About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, July 7, 2011

பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் [ பகுதி 2 of 2 ] இறுதிப்பகுதி


முன்கதை முடிந்த இடம்:

ஆனால் இவ்வாறு சுற்றுச்சூழல் சரியில்லாமல் இருப்பதும் கூட, இந்தக்கடையின் பஜ்ஜியின் மனதை மயக்கும் மணத்திற்கும், சுண்டியிழுக்கும் சுவைக்கும் முன்னால் அடிபட்டுப்போகும். 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா! அதுபோலத்தான் இதுவும்.
=============================================

தொடர்ச்சி ...... பகுதி -2 [ இறுதிப்பகுதி ] ..... இப்போது:

எவ்வளவு தான் முயன்று பார்த்தாலும், என் வீட்டில் எப்போதாவது செய்யப்படும் பஜ்ஜி, இந்தக்கடை பஜ்ஜி போல உப்பலாகவும், பெருங்காய மணத்துடனும், முரட்டு சைஸாகவும், வாய்க்கு ருசியாகவும், வயிறு நிரம்புவதாகவும், உடனடியாக சுடச்சுட தேவைப்படும் நேரத்தில் தேவாமிர்தமாகக் கிடைப்பதாகவும் இல்லை.

நான் பணியாற்றும் வங்கிக்கு மிக அருகிலேயே இந்த பஜ்ஜிக்கடை அமைந்துள்ளதால், எங்கள் அலுவலக அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு மதியம் மூன்று மணிக்கு மேல் ஆபீஸ் வேலை எதுவுமே ஓடாது. 

பஜ்ஜிக்கடைக்குக் கிளம்பும் அவரிடம் நாங்கள் எல்லோரும் எங்களுடைய தேவைகளையும் சொல்லி மொத்தமாக வாங்கிவரச்செய்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம். 

சுடச்சுட அவர் வாங்கிவரும் பஜ்ஜிகள் எங்கள் ஏ.ஸீ. ரூமுக்கு வந்ததும் நாக்கு சுடாமல் சாப்பிடும் பதமாக மாறிவிடும். அலுவலக வேலைகளில் மூழ்கி, வாங்கி வந்த பஜ்ஜிகளை நாங்கள் கவனிக்காமல் கொஞ்ச நேரம் விட்டால் போதும்; அவைகளுக்கு மிகுந்த கோபம் வந்து விடும். ஏ.ஸி. ஜில்லாப்பு ஒத்துக்கொள்ளாமல்,அவை ஆறி அவுலாகிப்போய் தொஞ்சபஜ்ஜியாகி தூக்கியெறிய வேண்டியதாகத் தங்களை மாற்றிக்கொண்டு விடும்.

சிறு தொழில் புரிவோருக்கு வங்கி மூலம் கடன்கொடுத்து உதவும் பதவியை நான் வகித்ததால், அட்டெண்டர் ஆறுமுகத்தை அனுப்பி அந்த பஜ்ஜி வியாபாரம் செய்யும் பெரியவரை வரவழைத்து, அவருக்கு ஏதாவது ஒரு வகையில் பண உதவி செய்து, அவர் செய்யும் வியாபாரத்தைப் பெருக்கிடலாம், முன்னேறச் செய்யலாம் என்று நினைத்தேன். அவருக்காகவே அன்று மாலை என் அலுவலகப்பணிகள் முடிந்த பின்பும், இரவு 7 மணி வரை. என் அலுவலகத்திலேயே காத்திருந்தேன்.

அவரை அழைத்துவரச்சென்ற ஆறுமுகம் மட்டும் தனியே திரும்பி வந்தான்.

“அந்தப்பெரியவரை அழைத்துவரவில்லையா” என்றேன்.

”அவரின் பஜ்ஜி வியாபாரம் உச்சக்கட்டத்தை எட்டும் நேரமாம் இரவு எட்டுமணி வரை. அதனால் அவரால் தற்சமயம் தங்களை வந்து பார்க்க செளகர்யப்படாதாம்; மன்னிக்கச்சொன்னார்; மேலும் இந்த நாலு பஜ்ஜிகளை தங்களுக்கு சூடாக சாப்பிடக்கொடுக்கச் சொன்னார்” என்றான் பொட்டலம் ஒன்றை என் மேஜை மீது வைத்தவாறே.

“வலுவில் போனால் ஜாதிக்கு இளப்பம்” என்பார்களே, அந்தப்பழமொழி என் நினைவுக்கு வந்தது. என்னிடம் லோன் கேட்டு விண்ணப்பித்துக்காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பேர்களின் மத்தியில், இப்படியொரு பிழைக்கத்தெரியாத பஜ்ஜிக்காரர்! நான் வியந்து போனேன்.

மறுநாள் காலை நேரம். என் வீட்டு ஈஸிச்சேரில் பனியன் துண்டுடன் வாசல் சிட்டவுட்டில் நான் நியூஸ் பேப்பர் படித்தபடி அமர்ந்திருந்தேன். வாசல் இரும்புகேட் திறக்கப்படும் சப்தம் கேட்டு, வாசலை நோக்கினேன்.

அதே பஜ்ஜிக்கடைப் பெரியவர். நெற்றியில் விபூதிப்பட்டையுடன் சிவப்பழமாக என்னை நோக்கி கைகூப்பியபடி வந்தார்.  

அவர் என்னருகில் உட்கார ஒரு நாற்காலியைக் காட்டினேன்.  பட்டும்படாததுமாக அமர்ந்து கொண்டார்.

“ஏதோ நீங்கள் என்னைக்கூட்டி வரச்சொன்னதாக உங்க ஆபீஸ் ஆறுமுகம் சொன்னாரு; நேற்றைக்கே என்னால் உடனடியாக போட்டது போட்டபடி கடையை விட்டுட்டு, கஸ்டமர்களை விட்டுட்டு வரமுடியவில்லை” என்றார்.

“அதனால் பரவாயில்லை; உங்களுக்கு ஏதாவது பண உதவி தேவைப்படுமா? அதாவது பேங்க் லோன் ஏதாவது ..... தங்கள் தொழிலை ஏதாவது விரிவாக்கவோ, அபிவிருத்தி செய்யவோ, தனியாக ஒரு கட்டடத்தில் சிறிய ஹோட்டல் நடத்தவோ, பஜ்ஜி மட்டுமில்லாமல் பலவித பலகாரங்கள், சட்னி சாம்பாருடன் தயாரித்து பொதுமக்களுக்கு சேவை செய்யவோ ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கோ. நான் இந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பர் ஆவதற்குள் உங்களுக்கு என்னால் ஆன உதவிகள் செய்து விட்டுப்போகிறேன்” என்றேன்.

“இந்தக்கைவண்டியில் சூடாக பஜ்ஜி போட்டு விற்பது, எங்கள் குலத்தொழில். எங்க அப்பா, தாத்தா எல்லோருமே செய்த தொழில். ஏதோ கடுமையான உழைப்புக்குத் தகுந்தாற்போல, குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கிடைத்து வருகிறது. நல்ல இடமாகவும் கோயில் அருகில் அமைந்துள்ளது. ஜனங்களும் என் கடையை விரும்பி வந்து பஜ்ஜிகள் வாங்கி எனக்குத் தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள்;  

அந்தக்காலத்தில் ஒரு பஜ்ஜி காலணாவுக்கு விற்றோம். ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். ஒரு ரூபாய்க்கு 64 பஜ்ஜிகள்.  2 ரூபாய்க்கு 128 பஜ்ஜிகள். இப்போ ஒரு பஜ்ஜியே இரண்டு ரூபாய்க்கு விற்கிறோம். அதுவே மலிவு என்று சொல்லி வாங்கிப்போகிறார்கள். என்ன செய்வது அகவிலையெல்லாமே ஒரேயடியாய் ஏறிப்போய் விட்டது;  

இப்போது விற்கும் விலைவாசியில் வேளாவேளைக்குச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், சாதாரண கைவண்டியிழுக்கும் தொழிலாளிகள், மூட்டை தூக்கிப்பிழைப்போர்,  சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள், சலவைத்தொழிலாளிகள், முடிவெட்டும் தொழிலாளிகள், ரோட்டோர சிறுசிறு வியாபாரிகள் என சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல், வசதியாக வாழ்ந்து காரில் வந்து இறங்கும் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவு அவர்கள் நாக்குக்கு ருசியாகவும், வயிற்றுக்கு நிறைவாகவும் ஓரளவு பசியாற்றிட, இந்த நான் செய்யும் பஜ்ஜி வியாபாரத்தால் முடிகிறது; 

நான் பார்க்கும் இந்தத்தொழில் எனக்கு ஒரு முழுத்திருப்தியாக அமைந்துள்ளது. மேலும் பலவித டிபன்கள், சட்னி சாம்பாருடன் கிடைக்கத்தான் ஏகப்பட்ட ஹோட்டல்கள் ஆங்காங்கே உள்ளனவே;

இந்தப் பஜ்ஜி வியாபரம் தான் எனக்குப்பழகிப்போய் உள்ளது. புதிதாக ஏதாவது தெரியாத தொழிலில் ஆழம் தெரியாமல் காலை விட எனக்கு இஷ்டமில்லை, என்னை தயவுசெய்து மன்னிக்கணும்;

இந்த வியாபாரம் இனியும் தொடர்ந்து செய்து தான் நான் என் குடும்பம் நடத்தணும், குழந்தைகுட்டிகளைக் காப்பாற்றணும் என்று கடவுள் என்னை வைக்கவில்லை.   ஒரு குறைவும் இல்லாத நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறேன். ஓரளவு பணம் காசும் சேர்த்தாச்சு. குடியிருக்க ஒரு சுமாரான வீடும் வாங்கியாச்சு. 

ஏதோ சொச்ச காலம் உடம்பில் தெம்பு இருக்கும்வரை,இதுவரை என்னைக்காப்பாற்றி வந்துள்ள,  இந்த பஜ்ஜித்தொழிலையே செய்து விட்டுப்போகலாம் என்று நினைக்கிறேன்.  

நீங்கள் எனக்குக் கொடுப்பதாகச்சொல்லும் லோன் பணம், உண்மையிலேயே கஷ்டப்படும், வேறு யாருக்காவது ஒருவேளை அவசியமாகத் தேவைப்படலாம்.  அதுபோல யாருக்காவது உதவி செய்தீர்களானால், அவா குடும்பமும் பிழைக்கும், உங்களுக்கும் ஒரு புண்ணியமாப்போகும்; 

இன்று மதியம் வியாபாரம் செய்ய காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கிவர, அவசரமாக மார்க்கெட்டுக்குப்போய்க்கொண்டிருக்கிறேன்; நான் இப்போது உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பிப்போய் விட்டார், அந்தப்பெரியவர்.   


என்னவொரு பக்குவமான, அனுபவபூர்வமான, தெளிவான, அழகானப் பேச்சு இவருடையது என்று நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

எவ்வளவு தான் நான் படித்திருந்தாலும், நல்ல உயர்ந்த உத்யோகத்தில் கெளரவமாக வாழ்ந்து வந்தாலும் பேராசை பிடித்து உழைக்காமலேயே சீக்கரமே கோடீஸ்வரன் ஆக வேண்டும் என நினைத்து, பங்குச்சந்தையில் நுழைந்து பொறுமையே சற்றுமில்லாமல் ’தினமும் இண்ட்ரா டிரேடு செய்கிறேன்’;, ’விட்டதைப்பிடிக்கிறேன்’; ’நஷ்டத்தைக்குறைக்க மேலும் மேலும் மலிவாக வாங்கி ஆவரேஜ் செய்கிறேன்’ என்று நான் இதுவரை இழந்த பணம் நாற்பது லட்சங்களுக்குக்குறையாது.  

ஆபீஸில் அனைத்து விதமான லோன்களும் வாங்கி, பீ.எப். சேமிப்புகளையும் திரும்பத்திரும்ப லோன் வாங்கி, அதுவும் போதாமல் மாதம் மூன்று ரூபாய் வட்டிக்கு எவ்வளவோ பேர்களிடம் கடன் வாங்கி இந்த பாழாய்ப்போன ஷேர் மார்கெட்டில் சூதாட்டம் போல பணத்தையெல்லாம் போட்டுப்போட்டு, மார்க்கெட் சரிவினால் எவ்வளவோ நஷ்டங்கள் பட்டு எவ்வளவோ அடிகள் வாங்கியிருந்த எனக்கு,  நானே வலுவில் இறங்கி வந்து குறைந்த வட்டிக்கு பேங்க் லோன் சாங்ஷன் செய்கிறேன் உங்களுக்கு என்று சொல்லியும், “அது எனக்குத்தேவையில்லை”என்பதற்கான காரணமாகச்சொன்ன இந்தப்பெரியவரின் ஒவ்வொரு சொல்லும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.


வாழ்க்கையை மிகவும் உஷாராக திட்டமிட்டு, நம் வருமானம் என்ன, நம் தேவைகள் என்ன, வரவுக்குள் எப்படியாவது செலவை அடக்கணும், முடிந்தால் கொஞ்சமாவது சேமிக்கணும், கடனே வாங்கக்கூடாது என்று ஒரு சில கொள்கைகளோடு வாழ்பவர்கள் உண்டு. 

வேறு சிலரின் கொள்கைகளே இதற்கு நேர் மாறாக இருக்கும். கடன் வாங்குவதை இவர்கள் ஒரு பெருமையான விஷயமாகக் கருதுவதுண்டு. கிடைக்குமிடத்திலெல்லாம், கிடைக்கும் வழிகளிலெல்லாம் கடன் வாங்குவார்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கக்கடன் என்று எதற்கும் அஞ்சாமல் எல்லா வழிகளிலும் கடன் வாங்கி, மிகவும் நாகரீகமாக சமூக அந்தஸ்துடன் சொத்து சுகங்களைப்பெருக்கிக்கொண்டு வாழ்வார்கள். அவர்களும் திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்வார்கள். பெரும்பாலும் இவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். தைர்யமாகக்கடன் வாங்குவார்கள்; அதனை சாமர்த்தியமாக அடைப்பார்கள். பணத்தை எப்படிஎப்படியெல்லாமோ புரட்டியெடுத்து, ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத்தூக்கி ஆட்டில் போட்டு, மொத்தத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால், நல்ல செழிப்பான நிலமைக்கும் வந்து விடுவார்கள்.

திட்டமிடாமல் நெடுகக்கடன் வாங்கி, அவற்றை ஏதேதோ வழிகளில் செலவுகள் செய்து, கடனிலிருந்து மீண்டு வரவும் தெரியாமல், ஒரு சிலரின் எல்லாத்திட்டங்களும் தோல்வியடைந்து கடைசியில் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாவதும் உண்டு. உலகம் பலவிதம்.  

என்னுடைய தந்தை வேடிக்கையாக ஒரு கதை சொல்லுவார்.  ஒருவன் வியாபாரி. அவனது வியாபாரம் காட்டிலிருந்து யானையைப்பிடித்து வந்து பழக்கி விற்பனை செய்வது.  

அவன் மற்றொருவனிடம் “யானை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுமா? விலைக்கு வாங்கிக்கொள்கிறாயா” என்று கேட்டானாம். 

“யானையைக்கட்டி எவன் தீனி போடுவது, எனக்கு வேண்டாம் அது” என்றானாம்.

“யானைக்கான பணம் நீ உடனே கொடுக்கணும் என்பதில்லை; ஏதோ இருப்பதைக்கொடு, மீதியை தவணை முறையில் மெதுவாகத்தந்தால் போதும்” என்றானாம் அந்த வியாபாரி.

”அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்டவன், அப்போ ஒரு யானைக்கு இரண்டு யானையாக என் வீட்டு வாசலில் கட்டிப்போடு” என்றானாம்.

இந்தக்கதை ஒரு வேடிக்கைக்காகச் சொல்லப்பட்டாலும், ஜனங்களில் ஒரு சிலர் இது போன்ற குணாதிசயம் உள்ளவர்கள். தனக்கு அந்தப்பொருள் தேவையா தேவையில்லையா என்று யோசிக்காமலேயே, கடனாகத்தரப்படுகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு எது வேண்டுமானாலும், எவ்வளவு அளவு வேண்டுமானாலும் வாங்கிக்குவித்துவிடுவார்கள். எதையும் திட்டமிடாமல் கடைசியில் திண்டாடுவார்கள்.   
  

ஒரு கடை என்று வைத்துவிட்டால், கடை வாடகை, எலெக்ட்ரிக் பில்லு என்று பணத்தை எடுத்து வைக்கணும். நாற்காலிகள் மேஜைகள் என்று வாங்கிப்போட்டு அவற்றையும் பராமரிக்கணும். சர்வர்கள், க்ளீனர்கள், உணவுப்பண்டங்கள் தயாரிப்பவர்கள் என அனைவருக்கும் சம்பளம் கொடுக்கணும். வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி, தண்ணீர் வரி, லைஸன்ஸ், சுகாதார இலாகா கெடுபிடிகள் என பல தொல்லைகளுக்கு ஆளாகணும்.

பலவகை டிபன்கள் செய்து அவை மீந்து போகாமல், ஊசிப்போகாமல், மாவுகள் புளித்துப்போகாமல் பாது காக்கணும். அவற்றைப்பாதுகாக்க வேண்டி ஓரிரு குளிர்சாதனப்பெட்டிகள் வாங்கணும். அதிக அளவில் சாமான்கள் வாங்கி, அவற்றை எலி கடிக்காமல் பாதுகாக்க பலவித அல்லல் படணும்.

ஏதோ வந்தோமாம்; ஒருவருக்கொருவர் உதவியாக இருவர் மட்டும் சின்ன அளவில் ரோட்டோரமாக வியாபாரம் செய்தோமாம்; அன்றாடம் ஏதோ லாபம் பார்தோமாம் என்று போக நினைக்கும். இந்தப்பஜ்ஜிக்கடைப் பெரியவரின் பேச்சில் இருந்த நியாயத்தை என்னால் உணர முடிந்தது.


என்னதான் பேங்கில் மிகப்பெரிய ஆபீஸர் பதவி நான் வகித்தாலும் ஷேர் மார்க்கெட் பைத்தியமாக இருந்த எனக்கு “பேராசைப் பெரு நஷ்டம்” என்பது புரிய ஆரம்பித்த காலகட்டத்தில் தான், நல்லவேளையாக என் தகப்பனார் போன்ற இந்தப்பெரியவரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக்கிட்டியது.


“சிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்”  “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.



என்னதான் இருந்தாலும் கடும் உழைப்பும், கொள்கைப்பிடிப்பும் கொண்டு, வாழ்க்கையில் நாணயமாக, நேர்மையாக வாழ்ந்து, தன் கடும் உழைப்பினால் மட்டுமே வெற்றிபெற்றுள்ள இவரின் கைப்பட செய்துதரும் “பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் ..... அதன் ருசியே தனி தான்” என்று புரிந்து கொண்டேன்.   


-o-o-o-o-o-

முற்றும்

-o-o-o-o-o-

    

56 comments:

  1. அகலக்கால் வைக்காது நிதானமாக நடப்பவர்கள்
    அலுப்பில்லாமல் நெடுந்தூரம் நடப்பதைப்போல
    தன் நிலைக்குமேல் ஆசை கொள்ளாதவர்களும்
    தன் வரவுக்குமேல் செலவு செய்யாதவர்களும்தான்
    உண்மையில் வாழும் வகை அறிந்தவர்கள்.
    இதை மிக அழகாக எளிமையாக சொல்லிப்போகும் உங்கள்
    பஜ்ஜி சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  2. அனுபவப் பாடத்தின் மூலம் பஜ்ஜி சுவை மிக கூடி விட்டது. கதை கொஞ்சம். சிந்தனைத் துளிகள் ஏராளம்.

    ReplyDelete
  3. கதை அருமையோ அருமை. கருத்துச் செறிவான கதை.

    உங்களின் எல்லா கதைகளுமே ஒரு கதாப்பாத்திரம் கதை சொல்லுவது போலவே உள்ளது. வேறு வடிவத்தில் முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  4. என்னவொரு பக்குவமான, அனுபவபூர்வமான, தெளிவான, அழகானப் பேச்சு இவருடையது என்று நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.//

    தங்களின் அருமையான அறிவுப்பூர்வமான கதையும் ஆச்சரியமே.

    ReplyDelete
  5. சிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்” “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.//

    அருமையான வாழ்வியல் தத்துவம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. இவரின் கைப்பட செய்துதரும் “பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் ..... அதன் ருசியே தனி தான்” என்று புரிந்து கொண்டேன்.//
    தங்களின் கைப்பட சமைத்த அருமையான கருத்துரை பொதிந்த கதை தனித்தன்மையுடன் திகழ்கிறது.

    ReplyDelete
  7. @Blogger கலாநேசன் said...

    கதை அருமையோ அருமை. கருத்துச் செறிவான கதை.

    உங்களின் எல்லா கதைகளுமே ஒரு கதாப்பாத்திரம் கதை சொல்லுவது போலவே உள்ளது. வேறு வடிவத்தில் முயற்சி செய்யுங்கள்.//

    அதுவே கதைக்கு ஒரு அந்யோந்யத்தைக் கொடுப்பதாக உணர்கிறோம்.

    ReplyDelete
  8. மனிதர்களில் இப்படியும் உண்டு. அப்படியும் உண்டு என சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். கலாநேசன் சொல்லி இருப்பது போல கதை சொல்லும் பாணியை தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  9. //வாழ்க்கையை மிகவும் உஷாராக திட்டமிட்டு, நம் வருமானம் என்ன, நம் தேவைகள் என்ன, வரவுக்குள் எப்படியாவது செலவை அடக்கணும், முடிந்தால் கொஞ்சமாவது சேமிக்கணும், கடனே வாங்கக்கூடாது என்று ஒரு சில கொள்கைகளோடு வாழ்பவர்கள் உண்டு//

    வாழ்க்கையின் முறையை -அதை
    வாழும் முறையை
    வசீகர
    வார்த்தைகளில்
    வித்தியாசமாய்
    விவரித்த்து
    வியாபாம்
    வாழ்க்கை பாடம் படித்தோம் ஐயா
    நன்றி.

    ReplyDelete
  10. சுவையான விதவிதமான பஜ்ஜிகள் போல வரவு செலவு பற்றியும் வெவ்வேறு சிந்தனைகளுடன் உங்களின் எதிரில் உட்கார்ந்து கதை கேட்கும் பாணியில் அருமையாய்.

    சொல்லும் வடிவத்தில் மாறுதல் கொண்டு வாருங்கள். முன்னமேயே நான் ஒருதடவை சொன்னது போல் தன்மைஒருமையிலேயே கதை சொல்வது ஒரு கட்டத்துக்கு மேல் போர் அடிக்கத் தொடங்கிவிடும்.

    ReplyDelete
  11. பஜ்ஜி காரனிடன் இருந்து நல்ல பாடம்

    ReplyDelete
  12. ஐயா
    முதலிலேயே தங்களுக்கு
    நன்றி தெரிவத்துக் கொள்கிறேன்
    எப்படியோ வாழ்ந்தால் சரி
    என்னும் இன்றைய உலகத்தி்ல்
    இப்படித்தான் வாழ வேண்டுமென
    நினைக்கும் இலட்சியவாதிகளுக்கு
    இக் கட்டுரை வழிகாட்டி
    வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. தேவைக்கு மேல் சேர்ப்பவன் திருடன் என்ற வாக்கியம்தான் நினைவிற்கு வருகிறது. உண்மையில் திருடன் அல்ல திருட்டு கொடுத்தவன். இது போன்ற விசயங்கள் தங்களின் மூலம் வரும்போது அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  14. கதையின் கருத்து மிகவும் பிரமாதம் சார்.எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் புரிவதில்லை.அதை புரிந்துகொண்டால் அந்த பெரியவரை போல நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என அழகாக சொல்லியுள்ளீர்கள்.நன்றி..

    ReplyDelete
  15. " தனக்கு அந்தப்பொருள் தேவையா தேவையில்லையா என்று யோசிக்காமலேயே, கடனாகத்தரப்படுகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு எது வேண்டுமானாலும், எவ்வளவு அளவு வேண்டுமானாலும் வாங்கிக்குவித்துவிடுவார்கள். எதையும் திட்டமிடாமல் கடைசியில் திண்டாடுவார்கள்."

    உண்மையான கருத்து சார். இங்கு தில்லியில் இருப்பவர்களை நினைத்து இப்படித்தான் புலம்பிக் கொண்டு இருப்பேன்.

    இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே சுகம்.

    நல்ல கதை.

    ReplyDelete
  16. வாழ்க்கை பாடத்தை சொல்லி தந்த
    கருத்தாழம்மிக்க கதை படித்த திருப்தியை தந்து விட்டீர்கள் அய்யா

    ReplyDelete
  17. அனைவரும் உணர வேண்டிய அனுபவ பாடம் உள்ள கதை.

    ReplyDelete
  18. எங்கேயோ ஆரம்பிச்சு எப்படியோ முடிஞ்சி போச்சு. பஜ்ஜியும் நல்லா இருந்தது. கதையும் நல்லா இருந்தது.

    ReplyDelete
  19. பஜ்ஜின்னா பஜ்ஜிதான்!! :-)

    ReplyDelete
  20. மேலே மொறு மொறுவென்று பொன்முறுவலாய்.. சுவையாய் ஒரு பதிவு.
    பஜ்ஜக்னு மனசுல ஒட்டிகிச்சு.

    ReplyDelete
  21. நான் மத்தியானம் போட்ட கமெண்ட் பஜ்ஜி சாப்பிட போயிடுச்சோ என்னமோ தெரியலையே... :)

    அளவுக்கு அதிகமாய் சம்பாதிக்க ஆசைப் படக்கூடாது என்ற நல்ல கருத்தினை பஜ்ஜி கடைக்காரர் மூலம் அழகாய் சொல்லிட்டீங்க சார்.

    ReplyDelete
  22. இனிமே புஜ்ஜின்னு புசுபுசுமுடியோட நாய்க்குட்டியைப் பார்த்தாக் கூட எனக்கு உங்க பஜ்ஜி ஞாபகம் தான் வந்துடும்.. கதையோட தாக்கம் அப்ப்டி!

    ReplyDelete
  23. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பொருளை எடுத்துக்கொன்டு அதைப்பற்றி விஸ்தாரமாய்ச் சொல்லுவது உங்கள் பாணி! மூக்குத்தியாகட்டும், சுடிதாராகட்டும், பட்டுப்புடவையாக இருக்கட்டும், பஜ்ஜியாகட்டும், எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு ஆய்வே செய்து சமர்ப்பிப்பது போல மிகுந்த சுவை பட எழுதுவது உங்களின் எழுத்தின் சிறப்பு! அதனாலோ என்னவோ பஜ்ஜி மிக மிக சுவையாக இருந்தது! வழக்கம்போல அருமையான அனுபவப்பாடமும் இறுதியில் இருந்தது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. அருமையான படைப்பு. பொதுவாக பஜ்ஜிக்குள் எண்ணெய் இருக்கும், வாழைக்காயோ, வெங்காயமோ போன்ற காய்கறிகள் இருக்கும், சூடு இருக்கும், சுவையும் இருக்கும்.

    உங்களின் இந்தப் பஜ்ஜீன்னா பஜ்ஜிதான் என்ற படைப்புக்குள் வாழ்வியலின் அனைத்துத்தத்துவங்களும் ஒருங்கே அமைந்துள்ளதில், அதன் சுவையை பன்மடங்கு கூட்டி எங்களைப் பரவசமூட்டி விட்டது.

    நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  25. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பொருளை எடுத்துக்கொன்டு அதைப்பற்றி விஸ்தாரமாய்ச் சொல்லுவது உங்கள் பாணி! தன் வரவுக்குமேல் செலவு செய்யாதவர்களும்தான்
    உண்மையில் வாழும் வகை அறிந்தவர்கள்.
    இதை மிக அழகாக எளிமையாக சொல்லிப்போகும் உங்கள்
    பஜ்ஜி சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  26. உங்கள் கதையில் வரும் வங்கி அதிகாரி மாதிரி எல்லோருமே வங்கிகள் கடனை உதிவியாகச் செய்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
    கடன் கொடுப்பது தான் வங்கிகளின் பிரதானத் தொழில். கடன் வங்குபவர்கள் அவர்களுடைய மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள். இவர்களின் வட்டிப் பணம் தான் வங்கிகளின் வருமானம் என்பது திறமையாக மறைக்கப் பட்ட விஷயம்.

    பஜ்ஜிக்கடைக்காரர் பஜ்ஜியை உதிவியாகத் தரவில்லை. அதே நேரத்தில் வாடிகையாளர்களின் திருப்தியையும், தன் தொழிலையும் பெரிதும் மதிக்கிறார். இந்த மரியாதையே அவருக்கு செல்வத்தையும் சுகத்தையும் தந்திருக்கிறது.

    மக்களின் வரட்டு கவுரவம் வங்கிகளுக்கு மிக சாதகமான விஷயம். பஜ்ஜிக்கடைக்காரர் இது இல்லாமல் இருந்ததால் வங்கியிடமிருந்து தப்பித்துக் கொண்டார்.

    வங்கிகள் வலிய வந்து கடன் கொடுத்தாலும், அதை நமக்கு நிகர லாபம் கிட்டும் வண்ணம் பயன் படுத்தத் தெரியாது என்றால், கடன் வாங்கமல் இருப்பதே மேல் என்ற தத்துவம் விளக்க ஒரு சிறந்த கதையாக நான் எடுத்துக் கொள்கிறேன்.

    MICROSOFT நிறுவனத்திற்கு கடன் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் கருத்துக்களை கதைகளின் மூலம் சொல்லும் உங்கள் பணி சமூதாயத்திற்கு உண்மையான உதவி.

    ReplyDelete
  27. “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.//He is really great!!!!. பாதி கதை படிச்சிட்டு வரும்போதே அந்த பழமொழி நினைவில் வந்தது .அதையே நீங்களும் மேற்கோள் காட்டியிருக்கீங்க .
    very nice.

    ReplyDelete
  28. பஜ்ஜி சுவையுடன் கருத்தையும் சொல்கிறது.

    ReplyDelete
  29. கதை அருமையோ அருமை. கருத்துச் செறிவான கதை.

    ReplyDelete
  30. நிறைய படிப்பினைகள் இழைந்திருக்கும் பஜ்ஜிக்கதை. கைவண்டிக் கடையைக் குலத்தொழிலாக மதிக்கும் நபர்கள் இருப்பது வியப்பு! போலிகளில் தொலைந்து போனவர்களுக்கு இடையில் பஜ்ஜிக்காரர்கள் அவ்வப்போது தென்படுவது புழுக்கத்தில் இதம் கொடுக்கும் காற்றோட்டம்.

    ReplyDelete
  31. இல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ப‌ண‌த்தை விட்டுப் பெற‌ முடியாத‌ பாட‌த்தை ஒரு ப‌ஜ்ஜிக் க‌டைப் பெரிய‌வ‌ர் மேலெழுந்த‌ ந‌ல்லெண்ண‌த்தாலும் இர‌க்க‌த்தாலும் வ‌லிய‌ க‌ட‌ன் த‌ர‌ அழைத்துப் பெற்றிருக்கிறீர்க‌ள்! தாங்க‌ள் க‌ற்ற‌ பாட‌த்தை, க‌தையாக‌ட்டும் சொந்த‌ அனுப‌வ‌மாக‌ட்டும்... எங்க‌ளுக்கும் ப‌கிர்ந்த‌ த‌ங்க‌ள் நேர்மை என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு சார்.

    ReplyDelete
  32. தங்களது அனுபவத்தின் மூலம் நாங்களும் பாடம் கற்றுக் கொண்டோம்.
    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  33. பஜ்ஜி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு
    ரொம்ப பசிக்குது
    கொஞ்சம் வெறும் மோர் சாதம் ஊறுகாயோட
    போட்டால் கூட போதும்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    ReplyDelete
  34. பஜ்ஜிக்கார பெரியவர், நிச்சயம் லோன் பெற்றுக் கொள்ள மறுப்பார் என்று பாதிக் கதையிலேயே தெரிந்து விட்டாலும், என்ன காரணத்தைச் சொல்லி மறுக்கப் போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பே ஆவலாகி சுவையை கூட்டிவிட்டது. கதைக்கான உருவத்தை அங்கங்கே வெட்டி ஒட்டி 'சிக்'கென அமர்க்களபடுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  35. அன்பின் வை.கோ - அளவிற்கு மீறி ஆசைப்பட வேண்டாம் - நிறைவான வாழ்க்கை - இறைவன் கொடுத்த வரம் - போதுமென்ற மனம் - பெரியவரின் நிலை - அழகாக விளக்கப்பட்ட கதை. நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  36. அன்புடன் வருகை தந்து,
    பல்வேறு அரிய பெரிய
    கருத்துக்கள் கூறி,
    இந்த என் சிறுகதையின் இறுதிப் பகுதியை உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டியுள்ள,
    அன்பான சகோதர சகோதரிகளுக்கு
    என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  37. இன்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  38. சுவையாக ஆரம்பித்த பஜ்ஜிக்கதை நெகிழ்வாக முடித்து விட்டிர்கள்.

    //சிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்” “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.
    // உங்களுக்கு மட்டுமல்ல.எங்களுக்கும்தான்:)

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஸாதிகா மேடம். வாங்க, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும், நெகிழ்வான கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

      மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      vgk

      Delete
  39. பஜ்ஜியை வைத்துக் கொண்டு அருமையான கதை எழுதி, அழகாக ஒரு நீதியும் சொல்லி விட்டீர்கள்.

    SIMPLY SUPERB

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI February 13, 2013 at 3:42 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பஜ்ஜியை வைத்துக் கொண்டு அருமையான கதை எழுதி, அழகாக ஒரு நீதியும் சொல்லி விட்டீர்கள்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. மனமார்ந்த நன்றிகள்.

      // SIMPLY SUPERB //

      ;)))))) Thank you very much, Madam.

      Delete
  40. ஆகா அருமை ஐயா! இது வெறும் கதையும் அல்ல. சொல்ல வார்த்தையும் இல்ல. அனைவரும் புரிந்து கொள்ள தேவையான பதிவு. நச்சுனு இருக்கு. சுவையான பஜ்ஜி தான் இது. நன்றி ஐயா.

    ReplyDelete
  41. வேல் September 10, 2013 at 6:53 AM

    வாருங்கள், வணக்கம். இந்த என் பழைய பதிவுக்கு திடீரென்ற தங்களின் வருகை எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது.

    //ஆகா அருமை ஐயா! இது வெறும் கதையும் அல்ல. சொல்ல வார்த்தையும் இல்ல. அனைவரும் புரிந்து கொள்ள தேவையான பதிவு. நச்சுனு இருக்கு. சுவையான பஜ்ஜி தான் இது. நன்றி ஐயா.//

    மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  42. அன்பின் வை.கோ - ஏற்கனவே மறுமொழி உள்ளது - 20.07.2011 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  43. cheena (சீனா)September 10, 2013 at 9:42 AM
    அன்பின் வை.கோ - ஏற்கனவே மறுமொழி உள்ளது - 20.07.2011 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    அன்பின் திரு சீனா ஐயா, வணக்கம் ஐயா.

    ஆம் ஐயா, ஏற்கனவே தங்களின் கருத்துக்கள் பதிவாகியுள்ளன ஐயா. மீண்டும் வருகைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  44. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் பெரியவர் மிக உயர்ந்தவர் ஆகிவிட்டார்.

    ReplyDelete
  45. பஜ்ஜியை மையமாக வைத்து கருத்துள்ள ஒரு கதை சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  46. பஜ்ஜி கட ஆளு நாயமா பேசினாரு. இந்தாளு பண உதவி வோணுமான்னு கேட்டதுக்கப்பாலகூட மறுத்துட்டாரு.நல்ல ஆளு. இந்த கைவண்டில பலகாரம் சுடுரவங்க அல்லாருமே சொல்லி வச்சுகிட்டாப்ல சாக்கட ஓரமாவே நிக்குராங்களே.

    ReplyDelete
  47. இவ்வளவு கைபக்குவம் உள்ளவரு அதிக வருமானத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது பெரிய விஷயம்தான் வலிய உதவி செய்ய தயாராக இருந்தும் பெருந்தன்மையுடன் மறுத்து சொன்னது சிறப்பு.

    ReplyDelete
  48. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து...புரிகிறது..

    ReplyDelete
  49. //நீங்கள் எனக்குக் கொடுப்பதாகச்சொல்லும் லோன் பணம், உண்மையிலேயே கஷ்டப்படும், வேறு யாருக்காவது ஒருவேளை அவசியமாகத் தேவைப்படலாம். அதுபோல யாருக்காவது உதவி செய்தீர்களானால், அவா குடும்பமும் பிழைக்கும், உங்களுக்கும் ஒரு புண்ணியமாப்போகும்; //
    அருமை! சிந்திக்க வைத்த கதை!


    ReplyDelete
  50. பஜ்ஜியும் படிப்பினையும் நல்லா இருந்தது.

    நாம மாத்திரம் அல்ல, நமக்கு முன்னோடியா கோபு சார் இருந்திருக்கிறார் என்பதை 40 லட்சம் நஷ்டக் கதையில் கண்டுணரமுடிந்தது.

    லோனோ, கிரெடிட் கார்டு வைத்திருப்பதோ பெரிய குற்றம் என்றே இதுவரை என் மன'நிலை. 'நாயை அடிப்பானேன்....... சுமப்பானேன்' கதைதான் லோன் வாங்கும் பெரும்பாலானவர்களின், கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

    எளிய மனிதரின் contented மன'நிலை நல்லா இருந்தது.

    வழக்கம்போல் உங்கள் நகைச்சுவை நடையை, 'தொஞ்ச பஜ்ஜியில்' கண்டுகொண்டேன்

    ReplyDelete
  51. 'நெல்லைத் தமிழன் November 1, 2016 at 2:16 PM

    வாங்கோ, வணக்கம்.

    //பஜ்ஜியும் படிப்பினையும் நல்லா இருந்தது.//

    மிக்க மகிழ்ச்சி. :)

    //நாம மாத்திரம் அல்ல, நமக்கு முன்னோடியா கோபு சார் இருந்திருக்கிறார் என்பதை 40 லட்சம் நஷ்டக் கதையில் கண்டுணரமுடிந்தது.//

    அது ஒரு காலம். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அதில் ஓர் 20 சதவீத நஷ்டங்களுடன் புத்திக்கொள்முதல் கிடைத்து அதிலிருந்து முற்றிலும் வெளியேறியுள்ளேன்.

    டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு எதுவும் நான் வைத்துக்கொள்வது இல்லை. ATM கார்டு மட்டுமே, அதுவும் எப்போதாவது தான் Very Rare ஆக ஆபரேட் செய்வேன். ஓரிரு மாதச் செலவுகளுக்கான பணத்தை ரொக்கமாகவே கைவசம் எப்போதுமே RESERVE ஆக என்னிடம் (தொஞ்ச பஜ்ஜி போல) வைத்துக்கொண்டிருப்பேன். :)

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  52. பழய பதிவுகளை ஒன்னுவிடாம படித்து ரசித்து வருகிறேன். கொஞ்ச நாளா நெட் பக்கம் வர முடியல. கன்டினியு விட்டுபோச்சு. எந்த பதிவு வரை கமெண்ட் தேடி பார்க்கவே லேட்டாயிடிச்சு. வேற ஒன்னுமில்ல சூடான பஜ்ஜி சாப்பிட்ட உண்ட மயக்கம்தான். கடைக்காரர் உணர்ந்து சொல்லியிருக்கும் விஷயங்கள் நியாயமானதுதான். அகலக்கால் வைத்து அவதி படுவானேன்.. போதுமென்றமனமே சிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 1, 2017 at 5:56 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பழய பதிவுகளை ஒன்னுவிடாம படித்து ரசித்து வருகிறேன்.//

      ஆஹா, சந்தோஷம்.

      //கொஞ்ச நாளா நெட் பக்கம் வர முடியல. கன்டினியு விட்டுபோச்சு. எந்த பதிவு வரை கமெண்ட் தேடி பார்க்கவே லேட்டாயிடிச்சு. வேற ஒன்னுமில்ல//

      இதெல்லாம் மிகவும் சகஜம்தான். அதனால் பரவாயில்லை.

      //சூடான பஜ்ஜி சாப்பிட்ட உண்ட மயக்கம்தான்.//

      ஆஹா :)

      //கடைக்காரர் உணர்ந்து சொல்லியிருக்கும் விஷயங்கள் நியாயமானதுதான். அகலக்கால் வைத்து அவதி படுவானேன்.. போதுமென்றமனமே சிறந்தது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete