என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 6 / 8 ]

இந்தக்கதையின் முன்பகுதிகளைப் படிக்க:
http://gopu1949.blogspot.com/2011/02/4-8.html பகுதி 1 முதல் 4 வரை
http://gopu1949.blogspot.com/2011/02/5-8.html பகுதி 5

தொடர்ச்சி .............................. பகுதி 6


சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.

சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.

அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும் ,பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.

சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.

அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.

கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.

இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.

எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.

எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.

“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.


தொடரும்



ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

அவன் போட்ட கணக்கு

”என்ன கணக்கு வாத்யார் அய்யா, செளக்யங்களா” ப்யூன் தமிழ்மணி தலையில் கட்டியிருந்த முண்டாசுத் துணியை இடுப்பில் கட்டியவாறு கணக்கு வாத்யார் வீட்டை நெருங்கினான்.
“வா..ய்..யா .... தமிழ்மணி! அப்படியே திண்ணையிலே உட்காரு; என்ன இவ்வளவு தூரம். உன் பையன் மாசிலாமணிக்கு மெடிகல் சீட்டு கிடைச்சுடுத்தா?”
“அய்யா அதைப்பத்திப் பேசிட்டுப் போகலாம்னு தான் வந்தேனுங்கய்யா. நேரிடையா மெடிகல் சீட் கிடைக்காது போல தெரியுது ஐயா. 'பீ.டி.எஸ்.' ன்னு ஏதோ பல் டாக்டர் படிப்பாமில்லே, அது தான் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்கய்யா. என்ன செய்யறதுன்னு புரியாம இருக்குதய்யா”

“பல் டாக்டர் படிப்பும் நல்லது தானே. அது கிடைச்சா அதிலேயே சேர்த்து விட்டுடு தமிழ்மணி; அதுவே கிடைக்காம எவ்வளவு பேருங்க தவிக்கறாங்க தெரியுமா?”


“என்னய்யா நீங்க போயி இது போலச் சொல்றீங்க ; நல்லா படிக்கற பையன், உங்களுக்கே நல்லாத் தெரியும். நிறைய மார்க் வாங்கியிருந்தும் அவன் ஆசைப்படற டாக்டர் படிப்பு படிக்க வைக்கணும்னு நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னுடைய சேமிப்பு, சொத்து பத்து எல்லாவற்றையும் விற்றும், கடைசியிலே அவனைப் போயும்போயும் இந்தப் பல் டாக்டர் படிப்புக்குத்தான் அனுப்பணும் போலிருக்கே!”

என்னய்யா விஷயம் புரியாம இப்படிப் பேசுறே? சாதாரணத் தலைவலி, வயிற்றுவலின்னு வருகிற நோயாளிகளை விட பல்வலி என்று வரும் நோயாளிகள் 32 மடங்கு அதிகமய்யா. வருமானம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் தொழிலய்யா, இந்தப் பல் டாக்டர் தொழில்.

“கொஞ்சம் விவரமா புரியும்படியாகச் சொல்லுங்கய்யா” வாயைப் பிளந்து 32 பற்களும் தெரியும் படி கணக்கு வாத்யாரை நோக்கினான் தமிழ்மணி.


“நம்ம நாட்டோட மொத்த ஜனத்தொகை எவ்வளவுன்னு உனக்குத் தெரியுமா?”
“130 கோடிக்கு மேல் இருக்கும் என்று அன்னைக்கு நம்ம சமூகவியல் வாத்யார் சண்முகம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கிட்டு இருந்தார், அய்யா”.
“கரெக்ட்டு ..... ஒவ்வொரு மனுஷனுக்கும் மொத்தம் எவ்வளவு பல்லு இருக்குன்னு உனக்குத் தெரியுமா?”
“32 பல்லுங்கன்னு சொல்லுவாங்க அய்யா”
“அப்போ பல்லு முளைக்காத குழந்தைகளும், முழுப்பல்லும் போன கிழடுகளும் என்று ஒரு 30 கோடி பேர்களை நீக்கி விட்டு கணக்குப் பார்த்தால் கூட, ஆளுக்கு 32 பல்லு வீதம் 100 கோடி பேருக்கு, மொத்தமாக ஒரு 3200 கோடி பற்கள் நம் நாட்டில் தேறும் அல்லவா?”

“ஆமாம் அய்யா; இருக்கலாம்; அதற்கென்ன இப்போ?”

“இந்த 3200 கோடி பற்களில், ஆரோக்கியமாகப் பராமரிக்கப்பட்டு தற்சமயம் அவஸ்தை ஏதும் இல்லாத பற்கள் என்று ஒரு 80 சதவீதம் பற்களை விட்டு விட்டால் கூட, மீதி 20 சதவீதம் அதாவது 640 கோடி பற்கள், ஆடும் பற்களும், சிகிச்சை நாடும் பற்களும் தான் என்பதை ஒத்துக் கொள்கிறாயா?”
”நீங்க சொல்வது ஏதோ கொஞ்சமாகப் புரிவது போல இருக்குது அய்யா”
கணக்கு வாத்யார் இதுவரை சொன்ன சமாசாரங்களை ஒரு பேப்பரில் அழகாக முத்து முத்தாக (முத்துப் பற்கள் போல) தமிழ்மணிக்குப் புரிவது போல பட்டியலிட்டார்.
“இந்தப் பாடாவதிப் பற்களான 640 கோடிகளை, ஆண்டு முழுவதும் பரவலாக சிகிச்சை செய்ய வருகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும்,
[ 640,00,00,000 / 365 நாட்கள் = 1,75,34,246 ] தினசரி சராசரியாக ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இரு நூற்று நாற்பத்தாறு பற்களுக்கு அவசர வைத்தியம் பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. உனக்கு இது வரை நான் போட்ட இந்தக் கணக்கு புரிகிறதா ... இல்லையா?”

”கணக்கு வாத்யாராகிய நீங்க சொன்னீங்கன்னா, அது எனக்குப் புரியுதோ இல்லையோ, அது சரியாத்தான் இருக்கும். மேற்கொண்டு சொல்லுங்க அய்யா”
”நம் நாடு பூராவும் சேர்த்து ஒரு லட்சம் பல் டாக்டர்கள் இருப்பார்கள் என்று ஒரு கணக்குக்கு வைத்துக் கொண்டாலும் (அவ்வளவு பேர்கள் இருப்பது நிச்சயம் சந்தேகமே) , தினமும் ஒவ்வொரு பல் டாக்டரும் [ 1,75,34,246 / 1,00,000 = 175 ] சுமார் 175 பற்களுக்குக் குறையாமல் உடனடி வைத்தியம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.”
“ஒரு பல்லுக்கு ஐம்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், பொழுது விடிந்து பொழுது போனால் தினமும் ஒரு எட்டாயிரம் ரூபாய்க்கு மேல் கல்லா கட்டிவிடலாம் போலத் தெரியுதே, அய்யா” !
”இப்போ தான் நீ கரெக்டா பாய்ண்ட்க்கே வந்திருக்கே! .... ஆனால் அவசரப் படாம நான் சொல்றதை முழுவதுமாகக் கேளு”, தமிழ்மணி.
“சரிங்க அய்யா .... சொல்லுங்க அய்யா.....”

“அது மட்டுமா, தமிழ்மணி; ஏழையோ, பணக்காரனோ, நல்ல பதவியில் இருப்பவனோ, அரசாங்க அதிகாரியோ, அரசியல் வாதியோ எவனாக இருந்தாலும், பல்லைக் காட்டிக்கொண்டு உன் பையனிடம் தானே வந்தாகணும்?”


”நீங்க இப்படிப் பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைப்பதைக் கேட்கும் போது, என் உடம்பெல்லாம் புல்லரிக்குது அய்யா”
இரு இரு அவசரப்படாதே; சொத்தைப்பல், பூச்சிப்பல், பல் கூச்சம், பல் அரணை, பல்லில் ரத்தம் வடிதல், பல்லைச் சுற்றி ஈறு வீக்கம், ஆடும் பற்கள், கறை மற்றும் காரை படிந்த பற்கள், இடைவெளி அடைப்பு செய்ய, பல் சுத்தம் செய்ய, விபத்தில் அரைகுறையாக உடைந்த பற்களை செப்பனிட, பல்லை அழகு படுத்த, விழுந்த பல்லை மட்டும் மீண்டும் கட்டிக்கொள்ள, பல்செட் முழுவதுமாக மாற்ற எனப் பலவித வாடிக்கையாளர்கள் தினமும் உன் மகனைப் புடை சூழ்ந்து நிற்க, மாதந்தோறும் பல லட்சங்களை நீ எண்ணி, பத்திரப் படுத்தவே உனக்கு நேரம் பத்தாது.
“அய்யா, நீங்க சொல்லும் கணக்கைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால், பல் டாக்டர் படிப்பில் தான் நல்லாச் சில்லறையை பார்க்க முடியும் போலத் தெரிகிறது, அய்யா”.
“சில்லறையா ! தினமும் ஆயிரம் ஆயிரமா, மாதம் முழுவதும் லட்சம் லட்சமா ரூபாய் நோட்டுகள் வந்துக் குவியுமய்யா”
“அய்யா, நீங்க கணக்கு வாத்யார் மட்டுமல்ல; குழப்பமான நேரத்தில் என் கண்களைத் திறந்த தெய்வமய்யா” எனத் தன் அனைத்துப் பற்களும் தெரிய சிரித்த வண்ணம் விடைபெற்றன், தமிழ்மணி.

ஒரு சில வருடங்கள் ஓடி விட்டன. அன்றொரு நாள், பள்ளியில் காலை பிரார்த்தனை முடிந்ததும், பள்ளி மணியை அவசர அவசரமாக அடித்து விட்டு, வருகைப் பதிவேடு, சாக்பீஸ்கள் சகிதம், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்ற தமிழ்மணி கணக்கு வாத்யாரை மீண்டும் சந்திக்கிறார்.
“அய்யா, இன்னிக்கு சாயங்காலம் உங்களை சந்திச்சு கொஞ்சம் தனியாப் பேசணும்” என்றான் தமிழ்மணி.

“இன்று எனக்குக் கடைசி பீரியடு ரெஸ்ட் தான். மூன்றரை மணிக்கு ரெஸ்ட் ரூமுக்கு வா; நாம் ப்ஃரீயாக பேசலாம்” என்றார் கணக்கு வாத்யார்.

கடைசி பீரியட் ஆரம்ப மணி அடித்து விட்டு ரெஸ்ட் ரூமுக்குச் சென்றான் தமிழ்மணி.


”என்னய்யா தமிழ்மணி, உன் கஷ்டமெல்லாம் விலகி நல்ல காலம் பிறக்கப் போகிறது. உன் பையன் பல் டாக்டர் படிப்பு முடிந்து அடுத்த மாதம் வந்துடுவான் என்று நினைக்கிறேன்” என்றார் சரியாகக் கணக்குப் போட்டுக்கொடுத்த, கணக்கு வாத்யார்.

“வாத்யார் அய்யா .... நாம ஒரு கணக்குப் போட்டா தெய்வம் ஒரு கணக்குப் போடுது. நேத்து என் பையனும், அவனுடன் பல் டாக்டருக்குப் படிக்கும் ஒரு பொண்ணும் வீட்டுக்கு வந்தாங்க. இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க போலிருக்கு” என்றான் தமிழ்மணி.
“ரொம்பவும் நல்ல சமாச்சாரம் தானே; பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலல்லவா இருக்கு நீ சொல்லும் இந்த இனியச் செய்தி. மகன், மருமகள் இருவருமே பல் டாக்டர்கள் என்றால் உன் ஸ்டேடஸ் உயர்ந்து போய் விடும். இனி நீ ஸ்கூலிலே மணி அடித்து ப்யூன் வேலையெல்லாம் செய்ய வேண்டியதில்லை” என்றார் கணக்கு வாத்யார்.
“அய்யா, அவசரப்படாம, நான் இப்போ சொல்றதை தயவுசெய்துக் காது கொடுத்துக் கேளுங்க. அவங்க ரெண்டு பேரும், மேல் படிப்புக்காக வெளி நாட்டுக்குப் போகப் போறாங்களாம்.

என் பையனுக்கான பயணச்செலவு, மேற்படிப்புச் செலவு எல்லாமே அந்தப் பொண்ணோட அப்பாவே பார்த்துக் கொள்வாராம்.


மொத்தத்தில் என் பையனும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டான் என்று நல்லாவே தெரிகிறது.

அவர்கள் அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டு ஒரு கொத்தடிமை போல நடத்துவார்கள் என்று நன்றாக என்னால் உணர முடிகிறது.

’எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான் படிப்பறிவு இல்லாத நான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.

இந்த மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினான்.

தமிழ்மணியின் இந்தப் புதிய கணக்கிற்கு விடை கூற முடியாமல் கணக்கு வாத்யாரே முழிக்கலானார்.

அதே நேரம் தமிழ்மணியைக் காணாததால், ஸ்கூல் விடும் மணி, வேறு யாராலோ மிக வேகமாக அடிக்கப்பட்டது.



-o-o-o-o-o-o-o-

சனி, 5 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 5 / 8 ]

இந்தத் தொடரின் முதல் 4 பகுதிகளைப் படிக்க : gopu1949.blogspot.com/2011/02/4-8.html

பகுதி 5 ............. தொடர்கிறது:

அதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.

நாக்பூரில் மட்டும், அப்பர் பெர்த்தில் அமர்ந்தபடியே அவர், மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல, கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழங்கள் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்த அவரின் ’கேரி பேக்’ ஒன்று இப்போது, மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பரிதாபமாக காட்சியளித்தது.

அவர் இரண்டொரு முறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி கவனித்திருந்தார்.

மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு மணி 10.45 க்கு, ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். அந்த ஆசாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தை [இப்போது போல செல்போன் பிரபலமாகாத காலம் அது] சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். பட்டாபி கோஷ்டி விடியற்காலம் 4.50 க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும்.

குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

மறு நாள் அதிகாலை, அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி, அதை மேலும் தொடர்ந்து அடிக்க விடாமல், அதன் தலையில் ஒரு குட்டு குட்டி, அதை ஊமையாக்கினார்.

லைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் தூக்கம் கலைந்து எழுந்து விடக்கூடும் என்ற பயத்திலும், காலை வேளையில் அதன் முகத்தில் மீண்டும் முழிக்க விருப்பமின்றியும், மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்திலேயே, தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா & பங்கஜம் உதவியுடன், ரயில் பெட்டியிலிருந்து இறங்க வேண்டிய கதவுப் பகுதி அருகில், அவர்கள் தாமதமின்றி உடனே இறங்குவதற்கு வசதியாக வைத்துக் கொண்டார். விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார், பட்டாபி.

குழந்தைகள் ரவியையும், கமலாவையும் மெதுவாக எழுப்பி, அவர்கள் முகத்தை வாஷ் பேசினில் அலம்பித் துடைக்கவும், வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.

மூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து, ஒருவழியாக டாக்ஸியில் ஏறி அமர்ந்தது அந்தக் குடும்பம்.

தொடரும்



வாய் விட்டுச் சிரித்தால் ... ... ... ...

கோபி இயல்பாகவே ஒரு முன்கோபி. சாதாரணமாகவே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எதிலேயுமே ஒரு சலிப்பு. முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல், சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவஸ்யமாக ஒரு கோபம்,கொதிப்பு,கடுப்பு முதலியன பிறவியிலேயே இலவச இணைப்புகளாகப் பெற்றவனோ என்று பிறருக்குத் தோன்றுமாறு அவ்வப்போது நடந்து கொள்பவன். அவன் சிரித்து இதுவரை யாருமே பார்த்தது கிடையாது.


கோபியின் போதாத காலமோ என்னவோ, அன்று அவன் அவசரமாக தெருவில் நடந்து போகும் போது, ஒரு கூர்மையான கல் ஒன்றில் கால் இடறி, வலது காலின் கட்டை விரல் நகத்தையே பெயர்த்துக்கொண்டான்.ஒரே ரத்தமாகக் கொட்ட ஆரம்பித்து விட்டது.



அருகிலேயே ஒரு தனியார் மருத்துவ மனை இருந்தது அவன் கண்ணில் பட்டது. உடனே உள்ளே நுழைந்து விட்டான். டாக்டரைப் பார்க்க வேண்டி சுமார் இருபது நபர்களுக்கும் மேல், டோக்கன் பெற்று, வரிசையில் காத்திருந்தனர்.



வெள்ளைப்புறா போன்ற நர்ஸ் ஒருவள், நம் கோபியை நெருங்கினாள்.



கோபி அவளிடம் தன் கால் நகத்தைக் காட்டி, ”அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும்” என்றான்.



அவள் அவனை அமைதியாக ஐந்து நிமிடங்கள் உட்காரச் சொல்லி, சட்டையையும் பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விட்டு இங்குமங்கும் ஒரே பிஸியாக ஓடலானாள்.



கோபிக்கு அந்த வெள்ளைப்புறா சொல்லிப்போனது ஒன்றும் விளங்கவில்லை. வரிசையில் அமர்ந்திருந்த நோயாளிகளில், இருபதாவதாக அவன் அருகில் அமர்ந்திருந்த நபர், அந்த நர்ஸ் சொன்னது இவன் காதில் விழவில்லையோ என்ற நல்ல எண்ணத்தில், ”தம்பீ .............. சீக்கரமாக, சட்டையையும், பனியனையும் அவிழ்த்து இங்குள்ள ஹாங்கரில் மாட்டி விட்டு அமைதியாக உட்காருங்க, இல்லாவிட்டால் அந்த நர்ஸ் அம்மா வந்து சத்தம் போடும்” என்றார்.



இதைக்கேட்ட கோபிக்கு கோபம் வந்து விட்டது. “யோவ், என் கால் கட்டை விரலில் அடிபட்டு நகம் பெயர்ந்துள்ளது; அதற்கான சிகிச்சை பெற வந்துள்ளேன்; நான் எதற்கு சட்டையையும், பனியனையும் அவிழ்க்கணும்” என்றான்.



அவனை விசித்திரமாக ஒரு முறை பார்த்த அந்த இருபதாவது ஆசாமி, தனக்குள் சிரித்துக்கொண்டே, “தம்பி நீ இந்த மருத்துவ மனைக்கு புதிதாக இன்று தான் வந்திருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்; நான் சொல்வது சரி தானே” என்று கேட்டார்.



“ஆமாம்ய்யா .... அதற்கென்ன இப்போ, தினமுமா நகத்தை பெயர்த்துண்டு இங்கு வர முடியும்?” எரிச்சலுடன் கேட்டான், கோபி.



“தம்பி ..... நீங்க சிறுவயசுப் பைய்யன். வேகப்படக் கூடாது. விவேகமாக இருக்கணும். வாழ்க்கையிலே ரொம்ப பொறுமை வேண்டும். அவசரமோ ஆத்திரமோ படுவதால் எதுவும், நாம் நினைப்பது போல உடனடியாக நடந்து விடாது, என் அனுபவத்தில் சொல்கிறேன்” என்று உபதேசிக்க ஆரம்பித்தார்.



கோபி தன் கைக்குட்டையை அங்கிருந்த குழாய்த் தண்ணீரில் நனைத்து, வலியைப் பொறுத்துக் கொண்டு, தன் வலது கால் கட்டைவிரலைச் சுற்றி இறுக்க கட்டுப் போட்டபடி, அருகில் இருந்த நபரை ஒரு முறைமுறைத்துப் பார்ப்பதற்குள், இரண்டு மூன்று வெண் புறாக்கள் கோபியை நெருங்கி இருந்தன.



“சார், சட்டையையும், பனியனையும் அவிழ்த்து மாட்டச் சொல்லி விட்டுப் போனேன் அல்லவா! என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க இவ்வளவு நேரமும்?” என்று சொல்லியபடி ஒருவள், கோபியின் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து சட்டையை உருவிப் போட்டாள். மற்றவள் ”பனியனையும் சீக்கரம் கழட்டுங்க சார்” என்று சொல்லி அதை கழட்டி எறிய உதவியும் புரிய ஆரம்பித்தாள்.



பக்கத்து இருபதாம் நம்பர்காரர் கோபியைப் பார்த்து, இப்போது ஒரு விஷமப் புன்னகை பூத்தார். கோபி வாயைத் திறந்து ஏதோ சொல்வதற்குள், ஒருத்தி ஜுரமானியை, கோபியின் வாயில் திணித்து, ”வாயை இறுக்கி மூடுங்க சார்” என்று உத்தரவு போட்டு விட்டாள். ஒருத்தி ஸ்டெதஸ்கோப்பை வைத்து ஹார்ட் பீட் எப்படியுள்ளது என்று கவனிக்க ஆரம்பித்தாள். அதற்குள் மற்றொருவள், கோபியை கையை நீட்டச் சொல்லி ரத்தக் கொதிப்பு உள்ளதா என்று பம்ப் அடித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள்.



ஒரு வெள்ளைத்தாளில் மூவரும் ஏதேதோ குறிக்க ஆரம்பித்தனர். டோக்கன் நம்பர் 21 என்று எழுதிய அட்டை கோபியிடம் கொடுக்கப்பட்டது.



”என் கால் கட்டை விரலில் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. நான் உடனடியாக டாக்டரைப் பார்க்கணும்” என்று ஏதேதோ கோபி புலம்பியும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ”அமைதியாக வரிசையில் அமர்ந்து நாங்கள் கூப்பிடும் போது தான் வரணும்” என்று சொல்லி விட்டு, அடுத்தடுத்து வரும் நோயாளிகளின் சட்டை பனியனை அவிழ்க்கும் வேலையை கவனிக்கச் சென்று கொண்டிருந்தனர், அந்த வெண் புறாக்கள் மூவரும்.



கோபியின் கோபம் கட்டுக் கடங்காமல் போய் விட்டது. தன்னைப் பார்த்து சற்று முன் விஷமப் புன்னகை புரிந்த நபரைப் பார்த்து “என்னய்யா, ஆஸ்பத்தரி இது ... கால் நகம் பெயர்ந்து வந்தவனுக்கு, ஏதேதோ தேவையில்லாத டெஸ்டுகளெல்லாம் செய்து, தொல்லைப் படுத்துகிறார்கள்” என்று எரிந்து விழுந்தான்.



“தம்பி ..... இப்போதும் சொல்கிறேன். நீங்க சிறு வயசுப் பைய்யன். கோபப் படக்கூடாது. வந்த பொது இடத்திலேயாவது பொறுமையாக இருக்கப் பழகிக்கணும். ஆஸ்பத்தரி என்றால் ஒரு சில சட்டதிட்டங்கள், வழி முறைகள் அவர்கள் வகுத்து வைத்திருப்பார்கள். அதற்கு நாம் கட்டுப்பட்டு, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரணும். பொது அமைதிக்கு நம்மால் பங்கம் ஏற்படக்கூடாது” என்று ஏதேதோ அறிவுரைகள் கூற ஆரம்பித்ததும், கோபிக்கு தன் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போய்விட்டது.



க‌ஷ்டப்பட்டு எழுந்து கொண்டு, தன் பனியன் சட்டையை உடுத்திக்கொண்ட பிறகு, இருபதாம் நம்பரில் தன் அருகே அமர்ந்திருந்த அந்த நபரின் சட்டையைக் கோத்து, வெளியே இழுத்துப்போய் நாலு சாத்து சாத்தலாமா என்றும் தோன்றியது, கோபிக்கு.



அல்சேஷன் நாய் போல, பற்களைக் காட்டி அவரைக் கடித்து விடுவது போல முகத்தை மாற்றிக்கொண்டிருந்தான், கோபி.



“தம்பி ..... அமைதி, அமைதி ..... எதற்கும் டென்ஷனே ஆகாதீங்க .... பொறுமையாய் இருங்க ...... அது தான் நம் உடம்புக்கு நல்லது” என்றார் அந்த 20 ஆம் நம்பர்.



“யோவ் ...... நீர் இனிமேல் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசினாலும், நான் மனுஷனாக இருக்க மாட்டேன். எனக்கு வரும் ஆத்திரத்தில் உம்மைக் கடித்துத் துப்பி விடுவேன்” என்று பெரியதாகக் கத்தினான், நம் கோபி.



அதற்கும் ஒரு புன்னகையை உதிர்த்த அந்த இருபதாம் நம்பர் சொன்னார் : “தம்பி ..... இன்று முதன் முதலாக இந்த ஆஸ்பத்தரிக்கு வந்து ஒரு பத்து நிமிஷம் ஆவதற்குள், உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே; நான் இங்கு எதற்கு வந்திருக்கிறேன் என்று நீங்க கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள் என்றால் தான், என் நிலமையும் உங்களுக்குப் புரிபடும்; இந்த ஆஸ்பத்திரியின் சட்ட திட்டங்களும் உங்களுக்கு ஓரளவு தெரிந்து விடும், பிறகு என் மீது நீங்க கோபப்பட்டதும் தவறு தான் என்று ஒருவேளை நீங்களே கூட உணர்ந்தாலும் உணர்வீர்கள்” என்று மிகவும் பொறுமையாகச் சொன்னார்.



“நீங்க எதுக்கு இங்கே உட்கார்ந்து கொண்டு, என் உயிரை வாங்குகிறீர்ன்னு, சீக்கரமாகச் சொல்லித் தொலையுமய்யா” என்றான் கோபி, தன் ஆத்திரத்தின் உச்சக் கட்டமாக.



“தம்பி ...... நான் இந்தத் தெருவுக்கே கொரியர் தபால்களை பட்டுவாடா செய்யும் ஆளு. தினமும் இந்த டாக்டருக்கு ஒரு நாலு கொரியர் தபாலாவது வந்துண்டே இருக்கும். தினமும் இங்கு தபால் கொண்டு வந்து தருவதும் நான் தான். என்னை இங்குள்ள நர்ஸ்ஸம்மாக்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரியும்; இன்று கூட இந்த டாக்டரைப் பார்த்து, தபாலைக் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக்கிட்டுப் போகத்தான் உட்கார்ந்திருக்கிறேன்.



இங்கு வரும் என்னையும் தினமும் சட்டையையும், பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விடுகிறார்கள், எல்லாவிதமான டெஸ்டுகளும் செய்து பேப்பரில் குறித்து விடுகிறார்கள், பிறகு வரிசை எண் உள்ள டோக்கனைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். நல்ல வேளையாக இன்று எனக்கு 20 ஆம் நம்பர் டோக்கன் கிடைத்துள்ளது. நேற்றைக்கு எனக்கு கிடைத்த நம்பர் 108.

நானும் இது பற்றி இந்த நர்ஸம்மாக்களிடம் பலமுறைகளும், ஏன் ஒரு நாள் அந்த டாக்டரிடமும் கூட புகார் செய்து பார்த்து விட்டேன். ஒன்னும் பிரயோசனம் இல்லை. டாக்டரை யார், எது சம்பந்தமாகப் பார்க்க வேண்டும் என்றாலும், இங்குள்ள சட்டதிட்டங்கள் அது போலவாம். யாருக்கும் எந்தவிதமான விதிவிலக்கும் கிடையாதாம்.

சரியென்று நானும் பிறகு, தினமும் கொரியர் தபால்களுடன் உள்ளே வரும்போதே என் சட்டை பனியன்களைக் கழட்டியவாறே காத்தாட வந்து அமர்ந்து விட, பழகிக் கொண்டு விட்டேன்.

தினமும் கொரியர் தபால் கொடுக்க வரும் நானே, இவ்வளவு பொறுமையாக இங்கு உட்கார்ந்திருக்கும் போது, கால் விரலில் அடிப்பட்டு, கட்டை விரல் நகமே பெயர்ந்து, ரத்தம் சொட்டச்சொட்ட உடல் உபாதையுள்ள நீ, இப்படி அவசரமும், ஆத்திரமும் படலாமா தம்பி?” என்றார், மிகவும் நிதானமாக.



இதைக் கேட்ட முன்கோபியான நம் கோபி, தன் கால் கட்டை விரல் நகம் பெயர்ந்த வலியையும் சற்று மறந்து, வாழ்க்கையில் முதன் முதலாக வாய் விட்டுச் சிரித்தான்.

‘வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்களே, அது இது தானோ !





வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஆசை


கலாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவள் தன் மாடி வீட்டு ஜன்னல் பக்கம் நிற்கும் போதெல்லாம், அவனும் எதிர் வீட்டு மாடி ஜன்னலில் வந்து நின்று விடுகிறான். வேறு வேலையே எதுவும் அவனுக்கு கிடையாது போலிருக்கு.

அவன் சற்று கூடுதல் அழகாகவே தோன்றுகிறான். அதற்காக அன்றொரு நாள் இவளைப் பார்த்து பழிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டதை மட்டும், இவளால், ஜீரணிக்கவே முடியவில்லை.

முன்பெல்லாம் சிலசமயம் இவள், அவனைப் பார்க்கும் போதெல்லாம், அதைத் தவிர்ப்பது போல குனிந்து கொள்வான். அல்லது முகத்தைத் திருப்பிக்கொண்டு, முதுகுப் புறத்தைக் காட்டி நிற்பான். இப்போது நாளுக்கு நாள் அவன் நடந்து கொள்ளும் முறையில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை, கலாவும் உணராமல் இல்லை.

நேருக்கு நேர் இருவர் கண்களும் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு மாதிரி சிரிப்பதும், கையை ஆட்டுவதும், உன்னைக் கொன்று விடுவேன் என்பது போல ஒரு விரலை மட்டும் உயர்த்திக் காட்டுவதும், வேண்டுமென்றே அடிக்கடி தன் மேல் சட்டையை அவிழ்த்துப் போட்டு விட்டு பெரிய பயில்வான் போல, தன் உடலழகின் கவர்ச்சியைக் கூச்சமில்லாமல் காட்டுவதும், சில சமயங்களில் கலாவின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக இருந்து தொல்லை தந்து வந்தன.

ஜன்னல் பக்கம் மீண்டும் மீண்டும் போய் அவன் அங்கு இருக்கிறானா எனப் பார்க்கும் ஆவலையும் ஏற்படுத்தி வந்தது, கலாவுக்கு.

பருவ மங்கையான அவளைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லாம் வயதுக் கோளாறு படுத்தும் பாடு தான். அவள் வயதுப் பெண்களுக்கெல்லாம் திரும்ணமாகி, கையில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாக குழந்தைகள் இருக்கும் போது, இவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகாததால் ஒரு வித ஏக்கம் வருவதும் இயல்பு தானே.

சென்ற வாரம் அவன் எங்கோ ஊருக்குச் சென்ற போது, அவனைப் பார்க்காத ஏக்கத்தில் இரவெல்லாம் தூக்கமின்றி தவித்தவள் தான், இந்தக் கலா.

ஆனால் சற்று நேரம் முன்பு அவன் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கச் செயல் தான். அவன் அவ்வாறு செய்திருக்கக்கூடாது தான். காதல் கடிதம் எழுதி, ஒரு மாதிரியாக மடித்து, அம்பு போலாக்கி விடுவார்களே, அது போல அவனும் ஏதோ ஒன்றை இவள் மீது படுவது போல வீசி விட்டான். நல்ல வேளையாக அது ஜன்னல் கம்பிகளில் பட்டு, வீட்டுக்கு வெளிப் புறம் கீழே எங்கோ பறந்து விட்டது.

அவன் வீட்டுக்கே நேரில் சென்று, அவனை இன்று உண்டு இல்லை என்று செய்து விட வேண்டும் என்று கோபமாக மாடிப் படிகளில் இறங்கினாள், கலா.

அவன் வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. தன் வீட்டுக்குள்ளேயே வந்து விட்ட இவளைப் பார்த்ததும் அப்படியே ஓடி வந்து, எதுவும் பேச விடாமல், கட்டிப் பிடித்து விட்டான், அந்த ராஸ்கல்.

சற்றும் எதிர்பாராத, திடீரென்ற அவனின் இந்தச் செயலால், உடலில் ஒரு வித மின்சாரம் பாய்ந்தது போன்ற, இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போனாள், கலா.

அவன் பிடியில் கட்டுண்டு மயங்கிய கலாவும், அவன் மீது கோபப்படாமல், அவனை அப்படியே இறுக்கக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிய ஆரம்பித்து விட்டாள்.

..............

. ............. ..............

. .............. .............. . ................

. .............. .............. . ................ .................


கொழு கொழு என்று இருக்கும் இரண்டு வயதே ஆன அழகிய குழந்தை என்றால், யாருக்குமே ஒரு ஆசை தானே !


வியாழன், 3 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]


முன்கதை......................... பகுதி - 1

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.
கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.


தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.


புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.
“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.


முன்கதை....................... பகுதி 2
முன்கதை ....................... பகுதி 3


”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.

பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?



இப்போது பகுதி 4


”யோவ் .. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்ய காசிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச் சாப்பிடக் கூடாது.

நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதீங்க; ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில், முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப் படறோம்.

வேறு எங்காவது ஒத்தை சீட்டு இருந்தா, நீர், டீ.டீ.ஆர். இடம் சொல்லி மாத்திண்டு போய்ட்டாக் கூட உமக்குப் புண்ணியமாப் போகும்” என்று பட்டாஸ் கட்டைப் பற்ற வைத்தது போல வெடிக்க ஆரம்பித்தார், பட்டாபி.


இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.

வெகு நேரம் ஆகியும், அந்த ஆசாமியைக் காணாததால், சற்று நிம்மதி அடைந்திருந்தனர், பட்டாபியின் குடும்பத்தினர்.

“ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில், அந்த மனுஷன் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?” பங்கஜம் தன் கணவனிடம் சிரித்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இருக்காது; அவனைப் பார்த்தால், நீ சொல்வது போல ஓடும் ரயிலிலிருந்து குதித்து உயிரை விடும் அளவுக்கு மானஸ்தனாகத் தெரியவில்லை. பரதேசிப்பயல் ... இங்கு எங்காவது தான் கழிவறைக்குப் போய் இருப்பான். வந்துடுவான்” என்றார் பட்டாபி.

“இப்போது சாப்பாட்டு மூட்டையைப் அவிழ்த்தால், உடனே அவன் வந்து, அது என்ன? இது என்ன? என்று கேட்டுக் கேட்டே கழுத்தை அறுத்து நம்மைச் சாப்பிட விடாமல் சங்கடப் படுத்தி விடுவான். என்ன பண்ணித் தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைந்தானோ? நாம் பண்ணின பாபம் நம்மைக் காசி வரை துரத்தி வருகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல், நிற்க ஆயத்தமாகி, இஞ்ஜின் பெருமூச்சு வாங்குவது போல சத்தம் கேட்டது.

அந்த ஆசாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தார். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, ”தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா” என்பது போல, இவர்களை ஒரு பார்வை பார்த்தார். அவர்கள் அவரைக் கொஞ்சமும் கவனிக்காதது போலவும், வேறு எங்கோ பார்ப்பது போலவும், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு, “தம்பீ .... நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?” என்றார். கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்தார். பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு அவர் அந்தப் பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக ரயில் பயணத்தை அனுபவியுங்கள். நீ எனக்கான லோயர் பெர்த்தில் படுத்துக்கோ; நான் உனக்கான அப்பர் பெர்த்தில் போய் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய எல்லா சாமான்களுடனும், குடிபெயர்ந்து மேலே ஏறி விட்டார் அந்த ஆசாமி.

கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.

இதுதான் நல்ல சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து, இரவு சாப்பாட்டை திருப்தியுடன் முடித்துக் கொண்டது, பட்டாபி கோஷ்டி.

“நாளைய ஒரு நாள் முழுவதும், நாம் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காமல், மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று இவர்களுக்குள் நினைத்துக் கொண்டனர்.


ரயில் பயணம் தொடரும்

புதன், 2 பிப்ரவரி, 2011

வரம்

அவர்கள் இருவரும் அறுபது வயதைத் தாண்டிய, ஆனால் ஆரோக்கியமான தம்பதி. அந்த ஜோடி தங்களது நாற்பதாவது திருமண நாளை, ஒரு சிறிய தேனீர் விடுதியில், மிகுந்த அன்புடனும், எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடியது.

அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.

இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த மனைவி, “ஆஹா, நான் என் பிரியமுள்ள கணவருடன் இந்த உலகைச் சுற்றி வர விரும்புகிறேன்” என்றாள்.

உடனே அதற்கான பெரிய பயணத்திட்டம், விமானப் பயண முன் பதிவுக்கான சீட்டுகள், மற்றும் ஆங்காங்கே தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவுகள், உணவு வசதிகள், வெவ்வேறு நாட்டு பணக்கட்டுகள், ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாடகைக்காருக்கான முன் பதிவுகள், தொலைபேசி எண்கள், புத்தாடைகள் மற்றும் பயணத்திற்கான அனைத்துப் பொருட்களும் அவள் முன், தேவதையால் அளிக்கப் பட்டன. இதைப் பார்த்து வியந்து போனார்கள், அவர்கள் இருவரும்.

இதைக் கண்ட கணவர் ஒரு நொடி சிந்தித்தார் . நல்லதொரு அரிய வாய்ப்பு இது. இதைத் தவற விட்டால் மீண்டும் கிடைக்கக் கூடியது அல்ல, என்று எண்ணினார்.

மனைவியைப் பார்த்து, “நான் கேட்கப் போகும் இந்த வரத்திற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்” என்று கூறி விட்டு, தேவதையிடம் ஒரு விசித்திரமான வரம் கேட்கலானார்.

”என் மனைவி, என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகிறேன். இது தான் எனக்குத் தேவையான வரம்” என்றார்.

இதைக்கேட்டதும், அவர் மனைவி மட்டுமல்லாமல், அந்த தேவதையும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.


ஓரளவு வயதாகியும், ஆண்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இது போன்ற சபல புத்தியை எண்ணி வியந்தனர், அவர் மனைவியும் அந்த தேவதையும்.

இருப்பினும், தேவதை தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி, உடனே அவரின் வரத்தையும் நிறைவேற்றிக் கொடுத்து விட்டு, மறைந்து விட்டது.

.....

...........

..................

நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.

...

......

.........

....................

பாவம் ...... அவர், இப்போது 92 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார்.