என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 3 of 5




 ’என்றாவது ஒரு நாள்’ 

 நூல் புகழுரை  

By 
வை. கோபாலகிருஷ்ணன்

பகுதி-3

Link for Part 1 of 5

Link for Part 2 of 5



வலைத்தளம்: கீத மஞ்சரி

’என்றாவது ஒரு நாள்’ 
நூலாசிரியர்
 ’விமர்சன வித்தகி’ 

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html
திருமதி. 
 கீதா மதிவாணன்  
அவர்கள்

-oOo-

’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருக்கும் 
ஒவ்வொரு தமிழாக்கக் கதையினிலும் 
நான் ரசித்துப்படித்துப் புரிந்துகொண்டவற்றை 
ஒருசில வரிகளில் மட்டும் மிகச்சுருக்கமாகப் 
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.



மந்தையோட்டி



1. மந்தையோட்டியின் மனைவி

அக்கம்பக்கத்தில் கண்ணுக்கு எட்டிடும் தூரம் வரை வீடுகள் ஏதும் இல்லாத காட்டில் தனியாக, அதிக வசதிகள் அற்ற ஓர் வீட்டில் வாழப்பழகிய ஒரு தாய், அவளின் நான்கு சேய்கள், ஒரு நாய். அவள் எதிர்கொள்ளும் பல்வேறு அன்றாடப் பிரச்சனைகளைப்பற்றிச் சொல்லும் கதை. அண்டை வீடு என்பதே சுமார் 30 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் இருக்குமாம்.

வீட்டைச்சுற்றி முளைத்திருந்த கோரைப்புற்களால் வீடே தீப்பற்றி எரிய இருந்தபோது தீயை அணைக்க அவளின் துணிவு மிக்கப் போராட்டம். அதன் விளைவால் தன் குழந்தைக்கும் நாயுக்குமே தன்னை அடையாளம் தெரியாமல் அவள் முகம் கரியான சோகம். 

காட்டிலேயே தனிமையில் இன்று வாழப்பழகியவள் என்றாலும், முன்பு ஒருநாள் ஓரளவு வசதியாக வாழ்ந்தவள்தான் அவள். காட்டாற்று வெள்ளம் வந்து, அவர்களின் கால்நடைச் செல்வங்களையும் அடித்துச்சென்று வறுமையில் வாட வைத்துள்ளது. 

வருடத்தில் பெரும்பாலான நாட்களில் மந்தையோட்டியாகச் செல்லும் கணவனின் பிரிவு. அவனிடமிருந்து நெடுநாட்களாக தகவல் ஏதும் வராத சோகம் போன்ற பல்வேறு நினைவலைகளின் இடையே இன்று இருக்கிறாள் அவள். 

இதற்கிடையில் ஒரு நாள் இரவு நேரம். பலத்த இடி மின்னலுடன் கூடிய பெரும் மழை. எப்போது வேண்டுமானாலும் அணையக்கூடிய நிலையில் ஒரேயொரு மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே. 

அதே நேரத்தில் இவர்கள் வீட்டுக்குள் இவளின் பார்வையிலேயே புகுந்து எங்கோ தரைப்பகுதியில் பிளந்துள்ள மரப்பலகைகளுக்கு இடையே ஒளிந்துகொண்டு விட்ட ஐந்தடிக்கும் மேலான கருநாகப்பாம்பு ஒன்றின் வருகை, 

தூக்கமின்றி துக்கத்துடன் விடியும்வரை பாம்பினை எதிர்பார்த்து பயந்துகொண்டே அவர்கள் அனைவரும் கையில் தடியுடன் உள்ளார்கள். இந்த நிகழ்வு அவர்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் நமக்கும் பீதியளிக்கிறது, திருமதி. கீதாவின் ஆச்சர்யமான எழுத்துக்களால். 

குழந்தைகள் நால்வரும் ஒவ்வொருவராகத் தூங்கிவிட, விடியும்வரை அந்தப்பாம்பின் நடமாட்டத்தையே எதிர்பார்த்து உறங்காமல் விழித்திருக்கும் தாயும் நாயும் நெகிழவைக்கிறார்கள், படிக்கும் நம்மை. 

பிறகு பாம்பு எப்போது வெளியே வந்தது? எப்படி வெளியே வந்தது? அது யாரைக்கடித்தது? அல்லது அது யாரால் எப்படி அடித்துக்கொல்லப்பட்டது? என்பதே கதையின் முடிச்சாகும்.  

அந்த மந்தையோட்டியின் மூத்த மகனுக்கு வயது பதினொன்று மட்டுமே. அவன் தன் தாயிடம் சொல்வது சற்றே நமக்கு ஆறுதலாக இருப்பினும், அவர்கள் இனியும் சந்திக்க இருக்கும் ஒவ்வொரு சம்பவமுமே, ஓர் மிக நீளமான கருநாகப்பாம்பு போன்றதே என்பதில் ஐயமில்லை என எனக்குத் தோன்றுகிறது. 

என்றோ ஒரு காலத்தில், எப்படியோ வாழ்ந்த காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதையல்லவா ! சுகமான, சுபமான முடிவுகளை நாம் எதிர்பார்க்கவா முடியும்? 





2. சீனத்தவனின் ஆவி

குடி போதையால் வந்த வினை. குடித்த நண்பன் ஒருவன் குதிரையில் ஏறி ஊர்போய்ச்சேர்ந்துவிட, அவனுடன் இவனின் நாயும் தப்பி விட, எங்கோ தொலைத்த தன் தொப்பிக்கு பதிலாக எவனோ கொடுத்ததொருத் தொப்பியை அணிந்து, கையில் ஓர் குடுவையில் விஸ்கியுடன் காட்டுப்பாதையில் தனித்த நடை பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இவனுக்கு.

பேய், பிசாசு, ஆவி என்ற கட்டுக்கதைகளினால் ஏற்பட்ட பயம் ஒருபுறம். கடும் வெயிலால் தோல் பட்டைகள் உரிந்துபோய் நிர்வாண நிலையில் மிக உயரமாக வளர்ந்து பேயாட்டம் ஆடும் நெடுமரங்கள் வழி நெடுகிலும். 

இடையே ’கொலைகார ஓடை’ என்ற பெயரில் உள்ள ஒன்றையும் தாண்ட வேண்டியுள்ளது. இருட்டிடும் வேளையில் ’செத்தவனின் சந்து’ எனப்படும் மலையிடைவெளியையும் கடக்க வேண்டிய நிலையில் உள்ளான். நல்ல நல்ல மிகவும் பொருத்தமான பெயர்களாகவே தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள் இந்தக் கதாசிரியர். 

மேலும் அன்றே இறந்த கன்றுக்குட்டியைத் யாரோ தோல் உரித்து அங்கே வீசிப்போட்டிருந்ததில், அதைப்பார்த்ததும் நிர்வாணமாய் இரு சடலங்கள் போலக் காட்சியளித்ததில் இவனுக்கு மேலும் பீதியாகி விடுகிறது.  வர்ணனைகள் அபாரம்.

இவ்வாறு திகிலுடன் நடக்க நடக்க டப்.. டப்.. டப்.. டப்.. என்று யாரோ பின் தொடர்வதுபோன்றதோர் ஒலி. நடுவில் பாதையின் குறுக்கே மிகப்பெரிய ஆண் கங்காரு ஒன்றின் ஓட்டம் தட் .. தட் .. என்ற பேரொலியுடன். 

சீனாக்காரனின் கல்லறையை நெருங்கும் போது, அருகே மிகப்பெரிய ஓர் வெள்ளை உருவம் புறப்பட்டு வருகிறது. அது என்னவென்று அவனுக்கும் கதையைப்படிக்கும் நமக்கும் புலப்படும் வரை, கதை ஒரே திகிலோ திகிலாகத்தான் உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் ராட்சஸப்பல்லியான கோவான்னாவைப்போல நடுங்கிப்போய் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அவன் நடந்து செல்கிறான். 

நெஞ்சினில் ஒருவித பயத்துடன் ஓட்டமும் நடையுமாக அவன் பல மைல்கள் கடந்தும் ... அவனைத் தொடர்ந்து வரும் டப்.. டப்.. டப்.. டப்.. சப்தம் மட்டும் நிற்காமல், தலை தெரிக்கக் கதை முழுக்க ஓட வைக்கிறது அவனை ..... படிக்கும் நமக்கும் ஓர் பயங்கரமான திகில் உணர்வுடன். 

பிறகு அந்த சப்தம் எங்கிருந்துதான் வந்தது? என்பதே இந்தக்கதையில் உள்ள மிகப்பெரிய சுவாரஸ்யமாக உள்ளது. நீங்களும் நூலினைப்படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.






3. ஒற்றைச் சக்கர வண்டி

திருமதி. கீதா அவர்களின், இந்தக்கதைக்கான தலைப்புத் தேர்வு மிக அருமை. 

பிள்ளைப் பாசமுள்ள ஏழைத்தந்தை. மனநோயாளி போன்ற, புரிதல் இல்லாத மனைவி. உடல்நலமில்லாத பெரிய பிள்ளை. அவனுக்கோர் சிறிய தங்கச்சிப்பாப்பா. 

ஒற்றைச் சக்கர வண்டியாக நொடித்தபடி நகர்ந்தோடிவரும் அவர்களின் மிகவும் கசப்பான மற்றும் ஏழ்மையான தினசரி வாழ்க்கை. 

வருடத்தின் கடைசி ஒரு நாள் நகர்வதையே, ஓராண்டு நகர்வதுபோல காட்டியிருப்பது, கதாசிரியரின் எழுத்துக்களின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. 




4. மலாக்கி

மனதைக்கலங்கச் செய்த கதை. 

சில சிறுவர்கள் மிகவும் அப்பாவிகளாகத் தோற்றம் அளிப்பார்கள். கூச்சத்துடனும், ஒருவித பயத்துடனும் பிறருடன் பழகுவார்கள். இதை ஆதாயமாக்கிக்கொண்டு, மற்ற சிறுவர்கள் அவர்களைத் துன்புறுத்துவார்கள், பயமுறுத்துவார்கள், அழவிட்டு மனதளவில் காயப்படுத்தி இன்பம் காண்பார்கள். 

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல, தன் நண்பர்களால் தன் தலைக்கும் உயிருக்கும் ஆபத்து எனத் தெரிந்ததும், ஒரு மிகப்பெரிய கதவையே பெயர்த்துக்கொண்டு, மலாக்கி, ஓர் கங்காருவைவிட வெகு வேகமாகத் தப்பிச்செல்கிறான் ஒரு காட்டுப்பாதைக்குள். 

மற்றொரு சமயத்தில் வேறொரு புதுமணமான பெண்ணின் உயிருக்கு ஆபத்து என உணர்ந்ததும், சற்றும் தாமதிக்காமல் தன் உயிரையே பலியாகக்கொடுத்து அவளை அந்த நிகழவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி விடுகிறான். 

அவன் இறக்கும் தருவாயில் சொல்லும் ஒருசில மரண வாக்குமூல உண்மைகள் அவனின் துஷ்ட நண்பர்களை மிகவும் யோசிக்க வைக்கின்றன. தாங்கள் அவனுக்குச் செய்த துன்பங்களை நினைத்து அவர்களை அழவும் வைக்கின்றன. 

மலாக்கி இதுவரை ஒரு மிக உயர்ந்த கொள்கைக்காக வாழ்ந்த வாழ்க்கையைப் படிக்கும் நம்மையும் கலங்கச் செய்கின்றன. இந்தக்கதையையும் மிகவும் அற்புதமாக எழுதியுள்ளார்கள். இதே கதையை அவர்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டபோது, நான் படித்த ஞாபகம் எனக்கு நன்றாகவே உள்ளது.  http://geethamanjari.blogspot.in/2014/04/6.html





5. முற்றுப்பெறாத ஒரு காதல் கதை

இந்தக் கதையின் ஆரம்பத்தில் பல்வேறு மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பற்றிய அட்டகாசமான வர்ணனைகள் கதாநாயகனின் ப்ளாஷ் பேக் ஸ்டோரியாக காட்டியிருப்பது படிக்க மிக அருமையாக இருந்தது. 

அதுபோன்ற ஏராளமானவற்றில் உதாரணமாக நான் ரசித்த ஒன்று:

//தாய்மையும் பெருமிதமும் கொள்ளத்தக்க இளமஞ்சள் வண்ண கறவைப்பசு. அது தன் மடிக்காம்பை வாயால் பற்றித் தொங்கிக்கொண்டும், பாலை உறிஞ்சிக்கொண்டும், தன் பின்னங்கால்களுக்கிடையில் தலைமுட்டியபடி வந்த கன்றை, வலி சகித்தபடி பொறுமையோடு இழுத்து வந்துகொண்டிருந்தது// :) மிகச்சிறப்பானதோர் வர்ணனை !

காதலைப்பற்றி மிகவும் மென்மையாகச் சொல்லியுள்ள மற்றொரு இடம்:

//புரூக் ஏறிச்சென்ற கோச்சு வண்டி கட்டைவேலியின் திருப்பத்தில் திரும்பும்போது அவன் மறுபடியும் அவளைத் திரும்பிப்பார்த்தான். லிஸி அவளுடைய இயல்புக்கு மாறாய், மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டிருந்தாள்.// 

முற்றுப்பெறாத காதலாயினும், மறக்க இயலாத ஒருசில சம்பவங்களை, பட்டும் படாததுமாக விளக்கி அருமையாக எடுத்துக்கூறியுள்ள இந்தக்கதையும் திருமதி. கீதாவின் தமிழாக்கத்தில், கொஞ்சும் தமிழைப்போலவே மிகவும் அழகாகத்தான் உள்ளது.






6. அவள் பேசவில்லை

ஒரு தேநீர் விடுதியின் பணிப்பெண், வாடிக்கையாளர்கள் சிலருடன், சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். இதை அதே தேநீர் விடுதிக்குள் உள்ளே புதிதாக நுழையும் வேறு இருவர் கவனித்துள்ளனர். 

அவளை எப்படியாவது தங்களுடனும் அதுபோலவே பேச வைத்துவிட வேண்டும் என பிரும்மப்பிரயத்தனப்பட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களால் அது இயலவில்லை. 

மேலும் மேலும் ஏராளமான கோப்பைகள் தேநீர் ஆர்டர் கொடுத்த படியும், அவளிடம் ஏதாவது பேச்சுக்கொடுத்தபடியும்  உள்ளனர். இருப்பினும் இந்த இரு நண்பர்களால் அவளைக் கடைசிவரை பேசவோ சிரிக்கவோ வைக்கவே முடியாமல் போகிறது. இதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். 

அவள் ஏன் பேசவே இல்லை என்ற காரணமும் சொல்லப்படாமல் .... கடைசிவரை அவள் அவர்களிடம் வாயைத்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசாமலேயே கதையும் முடிந்து விடுகிறது. 

அந்த இரு நபர்களால் அவளின் தேநீர் வியாபாரமும்  சூடு பிடித்து நடந்துள்ளது என்பதே, இந்தக்கதையின் தனிச் சிறப்பாக உள்ளது. எழுத்துநடை மிகவும் அருமை.

எல்லாப்பெண்களும், எல்லா ஆண்களிடமும், எப்போதும், சிரித்துச் சிரித்துப் பேசிவிட மாட்டார்கள் என்பதையும் இந்தக்கதையில் நாம் அறிய முடிகிறது.







7. சமையல்காரரின் நாய்

ஒரு சமையல்காரர் தன்னுடைய செல்லமான நாய் என சொல்லிக்கொண்டுவரும் ஓர் குறிப்பிட்ட நாயின் ரோமத்தை, அவர் சமையலை சாப்பிடும் சிலர், ஆட்டு ரோமங்களைக்கத்தரிக்கும் இயந்திரத்தால் அகற்றி அடையாளம் தெரியாதபடி செய்து விடுகின்றனர். 

எதையும் எளிதில் ஜீரணித்துக்கொள்ளும் சமையல்காரருக்கு, இது விஷயத்தில் தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வழக்கத்திற்கு மாறாக  பல நாட்கள் புலம்பித்தீர்த்து விடுகிறார். 

பிறகு ஒருவாரத்தில் இயல்பு நிலைக்குத்திரும்பி விடுவதுடன், அவர்கள் செய்துள்ள கேவலமான செயல்களுக்கு புதிய காரணமொன்றை சொல்கிறார். இத்துடன் கதை முடிகிறது. 

அவர் சொன்ன காரணம்தான் என்ன? நூலைப்படித்து அறிந்து கொண்டால் நல்லது.





8. என்றாவது ஒருநாள்

இவள் தான் உலக அழகியாக இருக்க முடியும் என ஒருவன் நினைக்கிறான். படிப்போ, அழகோ, செல்வாக்கோ இல்லாத அவலட்சணங்கள் நிறைந்த முரடனான அவன் அவளைப்பார்க்காமலும், பழகாமலும்தான் இருந்து வருகிறான். 

பிறரின் பார்வைகளிலும், அவளிடமும், அவமானப்பட விரும்பாததால், அவளிடமிருந்து ஒதுங்கியே இருந்து வருகிறான். அவள் இவனின் தங்கையின் சினேகிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அந்த அழகி இவனிடம் சகஜமாகவே பேசியும் பழகியும் வருகிறாள். இவன் தன் கற்பனையில் அவளை தன் மனதளவில் மனைவியாகவே ஆக்கிக்கொண்டுள்ளான். அவளிடம் தன் காதலைப்பற்றி தெரிவிக்க மட்டும், தாழ்வு மனப்பான்மையால், அவனுக்கு ஏனோ தைர்யம் வரவில்லை.

இதற்கிடையில் எல்லைப்பகுதியில் கால்நடைப்பண்ணையில் இவனுக்கு வேலைகிடைத்து, அந்த ஊரையும், தன் தங்கையையும், தன் கற்பனை மனைவியான அழகியையும் விட்டுப் பிரிந்து செல்ல நேர்கிறது. 

புகைவண்டியில் அவனை ஊருக்கு வழியனுப்ப அவன் தங்கையும், மற்ற நண்பர்களும், அந்த அழகியும்கூட வந்துள்ளார்கள்.

தங்கையானவள் இவனிடம் “ஏய் மரமண்டை, அதோ அங்கு தனிமையில் உன்னையும் உன் பிரிவையும் நினைத்துக் கலங்கிக்கொண்டிருக்கும் அவளைப்போய் சந்தித்துப்பேசி விடை பெற்றுக்கொள்” என்கிறாள். 

அவளைத்தனிமையில் சந்திக்கிறான். இவன் பிரிவை எண்ணி அவள் கண்கள் கலங்கியுள்ளன. 

என்றாவது ஒருநாள் இவன் அவளுக்காக ஒருவேளை ஊர் திரும்பலாம் ..... அல்லது ..... ஊர் திரும்பாமலும்கூட இருக்கலாம் ..... இதற்கான விடைகளைக்காண நூலில் உள்ள கதையைப்படிப்பதே நல்லது. 

“ஹூம்.. என்றாவது ஒருநாள்! அந்த நாள் என்று? நாம் எல்லோருமே சொல்லிக்கொண்டு இருக்கிறோம் “என்றாவது ஒரு நாள்” என்று. இந்தக்கதையின் கதாநாயகனும் அதுபோல பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

யாருக்கு யார் மீது, எப்போது, எதற்காகக் காதல் ஏற்படும் என்பதை யாராலுமே கணித்துச் சொல்ல இயலாது, அதுதான் காதலின் இலக்கணம் என்பதையும், ஏழ்மைக்கு முன், பெரும்பாலும் காதல் தோற்றுத்தான் போகிறது என்ற நிதர்சனமான உண்மையை உணர்த்தும் சோகக் கதையாக இருக்குமோ என்னவோ ! 

எதற்கும் நூலில் நீங்களே அதனை திருமதி. கீதா அவர்களின் எழுத்து நடையினில், என்றாவது ஒரு நாள் படித்துப்பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.







9. புதர்க்காடுறை பூனைகள்

யானைபோல பலமுள்ள பூனைகளைப்பற்றிய செய்திகள் மிகவும் வியப்பூட்டுகின்றன. 

பாம்பென்றால் படையும் நடுங்குமே! ஆனால் இந்தப் பூனைகளுக்கு பாம்பென்றால் ஒரே குஷியாகிப்போய்விடுகின்றது. நீளமான பயங்கரமான திமிறி நெளியும் கருநாகத்தைக் கவ்விக்கொண்டுவந்து, குறிப்பாக தங்கள் எஜமானர் வீட்டுப்பெண்மணிகளிடம் காட்ட ஓடிவருவதும், அதனைப்பார்த்த அவர்கள் அலறிப்பிடித்தபடி வீட்டைவிட்டு வெளியேறி விடுவது நடக்குமாம். 

தங்களின் வீர தீரச்செயலைப்பாராட்டாமல் ஏன் இவர்கள் இப்படி அலறி ஓடுகிறார்கள் எனப் புரியாமல் குழம்புமாம் இந்தப்பூனைகள். 

தரைச்சக்கரம் போல தன்னை எட்டு சுற்று சுற்றிக்கொண்டு இறுக்கிய மிகப்பெரிய மலைப்பாம்பின் கழுத்தினைக்கவ்வியபடி வாழ்வா சாவா போராட்டத்துடன், அந்தத் தன் உடலில் சுற்றிய பாம்புடனேயே எஜமானர் வீட்டுக்கு ’மேரி ஆன்’ என்ற வீரம் மிக்க பூனை மலைப்பாம்பினை இழுத்து வருவதும், தன் வாய் திறந்து கத்தி பிறரை உதவிக்கு அழைக்க இயலாத நிலையையும், அதன்பின் நடந்த த்ரில்லிங் ஆன நிகழ்வுகளைப் படிக்கும் போது மிகவும் வியப்போ வியப்பாகத்தான் உள்ளது.  

பூனைப்படை என்ற பெயரில் இன்று பல V.I.P.s கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்துள்ளனர். அன்றே மிகப் பெரிய காய்கறித்தோட்ட பண்ணையார்கள், முயல்களிடமிருந்து தங்கள் பயிர்களை இரவு நேரங்களில் காவல்காக்க இதுபோன்ற பலம் வாய்ந்த நிஜமான பூனைப்படைகளை வளர்த்துள்ளனர். தினமும் இரவினில் பல முயல்களைக் கொன்று குவித்துக்காட்டிவிட்டு, எஜமானர் தரும் கூலியாகிய பாலை அதிகாலையில் விரும்பி அருந்துமாம் அந்தப்பூனைகள்.  

ஜேக் என்ற மிகப்பெரியதோர் ஆண் பூனை, இரவெல்லாம் உயிரைக்கொடுத்து, முயல் வேட்டை வேலை செய்துவிட்டு, களைப்புக்காக, வாரம் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு. மூன்று மைல்கள் தள்ளியிருக்கும் வேறொரு பண்ணையில் பணியிலிருக்கும் தன் காதலிப்பூனையைக் காணச்செல்கிறது என்கிறார் நூலாசிரியர். 

இதைப் படித்ததும் நான் மிகச்சிறிய புன்னகை புரிந்துகொண்டேன். பூனைகளுக்குள் ஏற்படும் காதல் உணர்வுகளைப்பற்றி எவ்வளவு நளினமான எழுத்துக்கள் என்று நினைத்தபடியே ! 

தன் காதலியைப்பார்க்கப்போன அங்கு அந்தப்பூனை, மஹா முரட்டு முயல் ஒன்றுடன் போராடி வென்ற கதையையும் மிகவும் நகைச்சுவையாகவும், படிக்க விறுவிறுப்பாகவும் தமிழாக்கம் செய்து தந்துள்ளார்கள் நம் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.






10. பணயம்

எனக்கு மிகவும் பிடித்த நல்லதொரு நகைச்சுவையான கதை இது. 

அது குடிபோதை ஏற்றிக்கொள்ளும் நிலையம். முன்பின் தெரியாதவர்கள் கூடி சீட்டாட்டங்கள் போன்ற சூதாட்டங்களும் அங்கு நடைபெறுவது உண்டு.

ஒருவன் முழுபோதையுடன் தூங்கி வழிய, வேறு இருவர் மும்முரமாக சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள். 

அதில் ஒருவன் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்க மற்றொருவன் அனைத்தையும் அவனிடம் இழந்துகொண்டே இருக்கிறான். 

தோற்றவன் மேலும் விளையாட ஏதும் பணமின்றி கிளம்ப நினைக்கும் போது, தன் அருகே மேஜைக்காலில் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில் கழுத்தில் புண்ணுடன் உள்ள நாயினை மிகவும் பரிதாபமாக நோக்குகிறான்.  அதற்கு ஒரு ரொட்டித்துண்டு வாங்கிக்கொடுக்கும் நிலையில்கூட இப்போது நான் இல்லையே என நினைத்திருப்பானோ என்னவோ! 

இதுவரை சீட்டாட்டத்தில் தொடர்ந்து ஜெயித்தவனால், தோற்றவனிடம் ஆசையும் நம்பிக்கையும் ஊட்டப்படுகிறது. எப்படியும் மீண்டும் ஒரேயொருமுறை சீட்டாடி ஜெயித்து விடலாம், நாம் இதுவரை இழந்ததைப் மீட்டு விடலாம் என்று நம்பி, அங்கு கட்டப்பட்டுள்ள நாயையே ஒரு பவுண்டுக்கு அவனிடம் பணயமாக வைத்து சீட்டாடி, மீண்டும் வழக்கம்போலத் தோற்றுப் போகிறான். 

ஜெயித்தவன் நாயை அவிழ்த்துக்கொண்டு, தன் பாதையில் தன்னுடன் ஓட்டிச்சென்று விடுகிறான். இதையெல்லாம் கவனித்துவந்த மது விற்பனைப்பெண்மணி, தன் நாய் உள்பட அனைத்தையும் தோற்றுப்போனவன் மேல் பரிதாபப்பட்டு மேலும் ஒரு கோப்பை தன் கணக்கில் மதுவைக் குடிக்கக் கொடுத்து ஆறுதல் கூறி அவனை அனுப்பி வைக்கிறாள். அவனும் அவளுக்கு நன்றிகூறி தன் பாதையில் கிளம்பிச் சென்று விடுகிறான். 

இதுவரை முழுபோதையில் தூங்கிக்கொண்டிருந்தவன் இப்பொது எழுந்து கொள்கிறான். தனக்கு கடனில் மேலும் கொஞ்சம் மது அளிக்குமாறு அந்த மாதுவிடம் கெஞ்சுகிறான். அவள் மறுக்கிறாள். 

ஏற்கனவே அவன் அடைக்க வேண்டிய கடன் பாக்கி நிறைய இருப்பதாகவும், இனிமேலும் கடன் அளித்தால் மதுக்கடை முதலாளி தன்னைத் திட்டுவார் என்றும் சொல்லி மறுத்து விடுகிறாள். 

இதைக்கேட்டபின் அவன் சிறிது நேரம் அந்த மதுக்கடையின் உள்ளேயும் வெளியேயும் நாய் போல சுற்றிச்சுற்றி வந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான். எங்கு தேடியும் அது அவன் கண்களில் படாததால், மது விற்பனைப்பெண்ணிடம் தன் உடமை ஒன்றைக் காணோம் என கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறான்.  

விற்பனைப்பெண்ணை நன்கு மிரட்டி, இது சம்பந்தமாகத் தான் போலீஸுக்குப் போகப்போவதாகவும், புகார் அளித்து அவள் வேலைக்கே உலை வைக்கப்போவதாகவும் மிரட்டியபடி, ஏராளமான கோப்பைகள் மதுவை அவளிடம் இலவசமாகப் பெற்றுக் குடித்துவிட்டு, தான் தூங்கிக்கொண்டிருந்தபோது நடந்த விஷயங்கள் அத்தனையையும் அவள் மூலமாகவே கேட்டுத் தெரிந்துகொள்கிறான். 

தான் தன்னுடன் அழைத்து வந்து கட்டிப்போட்ட நாய்தான் சீட்டாட்டத்தில் பணயமாக வைக்கப்பட்டு, ஜெயித்தவுடன் சென்றுள்ளது என்பதை அவள் மூலம் அறிந்து கொள்கிறான். அந்த சீட்டாட்டத்தில் ஜெயித்தவன் நாயுடன் சென்ற திக்கினையும் அவளிடமே விசாரித்துக்கொண்டு, அதைத்தேடி அதே பாதையில், நல்ல போதையில் தள்ளாடியபடிச் செல்ல எத்தனிக்கிறான். 

கடைசிவரை, அங்கு கட்டப்பட்டு பணயமாக வைத்து சீட்டாடப்பட்ட அந்த நாய், யாருக்கு சொந்தமானது என்பதே, எந்த நாய்க்கும் புரியாமல், கதையை நகர்த்தி சென்றுள்ளதுதான் படிக்க எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. :)




மற்ற கதைகளைப்பற்றி நாம் 
நாளைக்குப் பார்ப்போமா ?




’என்றாவது ஒரு நாள்’ 
புகழுரை தொடரும்.

திங்கள், 7 செப்டம்பர், 2015

’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 2 of 5



 ’என்றாவது ஒரு நாள்’ 

 நூல் புகழுரை  

By 
வை. கோபாலகிருஷ்ணன்

பகுதி-2

Link for Part 1 of 5



வலைத்தளம்: கீத மஞ்சரி


’என்றாவது ஒரு நாள்’ 
நூலாசிரியர்
 ’விமர்சன வித்தகி’ 
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html
திருமதி. 
 கீதா மதிவாணன் 
அவர்கள்

-oOo-



’என்றாவது ஒரு நாள்’ நூலிலிருந்து 

’ஹென்றி லாஸன்’ பற்றிய 

மேலும் சில செய்திகள் இப்போது தொடர்கின்றன.



சென்ற பகுதியின் இறுதியில் கூறப்பட்டது: 

மனதளவிலும் உடலளவிலும் மிகவும் மோசமான நிலையில் நலிந்து கிடந்த ஹென்றி லாஸன் அவர்களைத் தூக்கி நிறுத்திய பெருமை, அவரை விடவும் இருபது வயது மூத்தவரான, அவருடைய சினேகிதி திருமதி. இஸபெல் பையர்ஸ் (Mrs. Isabel Byers) என்பவரையே சாரும். 

ஓரளவு கல்வியறிவு பெற்றிருந்த ’இஸபெல்’ கவிதைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவராய் இருந்தார். தன் பதின்ம வயதிலிருந்து ஹென்றி லாஸனுடைய கவிதைகளைப் போன்றே பல சிறந்த கவிதைகளை இயற்றியவர். நாட்டின் மிக அற்புதமான வாழுங்கவிஞர் ஒருவர் தன் வாழ்க்கைச் சூழல் காரணமாகத் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருப்பதைக் காணச் சகியாதவராய் அவரை மீண்டும் எழுத வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

ஹென்றி லாஸனின் சார்பில் அவரே பல பதிப்பகத்தாரைப் பார்த்துப் பேசினார். ஹென்றியின் குழந்தைகளுடனும், நண்பர்களுடனும் அவரை மீண்டும் தொடர்புகொள்ளச் செய்தார். அவருடைய ஆதரவாளர்களைச் சந்தித்து ஹென்றிக்கான பொருளாதார உதவிகளை ஏற்பாடு செய்தார். 

அவரை மன நல மருத்துவமனையில் அனுமதித்துப் பராமரித்தார். ஹென்றி மன அழுத்தங்களிலிருந்தும், குடிப்பழக்கங்களிலிருந்தும் விடுபடும் வரை அவர் கூடவே இருந்து பேணிப்பாதுகாத்தார். ஹென்றியின் படைப்புக்களை பதிப்பிக்கும் பொருட்டும், அதற்கான தொகையைப் பெறும் பொருட்டும் பலருக்கும் எண்ணற்ற கடிதங்கள் எழுதினார். 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இவர்கள் இருவருக்குமான சினேகம் நீடித்தது. 

1922 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் 2-ம் நாள், தனது 55 ஆவது வயதில், மூளையில் இரத்தக்கசிவு காரணமாக, இஸபெல்லின்  இல்லத்திலேயே ஹென்றி லாஸன் உயிர் துறந்தார்.

 

ஹென்றி லாஸன் அவர்களின் கையொப்பத்துடன், அவர் பண உதவி 
கேட்டு யாரோ ஒரு நண்பருக்கு எழுதியுள்ளதோர் கடிதம்  .... இதோ  கீழே:




இறந்தபின்னர் அவர் பெருமைகளை நன்கு
உணர்ந்து கொண்டாடியுள்ள விசித்திர உலகம்.  

நெஞ்சு பொறுக்குதில்லையே !
- vgk



ஹென்றி லாஸனின் உடல் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை ஆளுநர்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் மட்டுமே கிடைத்துவந்த அரசு முறை இறுதி மரியாதையைப் பெற்ற, அரசு சாராத முதல் மனிதர் இவரே. 

அவருடைய இறுதிச் சடங்கில் அன்றைய பிரதமர் திரு. பில்லி ஹக்ஸும், நியூ செளத் வேல்ஸ் மாநில முதல்வர் திரு. ஜேக் லாங்கும் கலந்துகொண்டனர்.

தன் வாழ்க்கையில் வெற்றிபெற இயலாது சீரழிந்துபோன ஒரு மனிதனின் இறுதிப்பயணத்தில், வியக்கத்தக்க விதமாய், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, வழியனுப்பி வைத்தனர்.


 

காடுறை மனிதர்கள் தொடர்பான ஹென்றி லாஸனின் 
படைப்பாற்றலைப் பெருமைப்படுத்தும் விதமாக சிட்னியில் 
ஹென்றி லாஸனின் வெங்கலச்சிலையொன்று, 
முதுகுச்சுமையுடன் கூடிய ஒரு காடுறை மனிதன் ஒருவனுடனும், 
ஒரு நாயுடனும் நிறுவப்பட்டுள்ளது.



1949 ஆம் ஆண்டு அவருடைய உருவப் படத்துடன் ஆஸ்திரேலிய அரசின் அஞ்சல்தலை யொன்று வெளியிடப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.


1966 இல் ஆஸ்திரேலியாவில் தசம எண்ணிக்கையிலான பணப்புழக்கம் அறிமுகப்படுத்தப் பட்டபோது, முதலில் அச்சடிக்கப்பட்ட பத்து டாலர் காகிதப்பணத்தில் அவரது உருவம் அச்சடிக்கப்பட்டு மேலும் சிறப்பிக்கப்பட்டது.  



ஹென்றி லாஸனின் படைப்புகள் பலவும் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. சில, திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் உருவாக்கம் பெற்றுள்ளன.  

  

 

 

ஹென்றியின் படைப்பாற்றலைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், பிற படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ஹென்றி லாஸன் பிறந்த க்ரென்ஃபெல்லில் வருடம் தோறும் ஜூன் மாத வார இறுதியொன்றில், ஹென்றி லாஸன் திருவிழா நடைபெற்று வருகிறது.    



ஹென்றியின் வாழ்க்கை, குடும்பம், படைப்புகள், அப்படைப்புக்களுக்குக் காரணமாய் அமைந்த மக்கள், இடங்கள் போன்றவற்றை நினைவுகூறும் வகையில் அவர் வளர்ந்த குல்காங்கில் ஹென்றி லாஸன் மையம் என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.



-oOo-

இனி இதன் அடுத்த பகுதிகளில் திருமதி. கீதா மதிவாணன் அவர்களால் மிக நேர்த்தியாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள, ஹென்றி லாஸன் அவர்களின் குறிப்பிட்டசில {இருபத்திரெண்டு} கதைகளைப் பற்றி சற்றே நாம் அசைபோட்டுப்பார்ப்போம். 



’என்றாவது ஒரு நாள்’ 

புகழுரை தொடரும்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

’கீதமஞ்சரி’யின் ’என்றாவது ஒரு நாள்’ ...... Part 1 of 5

அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம். 

என்றாவது ஒருநாள், ’என்றாவது ஒரு நாள்’ என்ற நூலை வாங்கிப்படிக்க வேண்டும் என எனக்குள் நான் நினைத்திருந்தேன்.




இதற்கிடையில்
’என்றாவது ஒரு நாள்’ 
என்ற நூல் என்னைத்தேடி 
அதுவாகவே ஓடிவந்த நாள்: 
06.05.2015 

தேதி: ஆறு  +  மாதம்:  அஞ்சு 

[ஆறு + அஞ்சு = ஆரஞ்சு] 

 

சுவையிலும்கூட இனிப்பான ஆரஞ்சு ஜூஸேதான் !


கீதமஞ்சரியின்.... தமிழ்த்தேன்.... பார்த்தேன்.... படித்தேன்.... ரசித்தேன்.... சுவைத்தேன்.... மகிழ்ந்தேன்....  பகிர்ந்தேன்.... முழுக்க முழுக்கத் தேனினும் இனிமையான தமிழாக்கம் ! 


வலைத்தளம்: கீத மஞ்சரி

’என்றாவது ஒரு நாள்’ 
நூலாசிரியர்

 ’விமர்சன வித்தகி’ 

திருமதி. 
 கீதா மதிவாணன்  
அவர்கள் பற்றிய சிறுகுறிப்பு 

கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in/ என்ற தனது வலைத்தளப் படைப்புகள் வழியாக பரவலாக அறியப்பெற்றவர். தமிழின் மீதுள்ள ஈடுபாட்டால் கவிதைகள், சிறுகதைகள், தொடர் கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள் என்று பலவற்றையும் எழுதி வருகிறார். 

மஞ்சரி, தினமலர் பெண்கள் மலர் போன்ற பத்திரிகைகளிலும், வல்லமை, நிலாச்சாரல், அதீதம், பதிவுகள்  போன்ற இணைய இதழ்களிலும் இவருடைய பல படைப்புகள் வெளியாகியுள்ளன. 

சிட்னியில் நடைபெற்ற சங்கத்தமிழ் மாநாட்டு மலரில் இவர் எழுதிய இலக்கியக் கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது. தற்சமயம் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் இணைய வானொலியிலும் சிறு பங்காற்றி வருகிறார். 

மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பட்டயப்படிப்பு பயின்றுள்ள இவர் பிறந்து வளர்ந்த ஊர்: எங்கள் திருச்சிராப்பள்ளி என்று சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். :)

திருமணத்திற்குப்பின் சென்னையில் வசித்தவர். தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 

இது இவரது முதல் தொகுப்பு நூலாகும். 

சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆஸ்திரேலிய மக்களின் வாழ்க்கை மற்றும் புழங்குமொழி,  கொச்சை வழக்கு ஆகியவற்றை உள்வாங்கி உணர்வோட்டத்துடன் செய்யப்பட்டிருக்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களது மொழியாக்கத்தின் வீச்சு, காடுறை மாந்தர்கள் வாழ்ந்த காலத்திற்கும் சூழலுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.

காடுறை மாந்தர்கள்

முதுகுப்பையுடன் ஊர் ஊராக 
வேலைதேடி அலைவோர்

ரோமக்கத்தரிப்பு நிலையம்

சுரங்கத் தொழிலாளிகள்

இதன் மூலக்கதைகளை எழுதியுள்ள ’ஹென்றி லாஸன்’ பற்றி தனது நூலில் திருமதி. கீதாமதிவாணன் அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனச் சற்றே சுருக்கமாகப் பார்ப்போமா !

Henry Archibald Hertzberg Lawson 
17.06.1867 to 02.09.1922


இவரின் தாயார்: 
கவிஞரும், பதிப்பாசிரியரும், பெண்ணியவாதியுமான  
திருமதி. லூயிஸா லாஸன்

இவரின் தந்தை:
நார்வீஜியாவைச் சார்ந்த 
நீல்ஸ் லாஸன்

ஹென்றி லாஸன் வாழ்ந்த காலம்: 
1867 முதல் 1922 வரை [சுமார் 55 ஆண்டுகள்]

ஹென்றி லாஸன் அவர்களின் சொந்த வாழ்க்கை மிகவும் சோகங்கள் நிறைந்தது. இவரின் 9 வயதில் இவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றால் இவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் கேட்கும் திறனை இழந்துள்ளார். தன் 14ம் வயதில் முழுமையாகக் காது கேளாதவராகியுள்ளார். சக மாணவர்களின் கேலிப்பேச்சுக்கள், இயல்பிலேயே கூச்ச சுபாவமுள்ள ஹென்றி லாஸனை, மற்றவர்களிடமிருந்து மேலும் பிரித்துவைத்த நிலையில், அவருடைய கவனம் புத்தகவாசிப்பிலும், கவிதைகள் பக்கமும் திரும்பியுள்ளது. கடினமாக உழைத்துப்படித்தும் கல்லூரிப்படிப்பில் அவரால் தேர்ச்சிபெற இயலவில்லை.   

1883ல் பெற்றோர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தது இவரை மேலும் பாதித்தது. இவருடன் பிறந்த மற்ற தம்பி தங்கையர் மூவரும் தாயுடன் வாழ இவர் மட்டும் தன் தந்தையுடன் வாழ நேர்ந்துள்ளது. தந்தையுடன் சேர்ந்து கட்டட மற்றும் தச்சு வேலைகள் செய்யச் சென்று வந்துள்ளார்.  1884ல் புகைவண்டிகளின் பெட்டிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்துள்ளது. அதில் பணிபுரிந்துகொண்டே இரவு நேரப்பள்ளிக்கும் சென்று தன் கல்வியறிவை வளர்த்துள்ளார்.

1887ல் ’புல்லட்டின்’ பத்திரிகையில் ஹென்றி லாஸனின் முதல் கவிதையான ‘குடியரசுப் பாடல்’ வெளியானது. தொடர்ந்து அவருக்கு எழுதுவதற்கான வாய்ப்புகள் வரத் தொடங்கின. சில வருடங்களுக்குப்பிறகு, ஹென்றியின் தாய் ’லூயிஸா’ தானே ஒரு உள்ளூர் பத்திரிகையை 1100 பவுண்டுகளுக்கு விலைக்கு வாங்கி, அதில் தன் மகனுடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடலானார். பெரிய அளவில் விற்பனை இல்லை என்றாலும், ஹென்றியின் படைப்புகள், அவரது தாய், அந்தப்பத்திரிகையை வாங்கிய தொகையை மீட்க உதவின.

வாழ்க்கையில் வருமானத்திற்கான தொடர் போராட்டமும், பல்வேறு அனுபவங்களும் அவரை ஒரு முழுநேர எழுத்தாளராக மாற்றியது. தான் கண்ட, கேட்ட, அனுபவித்த நிகழ்வுகளை, கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் படைத்தார். அவருடைய சமகாலப் படைப்பாளியான பேஞ்ஜோ பேட்டர்ஸனுக்கு தன் படைப்புகள் மூலம் கடும் போட்டியைக் கொடுத்தார்.

ஹென்றி லாஸன் 1896 இல் ’பெர்த்தா ப்ரெட்’டை மணந்தார். ஜோஸப் லாஸன் மற்றும் பெர்தா லாஸன் என இரு குழந்தைகள் பிறந்தனர். பிரபல எழுத்தாளராக இருந்தபோதும் நேர்மையற்ற பதிப்பகத்தார்களால் வஞ்சிக்கப்பட்டார். வறுமையின் பிடியில் சிக்கினார். மன உளைச்சலுக்கு ஆளானார். குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகிப்போயிருந்தார். 

தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல், எழுத்தாளருக்கே உரிய மனப்போராட்டம், மனைவியின் தொடர் பிணி, பிள்ளைகள் வளர்ப்பு என்று பல தரப்பட்ட நெருக்கடிகளால் அவருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி, மண வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு, இறுதியாக 1903 இல் விவாகரத்தும் பெற்றார். 

மனைவி மக்களுக்கான ஜீவனாம்சத்தொகை தர இயலாமல் போய் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவருடைய கைதி எண்: 103. சிறையில் தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவங்களை ’நூற்றி மூன்று’ என்ற தலைப்பில் கவிதையாக்கினார். பின்னாளில் அது பிரசுரமானது.

கடனாளியாகவும், குடிகாரனாகவும் இருந்த ஹென்றி லாஸனின் வாழ்க்கை, பின்னாளில் முற்றிலும் நொடித்துப்போனது. நாதியற்றவராய் சிட்னியின் தெருக்களில் அவரைப் பிச்சையெடுக்கவும் வைத்தது. ஒருமுறை மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார். ஆனால் நண்பர்கள் சிலரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.


மனதளவிலும் உடலளவிலும் மிகவும் மோசமான நிலையில் நலிந்து கிடந்தவரைத் தூக்கி நிறுத்திய பெருமை, அவரை விடவும் இருபது வயது மூத்தவரான, அவருடைய சினேகிதி திருமதி. ’இஸபெல் பையர்ஸ்’ (Mrs. Isabel Byers) என்பவரையே சாரும். 


அதுபற்றிய மற்ற சுவாரஸ்யமான விஷயங்களை இதன் அடுத்த பகுதியில் பார்ப்போம்.


’என்றாவது ஒரு நாள்’ 

தொடரும்.




 ஓர் முக்கிய அறிவிப்பு 

இந்த என் தொடர் பதிவு
‘என்றாவது ஒரு நாள்’ 
என்ற நூலைப்பற்றிய என் 
விமர்சனம் அல்ல.


இதுவரை பிறரின் எந்த ஒரு கதைக்கோ அல்லது நூலுக்கோ 
நான் விமர்சனம் ஏதும் எழுதிப் பழக்கம் இல்லாதவனும்கூட.


மேலும் இந்த நூலை எழுதியுள்ளவர்
’விமர்சன வித்தகி’ 
என ஏற்கனவே பெயர்பெற்ற
மிகச்சிறந்த + மிகப்பிரபலமான 
முன்னணி எழுத்தாளர் ஆவார்.


இத்தகையப் பெருமைகளுக்குரிய இவரின் 
நூலினை நான் விமரிசிப்பது
கொஞ்சமும் பொருத்தமாகவும் இருக்காது.


அதனால் இந்த என் தொடரை  
‘என்றாவது ஒரு நாள்’ 
என்ற தலைப்பில்
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் எழுதியுள்ள
நூலைப்பற்றிய என் புகழுரையாக மட்டுமே 
எடுத்துக்கொள்ள வேண்டுமாய் அனைவரையும்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்

[வை. கோபாலகிருஷ்ணன்] 




’என்றாவது ஒரு நாள்’ 
புகழுரை தொடரும்.