About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, September 22, 2011

ஏமாற்றாதே ! ..... ஏமாறாதே!!

 ஏமாற்றாதே ! ... ஏமாறாதே ! 

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-காலை நேரம். தன் தள்ளாத வயதில், அந்தக்கிழவி தேங்காய் வியாபாரம் செய்ய, அந்தத் தெருவோரமாக, சாக்குப்பையை விரித்து, காய்களை சைஸ் வாரியாக அடுக்கி முடித்தாள்.  

வெய்யில் ஏறும் முன்பு காய்களை விற்றுவிட்டால் தேவலாம். வெய்யில் ஏற ஏற உடம்பில் ஒருவித படபடப்பு ஏற்பட்டு, படுத்துத்தூங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

அந்த அரசமர பிள்ளையார் கோயில் அருகிலுள்ள பொதுக்குழாயில் குடிநீர் அருந்திவிட்டு, சற்றுநேரம் அந்தமரத்தடி மேடை நிழலிலேயே தலையை சாய்த்து விட்டு, பொழுது சாய்ந்ததும் வெய்யில்தாழ வீட்டுக்குச் சென்று விடுவது அவள் வழக்கம்.

இளம் வயதில் ஒண்டியாகவே நூற்று ஐம்பது காய்கள் வரை உள்ள பெரிய மூட்டையை, தலையில் சும்மாடு வைத்து சுமந்து வந்தவள் தான். இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி உடம்பு பலகீனமாகப் போய் விட்டது.

ஒரு காய் விற்றால் ஐம்பது காசு முதல் ஒன்னரை ரூபாய் வரை இலாபம் கிடைக்கும். பேரம் பேசுபவர்களின் சாமர்த்தியத்தைப் பொருத்து லாபம் கூடும் அல்லது குறையும். ஏதோ வயசான காலத்தில் தன்னால் முடிந்தவரை உழைத்து குடும்பத்திற்கு தன்னால் ஆன பண உதவி செய்யலாமே என்று நினைப்பவள்.

வரவர கண் பார்வையும் மங்கி வருகிறது. கணக்கு வழக்கும் புரிபடாமல் குழப்பம் ஏற்படுகிறது. அழுக்கு நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, எண்ணெயில் ஊறி பிசுக்கு ஏறிய நோட்டு பிரச்சனைகள் மட்டுமின்றி, இந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லை.

“சாமீ .... வாங்க ... தேங்காய் வாங்கிட்டுப்போங்க” குரல் கொடுத்தாள்.

“தேங்காய் என்ன விலைம்மா?” வந்தவர் கேட்டார்.

“வாங்க சாமீ .... எடுத்துட்டுப்போங்க .... எவ்வளவு காய் வேணும்?”  

“முதலிலே காய் என்ன விலைன்னு சொல்லும்மா, நீ சொல்லும் விலையை வைத்துத்தான், நான் உங்கிட்ட தேங்காய் வாங்கலாமா வேண்டாமான்னு முடிவே செய்யணும்” என்றார்.

“பெரிய காய் ஏழு ரூபாய் சாமீ; சின்னக்காய் ஆறு ரூபாய்” என்றாள் கிழவி.

“விலையைச் சொல்லிக்கொடுத்தால் ஒரு பத்து பன்னிரெண்டு காய் எடுத்துக்கொள்வேன்” என்றார்.

“பன்னிரெண்டு காயாவே எடுத்துக்கோ சாமீ; மொத்தப் பணத்திலே ஒரு ரெண்டு ரூபாய் குறைச்சுக்கொடு சாமீ” என்றாள்.

“பெரியகாய் பன்னிரெண்டுக்கு எழுபது ரூபாய் வாங்கிக்கோ” என்றார்.

“கட்டாது சாமீ. ஒரு காய் விற்றால் நாலணா [25 பைசா] தான் கிடைக்கும்” என்றாள். 

அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, “மீதிப்பணம் கொடு” என்றார் அவசரமாக.

“ஆறே முக்கால் [Rs. 6.75 P] ரூபாய்ன்னா பன்னிரெண்டு காய்களுக்கு எவ்வளவு சாமீ ஆச்சு?” கிழவி கேட்டாள்.

“எண்பத்து ஒரு ரூபாய் ஆகுது. அவ்வளவெல்லாம் தர முடியாது. முடிவா ஆறரை ரூபாய்ன்னு போட்டுக்கோ. பன்னிரெண்டு காய்க்கு எழுபத்தெட்டு ரூபாய் எடுத்துண்டு, மீதி இருபத்திரண்டு ரூபாயைக்கொடு, நாழியாச்சு” என்றார். 

அவளும் சற்று நேரம் மனக்கணக்குப்போட்டு குழம்பி விட்டு, அவரிடம் இருபத்திரெண்டு ரூபாயைக் கொடுத்து விட்டு, ”கணக்கு சரியாப்போச்சா, சாமீ?” என்று ஒரு சந்தேகமும் கேட்டு விட்டு, அவர் கொடுத்த நூறு ரூபாய்த் தாளைப் பிரித்துப்பார்த்து விட்டு, மீதித்தேங்காய்களின் மேல், அந்த ரூபாய் நோட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, கண்ணில் ஒத்திக்கொண்டு, ”முதல் வியாபாரம் சாமீ” என்று சொல்லி விட்டு, தன் சுருக்குப்பையில் பணத்தைப்போட்டு இடுப்பில் சொருகிக்கொண்டாள்.

இது போன்ற டிப்டாப் ஆசாமிகளில் சிலர் மிகவும் அல்பமாக இருப்பார்கள். வண்டியில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பெரிய செருப்புக்கடைக்குப் போவார்கள். காலுக்குப் புத்தம் புதிய ஷூ வாங்குவார்கள். அதில் போட்டுள்ள விலையான ரூபாய் 2199.95 P வுடன் ஐந்து பைசா சேர்த்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாயாகக் கொடுத்து விட்டு, திருடனுக்குத் தேள் கொட்டியது போல, ஓசைப்படாமல் வருவார்கள். அங்கு பேரம் பேச மாட்டார்கள். பேசினாலும் ஒரு ரூபாய் கூட குறைத்து வாங்க முடியாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.


அது போலவே பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. தப்பித்தவறி பேரம் பேசுபவர்களை ஒரு மாதிரியாக பட்டிக்காட்டான் என்பது போலப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்.

தெருவோரம் காய்கறி வியாபாரம் செய்யும், அதுவும் ஒருசில வயதானவர்களிடம் தான், பேரம் பேசுவார்கள், விலையைக் குறைப்பார்கள், அசந்தால் ஏதாவது ஒன்றை காசு கொடுக்காமல் கடத்தியும் வந்து விடுவார்கள். அதில் ஒரு அல்ப ஆசை இவர்களுக்கு.  


கீரை வகைகள், காய்கறிகள், கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் முதலியன விற்கும் தெருவோர ஏழை மற்றும் வயதான வியாபாரிகளிடம் தான் இவர்கள் பாச்சா பலிக்கும்.


அவர்களும் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள். 


நாலு அல்லது ஐந்து பேர்கள் உள்ள சிறிய குடும்பத்திற்கே காய்கறி வாங்க தினமும் 60 முதல் 100 ரூபாய் வரை தேவைப்படுகிறது. குழம்புத்தானுக்கு ஐந்து அல்லது ஆறு முருங்கைக்காய் வாங்கினாலே, அதற்கு மட்டுமே 15 அல்லது 20 ரூபாய் தேவைப்படுகிறது. என்ன செய்வது? எல்லாப்பொருட்களின் விலைகளுமே அடிக்கடி ஏறித்தான் வருகிறது.  


சொல்லப்போனால் இந்த காய்கறிகள் மட்டுமே, ஷேர் மார்க்கெட் போலவே,  சில சமயங்களில் ஏறினாலும் பலசமயங்களில் கிடுகிடுவென்று இறங்கி விடுவதும் உண்டு. விளைச்சல் அதிகமானால், வேறு வழியில்லாமல் அவற்றின் விலைகள் போட்டாபோட்டியில் குறைக்கப்படுவது உண்டு. விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் அழுகிவிடும் அபாயமும் உண்டு.  மற்ற பொருட்கள் அப்படியில்லை; ஏறினால் ஏறினது தான். இறங்கவே இறங்காது.


பார்க்க மனதிற்கு நிறைவாகவும்,காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 


ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்கும். பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார், அந்த வியாபாரியும். இன்று இந்தக்கிழவியிடம் தேங்காய் வாங்கியவர் ஒரு வேண்டுதலை நிறைவேற்றத்தான், அதுவும் கடவுளுக்காகவே வாங்கியுள்ளார்.  அந்த மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையடிவாரத்தில் உள்ள கீழ்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உள்ள மற்ற பத்து பிள்ளையார்களுக்கு ஒவ்வொன்றும் என மொத்தம் 12 சதிர் தேங்காய்கள் அடிப்பதாக வேண்டுதல் செய்து கொண்டுள்ளார்.   

சதிர் தேங்காய் உடைக்கும் அவருடன் ஏழைச்சிறுவர்கள் ஒரு கும்பலாகப் போய், உடைபட்டுச் சிதறும் சதிர் தேங்காய்களை பொறுக்குவதில் தங்களுக்குள் முண்டியடித்து வந்தனர்.

கிழவியிடம் வாங்கிய அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும்,  பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவரின் நெடுநாள் பிரார்த்தனை இன்று தான் ஒருவழியாக நிறைவேறியது. இந்தப்பிள்ளையார்களுக்கு சதிர் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு விளையாட்டு போல 10 வருஷங்கள் ஆகிவிட்டன.  திருச்சியிலுள்ள அந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இண்டர்வ்யூவுக்கு வந்த போது வேண்டிக்கொண்டது.  

பிறகு அவருக்கு வேலை கிடைத்தும் அவசரமாக போபாலில் போய் வேலைக்குச் சேர வேண்டும் என்று உத்தரவு வந்ததால், வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை உடனே நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. 


இப்போது அவர் மீண்டும் திருச்சிக்கே பணி மாற்றத்தில் வந்தாகி விட்டது. இனியும் பிள்ளையாருக்கான பிரார்த்தனையை தாமதிக்கக்கூடாது என்று, இன்று பிரார்த்தனையை நிறைவேற்றக் கிளம்பி விட்டார்.   

’பத்து வருஷங்கள் முன்பே இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி இருக்கலாம். அப்போது தேங்காய் விலையும் மிகவும் மலிவு. பன்னிரெண்டு காய்களையும் சேர்த்து பன்னிரெண்டு ரூபாய்க்கோ அல்லது பதினெட்டு ரூபாய்க்கோ வாங்கி இருக்கலாம்;

இன்று சுளையாக எழுபத்தெட்டு ரூபாய்களை செலவழிக்க நேரிட்டு விட்டது. அநியாயமாக இப்படி ஒரு தேங்காயையே ஆறரை ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது; 

நான் புத்திசாலித்தனமாக அந்தக்கிழவியிடம் சுட்டு வந்த ஒரு காய் மட்டும் தான் லாபம். அதையும் சேர்த்துக் சராசரியாகக் கணக்குப் பார்த்தாலும், ஒரு காய் ஒன்று [78/13 = 6]ஆறு ரூபாய் வீதம் அடக்கம் ஆகிறது என்று, கடவுளுக்கு வேண்டிக்கொண்டதற்கு பலவிதமான லாப் நஷ்டக் கணக்குகள் பார்த்து, 12 காய்களையும் சதிர் காய்களாக அடித்து விட்டு, மீதியிருந்த ஒரே ஒரு தேங்காயுடன் வீட்டை அடைந்து, அதைத் தன் மனைவியிடம் கொடுத்தார்.

அதிகாலையிலேயே குளித்துவிட்டுப் புறப்பட்டுப் போனவர்; பசியோடு வருவாரே என்று அவசர அவசரமாக சமையலை முடித்து விட்ட அவரின் அன்பு மனைவி, தேங்காயை உடைத்துத் துருவிப் போட்டு விட்டால், சூடாக சாப்பாடு பரிமாறி விடலாம் என்று தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டாள்.

தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெய்யிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ள தன் கணவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டாள்.

”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது!! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பித்தாள்.

இதற்கிடையில் ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, ஒருவழியாக வாஷ்பேசின் வரை ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய் அலம்பிக்கொண்டு வந்தார்.

மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.


அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார்.   


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

51 comments:

 1. //அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தா//

  அருமையான கதை .. இல்லை இல்லைஇது நடைமுறையில் எந்நாளும் நடப்பதுதான் .அல்ப தனமாக அப்பாவிகளை ஏமாத்தினா கடவுள் சும்மா விடுவாரா .( அழுகல் தண்ணிய குடித்தவர் பாடுதான் பாவம் )

  ReplyDelete
 2. அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார். //

  முடிவு அருமை... ஏழைகளை ஏமாற்ற எப்படி மனசு வருகிறதோ?

  ReplyDelete
 3. மனித மனம் மிகவும் விசித்திரமானதுதான்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு
  எதை எடுத்துக் கொண்டு எதைத் திருப்பிதர வேண்டும்
  என அந்தப் பிள்ளையாருக்குத் தெரியாதா என்ன ?
  தங்கள் கதைக்கான ஓவியமும் அருமை
  மனம் கவர்ந்த படைப்பு த.ம 3

  ReplyDelete
 5. இது போன்ற டிப்டாப் ஆசாமிகளில் சிலர் மிகவும் அல்பமாக இருப்பார்கள். வண்டியில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பெரிய செருப்புக்கடைக்குப் போவார்கள். காலுக்குப் புத்தம் புதிய ஷூ வாங்குவார்கள். அதில் போட்டுள்ள விலையான ரூபாய் 2199.95 P வுடன் ஐந்து பைசா சேர்த்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாயாகக் கொடுத்து விட்டு, திருடனுக்குத் தேள் கொட்டியது போல, ஓசைப்படாமல் வருவார்கள். அங்கு பேரம் பேச மாட்டார்கள். பேசினாலும் ஒரு ரூபாய் கூட குறைத்து வாங்க முடியாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

  கேரக்டர் ஸ்டடி அருமை.
  பிள்ளையார் நல்ல பாடம் புகட்டி விட்டார்.

  ReplyDelete
 6. கதைக்குப் பொருத்தமாக நீங்களே வரைந்துள்ள ஓவியம் பாராட்டுக்குரியது. தெய்வம் கூட அன்றே 'கொல்'ல ஆரம்பித்து விட்டது. இது மாதிரி அல்ப மனிதர்களை தினசரி வாழ்வில் அடிக்கடி எதிர்கொள்கிறோம். காய்கறி வர்ணனைகளும், முடிவும் மிக நன்றாக இருந்தன.

  ReplyDelete
 7. உண்மைதான். எத்தனையோ வீண் செலவு செய்வார்கள்.ஏழை விற்பனையாளர்களிடம் பேரம் பேசுவார்கள். நல்ல கதை.

  ஓவியம் மிக மிக அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. தெருவில் விற்பனை செய்பவர்களிடம் பேரம் பேசுகிறவர்கள் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் சத்தம் காட்டாமல் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்து வாங்குவார்கள். கடையில் எட்டு ரூபாய் விற்கிற குளிர்பானத்தை பெரிய ஹோட்டல்களில் முப்பது ரூபாய்க்கு வாங்கிக் குடிப்பார்கள்.

  ஏழைக்கிழவியின் வியர்வையின் அருமை வெள்ளைக்காலர் ஆசாமிகளுக்குப் புரியாது ஐயா. அதை இது போன்ற படிப்பினைகள் தான் புரிய வைக்கும்.

  ReplyDelete
 9. கதையும் அதற்கான ஓவியமும் அருமை! தினந்தோறும் நடக்கும் யதார்த்த நிகழ்வைத்தான் கதையாக வ‌டித்திருகிறீர்கள்!

  ReplyDelete
 10. ’//பத்து வருஷங்கள் முன்பே இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி இருக்கலாம். அப்போது தேங்காய் விலையும் மிகவும் மலிவு. பன்னிரெண்டு காய்களையும் சேர்த்து பன்னிரெண்டு ரூபாய்க்கோ அல்லது பதினெட்டு ரூபாய்க்கோ வாங்கி இருக்கலாம்;//

  சிரிப்பு வந்துவிட்டது.

  அப்பாவிகளை ஏமாற்றினால் கைமேல் உடன் பலன் கிடைக்கும்.ஓவியமும் கதையும் அருமை சார்

  ReplyDelete
 11. கதையும் அதற்கு பொருத்தமான ஓவியமும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 12. கதையும் நீங்களே வரைஞ்ச ஒவியமும் ரொம்ப அருமை.

  பேரம் பேசுதல்..பத்தி ரொம்ப கரெக்டா சொன்னீங்க :-))

  ReplyDelete
 13. அன்பின் வை.கோ - பிள்ளையார் பாத்துப்பார் - இதுதான் என் பாலிஸி - நல்லதோ கெட்டதோ - அவருக்குத் தெரியும் என்ன செய்யணும் எப்படிச் செய்யணும் எப்போ செய்யணும்கறதெல்லாம். .....அழுகுன தேங்காங்கறத் ஊகீச்சேன் . நல்ல் கதை - நல்ல படம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. நல்ல கதை.... கதைக்கேற்ற படம்...


  பிள்ளையாருக்குத் தெரியாதா என்ன! வினை விதைத்தவன் வினை அறுப்பான்...

  ReplyDelete
 15. அருமையான கதை.ஓவியமும் பிரமாதம்.

  "அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார்."

  அதானே! பிள்ளையார் சும்மாவா பார்த்துக் கொண்டு இருப்பார்.உடனே தந்து விட்டாரே...

  இங்கு தில்லியில் தேங்காய் விலை ரூபாய் 20.

  ReplyDelete
 16. முதலில் ஓவியத்தைத்தான் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.

  //பத்து வருஷங்கள் முன்பே இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி இருக்கலாம். அப்போது தேங்காய் விலையும் மிகவும் மலிவு. // சாமிக்குக் கொடுப்பதற்குக் கூட இப்படி கணக்குப் பார்ப்பார்களா!

  சீரியசான கதைக்கரு. அங்கங்கே சிரிப்பும் வந்தது. :)

  ReplyDelete
 17. அன்பின் கோபு சார், எல்லாக் கதைகளையும் படித்தேன். இது பேஷ் பேஷ். கொட்டாவி நன்றாக இருந்தது. அட்டெண்டர் இவற்றுடன் ஒப்பிடும்போது அவ்வளவு சோபிக்கவில்லை. இருந்தாலும் சோடை போகவில்லை. என்னால் இவ்வளவு எளிதாக சிறுகதைகள் எழுத முடியாது. முயன்று பார்க்க வேண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. கதை மிக நன்றாக இருக்கு.கலிகாலம் கைமேல் பலனென்று சொல்லுவார்களே இப்படித்தான் போலிருக்கு.

  நீங்கள் சொல்லியிருப்பதுபோல பெரிய கடைகளில் போய் 1000 கணக்கில் வாங்கி வருவோம்,அவர்கள் டாக்ஸ் அது இது என்று எல்லாத்தையும் சேர்த்து நம்மை நன்றாக ஏமாத்துவார்கள்.பாவம் கீரைகாரர்,பூக்கார்களிடம் பேரம் பேசுவார்கள் சிலர்.
  நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 19. மிகச் சரியான சாட்டையடிக் கதை.
  மிகவும் தேவையான பகிர்வு,அதை கதை வடிவில் தந்ததும் அதற்குத் தகுந்த ஓவியமும் அருமை.
  பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 20. சரியான முடிவு.. கதையை கொண்டுசென்றவிதம் அருமை சார்..

  ReplyDelete
 21. அருமையான பதிவு.


  அன்றாடம் நம் வாழ்கையில் நடைமுறையில் ஒன்று.
  ஹாஸ்பிடலுக்கு ,மற்ற செலவு என்றால் அள்ளி கொடுப்போம்
  இந்த மாதிரி ஏழைகளுக்கு கொடுக்க மனம் வராது.

  கதையோ,நிஜமோ உண்மையை அழகாக சொல்லி இருக்கீர்கள்

  வாழ்த்துக்கள் ,பாராட்டுகள் .நன்றிகள்

  ReplyDelete
 22. ஜில்லென்று (பேரம் பேசாமல்) வாங்கி குடித்த இளநீர் போல இருந்தது தங்கள் கதை...அவ்வளவு சுவையாக!!

  ReplyDelete
 23. அருமையான பகிர்வு.

  ஒரு சிறிய தொகைக்குப் பேரம் பேசி

  பெரிய பாவத்தை அன்றோ சுமந்திருக்கிறார்!

  ReplyDelete
 24. அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. //

  நிறைவான பகிர்வு.

  ReplyDelete
 25. ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, /

  முழு முதற் தேங்காய் பிள்ளையார் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அவருக்கானதை திருப்பி அளித்திருக்கிறாரே!

  ReplyDelete
 26. எண்ணம்போல் வாழ்வு.

  நினைக்கும் கேடு தனக்கே என உணர்த்திய பாடம்.

  ReplyDelete
 27. இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி உடம்பு பலகீனமாகப் போய் விட்டது./

  முதுமையின் சுமையை சுமப்பதால் காய்சுமை கன்க்கிறதோ!

  மனம் கனக்கும் வரிகள்..

  ReplyDelete
 28. ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லை./

  பலருக்கும் அவசரத்தில் அதிகம் சந்திக்கும் தொல்லை!!

  ReplyDelete
 29. சில மனிதரின் அல்பத்தனமான இயல்புகளை மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 30. முதிய மூதாட்டிபோல் பலரை அன்றாடம் சந்திக்கின்றோம்...

  ஏமாற்றியவருக்கு தண்டனை கிடைத்த விதம் நன்றாக இருந்தது.

  ReplyDelete
 31. கதைக்குப் பொருத்தமாக தாங்களே வரைந்துள்ள ஓவியம் பாராட்டுக்குரியது.

  அருமையான கைவண்ணம் !!

  ReplyDelete
 32. ஐயா நலமா?
  மனதை கொள்ளை கொண்ட கதை.
  இப்படி நடப்பது உண்மைதான்.
  அழகாக அருமையாக கதையில் அசத்தியிருக்கிறீங்க ஐயா.

  ReplyDelete
 33. பிள்ளையார் உணர்த்திய பாடம்
  அவருக்கு மட்டுமே!
  ஆனால் வை.கோ
  உணர்த்திய பாடம் ஊருக்கே
  உரியது அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 34. பலர் சிந்திக்க வேண்டும் என பதிவு ச்ய்யப்பட்டதாக குத்து கிறேன் உண்மையில் இப்படிதான் பலர் இருக்கிறார்கள் எங்கு பேரம் பேசவேண்டும் என இந்த நாகரீகம் கூட தெரியாத மரமண்டைகளுக்கு சரியாய் அடி பாராட்டுகள்

  ReplyDelete
 35. இந்த சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, என் எழுத்துக்கு ஆதரவாக அருமையான பல நல்ல கருத்துக்கள் கூறி, பாராட்டி வாழ்த்தியுள்ள அன்பு நெஞ்சங்களான


  திருமதி angelin அவர்கள்

  திருமதி ராமலக்ஷ்மி அவர்கள்

  திருமதி மனோ சாமிநாதன் அவர்கள்

  திருமதி tirumathi bs sridhar அவர்கள்

  திருமதி Lakshmi அவர்கள்

  திருமதி அமைதிச்சாரல் அவர்கள்

  திருமதி கோவை2தில்லி அவர்கள்

  திருமதி இமா அவர்கள்

  திருமதி RAMVI அவர்கள்

  திருமதி ராஜி அவர்கள்

  திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

  திருமதி ஆயிஷா அபுல் அவர்கள்

  திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்

  சிறப்பு விருந்தினரும், மிகச்சிறந்த எழுத்தாளருமாகிய என் வணக்கத்துக்குரிய
  திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்கள்

  திருமதி மாதேவி அவர்கள்

  திருமதி vidivelli அவர்கள்

  திருமதி மாலதி அவர்கள்

  திரு. தமிழ்வாசி-Prakash அவர்கள்

  திரு. DrPKandaswamyPhD அவர்கள்

  திரு. ரமணி சார் அவர்கள்

  திரு. ரிஷபன் சார் அவர்கள்

  திரு. ஸ்ரீராம் அவர்கள்

  திரு. சேட்டைக்காரன் அவர்கள்

  திரு. சீனா ஐயா அவர்கள்

  திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்

  திரு. G M B சார் அவர்கள்

  திரு. ”ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி அவர்கள் &

  திரு. புலவர் சா இராமாநுசம் சார் அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மீண்டும் நாளை வேறொரு புதிய கதையில் சந்திப்போம்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  ReplyDelete
 36. அருமையான கதை.
  கழ்டபடுபவர்களிடம் ஏன் பேரம் பேசனும்.
  கடவுளுக்கும் கணக்கா?

  ReplyDelete
 37. அவர் தன் தவறை உணர்ந்திருப்பார்.

  ReplyDelete
 38. Jaleela Kamal said...
  //அருமையான கதை.
  கஷ்டபடுபவர்களிடம் ஏன் பேரம் பேசனும்.
  கடவுளுக்கும் கணக்கா?//

  Jaleela Kamal said...
  //அவர் தன் தவறை உணர்ந்திருப்பார்.//


  வருகை + கருத்துக்களுக்கு நன்றி vgk

  ReplyDelete
 39. பிள்ளையார் சரியான தீர்ப்பாகக் கொடுத்து விட்டார்!!

  ReplyDelete
 40. middleclassmadhavi said...
  //பிள்ளையார் சரியான தீர்ப்பாகக் கொடுத்து விட்டார்!!//

  அத்திப்பூத்தாற்போல் அபூர்வ வருகைக்கு நன்றிகள், மேடம்.

  ReplyDelete
 41. ஒரு நிறைவான நீதி கதை படித்த மகிழ்ச்சி.
  எத்தனை புத்திமதிகள் இதில் அடங்கி உள்ளன!

  ReplyDelete
 42. வாங்கோ Ms PATTU Madam.

  தங்களின் அன்பான தொடர் வருகையும், ஆதரவான கருத்துக்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளன. நன்றி, நன்றி, நன்றி.

  அன்புடன் vgk

  ReplyDelete
 43. நல்ல ஒரு கதை... இது போன்றுதான் நடக்கிறது ... நடைமுறைக்கதை மிகவும் நல்லா இருந்தது.... கைமேல் தான் செய்த தவறுக்கு பலன் அளித்துவிட்டார் கடவுள் .... அருமை ஐயா....

  ReplyDelete
 44. தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துகள் + பாராட்டுக்கள், எனக்கு மிகவும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தன. தங்களின் கையால் மிகவும் SWEET ஆன இளநீர் ஒரு மிகப்பெரிய சொம்பு நிறைய வாங்கிக் குடித்தது போல உணர்ந்தேன். மிக்க நன்றி, VIJIPARTHIBAN Madam.

  அன்புடன் vgk

  ReplyDelete
 45. இதுபோல அப்பாவி வியாபாரி களிடம் பேரம் பேசுவது சரிஇல்லைதான். அதிலும் ஏமாற்றி ஒரு டாய் வேற திருட்டு. அதான் அழுகல் தேங்காயாச்சு

  ReplyDelete
 46. அட! அந்த படமும் நீங்க வரைந்ததா சூப்பர்.

  எளியாரை வலியார் வறுத்தினால், வலியாரை தெய்வம் வருத்தும்ன்னு சொல்லுவா. எப்படியோ அந்த ஆளுக்கு புத்தி வந்ததே.

  உச்சிப் பிள்ளையார் கோவிலை சுத்திப் பார்க்கணும்ன்னு ஆவலைத் தூண்டி விட்டது இந்தக் கதை. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது.

  நல்ல அறிவுரை. நல்ல முடிவு. படிச்சு ரெண்டு பேராவது திருந்தினா ரொம்ப சந்தோஷம்

  ReplyDelete
 47. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  ”ஏமாற்றாதே! ... ஏமாறாதே !!” - தேங்காய்க் கதை:

  ஏழைகள் வயிற்றில் இது போல் தெரிந்தே அடிக்கும் பல கோட் சூட் ஆளுங்களும், பட்டுப்புடவை மாமிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சரியான எழுத்தடி... தங்களது இந்தக் கதை. கதைக்குள் ஒவ்வொரு வரியும், அதற்கேற்றவாறு எத்தனை விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்... இந்தக் கதையைப் படித்தபின் இது போன்ற அல்ப சந்தோஷிகள் நிச்சயம் மனம் திருந்துவார்கள். கதாசிரியர் மன எண்ணத்துக்கு ஒரு நல்ல விருந்து.... மற்றவர்களுக்கு...: மருந்து.

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  ReplyDelete
 48. இந்த பெரிய மனுசங்களே இப்பூடி தா பெரிய பெரிய மால் கள்ல கேக்குர காச கொடுப்பாய்ங்க ரோட்டோரமா விக்கும் ஏளங்க கிட்ட பேரம் பேசுவாங்க

  ReplyDelete
 49. யாருகிட்ட எதுக்குத்தான் பேரம் பேசணும்கற விவஸ்தையே கிடையாதா. ரோட்டோர கிழவிகளிடம்தான ஜம்பமாக பேரம்பேசி அதிலும் ஒரு காயை தெரியாமல் எடுத்து வந்ததற்கு சரியான படிப்பினை

  ReplyDelete
 50. ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, ஒருவழியாக வாஷ்பேசின் வரை ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய் அலம்பிக்கொண்டு வந்தார்.//வாத்தியாரின் பாடல் வரிகளிலே ஒரு சிறுகதைத் தலைப்பு...நெத்தி அடி...

  ReplyDelete
 51. இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்!இந்தக் கதை தந்த படிப்பினை மிக அருமை!

  ReplyDelete