என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 8 நவம்பர், 2014

’அன்பான நெஞ்சங்களுக்கு....’ - நடுவர் திரு. ஜீவி அவர்களின் கடிதம்.
அன்பான நெஞ்சங்களுக்கு....பிரபல இசை விமரிசகர் அமரர் சுப்புடு அவர்களுக்கு பாடத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது.


அவர் பாடிக் கேட்டதாக யாரும் சொல்லிப் படித்ததுமில்லை.


நிச்சயம் அவருக்குப் பாடத் தெரிந்திருக்கும் என்றும் நன்றாகப் பாடுவார் என்று நினைப்பதும், இது இருந்தால் அது இருக்கத்தான் வேண்டும் என்கிற மாதிரி ஒரு நிலை.


அதே மாதிரி கதை  விமரிசனம் எழுதத் துணிவோரிடம் எழுத்தாள குணாம்சமும் படிந்திருக்கும் என்று நினைப்பதில் தப்பில்லை.


சொல்லப்போனால்  வாசகர், விமரிசகர், எழுத்தாளர் என்பதெல்லாம் ஒன்றே ஆன பல நிலைகள் தாம்.

  
தேர்ந்த வாசகரின்  இன்னொரு பரிமாணம் தான் எழுத்தாளர்.  எழுத்தாளருக்கும் விமரிசன குணம் வாய்த்திருந்தால் தான் எதையும் எழுதவே முடியும்.   வாசக, எழுத்தாள நிலைகளின் உள்ளார்ந்த வெளிப்பாடே விமரிசனங்களும்.  அதனால் இதெல்லாமே ஒன்றில் ஒன்றாகப் புதைந்திருக்கும் செயல்பாடுகள்.  தேவைக்கேற்ப எதுவொன்றாகவும் வெளிப்படும்.


கிட்டதட்ட  பத்து மாதங்களுக்கு மேலே; ஏறத்தாழ இருநூறு விமரிசனங்களின் பிரசுரிப்பு; இது ஒரு சாதனையா என்றால், நிச்சயம் சாதனை தான்.  அதுவும் பதிவுலகில் நிகழ்வுற்ற சாதனை.


இன்றைய தேதியில் பதிவுலகில் நிகழ்வுறும் எந்த செயலும் பிற்காலத்து ஏற்படக் கூடிய பெருத்த மாறுதல்களுக்கு இப்போதே தயாராகிக் கொண்டிருப்பதாக அடிக்கடி இப்பொழுதெல்லாம் நினைத்துக்  கொள்கிறேன்.


காலஞ்சென்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 'என் எழுத்துக்கள் அத்தனையையும் வலைத்தளத்தில் ஏற்றுங்கள்' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம்  கேட்டுக் கொண்டதாகக்  கேள்விப்பட்டதும் அதனால் தான்.


காகித அச்சுலகம் கொஞ்சம்  கொஞ்சமாக தன் பழம் பெருமைகளையெல்லாம் இழந்து மங்கி வரும் காலமிது;  துந்துபி முழங்க மின்னணு உலகம் எழுந்து நின்று எல்லாவற்றையும்  வாரிசுருட்டி தன்னுள் அடக்கிக்  கொள்ள பகாசுர பசியுடன் தயாராகிக் கொண்டிருக்கும் காலமும் இதுவே. குட்டியூண்டு ஐபாடில் IBooks, kindle என்று வகைவகையாய் கதைப் புத்தகங்களைப் படிக்கும் காலமிது.


இதுவே இப்படியான சாகசங்களின் மீதும் பதிவுலகின் வளர்ச்சியின் மீதும் தணியாத பாசமாய் தளும்பி மேலோங்குகிறது.


பத்து வருடங்களுக்கு முன் நான் பதிவுலகில் 'என் பக்கங்கள்' என்று என் எழுத்தை ஆரம்பிக்கும் பொழுது இருந்த நிலை அல்ல இன்று.  அன்றிருந்த குழந்தைத்தனம் இன்று இல்லாமல் வாலிபனாய் வளர்ந்ததே போல் பக்கம் பக்கமாக தங்கள் சொந்த படைப்புகளைப்  படைத்து எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பதிவர்கள் அழகு  பார்க்கும் காலம் இது!  எல்லா துறைகளிலும் ஏகப்பட்ட விஷயங்களை அடக்கிக் கொண்டு கல்வெட்டாய் காலமெல்லாம் பதிந்திருக்கப் போகும் இடமும் இதுவே!  மொழியின் வளர்ச்சிக்கு, அதன் எந்த ஆக்கபூர்வமான சோதனை முயற்சிகளுக்கும் களனாகப் இருக்கவிருக்கும் நிலைக்களனும் இந்த இணையமே.


எதிர்கால எதிர்பார்ப்பு ஏற்றங்களுக்கு ஏற்ப நம்மை சரிபடுத்திக்  கொண்டே ஆக வேண்டிய காலமும் இது தான்!


தேர்ந்தெடுத்த இருநூறுக்கு சற்றே உள்ளடங்கிய விமரிசனங்களைத் தவிர தேர்வு பெறாத விமரிசனங்களையும் ஆர அமர படித்துப்  பார்த்து பெறுவதற்கரிய வாய்ப்பு பெற்ற உணர்வின் உந்துதலில் ஒன்றே ஒன்று  உங்களிடம் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.


விமரிசகர்கள் தங்களுக்குள் புதைந்திருக்கும் இன்னொரு சொரூபமான எழுத்தாள உள்ளத்தைப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைப்பது தான் அது.  அப்பொழுது தான் விதவிதமாக எழுதக் கூடிய எழுத்து லாவண்யங்கள் வசப்படும்.


அது என்ன எழுத்தாள உள்ளம்?...


கதையைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே, அந்தக் கதையை எழுதிய எழுத்தளனின் எண்ண அலைகளோடு ஒன்றரக் கலப்பது.  எழுதியவனும் வாசிப்பவனுக்குமான எண்ண சங்கமம் இது.  எழுதிய எழுத்தின் ஜீவனை உள்வாங்கிக் கொள்கிற அற்புத ஆற்றல் இது. இந்த ஆற்றல் மட்டும் கைவரப்பெறின் எழுதியவனும் வாசிப்பவனும் இரு வேறு நபர்கள் என்கிற யதார்த்த நிலை உடலுக்கே என்றாகி உள்ள ஒத்திசைவில் ஒன்றரக் கலக்கலாம்.


இந்த சித்தி வாய்க்கப் பெற்றால் எழுத்தாளன் ஒன்றை நினைத்து எழுத விமரிசனம் எழுதப் புகும் நீங்கள் வேறொன்றாக அதை வியாக்கியானம் பண்ணுகிற விலகிய நிலை ஏற்படாது. இந்தக் கதை இப்படித்தான்  போக்கு காட்டப் போகிறது, முடியப் போகிறது என்று முன்னாலேயே தெரியும்.  இந்த நிலை தான் விமரிசகருக்கும் எழுத்தாளருக்கும் பேதமில்லாத அபேத நிலை.


இந்த நிலையில் வாசிப்பின் தீவிரத்தில்  முதல்தர எழுத்துக்களை அவாவுகிற வாசகஆசை தன்னாலே உங்களுக்கு வந்து விடும்.  அந்த ஆசை தான் ஈடுபாடுகளுக்கான வித்து. உங்கள் ஈடுபாடுகளே உங்களைத் தீர்மானிப்பதால், ஈடுபாடுகள் மாறிப்போனால் நீங்களே மாறிப்போவீர்கள். தன் எழுத்தால் சிந்தனையால் மற்றவர்களை influence பண்ணுகிற சக்தி கிடைப்பது கிடைத்தற்கரிய வரம். இந்த வரம் கைவரப் பெறுவது தான் சிறந்த எழுத்தாளர்களின் இலட்சியமாகிப் போகிறது.  வாசகர், விமர்சகர், எழுத்தாளர் என்கிற நிலைகளும் ஒன்றேயான நிலையாதலால் நம் செளகரியப்படி எந்த நிலையிலும் பிறரை ஆகர்ஷிக்கலாம்.


'ஆதலினால் எழுத்தாள உள்ளமும் அந்த அசகாயத் திறமையும் கைவரப் பெறுவீர்!' என்று கேட்டுக் கொள்ள நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.இந்த போட்டியைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு கதைக்கான போட்டியிலும் கலந்து கொண்டவர்களில் சிறந்த விமரிசனம் என்பது தான் தேர்வுக்கான அடிப்படைக் காரணியாக அமைந்து விட்டது.  மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது எல்லாப் போட்டிகளிலும் இப்படித்தானே தேர்வு அமையும் என்று தோன்றும்.  ஒரே ஒரு போட்டியாக இருந்தால் போட்டிக்கு வந்தவற்றில் மிகச் சிறந்தவை என்பதை மிகச்சரியாக அர்த்தம் கொள்ளலாம்.  ஆனால் இந்தப் போட்டியோ, உண்மையில் நாற்பது கதைகளுக்கான நாற்பது போட்டிகள்!   நாற்பது போட்டிகளுக்கும் வெவ்வேறான கதைகள்! நாற்பது போட்டிகளுக்கும் அந்தந்த சூழ்நிலைகளில் விமர்சகர்களின் எண்ணமாய் அமைந்து போய் வந்து சேர்ந்த விமரிசனங்கள்!  இருந்தும் தன் பதிவுதளத்திற்கு வழக்கமாக வந்து வாசிப்பவர்களைத் தாண்டி இந்த விமரிசன வட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோபு சார் தன்னாலான எல்லா முயற்சிகளையும்  செய்தார்.


சாதாரணமானவன் தான் என்று வெகு அடக்கமாக அவர் தன்னைச் சொல்லிக் கொண்டாலும் எதாவது சாதிக்க வேண்டும் என்று மனத்தில் எப்போதும் நினைக்கும் அவர் இலட்சிய நோக்கு  இரவு பகல் பாராத அவரது தளராத செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தது.  'இந்தியாவில்  இப்பொழுது இரவு மணி இரண்டாச்சே!  தூங்கப் போங்க சார்; நான் அனுப்பி வைக்கிறேன்; அதை நாளைக்கு நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்' என்று வற்புறுத்தி சொல்லியும் பல சமயங்களில் அதைக் கேட்டுக்கொண்டதில்லை அவர். 'அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலை முடிந்தாக வேண்டிய' மனநிலை அவருக்கு.  அதே மனநிலையை அங்கிருந்து கொண்டே இங்கு எனக்கு அவர் டிரான்ஸ்பர் பண்ணியது தான் அதிசயம்.  நானும் என் சொந்த வேலைகளுக்கு பகல் நேரம்,  இந்த போட்டி வேலைகளுக்கு இரவு நேரம் என்று ஒதுக்கி வைத்துக் கொண்டது,  எந்த சுணக்கமும்  இல்லாமல் ஒவ்வொரு வாரமும் குறித்த நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட  விமரிசனங்கள் வெளியாவதற்கு பெரும் துணையாயிருந்தது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.போட்டிக்கான கதைகளையும், தேர்வு பெற்ற விமரிசனங்களையும் மிகப்பிரமாதமாக ஜோடனை பண்ணி வெளியிட வேண்டும் என்கிற அவரது தணியாத 'பிரசண்டேஷன் ஜாலம்'  அவரது பணி நேரத்தின் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
   


நானோ போட்டிக்கு வரும் விமரிசனங்களின் தரத்தை உயர்த்த எனக்குத் தெரிந்த எல்லா முயற்சிகளையும் செய்தேன். பத்திரிகை எழுத்தைப் போலவோ அல்லது அதை விஞ்ச வேண்டுமென்றோ நினைத்து செயல்பட்ட ஒரு இலட்சியம் எனக்கு இருந்தது. சொல்லப்போனால அந்த இலட்சியம் தான் என்னை வழிநடத்தியது.  அதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டதால் தான் விமரிசனர்களுக்கும் அவர்களின் எழுத்துக்களில் சில மாற்றங்களைக் கொள்ள வேண்டி சில ஆலோசனைகளைச் சொல்ல வேண்டியதாகி விட்டதே தவிர அதற்கென்று  தனிப்பட்ட வேறு எந்தக்  காரணமும் இல்லை. கதாசிரியருக்கு வக்காலத்து வாங்குவதற்காகவோ, எங்கும் இல்லாத அதிசயமாக நடுவரும் விமரிசகர்களில் ஒருவராக வேண்டும் என்ற எண்ணத்தினாலோ இந்தக் காரியம்  நிகழவில்லை.  இவ்வளவு சிரமப்பட்டு, இவ்வளவு பரிசுகள் அளித்து  நம் பதிவுலகில் முதல் முறையாக நாம் செயல்படும் மிகப் பெரியவான ஒரு சோதனை முயற்சி இது என்பதாலேயே எல்லா விதங்களிலும் இந்த போட்டி பதிவுலகில் இனி வரவிருக்கும் போட்டிகளுக்கு எடுத்துக்காட்டாய் முன்மாதிரியாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.இன்னொன்று.  போட்டிக்கு வந்திருந்த நிறைய  கட்டுரைகள், நறுக்குத் தெரித்தாற் போல ஓரிரண்டு பாராக்கள் அளவிலேயே எழுதப்  பெற்றிருந்தது இன்னொரு ஏமாற்றம். இவர்கள் இன்னும் கொஞ்சம் எழுதி போட்டி விதியான  A4 சைஸ் காகித அளவையானும் அடைந்திருக்கக் கூடாதா என்று ஏக்கப்பட வைத்தது.  அப்படி ஏக்கப்படுகிற அளவுக்கு அவர்களின்  எழுத்து இருந்திருந்து இப்படி ஏங்கவும் வைத்தார்கள் என்றால் அதை என்னவென்று  சொல்வது என்று  தெரியாமல் திகைக்கிறேன்..தொடர்ந்து சளைக்காமல் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாய்ப்பைப் பெற்றவர்கள் என்னை பிரமிக்க வைக்கிறார்கள்;  அப்படி வெற்றி பெற்றவர்களிலும் இந்த பத்து மாத கால அளவில் அந்தந்த நேரத்து கலந்து கொண்டு தொடர்ச்சியாகக் கலந்து கொள்ளாதவர்களும் உண்டு என்பதினால் அந்தந்த நேரத்தில் கலந்து கொண்டவர்களின் சிறந்த விமரிசனங்கள் பரிசுக்குத் தேர்வானதாக கொள்ள வேண்டுகிறேன். எல்லா நேரத்தும் எல்லாரும் கலந்து கொண்டிருந்திருப்பார்களேயானால் இன்னும் இன்னும் வேறுபட்ட பார்வைகளான விமரிசனங்களை வாசித்து ரசிக்கும் ரசனையும் நமக்கு கிட்டியிருக்கும்.இந்த போட்டி கால அளவில் எல்லோரிடம் தொடர்பு கொண்டிருந்த அரிய வாய்ப்பு கிடைத்ததை பெறும் பேறாக நினைக்கிறேன்..  இந்த நம் நட்பின்  தொடர்பு இதோடு முடிந்து விடாமல் மேலும் தொடர விரும்பி வேண்டி  கேட்டுக்  கொள்கிறேன்.jeeveesblog.blogspot.com  என்பது என் பதிவு தளம்.  அன்பர்கள் தவறாது அந்த தளத்திற்கு வந்து தங்கள் அன்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.  கோபு சாரின் இந்த பதிவு தளத்தை என் தளம் போலத் தான் இந்த போட்டி காலத்தில் பாவித்தேன். அந்த  உரிமையை எனக்குத் தந்த கோபு சாருக்கு நெஞ்சார்ந்த  நன்றி.அன்பர்களே, உங்கள் பேரன்பிற்கும் பரிவுக்கும் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ப்ரியமுள்ள,
ஜீவி
 


    

Respected My Dear Jeevee Sir,

நமஸ்காரங்கள், வணக்கம்.

'அன்பான நெஞ்சங்களுக்கு....’ என்ற தலைப்பினில் தாங்கள் எழுதியுள்ள இந்தக்கடிதம் மிகப்பிரமாதமாக அமைந்துள்ளது. தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

இதில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

//கதையைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே, அந்தக் கதையை எழுதிய எழுத்தளனின் எண்ண அலைகளோடு ஒன்றரக் கலப்பது. எழுதியவனும் வாசிப்பவனுக்குமான எண்ண சங்கமம் இது.  எழுதிய எழுத்தின் ஜீவனை உள்வாங்கிக் கொள்கிற அற்புத ஆற்றல் இது. இந்த ஆற்றல் மட்டும் கைவரப்பெறின் எழுதியவனும் வாசிப்பவனும் இரு வேறு நபர்கள் என்கிற யதார்த்த நிலை உடலுக்கே என்றாகி உள்ள ஒத்திசைவில் ஒன்றரக் கலக்கலாம்.//


ஏற்கனவே நம்மில் ஒரு Set of People இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளால்,  நமக்குள் நாம் உள்ளத்தின் ஒத்திசைவில்  ஒன்றரக் கலந்தே விட்டோம் என்றே எனக்கு நினைக்கத்தோன்றுகிறது. :)

இந்த மகத்தான போட்டிகளின் நிறைவினால், இப்போது நாம் ஒவ்வொருக்கொருவர் சற்றே பிரிய வேண்டிய நிலை,  ஏற்பட இருப்பதை நினைக்கும்போதுதான், மனதுக்குக் கொஞ்சநஞ்சமல்ல நிறையவே வேதனையாக உள்ளது. 

இது காலத்தின் கட்டாயம். தவிர்க்க இயலாதது தான். ஏதேனும் ஒரு ஆரம்பம் என்று இருந்தால் அதற்கு ஒரு முடிவு என்பதும் வேண்டும் தானே ! 

ஏதோ அந்த முடிவு என்பதும், மனதுக்கு நிறைவாக இன்பமாக நிறைவுற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே. அற்ப ஆயுளில் முடியாமல், நூறு ஆண்டுகள் நிறைவாகவே வாழ்ந்த ஒருவர் கனகாபிஷேகம் செய்துகொண்டது போலவே, 100% நம் அனைவருக்குமே திருப்தியாக அமைந்துவிட்டதில் எனக்கும் ஓர் தனி சந்தோஷமே.

இதே இனிய நினைவுகளுடன் நாம் அனைவரும் அவரவர்களின் பதிவினில் தொடர்ந்து சந்திக்கப் பிராப்தம் நமக்கு சாதகமாக அமையட்டும்.
 நன்றியுடன் கோபு  

  
    
அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் 
VGK-31 To VGK-40 போட்டிகளில் 
பரிசு பெற்றவர்கள் பற்றிய 
ஒட்டுமொத்த விபரங்கள் 
அவரவர்களுக்கான 
மொத்தப் பரிசுத்தொகைகளுடன் 
நாளை வெளியிடப்பட உள்ளன 
என்பதை பெருமகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக்கொள்கிறேன். 

பரிசுத்தொகைகள் மின்னல் வேகத்தில் 
தங்களை வந்தடையப்போகும் 
தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  


காணத்தவறாதீர்கள் !

கருத்தளிக்க மறவாதீர்கள் !!


 


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்
38 கருத்துகள்:

 1. எழுத்தாள உள்ளம் பற்றி ஜீவி சார் சொல்லி இருப்பது மிக அருமை.

  //விமரிசகருக்கும் எழுத்தாளருக்கும் பேதமில்லாத அபேத நிலை.//

  எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார், கதை போக்கு இப்படிதான் பயணிக்கும் என்று நாம் நினைத்தை போல் அடுத்த இதழில் கதாசிரியர் எழுதி இருப்பதை படிக்கும் போது ஏற்படும் குதுகலம் இருக்கே! அடுத்தவர்களிடம் சொல்லி மகிழ்வோம். முடிவு இப்படித்தான் இருக்கும் என்று அன்றே சொன்னேன் இல்லையா என்று.

  அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலை முடிந்தாக வேண்டிய' மனநிலை அவருக்கு. அதே மனநிலையை அங்கிருந்து கொண்டே இங்கு எனக்கு அவர் டிரான்ஸ்பர் பண்ணியது தான் அதிசயம். //

  ஒத்த அலைவரிசை உடையவர்களாக இருந்ததால் இருவரும் சாதனை படைக்க முடிந்தது.

  வேலையில் முன்னேற்றமும் ஒழுங்கும்:-

  //எல்லாச் செயல்களிலும் எல்லாப் பணிகளிலும் ஒழுங்கின் அளவு உணர்வுநிலையின் அளவை பொறுத்தது.
  ஞான் விளக்கம் பெற்றது உன் உணர்வுநிலை வளர வளர , பரந்து விரிவடைய விரிவடைய , நீ ஆற்றும் பணியிலும் ஒழுங்கும் சீர்மையும் அதிகரிக்கும்.

  அரவிந்தர் அன்னை சொன்னது போல் இருவரும் செய்யும் பணியில் தங்களை அர்பணித்து சிறப்பாக செய்து நிறைவு செய்தீர்கள்.

  உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இருவரும் வாழ்நாள் சாதனையாளர்கள் தான்.

  பதிலளிநீக்கு
 2. உணர்வு பூர்வமான கடிதங்களின் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மனதுக்கு நிறைவாக இன்பமாக நிறைவுற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே. அற்ப ஆயுளில் முடியாமல், நூறு ஆண்டுகள் நிறைவாகவே வாழ்ந்த ஒருவர் கனகாபிஷேகம் செய்துகொண்டது போலவே, 100% நம் அனைவருக்குமே திருப்தியாக அமைந்துவிட்டதில் எனக்கும் ஓர் தனி சந்தோஷமே.//

  எவ்வளவு அழகாய் சொல்லி விட்டீர்கள்.

  எடுத்த செயலை வெற்றிகரமாக செய்து முடித்து நிறைவு செய்துவிட்டீர்கள். இப்போது உங்களுக்கு மனநிறைவும் உறசாகமும் கிடைத்து விட்டது.

  இந்த மனநிறைவும் , திருபதியும், சந்தோஷமும் தொடர இறைவன் அருள்புரிவார். 100 வயது வாழ்ந்து கனகாபிஷேகம் செய்து கொள்ளவும் இறைவன் அருள்புரிவார்.

  உற்சாகத்துடன் வெளிநாடு சென்று வாருங்கள். குழந்தைகளுடன் மகிழ்ந்து புத்துணர்வுடன் திரும்பி வந்து மேலும் அழகிய பதிவுகள் படையுங்கள்.
  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. ///கதையைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே, அந்தக் கதையை எழுதிய எழுத்தளனின் எண்ண அலைகளோடு ஒன்றரக் கலப்பது. எழுதியவனும் வாசிப்பவனுக்குமான எண்ண சங்கமம் இது. எழுதிய எழுத்தின் ஜீவனை உள்வாங்கிக் கொள்கிற அற்புத ஆற்றல் இது. இந்த ஆற்றல் மட்டும் கைவரப்பெறின் எழுதியவனும் வாசிப்பவனும் இரு வேறு நபர்கள் என்கிற யதார்த்த நிலை உடலுக்கே என்றாகி உள்ள ஒத்திசைவில் ஒன்றரக் கலக்கலாம்.///
  அருமையாக சொல்லியுள்ள ஜீவி அய்யாவுக்கு வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
 5. //தேர்ந்த வாசகரின் இன்னொரு பரிமாணம் தான் எழுத்தாளர். எழுத்தாளருக்கும் விமரிசன குணம் வாய்த்திருந்தால் தான் எதையும் எழுதவே முடியும். வாசக, எழுத்தாள நிலைகளின் உள்ளார்ந்த வெளிப்பாடே விமரிசனங்களும். அதனால் இதெல்லாமே ஒன்றில் ஒன்றாகப் புதைந்திருக்கும் செயல்பாடுகள். தேவைக்கேற்ப எதுவொன்றாகவும் வெளிப்படும்.//அற்புதமாகச் சொன்னீர்கள் ஐயா! ஒரு கதையின் விமர்சனம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதை தங்களின் குறிப்புகள் மூலம் நன்றாக உணரமுடிந்தது. இந்தப் போட்டிக்கு வந்த விமர்சனகளைப் படித்து அவற்றுள் சிறந்தவற்றைப் பரிசுக்குத் தெரிவு செய்தது மிகவும் கடினமான பணி! இந்தப் போட்டியின் வெற்றிக்கு உங்களின் உழைப்பும் திரு வைகோ அவர்களின் உழைப்பும் பெரும்பங்கு வகிக்கிறது என்பதில் ஐயமில்லை! தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 6. //கிட்டதட்ட பத்து மாதங்களுக்கு மேலே; ஏறத்தாழ இருநூறு விமரிசனங்களின் பிரசுரிப்பு; இது ஒரு சாதனையா என்றால், நிச்சயம் சாதனை தான். அதுவும் பதிவுலகில் நிகழ்வுற்ற சாதனை.//மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா! சாதாரணமானவன் என தன்னைக் கூறிக்கொள்பவரின் மிகப் பெரிய சாதனை! 40 வாரங்கள் தொய்வில்லாமல், கால்ம் தவறாமல், கதைகளைப் பிரசுரித்து, அதற்கு ஒரு தகவல், நினைவூட்டலாக ஒரு மின்னஞ்சல், பரிசு விவரம் குறித்து முன்கூட்டியே ஒரு தகவல், பரிசு விவரங்கள் வெளியாவதைக் குறித்து தகவல் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்தால் கடந்த 40 வாரங்களாக இந்தப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் என எண்ணத் தோன்றுகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல உடல்நலத்தை அருள வேண்டிக்கொள்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 7. //போட்டிக்கான கதைகளையும், தேர்வு பெற்ற விமரிசனங்களையும் மிகப்பிரமாதமாக ஜோடனை பண்ணி வெளியிட வேண்டும் என்கிற அவரது தணியாத 'பிரசண்டேஷன் ஜாலம்' அவரது பணி நேரத்தின் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.// நிச்சயம் அதைப் பாராட்டியே ஆக வேண்டும்! பல சமயங்களில் இவருக்கு எங்கிருந்துதான் இப்படியான படங்கள் கிடைக்கின்றனவோ என நான் வியந்ததுண்டு! அவற்றை சரியான இடத்தில், சரியான விதத்தில் அவர் பயன்படுத்தியதை எண்ணி வியந்துள்ளேன்!

  பதிலளிநீக்கு
 8. இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இரு மாமனிதர்கள்! இருவருக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் பணிவான வணக்கங்களும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் நடுநிைலை தவறாத நடுவர் அைமைந்தது எங்கள் பாக்யம் நான் வளர்கிேறேேனே மம்மி நன்றி

  பதிலளிநீக்கு
 10. ஸ்டிரிக்ட் வாத்தியார் நல்ல மாணவர்கைளை உருவாக்க முடியு் அது நடந்தது

  பதிலளிநீக்கு
 11. //இந்த சித்தி வாய்க்கப் பெற்றால் எழுத்தாளன் ஒன்றை நினைத்து எழுத விமரிசனம் எழுதப் புகும் நீங்கள் வேறொன்றாக அதை வியாக்கியானம் பண்ணுகிற விலகிய நிலை ஏற்படாது.//

  ஒரு படைப்புக்கு அதைப் படிக்கும்போது ஒரு கோணம்தான் தோன்றுமா? தோன்ற வேண்டுமா? திருக்குறளுக்கே பல்வேறு விளக்கம் சொல்லும்போது... அவர் பாடல்களைச் சிலாகித்த ஒரு ரசிகரிடம் கண்ணதாசன் கூட ஒருமுறைச் சொன்னார், 'நான் கூட நினைத்துப் பார்க்காத கோணம் அது என்று!

  //சிறந்த விமரிசனம் என்பது தான் தேர்வுக்கான அடிப்படைக் காரணியாக அமைந்து விட்டது.//

  சிலசமயம், ஒரே மாதிரி பார்வைகளைப் படிக்கும்போது சட்டென வித்தியாசமாய் ஒன்று வந்தால் அதுவும் முக்கியத்துவம் பெரும்! அப்படி வித்தியாசமாய் ஒருமுறை எழுதிப் பரிசு பெற்றவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் என்று ஒரு உதாரணம் கூடச் சொல்லலாம். மாறுதலான பார்வை அதன் முக்கியச் சிறப்பு!

  நேர மேலாண்மை உண்மையிலேயே மிகவும் பாராட்டப் படவேண்டிய ஒன்று. ஒருமுறை கூட நேரம் தப்பி வந்ததில்லை என்று நினைக்கிறேன். மனப்பூர்வமான பாராட்டுகள்.

  இதுபோன்ற ஒரு போட்டி இனி வரப்போவதில்லை. இதை விஞ்ச வேண்டும் என்றாலும் அது வைகோ ஸாரால்தான் முடியும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. சிறுகதை விமர்சகர்களுக்கு நடுவர் ஜீவி சாரின் மனந்திறந்த கடிதம் பல விஷயங்களை எங்களுக்குத் தெளிவித்திருக்கிறது. அதற்காக அவருக்கு நன்றிகள் பல. ஒரு எழுத்தாள உள்ளம் எப்படிப்பட்டதாய் இருக்கவேண்டும் என்பதில் துவங்கி எப்படி ஒரு வாசகன், எழுத்தாளனாய், விமர்சகராய் உருமாற்றம் அடைகிறான்… உருமாற்றமடைவதற்கான உந்துதல்களை உள்வாங்கி எந்த வழிகளில் வெளிப்படுத்துகிறான் என்பதை மிக அழகாக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நல்ல வாசகரை, தேர்ந்த எழுத்தாளரை, சிறப்பான விமர்சகரை நடுவராய்த் தேர்ந்தெடுத்த கோபு சாருக்கே அனைத்துப் பெருமைகளும்.

  இந்தப் போட்டியானது இன்னும் பல அற்புத எழுத்தாற்றல் கொண்டவர்களையும் தேர்ந்த விமர்சகத் திறமை உள்ளோரையும் சென்றடையாத ஆதங்கமும் அவர் வரிகளில் தொணிக்கிறது. அந்த வருத்தம் இப்போட்டியில் பங்கேற்ற எங்களுக்கே கூட உண்டு என்னும்போது விமர்சனங்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவருக்கு இருக்காதா? ஒரே மாதிரியான விமர்சனங்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போவதோடு அவற்றிலிருந்து ஏதோவொன்றையே தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தம் மிகவும் துரதிஷ்டவசமே.

  வெளிநாட்டில் இருந்தாலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பையும் கொடுக்கப்பட்ட கடமையையும் சரிவர நிறைவேற்றும் பொருட்டு நடுவர் ஜீவி சார், தன்னுடைய வலையில் சொந்தப் படைப்புகளையும் ஒத்திவைத்துவிட்டு, போட்டியை நடத்தும் கோபு சாருக்கு முழு ஆதரவு தரும் வகையில் அவருக்கு நிகராக தானும் உறக்கம் தொலைத்து செயலாற்றியமை மிகுந்த பாராட்டுக்குரியது. இத்தனை வாரங்கள் எங்களை விமர்சனம் என்னுமொரு புதிய தளத்தில் வழிநடத்திய தங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் ஜீவி சார்.

  பதிலளிநீக்கு
 13. ஆழ்ந்த எண்ணங்களின் அழகான வெளிப்பாடு.

  ஹிஹி.. நானும் ஒரு கடிதம் சந்தடி சாக்கில் எழுதி விடுகிறேனே?

  கடைசி சில நாட்களில் இந்தப் போட்டியின் புள்ளி விவரங்கள் வெளிப்படத் தொடங்கியதும் சற்று திகைத்தேன் என்பது உண்மை. அதிகமாகத் திடுக்கிட்டேன் என்பதும் உண்மை.

  இத்தனை பேர் எழுதுவார்கள், அதுவ்ம் தொடர்ந்து நாற்பது போட்டிகளுக்கும் பலர் விமரிசனங்கள் எழுதுவார்கள் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

  எழுத்து என்பது ஒரு உந்துதலின் வெளிப்பாடு - விமரிசனம் என்பது இரட்டை உந்துதல்களின் ஆக்கம்.

  எண்ணமும் உற்சாகமும் இருந்தால் எழுதத் தொடங்கலாம். விமரிசனம் என்பது இன்னொன்றைப் படித்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய முனைப்பு.

  ஒவ்வொருவருக்கும் ஒரு muse என்றாலும், நான் படிப்பது என்னை ஏதாவது ஒரு வகையில் ஈர்த்தாலோ பாதித்தாலோ மட்டுமே என்னால் விமரிசனம் எழுத முடியும். எத்தனையோ ரசித்தாலும் அந்த ரசனையை விமரிசனமாக வெளிப்படுத்த ஒரு கூடுதல் பாதிப்பு தேவைப்படும். அந்த வகையில் கோபு சார் போட்டிக் கதைகள் அத்தனையையும் படித்தாலும், விமரிசனம் எழுதத் தோன்றாது விட்டிருக்கிறேன். சில நேரம் எழுதத் தொடங்கி முனைப்படங்கி முடக்கியிருக்கிறேன். விமரிசனம் எழுதியனுப்பாவிட்டால் கோபு சார் குறைந்துவிட மாட்டார் என்ற சற்றே கீழ்த்தட்டு எண்ணத்தில் எழுத நினைத்ததையும் கைவிட்டிருக்கிறேன். நேரமின்மை என்பது ஒரு அவசர எளிய சாக்கு - இருந்தாலும் நேரமின்மை, பயணம் என்ற சாக்கில் பல கதைகளை படித்துக் கடந்திருக்கிறேன். உங்கள் மற்றும் கோபு அவர்களின் கடையுரைகளைப் படிக்கப் படிக்க இந்தப் போட்டியில் எத்தனை பேர் கடமைக்காக எழுதாமல் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதறிந்து ஆணவமடங்கி உங்கள் முன் நிற்கிறேன்.

  நாற்பது போட்டிகளிலும் கலந்து கொண்டவர்களை எத்தனை பாராட்டினாலும் போதாது. கோபு சாரின் விமரிசனப் போட்டி சிறப்பாக நடக்க வேண்டும், அந்த சிறப்பில் தங்களின் பரிசு பெற்ற அல்லது பெறாத சமர்ப்பணங்கள் அடங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். நீங்கள் சொல்லியிருப்பது போல் காலத்தைக் கடந்து நிற்கப்போகிற இணையக் கடலின் அலைகளாய் இவை ஓசை எழுப்பிக் கொண்டே இருக்கும் என்பதை எண்ணும் பொழுது என் சோம்பேறித்தனம் முகத்திலடிக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. நடுவர் பணி சாதாரணமானதல்ல. நீங்கள் சொல்லியிருப்பது போல அத்தனை விமரிசனங்களையும் படித்து தரம் பிரித்து உங்களுக்குத் தோன்றியபடி (இங்கே சற்று சறுக்கியிருக்கிறீர்கள் என்பது என் எண்ணம் - நாலு வரி தள்ளி பார்ப்போம், இந்தப் பத்தி பாராட்டுக்கான மேடை) பரிசுக்காகத் தேர்ந்தெடுத்து உடனுக்குடன் முடிவுகளை கோபு சாருக்கு அனுப்பி - இந்தப் போட்டி சிறக்க உங்கள் பணியை செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் உழைப்பும் அசர வைக்கிறது.

  எழுத்தாளனும் வாசகனும் ஒன்ற வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அது எழுத்தின் சிறப்பைக் குறைப்பதாக நினைக்கிறேன். முழுப்புரிதல் அவசியம் இல்லை. முழுப்புரிதல் இருந்தால் அந்த ஈடுபாடும் ஒன்றலும் காலத்தால் குறுகிவிடும். விமரிசனம் எழுதுவோர் எண்ணங்களும் அப்படித்தான். கோபு சாரின் கதையைப் படித்து விமரிசனம் எழுதுகிறேன் என்றாலும் என் ஆழ்மனதில் கோபு சார் போல் நான் படித்த அத்தனை எழுத்துக்களும் ஒரு ஒப்பீட்டுக்காகக் காத்திருக்கின்றன. என் விமரிசனம் தனிப்பட்டு படித்த எழுத்தை ஒட்டி இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் எப்படியோ அந்த ஒப்பீடு விமரிசனத்தில் வெளிப்படவே செய்கிறது. அதனால் விமரிசனம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி சொல்லியிருப்பது சறுக்கல். விமரிசனம் என்பதும் விமரிசகரின் வெளிப்பாட்டு உரிமை. விமரிசனம் என்பது கதைமாந்தர் சம்பவங்களை விடுத்து எழுத்தாளரின் நடையையும் வெளிப்பாட்டையும் மட்டுமே சுட்ட வேண்டும் என்ற உங்களின் கருத்துக்கள் நடு நிலையிலிருந்து வழுகின என்று நினைக்கிறேன். கதையின் அத்தனை பரிமாணங்களையும் வாசகரின் பார்வையில், வாசகர் படித்த அத்தனை எழுத்துக்களின் அனுபவப் பார்வையில், வாசகர் சொல்ல விரும்பும் உபரி கருத்துக்களின் எதிர்பார்ப்பில் அமைந்தால் அந்த விமரிசனம் படிக்கவும் சுவாரசியமாக இருக்கும். இல்லாவிடில் வெற்று விமரிசனம். இந்தப் போட்டியில் நீங்கள் தேர்வு செய்த பல விமரிசனங்கள் இப்படி கோபு சாரை தலையில் தூக்கி வைத்து எழுதப்பட்டவை எனத் தோன்றின. பரிசுக்குத் தகுதியற்றவை என்று சொல்ல எனக்குத் தகுதியுமில்லை, உரிமையுமில்லை. அது உங்கள் பணி. எனினும் விமரிசங்களைப் படிக்கும் பொழுது கதையைப் பற்றிய வாசகரது எண்ணங்களை அறிய முடியாமல், நிறைய விமரிசனங்கள் கோபு சாரின் வாழ்த்துப் படலமாகவே அமைந்திருந்தன - என் கணிப்பில். நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்களோ என்ற ஒரு சிறு ஐயம், அவ்வளவே.

  எப்படி இருந்தாலும், இது மாபெரும் பணி. நீங்கள் இருவரும் நிகழ்த்தியிருப்பது பெரும் சாதனை. சந்தேகமேயில்லை.

  உங்களுக்கும் கோபு சாருக்கும் - குறிப்பாக நாற்பது கதைகளுக்கும் சளைக்காமல் விமரிசனம் எழுதியனுப்பி இந்தப் போட்டியின் ஆதாரமாக அமைந்தவர்களுக்கும் - என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்.

  ஏதோ ஒரு சிற்றலையாக இந்தக் கடலில் கலக்கக் கிடைத்த வாய்ப்பில் மெய்சிலிர்த்து அமைகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "விமரிசங்களைப் படிக்கும் பொழுது கதையைப் பற்றிய வாசகரது எண்ணங்களை அறிய முடியாமல், நிறைய விமரிசனங்கள் கோபு சாரின் வாழ்த்துப் படலமாகவே அமைந்திருந்தன - என் கணிப்பில். நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்களோ என்ற ஒரு சிறு ஐயம்"

   குறைகளைப் பட்டியலிட்டு நான் எழுதிய விமர்சனங்கள் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டன. எடுத்துக்காட்டு:- 1
   நிறைகளை விட குறைகளையே அதிகம் சுட்டிக்காட்டி நான் எழுதிய மனசெல்லாம் மத்தாப்பூ விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது.
   http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html
   எடுத்துக்காட்டு 2:- குறைகளை விமர்சித்த ‘மாமியார்’ விமர்சனம் முதற் பரிசுக்குத் தேர்வானது. .
   http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-01-03-first-prize-winners.html

   நீக்கு
  2. விமரிசனங்கள் குறைகளைச் சொல்ல வேண்டுமென்றோ குறை சுட்டிகளுக்கு பரிசு வழங்கவில்லை என்றோ நான் சொல்லவில்லையே? நேரம் கிடைத்தால் என் கருத்தை மீண்டும் படித்துப் பாருங்களேன்?

   நீக்கு
 15. கதையைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே, அந்தக் கதையை எழுதிய எழுத்தளனின் எண்ண அலைகளோடு ஒன்றரக் கலப்பது. எழுதியவனும் வாசிப்பவனுக்குமான எண்ண சங்கமம் இது. எழுதிய எழுத்தின் ஜீவனை உள்வாங்கிக் கொள்கிற அற்புத ஆற்றல் இது. இந்த ஆற்றல் மட்டும் கைவரப்பெறின் எழுதியவனும் வாசிப்பவனும் இரு வேறு நபர்கள் என்கிற யதார்த்த நிலை உடலுக்கே என்றாகி உள்ள ஒத்திசைவில் ஒன்றரக் கலக்கலாம்.


  இந்த சித்தி வாய்க்கப் பெற்றால் எழுத்தாளன் ஒன்றை நினைத்து எழுத விமரிசனம் எழுதப் புகும் நீங்கள் வேறொன்றாக அதை வியாக்கியானம் பண்ணுகிற விலகிய நிலை ஏற்படாது. இந்தக் கதை இப்படித்தான் போக்கு காட்டப் போகிறது, முடியப் போகிறது என்று முன்னாலேயே தெரியும். இந்த நிலை தான் விமரிசகருக்கும் எழுத்தாளருக்கும் பேதமில்லாத அபேத நிலை.// Very correct

  பதிலளிநீக்கு
 16. சாதாரணமானவன் தான் என்று வெகு அடக்கமாக அவர் தன்னைச் சொல்லிக் கொண்டாலும் எதாவது சாதிக்க வேண்டும் என்று மனத்தில் எப்போதும் நினைக்கும் அவர் இலட்சிய நோக்கு இரவு பகல் பாராத அவரது தளராத செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தது. // Our salute too !

  பதிலளிநீக்கு
 17. மகத்தான ஒரு சாதனையை செய்து முடித்து விட்டார்.. இன்னும் இன்னும் கூட அவர் புதுமைகளை யோசிக்கக் கூடியவர் தான். வை.கோ ஸாருக்கு அன்பான நமஸ்காரம் !

  பதிலளிநீக்கு
 18. இரு மடல்களும் மிக அருமை. அனைத்தும் விளக்கமாக எப்படி நடந்ததென அறியக்கூடியதாக இருக்கு. இது சாதாரணமான விஷயமில்லை - மினக்கெட்டு ஒவ்வொன்றாக படிச்சு அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது.

  தங்கள் விடா முயற்சிக்கும் வெற்றிக்கும் இனிய வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.

  பதிலளிநீக்கு
 19. உயர்திரு நடுவர் ஜீவி அவர்களின் இம்மடலை வாசித்தேன்.
  எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி
  அகன்று ஒரே கோணம் ஏற்படுவதே சிறந்த கதை என்பதாய் கருத்து
  தெரிவித்திருந்தார்கள். நாமும் இன்னும் சற்றே மெனக்கெட்டு
  40 கதைகளுக்கும் விமர்சனம் எழுதியிருக்கலாமோ என்று எண்ணம்
  தோன்றி விட்டது.
  (மன்னிக்கவும், எனது பணியும் ஒரு காரணம்.)

  பதிலளிநீக்கு
 20. // அப்படி ஏக்கப்படுகிற அளவுக்கு அவர்களின் எழுத்து இருந்திருந்து இப்படி ஏங்கவும் வைத்தார்கள் //

  அடடா... நாமும் படிக்க முடியவில்லையே என்று ஏக்கம் வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 21. வி. ஜி. சாரின் பதில் மடல் மிகச் சுருக்கமாக முடிந்துவிட்டது போல் தோன்றுகிறதே!!!
  (நெகிழ்ச்சியின் காரணமோ?)

  பதிலளிநீக்கு
 22. கதையைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே, அந்தக் கதையை எழுதிய எழுத்தளனின் எண்ண அலைகளோடு ஒன்றரக் கலப்பது. எழுதியவனும் வாசிப்பவனுக்குமான எண்ண சங்கமம் இது. எழுதிய எழுத்தின் ஜீவனை உள்வாங்கிக் கொள்கிற அற்புத ஆற்றல் இது. இந்த ஆற்றல் மட்டும் கைவரப்பெறின் எழுதியவனும் வாசிப்பவனும் இரு வேறு நபர்கள் என்கிற யதார்த்த நிலை உடலுக்கே என்றாகி உள்ள ஒத்திசைவில் ஒன்றரக் கலக்கலாம்.


  இந்த சித்தி வாய்க்கப் பெற்றால் எழுத்தாளன் ஒன்றை நினைத்து எழுத விமரிசனம் எழுதப் புகும் நீங்கள் வேறொன்றாக அதை வியாக்கியானம் பண்ணுகிற விலகிய நிலை ஏற்படாது. இந்தக் கதை இப்படித்தான் போக்கு காட்டப் போகிறது, முடியப் போகிறது என்று முன்னாலேயே தெரியும். இந்த நிலை தான் விமரிசகருக்கும் எழுத்தாளருக்கும் பேதமில்லாத அபேத நிலை.

  மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். அருமையாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு தங்கள் பதில் கடிதமும் அருமை...

  மிகவும் சிறப்பான முயற்சி.... வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
 23. ஜீ.வீ. சாரின் கடிதம் மிகச் சிறப்பாயிருந்தது. கோபு சாரின் வலது கையாக இருந்து இந்த விமர்சனப் போட்டியை வெற்றி பெற வைத்ததில் உங்களுக்கும் சம பங்கு உண்டு. உங்கள் கடிதம் என்னைச் சிந்திக்க வைத்தது. என் சந்தேகங்களை உங்களிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறேன்:-

  கேள்வி 1:- “வாசகர், விமர்சகர், எழுத்தாளர் என்பதெல்லாம் ஒன்றே ஆன பல நிலைகள் தாம்”
  இது உண்மையா?
  எழுத்துத் திறமை வேறு; வாசிப்புத் திறன் வேறு. வாசகர்கள் அனைவருக்கும் எழுத்துத்திறமை இருக்கும் என எதிர்பார்க்க முடியாது அல்லவா?. எனவே தீவிர வாசகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் எழுத்தாளர்களாகவோ, விமர்சகர்களாகவோ இருந்தாக வேண்டிய கட்டாயமில்லை தானே?. மாறாக எழுத்தாளர்கள், தீவிர வாசிப்பாளர்களாகவோ, விமர்சகர்களாகவோ இருக்கலாம், இருக்கமுடியும் என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன?

  “இந்தக்கதை இப்படித்தான் போக்குக் காட்டப்போகிறது; முடியப்போகிறது என்று முன்னாலேயே தெரியும். இந்த நிலை தான் விமர்சகருக்கும் எழுத்தாளருக்கும் பேதமில்லாத அபேத நிலை.”

  கதையின் போக்கையோ, முடிவையோ முன்கூட்டியே வாசகரோ, விமர்சகரோ யூகிக்க முடியும் என்றால், வாசிப்பில் சுவை குறைந்து விடாதா? வாசகர் எதிர்பார்த்தது போல் அல்லாமல், கதையின் போக்கோ முடிவோ மாறி இருந்தால் தானே சுவை கூடும்?
  கேள்விகள் தொடரும்…
  நன்றியுடன்,
  கலையரசி.ஞா

  பதிலளிநீக்கு
 24. கோபு சாரின் அத்தனை கதைகளையும் நான் படித்திருக்கிறேன்.ஆனால் ஏனோ ஒரு கதைக்காவது விமரிசனம் எழுத்வில்லை. எழுதுபவர் அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கதை ஒரு மீடியம். இதில் கருத்துக் கூறப் போனால் அவருடைய எண்ணங்களின் நிறை குறையை சொல்ல வேண்டி இருக்கும். அப்படிச் சொல்வதில் சிக்கல்கள் இருக்கிறது. கதை பிடித்திருந்தால் ரசித்து விட்டுப் போவோம் பரிசுகள் ஏதும் இல்லாதிருந்து கதைகளை விமரிசியுங்கள் என்று கேட்கப் பட்டிருக்குமானால், அதற்கு இதில் கால்வாசி ஈடுபாடாவது இருந்திருக்குமானால் விமரிசகன் எழுத்தாளன் வாசகன் என்னும் எல்லா முனைப்பும் வெளிப்பட்டிருக்கும். நடுவராய் இருக்கும்போது கூடவே வாசகராய் இருப்பதாலும். விமரிசனங்கள் நாம் எண்ணுவது மாதிரி இல்லையே என்று நிச்சயம் நினைத்திருக்க வாய்ப்புண்டு. என் பதிவில் ஒரு கதையை பாதி எழுதிவிட்டு மீதியை வாசகர்களிடம் எழுதுமாறு வேண்டி இருந்தேன். நானும் ஒரு முடிவை எழுதி ஒரு நண்பரிடம் கொடுத்துவிட்டு. என் முடிவுபோல் எழுதியவர்க்குப் பரிசு உண்டு என்றும் சொல்லி இருந்தேன். ஆனால் ஒருவராவது என் முடிவுப்படி எழுதவில்லை. ஏன் சொல்கிறேன் என்றால் எழுத்தாளனும் வாசகனும் ஒரே போல் சிந்திப்பதில்லை என்று கூறத்தான் . அதேபோல் நடுவரும் விமரிசிகரும் ஒரே போல் சிந்திக்காத நிலையில் இப்படி இப்படி விமரிசனங்கள் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் நடுவர் மனதிலும் புகுந்து ஆலோசனைகளாக வெளிப்படவும் வாய்ப்புண்டு.
  கோபு சாரின் தளத்தில்பதிவிட்டு உங்கள் தளத்தில் கருத்துக்களை எழுதுமாறு கேட்பது ஏன் என்று புரியவில்லை. துணிந்து விமரிசனப் போட்டி அறிவித்து, அது வெற்றியடைய எல்லா உத்திகளையும் கையாண்டு சாதனை படைத்த கோபு சாருக்கும் நடுவராய் இருந்து துணை புரிந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. அன்புடையீர்,

  தங்கள் அனைவருக்கும் என் அன்பான பணிவான வணக்கங்கள்.

  நமது வெற்றித் திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அடியேன் இன்றுள்ள அவசர பயணச் சூழ்நிலைகளில், இங்கு அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

  இது நம் ஒவ்வொருவர் வீட்டு மங்கள விழா போன்றதே ... ஏதோ அனைத்தும் அற்புதமாக நல்லபடியாகவே முடிந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியே.

  நம் வெற்றித்திருவிழாவுக்கு 01/11/2014 முதல் இன்று 8-9/11/2014 வரை தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  உயர்திரு நம் நடுவர் திரு. ஜீவி அவர்களும் நாடுவிட்டு நாடு பறக்கும் பயணங்களில் தற்சமயம் மூழ்கியிருக்கக்கூடும் என நான் யூகிக்கிறேன். அவர் தாயகம் திரும்பி சென்னையில் தன் இல்லத்தில் செட்டில் ஆகி, தகவல் தொடர்பு சாதனங்களுக்கான இணைப்புகளும் அவருக்குக் கிடைத்தபிறகு, தங்கள் ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்கக்கூடும் என நான் நம்புகிறேன். பார்ப்போம். Bye for Now.

  என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 26. இன்று தான் இணைய இணைப்பு கிடைக்கப் பெற்றேன். இப்பொழுது தான் எல்லா பின்னூட்டங்களையும் வாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

  அப்பாதுரையின் 'நடுநிலை வழுவிய நடுவர்' கருத்து அவற்றில் ஒன்று. தன் சொந்த தளத்தில் 'பாவம் நடுவர்' என்று பதிந்தவர் இங்கு வேறொரு வெளிப்பாட்டில் தன் கருத்தைப் வலியுறுத்துகிறார். ஒரு குற்றச்சாட்டு மாதிரி தன் கருத்தை அவர் எடுத்து வைத்தாலும் அதுவும் ஒரு இலக்கிய சர்ச்சையே என்று கொள்கிற தெளிவு எனக்குண்டு. போட்டி விழாக்கள் நிறைவுற்ற நிலையில் இந்த சர்ச்சையை இங்கு துவங்குவது அவ்வளவு சரியாக இருக்காது. 'தமிழில் விமரிசனக் கலை' என் கிற தலைப்பில் என் பதிவில் விரைவில் ஒரு பதிவு பதிகிறேன்.
  அங்கு நின்று நிதானித்து நம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

  இந்தப் போட்டியைப் பொறுத்தமட்டில் விமரிசனங்கள் இப்படியெல்லாம் அமைந்தால் அவை இயல்பாகவே சிறப்புப் பெறும் என்று தமிழில் விமரிசனங்கள் பற்றிய என் கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். போட்டிக்கானத் தேர்வில் என் கருத்தை வலியக் கொண்டு அப்படியான கட்டுரைகளை மட்டுமே நான் தேர்வு செய்யாததே நடுநிலையிலிருந்து நான் வழுவவில்லை என்பதற்கு அடையாளம். நடுவரின் கருத்துக்களின் படி அமைந்த விமரிசனங்கள் தாம் தேர்வாயின என்ற குற்றசாட்டை யாருமே சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன். :)) அப்பாதுரை சாரையும் சேர்த்து. ஏனென்றால் பரிசு பெற்ற அவர் விமரிசனங்களே அவர் சொல்லும் குற்றச்சாட்டிற்கு எதிராக நிற்கும்.

  ஒரே ஒரு நடுவரின் தீர்ப்பு தான் தீர்மானிப்பதாய் இருந்தும்
  எதேச்சாதிகாரமாய் என் எண்ணப்படி இருக்கும் கட்டுரைகளை மட்டுமே தேர்வுக்கு உட்படுத்தாதவாறு நடுநிலை தவறாது மிகவும் தேர்வு சிரமங்களுக்குள் வலிய என்னை உட்படுத்திக் கொண்டேன் என்பதே உண்மை. பெரும்பாலான தருணங்களில் மூன்றாம் பரிசை தேர்வு செய்யும் இறுதி நிலையில் கூட இரண்டு கட்டுரைகளில் இதுவா அதுவா என்று திருப்பிப் திருப்பி அவற்றைப் படித்துப் பார்த்து தேர்வு செய்த சிரமம் எனக்குத் தான் தெரியும்.

  அடுத்து என்னைக் கவர்ந்த இன்னொரு கேள்வி கலையரசி அவர்களிடமிருந்து. வாசகர்--எழுத்தாளர்--விமரிசகர் நிலைகளில் விவாதித்துத் தெளிய வேண்டிய ஒரு ஆக்கபூர்வமான விஷயத்தைத் தொட்டிருக்கிறார்
  கலையரசி அவர்கள். விரைவில் இப்படியான கருத்துக்களை விவாதிக்கிற வசதியளிக்கும் விதத்தில் என் 'பூவனம்' தளத்தில் ஒரு பதிவிடுகிறேன். நம் விவாதங்களை, கருத்து வெளிப்பாடுகளை வைத்துக் கொள்ள அந்தப் பதிவு வசதியாக அமையும் என்று அவருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
  ஆக்கபூர்வமான விவாதங்களால் தமிழில் விமரிசனங்கள் பற்றிய விஷயத்தை மேலெடுத்து செல்லலாம் என்றும் தவறாது அத்தகைய விவாதங்களில் கலந்து கொள்ளவும் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்..

  பின்னூட்டமிட்டுச் சிறப்பித்த அனைவருக்கும் தாமதமாகவேனும் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன்.

  அன்புடன்,
  ஜீவி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "விரைவில் இப்படியான கருத்துக்களை விவாதிக்கிற வசதியளிக்கும் விதத்தில் என் 'பூவனம்' தளத்தில் ஒரு பதிவிடுகிறேன். நம் விவாதங்களை, கருத்து வெளிப்பாடுகளை வைத்துக் கொள்ள அந்தப் பதிவு வசதியாக அமையும் என்று அவருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
   ஆக்கபூர்வமான விவாதங்களால் தமிழில் விமரிசனங்கள் பற்றிய விஷயத்தை மேலெடுத்து செல்லலாம் என்றும் தவறாது அத்தகைய விவாதங்களில் கலந்து கொள்ளவும் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்."

   மகிழ்ச்சி ஜீ.வி. சார். இன்று தான் இப்பதிவுக்கு வந்தேன்.
   என் சந்தேகங்களைத் தீர்க்கும் விதமாகத் தாங்கள் துவங்கவிருக்கும் அந்த விவாதங்களில் கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன். தமிழில் விமர்சனக்கலை பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதத்தைத் துவங்குவதற்கு மிக்க நன்றி. அதன் மூலமாக விமர்சனம் பற்றிய நம் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதோடு, அது பற்றிய புரிதலையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
   நன்றியுடன்,
   ஞா.கலையரசி

   நீக்கு
 27. நடுவரின் பாரபட்சமற்ற தீர்ப்புகள் மெச்சத் தகுந்தவை.

  பதிலளிநீக்கு
 28. போட்டி நடுவர் போட்டி நடத்திய ஆசிரியர் இருவரையம் எவ்வளவு பாராட்டினாலும் அது கம்பிதான். மிக சிறப்பாக நடத்திட்டாங்க. பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 29. மனதுக்கு நிறைவாக இன்பமாக நிறைவுற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே. அற்ப ஆயுளில் முடியாமல், நூறு ஆண்டுகள் நிறைவாகவே வாழ்ந்த ஒருவர் கனகாபிஷேகம் செய்துகொண்டது போலவே, 100% நம் அனைவருக்குமே திருப்தியாக அமைந்துவிட்டதில் எனக்கும் ஓர் தனி சந்தோஷமே.//

  நிறைவான சந்தோஷமான போட்டிபற்றிய நடுவரின் குறிப்புகளும் ஆசிரியரின் சிறப்பான உரையும் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 8:44 PM

   வாங்கோ, வணக்கம்.

   **மனதுக்கு நிறைவாக இன்பமாக நிறைவுற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே. அற்ப ஆயுளில் முடியாமல், நூறு ஆண்டுகள் நிறைவாகவே வாழ்ந்த ஒருவர் கனகாபிஷேகம் செய்துகொண்டது போலவே, 100% நம் அனைவருக்குமே திருப்தியாக அமைந்துவிட்டதில் எனக்கும் ஓர் தனி சந்தோஷமே.**

   //நிறைவான சந்தோஷமான போட்டிபற்றிய நடுவரின் குறிப்புகளும் ஆசிரியரின் சிறப்பான உரையும் அருமை..//

   தங்களின் அன்பான வருகைக்கும் ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 30. இப்பதான் மயக்கம் தெளிஞ்சுது.

  பிரபலமான பத்திரிகைகளால கூட இப்படி ஒரு போட்டி நடத்தவே முடியாது. இதுவரை நடத்தியதா சரித்திரமும் இல்லை. இனியும் வரப்போவதும் இல்லை.

  நடுவர் திரு ஜீவி அவர்களுக்கும் ஒரு சல்யூட், சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya October 28, 2015 at 8:19 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //இப்பதான் மயக்கம் தெளிஞ்சுது.//

   எப்படி மயக்கம் தெளிஞ்சுது? அந்த டாக்டரம்மா என்ன சொன்னார்கள். Confirm செய்தார்களா இல்லையா? ஸ்வீட் நியூஸுடன் நான் கேட்ட ஸ்வீட் அதிரஸமும் இன்னும் வரவில்லையே :( என் மண்டையே வெடித்துவிடும் போல உள்ளதே !

   //பிரபலமான பத்திரிகைகளால கூட இப்படி ஒரு போட்டி நடத்தவே முடியாது. இதுவரை நடத்தியதா சரித்திரமும் இல்லை. இனியும் வரப்போவதும் இல்லை. //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   //நடுவர் திரு ஜீவி அவர்களுக்கும் ஒரு சல்யூட், சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.//

   மீண்டும் தங்களுக்கு இதற்காக ஒரு ஸ்பெஷல் சல்யூட் :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 31. கமண்டுக படிச்சா மண்ட சுத்து து. சண்ட போடுறாங்களோன்னுகூட நெனக்கேன். அவங்கவங்க கருத்த ஸ்ட்ராங்கா சொல்லிகினு வாராக.

  பதிலளிநீக்கு
 32. நடுவரின் கருத்துகள் மிகச்சிறப்பு வாழ்த்துகள். சந்தோஷம்.

  பதிலளிநீக்கு