் என்ற ஸ்வீட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது] 
============================================  

அன்று இரவே ஒரு சம்புடத்தில் திரட்டுப்பாலை கணிசமான அளவு எடுத்துக்கொண்டு, படுத்த படுக்கையாக இருக்கும் ஸ்ரீமதிப்பாட்டியைப் பார்க்க முதல் மாடிக்கு நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். இதுவரை எப்போதுமே என்னைப்பார்த்ததும் சிரித்த முகத்துடன் “வாடா, சிவராமா” என்று வாய் நிறைய வரவேற்று, கலகலப்பாகப் பேசி வந்து கொண்டிருந்த பாட்டியைப் படுத்த படுக்கையாய்க் கண்டதும் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 


கொஞ்சமாகத் திரட்டுப்பாலை எடுத்து நானே பாட்டியின் வாயினுள் ஊட்டி விட்டேன். அவர்கள் லேசாக அதை சுவைத்து தொண்டைக்குள் விழுங்கியது போலத் தோன்றியது எனக்கு. எப்போதும் என்னைப்பார்த்தால் “சிவராமா! நீ மஹராஜனா நீண்ட நாள் செளக்யமா, சந்தோஷமா, இருக்கணும்டா” என்று சொல்லி ஆசீர்வதிப்பார்கள். நான் கொடுத்த சிறிதளவு திரட்டுப்பாலை அவர்கள் ஏற்றுக்கொண்டு சுவைத்தது, இப்போது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.


என் மாமியார், சம்புடத்தில் இருந்த திரட்டுப்பாலை அங்கே கூடியிருந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் விநியோகித்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷம். ”எப்படி மாமி இவ்வளவு ருசியா, கையிலே ஒட்டாதபடி சுருள்சுருளாகப் பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டு அதற்கான செய்முறையைச் சொல்லச்சொல்லி மனதில் எழுதிக்கொண்டனர். 


அந்தப் பாட்டியின் இரண்டாவது மகன் நேராக எங்கள் மாமியாரிடம் வந்தார். நாங்கள் திரட்டுப்பால் கொண்டு சென்ற சம்புடத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டார். திரட்டுப்பால் சரிபாதி விநியோகிக்கப்பட்டு, மீதி பாதி அப்படியே அந்த சம்புடத்தில் இருந்தது.  அதை வாங்கிக்கொண்டவர், நேராக சமையல் அறைப் பக்கம் போனார். அப்படியே அதை முழுவதும் வழித்து முழுங்கி சுத்தமாக ஃபினிஷ் செய்துவிட்டு, அந்தப்பாத்திரத்தையும் கையோடு தேய்த்து அலம்பிக் கொண்டு வந்து எங்களிடம் ஒப்படைக்கும் போது ஒரு சிறிய ஏப்பமும் விட்டார்.


“டாக்டர் என்ன சொன்னார்?” ஒரு மரியாதைக்காக நான் கேட்டு வைத்தேன்.


“தலையில் அடி பலமாக விழுந்துள்ளது; ரொம்ப வயசாகி விட்டதாலே, பிழைப்பது ரொம்பவும் சிரமம். எல்லோருக்கும் தகவல் கொடுத்திடுங்கோன்னு சொன்னார்; அண்ணா மன்னி குழந்தைகள் எல்லோரும் வந்துண்டே இருக்கா; என்ன செய்யறது, நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்”, என்று சொல்லிக்கொண்டே திரட்டுப்பாலை முழுவதுமாக முழுங்கிய மகிழ்ச்சியிலும், மிகவும் கஷ்டப்பட்டு சற்றே அழுகையை வரவழைக்க முயற்சித்தார்.


“கவலைப்படாதீங்கோ; தங்கள் அம்மா எப்படியும் பிழைச்சுடுவான்னு எனக்குத் தோணுது, ராத்திரி வேளையிலே ஏதாவது உதவி தேவைன்னா, தயங்காம என்னை வந்து கூப்பிடுங்கோ” என்று ஆறுதல் சொல்லிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பினோம்.


ராத்திரி பதினோரு மணி இருக்கும். எங்கள் பில்டிங்கே அதிருவது போல ஒப்பாரிக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.  உடனே நான் புறப்பட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். 


கங்கை நீர் அடைத்து வைத்த சொம்பை உடைத்து பாட்டியின் வாயில் கொஞ்சம் ஊற்றி, உடம்பு பூராவும் தெளித்தேன். சுவற்றின் மூலையில் தீபம் ஒன்று ஏற்றி வைக்கச்சொன்னேன்.  பாட்டியின் தலைப்பக்கம் தெற்கே இருக்குமாறு மாற்றிப்போட்டேன். கைக் கட்டைவிரல்கள் இரண்டையும், கால் கட்டைவிரல்கள் இரண்டையும் சேர்த்து சிறிய துணி ஒன்றினால் இறுக்கமாகக் கட்டிவிட்டேன்.


தூரத்து சொந்தமான ஸ்ரீமதிப்பாட்டியின் இறுதிச்சடங்குக்கு, வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து,  என்னால் முடிந்த சரீர ஒத்தாசைகளும் செய்தேன்.


மறுநாள் காலை மூத்தபிள்ளை, நாட்டுப்பெண் (மருமகள்), நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணத்தை எதிர்கொண்டு நிற்கும் பேத்தி,  பள்ளியில் படித்து வரும் பேரன்,  அனைவரும் வந்திறங்கி, பாட்டியின் காரியங்கள் யாவும் ஜாம் ஜாம் என்று நடைபெறத்தொடங்கின. 


அக்கம்பக்க வீடுகளில் குடியிருப்போர், உற்றார், உறவினர் என நிறைய கும்பல் கூடி விட்டது. இறந்தவர் பல்லாண்டுகள் நன்றாக வாழ்ந்து, வயது எண்பதையும் தாண்டியிருப்பதால் இது ஒரு ‘கல்யாணச் சாவு’ தான் என்று கலகலப்பாக எல்லோரும் பேசிக்கொண்டனர்.    


’ஆஹா! ஏகாதசி மரணம், துவாதசி தகனம்’ கிடைத்துள்ளது இந்தப் புண்யவதிக்கு என்றனர் ஒருசிலர்.


‘சாதாரண ஏகாதசியா என்ன! வைகுண்ட ஏகாதசியாக்கும்!! என்றனர் மேலும் சிலர்.


எனக்கும் அவர்கள் கூறுவது மிகவும் நியாயமாகவே பட்டது.


‘சாவிலும் இதுபோல, ஒரு நல்ல சாவு, டக்குணு கிடைக்கணும்பா’ என்றனர், அடுத்தடுத்து அதை எதிர்நோக்கிக் க்யூவில் காத்திருக்கும், பெரிசுகளில்  சிலர்.


காவிரிக்கரையில் உள்ள ஓயாமாரியில் பாட்டியை நல்லடக்கம் செய்து விட்டு, எல்லோருமாக பாட்டிக்காக காவிரியில் தலை முழுகிவிட்டு, வீடு திரும்பினோம்.


வீட்டு வாசலிலேயே அனைவரும் கால் அலம்பிய பிறகு, தலைவாழை இலை போட்டு, பாயஸம், பச்சடி, முப்பருப்பு வகைகளுடன் அனைவருக்கும் வயிறார விருந்து சாப்பாடு போடப்பட்டது, எங்கள் வீட்டிலேயே. 


காவிரிக் கரையிலேயே அனைவருக்கும் சாப்பாட்டுக்கு அழைப்பு கொடுத்து விட்டோம். இறந்தவர் நமக்கு அளிக்கும் பிரஸாதமாக ஏற்று, சொந்த பந்தங்கள் அனைவரும் இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வது தான் வழக்கம்.  சமையல் செய்த புண்ணியத்தை என் மாமியாரும், அனைவருக்கும் பரிமாறிய புண்ணியத்தை என் மனைவியும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். 


சாப்பாடு முடிந்ததும், கை அலம்பிய கையோடு, வந்தவர்கள் அனைவரும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டனர். 


[இறந்தவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றால், புறப்படும்போது, ’போய் வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக்கூடாது. அவ்வாறு சொன்னால் திரும்ப இதுபோல மற்றொரு துக்கத்திற்கே, திரும்பி வருகிறேன் என்று சொல்லுவது போல ஆகும்; அதுபோலவே ஏதாவது நேர்ந்துவிடக்கூடும் என்ற காரணமாகத்தான் ’போய் வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்று வைத்துள்ளனர்.]


சாப்பாடு முடிந்தபின், பாட்டியின் பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டிலேயே தனியாக இருக்கும் ரூம் ஒன்றில், மேற்கொண்டு நடைபெற வேண்டிய பதிமூன்று நாட்கள் காரியங்களைப்பற்றி தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.     


அந்த ரூமுக்கு வெளியே நான் சற்று ஓய்வாகப் படுத்திருந்ததால் அவர்கள் பேச்சு என் காதிலும் அரைகுறையாக விழுந்து கொண்டிருந்தது.


”நம் அம்மா நல்லா, திடமாகத்தானே இருந்தார்கள்! தன் பேத்தி கல்யாணத்தைக்கூட பார்க்காமல், இப்படித் திடீரென்று போய்ச் சேர்ந்துடுவாள்ன்னு, நான் எதிர்பார்க்கவே இல்லை” மூத்தவர் இளையவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  


”நேத்திக்கு காலையிலே தூங்கியெழுந்து வழக்கம்போல காவிரிக்குக் குளிக்கப் போகும்போது நல்லாத்தானே இருந்தாங்க!  விடியற்காலம் ஐந்து மணியிருக்கும். இந்த ஒத்தப்பிராமணன் சிவராமன் தான் படியேறி எதிரே வந்தான். அவன் முகத்திலே தான் முதன் முதலாக முழிச்சாங்க; 


எனக்கு அப்போதே மனசுக்கு ஒரு மாதிரி கருக்குனு தோணிச்சு. இப்போ என்னைத் தாயில்லாப் பிள்ளையாக ஆக்கிவிட்டு, இப்படி அநியாயமாப் போய்ட்டாங்க” என்று அந்த 50 வயதான தடிப்பிரும்மச்சாரி தன் அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் நன்றாகவே விழுந்தது.  உடனே ஒரு நிமிடம் நான் மிகவும் அதிர்ச்சியானேன்.


நல்லவேளையாக இந்தப்பேச்சு என் மனைவி காதிலோ, என் மாமியார் காதிலோ விழவில்லை. என்னைப்போல இதை அவர்கள் சுலபமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சண்டைபோட்டு, மண்டையை உடைத்து, இன்றைக்கே இன்னொரு சாவு இங்கு ஏற்படுமாறு செய்து விடுவார்கள்.


எவ்வளவு வருஷங்கள் ஆனாலும், இந்தத் தடிப்பிரும்மச்சாரி போன்ற ஒரு சில, நன்றிகெட்ட அசட்டு மனிதர்களின் மூட நம்பிக்கையை, நாம் முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.


தன் வயதான தாயாரை காவிரி ஸ்நானத்திற்கு கூட்டிச்சென்றவர், அவர்கள் நல்லபடியாக காவிரிப் படித்துறையில் படியேறி வரும்போது ஜாக்கிரதையாகப் பார்த்து கையைப்பிடித்து கூட்டி வந்திருக்க வேண்டும்.


அதை பொறுப்பாகச் செய்யாமல், அந்தப்பாட்டி கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் நல்ல அடிபட, கூடப்போன இவரின் கவனக்குறைவே காரணமாக இருக்கும்போது, வீட்டை விட்டு புறப்பட்ட போது நான் எதிரே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இப்படி ஆகிவிட்டதாக என் மீது பழியைப் போடுகிறார்.  


மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படியெல்லாம் பேசுகிறார்கள், எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள், நன்றிகெட்ட ஜன்மங்கள் என்று நினைத்துக்கொண்டேன்.


”எல்லாம் அதுஅது தலைவிதிப்படி நடக்க வேண்டிய நேரத்தில், நடந்து கொண்டே தான் இருக்கும். எம தர்மராஜாவிடமிருந்து யாரும் தப்பவே முடியாது. ஏதோ இந்தக்கிழவி தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொண்டு, கடைசிவரை வைராக்கியமாக இருந்து, டக்குனு மகராஜியாப் போய்ச்சேர்ந்துட்டா. யாருக்கும் கடைசிவரை எந்த சிரமமும் கொடுக்கவில்லை”இற்ந்துபோன பாட்டியின் மூத்த மருமகள், ஒரு மூலையில் ஓரமாக முடங்கிக்கிடந்த வேறொரு காது கேளாத கிழவியிடம், கத்திப் பேசிக்கொண்டிருந்தாள். 


வெய்யிலில் பாட்டி காரியமாக அலைந்துவிட்டு, பலமான விருந்து சாப்பாடும் சாப்பிட்ட எனக்கு கண்ணைச் சொக்கியதால், தூக்கம் வருவது போல இருந்தது.


“சிவராமா! நீ மஹராஜனா நீண்டநாள் செளக்யமா, சந்தோஷமா இருக்கணும்டா ” என்ற ஸ்ரீமதிப்பாட்டியின் குரல் வைகுண்டத்திலிருந்து ஒலிப்பது போல இருந்தது எனக்கு.
-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-
பின்குறிப்பு


சகுனம் பார்த்து, நல்லது நடக்குமா கெடுதல் நடக்குமா என்று ஓரளவு யூகித்து, அதன்படி நடப்பது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள். நம்பிக்கைகள். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. 


ஆனால் சகுனம் பார்ப்பதாகச் சொல்லி. எந்த விதத்திலாவது பிறர் மனம் புண்படுமாறு நடந்து கொள்வது, மிகமிகத் தவறான செயலாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். 


கணவர் இறந்ததும் மனைவியும் உடன்கட்டை ஏறுவது அல்லது கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏறச்செய்வது என்ற கொடுமைகள், நம் நாட்டிலேயே ஒரு 200 வருஷங்கள் முன்புவரை கூட, நடந்துள்ளதை நாம் சரித்திரத்தில் படித்துள்ளோம். பிறகு இவைகளை தடைசெய்து, சட்டம் இயற்றி விட்டதில் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. 


இந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிந்த பிறகும் கூட, கணவனை இழந்த பெண்களை அலங்கோலப்படுத்தி, தலை முடியை நீக்கி, வெள்ளை ஆடைகள் மட்டும் அணியச்செய்து, பூவோ, நெற்றிப்பொட்டோ வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், காது தோடுகள், மூக்குத்தி, கை வளையல்கள் முதலியன அணியக்கூடாது என்றும், சுப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் பல்வேறு தடைகள் செய்து பாடாய் படுத்தி வந்துள்ளனர். 


இது பெண்களுக்கு மட்டுமே இழைக்கப்பட்ட கொடுமைகள். மனைவியை இழந்த ஆணுக்கு இது போல எந்த ஒரு கொடுமைகளும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.   


கணவரை இழந்த ஒரு பெண்மணி தன் சொந்த மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் நடக்கும்போது, மற்றவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக திருமண மேடையில் அமர்ந்து நடைபெறும் சந்தோஷ வைபவங்களைக் கண்குளிரக் காண முடியாமல் கூசிக்குறுகி நிற்க வேண்டும் என்றால், அவர்களின் மனநிலை எவ்வளவு கஷ்டப்படும் என்று நாம் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


நாளடைவில் இது போன்ற கொடுமைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்து கொண்டு தான் வருகிறது. கணவரை இழந்த பெண்கள் விரும்பினால் இன்று மறுமணம் புரிந்து கொள்ளவும் தடை ஏதும் இல்லாமல் இருந்து வருகிறது.


மக்களின் இத்தகைய மனமாற்றங்கள் சந்தோஷம் தரக்கூடிய, வரவேற்க வேண்டிய நல்லதொரு சமூகப் புரட்சியாகவே மலர்ந்துள்ளது.  


=========================================


எனவே என் அருமை தோழர்களே / தோழிகளே !


காலத்திற்கு தகுந்தாற்போல நாமும் நம்மை மாற்றிக்கொள்வோம். சகுனம் பார்க்கிறேன் என்று சொல்லி, எந்த விதத்திலும் பிறர் மனதை நோகடிக்காமல் இருப்போம்.  பிறர் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வோம். 


==========================================


  


மேலும் ஒரு குட்டியூண்டு கதை:


ஒரு அரசர் அதிகாலையில் எங்கோ புறப்பட்ட போது பூனையொன்று குறுக்கே போனதாம். சகுனம் சரியில்லை என்று நினைத்த அந்த அரசர், தன் பயணத்தை ரத்து செய்து விட்டாராம். 


மேலும் குறுக்கே சென்ற பூனையை பிடித்துப்போய் அடைத்து இன்று முழுவதும் உணவு கொடுக்காமல் வைத்து, மறுநாள் காலை அதைக் கொன்று விட உத்தரவு இட்டாராம்.


இது தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த மகாராணியின் கனவில் அந்தப்பூனை போய் பேசியதாம்:

“எனக்குத்தான் இன்று சகுனம் சரியில்லை போலிருக்கிறது. இன்று முதன்முதலாக இரை தேட நான் புறப்பட்ட போது அரசர் தான் குறுக்கே வந்தார்; அதனால் தானோ என்னவோ எனக்கு இன்று முழுப்பட்டினியும் நாளை மரண தண்டனை கிடைத்துள்ளது; 


எனவே மஹாராணியாரே! நீங்கள் யாரும் இனி, நாளை முதல் அரசர் முகத்தில் முதன் முதலாக விழிக்காதீர்கள்”  என்று எச்சரிக்கை விடுத்ததாம்.  


மேலும் அது சொன்னதாம்: “நான் மட்டும் இன்று குறுக்கே போகாமல் இருந்து, அரசர் வேட்டைக்குச் சென்றிருந்தால், விதிப்படி அவர் பாம்பு கடித்து இறந்திருப்பார்; அதை நான் தான் தடுத்து விட்டேன்” என்றதாம். 


திடுக்கிட்டு எழுந்த ராணி தன்னை விதவையாக்காமல் தடுத்த அந்தப்பூனையை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தாளாம். அத்தோடு மட்டுமல்லாமல் தன் அந்தப்புரத்தில் அந்தப் பூனையும் தன்னுடனேயே படுத்துக்கொள்ள இட வசதி செய்து கொடுத்தாளாம். 


அன்று முதல், தனக்கும் ராணிக்கும் இடையே புதிதாகப் புகுந்து விட்ட இந்தப்பூனையால், அரசர் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய் விட்டதாம். 


-oOoOo-38 கருத்துகள்:

 1. சகுனம் பார்ப்பது பற்றிய நம்பிக்கை/மூட நம்பிக்கை பற்றிய உங்கள் கதை அருமை.... நல்லது செய்தாலும் அதை உடனே மறந்து விடுவார்கள் உதவி பெற்றவர்கள் என்பதையும் அழகாய்ச் சொல்லி உள்ளீர்கள்...

  திரட்டிப் பால் பற்றி சொல்லி இப்போதே வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டாயிற்று... இந்த ராத்திரியில் அதுவும் இந்த தில்லியில் நான் திரட்டிப் பாலுக்கு எங்கே போவது? :)

  பதிலளிநீக்கு
 2. .கதை ரொம்ப அருமையாக இருந்தது

  அந்த குட்டிகதையும் சூப்பர்
  திரட்டிப்பால் ஒரு முறைதான் டேஸ்ட் செய்திருக்கிறேன் .மிக அருமையா இருக்கும் .
  மனித மனங்களை என்னென்று சொல்வது உதவி செய்தவர் வீட்டிலிருந்துகொண்டே அவரைப்பற்றி தூற்றிபேசுவது .எத்தனை காலம் ஆனாலும் இபடிபட்டவர்களின் குணங்கள் மட்டும் மாறவே மாறாது .
  அடுத்த கதைக்காக வெய்டிங்

  பதிலளிநீக்கு
 3. //அம்மா சமையலில் கெட்டிக்காரராய் இருந்தால் பெண் நேர்மாறாய்...//

  உண்மைதானோ என்று தோன்றுகிறது!

  திரட்டுப் பால் குறித்த விளக்கம் நடுவே....அருமை. நாவில் நீர்..இதை ஜொள்ளு என்று செல்லமாய் அழைப்பார்கள்!!

  கடைசியில் சிவராமன் மேலே பழி...அதிர்ச்சி. இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்தான்.

  இன்னொரு குட்டிக் கதை பீர்பால் கதையாகப் படித்திருக்கிறேன்.

  சிவராமன் கதை மனதில் நிற்கிறது. நான், என் மனைவி சிவராமன் போல என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஒரு மிகச் சரியான கருத்தை
  காது கேளாத ஒருவரிடம்
  சொல்லிக் கொண்டிருப்பதாகச்
  சொல்லிப்போவது மிக அருமையாகப் பட்டது
  மூட நம்பிக்கை குறித்து பல
  பெரியவர்கள் சொல்லிப் போன விஷயங்கள் கூட
  இப்படித்தானே செவிடர்கள் காதில் ஊதிய சங்காகப்
  போகிறது (கதை இத்தோடு முடிந்தால்
  இன்னும் சிறப்பாக இருக்குமோ எனத் தோன்றியது)
  மனம் கவர்ந்த கதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. மூட நம்பிக்கை பற்றிய விழிப்புணர்வு கதை.சரியான விதத்தில் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.
  குட்டியூண்டு கதை ரொம்ப சூப்பர்.ஏற்கனவே படித்திருந்தாலும் இன்னொரு முறை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 6. அம்மா சமையலில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தால், அவர்களின் பெண் நேர்மாறாகத்தான் இருப்பார்கள். இது பல இடங்களில் நான் சோதித்துக் கண்டு பிடித்த உண்மை. //

  அவார்டே கொடுக்கலாம். அருமையான கண்டுபிடிப்பு!

  பதிலளிநீக்கு
 7. [திரட்டுப்பால் பற்றிய ஒரு சிறு விளக்கம்: //

  அருமையான சுவையான பயனுள்ள விளக்கத்திற்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 8. ஆஹா! ஏகாதசி மரணம், துவாதசி தகனம்’ கிடைத்துள்ளது இந்தப் புண்யவதிக்கு என்றனர் ஒருசிலர்.


  ‘சாதாரண ஏகாதசியா என்ன! வைகுண்ட ஏகாதசியாக்கும்!! //

  கல்யாண சாவோடு இத்தனையும் சேர்ந்ததே!

  பதிலளிநீக்கு
 9. இந்த ஒத்தப்பிராமணன் சிவராமன் தான் படியேறி எதிரே வந்தான். அவன் முகத்திலே தான் முதன் முதலாக முழிச்சாங்க; /

  மதில் மேல் பூனை எதிர்பாராத திசையில்

  பதிலளிநீக்கு
 10. காலத்திற்கு தகுந்தாற்போல நாமும் நம்மை மாற்றிக்கொள்வோம். சகுனம் பார்க்கிறேன் என்று சொல்லி, எந்த விதத்திலும் பிறர் மனதை நோகடிக்காமல் இருப்போம். பிறர் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வோம்.


  மிக மிக அருமையான விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. Ramani said...
  ஒரு மிகச் சரியான கருத்தை
  காது கேளாத ஒருவரிடம்
  சொல்லிக் கொண்டிருப்பதாகச்
  சொல்லிப்போவது மிக அருமையாகப் பட்டது
  மூட நம்பிக்கை குறித்து பல
  பெரியவர்கள் சொல்லிப் போன விஷயங்கள் கூட
  இப்படித்தானே செவிடர்கள் காதில் ஊதிய சங்காகப்
  போகிறது (கதை இத்தோடு முடிந்தால்
  இன்னும் சிறப்பாக இருக்குமோ எனத் தோன்றியது)
  மனம் கவர்ந்த கதை
  தொடர வாழ்த்துக்கள்/

  ரமணி ஐயாவின் ஆழ்ந்த அனுபவ மொழிகள் சிறப்பாக மனம் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 12. //இந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிந்த பிறகும் கூட, கணவனை இழந்த பெண்களை அலங்கோலப்படுத்தி, தலை முடியை நீக்கி, வெள்ளை ஆடைகள் மட்டும் அணியச்செய்து, பூவோ, நெற்றிப்பொட்டோ வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், காது தோடுகள், மூக்குத்தி, கை வளையல்கள் முதலியன அணியக்கூடாது என்றும், சுப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் பல்வேறு தடைகள் செய்து பாடாய் படுத்தி வந்துள்ளனர்.

  //

  உமது சிந்தனைக்கு எனது வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 13. சகுனம் பார்ப்பது பற்றிய மூட நம்பிக்கையை அழகாக விளக்கி சென்றது தங்கள் கதை.

  இந்த உலகம் கடைசியில் கதையையே மாற்றி விட்டது சிவராமன்பேரில். இப்படித் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

  திரட்டுப்பாலின் விளக்கம் நாவில் ஜலம் ஊற வைக்கிறது.

  சாவு வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பக் கூடாது போன்றவற்றின் காரணங்கள் நன்று.

  த.ம 6, இண்ட்லி 4

  பதிலளிநீக்கு
 14. நீண்ட பதிவு .கருத்துள்ள கதை.பக்கத்திலிருக்க்ம் கடைக்கு போனால்கூட சகுனம் பார்ப்பவர்களை பார்த்துகின்றேன் .பிறர் மனம் பாதிக்காமல் வாழவேண்டும்.குட்டிக்கதையும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 15. கதை அருமை வை.கோ
  கதையை மேலும் அருமை
  ஆக்கியது பின்னுரை
  நன்றி!
  த. ஓ 8

  புலவர் சா இராராநுசம்

  பதிலளிநீக்கு
 16. கதை மிக அருமை. கதைத் தொடர்பாக நீங்கள் இணைக்கும் விவரங்களும் புதுமை.

  பதிலளிநீக்கு
 17. //மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படியெல்லாம் பேசுகிறார்கள், எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்//

  ஆம் ஐயா, சரியாக சொல்லியிருக்கீங்க.

  அந்த பூனை கதையும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 18. கதை வழக்கம்போல அழகான நடை கொண்டிருக்கிறது. ஆனால் கதை முழுவதும் சில விசயங்களை ஆங்காங்கே பகிர்ந்து கொள்வது நல்ல முயற்சி. மறக்காமல் நினைவூட்டுகிறது. நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 19. வைகோ சார்! இப்பொத்தான் படிச்சேன்... அழகான விழிப்புணர்வு கதை. போனசாக குட்டிக் கதை. மிகவும் ரசித்தேன். தொழுவத்து மயில் எனும் நெடுங்கதை தொடங்கியிருக்கிறேன். பாருங்களேன்!

  பதிலளிநீக்கு
 20. நம்மால் காரணங்கண்டு பிடிக்க முடியாத நிகழ்வுகளுக்கு எதையாவது காரணங்காட்டி நம்மைநாமே சமாதானப்படுத்துவதற்கே இந்த சகுன நம்பிக்கைகள் தோன்றியிருக்க வேண்டும். நம்பிக்கைகளிலேயே மூடநம்பிக்கை இவையெல்லாம். விழிப்புணரூட்டும்கதை. வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 21. இந்தக்கதையின் இறுதிப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள, அன்புத்தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 22. சிறப்பான கதை. இதை விட மோசமாக சொன்ன காலங்கள் உண்டு. இப்போதும் சிலர் இந்த பழக்கத்தை விடாமல் , எல்லாரையும் வறுத்தி வாயில் போட்டுக்கொள்கிறார்கள்.

  ஒரு பிரிவு சார்ந்த பழக்க வழக்கங்கள், சிநேக பாவங்கள், உதவி செய்யும் குணம், எல்லாவற்றையும் , குட்டி கதையில் அடக்கி, எங்களை படித்து மகிழ வைத்ததற்கு ந்ன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Ms. PATTU Madam,

   ஓரிரு நாட்களுக்குள் என்னுடைய பல சிறுகதைகளை மிகவும் ஆர்வத்துடன் படித்து, அவ்வப்போது கருத்துக்கள் கூறி வருவது எனக்கு மிகவும் சந்தோஷமும், உற்சாகமும் அளிப்பதாக உள்ளது.

   இந்தக்கதையையும் சரியான புரிதலுடன் வாசித்து வெகு அழகாகக் கருத்துக்கூறியுள்ளீர்கள்.

   நான் கொடுத்திருந்த LOT-1 இல் ”ஜாதிப்பூ” தவிர மற்ற எல்லாவற்றையும் அதற்குள் படித்து முடித்து கருத்துகள் பகிர்ந்து கொண்டுள்ளது மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

   மேலும் படிப்பதில் தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறீர்கள் என்பதையும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

   என் மனமார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் vgk

   நீக்கு
 23. நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பது உண்மையாகி விட்டது.

  பதிலளிநீக்கு
 24. இணைப்பு குட்டி கதை நெத்தியடி சிவராமன் வீட்லயே எல்லா உதவி களையும் வாங்கிண்டு மனிதாபிமானமே இல்லாம பேசுராங்களே

  பதிலளிநீக்கு
 25. அருமையான கதை
  கதைக்குள் ஒரு குட்டிக் கதை
  அப்படியே திரட்டுப்பால் சமையல் குறிப்பு.

  அஷ்டாவதானி ஐயா நீங்கள்.

  பதிலளிநீக்கு
 26. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.

  நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.

  திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.!

  இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 27. நானு கேக்க நெனச்சேன் தெரட்டுபால்னா இன்னாதுன்னுபிட்டு நீங்களே வெவரமா சொல்லிபிட்டீங்க. ஆமா உங்களுலயும் செத்தவங்கள அடக்கம்தா சய்வாகளா. நா வேரமாதிரி கேட்டுருந்தனே அவங்கலா ஏன் இப்பூடில்லா பேசினாங்க.

  பதிலளிநீக்கு
 28. சடங்கு சம்ப்ரதாயம் குடும்ப வழக்கம் என்று என்னல்லாமோ தேவையில்லாத பழக்க வழக்கங்கள் கடைப்பிடிதுது வருவது. எந்தவிதத்தில் நியாயமோ. அதிலும் கணவனை இழந்தபெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சொல்லி முடியாது. அந்த காலம் போல இல்லா விட்டாலும் வேறு ருபத்தில் நடந்து கொண்டுதான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 29. எத்தனை கோணம்...எத்தனை பார்வை...பூனையின் கோணமும் நியாயம்தானே...அது மட்டும் என்ன பாவம் செய்தது...??

  பதிலளிநீக்கு
 30. சகுனம் பார்ப்பதை இந்தக் கதை மூலம் எளிய நடையில் ஆனால் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்திய விதம் சிலாகிக்க வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 31. Muthuswamy MN சகுனம் சூப்பர்

  - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980)

  Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

  பதிலளிநீக்கு
 32. இன்றைக்குத்தான் இந்தக் கதையைப் படித்தேன். இந்தப் பகுதியைப் படிக்குமுன் முடிவை யூகித்துவிட்டேன்.

  சகுனம் பார்ப்பது நம் தனிப்பட்ட விஷயம். ஆனால் அதைவைத்து மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவது தவறு என்று சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  கதையின் ஓட்டமும் நடையும் நன்றாக இருந்தது.

  எல்லாக் கதைகளிலும் அனேகமாக சாப்பாட்டு ஐட்டங்களை நுழைத்துவிடுகிறீர்கள். உங்கள் எழுத்தில் படிக்கும்போதே நெய் வாசனையும் பால் சுண்டியிருக்கும் வாசனையையும் அறிந்துகொள்ள முடிகிறது (உருளியில் கிளறினார்கள் என்பதை மட்டும்தான் உபயோகப்படுத்தவில்லை)

  "அம்மா சமையலில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தால், அவர்களின் பெண் நேர்மாறாகத்தான் இருப்பார்கள்." - இனி ஒவ்வொருவரையும் சந்திக்கும்போது இது நினைவுக்கு வரும்.

  சிறுகதை, அதில் ஒரு படிப்பினை என்று ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கோபு சார்.

  அப்போல்லாம் எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதுவதில்லை போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சிறுகதை, அதில் ஒரு படிப்பினை என்று ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கோபு சார். //

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //அப்போல்லாம் எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதுவதில்லை போலிருக்கிறது.//

   ஆமாம். 2011-ம் ஆண்டில் சில பதிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற பின்னூட்டங்களுக்கு, நான் ஏனோ பதில் தராமல் இருந்துள்ளேன்.

   அதுபோல 2013-ம் ஆண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி நான் எழுதியுள்ள 108 பதிவுகளுக்கும் நான் வேண்டுமென்றே ஒருசில காரணங்களுக்காக யாருக்கும் பதில் அளிக்கவில்லை.

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு