About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, April 6, 2011

அ ஞ் ச லை - 2 [ பகுதி 2 of 6 ]


அஞ்சலைக்கு வயது இருபத்து ஐந்துக்குள் தான் இருக்கும். மிகவும் அடக்கமானவள். சற்றே கறுத்த நிறமானாலும் கம்பீரமான வசீகர உடல்வாகு. கடந்த ஒரு வருடமாகத்தான், அவளுடன் சிவகுருவுக்குப் பழக்கம். 

வீட்டைப்பராமரிப்பதில் அவளுக்கு நிகர் அவளே. மனதிலும் செயலிலும் சுத்தமானவள். அவள் பாத்திரங்களைக்கழுவி வைத்தால் ஒரு வரவரப்போ, எண்ணெய்ப்பிசுபிசுப்போ இல்லாமல் அவை அப்படியே டால் அடிக்கும். துணிமணி துவைத்தாலும், அப்படியே பளிச்சென்று இருக்கும். 

ஃபிரிட்ஜ், டி.வி. ஷோகேஸ், கம்ப்யூட்டர், ஜன்னல்கள், கதவுகள் என எல்லாவற்றையும் தூசி இல்லாமல் துடைத்து, ஒட்டடை அடித்து,  பாத்ரூம் கழுவி, வீட்டைப்பெருக்கி, வாரம் ஒருமுறை தரையை அலம்பித்துடைத்து, அற்புதமாக வைக்கக்கூடியவள். 

நாணயம், நம்பிக்கை பற்றியோ கேட்கவே வேண்டாம். பீரோக்கள் எல்லாவற்றையும், திறந்து போட்டுவிட்டு, வீட்டு சாவியையும் அவளிடமே ஒப்படைத்து விட்டு, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் நாம் போய் விட்டு, நிம்மதியாக வரலாம். 

ஒருமுறை துவைக்கப்போட்ட சட்டைப்பையிலிருந்து அறுநூறு ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொடுத்தவள். ஒரு நாள் வீட்டைக்கூட்டி சுத்தம் செய்யும் போது, பெட்ரூம் கட்டிலின் கீழ் சுவர் ஓரமாக கிடந்த இரட்டைவடம் தங்கச்சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்தவள். 

வீட்டுக்கு வேண்டிய காய்கறிகள், மளிகை சாமான்கள் முதலியன வாங்கித் தருபவளும் அவளே. ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, ஆயிரம் வேலைகளை செய்து கொடுத்து, நல்ல பெயர் எடுத்தவள். அடுத்த மாதம் முதல் அஞ்சலைக்குத் தந்துவரும் மாதச்சம்பளத்தை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக உயர்ந்த இருந்த நேரம் பார்த்துத்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து விட்டது.  

*** வீட்டு வேலைகளை மிகவும் சிறப்பாகவும், சீக்கரமாகவும் முடித்து விட்டு, பகலில் “அத்திப்பூக்கள்” ளும், இரவில் “நாதஸ்வரம்” மும் டி.வி. யில் பார்த்துவிட்டுத்தான் தன் வீட்டுக்குப் புறப்படுவாள். வாடகைத்தாயாக நடிக்கும் ’கற்பகம்’ என்ற கதாபாத்திரத்தை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். ***

அஞ்சலை வராமல் தன் வீடு கடந்த ஒரு மாதமாக தவித்துத்தத்தளித்து வருவதை ஒரு நிமிடம் நினைத்துப்பார்க்கிறார், சிவகுரு. பாவம் அவர் மனைவி மல்லிகா. அவளுக்கு எப்போதும் வயிற்றுப்பகுதியில் ஏதோவொரு பிரச்சனை. அடிக்கடி சுருட்டிப்பிடித்து வலி வந்துவிடுகிறது. அதற்கான தொடர் சிகிச்சை எடுத்து வருபவள்.

குழந்தைப்பைத்தியமான அவளுக்கு இதுவரை குழந்தை ஏதும் பிறக்கவில்லை.தற்சமயம் கருத்தரித்து குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவளுக்கு வயிற்றுப்பகுதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொன்றாக நாளடைவில் சரிசெய்ய வேண்டியிருப்பதாகவும் அந்த லேடி டாக்டர் சிவகுருவுக்கு மட்டும் தெரியப்படுத்தியிருந்தார்கள். 

இப்போது உள்ள பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரிசெய்த பிறகு, தானே அவளுக்குத் தேவையான மற்ற சிகிச்சைகள் மேற்கொண்டு, குழந்தை பாக்யம் கிடைக்கச்செய்வதாகவும்,  இதற்கெல்லாம் குறைந்தது இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம் என்றும், அதே லேடி டாக்டர் சிவகுருவிடம் சொல்லியதில், அவருக்கு சற்றே ஆறுதலாகவும் மனநிம்மதியாகவும் இருந்து வருகிறது. 

இவ்வாறு உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் குறைந்த மல்லிகாவால், அவ்வளவு பெரிய தன் வீட்டை, அஞ்சலையின் உதவியின்றிச் சரியாக பராமரிக்க முடியவில்லை.


தொடரும்


=========================================================================


இந்தச்சிறுகதை 2005 ஆண்டு இறுதியில் முதன்முதலாக எழுதப்பட்ட போது மேலே கொடுத்துள்ள 7 வது பத்தி (7th Paragraph) கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது:

*** வீட்டு வேலைகளை மிகவும் சிறப்பாகவும், சீக்கரமாகவும் முடித்து விட்டு, பகலில் “அகல்யா” வும், இரவில் “ஆனந்தம்” மும் டி.வி. யில் பார்த்துவிட்டுத்தான் தன் வீட்டுக்குப் புறப்படுவாள்.  சாந்தியாக நடிக்கும் சுகன்யாவை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். ***

இப்போது அதைப்பற்றி ஏன் இங்கு குறிப்பிடப்பட வேண்டும் என்கிறீர்களா?அதற்கொரு குறிப்பிட்ட காரணம் உள்ளது. கதையின் முடிவில் உள்ள பின்குறிப்பைப் படிக்கும் போது உங்களுக்கே புரியும். 

26 comments:

  1. அநேகமாய் வாடகைத் தாயா இருக்க சொல்வாரோ ??

    ReplyDelete
  2. ஒரு நல்ல குடும்ப கதையை வாசிக்கும் திருப்தி. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. அட் ப்ரசண்ட் என்பதால் தற்போதைய சீரியல் பேர்களை வைத்துள்ளீர்க்ளா?

    ReplyDelete
  4. சுவாரசியமா போறது ஆனாலும் உடனே முடிஞ்சுடறாப்பல இருக்கு.
    இன்னும் கொஞ்சம் போடலாமே

    ReplyDelete
  5. காலத்திற்கு ஏற்றமாதிரி தொடரும் தொடர்கள் பெயர் மாறுகிறது.
    இன்னும் சில வருடங்கள் கழித்து எழுதினால், அப்போதைய தொடராக மாற்றுவீர்கள்.

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான நடை!

    ReplyDelete
  7. சுவாரசியமா போயிண்டிருக்கு. இரண்டு மூன்று கதைகளில் அத்திப்பூக்கள் பெயர் வந்தது. அஞ்சலையை விட உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்! தப்பா எடுத்துக்காதீங்க சார்.

    ReplyDelete
  8. நல்ல துவக்கம்
    சரளமான நடை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்����

    ReplyDelete
  9. சிறிய பகுதிகளாய் இருப்பதால் சுவாரசியம் அதிகமாகிறது.... அடுத்தது என்ன என்கிற ஆவலைத் தூண்டும்படி இருக்கிறது. தொடரட்டும்...

    ReplyDelete
  10. கதை முழுவதும் படித்துப் பின் கருத்து கூறுகிறேனே கோபு சார்.

    ReplyDelete
  11. நன்றாகப் போய்க் கொண்டு இருக்கிறது...ம்....

    ReplyDelete
  12. அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  13. ஆவலை மிகவும் தூண்டுகிறது,இதோ அடுத்த பகுதியும் வாசித்து விடுகிறேன்..

    ReplyDelete
  14. Asiya Omar said...
    //ஆவலை மிகவும் தூண்டுகிறது,இதோ அடுத்த பகுதியும் வாசித்து விடுகிறேன்..//

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

    மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  15. கதையை ஒரு எதிர் பார்ப்போட கொண்டு போறீங்க அண்ணா..:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி, மிகவும் சந்தோஷம்.
      தொடர்ந்து படியுங்கள்,
      கருத்துக்கூறுங்கள்.

      பிரியமுள்ள
      VGK


      Delete
  16. ஏதோவொரு பெரிய செயலுக்கு பலமான பீடிகை போடுகிறார் கதாசிரியர்.

    ReplyDelete
  17. வீட்டு வேலைக்கு கூப்பிடத்தான் வந்திருப்பாரு.

    ReplyDelete
  18. வழக்கமான சரளமான நடை. அடுத்து என்ன நடக்குமோ என்ற பலமான பீடிகை. இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று வாசகர்களை மண்டையைக் குடைய வைக்கும் குறும்புத் தனம்.

    ம்ம் நடத்துங்க, நடத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya May 17, 2015 at 10:31 PM

      //வழக்கமான சரளமான நடை. அடுத்து என்ன நடக்குமோ என்ற பலமான பீடிகை. இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று வாசகர்களை மண்டையைக் குடைய வைக்கும் குறும்புத் தனம்.//

      ஒரிஜினலா, நான் நல்ல ஸாதுப் பையனாக்கும். எல்லாக்குறும்புகளுமே ஜெயா எனக்குக் கற்றுக் கொடுத்ததாக்கும். :)

      குறும்புக்கார குருவான ஜெயாவுக்கு என் நன்றிகள். :)

      ம்ம் நடத்துங்க, நடத்துங்க.

      Delete
  19. எங்கூடலயும் அம்மி எல்லா சீரியலும் விடாம பாத்துபோடும்.

    ReplyDelete
  20. எதுக்கு வந்திருப்பாரோன்னு ஆளாளுக்கு யோசிக்க வச்சுட்டீங்க. யாருமே யோசித்திருக்காதபடி ஒரு ட்விஸ்டும் வச்சிருப்பீங்க.

    ReplyDelete
  21. எல்லாம் பெற்றவர்கள் உலகில் எவருமில்லை...கதைக்களம் நகரும் திசை...என் கணிப்பு சரிதானா என்று பார்க்கலாம்...

    ReplyDelete
  22. அஞ்சலையின் வேலை திறமை நாணயம் என்று பல சிறப்புகளை அழகாக சொல்லி இருக்கீங்க. அதே சமயம் சிவகுருவின் மனைவி ஹெல்த் ப்ராப்ளமும் புரிய வச்சிருக்கீங்க.. வேலைக்காரி இல்லாம இவங்களால வீட்டை பராமறிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம்தான்.. அஞ்சலை அதுக்கு தகுதியானவதான்.. காசு கொடுத்தாலும் நம்பிக்கையான வேலைக்காரங்க கிடைக்கணுமே.. டி. வி. ஸீரியலில் ஆர்வமுள்ளவளாக இருப்பதையும் சொல்லி இருக்கீங்க.. இப்ப இவர் எதுக்காக அஞ்சலையை தேடி வந்திருப்பார் என்று படிக்கறவங்க பலவிதமாக கற்பனை பண்ணிகெட்டெருக்காங்களே......

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... June 25, 2016 at 8:47 AM

      //அஞ்சலையின் வேலை திறமை நாணயம் என்று பல சிறப்புகளை அழகாக சொல்லி இருக்கீங்க. அதே சமயம் சிவகுருவின் மனைவி ஹெல்த் ப்ராப்ளமும் புரிய வச்சிருக்கீங்க.. வேலைக்காரி இல்லாம இவங்களால வீட்டை பராமறிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம்தான்.. அஞ்சலை அதுக்கு தகுதியானவதான்.. காசு கொடுத்தாலும் நம்பிக்கையான வேலைக்காரங்க கிடைக்கணுமே.. டி. வி. ஸீரியலில் ஆர்வமுள்ளவளாக இருப்பதையும் சொல்லி இருக்கீங்க.. இப்ப இவர் எதுக்காக அஞ்சலையை தேடி வந்திருப்பார் என்று படிக்கறவங்க பலவிதமாக கற்பனை பண்ணிகெட்டெருக்காங்களே......//

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், சிரத்தையான வாசிப்புக்கும், நீண்ட பின்னூட்டக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete