என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

VGK 14 - நீ .......... முன்னாலே போனா .......... நா .......... பின்னாலே வாரேன் !
இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 24.04.2014 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 14

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:நீ ..... முன்னாலே போனா .....
நா ..... பின்னாலே வாரேன் !

[சிறுகதைத்தொடர்]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. சுமார் எண்பது வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர் இறங்கி வந்தார். புதிய அட்மிஷன் போலிருக்கு என்று ஏற்கனவே அங்கு தங்கியுள்ள பெரிசுகளாகிய நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.சுமார் ஐம்பது வயதில், அவருடன் கூட வந்த நபர், கையில் பெட்டி படுக்கையுடன், அலுவலகத்திற்குள் சென்று, சம்ப்ரதாயங்களை முடித்து விட்டு, பெரியவரைப் பழி வாங்கி விட்டது போல, ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு, சட்டெனக் காரில் ஏறி புறப்பட்டுச் செல்ல எத்தனிக்கிறார்.

நிச்சயமாக பெரியவரின் மகனாகத்தான் இருக்க வேண்டும். காரில் ஏறிச் செல்லப்போகும் மகனிடம் ஏதோ சொல்லப் பெரியவர் முயற்சிப்பது போலத் தோன்றியது.  தன் மகனை “ஜாக்கிரதையாகப் போயிட்டு வாப்பா” என்று சொல்லத்தான் நினைத்திருப்பார் என்று எங்களுக்குத் தோன்றியது.

“போய்விட்டு வருகிறேன்” என்று கூட தன் தந்தையிடம் சொல்லிக்கொள்ளாத மகனிடம் என்ன பேச்சு என்ற வருத்தத்தில் அவருக்குக் குரலும் வெளிவரவில்லை என எங்களுக்குத் தோன்றியது.

  

பெரியவர் நல்ல உயரம். சிவந்த நிறம். நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் ருத்ராக்ஷக்கொட்டை, படித்தவராகவும், பழுத்த அனுபவம் கொண்டவராகவும், ஓரளவு தன் வேலையைத் தானே செய்து கொள்ளக்கூடிய நிலைமையில் தேக ஆரோக்கியம் கொண்டவராகவும் தோன்றினார். வழக்கம்போல் எங்களில் ஒருவரான அரட்டை ராமசாமி [அரட்டை அரங்கத்தில் பங்கேற்கப்போய் தேர்வு ஆகாமல் திரும்பியதால் இந்தப்பெயர் பெற்றவர்] பெரியவரை கைகுலுக்கி வரவேற்றார். அவர் தங்க வேண்டிய பகுதியையும், சாப்பாட்டு இடம், குளியல் அறைகள், கழிவறைகள் போன்ற மற்ற இடங்களையும் அவருக்குச் சுற்றிக் காண்பித்தார். அந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மற்ற பெரியவர்களையும் அறிமுகப்படுத்தினார். பிறகு பிரார்த்தனைகள் நடைபெறும் அந்தப்பெரிய ஹாலில் உள்ள நாற்காலி ஒன்றில் அமரச்செய்தார். குடிக்க ஒரு டம்ளர் குடிநீர் கொடுத்து உபசரித்தார். 

பெரியவரைப் பற்றிய கதையைக்கேட்க அங்குள்ள அனைவரும் தங்கள் காதைத் தீட்டிக்கொண்டனர். ஒரு சிலர் தங்களின் காது மிஷினை சரிவரப் பொருத்திக் கொண்டனர். 

அரட்டை ராமசாமி பெரியவரை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.

“பூர்வீகம் எந்த ஊரு?”

“தஞ்சாவூர்ப் பக்கம் அய்யம்பேட்டை”

“எவ்வளவு குழந்தைகள்?”

“இரண்டு பையன்களும் ஒரு பொண்ணும்”

“பேரன் பேத்தி எடுத்தாச்சா?”

“ஆஹா; ஆளுக்கு ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை; மூத்தவன் பொண்ணுக்குக் கல்யாணமே ஆயிடுச்சு”

“உங்கள் சம்சாரம்?”

”அவள் போய்ச்சேர்ந்து இன்னியோட பதினைந்து நாள் ஆகிறது”

“மனைவி இறந்து போய் பதினைந்தே நாட்களில், உங்களைப் போய் இங்கு கொண்டு வந்து ..........” அரட்டை ராமசாமி சற்றே இழுத்தார்.

“என் சம்சாரத்தை நானே கொன்று விட்டதாக, என் மேல் ஒரு குற்றச்சாட்டு” பெரியவரின் கண்கள் கலங்கின.

“வருத்தப்படாதீங்கோ; மீதி சமாசாரங்களை நாளைக்கு சாவகாசமாகப் பேசிக்கொள்ளலாம். இப்போது சற்று ஓய்வாகப் படுத்துக்கோங்கோ” அரட்டை ராமசாமி அவரை ஆசுவாசப்படுத்தினார்.

தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.


தொடரும்
 

பகுதி-2


மறுநாள் காலை சர்க்கரை நோயாளி ஒருவருக்கு தினமும் ஊசி போட வரும் கம்பவுண்டர் வர தாமதம் ஆகிவிட்டது. நோயாளிக்கு பசி வந்து மிகவும் படபடப்பாக ஆகி விட்டார். இதைப்பார்த்த, கேள்விப்பட்ட புதிதாக வந்து சேர்ந்த பெரியவர், “ஊசி மருந்தின் அளவுகள் தெரியுமா?” என்று கேட்கிறார். டாக்டர் சீட்டைத் தட்டுத்தடுமாறி அந்த வயதான அம்மாளின் ஒரு பையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறார்கள். 

டாக்டர் சீட்டை வாங்கிப்படிக்கிறார். அதில் காலையில் A10+M20 என்றும், இரவு A10+M5  என்றும் எழுதியுள்ளதைப் [A = Human Actrapid Soluble Insulin Inj. I.P  +  M = Human Insulatard Isophane Insulin Inj. I.P]. புரிந்து கொண்டவர் தன்னிடமிருந்த அதே மருந்துப் புட்டிகள்,  ஒரே ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எரியும் ஊசி சிரிஞ்ச், பஞ்சு, ஸ்பிரிட் முதலியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, பஞ்சில் ஸ்பிரிட்டை கொஞ்சமாக ஊற்றி, மருந்து பாட்டில்களின் ரப்பர் மூடிகளைப் பஞ்சால் துடைத்து விட்டு முதலில் A10 [பத்து ml] அளவும், அதன் பிறகு அதன் தொடர்ச்சியாக M20 [இருபது ml] அளவும் ஊசியால் அழகாக உறிஞ்சி எடுத்துக்கொண்டார்.  

பிறகு அந்த அம்மாளின் கையில் ஒரு சிறு பகுதியை, ஸ்பிரிட் ஊற்றிய பஞ்சால் துடைத்து விட்டு, துடைத்த இடத்தை கையால் உப்பலாகப் பிடித்துக்கொண்டு, ஊசி மூலம் மருந்தை செலுத்தி விட்டார்.  பிறகு பஞ்சால் ஊசி குத்திய இடத்தை ஓரிரு நிமிடங்கள் அழுத்தி அமுக்கிவிட்டு பஞ்சையும், ஊசி சிரிஞ்சையும் தூரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு கையை அலம்பிக்கொள்கிறார். இந்த வயதான காலத்திலும், சற்றும் கை நடுக்கமின்றி அந்த அம்மாவுக்கு வலி ஏதும் தெரியாமல் பெரியவர் ஊசி போட்டு விட்டதை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்து, மன நிம்மதி அடைந்தனர்.

ஊசி போடப்பட்ட அந்த அம்மாவுக்கு உடனடியாக சாப்பிட ஆகாரம் தருவதற்கு ஏற்பாடு செய்கிறார், அந்தப்பெரியவர். ஊசி போட்டு ஆகாரம் உள்ளே சென்ற அந்த அம்மாவுக்கு படபடப்பு அடங்கி முகத்தில் ஒருவிதத் தெளிவு ஏற்பட்டது. 

பெரியவருக்கு அந்த நோயாளியும் மற்றும் ஒரு சிலரும் நன்றி கூறினார்கள். தன் கைவசம் இருந்த நான்கு பாட்டில் ஊசி மருந்துகளை மட்டும், ஆபீஸ் ரூமில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கச் சொல்கிறார், அந்தப் பெரியவர்.

அனைவரும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபின் வழக்கம் போல் ஓரிடத்தில் கூடி அமர்கின்றனர். 
    
“நல்லவேளையாகத் தெய்வம் போல இந்தப்பெரியவர் இங்கு வந்து சேர்ந்துள்ளார். சுகர் பேஷண்ட்டுக்கு ஊசி போட்டுவிட அனைத்து மருந்துகள், ஊசிகள், பஞ்சு, ஸ்பிரிட் என எல்லாமே கைவசம் வைத்துள்ளார். சரியான நேரத்தில் இன்று அந்த அம்மாவுக்கு தெய்வம் போல் உதவினார். ஏற்கனவே ஒரு முறை இதே போல ஊசி போடவும், டிபன் சாப்பிடவும் லேட்டாகி அந்த அம்மாவுக்கு வியர்த்துக்கொட்டி, படபடப்பாகி, மயக்கமே போட்டு விழுந்து, பிறகு நாமெல்லாம் பயந்து போய், ஆஸ்பத்தரிக்கு தூக்கிப்போனோமே” என்று ஒரு சிலர் நினைவு கூர்ந்தனர். 

”அந்தக் கம்பவுண்டர் எப்போ வந்து, எப்போ ஊசி போட்டு, அந்த அம்மா எப்போ டிபன் சாப்பிடுவது? பசியில் துடித்து, மயக்கமாகி அந்த அம்மா பிராணனே இந்நேரம் போய் இருக்கும்; நல்லவேளையாக இந்தப்பெரியவர் ....... ” என்று, மற்றொருவர் தன் வீதத்திற்கு அரட்டை ராமசாமியைப் பார்த்து தூபம் போட ஆரம்பித்தார்.

இதுவரை நடைபெற்ற எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்த நம் அரட்டை ராமசாமி, பெரியவரின் கைகளைப்பிடித்துக் குலுக்கி நன்றி கூறிவிட்டு, தன் பேட்டியைத் தொடரலானார்:

“சார், என்ன . . . . டாக்டராக வேலை பார்த்தீர்களோ?” 

“இல்லை, நான் மிலிடரியில் வேலை பார்த்து ரிடயர்ட் ஆன சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர். காஷ்மீர், அஸ்ஸாம், புனே, பஞ்சாப் என பல இடங்களில் வேலை பார்த்துவிட்டு கடைசியாக சென்னைக்கு வந்து செட்டில் ஆனவன்.”

“அப்படியா ... சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டீர்களே, அதனால் தாங்கள் ஒரு டாக்டரோ என்று சந்தேகப்பட்டேன்”.

“நானும் என் மனைவியும் கூட டயபடீஸ் பேஷண்ட்கள் தான். நான் இன்று வரை மாத்திரைகளில் மட்டும் சமாளித்து வருபவன். ஆனால் என் மனைவிக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.  

ஆரம்ப காலத்தில் அவளை தினமும் ஆஸ்பத்தரிக்குக் கூட்டிப்போய்த்தான் ஊசி போட்டு வருவேன். தினமும் காலை எழுந்ததும் டிபன் சாப்பிடுவதற்கு முன்பாக ஆஸ்பத்தரிக்குப் போய் ஊசி போட்டு வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  பிறகு நர்ஸ் ஒருத்தியை தினமும் வீட்டுக்கு வரச்சொல்லி ஊசி போட வைத்தேன். அதற்குப்பிறகு அந்த நர்ஸின் அறிவுரைப்படி அவளிடமிருந்து நானே என் மனைவிக்கு ஊசி போடக் கற்றுக்கொண்டேன். 

அதுவும் கடைசி இரண்டு வருஷங்களாக அவளுக்கு இரண்டு வேளைகளும் இன்சுலின் ஊசி போடப்பட வேண்டும் என்று டாகடர் கூறிவிட்டார். அந்த அளவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அவளுக்கு அதிகமாகி விட்டது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானே அவளுக்கு தினமும் ஊசி போட்டு வந்ததால், இந்த ஊசி போடும் கலை எனக்கு சுலபமாகப் பழகி விட்டது. ஒரு வேளை போட்ட இடத்திலேயே மறுவேளையும் போடாமல், கைகள், கால்கள், தொடை, இடுப்பு, வயிறு என மாற்றி மாற்றி, வலி ஏதும் ஏற்படாதபடி, மிகவும் கவனமாக மெதுவாகப் போட வேண்டியது முக்கியம்”.

“உங்கள் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர்கள், சார்”

“அவள் கொடுத்து வைத்தவள் தான். பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து விட்டாள். என்னைத்தான் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள். என்ன செய்வது? எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” பெரியவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு நிறுத்தினார்.

”அதெல்லாம் சரி தான். ஆனால் அனாதைன்னு இனிமேல் நீங்கள் சொல்லாதீர்கள். இந்த முதியோர் இல்லத்தில் உள்ள நாமெல்லோரும் இனி ஒருவருக்கொருவர் உறவினர்கள் தான். இந்த முதியோர் இல்லத்தின் காலை சாப்பாடு எப்படியிருந்தது? தங்களுக்குப்பிடித்ததாக இருந்ததா? என்று பேச்சை மாற்றினார் அரட்டை ராமசாமி.
“பரவாயில்லை. நாம் ஏதோ நம்மால் முடிந்த பணம் கொடுத்தாலும், நம் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, ஆட்களைப்போட்டு, நமக்கு வேளா வேளைக்கு, டயப்படி ஏதாவது ஆகாரம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார்களே; அதுவே பெரிய விஷயம் தான். சில வீடுகளில் கூட இதுபோல நேரப்படி ராஜ உபசாரம் நடக்கும்னு சொல்லமுடியாது; 

ஆனால் அந்தக்காலத்தில் என் மனைவி எல்லாமே பிரமாதமாகச் செய்வாள். பால் பாயஸம், நெய் மணமும் முந்திரி மணமும் கமழும் ரவா கேஸரி, தேங்காய்+ஏலக்காய்+வெல்லம் கலந்து செய்யும் இனிப்பு போளி, பெருங்காய மணத்துடன் காரசாரமாகச் செய்யும் அடை, தேங்காய் துவையல், நெய்யில் வறுத்த முந்திரி கலந்த தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பொரித்த அரிசி அப்பளம், வடகம், ஒட்டலுடன் கூடிய குழம்புமா (பச்சரிசி மாவு) உப்புமா, பஜ்ஜி, வடை, கெட்டிச்சட்னி என வாய்க்கு ருசியாக ஏதாவது தினமும் செய்து கொடுத்து அசத்துவாள்;

அவற்றை இப்போது நினைத்தாலும் நாக்கில் ஜலம் ஊறுகிறது. தினமும் மாலை வேளையில் நானும் என் மனைவியும் ஒரு நீண்ட வாக்கிங் போய்விட்டு கப் ஐஸ் சாப்பிட்டு விட்டு வருவோம். அவளுக்கு ஐஸ் கிரீம் என்றால் உயிர். பேமிலி பேக் வாங்கி வந்து குளிர் சாதனப்பெட்டியில் அடுக்கி வைத்த நாட்களும் உண்டு.

இமாம்பஸந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமேனியா என்று பலவித ருசியான மாம்பழங்கள், பன்ருட்டிப் பலாப்பழம், சிறுமலை வாழைப்பழம் என்று மிகவும் ஒஸத்தியான பழங்களை அந்தந்த ஊர்களிலிருந்து வரவழைத்து மிகவும் ரஸித்து ருசித்து உண்பவள் என் மனைவி. அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.

தொடரும்


  


பகுதி-3


”ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் என் மனைவியின் கால் விரல் கிடுக்கினில் ஒருவித அரிப்பும் புண்ணும் [சேற்றுப்புண் போல] ஏற்பட்டு ஆறாமல் இருந்த நிலையில் டாக்டரிடம் கூட்டிச்சென்ற போது, ரத்தப்பரிசோதனை செய்ததில், சர்க்கரை வியாதி உள்ளது, அதுவும் மிகவும் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்டதும், நாங்கள் மிகவும் இடிந்து போனோம்.

ஏற்கனவே எனக்கும்,  இருக்க வேண்டிய சாதாரண சர்க்கரை அளவைத்தாண்டி ஓரளவுக்கு கூடுதலாக இருப்பதாகச் சொல்லி மாத்திரைகள் சாப்பிட்டு வர ஆரம்பித்திருந்த நேரம் அது.   

அன்று முதல் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆகாரங்கள் அனைத்துக்கும் தடை விதித்துக்கொண்டோம். மருந்து, மாத்திரைகள், ஊசி, உடற்பயிற்சிகள், ஆகாரக்கட்டுப்பாடு, ஆஸ்பத்தரி வாசம், மாதம் தவறாமல் ரத்தப்பரிசோதனை என அனைத்தும் ஆரம்பித்து, இன்ப மயமான, வாய்க்கு ருசியான, எங்கள் வாழ்க்கையே தொலைந்து போய் விட்டதாக உணர்ந்தோம்.

ஏதோ கொஞ்சமான உணவு, அடிக்கடி உணவு, அளவான உணவு, அடிக்கடி பசி, தாகம், களைப்பு, இதைச் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக்கூடாது என பலவித கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடக்க வேண்டியதாயிற்று. மொத்தத்தில் அதுவரை மிகவும் இனிமையாக இருந்த எங்கள் வாழ்க்கை எங்களுக்கே கசப்பாகத் தொடங்கி விட்டது; 


இந்த சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல. நம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கணையத்திலிருந்து சுத்தமாகச் சுரக்காமலோ அல்லது தேவையான அளவுக்கு சுரக்காமலோ உள்ள ஒரு குறைபாடு மட்டுமே;

இந்தப் பிரச்சனை ஒருவருக்கு வருவதற்கு இன்னதான் காரணம் என்று உறுதியாக யாராலும் சொல்லவே முடியாது. இன்ன வயதில் தான் இந்த குறைபாடு வந்து தாக்கும் என்றும் சொல்ல முடியாது. பெற்றோர்களுக்கு இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஜோஸ்யம் போல சொல்லுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை அதில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை;


எங்களுக்காவது அறுபது-எழுபது வயதிற்கு மேல் இது ஏற்பட்டுள்ளது. இப்போதெல்லாம் ஏழு வயதான பள்ளிக்குச்செல்லும் சிறு குழந்தைகளுக்கே காலையில் எழுந்ததும் இன்சுலின் ஊசி தினம் போட வேண்டிய சூழ்நிலைகளை நினைத்தால் மிகவும் பாவமாகவும், வருத்தமாகவும் உள்ளது;  

//இந்த சர்க்கரை நோய் வந்தால் கவலைப்பட ஒன்றுமே இல்லை. சுலபமாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.  அது நம் கையில் தான் உள்ளது; 

சர்க்கரை வியாதி வந்துள்ளது என்று தெரிந்து கொண்டு விட்டால், பிறகு அது நாம் உட்காரும் ஒரு நாற்காலி போல. நாற்காலிக்கு நான்கு கால்களும் + நாம் அமரும் இடமும், மிகவும் முக்கியமானவை அல்லவா! 


இதில் மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் போல. மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்பது அதே நாற்காலியின் மற்றொரு கால் போல. உணவுக் கட்டுப்பாடு என்பது அதே நாற்காலியின் மூன்றாவது கால் போல. உடற்பயிற்சி என்பது அதன் நான்காவது கால் போல. இதைப்பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வு என்பது நாற்காலியில் நாம் அமரும் இருக்கைக்கான இடம் போல. 


இதில் எந்தக்கால் சரியில்லாவிட்டாலும், உட்காரும் நம்மை நிச்சயம் கவிழ்த்து விட்டு விடும். அதாவது இந்த சர்க்கரை வியாதியின் நெருங்கிய சொந்தக்காரர்களான ”கண்கள் பாதிப்பு” ; ”கிட்னி பாதிப்பு” ; ”இரத்தக்கொதிப்பு” ; “மாரடைப்பு” போன்றவைகள் நம்மை சுலபமாக வந்தடைந்து பிரச்சனைகளை அதிகரிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள், நான் சொன்ன நாற்காலியின் நான்கு கால்களிலும் அதன் அமரும் இருக்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம் //  


என்றார் ஒரு கருத்தரங்கில் பங்குகொண்டு சொற்பொழிவாற்றிய ஓர் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்;

இதெல்லாம் சொல்லுவதோ கேட்பதோ சுலபம் தான் ஆனால் அதை கடைபிடிப்பது மஹாகஷ்டம் என்பது அந்த நிபுணருக்கே நன்றாகத் தெரிந்திருக்கும். ஜீனி, வெல்லம், ஸ்வீட்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடுவதால் மட்டும் சர்க்கரை வியாதி வருவதில்லை. இவற்றையெல்லாம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் மட்டும் அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவதும் இல்லை; 

நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி, கோதுமை, பருப்பு, கிழங்கு வகைகளும், மா, பலா, வாழை போன்ற அனைத்து பழ வகைகளிலும் கூட சர்க்கரைச் சத்து நிரம்பித்தான் உள்ளது; 


நார் சத்துக்கள் நிரம்பிய காய்கறிகள் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு சின்ன கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு ஸ்பூன் கொத்துக்கடலை சுண்டல் சாப்பிடுங்கள், முளைகட்டிய பயிறு + வெந்தயம் நிறைய சாப்பிடுங்கள் என்று ஏதேதோ உணவு முறைகளைக் கடைபிடிக்கச் சொல்வார்கள்; 

ஒரு வேளைக்கான உணவாக இரண்டே இரண்டு இட்லிகளோ அல்லது ஒரே ஒரு தோசையோ அல்லது அரையே அரை அடை மட்டுமோ இதில் ஏதாவது ஒன்று மட்டுமே சாப்பிடுங்கள்; அதுவும் தொட்டுக்கொள்ள இந்த தேங்காய் சட்னி மட்டும் கூடவே கூடாது என்று ஏதேதோ ஆலோசனைகள் வழங்குவார்கள்; 


இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன? பஞ்சுபோன்ற சூடான சுவையான இட்லிகளாக இருந்து, அதுவும் தேங்காய்ச் சட்னி, சாம்பார் கொத்சு, மிளகாய்ப்பொடி எண்ணெயுடனும் சூப்பராக இருந்தால், தலையணிக்கு பஞ்சு அடைப்பது போல ஒரு பத்தோ அல்லது பன்னிரெண்டோ உள்ளே போனால் தான், போதும் என்று சொல்லவே தோன்றும்; கை அலம்பியவுடன் சாப்பிட்டது ஜீரணமாக உடனே சூடான சுவையான டிகிரி காஃபியைத் தேடி நம் நாக்கு அலையும்.

இது போல வக்கணையாக சாப்பிட்டுப் பழகிய எங்களைப்போய், ஒரு இட்லி அல்லது இரண்டு இட்லி அதுவும் சட்னி இல்லாமல் என்றால் என்ன கொடுமை இது பாருங்கள்! 

காரசாரமாகச் ’சட்னி’ இல்லையேல் ’பட்னி’ என்று வீர வசனம் பேசுபவர்கள் நாங்கள்; வாய்க்கு ருசியானவற்றைச் சாப்பிடக்கூடாது என்று தவிர்த்து விட்டு, பிறகு வாழ்ந்து தான் என்ன பயன்” என்றார் அழாக்குறையாக, அந்தப்பெரியவர்.  

பெரியவருக்கு மிகவும் ருசியாக தன் மனைவி கையால் செய்து சாப்பிட்ட, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து, முட்டி மோதி கண்களில் கண்ணீர் தளும்பியது.

அரட்டை ராமசாமி அவரை அன்புடன் ஆதரவாகக் கட்டிப்பிடித்து “வருத்தப்படாதீர்கள், ஐயா; இங்குள்ள எல்லோரிடமுமே,  இது போன்ற பல பசுமை நினைவுகளுடன் கூடிய வாழ்க்கையின் ஒரு பக்கமும், மீளாத்துயருடன் கூடிய இருண்ட மறுபக்கமும் இருக்கத்தான் செய்கிறது” என்று சொல்லி அவரை சற்றே ஆசுவாசப்படுத்தி, குடிக்க குடிநீர் அருந்துமாறுச்சொல்லி, தன் பேட்டியைத் தொடரலானார்.

கதையின் முக்கியக் கட்டமான ’இவர் மனைவியை இவரே கொன்று விட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது’ என்று இவர் நேற்று சொன்ன விறுவிறுப்பான பகுதி எப்போது தொடரும் என்ற ஆவலில் அங்குள்ள பெரியவர்கள் அனைவருமே ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.   

“தங்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் என்று சொன்னீர்களே! அவர்களில் யாரும் உங்களை அவர்களுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லையா?” அரட்டையார் தொடர்ந்து வினவினார்.

“நான் ஆரம்ப நாட்களில், என் குழந்தைகளிடம்,  சற்று கண்டிப்பும் கறாருமாக இருந்து விட்டேன். நான் மிலிடரியில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வேலை பார்த்ததால், நல்லதொரு கட்டுப்பாட்டுடன் என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க விரும்பி விட்டேன். என்னதான் கட்டுப்பாட்டுடன் நான் அவர்களை வளர்த்து ஆளாக்கினாலும், அப்பாவைவிட அம்மாவிடமே அவர்களுக்குப் பிரியம் அதிகம். அனைவருமே அம்மா செல்லம்; 

என் மனைவி, தன் குழந்தைகளை அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். குழந்தைகளுக்கு எப்போதுமே பரிந்து தான் பேசுவாள். தன் பிள்ளைகள் மட்டுமின்றி தன் மருமகள்களையும் தன் சொந்த மகள்கள் போலவே பாராட்டி, சீராட்டி, அவர்களிடமும் மிகுந்த அன்பு செலுத்தி நல்ல பெயர் வாங்கிக்கொண்டவள். அதுபோலவே எங்களுக்கு வாய்த்த மாப்பிள்ளையும், “என் மாமியாரைப் போல தங்கமான மனுஷி இந்த உலகத்தில் வேறு யாரும் உண்டா!” என்று புகழ்ந்து தள்ளுபவர். 

இதுபோல அனைவரையும் அரவணைத்துச் சென்று, அன்பு செலுத்தி, அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது என் மனைவிக்கு மட்டுமே வாய்த்த கை வந்த கலை;

எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும்; 

மற்ற எல்லோரிடமும் பேரன்பு செலுத்துவது போல நடிக்கத் தெரியாது. என் பிறவி குணமும் சுபாவமும் அது போலவே உள்ளது; திடீரென்று அவற்றை என்னால் மாற்றிக்கொள்ளவா முடியும்?” இவ்வாறு தன் வாழ்க்கை அனுபவங்களை சொல்லிக்கொண்டே வந்த பெரியவர் சற்றே நிறுத்தி எழுந்து நின்றார்.  

சற்று நேரம் காலாற நடந்து விட்டு வருவதாகச் சொல்லி, அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளியே புறப்பட்டுப்போய் விட்டார்.

நேற்று அந்தப்பெரியவர் சஸ்பென்ஸுடன் முடித்த இடத்திலிருந்து கதையைத் தொடராமல் வேறு ஏதேதோ விஷயங்களுக்குத் தாவியது, கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.

தொடரும் 
     

பகுதி-4

அந்த முதியோர் இல்ல வளாகத்தை ஒட்டிய மற்றொரு கட்டடத்தில், இளஞ் சிறுவர்களுக்கான வேத பாடசாலை ஒன்று நடந்து வந்தது. அங்குள்ள சிறுவர்களுக்கு வேத பாடங்களுடன் தமிழ், கணிதம், ஆங்கிலம், கணிணி முதலியனவும் போதிக்கப்பட்டு வந்தன.அங்கு நுழைவாயிலில் வைத்திருந்த மிகப்பெரிய விளம்பரத்தை, பெரியவர் நிறுத்தி நிதானமாக வாசிக்கத் தொடங்கினார். மறுநாள் முதல் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு ஒரு பிரபல பண்டிதர் வருகை புரிய உள்ளதாகவும், பகல் முழுவதும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக மூல பாராயணம் நடைபெறப்போவதாகவும், இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மேற்படி பண்டிதரால் ஸப்தாக உபன்யாசம் [கதையாகச் சொல்லுதல்] நடைபெறப் போவதாகவும் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது.   விளம்பரத்தைப் பார்த்த பெரியவருக்கு மிகவும் மகிழ்ச்சி எற்பட்டது. முதியோர் இல்லத்திற்குத் திரும்பிய அவர், மற்ற அனைவரிடமும் இந்த மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். 

”பாகவத ஸப்தாக பாராயணமும் உபன்யாசமும் என்றால் என்ன? அதன் மஹிமை என்ன?” என்று ஒரு சிலர் அவரிடம் விளக்கம் கேட்டனர்.   பெரியவர் சுருக்கமாக விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்:“நம் எல்லோருக்குமே ஓரளவுக்கு நம் பிறந்த நாள், நம் பெற்றோர்கள் வாயிலாகத் தெரிந்திருக்கும். ஆனால் நாம் இறக்கப்போகும் நாள் நம்மில் யாருக்காவது தெரியுமா? என்று கேட்டார், பெரியவர்.“அது தெரியாமல் தானே நாம், வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, இங்கு வந்து திண்டாடிக்கொண்டு இருக்கிறோம்” என்றனர் ஒருசிலர் ஆதங்கத்துடன்.“ஆம் நம் யாருக்குமே நாம் இறக்கப்போகும் நாள் தெரியாது. ஆனால் நம் புராணங்கள் ஒன்றினில் தான் இறக்கப்போகும் நாளை முன்கூட்டியே அறிந்தவர் ஒருவர் இருந்திருக்கிறார்; அவர் பெயர் பரீக்ஷித் மஹாராஜா. மிகவும் பக்திமானான அவருக்கு, இறைவன் அருளால் ஜோஸ்யர் ஒருவர் மூலம், தான் இன்னும் ஏழு நாட்களில் இறக்கப் போகிறோம் என்பதை முன்னதாகவே அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  

மஹாராஜாவாக இருப்பினும், நல்ல திருடகாத்திர சரீரத்துடன் நோய் நொடி எதுவும் இல்லாமல் இருப்பினும் தனக்கே ஒரே வாரத்தில் மரணம் நிகழப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்ட அவருக்குப் பெருந்துயரமும், கவலையையும் ஏற்படலாயிற்று. மாபெரும் ஞானியான ’சுகர்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ’சுகப்பிரும்ம ரிஷி’  என்பவரிடம் தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்; 

அதைக்கேள்விப்பட்ட சுகப்பிரும்ம ரிஷி, பரீக்ஷித் மஹாராஜாவிடம்: 

”ஒருவரின் மரணம் என்பது யாராலும் எந்த காலத்திலும் தடுக்கவே முடியாதது. பிறந்தவர் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். தனக்கு வரப்போகும் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிந்த தாங்கள் உண்மையிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியும், பாக்கியசாலியும் ஆவீர்கள். வேறு யாருக்குமே கிடைக்க முடியாத ஒரு பாக்யம் இது.  யாருக்குமே இதுபோல தனக்கு மரணம் சம்பவிக்கப்போகும் நாள் முன்கூட்டியே தெரியும் சந்தர்ப்பம் அமையவே அமையாது; 

இதிலிருந்து வேறொரு உண்மையும் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது பாருங்கள். அதாவது இன்று முதல் முழுசாக அடுத்த ஏழு நாட்களுக்கு, நீர் உயிருடன் இருக்கப்போகிறீர் என்ற ஒரு பெரிய உத்தரவாதம் கிடைத்துள்ளதே! அது போதுமே! அதுவே நீர் செய்துள்ள மிகப்பெரிய புண்ணியம் தானே!!

இந்த ஏழு நாட்களும் உமக்காக நான் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக பாராயணம் செய்கிறேன்.  நீர் பக்தி ஸ்ரத்தையுடன், இந்த நான் செய்யும் பாராயணத்தை ஸ்ரவணம் செய்தால்  (காதால் கேட்டால்) போதும். நேராக நீர் ஸ்வர்க்கம் போய்ச்சேர்ந்து பகவானின் திருவடிகளை அடைவது ஸர்வ நிச்சயம்” என்றார். 

அதுபோலவே சுகர் அவர்கள் ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் ஏழு நாட்களுக்குப் பாராயணம் செய்து, அதை பரீக்ஷித்து மஹாராஜா பக்தி ஸ்ரத்தையுடன் ஸ்ரவணம் செய்து, பகவான் திருவடிகளை அடைந்தார் என்பது சரித்திர உண்மை;

இந்த மிகச்சிறந்த புண்ணிய சரித்திரமான ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் என்பது சாக்ஷாத் பகவானே பிரும்மாவுக்குச் சொன்னது, ப்ரும்மா நாரதருக்குச் சொன்னது, நாரதர் வியாசருக்குச் சொன்னதும், வியாசர் சுகருக்குச் சொன்னது, சுகர் பரீக்ஷித்து மஹாராஜாவுக்குச் சொன்னது என்பார்கள்; 

நமக்கு இப்போது நம் முதியோர் இல்லத்திற்குப் பக்கத்திலேயே பாகவத ஸப்தாக பாராயணம் கேட்க ஒரு அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பகவானின் கல்யாண குணங்களைக் கேட்டாவது, நம் அன்றாடத் துயரங்களிலிருந்து நாமும் கொஞ்சம் விடுபடுவோம்” என்று பெரியவர் அனைவருக்கும் விளக்கினார். 

மறுநாள் முதல், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு, பாகவத ஸப்தாக பாராயணம் செய்யும் பாகவதருக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும், செளகர்யங்களையும், வசதிகளையும் செய்து கொடுத்து, பண உதவிகள் பலவும் செய்து, பகலில் மூல பாராயணமும், இரவில் பாகவத உபன்யாசமும் மிகவும் பக்தி ஸ்ரத்தையுடன் கேட்டு மகிழ்ந்து வந்தார், அந்தப்பெரியவர். 
இதில் அந்தப்பெரியவருக்கு உள்ள ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்த்த அந்த முதியோர் இல்லத்திலிருந்த பலரும் இரவு நடந்த உபன்யாசத்தை மட்டும் கேட்க, அவருடன் வந்து போனார்கள்.
[மூல பாராயணத்தை பகல் நேரம் முழுவதும், பொறுமையாக உட்கார்ந்து கேட்பது என்பது வயதானவர்களுக்கு சற்று சிரமமான காரியம் தான். 

உபன்யாசத்தில் புராணங்களைக் கதையாகச் சொல்வதனால் கேட்க இன்பமாக இருக்கும்.  


மூல பாராயணத்தில், ஸ்லோகங்களை மட்டும் படித்துக்கொண்டே போவதனால், அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. 


மூல பாராயணத்தை ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்டால், ஒருவேளை வயதான அவர்களின் மூலக்கடுப்பு அதிகரிக்கக்கூடுமோ என்னவோ]

இவ்வாறு பெரியவரும் அந்த முதியோர் இல்லத்தில் உள்ள பலரும் ஸப்தாக மூல பாராயணமும் உபன்யாசமும் கேட்கப்போய் வந்து கொண்டிருந்ததால், அரட்டை ராமசாமி இந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டார். பெரியவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள பெரியவரின் பெட்டியைத் திறந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.  

அதில் பெரியவரின் மனைவி மட்டும் உள்ள ஒரு பெரிய படம் லாமினேட் செய்யப்பட்டு இருக்கக் கண்டார். புத்தம் புதிய பசுமஞ்சளைப் புட்டது போன்ற தெய்வீகமானதொரு நிறத்தில், பூவும் பொட்டுமாக அந்த அம்மாள் புன்னகையுடன் காட்சி அளித்தாள்.  

இந்த அம்மாளின் மரணம் பற்றிய மர்மத்தை அறிவதே அரட்டையாரின் அவசர நோக்கம். மேலும் பெட்டியைக் குடைந்து துப்புத் துலக்கலானார். 

உயில் பத்திரம் ஒன்று, இவர் வீட்டு விலாசம், இவரின் மகன்கள், மகள், மாப்பிள்ளை போன்றவர்களின் பெயரும் விலாசங்களும், தொலைபேசி எண்களும் இருந்தன. 

பெரியவர் அன்றாடம் எழுதிவரும் டைரி ஒன்றும் அரட்டையாரின் கண்ணில் பட்டது. அவசர அவசரமாக டைரியில் இருந்த கடைசி ஒரு மாத சமாசாரங்களைப் படித்துத் தன் மெமரியில் ஏற்றிக்கொண்டார். அவரின் ஆராய்ச்சி முடிவுக்கு ஒருவேளை உதவலாம் என்பதாலோ என்னவோ!

பெட்டியை மேலும் குடைந்ததில் மற்றொரு க்ரூப் போட்டோ, அரட்டையாருக்குக் கிடைத்தது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரியவருக்கு சதாபிஷேகம் [80 வயது பூர்த்தி விழா] நடைபெற்றுள்ளது. குடும்ப நபர்கள் அனைவருடனும், இந்தப் பெரியவரும் அவர் மனைவியும் மாலையும் கழுத்துமாக தம்பதி ஸமேதரராய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார். 

கெடிகாரத்தில் மணியைப் பார்த்தார் அரட்டையார்.  இரவு 8.45 ஆகி விட்டது தெரிந்தது. உடனே தனது அன்றைய ஆராய்ச்சிகளை அத்துடன் நிறுத்திக்கொண்டு, பெட்டியில் இருந்த அனைத்துப்பொருட்களையும் ஏற்கனவே இருந்தவாறு ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, தானும் பாகவத உபன்யாசம் சொல்லும் இடத்திற்கு, உபன்யாசம் முடிவதற்குள் போய்ச்சேர்ந்து, ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டார்.

தொடரும்


-oooooooooooooooooooooooooooooo-

[* பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு ஒரு சாபத்தினால் 

பாம்பு கடித்து மரணம் ஏற்பட்டது. 

அது பற்றிய சுருக்கமான { இரண்டு விதமான } புராணக்கதைகள் 
கீழே தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன  *]


*கதை-1

பல யுகங்களுக்கு முன் முனிவர் ஒருவர் வனத்தில் தவம்புரிந்து கொண்டு இருக்கையில், அவருடைய புதல்வன் அவர் செய்ய வேண்டிய வேள்விக்கு சமித்துகளைச் சேகரிக்க வனத்தின் மற்றொரு பகுதிக்குப் போய் இருந்தான். 

அப்போது அவ்வழியாக வேட்டையாட குதிரையில் வந்த பரீக்ஷித்து மஹாராஜாவின் மகன், தவத்தில் இருந்த முனிவரைக் கூப்பிட, ஆழ்ந்த தவத்தில் இருந்த முனிவர் செவிசாய்க்கவில்லை. 

அதனால் கோபமடைந்த இளவரசன் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து அந்த முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டுச் சென்று விட்டான். 

சமித்துகளைச் சேமித்து வந்த முனிகுமாரன் அவ்விடம் வந்தவுடன், தம் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக் கண்டு, கோபமடைந்தான். 

உடனே அதனை அகற்றிவிட்டு, இதனை யார் செய்தது? என ஞான திருஷ்டியால் அறிந்தான். 

உடனே “எந்தப் பாம்பை என் தந்தை மீது போட்டாயோ, அந்தப் பாம்பாலேயே உன் தந்தை அழிவான்” என சாபமிட்டான்.

சில நாள்கள் கழித்து பரீக்ஷித்து மஹாராஜனின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோஸ்யர்கள் அவருக்கு கால ஸர்ப்பதோஷம் உள்ளதாகவும், ஸர்பத்தினால் தீங்கு ஏற்படவாய்ப்பு அதிகம் உண்டு எனவும் கூறி, பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தினர். 

அதனால் பதற்றமடைந்த பரீக்ஷித்து மஹாராஜா, ஏழு கடல்கள் ஏழு மலைகள் கடந்து எட்டாவது கடலின் நடுவில் ஒரு மண்டபம் கட்டி, அதன்மேல் ஒரு கட்டில் போட்டு மிகவும் பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தார். 

“தன்னை மிதிச்சாரைக் கடித்தாலும் கடிக்காவிட்டாலும், விதிச்சாரைக் கடித்தே தீரும்” என்ற சொல்லுக்கிணங்க, கார்க்கோடகன் என்ற அரவம் (பாம்பு) புழுவடிவம் பூண்டு, ஒரு பழத்தினுள் நுழைந்து, பழம் மூலமாக பரீக்ஷித்து இருக்கும் இடத்திற்குச் சென்றது. 

பழத்தினைப் புசிக்க கையில் எடுத்த அரசன் புழு என நினைத்து உதறிவிட அது உடனே பாம்பாக மாறி அவரைத் தீண்டிவிட்டது.

-=-=-=-=-=-

*கதை-2


பரீக்ஷித்து மகா ராஜா ஒரு நாள் பரிவாரங்களோட காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்தார். வேட்டை மும்முரத்தில் எல்லோரும் மஹா ராஜாவைவிட்டுப் பிரிந்து விட்டார்கள். பரீக்ஷித்துக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் தேடிப் போனார். 

அங்கே சமீரகர் என்கிற முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரை தண்ணீர் கேட்டார். அவரோ தவம் கலையாமல் இருந்ததால பதில் சொல்ல வில்லை.


கோபப்பட்டு பரீக்ஷித்து அங்கே பக்கத்தில கிடந்த ஒரு செத்த பாம்பை தூக்கி அவர் கழுத்துல மாலை மாதிரி போட்டு விட்டுப் போய் விட்டார்.


பிறகு சமீரகரோட பிள்ளை அங்கே வந்தார். வயசு சின்னதானாலும் தபசு பெரிசு. அப்பா கழுத்தில செத்த பாம்பை பார்த்தார். நடந்த விஷயத்தை ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. 


"இவனென்லாம் ஒரு ராஜாவா? என் அப்பா கழுத்தில பாம்பை மாலையா போட்டவன் ஒரு வாரத்தில தக்ஷகன் என்ற பாம்பு கடிச்சு சாகட்டும்" ன்னு சாபம் கொடுத்துட்டார்.


சமீரகர் தவம் கலைந்து எழுந்ததும் தன் பையன் அழுது கொண்டு இருப்பதைப் பார்த்தார். ”ஏண்டா குழந்தாய் அழுகிறாய்?” என்று கேட்டார். பையனும் நடந்ததைச் சொன்னான்.


"அவசரப்பட்டு என்ன காரியமடா செய்து விட்டாய்? நானோ முனிவன். எனக்கு பாம்பைப் போட்டால் என்ன பூ மாலையை போட்டா என்ன? இரண்டும் ஒண்ணுதானே! இதுக்குப்போய் நீ ராஜாவை சபித்து விட்டாயே!; 


அந்த பரீக்ஷித்து மஹாராஜாவால் நாட்டில் எத்தனை ஜனங்கள் இன்று சந்தோஷமாக இருக்கிறார்கள்!” 


என்று சொல்லித் தன் மகனைக் கடிந்து கொண்டு விட்டு, ”நீ நேராக அந்த ராஜாவிடம் போய், நீ அவருக்குக் கொடுத்துள்ள சாபம் பற்றியும் சொல்லிவிட்டு, இன்னும் ஏழு நாட்கள் தான் அவர் உயிர் வாழ்வார் என்ற விஷயத்தையும் சொல்லி விட்டுவா” என்றார். 

இதை கேள்விப்பட்ட ராஜா மிகவும் வருத்தப்பட்டார். இன்னும் ஒரு வாரம்தான் நான் உயிருடன் இருக்க முடியுமா? அதற்குள் நான் என்னசெய்து எப்படி உருப்படலாம் என யோசித்தார். சரி, வடக்கிலிருந்து உயிர் தியாகம் பண்ணலாம்னு கங்கை கரைக்கு போனார். 


அங்கு பல ரிஷிகளும் வந்து சேர்ந்தார்கள். அவர்களை வணங்கி தன் சாபத்தைச் சொல்லி ”ஏதாவது நான் தேற வழி இருந்தால் சொல்லுங்கள்” என்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார், பரீக்ஷித்து மஹாராஜா.


அந்த முனிவர்கள், ”கொஞ்ச நேரத்திலே ’சுகர்’ இங்கே வருவார். உனக்கு மோக்ஷம் கிடைக்க வழி அவரால உனக்குத் தெரியவரும்” என்று சொல்லி ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போனார்கள்.


சிறிது நேரத்தில் அங்கே சுகப் பிரம்ம ரிஷியும் வந்து சேர்ந்தார். அவரை வணங்கி பரீக்ஷித்து யோசனை கேட்க அவர் ”ஒரு வாரத்தில மோக்ஷம் கிடைக்க மிகச்சுலபமான வழி, பகவானைப் பற்றிய பக்திக் 
கதைகள் கேட்பது ஒன்றே ஒன்று மட்டும் தான்” என்று சொல்லி, பாகவதக்கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஒன்பதாவது அத்தியாயக் கடைசியிலே சுகர் ஸ்ரீகிருஷ்ணரோட பெருமைகளை சுருக்கமாகச் சொன்னார். 


"நான் ஹரிசந்திரன், துஷ்யந்தன், சூரிய குல மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் கதை எல்லாம் கேட்டபோது, எப்போ ஸ்ரீகிருஷ்ணர் கதை வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன்; 


என் உறவினர்கள் எல்லோருமே ஸ்ரீகிருஷ்ண பக்தியைப்பற்றி எவ்வளவோ உயர்வாகச் சொல்லி இருக்கிறார்கள்;  ஸ்ரீ கிருஷ்ணரின் கதையை கேக்கத்தான் நான் இதுவரை உயிர் பிழைத்து இருக்கிறேன் போலத் தோன்றுகிறது. அதனால ஸ்ரீ கிருஷ்ணா அவதாரக் கதையை எனக்கு தாங்கள் விரிவாகச் சொல்லுங்கள்" என்று மிகவும் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார். 
ரொம்பவும் சந்தோஷப்பட்ட சுகர் ஸ்ரீ கிருஷ்ணா அவதாரக் கதையை விஸ்தாரமாகச் சொல்ல [10 வது அத்தியாயம்] ஸ்ரத்தையோட கேட்ட பரிக்ஷித்து மோக்ஷம் அடைந்தார். 

-=-=-=-=-=-

மேற்படி புராணக்கதைகளை தக்க நேரத்தில் எனக்குத் தந்து உதவி, இந்த என் சிறுகதைத்தொடருக்கு மேலும் வலுவூட்டியுள்ள நம் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [வலைத்தளம்: ‘மணிராஜ்’] அவர்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். - vgk ;)))))


-oooooooooooooooooooooooooooooo- 

  
பகுதி-5

அன்றுடன் ஒரு வாரம் முடிந்து பாகவத பாராயணமும் உபன்யாசமும் பூர்த்தியாகும் நாள்.  உபன்யாசம் செய்த பாகவதருக்கும் அவர் மனைவிக்கும் புதிய பட்டு வஸ்திரங்கள் [புத்தாடைகள்], ஒரு ஜோடி பருப்புத்தேங்காய், கூடை நிறைய பல்வேறு வகையான பழங்கள், பூமாலைகள், வித்வத் ஸம்பாவனையாக ரூபாய் பத்தாயிரத்து ஒன்று பணம் முதலியன நம் பெரியவர் அவர்களால் தனியாக ப்ரத்யேகமாக வழங்கி, பொன்னாடை அணிவித்து கெளரவம் செய்யப்பட்டது. 

பெரியவரின் பக்தி ஸ்ரத்தையையும், தாராள குணத்தையும் அந்த பாடசாலையில் உள்ளோர், முதியோர் இல்லத்தில் உள்ளோர், விழா ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அந்தக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எல்லோரும் வியந்து பாராட்டினர்.  

கடைசி நாளன்று பகலில் மூல பாராயணம் கேட்கவும், இரவில் பிரவசனம் [உபன்யாசம்] கேட்கவும் வந்திருந்த அனைவருக்கும் மிகவும் சிறப்பான விருந்தளிக்கவும் பெரியவரே பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார். அப்பளம், வடை, ஜாங்கிரி, பால் பாயஸம் என தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. 

ஒரு சொம்பு நிறைய சூடான சுவையான பால் பாயஸத்தை எடுத்துக்கொண்டு பெரியவர் முதியோர் இல்லத்திற்கு விரைந்து செல்லலானார். 

அவரைத் தொடர்ந்து இரவு சாப்பாடு முடித்திருந்த வேறு சில பெரியவர்களும் முதியோர் இல்லத்துக்குப் புறப்படலாயினர். அரட்டை ராமசாமியின் கண்கள் மட்டும், பெரியவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை, அவருக்குத் தெரியாமல் உற்று நோக்கி ஃபாலோ செய்வதிலேயே குறியாயிருந்தன.

முதியோர் இல்லம் வந்து சேர்ந்த அந்தப்பெரியவர் தன் பெட்டியைத் திறந்தார். தன் மனைவியின் அந்தப் பெரிய [லாமினேட் செய்த] புகைப்படத்தைத் தன் மடியில் ஒரு குழந்தை போல படுக்க வைத்துக்கொண்டார். அந்தப்படத்திலிருந்த அவள் வாயில் ஒவ்வொரு சொட்டாகப் பால் பாயஸத்தை ஊற்றி, ”குடி .... குடி ...” என்று ஒருவித வாஞ்சையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.   

அவரைப் பின்தொடர்ந்து வந்த அரட்டை ராமசாமி, இந்தக் காட்சியைக்கண்டு கண் கலங்கி, ஓர் ஓரமாக மறைவாக நின்று விட்டார். வயதான அந்தப் பெரியவரின் இந்தச்செயலை, [தன் அன்பு மனைவியை சென்ற வருடம் இழந்தவரான, அனுபவம் வாய்ந்த] ராமசாமியால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. 

ஆஹா! எவ்வளவு ஒரு உத்தம தம்பதிகளாக வாழ்ந்து, நீண்ட காலம் மன ஒற்றுமையுடன், ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அன்புடன், பண்புடன், பாசத்துடன், நேசத்துடன் இவர்கள் இருவரும் இனிமையாக குடும்பம் நடத்தியிருக்க வேண்டும்! என நினைத்துக் கொண்டார். 

தன் மனைவிக்கு பாயஸம் ஊட்டி விட்டதாகவும், அவளும் அதை விரும்பி குடித்து விட்டதாகவும் திருப்தியடைந்த பெரியவர், மீதியிருந்த அந்த பாயஸத்தைத் தானே முழுவதும் குடித்து விட்டு, சற்று நேரம் காலை நீட்டிப் படுத்துக்கொண்டார். 

கண்களை மூடிக்கொண்டார். தன் மனைவி தன்னை அழைப்பதாக நினைத்துக்கொண்டார். பாகவத பாராயணம் கேட்டதால் பகவானிடமிருந்து தனக்கும் அழைப்பு வந்துவிட்டதாக உணர்ந்தார்.

அவர் உடல் தூக்கித்தூக்கிப் போட ஆரம்பித்தது. அரட்டை ராமசாமி அருகில் போனார். அவர் உடலைத் தொட்டுப்பார்த்தார். அது அனலாகக் கொதித்தது.

அரட்டை ராமசாமி உடனடியாக மருத்துவரை வரவழைத்தார். சோதித்துப் பார்த்த மருத்துவர் முதன் முறையாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் நல்லது என்றும் கூறிவிட்டார். அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். ஈ.ஸி.ஜி. எடுக்கப்பட்டது. சுலபமான சுவாஸத்திற்கு ஆக்ஸிஜன் குழாய்கள் அவரின் மூக்கினில் பொருத்தப்பட்டன. 

அவருடைய மகன்களுக்கும், மகளுக்கும் அரட்டை ராமசாமியால் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பெரியவர் எழுதி வைத்த உயில் அங்கிருந்த அனைவரும் கேட்கும் படியாக அரட்டை ராமசாமியால் உரக்க வாசிக்கப்பட்டது:

//சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்க இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதை கட்டுப்படுத்த மட்டுமே மருந்து, மாத்திரைகள், ஊசிகள் முதலியன தருகிறார்கள். 

சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். 

அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்// என தன் உயிலில் எழுதியிருந்தார்.

பெரியவரின் டைரியில் இருந்த ஒருசில பகுதிகளும் அரட்டை ராமசாமி அவர்களால் படித்துக்காட்டப்பட்டது:

//என் அன்பு மனைவியின் கடைசி இறுதி நாட்கள் எண்ணப்பட்ட போது, ”இதே நிலைமை நீடித்தால் உங்கள் மனைவி இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே உயிருடன் வாழமுடியும்" என்று டாக்டர் என்னிடம் சொல்லி விட்டுப் போனார்; 

நானும் என் மனைவியும் முன்பே பேசி முடிவெடுத்திருந்தபடி, அவளுக்கு மிகவும் பிடித்தமான பால் பாயஸம், மாம்பழ ஜூஸ், தேங்காய் போளி, கப் ஐஸ்கிரீம் முதலியனவெல்லாம் அவள் ஆசைதீர சாப்பிடவும், பருகவும், ருசிக்கவும் ரகஸியமாக நான் ஏற்பாடு செய்திருந்தேன்;  

நான் அவளைப்போல, இதே நிலைமையில் படுத்திருந்தால், அவளும் எனக்கு இதுபோலவே தந்திருப்பாள். அதுதான் நாங்கள் எங்களுக்குள் பேசி முடிவு எடுத்து வைத்திருந்த விஷயம்; 

அதாவது இறப்பதற்கு முன்பு நமக்கு பிரியமானவற்றை விரும்பி சாப்பிட்டுவிட்டு மன மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இந்த உலகை விட்டு விடைபெற வேண்டும். அதில் எந்தக்குறையும் யாருக்கும் யாரும் வைக்கக்கூடாது என்பதே எங்கள் இருவரின் இரகசிய ஒப்பந்தம்;  

இது விஷயத்தில் நான் எவ்வளவோ சர்வ ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் செயல்பட்டும், நான் பெற்ற பிள்ளைகளிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டேன்; 

இவற்றையெல்லாம் சாப்பிடக்கொடுத்து, நானே என் மனைவியை கொன்று விட்டதாகக் கூறி, என் மீது கொலைப்பழி சுமத்தி, என்னை வீட்டிலிருந்து துரத்தி,  இந்த முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டனர்; 

ஆனால் என் மனைவிக்கு மிக நன்றாகத் தெரியும் நான் அவளை கொலை செய்யவில்லை என்று. மாறாக, கடைசியாக அவள் மிகவும் விரும்பிய பதார்த்தங்களைச் சாப்பிடச் செய்து, அவளை மிகவும் சந்தோஷமாக, என்னையும் இந்த உலகையும் விட்டு, மனநிறைவுடன் செல்லச்செய்தேன்; 

நான் அவளை நல்லபடியாக கடைசிவரை வைத்துக் கொண்டேன்;  அவள் விருப்பப்படியே கடைசியில் செய்து அவளை, நல்லபடியாகவே வழியனுப்பி வைத்து உதவினேன்;  

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் என் வாரிசுகளால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தங்கள் தந்தையாகிய என்னைவிட, தாய் மேல் தான் பாசம் அதிகம்;

கருணைக்கொலை என்பார்களே, அது போலத்தான் என்னுடைய இந்தச் செயலும் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதில் தப்பேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இது நாங்கள் எங்களுக்குள் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தமே அன்றி வேறு எதுவும் இல்லை; 

எங்கள் ஒப்பந்தப்படி அவளுடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன். அந்த ஒரு திருப்திக்காக நான் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முழுமனதுடன் சம்மதித்துத்தான், இந்த முதியோர் இல்லத்துக்கும் வந்து விட்டேன்; 

”நீ ..... முன்னாலே போனா .....  நா ..... பின்னாலே வாரேன்” என்ற சினிமாப் பாட்டுப்போல, அவள் இப்போது முன்னால் சென்றிருக்கிறாள்; நான் பின்னால் அவளைத் தொடரப்போகிறேன்.  //

அரட்டையார் பெரியவரின் டயரியைப் படித்து முடித்ததும், பெரியவர் தன் நெஞ்சைப் பிசைந்து கொண்டு துடிதுடித்தார். மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய்களைப் தானே தன் கைகளால் பிடுங்கி எறிந்தார். அவர் உயிர் அப்போதே பிரிந்து விட்டது.

”பரீக்ஷீத் மஹாராஜா போலவே பாகவதம் கேட்ட ஏழாம் நாள் முடிவில் இந்தப் பெரியவரின் உயிரும் பிரிந்துள்ளது. ஏற்கனவே பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து, இவரின் வருகைக்காகவே மேலுலகில் காத்துக் கொண்டிருக்கும் இவரின் அன்பு மனைவியுடன் சேர்ந்து, இவரும் பகவானின் பாத கமலங்களை அடையப்போவது நிச்சயம்” என்று நாங்கள் அனைவரும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 

பெரியவரின் பிரிவினையே தாங்க இயலாத எங்களுக்கு, அவரின் பிரிவினால் மிகவும் பாதிக்கப்பட்டவராக மாறிவிட்ட அரட்டை ராமசாமி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேலாக யாருடனும் எந்த அரட்டைப் பேச்சுக்களும் பேசாமல், மெளன விரதம் மேற்கொண்டிருந்தது, எங்களையெல்லாம் மிகவும் வருந்தச் செய்து விட்டது.


oooooOooooo


VGK-12 
’உண்மை சற்றே வெண்மை’

  

 

 

 

VGK-12 
’உண்மை சற்றே வெண்மை’

சிறுகதை விமர்சனப்போட்டியில்
பலரும் பங்குகொண்டு சிறப்பித்திருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

பரிசுக்கு தேர்வாகியுள்ள விமர்சனங்கள் பற்றிய முடிவுகள்
நாளை சனி, ஞாயிறு, திங்களுக்குள்
வெளியிடப்பட உள்ளன.

காணத்தவறாதீர்கள் !oooooOooooo


இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில்

அனைவரும் உற்சாகத்துடன் தொடர்ந்து

கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  
oooooOooooo

என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

30 கருத்துகள்:

 1. பெரியவரும்,சர்க்கரை நோயும்,பாகவத புராணமும் சேர்ந்து வெகு ரசமாகக் கதை நடந்திருக்கிறது. இது போல ஆதர்சத் தம்பதிகளைக் காண்பது அரிதே. அதை அழகாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றி.நேர்த்தியான விவரங்களுடன் பிரமாதமான கதகாலட்சேபமே கேட்ட உணர்வு.

  பதிலளிநீக்கு
 2. உத்தம தம்பதிகளின் கதை கலங்க வைத்தது... புராணக் கதைகளும் அருமை... திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” பெரியவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு நிறுத்தினார்//

  பாகவதகதையும் பொருத்தமான இடத்தில் இணைத்து சிறப்புச்சேர்த்த அருமையான கதை..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 4. சிறுகதை விமர்சனப் போட்டி சிறக்க வாழ்த்துகிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
 5. கதையின் வீரியத்தைக் கூட்டிப் போகும்
  பரீட்சீத்து மகாராஜாவின் கதை
  எங்களுக்கு கூடுதல் போனஸ்
  அரட்டை ராமசாமி போல கதையைப் படித்து
  முடித்ததும் என்னுள்ளும் சோகம் நிறைந்து கொள்ள
  சில மணி நேரம் மௌனமாய் இருக்கவேண்டி இருந்தது
  மனம் கவர்ந்த அற்புதமான கதை
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. இரு பாசப் பறவைகளின் ஆத்மார்த்தமான ஒப்பந்தம்!

  நீ முன்னாலே போனா,
  நா பின்னாலே வாரேன் !

  கதையின் ஊடே பாகவதத்தையும்,
  மருத்துவரின் கருத்துக்களையும்
  சுவையாக சேர்த்த விதம் அருமை

  பதிலளிநீக்கு
 7. பாகவத புராணம், சக்கரை நோய். இரண்டையும் சம்பந்தப்படுத்தி கதை போகிறது. எவ்வளவு ஆதர்ச தம்பதிகள். எம்மாதிரியான ஒரு முடிவு? ஸாதாரணமாக நோய் ஏற்பட்டாலே ஏதோ அவபத்தியம்,எனக்கு அப்போதே தெரியும் என்று பெரியவர்களின் மேலேயே பழி சுமத்தும் காலம்தானிது. பாகவத புராணம், எவ்வளவு சக்தி வாய்ந்தது,கணவன் மனைவி பந்தம் எப்பேற்பட்டது.? நம்பினோர் கெடுவதில்லை, எவ்வளவோ உயர் கருத்துக்கள், இவையெல்லாம் சேர்த்து மனதை ஒரு உணர்ச்சிக் குவியலாக்கி விட்டது. இந்த வியாதி வந்தவர்களெல்லாம் மருத்துவர்களாக மாறிவிடும்,அனுபவஸ்தர்களாகத்தான் பல பேர்களைக் காணமுடிகிறது. நல்லதொரு படைப்பு. என்ன அழகான முதியோர்
  காவியம். அருமையிலும் அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. //ஒரு வேளைக்கான உணவாக இரண்டே இரண்டு இட்லிகளோ அல்லது ஒரே ஒரு தோசையோ அல்லது அரையே அரை அடை மட்டுமோ இதில் ஏதாவது ஒன்று மட்டுமே சாப்பிடுங்கள்;//

  ஜோக் ஞாபகம் வருகிறது:
  நோயாளி: பெருத்த உடம்பைக் குறைக்கணும், அதற்கு என்ன செய்யணும் டாக்டர்?
  டாக்டர்: காலையில் 2 துண்டு பிரட். மதியம் 2 துண்டு பிரட். இரவு 2 துண்டு பிரட் சாப்பிடுங்க...
  நோயாளி: சாப்பாட்டுக்கு முன்னாடியா? சாப்பாட்டுக்குப் பின்னாடியா டாக்டர்?

  பதிலளிநீக்கு
 9. பகல் முழுவதும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக மூல பாராயணம் நடைபெறப்போவதாகவும், இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மேற்படி பண்டிதரால் ஸப்தாக உபன்யாசம் [கதையாகச் சொல்லுதல்] நடைபெறப் போவதாகவும்//

  இப்படித்தான் வருடம் இருமுறையாக பாக்வத சப்தாகம் எங்கள் பகுதியில் 25 வருடங்களுக்கு மேல் நடைபெற்று வந்தது..

  இப்போதெல்லாம் பாண்டித்யம் பெற்ற கோபிகைகளாக அடுத்தநாள் என்ன பகுதி மூலபாராயணமோ அதை விரித்துரைப்பது யார் என்று முதல் நாளே முடிவு செய்து அதற்கான விரிவுரைகளை தயாரித்து மிக அருமையாக சங்கீத உபன்யாசம் போல நடைபெறுவது இனிமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்போதெல்லாம் பாண்டித்யம் பெற்ற கோபிகைகளாக அடுத்தநாள் என்ன பகுதி மூலபாராயணமோ அதை விரித்துரைப்பது யார் என்று முதல் நாளே முடிவு செய்து அதற்கான விரிவுரைகளை தயாரித்து மிக அருமையாக சங்கீத உபன்யாசம் போல நடைபெறுவது இனிமை..//

   பாண்டித்யம் பெற்ற கோபிகைகளில் முதல்வரான தங்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

   இதைக்கேட்கவே இனிமையாக உள்ளது. நேரில் வந்து பார்க்கணும் போல ஆசையாகவும் உள்ளது.

   நீக்கு
 10. படித்து நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம்
  இடுகிறேன்.
  என்னை மிக பாதித்தது.
  நெஞ்சை நெகிழ வைத்தது.
  பெரியவர் செய்தது எந்த தவறும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. viji April 20, 2014 at 2:12 PM

   வாங்கோ விஜி, செளக்யமா இருக்கேளா? பார்த்து எவ்ளோ நாளாச்சு !!!!! வெளியூர்/வெளிநாடு ஏதாவது போய்ட்டீங்களோன்னு நினைத்துக்கொண்டேன்.

   //படித்து நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம்
   இடுகிறேன். என்னை மிக பாதித்தது. நெஞ்சை நெகிழ வைத்தது. பெரியவர் செய்தது எந்த தவறும் இல்லை.//

   நீங்க சொன்னா அது கரெக்டாத்தான் இருக்கும். மிக்க நன்றி அன்பான வருகைக்கும் அழகான சரியான கருத்துக்கும்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 11. // எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும்// யோசித்துக்கொண்டே இருக்க வாய்த்த வரிகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. முன்பே இந்த கதையைப் படித்து இருக்கிறேன்.
  ஆனாலும் இப்போது மறுபடி படிக்கும் போது முதன் முதலாய் படிப்பது போல் மனது கலங்கி போகிறது.

  புராணக்கதைகள் கொடுத்து உதவிய திருமதி. இராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள், நன்றி.

  பதிலளிநீக்கு
 13. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

  இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [07.01.2015] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு இதோ:
  http://swamysmusings.blogspot.com/2015/01/vgk-14.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ooooooooooooooooooooooooooo

  பதிலளிநீக்கு
 14. அருமையான கதை. படிக்கப்படிக்க தேனாக இனிக்கிறது. அதே சமயத்தில் கண்களில் கண்ணீர் கோர்ப்பதையும் தவிர்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 15. மனதை கலங்க வைத்த கதை. கூடவே புராண விஷயங்களும் சேர்த்திருப்பது சிறப்பு

  பதிலளிநீக்கு
 16. கதைக்கு நடுவில உபந்யாசக் கதைகள் வேற. கலக்கல் தாங்க முடியல. நெஞ்சைத் தொடும் நல்ல சிறுகதை.

  பரிசுக்குத் தகுதியான விமர்சனங்களை எழுதி பரிசு பெறப்போகிற விமர்சகர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 28, 2015 at 6:55 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //கதைக்கு நடுவில உபந்யாசக் கதைகள் வேற. கலக்கல் தாங்க முடியல. நெஞ்சைத் தொடும் நல்ல சிறுகதை.//

   ’யாரு மாப்பிள்ளை’ என்று கேட்போருக்கெல்லாம், ரஜினி செந்திலைக்காட்டி “இவருதான் மாப்பிள்ளை ..... ஆனாக்க இவர் போட்டிருக்கும் டிரெஸ் மட்டும் என்னோடது” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதுபோல இந்த மெயின் கதை மட்டுமே உங்க கோபு அண்ணாவோடது, ஆனாக்க இதில் வரும் உபந்யாசக் கதைகள் அன்பளிப்பு உபயம் ..... வேறு ஒருவரோடது ..... ஜெயா

   //பரிசுக்குத் தகுதியான விமர்சனங்களை எழுதி பரிசு பெறப்போகிற விமர்சகர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ஜெ. :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 17. ஏன் தா வாப்பா வ வயசான காலத்துல வூட்டோட வச்சிகிடாம முதியோர் இல்லத்துல கொணாந்து வுடறாங்களோ. அவ பொஞ்சாதி ஆசப்படி சாப்பிட கொடுத்தது இம்மாம் பெரிய தப்பா எடுத்துகிடோணுமா. அவங்கவங்களுக்கு வரும்போதுதா தல நோவும் கால் நோவும் வெளங்கிகிட ஏலும் போல.

  பதிலளிநீக்கு
 18. இளவயதை விட முதிய வயதில்தான் கணவனுக்கு மனைவியின் அருகாமையும் அன்பும் அதிகமாக தேவைப்படுகிறது. அதுபோலவே மனைவிக்கும். வேறு யாரிடமும்மனதில் தோன்றுவதை எல்லாம் பகிர்ந்து கொள்ளமுடியாது காது கொடுத்து கேக்கவும் யாரும் தயாரா இருக்கமாட்டா. அந்த உணர்வுகளை எழுத்தில் சொன்னவிதம் அருமை. .

  பதிலளிநீக்கு
 19. உணர்வுப்பூர்வமான கதை..கதைக்குள்ளும் ஒரு கதை. கதையோட கனத்துல அரட்டை ராமசாமியும் ஆஃப் ஆகிட்டாரே..

  பதிலளிநீக்கு
 20. இக்கதை உணர்த்தும் உண்மைகள் மற்றும் சமுதாயச் சிந்தனைகள்.  1. மரணம் என்பது நிலையானது. அது வரும் நாள் யாருக்கும் தெரியாதது! எனவே வாழும் காலத்தில் மகிழ்வுடனும், வருவதை ஏற்று எதிர்கொள்ளும் திறனும் கொண்டிருத்தல் அவசியம்.

  2. ஒருவருக்கொருவர் புரிந்தும், விட்டுக்கொடுத்தும் வாழ்தல்தான் வாழ்க்கை! நிலையா இளமை ஓடி, முதுமை கூடும்போது, இனிதாய் அதை எதிர்கொள்ள இது உதவும்.

  3. நோய்வந்துவிட்டால், அதை எண்ணி துவண்டுவிடாமல், இயன்றவரை அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கவலையில்லமல் இருக்கலாம். அந்நோய் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அறிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

  4. பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. உரிய முறையில் அவர்களிடம் அன்பு பாராட்டி, நல்லவர்களாக அவர்களை வளர்த்து ஆளாக்கினால் மட்டுமே, பின்னாளில் அவர்கள் பெற்றோர்களிடமும் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.

  5. ஒருவரின் செயல் , மற்றவரின் பார்வைகளில் மாறுபட்டும் தோன்றலாம். உண்மை வெளிப்படும்போது உலகம் ஒருமனதாக அதை ஏற்றுக்கொள்ளலாம்.
  வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அத்தம்பதிகள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 21. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், ஐந்து பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

  40 + 42 + 40 + 36 + 54 = 212

  அதற்கான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2011/10/15.html

  http://gopu1949.blogspot.in/2011/10/2-5.html

  http://gopu1949.blogspot.in/2011/11/5-5.html

  http://gopu1949.blogspot.in/2011/10/3-5.html

  http://gopu1949.blogspot.in/2011/11/4-5.html

  பதிலளிநீக்கு
 22. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/05/vgk-14-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/05/vgk-14-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/05/vgk-14-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  பதிலளிநீக்கு
 23. படிச்சாச்...என்ன கமெண்ட் போடணும்னே புரியல.. உங்க கிட்டேந்து...ரொம்ப ஜாலியான கதைகளையே படிச்சிட்டு இப்ப..உருக்கமான கதை படிக்கும்போது யாதார்த்தம் மனதை கஷ்டப்படுத்துது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco January 26, 2018 at 5:59 PM

   வாங்கோ ஷம்மு, வணக்கம்.

   //படிச்சாச்...என்ன கமெண்ட் போடணும்னே புரியல..//

   மிக்க நன்றி, திருமணம் ஆகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற தங்கள் மாமனார் மாமியாரைப் பற்றி தாங்கள் என்னிடம் சொல்லி மகிழ்ந்திருந்தீர்கள். அதற்காக 2017-ம் ஆண்டு, மிகப்பெரிய விழா எடுத்துக் கொண்டாடியதைப் பற்றியும் என்னிடம், பகிர்ந்துகொண்டு மெயிலில் சொல்லியிருந்தீர்கள்.

   சமீபத்தில் 04.01.2018 வியாழக்கிழமை இரவு தனக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்களைக் கேட்டு வாங்கி, தங்கள் கைகளால் சூடாகச் சாப்பிட்ட அவர், வழக்கப்படி உங்கள் குடும்பத்தார் எல்லோருக்கும் ஹக் செய்து, குட் நைட் சொல்லி விட்டு நிம்மதியாகப் படுத்தவர் 05.01.2018 வெள்ளிக்கிழமை காலை எழுந்திருக்காமல் நிம்மதியாக கர்த்தரைப் போய் அடைந்துள்ளார் எனச் சொல்லி வருத்தப்பட்டிருந்தீர்கள்.

   இதைத்தான் ’அநாயாஸேன மரணம்’ என்று எங்களில் சொல்லுவார்கள். புண்யவான்களுக்கு மட்டுமே இப்படியொரு பாக்யம் கிட்டிடும். அது அவருக்கு, அதாவது தங்கள் மாமனாருக்குக் கிடைத்துள்ளது.

   இவரின் இழப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வயதான தங்கள் மாமியாருக்கு யாராலும் ஆறுதல் சொல்ல இயலாது. காலம்தான் அவரின் மனக் காயங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கக்கூடும்.

   //உங்க கிட்டேந்து...ரொம்ப ஜாலியான கதைகளையே படிச்சிட்டு இப்ப..உருக்கமான கதை படிக்கும்போது யாதார்த்தம் மனதை கஷ்டப்படுத்துது..//

   இதுதான் உலக யதார்த்தம் என்பதை தங்களுக்கு எடுத்துச்சொல்ல மட்டுமே, இந்தக்கதையை இப்போது உங்களைப்படிக்கச் சொல்லியிருந்தேன்.

   தாங்களும் தங்கள் கணவரும் இந்தக்கதையில் வரும் பெரியவரின் குழந்தைகள் போல இல்லாமல், வயதான தம்பதியினரைக் கடைசிவரை மிகவும் அன்புடனும், ஆதரவுடனும், மிகப்பொறுப்பாகக் கவனித்துக்கொண்டுள்ளீர்கள். அந்த புண்ணியம் உங்கள் இருவரையும், உங்கள் குழந்தைகள் மூவரையும் நன்கு காப்பாற்றி விடும்.

   நடந்ததை நினைத்து நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காமல், எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி, இயல்பு நிலைக்குத் திரும்ப தாங்கள்தான் தனி முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

   அந்தத் தங்கள் மாமனாரான பெரியவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   என்றும் அன்புடன், தங்கள் கிஷ்ணாஜி !

   நீக்கு
 24. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 07.06.2021

  அருமை. இன்றைய அவசர உலகில் சராசரி வயதைத்தொட்ட அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்சினையாக சர்க்கரை, அதை எதிர்கொள்வது பற்றி மருத்துவரை போன்ற விளக்கம் அன்யோன்ய தம்பதி மனநிலை வியக்க வைத்தது அருமை

  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

  பதிலளிநீக்கு