என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 22 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 5

 


’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  



7) ’பாலும் பாவையும்’ 
 விந்தன் 
[பக்கம் 48 முதல் 53 வரை]

 


வரிசையாக ஒவ்வொரு தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் வாசித்துக் கொண்டே வரும் பொழுது, எழுத்தாளர் விந்தன் அவர்களைப் பற்றி என் வாசிப்பு அனுபவம் நீள்கையில் என்னையறியாமல் நெகிழ்ந்து போனேன்.

எழுத்தாளர்களில் எத்தனையோ விதம். விந்தனின் நிலைமை, எழுதினால்தான், அடுத்த வேளைக்கு வீட்டில் அடுப்புப்புகையும் என்கிற நிலை. அதனால், தான்பட்ட துயரை போலியாக அல்லாமல் மிகவும் யதார்த்தமாக இவரால் எழுத முடிந்துள்ளது.

அதிகம் பள்ளிப்படிப்பு படித்தவரில்லை. கல்கி பத்திரிகையில் சாதாரண அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக பணியில் அமர்ந்தவர். தனது எழுத்துக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும்வரை, திருப்தியடையாமல், ’ப்ரூஃப்’ ஆக வரும்போது பலமுறை பலவற்றை இடைஇடையே சேர்த்துக்கொண்டே போகும் வழக்கம் உடைய அமரர் கல்கி அவர்களிடமே, கொஞ்சமும் சலித்துக்கொள்ளாமல் ஈடுகொடுத்து நல்லபெயர் வாங்கியவர் விந்தன்.  

விஜி என்ற பெயரில் எழுதத்துவங்கிய கோவிந்தனுக்கு ’விந்தன்’ என்று புனைப்பெயர் சூட்டியவர் அமரர் கல்கி ஆவார். விந்தனின் எழுத்தாற்றலை நன்கு புரிந்துகொண்ட கல்கி அவர்கள், அவரை ‘கல்கி’ பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் ஒருவராக்கி தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார். 

இந்த நேரத்தில்தான் விந்தனின் தனிச்சிறப்பான ‘முல்லைக்கொடியாள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் அவரின் 25 கதைகளுடன், தமிழகத்தின் நட்சத்திர பிரசுரமாக அன்று திகழ்ந்த ‘ஸ்டார் பதிப்பகம்’ மூலம் வெளியானது. இதற்கு முன்னுரை எழுதியிருந்தவரும் கல்கி அவர்களே. ’தமிழ் வளர்ச்சிக்கழகம்’ என்பது துவக்கப்பட்டு இந்த விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’ நூலுக்குத்தான் முதன் முதலாகத் தனது முதல்பரிசினை அளித்து கெளரவித்தது என்கிறார் ஜீவி. 

’மனிதன்’ என்ற பெயரில் ஓர் பத்திரிகையைத் துவங்கி நடத்தியவர் விந்தன். பிறகு ‘புத்தகப்பூங்கா’ என்ற பதிப்பகத்தையே துணிந்து ஆரம்பித்தவர். ‘பாலும் பாவையும்’ இவரின் மறக்க முடியாததோர் நாவல். 

விந்தனைப்பற்றியும் அவர் தன் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி சாதித்துள்ள மேலும் பல வியப்பளிக்கும் செய்திகள் உள்ளன. சிவாஜி + எம்.ஜி.ஆர். சேர்ந்து நடித்துள்ள ஒரே திரைப்படமான ‘கூண்டுக்கிளி’ கதை எழுதியவர் விந்தனே. பிரபலமான பல திரைப்படப்பாடல்களும் இவர் எழுதியுள்ளார். ஒருசில திரைப்பட வசனங்களும் எழுதியுள்ளார் என பல்வேறு தகவல்களைச் சொல்லியுள்ளார் ஜீவி, இந்தத் தன் நூலில். 

அன்றைய அமுதசுரபி ஆசிரியர் வேம்பு (சமீபத்தில் காலமான விக்கிரமன் அவர்கள்தான்) + அந்தக்காலத்தில் தினமணி பத்திரிகையின் உதவி ஆசிரியரான பிரபல எழுத்தாளர் சாவி போன்றோர் விந்தனின் எழுத்துக்களுக்கு பெரிதும் ஆதரவு அளித்து மேலும் புகழ் சேர்த்துள்ளனர். 

புதுமைப்பித்தனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இடையே அவர்கள் இருவரையும் போலவே எளிய சாதாரண மக்களைப்பற்றி எழுதிப் புகழ் பெற்றவர் இவர் என்று விந்தனைப் பற்றி, ஜீவி இந்த நூலில் தகுந்த சான்றுகளுடன் நிலைநிறுத்தும் பொழுது நம் வாசிப்பு அனுபவம் மேன்மை பெறுகிறது. 

.




பொதுவான சில தகவல்கள்

1971 to 1980 என்னுடைய மிகவும் இளமையான நாட்கள். அப்போதெல்லாம் நம் பாரத நாட்டிலும், குறிப்பாக நம் தமிழ்நாட்டிலும், யாருடைய வீட்டுக்குள்ளும் தொலைகாட்சிப்பெட்டி என்ற ’சனி பகவான்’ நுழையாததோர் பொற்காலம் அது என்று சொல்லலாம். இன்றுபோல கணினி, அலைபேசி போன்ற ’ராகு, கேது’ தொந்தரவுகள் ஏதும் குறுக்கிடாத பொன்னான நாட்கள் அவை.

அப்போதெல்லாம் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரில் சிலர் வீடுகளில் மட்டும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் போன்ற சில பிரபல வார இதழ்களில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் படிப்பது வழக்கம். 

அக்கம்பக்கத்தில் வீடுகள் அமைந்துள்ள ஒருசிலர் கூட்டாக சேர்ந்து பணம் போட்டு இவற்றை வாங்கி, தாங்கள் படித்து முடித்ததும், அடுத்தவருக்குப் படிக்கக் கொடுப்பது வழக்கமாக இருந்ததும் உண்டு. இதை Lending Library என்பார்கள்.

இவ்வாறான கூட்டணி முறையில் என் கைகளுக்கு புத்தகம் கடைசியாக வந்துசேரும் போது அது மிகவும் பழசாகிப்போய் இருக்கும். அதனால் என்னவென்று நினைத்து, நான் என்னைப் பொறுத்தவரை அதனை புதிய புத்தகமாகவே நினைத்து, பொறுமையாக வாசித்து மகிழ்ந்ததும் உண்டு. 

இந்த என் மிகவும் துடிப்பான இளமை காலமான (1971-1980) பத்தாண்டுகளுக்குப்பிறகு, நான் பணி ஓய்வு பெற்ற 2009 வரை, என் குடும்ப + அலுவலகப் பொறுப்புகள் எனக்கு மிகவும் அதிகமாகி, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டதால், என்னால் வார இதழ்கள் எதையும் பொறுமையாக வாசிக்கும் வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது.

1966-இல் அந்தக்கால SSLC (11th Std.) முடித்த எனக்கு மேற்கொண்டு படிக்க மிகுந்த ஆவல் இருந்தும், என்னை அவ்வாறு மேற்படிப்பு படிக்க வைக்க என் வீட்டின் பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. SSLC (11th Std.) கடைசி தேர்வு எழுதிய நாள்: 04.04.1966. மறுநாளே வேலை தேட ஆரம்பித்ததில், ஒரு கஷ்டமான பணியில் மிகக்குறைவான (மாதம் ரூ. 25 மட்டுமே) சம்பளத்தில் 06.04.1966 அன்று பணியில் நான் சேர நேர்ந்தது. 

அந்த சொற்பச் சம்பளமும் நான் தினமும் அதிகாலை ஒருமணி நேரம் வீதம் டைப்ரைடிங் லோயர் + ஹையர் + ஹை ஸ்பீடு படிக்கப் பணம் கட்டவும் அதற்கான வெள்ளைத் தாள்கள் வாங்கவும் மட்டுமே சரியாக இருந்தது. 

பிறகு 01.01.1968 முதல் வேறு ஒரு வேலைக்கு மாறிச்சென்றேன். அங்கு மாதச்சம்பளமாக ரூ. 100 கிடைத்ததுடன், சற்றே கெளரவமான வேலையாகவும் இருந்து, உலக விஷயங்கள் பலவற்றை நான் அறிந்துகொள்ளவும் உதவியது. என் வீட்டுக்கும் என்னால் கொஞ்சம் பணம் கொடுத்து உதவவும் முடிந்தது. 

1970-இல் L I C , I S R O , S B I போன்றவற்றிலிருந்து உத்யோக அழைப்புகள் ஒரே நேரத்தில் எனக்கு வந்தன. இவற்றில் நான் S.B.I. ஐத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, பெரம்பலூர் மதன கோபாலபுரம் கிளையில் சில மாதங்கள் மட்டும் பணியாற்றினேன். அப்போது திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு மொபஸல் பஸ் பயண நேரம் 1 மணி + 45 நிமிடங்கள். அதற்கு பஸ் சார்ஜ் அன்று ரூ. 1 - 50 மட்டுமே.

பிறகு 1970 நவம்பரில் என் சொந்த ஊரான BHEL திருச்சியில் நிரந்தரமான பணிக்கு நான் தேர்வானேன். அதனால் SBI Perambalur வேலையை நான் Resign செய்துகொண்டு வந்துவிட்டேன்.

மேற்கொண்டு எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்த நான், என் 40வது வயதில் ஆரம்பித்து 47 வயதுக்குள் மட்டுமே, என் மேற்படிப்பினை தபால் மூலம் தொடர முடிந்தது. மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து B.Com., M.A., (Sociology), PGD in PM and IR ஆகிய மூன்று பட்டங்களைப் பெற்றேன். எல்லாவற்றிலும் First Attempt லேயே என்னால் Pass செய்ய முடிந்தும் எல்லாவற்றிலும் Second Class மட்டுமே எனக்குக் கிடைத்தன.    

என் பள்ளி வாழ்க்கை பற்றி ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு சிறிய தொடராக எழுதியுள்ளேன். அதற்கான பகுதி-1 க்கான இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2012/03/1.html


இந்த எழுத்தாளர் ‘விந்தன்’ அவர்களைப்பற்றி ஜீவி அவர்கள் எழுதியுள்ளதை நான் படித்த கையோடு, ஜீவி சாருக்கு நான் எழுதியிருந்த மின்னஞ்சலின் ஓர் பகுதியை இதோ கீழே கொடுத்துள்ளேன்:



Respected and Dear Sir,

நமஸ்காரங்கள், வணக்கம்.

தங்களின் இந்த நூலில் ‘விந்தன்’ பற்றி படித்ததும், விந்தன் மாதிரியேவோ அல்லது விந்தனுக்கு பதிலாகவோ நான் கல்கியில் அச்சுக்கோர்ப்பவனாக திருவாளர். கல்கி அவர்களிடம் பணிக்குச் சேர்ந்திருக்கக்கூடாதா, என நினைத்து ஏங்கினேன். 

BHEL இல் நான் எவ்வளவோ VERY STRICT and TOUGH BOSS களிடம், மாடாக உழைத்து, SINCERE ஆகப் பணியாற்றி, அவர்கள் ஒவ்வொருவரிடம் நல்ல பெயர் வாங்கி நன்மதிப்பைப் பெற்றவன். 

04.11.1970 இல் BHEL இல் ஓர் சாதாரண WORKER (LOWER DIVISION CLERK) ஆகச் சேர்ந்து, பல்வேறு PROMOTION களுக்குப்பிறகு, 20 ஆண்டுகளில் SUPERVISOR ஆகி, அதன் பிறகு மேற்கொண்டு மூன்று பதவி உயர்வுகள் பெற்று அடுத்த 15 ஆண்டுகளில் CHIEF SUPERVISOR ஆகி என் பணி ஓய்வுக்கு, ஓராண்டுக்குமுன் ஓர் EXECUTIVE ஆகவும் ஆனவன்.

ஒருவேளை, BHEL வேலைக்கு பதிலாக, திருவாளர் கல்கி அவர்களிடம் நான் வேலைக்குச் சேர்ந்திருந்தால், அவர் தயவால், அப்போதுமுதலே நானும் ’விந்தன்’ அவர்களைப்போல ஒரு பிரபல எழுத்தாளராகவே ஆக்கப்பட்டிருப்பேனோ என்னவோ ! 

அதற்கு ஏனோ எனக்குப் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. இப்போது நினைத்து என்ன பிரயோசனம்? 

பிரியமுள்ள 
கோபு 05/03/2016

அதற்கு ஜீவி அவர்கள் எனக்கு எழுதியுள்ள பதில் மின்னஞ்சலின் ஓர் பகுதி இதோ:

பிரமாதம் சார்.

அந்த கல்கி விஷயம் என்னை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணினது.  

’இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்னாடியே பிறந்திருந்து’ என்ற வார்த்தையை மட்டும் இடுக்கில் சேர்த்துக்கொள்ளவும். 


பிரபலம் எழுத்திலா அல்லது வாழ்க்கை வசதியிலா என்பதை காலம் தான் தீர்மானித்திருக்க வேண்டும். எழுத்துப் பணியை மட்டும் ஏற்றுக் கொண்டு தமிழில் பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் வெகு  சிலரே. அவர்களுக்கும் அரசியல், திரைப்படம் போன்ற பின்புலன்கள் இருந்தமையால் தான் அதுவும் சாத்தியமாயிற்று.

நீங்க BHEL  பணியில் நீடித்ததே புத்திசாலித்தனம் என்றும் சொல்வேன்.   

அன்புடன், 
ஜீவி 05/03/2016


8) தனித்துவமாய்த் தெரிந்த 
லா.ச.ராமாமிர்தம்
[பக்கம் 54 முதல் 59 வரை]




புறவுலகை மறந்து எழுதியவரின் எழுத்துடன் அதே அலைவரிசையில் ஐக்கியமாகும் அதி அற்புதம் தான் லா.ச.ரா. அவர்களின் படைப்புகள். பல சமயங்களில் தன்னை ஆட்கொண்ட அவஸ்தைகளை, அந்த அவஸ்தைகளினூடேயே விவரித்திருக்கிறார். அப்படி அவர் ஆட்பட்ட தருணங்களிலிருந்து கொஞ்சமே விடுபட்ட நிலையில்கூட, இந்த அந்நியோன்ய விவரிப்பு அவருக்கு சாத்தியப்பட்டிருக்காது என்று தோன்றுகிறது. கண்ட காட்சிகள் அப்படி அப்படியே; தரிசித்த தரிசன தத்ரூபத்தின் விகசிப்பு அப்படியே அதே வழிசலுடன்... சிந்தாமல் சிதறாமல், சிந்தா  நதியாய்... அதே துள்ளலுடன், அதே துவளளுடன், அதே நெகிழ்தல், குழைதலுடன், அதே பரவசத்துடன், அதே சூட்டோடு பரிமாறியிருக்கிறார். தன் நெஞ்சிலிருந்து பிறர் நெஞ்சுக்கு கூடுவிட்டு கூடுபாயச் செய்திருக்கிறார். அந்த சித்து விளையாட்டை அவர் கற்ற எழுத்தால் நடத்திக்காட்டியிருக்கிறார். அனுபவித்த அனுபவிப்பின் பரவசம், அந்த பரவசத்தினூடேயே எழுத்தாய்.... அந்தத் தவம் அவருக்கு சாத்தியப்பட்டுள்ளது, எனச்சொல்லிக்கொண்டே போய் தகுந்த உதாரணங்களுடன் இந்தத் தன் நூலில் தானும் பரவசப்பட்டு  பல விஷயங்களை எழுதிக்குவித்துள்ளார் ஜீவி.

லா.ச.ரா. அவர்களின் சிறுகதைகள் பலவும் ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற அயல் நாட்டு மொழிகளில்  மொழிமாற்றம் கண்டுள்ளன என்றும் தினமணி கதிரில் பிரசுரமான அவரின் சுயசரிதம் போன்ற ‘சிந்தாநதி’ க்கு பிற்காலத்தில் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார், ஜீவி.  




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
 
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:
  


  வெளியீடு: 24.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 4



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  



5) மனக்கோலங்கள் கொண்ட 
மெளனி
[பக்கம் 36 முதல் 42 வரை]


சுமைகளோ, சுகங்களோ எல்லாமே வெளியிலிருந்து உள்வாங்கிக்கொண்டவை. உள்வாங்கிக்கொண்டது உண்மையானால், பிரயத்தனப்பட்டோமென்றால் உள்வாங்கிக்கொண்டதை அந்த வெளிவளிக்கே திருப்புதலும் சாத்தியமே என்பதே மெளனி சொல்ல வந்ததும். அவர் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பது போல, இப்படி உதிர்ப்பதுகூட வெகு சுலபமான காரியம் தானாம்.  

மெளனியின் தனித்தன்மையே எந்தக் கருத்தையும் வலிந்து பிறரிடம் திணிக்கும் வழக்கம் அவருக்குக் கிடையாது. படைக்கும் கதாபாத்திரங்களைக்கூட அதிர்ந்து பேசி அதட்டத் தெரியாதவர். அவர்களை மிக மென்மையாகக் கையாள்பவர். அதனால்தான் ’அவன்’ அப்படிச் செய்தான் ‘போலும்’ என்று பட்டும் படாமலும் ’அவன்’ நிலைமையைச் சொல்கிற மாதிரி சொல்லிவிட்டுப் போவார். இந்த மென்மை குணம் காரணமாகவே இந்த ‘போலும்’ வார்த்தையை அடிக்கடி அவர் கதைகளில் காணலாம். 

காவிய ஓவியமாய் இடை இடையே கவிதையாய் வரிச் சித்திரங்களாய் கதைகளுக்கு நடு நடுவே வந்துபோகும் வர்ணஜாலங்கள் வேறு இவரின் தனிச்சிறப்பாகும், என்கிறார் ஜீவி.

மெளனியின் முதல் கதையான ‘ஏன்?’; பிறகு வெளியான ‘அழியாச்சுடர்’; ‘பிரபஞ்ச கானம்’ முதலியன ஜீவி அவர்களால் நன்கு அலசி ஆராய்ந்து விஸ்தாரமாகப் பாராட்டிச் சொல்லப்பட்டுள்ளன.


’ஏன்?’ 
கதையில் ஓரிடத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?

பதினாலு வயதுச் சிறுவன் மாதவன் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகையிலே, தனது வகுப்புத் தோழி சுசிலாவிடம், தன் மனக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டவன் போன்று, “சுசீ, நானும் வீட்டுக்குத்தான், சேர்ந்து போகலாமே?” என்று பொருத்தமில்லாமல் கேட்கிறான். 

இதைக்கேட்டதும் சுசிலா திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்து, புருவங்களை உயர்த்தி வியப்புடன் கண்கள் விரியப்பார்த்தது ”ஏன்?” என்று அவனைக் கேட்பது போலிருந்தது.


அப்புறம் என்ன ஆச்சு?


’மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்பது போல ...... 
மீதியை ஜீவி சாரின் நூலில் படியுங்கள் ! :)




6) ‘எழுத்து’ 
சி.சு. செல்லப்பா
[பக்கம் 43 முதல் 47 வரை]


1959 ஜனவரியில் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து ‘எழுத்து’ பத்திரிகையை வெளியிட்டவர். துணிச்சலுடன் ‘எழுத்து’ வெளியீடுகளுக்காகவே ஓர் பதிப்பகத்தையே தொடங்கிய அதிசயத்தையும் செய்தவர். தமிழின் முதல் கவிதை நூலான பிச்சமூர்த்தியின் ’காட்டு வாத்து’ இந்தப்பதிப்பகத்தின் மூலம்தான் வெளியானது. 

பிரசுரமான ‘எழுத்து’ பிரதிகளைத் தானே சுமந்துகொண்டு, ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து, இலக்கிய ஆர்வலர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திய செல்லப்பாவின் பணி பிரமிக்கத்தக்கது. கல்லூரிகளில் படிகளேறினார். மாணவர்களிடையே தமிழ்ச் சிறுகதை, கவிதை, கட்டுரை என்று கொண்டுபோய்ச் சேர்த்தார். எழுத்தார்வம் உள்ள பலரையும் எழுதவைத்து படைதிரட்டிய பெருமைக்குரியவர் என்று செல்லப்பா அவர்கள் பட்ட பாட்டை ஜீவி ஆத்மார்த்தமாக விவரிக்கும் பொழுது நமக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.



இவரின் முதல் சிறுகதையான ’சுதந்திர சங்கு’ பற்றியும் அதன்பின் இவரால் எழுதப்பட்டுள்ள ‘குருவிக்குஞ்சு’ ; ’சரசாவின் பொம்மை’ ; கைதியின் கர்வம்’ ; ‘முடி இருந்தது’ ; ‘பந்தயம்’ முதலிய பலகதைகள் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன இந்த ஜீவியின் நூலில். 

‘ஏறு தழுவுதல்’ என்னும் தமிழர் .... பழந்தமிழர் விளையாட்டை இவரைப்போல இவ்வளவு நுண்மையாக யாரும் சொன்னதில்லை என்கிற பெருமையைப் பெறுகிறது இவர் எழுதிய ‘வாடிவாசல்’ என்கிறார் ஜீவி. 

பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட நேரத்திலும், யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ள அவரின் சுய கெளரவம் இடம் கொடுத்ததில்லை. நியாயமாக இவருக்குக் கிடைத்த பல்வேறு விருதுகள் உள்பட இதில் அடக்கம் என்பதுதான் ஆச்சர்யம். அவரது காலத்திற்குப் பின்புதான் அவரது ‘சுதந்திர தாகம்’ நூலுக்கு சாகித்ய அகாதமியால் விருது கொடுக்க முடிந்திருக்கிறது. 


தன் வாழ்நாளில் இவரால் மறுக்கப்பட்டுள்ள உயரிய விருதுகள்  பலவற்றையும்கூட பட்டியலிட்டுள்ளார் ஜீவி.




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 

  வெளியீடு: 22.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

வெள்ளி, 18 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 3



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  



3) 'மணிக்கொடி'
பி.எஸ். ராமையா
[பக்கம் 26 முதல் 29 வரை]

 

’மணிக்கொடி’யின் முதல் இதழ் பார்த்து ராமையா சொக்கிப்போனார். அந்தப்பத்திரிகையில் பணியாற்ற வேண்டுமென்கிற ஆசையில் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து தமது ஆசையை உரிமையாளர் ஸ்ரீநிவாசனிடம் தெரிவிக்கிறார். ராமையாவுக்கு பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலை கிடைக்கிறது. எந்த வேலையானாலும் சரி, இந்தப் பத்திரிகைக்கு ஏதாவது ஒரு வகையில் உழைக்கவேண்டுமென்கிற உள்ளக்கிடக்கையில் ஒப்புக்கொள்கிறார் ராமையா.

’நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி’ என்று தஞ்சைப்பகுதியில் அந்தக்காலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அந்த மாதிரியான சின்ன ரயில் நிலையங்களில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர்தான் பணிக்கு இருப்பவராய் இருக்கும். டிக்கெட் கொடுப்பதும் அவரே, வெளியேறும் பயணிகளிடம் டிக்கெட் கலெக்ட் செய்வதும் அவரே, பாயிண்ட்ஸ்மேனும் அவரே. அந்த ஸ்டேஷன்மாஸ்டர் மாதிரி, எழுத, பிழைதிருத்த, பேப்பர் வாங்க, தபால் நிலையம் செல்ல, ஸ்டாம்ப் ஒட்டி பார்ஸல் கட்ட என்று ராமையா அந்தப் பத்திரிகைக்கு சகலமும் ஆகிறார். விழிப்பிலும், தூக்கத்திலும் ராமையாவுக்கு மணிக்கொடியே மனசு பூராவும் வியாபித்து அந்தப் பத்திரிகைக்காகத்தான் பிறப்பெடுத்திருக்கிறோம் என்கிறதான நினைப்பு மேலோங்குகிறது.  

'மணிக்கொடி’ பி.எஸ். ராமையா அவர்களை நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி என வேடிக்கையாக ஒப்பிட்டுச் சொல்கிறார் ஜீவி. சுதந்திரப் போராட்ட வீரரான இவரைப்பற்றிய மேலும்  சுவாரஸ்யமான பல தகவல்கள் ஜீவியின் நூலில் உள்ளன.


ஆனந்த விகடன் போட்டியில் பரிசுபெற்ற சமூக சீர்திருத்த புரட்சிக்கதையான ‘மலரும் மணமும்’ பி.எஸ். ராமையா எழுதியதே. 1936ல் மணிக்கொடியில் இவர் எழுதியுள்ள ‘கார்னிவல்’ என்ற கதை பற்றியும், ’போட்டிக் கதை’ என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள சிறுகதை பற்றியும் ஜீவி புகழ்ந்து சொல்லியுள்ளார். 

பி.எஸ். ராமையாவின் மிகச்சிறந்த நாடக ஆக்கங்களான ’தேரோட்டி மகன்’ ‘பூவிலங்கு’ ‘மல்லியம் மங்களம்’ ‘பாஞ்சாலி சபதம்’ என்பவற்றின் சிறப்புக்களையும் ஜீவி மறக்காமல் நமக்கு நினைவூட்டுகிறார். திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படமே பி.எஸ். ராமையாவின் வெற்றி கண்ட நாடகமே என்கிறார் ஜீவி. ‘இந்த மன்றத்தில் .... ஓடிவரும் .... இளம் தென்றலைக் கேட்கின்றேன்... என்ற புகழ்பெற்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம் இது என்பதையும் ஜீவி நமக்கு நினைவூட்டத் தவறவில்லை. 



4) புதுப்பாதை அமைத்த 
புதுமைப்பித்தன்
[பக்கம் 30 முதல் 35 வரை]





எதுபற்றியும் ஊன்றி கவனித்து அதுபற்றி தன்னில் பதிந்ததை அல்லது அதுபற்றி படித்துப் பிடித்ததை கதைகளாக வடித்துவிடும் துடிதுடிப்பு புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் தெரிகிறது. அவர் தரும் கதைகளின் முடிவும் பளீரென்று மின்னல் வெட்டாய் நிகழ்ந்து இதற்குமேல் விவரிக்க என்ன இருக்கிறது என்ற உணர்வையும் தோற்றுவிக்கும் என்கிறார் ஜீவி.

அதற்கு உதாரணமாக ‘பொன்னகரம்’ ‘ஒருநாள் கழித்து’ கல்கி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ [கலைமகளில் வெளியானது]; ‘சாப விமோசனம்’; ‘உணர்ச்சியின் அடிமைகள்’; ‘கயிற்றரவு’; ‘காஞ்சனை’; ‘மனித யந்திரம்’; ‘கபடாபுரம்’ போன்ற பலகதைகளை எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து அவற்றில் உள்ள தனித்தன்மைகளை தனக்கே உரித்தான பாணியில் சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 


ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க வெகு சுவாரஸ்யமாக உள்ளது.




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 


 வெளியீடு: 20.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !!