About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, January 1, 2019

2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். 






புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango.blogspot.com/ வலைப்பதிவருமான திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை சந்திப்பதும், புத்தாண்டுக்கான நாட்குறிப்புப் புத்தகம் (DIARY) கொடுத்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார்.  

பணி ஓய்வு பெற்ற, தற்சமயம் உடல்நலக் குறைவான, மூத்த குடிமகன் ஒருவர், தன் சொந்தக் கைக்காசை செலவழித்து, கடைக்குப்போய், புத்தம் புதிதாக DIARY வாங்கி, எனக்கு மட்டுமல்லாமல் வேறு சில நண்பர்களுக்கும், பஸ்ஸில் பயணம் செய்து, வீடு வீடாகச் சென்று, டோர் டெலிவெரி செய்து, வாழ்த்துகளை தெரிவித்து விட்டு வருவது என்பது, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை நினைக்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.  இது பிறர் மீது அவருக்குள்ள அளவற்ற அன்பையும், பெருந்தன்மையையும் காட்டுவதாக உள்ளது.   

25.12.2013 அன்று என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 2014-ம் ஆண்டுக்கான புதிய டைரியை முதன் முதலாகக் கொடுத்துச் சென்றார்.

25.12.2014 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2015-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். 




25.12.2015 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2016-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். 


29.12.2016 என் இல்லத்திற்கு வருகை தந்து, 2017-ம் ஆண்டுக்கான  டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். 

தலைப்பு: யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே !

31.12.2017 ஞாயிறு இரவு என் இல்லத்திற்கு வருகை தந்து, 2018-ம் ஆண்டுக்கான டைரி ஒன்றை கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில்  ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். 

அதற்கான  இணைப்பு:  http://gopu1949.blogspot.com/2017/12/2017-2018.html

 

வழக்கம்போல என் அருமை நண்பர் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று (01.01.2019 செவ்வாய்க்கிழமை) இரவு சுமார் 7 மணிக்கு என் இல்லத்திற்கு வருகை தந்து, 2019-ம் ஆண்டுக்கான நாட்குறிப்பு புத்தகம் (DIARY) + ஸ்வீட் ஜாங்கிரிகள் டப்பா + மிக்சர் பொட்டலம் + TEJCO MAGNIFIER 50mm லென்ஸ் (சிறிய எழுத்துக்களை பெரிதாக்கிக் காட்டக்கூடியது)  கொடுத்து மீண்டும் மகிழ்வித்துள்ளார்கள்.  ஸ்வீட்ஸ் + காரம் எங்கள் ஊரின் மிகப்பிரபலமான + மிகத் தரம் வாய்ந்த  'ASWINS' தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இன்று இப்போது சுடச்சுட எடுக்கப்பட்ட சூடான சில புகைப்படங்கள் தங்களின் மேலான பார்வைக்காக இதோ:


 


 





2014 முதல் 2019 வரை தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக, நேரில் வருகை தந்து, எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிப் புது வருட நாட்குறிப்புப் புத்தகமும் (DIARY) கொடுத்துச்செல்லும், அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 



நினைத்துப் பார்க்கிறேன்

சென்ற ஆண்டு (2018) ஆரம்பத்தில் ஓர் ’காமதேனு’ என்னிடம் ஓடி வந்தாள். ஒட்டிக்கொண்டாள். அள்ள அள்ளக் குறையாத அனைத்துச் செல்வங்களையும் ஆண்டு முழுவதும் அள்ளித்தந்து, பொருளாதார நிலைமையைச் சீராக்கி, தன்னிறைவையும் தந்து மகிழ்வித்தாள். போதும் என்ற மனதையும் எனக்கு அளித்தாள். ‘காமதேனு’ வந்த வேளை, வாழ்க்கையில் முதன் முதலாக 2018-2019 நிதியாண்டுக்கான BUDGET எனக்கு SURPLUS BUDGET ஆக அமைந்துள்ளது. எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் அனுக்கிரஹம் மட்டுமே.  ’காமதேனு’வை எனக்கு அனுப்பி வைத்த ஹைதராபாத் ‘காமதேனு’வுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

’காமதேனு’ அனுப்பி வைத்த ‘காமதேனு’

கண்குளிரக் காட்சியளிக்கும் காமதேனு




பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய  ஆங்கிலப்புத்தாண்டு + தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.








என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

64 comments:

  1. இடுகையை இப்போ படிக்க ஆரம்பித்தேன். புத்தாண்டு வாழ்த்துகள்.

    ஆரம்ப பத்தியில் "உடல் நலக் குறைவான" என்பதில் கருத்துப் பிழை உள்ளது. அவருக்கு உடல் நலக் குறைவு இப்போதுதானே. இதற்கு முந்தைய வருடங்களில் இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 2, 2019 at 12:16 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //இடுகையை இப்போ படிக்க ஆரம்பித்தேன்.//

      நள்ளிரவிலா? அதுவும் மிக முக்கியமான எழுச்சிமிக்க வேலைகளுக்கு நடுவிலா? :) ஆஹா... மிக்க நன்றி.

      //புத்தாண்டு வாழ்த்துகள்.//

      ஆஹா .... சந்தோஷம். 2018-இல் படுத்த நீங்கள் 2019-இல் துள்ளி எழுந்துள்ளீர்கள். நான் இன்னும் தூங்கவே ஆரம்பிக்கவில்லை**.
      ________

      **மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
      எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
      அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
      கருமமே கண்ணாயினார்.
      _______

      //ஆரம்ப பத்தியில் "உடல் நலக் குறைவான" என்பதில் கருத்துப் பிழை உள்ளது. அவருக்கு உடல் நலக் குறைவு இப்போதுதானே. இதற்கு முந்தைய வருடங்களில் இல்லையே.//

      பொருள் குற்றம் கண்ட நக்கீரரே .... தங்களுக்கு என் நன்றிகள். அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, (நெற்றிக்கண்ணைத் திறக்காமல்) இப்போது சரி செய்து விட்டேன்.

      அன்புடன் கோபு

      Delete
    2. //ஆரம்ப பத்தியில் "உடல் நலக் குறைவான" என்பதில் கருத்துப் பிழை உள்ளது.//

      இதில் கருத்துப்பிழை என்பதை விட, எனக்குப் படிக்கும்போது பகீர் என இருக்கிறது.. உடல்நலக்குறைவு என்பது வரும்-போகும்.. அதை இங்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே என் கருத்து... எப்பவும் நாம் ஒருவரிடம் இருக்கும் பொஸிடிவ்வான விசயங்களை மட்டுமே பப்ளிக்கில் சொல்வது நல்லது.. அது அவர்களை இன்னும் நலமாக்கும்.. ஊக்குவிக்கும்... குறைகளை தனிமையில் சொல்லி ஆறுதல் கொடுப்பது நல்லது.. இப்படித்தான் நான் நினைப்பதுண்டு..

      Delete
  2. நான் மனதில் என்னடா, தமிழ் இளங்கோ அவர்கள் இந்த வருடம் நாட்குறிப்புப் புத்தகம் கோபு சாருக்குத் தரலையே, இல்லை, தந்து கோபுசார் இடுகை போடலையோ என நினைத்தேன்.

    உங்கள் இருவரின் படங்கள் கண்டு மகிழ்ச்சி. இருவரும் இளமையாகவே இருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சி என்றும் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 2, 2019 at 12:20 AM

      //நான் மனதில் என்னடா, தமிழ் இளங்கோ அவர்கள் இந்த வருடம் நாட்குறிப்புப் புத்தகம் கோபு சாருக்குத் தரலையே, இல்லை, தந்து கோபுசார் இடுகை போடலையோ என நினைத்தேன்.//

      ’நாரதர்’ அவ்வப்போது இதுபோல பலவும் நினைக்கத்தான் நினைப்பார். நாரத மகரிஷியின் கலகங்கள் எப்போதும் நன்மையிலேயே முடியும். இப்போதும் அதுபோலவே நிகழ்ந்துள்ளது.

      //உங்கள் இருவரின் படங்கள் கண்டு மகிழ்ச்சி. இருவரும் இளமையாகவே இருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சி என்றும் தொடரட்டும்.//

      ’இளமையில் நடை அழகு ! ..... முதுமையில் நரை அழகு!!’ எனச் சொல்லுவார்கள்.

      “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” என யாரோ ஒரு, மிகவும் வயதான + அனுபவம் வாய்ந்த, ஒளவை போன்ற பதிவர் பெண்மணி சொன்னதும் போல ஞாபகம் உள்ளது. :)

      எண்ணங்களில் நாங்கள் எப்போதும் ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே. அதனால் எங்கள் மகிழ்ச்சிகள் எப்போதும் தொடரவே செய்யக்கூடும்.

      Delete
    2. //மிகவும் வயதான + அனுபவம் வாய்ந்த, ஒளவை போன்ற பதிவர் பெண்மணி சொன்னதும் போல ஞாபகம் உள்ளது. :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கோபு அண்ணனுக்கு வயசானாலும் குசும்பு குறையவில்லை ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊ:).

      Delete
    3. :)))))))))))))))))

      https://www.youtube.com/watch?v=PXRX47L_3yE

      Delete
  3. கொடுத்த பரிசுகளில் ஜாங்கிரி கண்ணைக் கவர்ந்தாலும், பெரிதுபடுத்திப் பார்க்கும் கண்ணாடி மிக அருமையான பரிசு. பாராட்டுகள்.

    (அதை எங்கே வைத்தோம் என்று தேடுவதற்கு நீங்கள் அவரிடம் இன்னொரு பூதக்கண்ணாடி கேட்காதது ஆச்சர்யம்தான்.... இல்லை ஒருவேளை கேட்டீர்களோ?)

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 2, 2019 at 12:22 AM

      //கொடுத்த பரிசுகளில் ஜாங்கிரி கண்ணைக் கவர்ந்தாலும், பெரிதுபடுத்திப் பார்க்கும் கண்ணாடி மிக அருமையான பரிசு. பாராட்டுகள்.//

      மிகவும் ருசிமிக்க, ஜீரா பாகு ஒழுகிய, புத்தம்புதிய நல்ல சுவையான, நல்ல முறுகலான ஜாங்கிரிகள் அனைத்தும் நேற்று நள்ளிரவே காலியாகி விட்டன. தின்னும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் எதையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லாவிட்டாலும், இந்தப் பெரிதுபடுத்திப் பார்க்கும் கண்ணாடி வித்யாசமாகத்தான் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

      இப்போதும் கண்ணைக் கவர்வது அந்த, ஜீர்ணம் ஆன ஜாங்கிரிகள் அல்ல. Magnifier கண்ணாடி மட்டுமேதான்.

      //(அதை எங்கே வைத்தோம் என்று தேடுவதற்கு நீங்கள் அவரிடம் இன்னொரு பூதக்கண்ணாடி கேட்காதது ஆச்சர்யம்தான்.... இல்லை ஒருவேளை கேட்டீர்களோ?)//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! புத்தாண்டில் காதில் விழுந்த சிரிப்பூட்டும் நல்ல ஜோக் ! மிக்க நன்றி ஸ்வாமீ.

      Delete
  4. "சுடச் சுடப் படங்கள்" என்பதைப் படித்துப் பார்த்தால், "கீழே இருந்த கடையிலிருந்து சூடாக பஜ்ஜிகள் வாங்கி வந்திருக்கலாம்" என்பதை நினைத,து எழுதினீர்களோ?

    உங்களிடமிருந்து இடுகைகள் வரணும்னா, ஒன்று உங்களை பதிவர்கள் சந்திக்கணும், இல்லைனா வரவு வரணும், இல்லைனா உங்கள் விழா நிகழ்ச்சி நடக்கணும் போலிருக்கு.

    புத்தாண்டை ஒரு நல்ல நகைச்சுவைக் கதை எழுதி ஆரம்பியுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 2, 2019 at 12:26 AM

      //"சுடச் சுடப் படங்கள்" என்பதைப் படித்துப் பார்த்தால், "கீழே இருந்த கடையிலிருந்து சூடாக பஜ்ஜிகள் வாங்கி வந்திருக்கலாம்" என்பதை நினைத்து எழுதினீர்களோ?//

      அப்படியும் வைத்துக்கொள்ளலாம். இவரின் வருகை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றாலும்கூட, நான் தயார் நிலையில் இருந்தும்கூட, 31.12.2018 & 01.01.2019 ஆகிய இரு நாட்களும், தான் வருவதாகச் சொன்ன நேரத்தை 4-5 முறை, மாற்றி மாற்றி ஒத்திப்போட்டு விட்டார். இதனால் என் மேக்-அப் அனைத்தையும் கலைத்துக்கொண்டு கேஷுவலாக குப்புறக் கவிழ்ந்து படுத்து விட்டேன். சில சமயம் அப்படியே தூங்கியும் விட்டேன். :)

      இவ்வாறு நான் கேஷுவலாக இருக்கும் போது, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து முடிக்கும் தருவாயில் ஒருவழியாக வந்து சேர்ந்தார். நானே கீழே போய், வரவேற்று லிஃப்டில் அழைத்து வந்தேன்.

      எப்போதும் எழுச்சியுடன் 16+16=32 படிகள் ஏறி அவரே வந்து விடுவார். உடல்நிலை காரணமாக (Breathing Trouble உள்ளதால்) இந்தமுறை அவரால் படியேறி வர இயலவில்லை என என்னிடம் தெரிவித்தார்.

      பாராயணம் முடித்திருந்த நான் அவருக்கு விபூதி இட்டுவிட்டு, பிரஸாதமாக பானகம் அருந்தக் கொடுத்தேன். கீழே ஆட்டோ வெயிட்டிங் என மிகவும் அவசரப்படுத்தி விட்டார்.

      என் இல்லத்தில் அளிக்கப்பட இருந்த ஸ்வீட், காரங்கள், காஃபி போன்ற எதையும் தொடாமல், குடிநீர் மட்டுமே அருந்திவிட்டு கிளம்பிவிட்டார்கள். என் கைக்குக் கிடைத்த ஏதோவொரு பிஸ்கட் பாக்கெட்டை மட்டும் அவரின் பையில் திணித்து விட்டேன். மொத்தத்தில் என் இல்லத்தில் அவர் இருந்தது ஒரு 10 நிமிட நேரங்கள் மட்டுமே. அவருக்கு அளிக்கப்பட இருந்த தீனிகளை வீணாக்க மனது இல்லாமல் நானே அவரை நினைத்துக்கொண்டு சாப்பிட்டு விட்டேன். :))))

      நானும் கீழே அவருடன் சென்று ஆட்டோவில், அவரை அமர வைத்துவிட்டு வந்தேன். தன் வீடு போவதற்குள் உடல் நிலையும், மூச்சு வாங்குவதும் சரியாகிவிட்டதாகச் சொல்லி மகிழ்ந்தார். பெருமாள் பிரஸாத மஹிமை என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

      //உங்களிடமிருந்து இடுகைகள் வரணும்னா, ஒன்று உங்களை பதிவர்கள் சந்திக்கணும், இல்லைனா வரவு வரணும், இல்லைனா உங்கள் விழா நிகழ்ச்சி நடக்கணும் போலிருக்கு.//

      அதே.... அதே.... அதையும் இனி நிறுத்தி விடலாமா என யோசித்து வருகிறேன். இருப்பினும் நான் இவ்வாறு பதிவுகள் வெளியிடுவது என்னுடைய FUTURE REFERENCE களுக்காக மட்டுமே என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

      //புத்தாண்டை ஒரு நல்ல நகைச்சுவைக் கதை எழுதி ஆரம்பியுங்களேன்.//

      வேண்டாம் ஸ்வாமீ..... காலம் மாறிக்கொண்டே வருகிறது. என்னுடைய பதிவுகளை ஆர்வத்துடன் படிப்பவர்கள் + பின்னூட்டமிடுபவர்கள் (My Dearest Friends & Fans) எல்லோரும் எங்கோ காணாமல் போய் விட்டார்கள். :(((((

      எனக்கும் வாட்ஸ்-அப் பார்க்கவே, இப்போதெல்லாம் நேரம் போதவில்லை.

      Delete
    2. //நானே அவரை நினைத்துக் கொண்டு சாப்பிட்டு விட்டேன்// ஹா ஹா ஹா... ஒருவேளை “அவர் இன்று வருகிறார்” என்று சொல்லிச் சொல்லியே உங்கள் வீட்டில் 4-5 முறை ஏதேனும் செய்யச் சொன்னீர்களோ?

      On a serious note, இளங்கோ சார் ஏன் breathing trouble இருக்குன்னு நினைக்கணும்? இதெல்லாம் சாதாரண breath பிராக்டிசில் சரியாயிடுமே.

      Delete
  5. அஸ்வினி, நாயுடு ஸ்வீட்ஸ் கடையை விட அருமையான கடை. சென்ற முறை அங்கு வாங்கிய ஸ்வீட்ஸ் களும், மதிய உணவு-பேருந்துக்கு புளியோதரை, தயிர் சாதம் இரண்டும் மிக அருமையா இருந்தது.

    அவர் விஸிட்டைச் சாக்கிட்டு ரமா கஃபே, மதுரா லஞ்ச்லாம் போகலையா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 2, 2019 at 12:28 AM

      //அஸ்வினி, நாயுடு ஸ்வீட்ஸ் கடையை விட அருமையான கடை. சென்ற முறை அங்கு வாங்கிய ஸ்வீட்ஸ் களும், மதிய உணவு-பேருந்துக்கு புளியோதரை, தயிர் சாதம் இரண்டும் மிக அருமையா இருந்தது.//

      அஸ்வினி அல்ல. ’அஸ்வின்ஸ்’ என்றே போடப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் திருச்சியில் கொடிகட்டிப் பறக்கும் கடை இது. பல கிளைகளும் உள்ளன.

      மனோகரம், அதிரஸம், ரவா லாடு என அனைத்தும் விற்கப்படுகிறன. எல்லாப்பொருட்களும் சூப்பர் டேஸ்ட் ஆகவும் உள்ளன. சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கார் பார்க்கிங் வசதிகளுடனும், திருச்சியிலேயே ஆங்காங்கே பல்வேறு கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

      2000 ரூபாய் கட்டு (2000*100=2,00,000) ஒன்றை எடுத்துக்கொண்டு, குடும்ப ஸகிதம் போய் வந்தால், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும். நிறைய தீனிகளை பார்ஸலாகவும் வாங்கி வந்து விடலாம். :)

      //அவர் விஸிட்டைச் சாக்கிட்டு ரமா கஃபே, மதுரா லஞ்ச்லாம் போகலையா? //

      ’அஸ்வின்ஸ்’ உடன் ஒப்பிட்டால் இதெல்லாம் ஓர் உணவகமா என நினைக்கத் தோன்றும் ஸ்வாமீ. காலம் மாறிக்கொண்டே வருகிறது.

      அதனால் நாமும் நம்மை மாற்றிக்கொள்ளணும். :)

      அன்புடன் கோபு

      Delete
    2. அஸ்வின்ஸ்தான். எழுத்துப் பிழை.

      நான் ஶ்ரீரங்கத்தில் இவர்கள் கிளையைப் பார்த்தேன். ஊருக்குச் செல்லும்போது திருச்சி பஸ் நிலையம் அருகில் இவர்கள் கடையில் வாங்கினேன்.

      நான் கடையில் ஸ்வீட்ஸ் வாங்கினதைத்தான் சொன்னேன். கடையை வாங்க நீங்கள் ஐடியா கொடுக்கறீங்களே

      Delete
  6. நட்புகள் அமைய கொடுத்து வைத்திருக்கவேண்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    தமிழ் இளங்கோ ஸார்.. எப்படி இருக்கீங்க..?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். January 2, 2019 at 5:56 AM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //நட்புகள் அமைய கொடுத்து வைத்திருக்கவேண்டும்.//

      ஆம். எதைக் கொடுப்பது? அதை எப்படிக்கொடுப்பது? என்பதில்தான் சிறுசிறு யோசனைகள் / மாற்றங்கள்.

      எதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் + ப்ராப்தம் சரிவர அமைய வேண்டும்.

      //வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //தமிழ் இளங்கோ ஸார்.. எப்படி இருக்கீங்க..?//

      அவரே இங்கு வந்து பதில் அளிப்பார் என நம்புகிறேன்.

      Delete
  7. தொலைக்காட்சிக்குப் பின்னால் எட்டிப்பார்க்கும் குட்டிக்கிருஷ்ணன்... அருமை! தொலைக்காட்சியிலிருந்து வெளியே எழுந்தருளி நண்பர்கள் நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள் என்று வேடிக்கை பார்ப்பது போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் குட்டிக் கிருஸ்ணனைப் பார்த்த கவலையில் நான் கோபு அண்ணனி முறைக்கிறேன் ஏன் தெரியுமோ:).. முன்பு அப்படியே குட்டிக் கிருஸ்ணன் தனியே அழகாக இருந்தார்ர். இப்போ புதுசா ரீவி வாங்கி அதில் பொருத்தி, குட்டிக் கண்ணனை மறைத்துப்போட்டார் கோபு அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    2. ஸ்ரீராம். January 2, 2019 at 5:56 AM

      //தொலைக்காட்சிக்குப் பின்னால் எட்டிப்பார்க்கும் குட்டிக்கிருஷ்ணன்... அருமை! தொலைக்காட்சியிலிருந்து வெளியே எழுந்தருளி நண்பர்கள் நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள் என்று வேடிக்கை பார்ப்பது போல இருக்கிறது.//

      ஆமாம். ஏழை எளிய அந்தணனான அடியேன் அந்த சுதாமா என்கிற குசேலர் போலவும், தமிழ் இளங்கோ அவர்கள் ராஜாதிராஜாவான அந்த சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணன் போலவும் எனக்குத் தோன்றியது.

      http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html

      Delete
  8. டைரி, ஸ்வீட்ஸ், காரம்ஸ் சரி.... லென்ஸ் எதற்கு? கடந்த வருடங்களில் உங்களுக்குத் தரப்பட்ட டைரிகளில் என்ன எழுதினீர்கள்? நாட்குறிப்பா? ஸ்ரீராமஜெயமா?

    ReplyDelete
    Replies
    1. இது கொஸ்ஸ்ஸன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. இதுல சந்தேகமே வேண்டாம். என்றைக்கு தரப்பட்டது யாரால் தரப்பட்டதுன்னு எழுதி, இடுகைக்காகப் படங்கள் எடுத்து, அப்புறம் டேபிள்ல ஒரு இடத்துல வச்சிடுவார்.

      நானா இருந்தா யாருக்கும் கொடுக்காம வச்சிருப்பேன் (உபயோகப்படுத்தாம). கோபு சார் மட்டும் வித்தியாசமா இருப்பாரா என்ன? ஹா ஹா ஹா

      Delete
    3. ஸ்ரீராம். January 2, 2019 at 5:57 AM

      //டைரி, ஸ்வீட்ஸ், காரம்ஸ் சரி.... லென்ஸ் எதற்கு?//

      கொடுத்த பொருட்களை பெரிதாக்கி சரி பார்த்துக்கொள்வதற்காக இருக்குமோ என்னவோ என நினைக்க வேண்டாம். மருந்து மாத்திரைகளில் மிகப்பொடிப்பொடியான எழுத்துக்களில் EXPIRY DATE முதலியன போட்டிருப்பார்கள். அவற்றை லென்ஸ் உதவியுடன் சரிபார்த்துக்கொள்ள செளகர்யமாக இருக்கும் என நினைத்து பத்திரப்படுத்திக் கொண்டுள்ளேன்.

      //கடந்த வருடங்களில் உங்களுக்குத் தரப்பட்ட டைரிகளில் என்ன எழுதினீர்கள்? நாட்குறிப்பா? ஸ்ரீராமஜெயமா?//

      எனக்கு சம்பள வருமானங்கள் என்று ஏதும் கிடையாது. மாதாமாதம் எந்தெந்த தேதிகளில், எந்தெந்த இடங்களிலிருந்து, எந்தெந்த குறிப்பிட்ட தொகை வரவேண்டும் என்பது மனப்பாடமாகவே எனக்குத் தெரியும். அவற்றை கண்காணிக்க வேண்டி நானே ஒரு 'FULL PROOF FOLLOW UP REGISTER' தயாரித்து என்னிடம் வைத்துக்கொண்டுள்ளேன். அந்தத் தொகைகள் என் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் எனக்கு SMS கிடைத்து விடும். அவ்வாறு SMS வரவர அந்த என் FOLLOW UP REGISTER இல் தொகையை சுழித்துவிட்டு வரவு வைக்கப்பட்ட தேதியைப் போட்டுக்கொண்டு விடுவேன். இதுவே எனக்கு ANNUAL INCOME-TAX RETURN SUBMIT செய்யவும் பயன்படுகிறது. So வரவுகளை டைரியில் நான் எழுத வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

      பெரும்படியான செலவுகளை மட்டும், டைரியில் அந்தந்த தேதியில், குறித்துக்கொண்டு விடுவேன். உதாரணமாக: (1) மாதாந்திர மளிகை சாமான்களுக்காக மளிகைக் கடைக்குக் கொடுக்கும் தொகை + கொடுக்கும் தேதி (2) ஆவின் பால் காரருக்குக் கொடுக்கும் தொகை + கொடுக்கும் தேதி (3) GAS CYLINDER பதிவு செய்த தேதி, சப்ளை ஆன தேதி, கொடுக்கப்பட வேண்டிய தொகை, லஞ்சம் உள்பட கொடுக்கப்பட்ட தொகை, சப்சைடி வரவு வைக்கப்பட்ட நாள், சப்சைடியாக வரவு வைக்கப்பட்ட தொகை (4) TNEB ONLINE PAYMENTS (5) BSNL LANDLINE + WiFi ONLINE PAYMENTS, (6) NEWS PAPER + OTHER MAGAZINES PAYMENT (7) பூஜைக்கான பூவுக்கு மாதாமாதம் தரும் தொகை + தேதி (8) MONTHLY MAINTENANCE CHARGES FOR FLAT தொகை + கட்டிய தேதி (9) பாத்திரம் கழுவ வேண்டி வீட்டில் வேலை செய்பவர்களுக்கான சம்பளத் தொகை / அட்வான்ஸ் தொகை, முதலியன கொடுக்கப்பட்ட நாள் (10) வெண்ணெய், நெய், காப்பித்தூள், அன்றாட காய்கறிகள் போன்ற இதர சில்லரை செலவுகளுக்காக என் மனைவியிடம் மாதம் ஒரிரு நாட்கள் மட்டும் கொடுக்கப்படும் பெரும் தொகை + கொடுக்கப்பட்ட நாள் (11) வேறு ஏதேனும் AC SERVICE & REPAIR / ELECTRICAL WORK / PLUMBER WORK / COMPUTER REPAIR WORK - PARTS REPLACEMENTS / PRESTIGE INDUCTION STOVE REPAIR / FRIDGE, WASHING MACHINE, GRINDER, MIXY REPAIRS போன்றவற்றிற்கும் கொடுக்கும் தொகை + கொடுத்த தேதி போன்ற விபரங்கள் மட்டும் என்னால் அவ்வப்போது டைரியில் குறித்துக்கொள்ளப்படும்.

      டைரியின் பாதி பக்கங்கள் காலியாகத்தான் இருக்கும். பழைய டைரிகள் என் பேரன்கள் இங்கு வரும்போது அவர்கள் கிறுக்கவும், படம் வரையவும், கலர் அடிக்கவும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமஜயம் எழுத என் மனைவி தனியே ஒரு நோட்டு வைத்திருக்கிறாள். அந்த அவளின் வழிக்கு நான் செல்வதே இல்லை. :)

      Delete
  9. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். January 2, 2019 at 5:57 AM

      //வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      அன்புடன் கோபு

      Delete
  10. சென்ற 2018 ஜனவரியில் திருச்சி வந்தபோது தங்களுடன் இளங்கோ அவர்களும் என்னைச் சந்தித்து டைரி வழங்கினார் என்ற உண்மையை வரலாற்று ஆசிரியர்களுக்காகப் பதிவிடுகிறேன்.இந்த ஜனவரியும் நான் திருச்சி வர வாய்ப்பண்டு......புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. Chellappa Yagyaswamy January 2, 2019 at 6:14 AM

      வாங்கோ, ஸ்வாமீ. நமஸ்காரங்கள்.

      //சென்ற 2018 ஜனவரியில் திருச்சி வந்தபோது தங்களுடன் இளங்கோ அவர்களும் என்னைச் சந்தித்து டைரி வழங்கினார் என்ற உண்மையை வரலாற்று ஆசிரியர்களுக்காகப் பதிவிடுகிறேன். இந்த ஜனவரியும் நான் திருச்சி வர வாய்ப்புண்டு......புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா//

      நன்றாக நினைவில் உள்ளது. தாங்கள் மிகப்பெரிய இடம் என்பதால் தங்களையும் தங்கள் இல்லத்தரசியையும் திருச்சி ஹோட்டல் அஜந்தாவில் ரூம் போட்டு தங்கவைத்து, நாங்கள் இருவரும் மாபெரும் வரவேற்பு அளித்தோம். அந்த நாள்: 07.01.2018

      https://gopu1949.blogspot.com/2018/01/blog-post_8.html

      மேற்படி இணைப்பினில் ’ஹனிமூன் வந்துள்ள பதிவர்!’ என்ற தலைப்பில் நான் 08.01.2018 அன்று ஒரு தனிப் பதிவே வெளியிட்டு சிறப்பித்துள்ளேன்.

      வரலாற்று ஆசிரியர்களுக்காகவே இதையும் நான் இங்கு குறிப்பிட்டுப் பதிவு செய்து கொள்கிறேன்.

      அன்று நீர் எனக்களித்த சரக்குகளையும், சைட் டிஷ்களையும் இப்போது மீண்டும் ஒருமுறை, நாக்கில் நீருடன் பார்த்து மகிழ்ந்தேன். :))

      திருச்சிக்கான தங்களின் மீண்டும் வருகையும், புத்தாண்டு வாழ்த்துகளும் என்னைப் புல்லரிக்கச் செய்கின்றன.

      அன்புடன் கோபு

      Delete
  11. உங்கள் நட்பு பயணம் தொடர வாழ்த்துகள் சார்.புத்தாண்டு வாழ்த்துகள்.அந்த ஜாங்கரிகளை எனக்கு அனுப்பிடவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி ஸ்ரீதர் January 2, 2019 at 7:46 AM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //உங்கள் நட்பு பயணம் தொடர வாழ்த்துகள் சார். புத்தாண்டு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஆச்சி. உங்களுடன் ஆரம்பித்த இந்த நட்புப் பயணம், ஹனுமார் வால் போல இன்றுவரை நீண்டுகொண்டே போகிறது.

      உங்களின் அருமை பெருமைகளை இந்த மாதமே அடுத்து வரும் என் மூன்று பதிவுகளிலும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. :)))

      //அந்த ஜாங்கரிகளை எனக்கு அனுப்பிடவும்.//

      அந்த ஜாங்கிரிகள் எல்லாமே என் தொந்திக்குள் போய் விட்டன ஆச்சி. என் தொந்தியை எப்படி தனியே கழட்டி உங்களுக்கு அனுப்பி வைப்பது எனத் தீவிரமாக யோசித்து வருகிறேன் .... ஒரு தொந்தி, மற்றொரு தொந்தியுடன் சேர்ந்து இருப்பதுதான் நியாயம் என்பதால். :))))

      தொந்தி பற்றிய என் கவிதையைக் காண இதோ ஓர் இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html ‘உனக்கே உனக்காக’ என்பது அதன் தலைப்பு.

      அன்புடன் கோபு

      Delete
  12. மிக மகிழ்ச்சி .. தங்களையும் ,தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் படத்தையும் கண்டதில் ...



    தங்களுக்கும் எங்களின் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies

    1. Anuradha Premkumar January 2, 2019 at 11:03 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மிக மகிழ்ச்சி .. தங்களையும், தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் படத்தையும் கண்டதில் ...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //தங்களுக்கும் எங்களின் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ...//

      மிகவும் சந்தோஷம். நன்றிகள்.

      Delete
  13. உங்கள் இருவரின் நட்பு வாழ்க!
    புத்தாண்டு, மற்றும் தைபொங்கல் வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு January 2, 2019 at 2:56 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //உங்கள் இருவரின் நட்பு வாழ்க! புத்தாண்டு, மற்றும் தைபொங்கல் வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  14. நல்லதொரு பழக்கத்தைத் தொடர்கின்ற திரு தமிழ் இளங்கோ அவர்களுக்குப் பாராட்டுகள். அதனை நினைவுகூர்ந்து அவரை நீங்கள் பெருமைப்படுத்தும் வகையில் பகிர்ந்த விதம் அருமை. உங்கள் இருவரையும் கண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 2, 2019 at 2:59 PM

      வாங்கோ என் மரியாதைக்குரிய முனைவர் ஐயா, வணக்கம்.

      //நல்லதொரு பழக்கத்தைத் தொடர்கின்ற திரு தமிழ் இளங்கோ அவர்களுக்குப் பாராட்டுகள். அதனை நினைவுகூர்ந்து அவரை நீங்கள் பெருமைப்படுத்தும் வகையில் பகிர்ந்த விதம் அருமை. உங்கள் இருவரையும் கண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி, ஐயா.

      Delete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.. சிறியவர்கள்தான் முதலில் சொல்லோணும்போல வாழ்த்து:))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதிரா. அதனால்தான் நீங்க சொல்றதுக்கு முன்னால நான் வாழ்த்து சொன்னேன்.

      பாருங்க.. என்னைவிடச் சில நாட்கள் வயதில் பெரிய ஶ்ரீராம் அடுத்தது, பிறகு பலப் பல வருடங்கள் பெரிய நீங்கள் வாழ்த்து சொல்றீங்க.

      உங்களுக்கு ஆறுதல் என்னன்னா, ஏஞ்சலின் இன்னும் வரலை வாழ்த்து சொல்ல. வயசுல அவங்க டர்ன் வர வரைல காத்திருக்காங்களோ?

      Delete
    2. நான் இன்னும் பிறக்கவேயில்ல :) பெரியோர்கள் எல்லோருக்கும் வணக்கங்கள் ..ஒரு சின்ன பிள்ளைக்கு ஏதாச்சும் கிஃப்ட் குடுக்கக்கூடாதா :)

      Delete
    3. அப்பாவி:) அதிரா January 2, 2019 at 3:12 PM

      வாங்கோ அதிரா, வணக்கம். ஞானி என்று உங்களை நீங்களே சொல்லிக்கொண்டிருந்த நீங்க, எப்போது என்னைப் போல ’அப்பாவி’ ஆனீங்கோ?

      ’அப்பாவி’ என்றால் என்னைப்போல மிகவும் ஸாது INNOCENT என்று ஒரு பொருள் உண்டு. ஆனால் இது உங்களுக்குப் பொருந்துமா என எனக்குத் தெரியவில்லை.

      ’அப்பாவி’ என்பதைப் பிரித்துப்போட்டால் ’அந்த + பாவி’ என்றும் பொருள் கொள்ளலாம்.

      மிகவும் குழப்பமான இதில், எங்கட அதிரா ’அப்பாவி’யா அல்லது ’அந்தப் பாவியா’ என்பதை, தமிழ்புலவர் மற்றும் சகலகலா வல்லபரான, நம் நெல்லைத்தமிழன் ஸ்வாமிஜீ அவர்கள் விளக்கிச் சொல்ல வேண்டுமாய் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். அதிரா பாஷையில் ஆணை இடுகிறோம். :)

      //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு அண்ணன்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

      //சிறியவர்கள்தான் முதலில் சொல்லோணும்போல வாழ்த்து:))//

      எப்படியோ எங்கட அதிரா, மிகச் சிறிய பெண் மட்டுமே (ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே) என்பதை கடந்த 61 ஆண்டுகளாக உங்கள் எழுத்துக்களில் வலியுறுத்திச் சொல்லி வருகிறீர்கள். கேட்க மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      அன்பு வருகைக்கும், கலக்கலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, அதிரா.

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  16. நீங்கள் பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி.. அந்த திருச்சி வீட்டையும் அந்த நொறுக்குத் தீனி நிறைஞ்சிருக்கும் கட்டிலையும்.. அந்த மொட்டை மாடியையும் விட்டு எங்குமே போறீங்கள் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனா எலோரும் உங்களைத் தேடி வருகிறார்கள்.. அப்போ உங்களிடம் என்னமோ வசீகரம்+கவர்ச்சி[உடனே அழகான ஒருவராக ரொம் குரூஸ் லெவலுக்குக் கற்பனையில் மிதக்காதீங்க:))] இருக்கு:)).. ஹா ஹா ஹா.. அது அப்படியே தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. FYI Gopu anaa ..its Tom Cruise

      Delete
    2. Angel January 2, 2019 at 6:00 PM

      //FYI Gopu anaa ..its Tom Cruise//

      Thanks a Lot. Please collect the FEES from Athira. :)

      Delete
    3. அப்பாவி:) அதிரா January 2, 2019 at 3:15 PM

      //நீங்கள் பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி.. அந்த திருச்சி வீட்டையும் அந்த நொறுக்குத் தீனி நிறைஞ்சிருக்கும் கட்டிலையும்.. அந்த மொட்டை மாடியையும் விட்டு எங்குமே போறீங்கள் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//

      கரெக்ட் அதிரா ..... தாங்கள் சொல்லியுள்ள இது 100% கரெக்டூஊஊஊஊ. மொட்டை மாடிக்குச் செல்வதையும் இப்போதெல்லாம் நிறுத்திவிட்டேன். மூன்றாம் மாடி வரை மட்டுமே லிஃப்ட் உள்ளது. மூன்றாம் மாடியிலிருந்து மொட்டை மாடிக்கு 16 படிகள் ஏறித்தான் செல்லணும், பிறகு 16 படிகள் இறங்கித்தான் வரணும். அதெல்லாம், மிகவும் சுகவாசியான எனக்கு சரிப்பட்டு வராது என்பதால் விட்டுவிட்டேன். :)

      //ஆனா எலோரும் உங்களைத் தேடி வருகிறார்கள்.. அப்போ உங்களிடம் என்னமோ வசீகரம் + கவர்ச்சி இருக்கு:)).. ஹா ஹா ஹா.. அது அப்படியே தொடர வாழ்த்துக்கள்.//

      பலாப்பழத்தைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பது சகஜம் என்று சொல்ல வருகிறீர்களா? முழு பலாப்பழம் முள் குத்துவதுபோல பார்க்க, அவ்வளவாக நல்லா இருக்காது. ஆனால் அதனுள் மிகச் சுவையான பழங்கள் நிறைந்து இருக்கும். அதுபோலத்தான் நானும். பார்க்க ஒரு மாதிரியாக இருப்பேன். எனக்குள் மிகச்சுவையான மனம் உண்டு. அதில் நல்ல மணமும் உண்டு. இது என்னுடன் நன்கு பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாகும். யாரிடமும் சொல்லிடாதீங்கோ. படித்துட்டு கிழிச்சுப் போட்டுடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      //[உடனே அழகான ஒருவராக ரொம் குரூஸ் லெவலுக்குக் கற்பனையில் மிதக்காதீங்க:))] //

      1981-இல் தன் 19-வது வயதில் ENDLESS LOVE என்ற படத்தில் நடித்து புகழ்பெற்ற அமெரிக்க நடிகரும், படத்தயாரிப்பாளருமான இந்த டாம் க்ரூயிஸ் பிறந்த நாள் என்னவென்று தெரியுமா? 03.07.1962. இப்போது அவருக்கு 57 வயது.

      இந்த ஆளுக்கு சரியாக 10 வயது ஆகும்போது அதாவது 03.07.1972 அன்று எனக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது என்னைப் பார்த்திருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ..... நான் இவரைவிட (மேக்-அப் எதுவும் இல்லாமலேயே) எத்தனை படா ஸ்டைலாகவும், அழகாகவும், துடிப்பாகவும் அன்று இருந்தேன் என்று.

      சந்தேகமானால் இதோ கீழ்க்கண்ட இந்தப்பதிவுக்குப் போய் என் அந்தக்கால (03.07.1972) போட்டோவைப் பாருங்கோ. நீங்க அப்படியே சொக்கிப்போய் மயக்கம் போட்டு விழுந்தால் நான் பொறுப்பல்ல என்பதை அஞ்சுவையும், நெ.த. ஸ்வாமீயையும் சாட்சியாக வைத்துக்கொண்டு, எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன்.

      http://gopu1949.blogspot.com/2011/07/1.html

      ’மலரும் நினைவுகள்’ மேலிருந்து கீழாக படம் எண்: 3 மற்றும் 4

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    4. ’டாம் குரூயிஸ்’ பற்றி கூடுதல் தகவல்கள்:-
      =============================================

      இவருக்கும் என்னைப்போலவே மூன்று வாரிசுகள்.

      இவருக்கும் எனக்கும் உள்ள ஒரேயொரு மிகப்பெரிய வித்யாசம் என்னவென்றால் இவருக்கு 1987 முதல் அடுத்தடுத்து, திருமணமாகி மூன்று மனைவிகள். மூவரையுமே டக் டக்கென்று விவாகரத்து செய்துவிட்டு, 2012 முதல் ஜாலியாக உள்ளாராம். !!!!!!!!!!!!!!!

      Delete
  17. மிக்ஸர்கூட உறைப்பில்லாததுதான் உங்களுக்குப் பிடிக்குமோ?.. எனக்கு நல்ல ஹொட் மிக்ஸர்தான் பிடிக்க்கும்.. ஆஆஆஅ ஊஊஊஉ எனச் சாப்பிடோணும்..

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்து மகிழ்ச்சியடைவதுதான்.. வயதான காலத்தில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி:) அதிரா January 2, 2019 at 3:17 PM

      //மிக்ஸர்கூட உறைப்பில்லாததுதான் உங்களுக்குப் பிடிக்குமோ?.. எனக்கு நல்ல ஹொட் மிக்ஸர்தான் பிடிக்க்கும்.. ஆஆஆஅ ஊஊஊஉ எனச் சாப்பிடோணும்..//

      இல்லை அதிரா. எனக்கும் காரசாரமானவைகள் தான் பிடிக்கும். மிக்ஸர் என்று இல்லை .. பொதுவாக எந்த சமையலும் (சாம்பார், ரஸம், ஊறுகாய், அரிசி அப்பளம், வடாம் போன்ற எல்லாமே) நல்ல காரசாரமாகவே இருக்கணும். வழுவட்டையாக இருக்கக்கூடாது. கண்ணில் ஜலம் வருவதுபோல இருக்கணும். அதன்பின் வாய் + உதடு போன்ற உறுப்புக்கள் எரிச்சலாக இருந்தால் ஸ்வீட்ஸ், பாயஸம் போன்றவை தனியாக சாப்பிட பிடிக்கும்.

      //அனைவருக்கும் வாழ்த்துக்கள்..//

      மிக்க மகிழ்ச்சி.

      //கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்து மகிழ்ச்சியடைவதுதான்.. வயதான காலத்தில் மகிழ்ச்சி.//

      இது யாருக்காகச் சொல்லியுள்ளீர்கள்? ஓஹோ....... மிக்க மகிழ்ச்சி, அதிரா.

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  18. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு அண்ணா ..
    வருஷா வருஷம் இளங்கோ அண்ணன் உங்கள் வீட்டுக்கு வருகை தந்து புதிய வருட நாட்குறிப்பு பரிசளிப்பது மிகவும் மனமகிழ்வான விஷயம் ..அந்தமிக்ஸர் ஸ்ஸ்ஸ்ஸ் பார்க்க மொறுமொறுப்பா இருக்கு :)எப்பவும் போல கண்ணன் உங்கள் இருவரையும் பார்த்து தற்சமயம் ஒளிந்து நிற்கும் அந்த பேக்க்ரவுண்ட் அழகு ..

    ReplyDelete
    Replies
    1. Angel January 2, 2019 at 5:51 PM

      வாங்கோ அஞ்சூஊஊஊ, வணக்கம்.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு அண்ணா ..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //வருஷா வருஷம் இளங்கோ அண்ணன் உங்கள் வீட்டுக்கு வருகை தந்து புதிய வருட நாட்குறிப்பு பரிசளிப்பது மிகவும் மனமகிழ்வான விஷயம்..//

      ஆமாம். அவர் என்னிடம் மிகவும் பிரியமுள்ள நண்பராக இருந்து வருகிறார். எனக்கும் மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      //அந்த மிக்ஸர் ஸ்ஸ்ஸ்ஸ் பார்க்க மொறுமொறுப்பா இருக்கு :)//

      ஆமாம். ’அஸ்வின்ஸ்’ Product ஆன அது நல்ல சுவையாகவும், தரமானதாகவும் இருக்கும்.

      //எப்பவும் போல கண்ணன் உங்கள் இருவரையும் பார்த்து தற்சமயம் ஒளிந்து நிற்கும் அந்த பேக்க்ரவுண்ட் அழகு ..//

      அந்தக் கண்ணனைப்போலவே மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
  19. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வைகோ சார்.

    நல்ல நண்பர்களின் சந்திப்பு. மகிழ்ச்சியானதே...அதுவும் நாட்குறிப்பேடு மற்றும் லென்ஸ்...ஸ்வீட்ஸ் காரம் என்று கலக்கல்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu January 2, 2019 at 8:13 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வைகோ சார்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //நல்ல நண்பர்களின் சந்திப்பு. மகிழ்ச்சியானதே...அதுவும் நாட்குறிப்பேடு மற்றும் லென்ஸ்...ஸ்வீட்ஸ் காரம் என்று கலக்கல்... கீதா//

      தங்களின் அன்பான வருகைக்கும், கலக்கலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  20. இனிய புத்தாண்டு வாழ்த்து , ஐயா ! ஓர் அரிய செயலைத் தொடர்ந்து செய்யும் தமிழ் இளங்கோ ஐயா அவர்களைப் பாராட்டுகிறேன் . அவரை நண்பராய்ப் பெற்றிருக்கும் நீங்கள் பேறு பெற்றவர் . இடுகைகளை நிறுத்தி விடாதீர்கள் . சுவையாக எழுதும் திறன் உங்களிடம் இருக்கிறது . முக்கியமான ஐட்டங்களைக் குறித்துக் கணக்கு எழுதும் வழக்கம் போற்றற்குரியது .

    ReplyDelete
    Replies
    1. சொ.ஞானசம்பந்தன் January 3, 2019 at 10:34 AM

      வாங்கோ, அநேக நமஸ்காரங்கள் ஐயா.

      //இனிய புத்தாண்டு வாழ்த்து, ஐயா !//

      மிக்க மகிழ்ச்சி - தங்களின் இந்தப் புத்தாண்டு வாழ்த்துக்கு அடியேனின் அன்பு கலந்த நமஸ்காரங்கள் ஐயா.

      //ஓர் அரிய செயலைத் தொடர்ந்து செய்யும் தமிழ் இளங்கோ ஐயா அவர்களைப் பாராட்டுகிறேன் . அவரை நண்பராய்ப் பெற்றிருக்கும் நீங்கள் பேறு பெற்றவர்.//

      உண்மைதான் ஐயா. அவர் என்மீது அளவற்ற அன்புள்ள, உயர்ந்த உள்ளம் கொண்ட இனிய நண்பராகத் திகழ்ந்து வருவது, நான் செய்துள்ள பேறு மட்டுமே.

      //இடுகைகளை நிறுத்தி விடாதீர்கள் . சுவையாக எழுதும் திறன் உங்களிடம் இருக்கிறது.//

      வலையுலகின் மிக மூத்த + மிகச்சிறந்த + மிகவும் அனுபவங்கள் வாய்ந்த + எனக்கு மிகவும் பிடித்தமான + மிகச் சிறந்த பதிவரான, தங்கள் மூலம் இதனைக் கேட்கும் பாக்யம் பெற்றுள்ள நான் தன்யனானேன். தங்களின் அன்பான வருகையும், மனம் திறந்த மிக அழகான கருத்துக்களும், சோர்ந்து போயுள்ள எனக்கு மீண்டும் உற்சாகம் தருவதாக உள்ளன. அதற்கு என் சிரம் தாழ்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      //முக்கியமான ஐட்டங்களைக் குறித்துக் கணக்கு எழுதும் வழக்கம் போற்றற்குரியது.//

      மாதாந்திர குடும்பச் செலவு ஐட்டங்கள், வழக்கமானதொன்றுதான் என்றாலும், அவை மாதாமாதம் தொகையிலும், கொடுக்கப்படும் தேதிகளிலும் சற்றே வித்யாசப்படுகின்றன. வயதான காரணங்களால் எதுவும் மறந்து போகாமல் இருக்கணும் என்பதற்காக மட்டுமே அவ்வப்போது, இவற்றில் பெருந்தொகைகளை மட்டும், சோம்பல் படாமல் டைரியில் குறித்து வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

      இளம் வயதில், ஒருசில காலக்கட்டங்களில் வரவு, செலவு அனைத்தையும் ஒன்றுவிடாமல் (ஒரு பைசா விடாமல்) பதிவு செய்துகொண்டிருந்தேன். அது நல்ல திட்டமிடலாக இருப்பினும், மனதுக்கு சற்றே அச்சம் தருவதாகவும் - முடிவில் தாரித்ரம் அளிப்பதாகவும் அடியேன் உணர்ந்ததால், அந்த வழக்கத்தை நான் விட்டுவிட்டேன்.

      இப்போது என் பொருளாதார நிலைமை சீராகி மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. வாழ்க்கையில் சற்றே சிக்கனத்தைக் கடைபிடித்து, அநாவஸ்யமான செலவுகளைக் குறைத்துக்கொண்டு, யாரிடமும் கடன் வாங்காமல், சேமிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, நன்கு திட்டமிட்டுக்கொண்டு விட்டதால், இன்று ஏதோ எனக்கு நியாயமான வரவுகள் வருகின்றன ... அதேபோல ஏதோ நியாயமான செலவுகள் ஆகின்றன. மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் நிகழவில்லை. அதனால் இப்போது மிகவும் அலட்டிக்கொண்டு வரவு-செலவுகளை நான் விரிவாகப் பதிவு செய்வது கிடையாது.

      என் தந்தையார் தன் வாழ்நாளில் சாகும்வரை, வரவு செலவுகளை பதிவு செய்துகொண்டு இருந்தார். அவர் கடைசியாக 1974-75 இல் எழுதி வைத்திருந்த வரவு-செலவு புத்தகம் என் வீட்டில் எங்கோ ஒருநாள் பொக்கிஷமாகக் கிடைத்தது. அன்றைய விலைவாசிகளை இன்றைய விலைவாசிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அன்றைய அவரின் காலம் மிகப் பெரிய பொற்காலம் என உணர முடிந்தது. அப்போது 4-5 பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தை நடத்த, மாதத்திற்கு ரூ. 150 அல்லது 200 இருந்தாலே போதுமானதாக இருந்துள்ளது. இன்று ஓரளவு வசதி வாய்ப்புக்களுடன் நிம்மதியாகவும், கெளரவமாகவும், சந்தோஷமாகவும் வாழ அதே 4-5 பேர்களுக்கு, ஒரு மாதத்திற்கு ரூ. 35000 to 40000 தேவைப்படுகிறது.

      அப்போது 1974-75 இல் ஒரு பவுன் - அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 200 மட்டுமே விற்கப்பட்டுள்ளது. இன்று 8 கிராம் அதாவது ஒரு பவுன் தங்கம் வாங்க ரூ. 25000 தேவைப்படுகிறது.

      அன்று விற்கப்பட்ட ஒவ்வொரு பொருளின் விலையும் இன்று 125 மடங்கு ஏற்றம் கண்டுள்ளது என்பதை இதனால் நாம் நன்கு உணர முடிகிறது. வரவு-செலவு நோட்டுகள் இவ்வாறு விலைவாசி ஏற்றம் பற்றிய வரலாற்றைக் கூறும் பொக்கிஷங்களாகவும் உள்ளன.

      அன்புடன் கோபு

      Delete
  21. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?..

    அன்பர் தமிழ் இளங்கோவை புகைப்படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரங்கள், ஸார். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு

      Delete
  22. அன்புள்ள மூத்த வலைப்பதிவர் திரு V.G.K அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். அய்யா V.G.K அவர்களின் பதிவு என்றாலேயே நிறைய கருத்துரைகளும், நகைச்சுவையுடன் கூடிய அவரது மறுமொழிகளும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இந்த பதிவிலும் வழக்கம்போல அவை சிறப்பாக இருக்கின்றன. இந்த பதிவு வெளிவந்த அன்றே படித்து விட்டேன். திரு V.G.K அவர்களின் வாசகர் வட்டத்தில் உள்ள அன்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்வதற்காகவே இத்தனை நாட்கள் அடியேன் காத்து இருந்தேன்.

    மேலே கருத்துரைகள் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளும். இங்கு கருத்துரை தெரிவித்த பலரும் எனது உடல்நலம் குறித்தும் விசாரித்து இருந்தார்கள். நான் நலமாகவே இருக்கிறேன். இருப்பினும் நான் சாப்பிடும் ஆங்கில மருந்துகளின் வீரியத்தால் உடல் சோர்வும், எப்போதாவது மனச் சோர்வும் இருக்கின்றன. இதனால் முன்புபோல் ஓரளவு, பலரது வலைப் பதிவுகளை வாசித்துவிட முடிந்தாலும் என்னால் உடனுக்குடன் கருத்துரைகளை எழுத முடிவதில்லை. இங்கும் மேலே உள்ள அனைத்து கருத்துரைகளுக்கும், தனித்தனியே எழுதாமல், ஒரே மறுமொழியாக தந்துள்ளேன். . மன்னிக்கவும்.

    // நெல்லைத் தமிழன் January 2, 2019 at 12:20 AM நான் மனதில் என்னடா, தமிழ் இளங்கோ அவர்கள் இந்த வருடம் நாட்குறிப்புப் புத்தகம் கோபு சாருக்குத் தரலையே, இல்லை, தந்து கோபுசார் இடுகை போடலையோ என நினைத்தேன்.//

    என்று நண்பர் நெல்லைத்தமிழன் அவர்கள் கேட்டு இருக்கிறார். ஒருமுறை (இரண்டு வாரங்களுக்கு முன்னர்) செல்போனில் பேசும்போது கூட அவர் இதனை கேட்டு இருந்தார். புத்தாண்டு வாழ்த்தினை ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் சொன்னபோது கூட, அய்யா V.G.K அவர்களை நான் சந்திக்கப் போவது பற்றி சொல்லி இருந்தேன்.

    இன்னும் இங்கே கருத்துரை தந்துள்ள, எங்கள் ப்ளாக் ஶ்ரீராம், நகைச்சுவை உணர்வோடு எப்போதும் கருத்துரைகள் எழுதும் ஆ.. ஊ… அப்பாவி அதிரடி அதிரா, ராணிப்பேட்டை செல்லப்பா யக்ஞஸ்வாமி, ஆச்சி ஶ்ரீதர், அனுராதா பிரேம்குமார், கோமதி அரசு, தஞ்சை முனைவர் B.ஜம்புகலிங்கம், சகோதரி ஏஞ்சல், ஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன், பெரியவர் பாண்டிச்சேரி சொ.ஞானசம்பந்தன், எழுத்தாளர் ஜீவி – ஆகிய அனைவருக்கும் நன்றி.

    // டைரி, ஸ்வீட்ஸ், காரம்ஸ் சரி.... லென்ஸ் எதற்கு? //

    என்று ஶ்ரீராம் கேட்டு இருந்தார். ஸ்வீட்ஸ் மற்றும் டைரிதான் கொடுப்பது வழக்கம். எனது கண்களுக்கு ஏற்ற அதிகபட்ச பவர் கண்ணாடியை நான் அணிந்து இருந்த போதும், சில பொடி எழுத்துக்களை படிப்பதற்காக ஒரு லென்ஸ் வாங்கி இருந்தேன் V.G.K அவர்களுக்கும் பயன்படும் என்பதால் இந்த முறை, டைரியோடு ஒரு லென்ஸ்…. அவ்வளவுதான். ( பள்ளி பருவத்தில், நல்ல வெயில் வேளையில், சிறிய லென்சுகளை வைத்து காகிதத்தையும், காய்ந்த இலைச் சருகுகளையும் தீமூட்டி எரிய வைத்து விளையாடிய அனுபவமும்; திருச்சி தெப்பக்குளம் போஸ்ட்ஆபிஸ் பக்கம், கைரேகை பார்க்கும் ஒருவர், பெரிய லென்ஸ் ஒன்றை வைத்து ஜோசியம் பார்த்ததும் நினைவில் வருகின்றன)

    திரு செல்லப்பா யக்ஞஸ்வாமி, அவர்கள் திருச்சி வரும்போது, வாய்ப்பு அமைந்தால் V.G.K அவர்களும் நானும் சந்திக்கிறோம்.
    எழுத்தாளர் ஜீவி அவர்கள் தனது வலைப்பதிவில், வலாற்றுச் சான்றுகளோடு பாரதியின் வாழ்க்கை வரலாறு எழுதி வந்தார். அந்த தொடர் முடிந்து நூலாக வெளிவந்து விட்டதா என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ January 5, 2019 at 6:12 AM

      வாங்கோ ... எனதருமை நண்பரான திருச்சி, திருமழபாடி, தி. தமிழ் இளங்கோ அவர்களே, வணக்கம்.

      //அன்புள்ள மூத்த வலைப்பதிவர் திரு V.G.K அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //அய்யா V.G.K அவர்களின் பதிவு என்றாலேயே நிறைய கருத்துரைகளும், நகைச்சுவையுடன் கூடிய அவரது மறுமொழிகளும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இந்த பதிவிலும் வழக்கம்போல அவை சிறப்பாக இருக்கின்றன. இந்த பதிவு வெளிவந்த அன்றே படித்து விட்டேன். திரு V.G.K அவர்களின் வாசகர் வட்டத்தில் உள்ள அன்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்வதற்காகவே இத்தனை நாட்கள் அடியேன் காத்து இருந்தேன்.//

      எனது வாசகர் வட்டத்தில் முன்பு இருந்த, நூற்றுக்கணக்கானவர்கள் இப்போது இங்கு வருகை தராமல் இருப்பினும், ஏதோவொரு 12 நபர்களாவது நம்மை இன்னும் மறக்காமல், வருகை தந்து பின்னூட்டப்பகுதியை கலகலப்பாக ஆக்கியுள்ளனர். அதுவரை நமக்கும் மகிழ்ச்சியே. தங்களின் காத்திருப்பும் வீண் போகவில்லை.

      //இருப்பினும் நான் சாப்பிடும் ஆங்கில மருந்துகளின் வீரியத்தால் உடல் சோர்வும், எப்போதாவது மனச் சோர்வும் இருக்கின்றன. இதனால் முன்புபோல் ஓரளவு, பலரது வலைப் பதிவுகளை வாசித்துவிட முடிந்தாலும் என்னால் உடனுக்குடன் கருத்துரைகளை எழுத முடிவதில்லை.//

      கிட்டத்தட்ட என் நிலையும்கூட இதுவேதான். பிறர் பதிவுகளை வாசிக்கவும், வாசித்தபின் பின்னூட்டமிடவும் மிகவும் சோர்வாகியும் களைப்பாகியும் விடுகிறது. ஆர்வம் குறைந்து கொண்டே வருகின்றது. வாட்ஸ்-அப் போன்ற இதர அதி நவீன தகவல் தொடர்புகளும்கூட, வலைப்பக்கம் நமக்கிருந்த ஆர்வத்தை மழுங்கடித்து விட்டன என்றும் அடித்துச் சொல்லலாம்.

      //(பள்ளி பருவத்தில், நல்ல வெயில் வேளையில், சிறிய லென்சுகளை வைத்து காகிதத்தையும், காய்ந்த இலைச் சருகுகளையும் தீமூட்டி எரிய வைத்து விளையாடிய அனுபவமும்;//

      எனக்கும் .............. ’அந்த நாள் ...... ஞாபகம் ...... நெஞ்சிலே ...... வந்ததே !’

      //திருச்சி தெப்பக்குளம் போஸ்ட்ஆபிஸ் பக்கம், கைரேகை பார்க்கும் ஒருவர், பெரிய லென்ஸ் ஒன்றை வைத்து ஜோசியம் பார்த்ததும் நினைவில் வருகின்றன) //

      ஆம். ‘பிரபல ஜோதிடர் டாக்டர் பதி’ என்ற ஓர் விளம்பரப்பலகையுடன், சற்றே உடம்பு பருமனாக, தலையில் தொப்பி அணிந்தபடியும், கழுத்தில் மஹா முரட்டு லென்ஸ் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டுக்கொண்டும், பேண்டுக்குள் தன் ஃபுல் ஹேண்ட் ஷர்டை இன் பண்ணிக்கொண்டும், பெல்ட் அணிந்தவராக, தெப்பக்குள பர்மா பஜார் தெற்குக் கோடியில், மேற்கு நோக்கி நின்றுகொண்டு இருப்பார். கை ரே`கைகளை நீட்டிடும் பலருக்கும், பல்வேறு ஜோஸ்யங்களை சற்றே உரக்க சொல்லிக்கொண்டு இருப்பார். நானும் அவர் அருகே நின்று வேடிக்கை பார்த்துள்ளேன். பலரின் தலையெழுத்துக்களை புட்டுப்புட்டு வைக்கும் இவரின் தலையெழுத்து, இப்படி தெருவோரம் நிற்கும்படியாகவும், ஒவ்வொருவர் கையையும் பிடித்துப் புலம்பிக்கொண்டு இருக்கும்படியாகவும் உள்ளதே என நினைத்து நான் வருந்தியதும் உண்டு. :))))))

      அன்புடன் VGK

      Delete
  23. சிக்கனத்தைக் கடைப்பிடித்து அநாவஸ்யமான செலவுகளைக் குறைத்துக்கொண்டு யாரிடமும் கடன் வாங்காமல் சேமிப்புக்கு முன்னுரிமை கொடுத்து நன்கு திட்டமிட்டு முன்னேறி இருக்கிறீர்கள் . இதற்கெல்லாம் மனக் கட்டுப்பாடு இன்றியமையாதது .நூற்றுக்கு நூறு உங்களைப் போலவே நானும் வாழ்ந்திருக்கிறேன் .1993 இல் காலஞ் சென்ற என் மனைவி நன்கு ஒத்துழைத்ததால் அது சாத்தியமாயிற்று .

    ReplyDelete
    Replies
    1. சொ.ஞானசம்பந்தன் January 6, 2019 at 11:29 AM

      நமஸ்காரம் ஐயா, வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது.

      //சிக்கனத்தைக் கடைப்பிடித்து அநாவஸ்யமான செலவுகளைக் குறைத்துக்கொண்டு யாரிடமும் கடன் வாங்காமல் சேமிப்புக்கு முன்னுரிமை கொடுத்து நன்கு திட்டமிட்டு முன்னேறி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் மனக் கட்டுப்பாடு இன்றியமையாதது .//

      இளமையில் வறுமையை அடியேன் நன்கு அனுபவித்து விட்டதாலும், அதன் காயங்களும், தாக்கங்களும் என் மனதில் வடுக்களாக பதிந்துபோய் விட்டதாலும், எனக்கான மனக்கட்டுப்பாடுகள் இயற்கையாகவே என்னிடம் அமைந்துபோய் விட்டன.

      அடியேன் எழுதி வெளியிட்டுள்ள ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற சிறிய தொடரின் அனைத்துச் சிறுசிறு ஏழு பகுதிகளையும் தாங்கள் படித்துப்பார்த்தால் எனது குழந்தைப்பருவத்தின் அன்றைய மன வாட்டங்களும், ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும், தங்களுக்கும் புரியவரும். அதற்கான இணைப்புகள்:

      http://gopu1949.blogspot.com/2012/03/1.html

      http://gopu1949.blogspot.com/2012/03/2.html

      http://gopu1949.blogspot.com/2012/03/3.html

      http://gopu1949.blogspot.com/2012/03/4.html

      http://gopu1949.blogspot.com/2012/03/5.html

      http://gopu1949.blogspot.com/2012/03/6.html

      http://gopu1949.blogspot.com/2012/03/7.html

      அதைத்தவிர அன்றும் இன்றும் ஒப்பிட்டு மேலும் இரு பகுதிகளுடன் ‘காலம் மாறிப்போச்சு’ என்ற எனது மிகச்சிறிய தொடரும் நல்ல நகைச்சுவையாக இருக்கும். அவைகளுக்கான இணைப்புகள்:

      http://gopu1949.blogspot.com/2011/08/1-of-2.html

      http://gopu1949.blogspot.com/2011/08/2-of-2_31.html

      //நூற்றுக்கு நூறு உங்களைப் போலவே நானும் வாழ்ந்திருக்கிறேன்.//

      இதனைக் கேட்கவே எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      //1993 இல் காலஞ் சென்ற என் மனைவி நன்கு ஒத்துழைத்ததால் அது சாத்தியமாயிற்று.//

      ’பானை பிடித்தவள் பாக்யசாலி’ என்று சொல்லுவார்கள். மனைவி வந்த வேளைதான் என் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து வெற்றிகளும் பிரகாஸங்களும் ஏற்படத் துவங்கின என்பதை நானும் நினைத்துப்பார்த்து மகிழ்கின்றேன். இத்தனைக்கும் என் மனைவி உலகம் தெரியாத, எந்தவித உலக அனுபவங்களும் இல்லாத, அதிகம் படிக்காத, எதற்குமே ஆசைப் படாத, கணக்கு வழக்கு பற்றி இன்றுவரை ஏதும் அறியாத, சொன்னாலும் புரிந்துகொள்ள ஆர்வம் இல்லாத, மிகவும் அப்பாவியான ஓர் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்து சேர்ந்த பெண் மட்டுமே. திருமணம் ஆகி வரும்போது அவளுக்கு ஜஸ்ட் 18+ வயது மட்டுமே. எனக்கு அப்போது வயது ஜஸ்ட் 22+ மட்டுமே. என் 49-வது வயதில் எங்களுக்கு முதன் முதலாக ஓர் பேத்தி பிறந்து நாங்கள் இருவரும் ’தாத்தா+பாட்டி’ என்ற பிரமோஷன் வாங்கி விட்டோம். :)

      விசித்திரமான (SPECIAL QUALITIES) குணாதிசயங்கள் கொண்ட என் மனைவியையே ஓர் கதாபாத்திரமாக வைத்து நான் ஒரு உண்மைக்கதையை நகைச்சுவை மேலிட எழுதியும் உள்ளேன். அதன் தலைப்பு ‘சுடிதார் வாங்கப் போறேன்’ அதற்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.com/2014/01/vgk-03.html

      மனைவி என்பவள் நம்முடன் கூடவே இருக்கும்வரை அவளின் அருமை, பெருமைகள் நமக்குத் தெரிய அதிகமாக நமக்கு வாய்ப்பே இருக்காது. அவள் இல்லாத ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒரு யுகமாகவே கழியக்கூடும். :(

      தாங்கள் தங்கள் மனைவியை இழந்து 25 ஆண்டுகள் ஆகியிருப்பதாகத் தெரிகிறது. இதனைக் கேட்கவே எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத தங்களின் இன்றைய கஷ்டங்களையும், மன உறுதியையும், தங்களுக்கு தங்கள் மனைவிமீது இன்றும் உள்ள அந்தப் பாசத்தையும் என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது, ஐயா.

      அன்புடன் கோபு

      Delete
    2. அன்புள்ள ஐயா , உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் மற்ற இடுகைகளையும் நிச்சயமாக வாசிப்பேன் . கடுமையாய் நோய்வாய்ப்பட்டு அதிகக் கஷ்டம் அனுபவித்து இப்போதுதான் தேறியிருக்கிறேன் , இன்னம் முழு நலம் ஏற்படவில்லை .

      Delete
    3. சொ.ஞானசம்பந்தன் January 19, 2019 at 4:58 PM

      //அன்புள்ள ஐயா , உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் மற்ற இடுகைகளையும் நிச்சயமாக வாசிப்பேன் . கடுமையாய் நோய்வாய்ப்பட்டு அதிகக் கஷ்டம் அனுபவித்து இப்போதுதான் தேறியிருக்கிறேன் , இன்னம் முழு நலம் ஏற்படவில்லை .//

      அன்புள்ள ஐயா, நமஸ்காரங்கள். மெதுவாக நேரம் கிடைக்கும் போது என் இடுகைகளை வாசியுங்கள் .... போதும். ஒன்றும் அவசரமே இல்லை.

      தங்கள் உடல்நலம்தான் முக்கியம். தங்கள் உடல்நலத்தில் நன்கு கவனம் செலுத்துங்கள். தாங்கள் விரைவில் முழுவதுமாக குணம்பெற வேண்டி, நான் அன்றாடம் வழிபடும் கடவுளைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

      அன்புடன் கோபு

      Delete
  24. அன்புள்ள ஐயா ,
    உங்கள் வாழ்க்கை வரலாற்றையும் மற்ற இடுகைகளையும் நிச்சயமாக வாசிப்பேன் .ஃளூ மற்றும் சிறுநீர்த்தாரை அழற்சி காரணமாய்ப் பத்து நாள்களுக்கு மேலாகப் படாத பாடுபட்டு இப்போதுதான் மீண்டிருக்கிறேன் .இன்னம் முழு நலம் ஏற்படவில்லை .

    ReplyDelete
    Replies
    1. OK Sir .... No problem. Please take care of your health. I will pray for your speedy recovery.

      vgk

      Delete
  25. :((((((((((((((((((((

    எனது அருமை நண்பரும், பிரபல வலைப்பதிவருமான, திருச்சி, திருமழபாடி, தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை சுமார் 9.15 மணிக்கு, மூச்சுத்திணறல் அதிகமாகி, காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :(

    அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளஸி இல்லம், 3rd Cross, நாகப்பன் நகர், Nearer to KK Nagar Bus Stand, திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.

    அவருக்கு வயது 65. STATE BANK OF INDIA வில் பணியாற்றி, விருப்ப ஓய்வு (VRS) பெற்றவர். அவரின் மனைவி BSNL-இல் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாத ஒரே மகன்: செல்வன்: அரவிந்தன் திருச்சியில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன ஒரு பெண், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    மேலும் தொடர்புக்கு
    திரு. அரவிந்தன்
    9486114574

    
    樂 வருத்தத்துடன் கோபு 樂

    ReplyDelete