About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, September 26, 2011

ச கு ன ம் [சிறுகதை - பகுதி 1 of 2]


ச கு ன ம் 

சிறுகதை [பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


அன்று வைகுண்ட ஏகாதசி. விடியற்காலம் மூன்று மணிக்கே நான் அலாரம் வைத்து எழுந்துவிட்டேன். ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவிக்கும் ஆவலில் வெளியூரிலிருந்து ரயிலில் வந்து இறங்கப்போகும் என் மாமியாரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அழைத்துவர நான் திருச்சி ஜங்ஷனுக்குச் செல்ல வேண்டும். அவர்களை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து என் ஆபீஸுக்குச்செல்ல வேண்டும்.

குளித்து முடித்துப் புறப்படத் தயாரானேன்.

“நாலு மணிக்கு பால் பூத் திறந்துவிடும்; தயவுசெய்து இரண்டு அரை லிட்டர் பாக்கெட்டுகள் வாங்கிக்கொடுத்துட்டுப் போயிடுங்கோ; ஜங்ஷனுக்கு போகவர ஆட்டோ பேசிக்கொண்டு விடுங்கோ” புது டிகாக்‌ஷனில், ஃபிரிட்ஜ்ஜில் இருந்த பழையபாலை சுடவைத்துக் கலந்த காஃபியை நீட்டியவாறே அன்புக் கட்டளையிட்டாள் என்னவள்.  


காஃபியை என் கையில் கொடுத்தவள்,  வாசலைப்பெருக்கி, தண்ணீர் தெளித்து, சிறிய கோலம் ஒன்றை அவசர அவசரமாகப் போடலானாள். [வாசலில் தண்ணீர் தெளிக்காமல், காலையில் வீட்டை விட்டு யாரும் எங்கும் வெளியே புறப்பட்டுப் போகக்கூடாது என்பது சாஸ்திர சம்ப்ரதாயமாகும்] 

அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில், காலை ஆறு மணிக்கு மேல்தான் லிஃப்ட் இயக்கப்ப்ட வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. இரண்டாவது மாடியிலிருந்து முப்பத்தாறு படிகள் இறங்கி, தெருக்கோடியில் உள்ள பால் பூத்துக்கும் ஆட்டோவிலேயே சென்று, பால் பாக்கெட்டுகள் வாங்கிவந்து, ஆட்டோக்காரரை ஐந்து நிமிடம் நிற்கச்சொல்லி விட்டு வாங்கி வந்த புதுப்பாலை என் மனைவியிடம் கொடுக்க மீண்டும் படியேறினேன்.

நான் படியேறி மேலே போகும்போது, எண்பது வயதைத்தாண்டிய ஸ்ரீமதிப்பாட்டியும், ஐம்பது வயதாகியும் பிரும்மச்சாரியான அவர்களின் இரண்டாவது மகனும், முதல் மாடியிலிருந்து கீழே இறங்கி காவிரி ஸ்நானத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வயதிலும் அவர்கள் இருவரும் மிகவும் சுறுசுறுப்பானவர்களாகவே உள்ளனர். எனக்கும் தூரத்து சொந்தம் தான். அந்தக்கால உடம்பு. வெய்யிலோ, மழையோ, பனியோ, குளிரோ வருஷம் முழுவதும் விடியற்காலம் நாலு மணிக்குள் எழுந்து, ஐந்து மணிக்குள் கிளம்பி, போகவர சுமார் இரண்டை கிலோமீட்டர் தூரம் நடந்தே போய் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, விபூதியைக் குழைத்து இட்டுக்கொண்டு, சிவப்பழமாக சொட்டச்சொட்ட ஈரத்துணியுடன், காலை ஏழு மணிக்குள் திரும்பி வந்து விடுவார்கள்.  

அந்த ஸ்ரீமதிப்பாட்டியின் கணவர் இருந்தவரை, அவருடனேயே தான் காவிரி ஸ்நானத்திற்கு சென்று வந்தார்கள். முகம் பூராவும் பசுமஞ்சளுடன் பார்க்கவே பறங்கிப்பழம்போல நல்ல சிவப்பாக,நெற்றியிலும், நடுவகிட்டிலும் குங்குமம் வைத்துக்கொண்டு, தீர்க்க சுமங்கலியாகவே சிரித்த முகத்துடன் அழகாக அம்பாள் போல காட்சியளித்தவர்கள் தான். இப்போது கணவர் காலமானபின் கூடத்துணைக்கு தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு தினமும் விடியற்காலம் காவிரிக்குச் சென்று வருகிறார்கள். 

பெரும்பாலும் நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து ஆபீஸ் போக அவசரமாகச் செல்லும் போது, அநேகமாக இவர்கள் இருவரும் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, சிவப்பழமாக எதிரே தென்படுவார்கள்.

ஆரம்ப நாட்களில் எனக்கு நேர் எதிராக வராமல், நான் ஆபீஸுக்கு நல்லபடியாக போய் வரவேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில், சற்றே தயக்கத்துடன் ஒதுங்கி நின்று, வழிவிட்டு விடுவார்கள், அந்தப் பாட்டி.

ஒரு நாள், எனக்கு எதிரே ஏதோ யோசனையில் நடந்து வந்து விட்ட அவர்கள் என்னைப்பார்த்து,  “சிவராமா, ஓரமா ஒரு நிமிஷம் உட்கார்ந்து விட்டு, பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, பிறகு போப்பா” என்றார்கள் அந்த ஸ்ரீமதிப்பாட்டி.
“பாட்டி, நான் சகுனம் ஏதும் பார்ப்பதே கிடையாது. தினமுமே உச்சிப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டும், ஹனுமான் ஸ்லோகம் சொல்லிக்கொண்டும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்து கொண்டும் தான், ஆபீஸுக்குப்போய் கொண்டிருக்கிறேன்;  

மேலும் நீங்கள் பல்லாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, இந்தத் தள்ளாத வயதிலும், மிகவும் மனோ தைர்யத்துடன், தினமும் காவிரி ஸ்நானம் செய்து கொண்டு, பசி பட்டினி இருந்து தினமும் ஜபம், தபம், விரதம் முதலியவற்றை அனுஷ்டித்துக்கொண்டு, பழுத்த பழமாக இருந்து வருகிறீர்கள்.  நான் அலுவலகம் செல்லும்போது தாங்கள் என் எதிரே நடந்து வருவதை, ஒரு மிக நல்ல சகுனமாகவே எடுத்துக்கொள்கிறேன்; 

தொடர்ந்து எரியும் தீபத்தில் எண்ணெயோ அல்லது திரியோ ஏதாவது ஒன்று தீர்ந்து போவது இயற்கை தானே! அதுபோல வயதான தம்பதியினரில், யாராவது ஒருவர் மற்றொருவரை விட்டுவிட்டு, முன்னால் போவதும், தவிர்க்க முடியாத ஒரு இயற்கையின் நியதி தானே!

அதனால் என் எதிரில் தாங்கள் வர நேரும்போது, எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஒதுங்கி நிற்காமல் சர்வ சாதாரணமாகவே வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றேன். 

இதைக்கேட்டதும் ஸ்ரீமதிப் பாட்டிக்கு ஒரே சந்தோஷம். 

“சிவராமா, நீ மஹராஜனா நீண்ட நாட்கள் செளக்யமா, சந்தோஷமா இருக்கணும்டா” என்று வாயார வாழ்த்தினார்கள்.

இந்த அவசர யுகத்தில், விஞ்ஞான உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை அந்த இரு பெரியவர்களுக்கும், நாசூக்காக உணர்த்தி விட்டோம் என்பதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி ஏற்பட்டது.

ரயிலில் வந்திறங்கிய என் மாமியாரை ஆட்டோவில் கூட்டிவந்து என் வீட்டில் விட்டுவிட்டு, அவசர அவசரமாக ஆபீஸுக்குப் புறப்பட்ட நான் ஏழு மணி பஸ்ஸையும் ஓடிப்போய் பிடித்து விட்டேன்.

தொடரும் 
[ இந்த சிறுகதையின் இறுதிப்பகுதி வரும் வியாழன் 29.09.2011 அன்று வெளியிடப்படும் ]
38 comments:

 1. காட்சிகள் கண் முன்னே நடப்பது போல இருக்கு உங்க எழுத்துக்களை படிக்கும்போது .வியாழன் வருகிறேன் .

  ReplyDelete
 2. தலைப்பும் கதை துவக்கமும் மிக மிக
  அருமையாக ஒத்து நடக்கிறது
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 3. நல்ல ஆரம்பம். சகுனம் பற்றி வரும் வரிகள் ரொம்பவும் உண்மை.

  ReplyDelete
 4. கதையின் நடை அருமை. சொன்ன கருத்துக்களும் சரியே..

  ஓவியம் கதைக்கு ஏற்றதாய் இருந்தது சார்.

  த.ம 3.

  ReplyDelete
 5. சன் டிவி மேகத்தொடர் பாக்கிற மாதிரியே ஒரு பீலிங்..

  அருமை..

  ReplyDelete
 6. நல்லதொரு ஆரம்பம்.. சகுனம் பற்றியும், வாசல் தெளிப்பது பத்தியும் ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க..

  ReplyDelete
 7. நல்ல தொரு ஆரம்பம். விவரிப்பு நல்லா இருக்கு.

  ReplyDelete
 8. என் அப்பா இறந்தவுடன், என் அம்மா ஒதுங்கிப் போனபோது, கதையில் வருபவர் போலவே என் நாத்தனார் சொன்னபோது உயர்ந்த அவர் மதிப்பு, இன்னும் உயரத்திலேயே நிற்கிறது!

  அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!

  ReplyDelete
 9. சகுனம் பார்த்து எழுதின கதை தானே இது! அதான் சூப்பரா இருக்கு!

  ReplyDelete
 10. தொடர்ந்து எரியும் தீபத்தில் எண்ணெயோ அல்லது திரியோ ஏதாவது ஒன்று தீர்ந்து போவது இயற்கை தானே! அதுபோல வயதான தம்பதியினரில், யாராவது ஒருவர் மற்றொருவரை விட்டுவிட்டு, முன்னால் போவதும், தவிர்க்க முடியாத ஒரு இயற்கையின் நியதி தானே!

  உங்கள் நல்ல குணம் கதைப் போக்கில் அழகாய் வெளிப்பட்டு விட்டது.

  ReplyDelete
 11. சில நேரங்களில் இந்த மூட நம்பிக்கை நம்மள குழப்பிவிடுகிறது.பின்னூட்டங்களை படிக்கும்முன் பூனை
  குறுக்க ஓடுது சார்.நானும் சகுணம் பார்ப்பதில்லை.நானும் தொடருகிறேன்.

  ReplyDelete
 12. சகுனத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கதை போகுமோ.?அடுத்த பதிவில் தெரியுமே. தொடருகிறேன்.

  ReplyDelete
 13. கதையின் முதல் பகுதியிலேயே நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கீங்க! கதைக்கேற்ற உங்கள் ஓவியமும் அருமை...

  வியாழன் என்று வரும் என அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 14. கதையை அழகாய் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்ந்து அனுபவித்தவர்களின் ஆசியை விடவும் சகுனம் முக்கியமில்லை தான்.

  ReplyDelete
 15. படம் நன்றாக வந்திருக்கிறது ஐயா. :-)

  ReplyDelete
 16. [வாசலில் தண்ணீர் தெளிக்காமல், காலையில் வீட்டை விட்டு யாரும் எங்கும் வெளியே புறப்பட்டுப் போகக்கூடாது என்பது சாஸ்திர சம்ப்ரதாயமாகும்/

  ஆழ்ந்த ந்ம்பிக்கை.சிறப்பாக கவனித்து வெளியிட்ட திறமைக்குப் பாராட்டுக்க்கள்...

  ReplyDelete
 17. பூனையை ஓட விட்டிருக்கிறீர்களே அருமையாய் சகுனத்திற்க்கு.
  அழகுதான்.-

  ReplyDelete
 18. உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை அந்த இரு பெரியவர்களுக்கும், நாசூக்காக உணர்த்தி விட்டோம் என்பதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி ஏற்பட்டது./

  திருப்தியான திருப்பம் கதையில்..

  ReplyDelete
 19. அன்று வைகுண்ட ஏகாதசி. விடியற்காலம் மூன்று மணிக்கே நான் அலாரம் வைத்து எழுந்துவிட்டேன். ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவிக்கும் ஆவலில் //

  எத்தனை எத்தனை வைகுண்ட ஏகாதசி சேவைகள் கண்டு களித்தோம்.
  அருமையான மலரும் நினைவுகளை ஆரம்பித்த கதைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, சிவப்பழமாக எதிரே தென்படுவார்கள்.

  கங்கையிலும் புனிதமான காவிரிஸ்நானம் செய்து சிவப்பழமான் தரிச்னம்..அருமை.

  ReplyDelete
 21. ரொம்ப நல்ல சப்ஜெக்ட் கதைக்கு எடுத்துண்டு இருக்கிறீர்கள்.அதைக் கதையாகக் கொண்டு சென்றிருக்கிற விதம் அருமையாக உள்ளது.ஆர்வத்துடன் படித்து வரும் போது தொடரும் போட்டுட்டீங்களே?

  ReplyDelete
 22. காட்சியை கண் முன் கொண்டு வந்து எழுத்து கிரேட் சார்... அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க...

  ReplyDelete
 23. தங்களுக்கே உரியபாணியில்
  கதை தொடர்கிறது.
  தொடர்வேன்..
  நன்றி!

  புலவர் சா இராம‍நுசம்

  ReplyDelete
 24. நேற்றுவரை சுபசகுனமாக கருதியவரை அபசகுனமாக பார்ப்பதும் முகம் சுளிப்பதும் சரியல்ல. அடுத்த நிமிடம் என்ன நட்க்கும் என்பதே தெரியாத இந்த உலகில் இது போன்ற நம்பிக்கைகளை நான் கடைபிடிப்பதில்லை. சிவசிவா சொல்லியபடியே கிளம்பிவிடுவதுதான். சகுனம் என்ன சொல்லப் போகிறது என்பதை தொடர்கிறேன் சார்.

  ReplyDelete
 25. தலைப்பு அருமை.

  சொல்லிய விதமும் அருமை

  சகுனம் ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை என்னை பொறுத்தவரை.

  ReplyDelete
 26. I commenced reading your story by a quick glance of the text, then realized that for real old-world pleasure, I should rather slow down and enjoy. That's what I did. A nice beginning.

  ReplyDelete
 27. காட்சியமைப்போடு கூடிய கதை வெகு அருமை. வியாழனுக்கு காத்திருப்பு..

  ReplyDelete
 28. அருமையான ஆரம்பம்.சகுனம் பற்றிய விழிப்புணர்வு கதையாக இருக்கும் என நினைகிறேன்.அடுத்த பகுதியை ஆர்வத்துடன் எதிர்பார்கிறேன்.

  ReplyDelete
 29. இந்தச் சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்களை ஆதரவாகக்கூறி, உற்சாகப்படுத்தி, பாராட்டியுள்ள, என் அருமைத் தோழிகள் 13 பேர்களுக்கும், என் அருமைத் தோழர்கள் 11 பேர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இந்த ‘சகுனம்’ என்ற சிறுகதைக்கு இண்ட்லியில் யாருமே வோட்டுப் போட முடியாதபடிக்கு ஏதோ சகுனத்தடை ஏற்பட்டு விட்டதாகத் தெரிகிறது. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்வோம். OK யா!

  இதன் அடுத்தபகுதியில் வரும் வியாழன் அன்று சந்திப்போம்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 30. சிவராமன் புரட்சிக்காரர்தான். அவருக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 31. சகுனம் ஜோசியம் ஜாதகம் பார்ப்பதெல்லாம் சிலரின்.நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயங்கள்

  ReplyDelete
 32. அடடா! சகுனம் பார்ப்பது அவரவர் சௌகரியம்.

  1976ல தினமும் ஆபீஸ் போகும் போது தினமும் ஒரு பாட்டி எதிர்க்க வருவா. ஒருநாள் அந்த பாட்டி 'மன்னிச்சுக்கோடீம்மா, நான் தினமும் உனக்கு எதிர வரேன்' அப்படீன்னு சொன்னா. நான் 'எங்க பாட்டியும் உங்கள மாதிரி தான். பரீட்சைக்கு போக, எல்லா நல்ல காரியங்களுக்கும் அவங்க ஆசீர்வாதத்தோடதான் போவேன்' அப்படீன்னு சொன்னேன். மறு நாளில் இருந்து தினமும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவல் பூக்க நண்பர்களாகி விட்டோம்.

  ReplyDelete
 33. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.

  நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.

  திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.!

  இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  ReplyDelete
 34. ஆமுங்க சகுனம் பாக்குரதுன்னா இன்னானு இந்த கத படிச்சு வெளங்கிகிடமிடியுது இதெல்லா மூட நம்பிக்கனு ஏன வெளங்கிகிட மாட்டுராங்க

  ReplyDelete
 35. இந்தக்கதைக்கு நீங்கள் வரைந்திருக்கும் படம் மிகப் பொருத்தம். எல்லாருமே மூட நம்பிக்கையை வெறுக்கத்தான் செய்யறா. அதே சமயம் தனக்குனு வரும்போது அத பாக்கத்தான் செய்யறா இந்த கதையிலும் மூட நம்பிக்கை பத்தி விழிப்புணர்வுடன் சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 36. //என் எதிரில் தாங்கள் வர நேரும்போது, எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஒதுங்கி நிற்காமல் சர்வ சாதாரணமாகவே வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றேன். // மனதைத்தொட்ட வரிகள். அந்த முதிய பெண்மணியின் மனம் குளிரும்...வாழ்த்தும்.

  ReplyDelete
 37. சகுனம் பற்றி சரியான புரிதல் தந்த கதை! படைப்பாக்கம் மிக அருமை!

  ReplyDelete
 38. Muthuswamy MN சகுனம் சூப்பர்

  - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980)

  Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

  ReplyDelete