என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-3


ஸ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும், பெங்களூரில் வாழுந்துவரும் பிரபல பதிவர் திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் சமீபத்தில் ஒரு 10 நாட்கள் முன்பே என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தானும் தன் கணவரும் ஓர் உபநயன விழாவிற்காக ஸ்ரீரங்கம் வர இருப்பதாகவும் 20/02/2015 முதல் 25/02/2015 வரை ஸ்ரீரங்கத்தில், அம்மா மண்டபம் அருகே, [சென்னையில் தற்சமயம் உள்ள] தன் சகோதரிக்கு சொந்தமான பூட்டியே உள்ள ஓர் இல்லத்தில் தங்கப்போவதாகவும், திருச்சி பதிவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி, நீங்கள் அங்கு அழைத்து வந்தால் அங்கேயே நம் சந்திப்பினை வைத்துக்கொள்ள செளகர்யமாக இருக்கும் என என்னிடம் ஓர் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

நான் இங்கு திருச்சியில் உள்ள, எனக்கு ஓரளவு நெருக்கமான தொடர்புகள் உள்ள [என்னையும் சேர்த்து] எட்டு நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி முதலியனவற்றை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஏழு நபர்களுக்கும் தகவல் அனுப்பி இந்த இனிய சந்திப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, நானும் எல்லோரையும் ரஞ்ஜனி மேடம் சார்பில் கேட்டுக்கொண்டிருந்தேன்.  

எங்களுக்குள் இதுசம்பந்தமாக பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. 18.02.2015 அமாவாசையன்று திருச்சியிலிருந்து சென்னை செல்ல இருந்த [இந்த எட்டு நபர்களில் ஒருவரான] திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களின் பயணத்தை, இந்த இனிய சந்திப்புக்காகவே ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டோம். அவர்களும் எங்கள் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்ற தன் நீண்டநாள் ஆசையினால் தன் சென்னைப் பயணத்தையே ஒத்திப்போட்டதுடன், ”இந்த இனிய சந்திப்பு,  தன்னுடைய இல்லத்திலேயேதான் நடத்தப்பட வேண்டும் என்றும், அதுதான் தனக்கும் வசதியாக இருக்கும்”  என்ற நிபந்தனையையும் எங்கள் முன் வைத்துவிட்டார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாக நாங்கள் எல்லோருமே ஒருமனதாக, அந்த மூத்த பதிவரின் ஒரே நிபந்தனையை ஏற்றுக்கொண்டோம். 

இவ்வாறாக திருச்சி மாவட்ட பதிவர்கள் சார்பில் திருமதி. ரஞ்ஜனி நாராயணன் தம்பதியினருக்கு, திருச்சி மாவட்ட மிகப்பிரபலமான மூத்த பதிவர் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களின் இல்லத்தில் எங்களால் 22.02.2015 ஞாயிறு மாலை 6 மணி சுமாருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  

இதற்கிடையில், திருமதி. ரஞ்ஜனி அவர்களுக்கு, எழுத்துலகின் மூலம் மிகவும் பழக்கமான, ஆனால் இதுவரை நேரில் சந்திக்காத நம் திருமதி. ராதாபாலு அவர்களை எப்படியும் நான் என்னுடன் கூட்டிவந்தே ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததை என்னால் நன்கு உணர முடிந்தது. 

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html


[இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டியதோர் படம் மேலேயுள்ள இணைப்பினில் உள்ளது]


நிஜப்புலியின் வாலைப் பிடித்த எழுத்துலகப் பெண் புலியான திருமதி. ராதாபாலுவை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பதே என்னுடைய நெடுநாள் ஆவலாகவும் இருந்து வந்தது.  

ஆனால் ராதாபாலு அவர்கள் அப்போது தன் மகன் வீட்டுக்குச் சென்னைக்குச் சென்றிருந்தார்கள். தொடர்புகொண்டு பேசியபோது எப்படியும், சீக்கரமாக திருச்சிக்கு வந்து விடுவேன் என என்னிடம் கூறியது சற்றே ஆறுதலாக இருந்தது. என்னிடம் சொன்னபடியே 17.02.2015 திருச்சிக்குத் திரும்பி வந்து விட்டதாக தகவல் வந்ததும்தான் என் வயிற்றில் புலிப்பால் வார்த்தது போல இருந்தது. 

திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்வது என்பது எனக்கு முன்பெல்லாம் மிகவும் ஆவலாக இருந்து வந்தது. அப்போதெல்லாம் கோயில் பெரியதாகவும் ஊர் சிறியதாகவும் இருந்தது. 

இன்று ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்றாலே எனக்கு மிகுந்த எரிச்சல் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் அந்தமிகப்பெரிய கோயிலைவிட இப்போது ஊர் பெரியதாகி விட்டது. ராஜகோபுரத்தையே மறைக்கும் அளவுக்கு அடுக்குமாடிக் கட்டடங்கள், ஊரின் விஸ்தரிப்புகள், ஏராளமான குடியிருப்புகள், மிக அதிகமான வாகனப் போக்குவரத்துகள், எங்கும் ஒரே பரபரப்புகள், ஜனங்கள் கூட்டம், டூரிஸ்டுகள், கல்யாண மண்டபங்கள் எனப்பெருகிப்போய் விட்டன. 

அதுவும் ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு என்ற ஒன்று உள்ளதே .... அது ஸ்ரீரங்கத்திற்கே சற்றும் சம்பந்தமே இல்லாததுபோல .... அடுத்த ஊர் வரை நீண்ண்ண்ண்டு போய்க்கொண்டே உள்ளது. 

தென்னூர் பகுதியில் உள்ள திருமதி ராதாபாலு அவர்களையும், திருச்சி K.K. நகரில் உள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களையும் என்னுடன் சேர்ந்தே கூட்டிப்போக வேண்டியது என் கடமை என உணர்ந்து CALL TAXI PACKAGE ஆக 4 மணி நேரங்களுக்கு வரவழைப்பதாக இருந்தேன்.

இதைக்கேள்விப்பட்ட திருமதி. ராதாபாலு அவர்கள், “கால் டாக்ஸி வேண்டாம், சார், நாங்கள் புதிதாக கார் வாங்கி ஓட்டக்கற்றுக்கொண்டு வருகிறோம் அல்லவா; அந்த எங்கள் சொந்தக்காரிலேயே நாம் மூவரும் செல்வோம்” என ஓர் அன்புக்கட்டளை பிறப்பித்து விட்டார்கள்.  மீண்டும் பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாகிப்போனது, எனக்கு. 

ராதாபாலு அவர்களின் அன்புக்கட்டளையை என்னால் எப்போதுமே மீற இயலாது என்றாலும், ’இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு வருகிறோம்’  என்ற அவர்களின் பேச்சு என்னைக் கொஞ்சம் தயங்கி நடுங்க வைத்து விட்டது. :)

என்னதான் பேரன்புடன் கூடிய .. புலிவாலையே பிடித்த துணிச்சல் மிக்க .. மிகவும் வலுவான நட்புதான் எங்களுடையது என்றாலும், இந்த விஷப்பரிட்சைக்கு நான் ஒத்துக்கொண்டாலும், என்னவள் .... அதாவது என் மேலிடம் இதற்கு ஒத்துக்கொள்ளுமா .... என்ன ! :)  

பிறகு தான் எங்கள் சந்தேகத்தைத் தெளிய வைத்தார்கள். “காரை ஓட்டி வரப்போவது நான் அல்ல, ஒரு அனுபவம் வாய்ந்த ஓட்டுனர், அதனால் நீங்க தைர்யமாக என்னுடன் வாங்கோ” என்று. எங்கள் மனது உடனே ஜில்லிட்டுப்போனது. :)

தான் சொன்னபடி 3.50 மணிக்குள் திரு. தமிழ் இளங்கோ அவர்களும் என் இல்லத்திற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

மிகச்சரியாக 4 மணிக்கு தன் வீட்டை விட்டு கிளம்பப் போவதாகவும், புறப்படும் முன்பு எனக்கு போன் செய்வதாகவும் ராதாபாலு என்னிடம் சொல்லியிருந்தார்கள்.  எப்படியும் ராதாபாலு தன் வீட்டைவிட்டுப் புறப்படும் முன்பு எனக்கு போன் வரும் என்ற நம்பிக்கையில் நானும் ஜாலியாகவே இருந்தேன்.

குணசீலம் கோயிலில் 22.02.2015 ஞாயிறு காலை முடிகாணிக்கை கொடுத்துவிட்டு, வந்துள்ள என் குட்டிப்பேரன் ஆதர்ஷையும், அவன் அண்ணன் அநிருத்தையும் நான் கொஞ்சிக்கொண்டிருந்தேன். 

முதல்முடி இறக்கிக்கொண்டு முதன்முதலாக வீட்டுக்கு வரும் குழந்தையை ஹாரத்தி சுற்றி வரவேற்றதுடன், பால் பாயஸம், தயிர்ப் பச்சடி, பொறித்த அரிசி அப்பளம், ஆம வடை, ஸ்வீட், 2 கறிகள், 1 கூட்டு, நல்ல பச்சரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரஸம், தயிர், ஊறுகாய், நுனி இலையில் சாப்பாடு என தடபுடல் விருந்து சாப்பிட்ட மயக்கம் வேறு எனக்கு.

 

திருமதி. ராதாபாலு அவர்களிடமிருந்து போன் ஏதும் வராததால் நானும் அப்போது புறப்படத் தயார் நிலையில் இருக்கவில்லை.

நம் அன்புக்குரிய திருமதி. ராதாபாலு அவர்கள் 4.05 க்குள் என் குடியிருப்பு பகுதி வாசலில் தன் சொந்தக் காருனுடன் வருகைதந்து என்னை கீழே இறங்கி வருமாறு போனில் அழைத்துவிட்டார்கள். நான் கொஞ்சம் காலதாமதம் செய்திருந்தாலும் ராதாபாலுவே மேலே ஏறி என் இல்லத்திற்கு வந்திருப்பார்கள். மேக்-அப் ஏதும் இல்லாமல் மிகவும் கேஷுவலாக இருந்த என்னைப்பார்த்து பயந்தே போய் இருப்பார்கள். என் இமேஜும் ஸ்பாயில் ஆகியிருக்கும். :)

”இதோ லிஃப்டில் கீழே இறங்கி வந்துகொண்டே இருக்கிறேன்”  என்று  ராதாபாலுவிடம் போனில் சொல்லியபடியே, நான் என் பேண்ட் ஷர்ட் முதலியவற்றை அப்போதுதான் தேடி எடுத்து அணிந்துகொள்ள ஆரம்பித்தேன். :) அவசரத்தில் பெல்ட் போடக்கூட மறந்துவிட்டேன். நல்லவேளையாக இடுப்பிலிருந்து பேண்ட் நழுவாமல், புத்தம் புதிய அரணாக்கயிறு காப்பாற்றியதில் கொஞ்சம் நிம்மதியே. :)

பொதுவாகப் பெண்கள் சீவி முடித்து சிங்காரித்து, நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு, கண்ணாடிமுன் நீண்ட நேரம் நின்றுகொண்டு, புறப்படவும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்பது என் சொந்த அனுபவம். ஆனால் இவர்கள் விதிவிலக்காக டாண் என்று 4.05 க்கே என் வீட்டு வாசலுக்கு காரில் வந்துசேர்ந்து, என்னைக் கீழே வருமாறு அழைத்ததில் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. 

அதுதான் நம் ராதாபாலு அவர்களின் ஸ்பெஷாலிடி ! :)

நம் ராதாபாலு அவர்கள் பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்கள். பயணங்களில் அவர்களுக்கு அனுபவம் மிகவும் அதிகம். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டியதோர் படப்பதிவு இதோ: http://gopu1949.blogspot.in/2015/02/blog-post.html  காணத்தவறாதீர்கள் !

மொத்தத்தில் நாலும் 
தெரிந்த நல்லவர்கள். 

அது என்ன நாலும் தெரிந்தவர்கள் என்றால் ......
ஒன்பது கெஜம் மடிசார் புடவை அணிவது, 
ஆறு கெஜம் சாதாப்புடவை அணிவது
சுடிதார் அணிவது
ஜீன்ஸ் அணிவது

என வைத்துக்கொள்ளலாம் தானே ! :)

-oOo-

அன்று முரட்டுப் புலியுடன் !


இன்று 
முரட்டுப் பாம்புடனும் 
முரட்டு ஆமையுடனும் !!

இவர்களிடம் எதற்கும் கொஞ்சம் உஷாராகவே
பழக வேண்டும் என நினைத்துக்கொண்டேன் ! :)

புலிபோலச்சீறிப் பாய்ந்து, 

பாம்பெனப் படமெடுத்து, 

ஆமைபோல என்னையே 
கவிழ்த்து மூடிவிடுவார்களோ

என்று எனக்கு பயமாக உள்ளது. :) 

-oOo-
ராதாபாலுவின் காரின் பின் இருக்கையில் நானும் 
திரு. தமிழ் இளங்கோ அவர்களும்
ஜாலியாக பயணிக்கும்போது

காருடன் ஜோராகத் தோன்றிடும் 
நம் ராதாபாலு அவர்கள் ! 

குறித்த நேரத்தில் அன்புடன் வருகை தந்து என்னைத் தன் சொந்தக்காரிலேயே அழைத்துச் சென்று, சந்திப்பினில் கலகலப்பாகக் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், திரும்ப என் வீடுவரை என்னை பத்திரமாகக் காரிலேயே அழைத்து வந்து விட்டுவிட்டுப்போன கருணை உள்ளம் கொண்ட ராதாபாலு அவர்களை நான் எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா! 

இரவு என் வீட்டு வாசலிலிருந்து பிரியாவிடை
பெற்றுச்செல்லும் அவர்களின் கார்.

பேரன்புக்குரிய ராதாபாலு அவர்களுக்கும், அவர்களின் ஓட்டுனர் திரு. ரமேஷ் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.


-oOo-

முக்கியமான பதிவர் சந்திப்பினைப்பற்றி இன்னும் ஒன்றுமே சரிவரச் சொல்லாமல், ஏதேதோ நான் புதிய கதைகள் சொல்லிக் கொண்டிருப்பதாகத் தாங்கள் எல்லோரும் முணுமுணுப்பது என் காதிலும் விழுகிறது. என்ன செய்வது? நன்றி மறப்பது நன்றன்று அல்லவா! 

பதிவர் சந்திப்பினைப்பற்றி இந்தத் தொடரின் அடுத்தப்பகுதியில் , மேலும் பல படங்களுடன் சுவாரஸ்யமாகவே பேச ஆரம்பித்து விடலாம் என நினைக்கிறேன்.

தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்,
 
[வை. கோபாலகிருஷ்ணன்]

பின் குறிப்பு:

என் சமீப கால பதிவுகளில் மேலே காட்டியுள்ளது போல
‘என்றும் அன்புடன் தங்கள்’
என்பதற்கும்
’[வை. கோபாலகிருஷ்ணன்]’
என்பதற்கும் 

இடையே ஆங்கிலத்தில் என் கையொப்பம் போலத் தோன்றுகிறது அல்லவா ! அதனை அதாவது என் கையொப்பத்தினை எனக்காக பலவித டிசைன்களில் வடிவமைத்து கொடுத்துள்ளதும் நம் ராதாபாலு அவர்களே ! 

அவர்கள் நீட்டும் இடத்திலெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் சொல்படி நான் சமத்தாகக் கையெழுத்துப்போட்டு வருகிறேன். இதுவரை அழகாக ஆறு கையொப்பங்களை எனக்காக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்கள். இன்னும் அழகாக மேலும் சிலவற்றை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியுள்ளார்கள்.

என் கையொப்பத்தை நான் எப்படியெல்லாம் ஸ்டைலாகப் போடணும் என எனக்குக் கற்றுக்கொடுத்து உதவியுள்ள ராதாபாலு அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

நன்றியுடன் கோபு

35 கருத்துகள்:

 1. சந்திப்பிற்கு பலமான அஸ்திவாரம் போட்டது பற்றியும் எழுத வேண்டுமே....

  சந்திப்பு சமயத்தில் நடந்தவற்றை உங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் February 24, 2015 at 7:28 PM

   வாங்கோ ... வெங்கட்ஜி, வணக்கம்.

   //சந்திப்பிற்கு பலமான அஸ்திவாரம் போட்டது பற்றியும் எழுத வேண்டுமே....//

   :) கரெக்ட் ! அதே அதே !!

   //சந்திப்பு சமயத்தில் நடந்தவற்றை உங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்.//

   சந்தோஷம். மெதுவாகப் பொறுமையாக ஏழு பகுதிகள் வரை இழுத்துச்சென்று இந்த [ரஞ்ஜனித்] தேரினை நிலை நிறுத்தலாம் என நினைத்துள்ளேன்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 2. பதிவர் சந்திப்பு விவரத்துக்குள் நுழையாமல் இந்த விவரங்களிலேயே பதிவை தொடரும் போட்டு விட்டீர்களே... கார்ப் பயணம், பயணத்துக்கு நீங்கள் தயாராகும் கோலாகலம் எல்லாம் படித்து மகிழ்ந்தேன். படங்கள் அருமை.

  ஏதோ ஒரு பேன்ட் ஷர்ட் என்கிறீர்கள்! சஃபாரியில் ஜோராகத்தானே இருக்கிறீர்கள்!

  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். February 24, 2015 at 7:36 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //பதிவர் சந்திப்பு விவரத்துக்குள் நுழையாமல் இந்த விவரங்களிலேயே பதிவை தொடரும் போட்டு விட்டீர்களே... கார்ப் பயணம், பயணத்துக்கு நீங்கள் தயாராகும் கோலாகலம் எல்லாம் படித்து மகிழ்ந்தேன். படங்கள் அருமை.//

   மிகவும் சந்தோஷம். வீட்டைவிட்டுப் புறப்பட்டு நம் பயணம் இனிமையாக முடிந்து, அங்கு நாம் போய்ச் சேர்ந்த பிறகல்லவா பதிவர் சந்திப்பெல்லாம் சாத்யமாகும். அதனாலும் கார் சவாரிக்கு உதவிய காரிகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த ஸ்பெஷல் பதிவு, நம் ராதாபாலுக்கு மட்டுமே என ஒதுக்கி விட்டேன். அப்போது தானே மீண்டும் இதுபோல எங்காவது செல்ல வேண்டும் என்றால் நம்மையும் அவர்கள் மறக்காமல், நீங்களும் என்னுடன் வரேளா என அன்புடன் அழைத்துக் கூட்டிச்செல்வார்கள்! :)))))

   //ஏதோ ஒரு பேன்ட் ஷர்ட் என்கிறீர்கள்! சஃபாரியில் ஜோராகத்தானே இருக்கிறீர்கள்! :))) //

   அப்படியா ? மிக்க நன்றி ஸ்ரீராம். நான் அந்த குறிப்பிட்ட சஃபாரியில் சென்றது, ருக்கு மாமிக்கு ஒருவேளை என்னை ஞாபகம் வருகிறதா எனப் பார்க்க மட்டுமே. அவர்களுடன் ஒரே மேடையில் சென்னையில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இதே உடையில் தான் நான் அன்று சென்றேன். ஆனால் மாமி மிகவும் வயதானவர்கள் .. இதெல்லாம் அவ்வளவாக நினைவு இருக்காது. சுமார் 3-4 வருஷங்களும் ஆயிடுத்து.

   அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 3. பதிவர் சந்திப்பின் சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு செல்கிறீர்கள் கோபு சார். திருமதி ரஞ்சனியும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது எனக்குக் கூடுதல் சுவாரஸ்யம். அவர் தான் இந்த சந்திப்பிற்குக் காரண கர்த்தா என்பது புரிகிறது. அடுத்து என்ன விவரங்கள் தரப் போகிறீர்கள் என்று ஆவலாய் காத்திருக்கிறேன். தொடருங்கள்......

  பதிலளிநீக்கு
 4. சுவாரஸ்யம் குறையாமல் சொல்கிறீர்கள்! தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. நான் என் கணவருடன் வந்திருந்தாலும் காரில்தான் வந்திருப்பேன்.அவர் வர முடியாததால்தான் உங்களுடன் செல்லும்படி கூறினார். இதற்கு நன்றி எதற்கு? கார் டிரைவரின் பெயரைக் கூட கேட்டு வைத்துக் கொண்டு அவருக்கும் நன்றி சொல்லும் தங்கள் பெருந்தன்மையை என்ன சொல்வது?

  படிப்பவர்களுக்கு நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராதா பாலு அவர்கள் ஜம்முன்னு இருக்காங்க. !

   ஒரே குதூகலமா இருக்கு சார் போஸ்ட் படிக்கும்போதே

   நமக்கு எல்லாம் இனி என்ன வேணும் இப்படி அன்பான மனுஷங்களை சந்திக்கிறத விட்டுன்னு நினைக்க வைச்சிட்டீங்க. போங்க. :)

   நீக்கு
  2. Thenammai Lakshmanan February 24, 2015 at 10:26 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் தேனான வருகை தேன் போன்றே மிகவும் இனிமையாக உள்ளது.

   //ராதா பாலு அவர்கள் ஜம்முன்னு இருக்காங்க. !//

   ஆஹா, இதைக்கேட்க எனக்கு .....

   ’இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே !’ :)

   //ஒரே குதூகலமா இருக்கு சார் போஸ்ட் படிக்கும்போதே//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   //நமக்கு எல்லாம் இனி என்ன வேணும் இப்படி அன்பான மனுஷங்களை சந்திக்கிறத விட்டுன்னு நினைக்க வைச்சிட்டீங்க. போங்க. :)//

   ராதாபாலு மிகவும் தங்கமானவர்கள். அன்பானவர்கள். மிகப்பரந்த தாராளமான மிகப்பெரிய மனஸு அவர்களுக்கு.

   தங்களைப்போன்றே அவர்களிடமும் ஏராளமான திறமைகள் பொதிந்து உள்ளன. கடந்த 30 வருடங்களாக பல பத்திரிகைகளில் இவரின் படைப்புகள் வெளியாகிக்கொண்டே உள்ளன.

   பதிவுலகுக்கு மட்டுமே, நம் ராதாபாலு கொஞ்சம் புதியவர்கள்.

   இவர்கள் திருச்சியிலேயே இருப்பினும் 2014 ஜனவரி வரை இவர்களைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாமல்தான் இருந்து வந்தது.

   2014 இல் நான் நடத்திய ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் இவர்களும் அவ்வப்போது கலந்து கொண்டிருந்ததால் எங்களுக்குள் ஒருவருக்கொருவர் பரிச்சயம் ஆனது.

   இப்போது நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்களாகவே ஆகிவிட்டோம்.

   நாங்கள் அவர்கள் வீட்டுக்குச் சென்றதும், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்துபோனதும் பற்றிய செய்திகள் + படங்கள் இதோ இந்தப்பதிவுகளில் கொஞ்சம் உள்ளன:

   http://gopu1949.blogspot.in/2015/02/blog-post.html
   http://enmanaoonjalil.blogspot.com/2015/01/blog-post_31.html
   http://gopu1949.blogspot.in/2014/10/7.html

   இதெல்லாம் தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் கோபு


   நீக்கு
 6. சார், ஜோராக போய் கொண்டிருக்கிறது...
  தொடரும் என்று எப்போது போடப் போகிறாரோ என்று
  பயந்து கொண்டு படிக்க வேண்டி இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திட்டமிடுதலையும், சுவாரஸ்யமாக பகிர்வையும் பிதாமகரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்...

   நீக்கு
 7. பதிவர்கள் சந்திப்பின் ஆயத்தமும், விருந்து சாப்பாட்டின் மயக்கமும், கார் பயணமும்.....சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்க....தொடரும்...என போட்டு எதிர்பார்ப்பை...கூட்டி விட்டீர்கள் சார்...ஆவலுடன் சந்திப்பிற்கு தயாராக இருக்கிறோம். நன்றி

  பதிலளிநீக்கு
 8. “புலிப்பால், மேகப்” .. சிரிக்க சிரிக்க சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.. ரசித்துப்படித்தேன்.
  படங்கள் அனைத்தும் அருமை. அடுத்த பதிவுக்கு ஆவலோட காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAMVI February 25, 2015 at 11:01 AM

   வாங்கோ, வணக்கம்.

   //“புலிப்பால், மேக்கப்” .. சிரிக்க சிரிக்க சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.. ரசித்துப்படித்தேன். //

   தங்களின் நகைச்சுவை ரசனைக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //படங்கள் அனைத்தும் அருமை. அடுத்த பதிவுக்கு ஆவலோட காத்திருக்கேன்.//

   மிகவும் சந்தோஷம். இந்தத் தொடரினில் மொத்தம் ஏழு பகுதிகள் மட்டுமே கொடுப்பதாக உள்ளேன். இதுவரை நான்கு பகுதிகள் வெளியிட்டுள்ளேன். இன்னும் மூன்று மட்டுமே பாக்கியுள்ளன.

   அதன்பின் 01.03.2015 முதல் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிட நான் வருவேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 9. கதை கேட்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் சுவாரசியமாக சொல்லிக் கொண்டே வருகிறீர்கள்.

  கையெழுத்து ஜோராக உள்ளது. நானும் கவனித்தேன். புதிதாக அழகாக உள்ளதேயென....

  நானும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. அறிமுகம் ஆன விதமும், நீங்கள் சந்திப்பில் கலந்து கொள்ளச் செய்த ஏற்பாடுகள் பற்றியும் விரிவாக எழுதி அசத்தி விட்டீர்கள். தொடரக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 11. சமீபத்தில் ஓட்டக் கற்பவரை நம்பி காரில் ஏறப் பயம்; மேக்கப்பின்றிப் பார்த்து விட்டால், இமேஜ் என்னாவது என்ற பயம், முரட்டுப் பாம்பைக் கையில் பிடித்திருப்பதைப் பார்த்துப் பயம், ஆமையைக் கண்டு பயம்….என வரிசையாகப் படித்த போது, தெனாலி கமல் நினைவில் வந்து போனார்…
  நாலும் தெரிந்தவர்கள் என்பதற்கு இப்படியொரு அர்த்தம் இருக்கிறதா? நகைச்சுவை கலந்து வாசிக்க சுவாரசியமாகக் கொடுப்பதற்குப் பாராட்டுக்கள்! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Kalayarassy G February 25, 2015 at 6:44 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சமீபத்தில் ஓட்டக் கற்பவரை நம்பி காரில் ஏறப் பயம்; மேக்கப்பின்றிப் பார்த்து விட்டால், இமேஜ் என்னாவது என்ற பயம், முரட்டுப் பாம்பைக் கையில் பிடித்திருப்பதைப் பார்த்துப் பயம், ஆமையைக் கண்டு பயம்….என வரிசையாகப் படித்த போது, தெனாலி கமல் நினைவில் வந்து போனார்… //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)))))

   //நாலும் தெரிந்தவர்கள் என்பதற்கு இப்படியொரு அர்த்தம் இருக்கிறதா? //

   சும்மா என் கற்பனையில் இப்படியொரு புதிய அர்த்தம் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளேன். :) என்னிடம் கைவசம் சிக்கியுள்ள படங்களுக்குப் பொருத்தமாக ஏதாவது நானும் எழுதனுமோள்யோ ! :)))))

   //நகைச்சுவை கலந்து வாசிக்க சுவாரசியமாகக் கொடுப்பதற்குப் பாராட்டுக்கள்! தொடருங்கள்!//

   என் நகைச்சுவைப்பகுதிகளைத் தாங்களும் [RAMVI] ரமாரவியுமாவது ரஸித்து இங்குக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், குறிப்பாக தங்களின் நகைச்சுவை ரசனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 12. பதிவு மிக மிக அருமை . கட்டுரை போன்றும் இல்லாமல் கதை போன்றும் இல்லாமல் சுவாரசியமாக இருந்தது. பகிர்தலுக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 13. //இன்று ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்றாலே எனக்கு மிகுந்த எரிச்சல் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் அந்தமிகப்பெரிய கோயிலைவிட இப்போது ஊர் பெரியதாகி விட்டது. ராஜகோபுரத்தையே மறைக்கும் அளவுக்கு அடுக்குமாடிக் கட்டடங்கள், //

  அது சரி. எல்லாருக்கும் கோபு அண்ணா மாதிரி ஜன்னல் வழியா மலைக்கோட்டையை தரிசிக்கிற வாய்ப்பு கிடைக்குமா? அவருக்கு மட்டுமா, அவர் வீட்டுக்கு வருகை தர எங்களுக்கும் கிடைக்கறதே.

  வழக்கம் போல் பதிவை சுவாரசியம் துளியும் குறையாமல் கொடுத்திருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்குக் கை வந்த கலையாச்சே.

  ஆனா எனக்கு ஒரு வருத்தம். உங்கள அந்த துபாய்ல போட்டிருந்த டீ ஷர்ட்ல எதிர்பார்த்தேன்.

  உங்க கைநாட்டெல்லாம் சூப்பர்.

  ராதா பாலு மேடத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 14. முடிகாணிக்கை கொடுத்துவிட்டு, வந்துள்ள குட்டிப்பேரன் ஆதர்ஷ்க்கு வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு ஆரம்பம் முதல் நிறைவு வரை அருமையாக இருக்கிறது.
  ராதாபாலு அவர்களின் கார் அழகு. அவர்கள் படமும் அழகு.

  பதிலளிநீக்கு
 15. இந்தப் பதிவை முழுக்க முழுக்க புன்னகையும் சிரிப்புமாய் வாசித்தேன். என்ன அழகான விவரிப்பும் வர்ணனைகளும். நீங்கள் சாப்பிட்ட சாப்பாட்டின் பட்டியல் வாசித்த எனக்கே வயிறு நிறைத்துவிட்டது. குழந்தைக்கு என் ஆசிகள். ராதாபாலு அவர்களைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை தங்கள் மூலம் அறிவதில் மிகவும் மகிழ்வாக உள்ளது. சந்திப்புக்கான ஏற்பாடும் சந்திப்பு பற்றிய பதிவுக்குள் அடக்கம்தானே.. அதனால் இதுவும் தேவையான பதிவுதான். நுணுக்கமாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் அழகாகவும் பதிவுசெய்யும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 16. குட்டிப்பேரனின் மொட்டை அழகு! எங்களின் ஆசிகள்! நாலும் தெரிந்தவர் விளக்கம் புதுமை! பாம்பும் ஆமையும் பயமுறுத்துகின்றன! பதிவு அருமை! இரசித்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்த இனிய சந்திப்பிற்கு மூல காரணகர்த்தாக்கள் ஆன மூன்று பேருக்கு (அய்யா V.G.K, திருமதி ரஞ்சனி நாராயணன் & திருமதி ருக்மணி சேஷசாயி) நன்றி. இதற்காக தனது சென்னை பயணத்தையே தள்ளி வைத்து விட்டு
  பதிவர்கள் சந்திப்பு, தனது இல்லத்தில்தான் நடைபெறவேண்டும் என்று அன்பு கட்டளை இட்ட திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

  நீங்கள் ராதாபாலு மேடத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் புலியைப் பற்றியும் சொல்லி அவருடைய தைரியத்தையும் மெச்சுகிறீர்கள். எனக்கு உடனே புலியை முறத்தால் துரத்திய அந்தக்கால பெண் நினைவுக்கு வந்தார்.

  பதிலளிநீக்கு
 18. சின்னப்பேரன் ஆதர்ஷிற்கு வாழ்த்துகள். நல்ல சாப்பாடும் ரஸிக்கும்படி. நீங்கள் ஸந்தித்த பதிவர்களைப் பற்றி வாசித்தால் அவர் நமக்கு மிகவும் அறிமுகமானவர்போலத் தோன்றுகிறது. இம்மாதிரி எழுதுவது மிகவும் நன்றாகவும் வரவேற்கத் தக்கதாகவும் இருக்கிரது. இதுவும் ஒரு அபூர்வக் கலைதான்.
  எல்லோரும் எழுதாததை நான் என்ன எழுதிவிடப் போகிறேன்?
  உங்களைப்பாராட்ட வார்த்தை தேடவேண்டியுள்ளது.
  பின்னூட்டம்தான் என்னுடயது லேட்டே தவிர படிப்பது உடனேதான். எல்லா பதிவர்களையு பார்த்து ஸந்தோஷம் .
  அதிலும் ப்ளாகரில் பதிவு எழுதுபவர்கள் அடிக்கடி ஸந்திக்கிரார்கள். ஒற்றுமையும் அதிகம். ரஞ்ஜனி நாராயண் அவர்கள் என்னுடன் மிகவும் சிநேகமாக உள்ளவர். மிகவும் ஸந்தோஷம் எல்லா விஷயங்களுக்கும் . அன்புடன்

  பதிலளிநீக்கு
 19. திருமதி. ராதா பாலுவின் கார் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. ஒவ்வொரு பதிவர் சந்திப்பையும் சுவாரசியமா சொல்லிட்டு வறீங்க. படிக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 21. பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாகிப்போன பதிவர் சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:47 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாகிப்போன பதிவர் சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்..//

   அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் பல பழங்கள் நழுவி பாலில் விழுந்து அவைகளும் நழுவி வாயில் விழுவதுபோல, ஒரே பதிவுக்கே ஏராளமான பின்னூட்டங்களை தொடர்ச்சியாக கொடுத்து, ஒரு காலத்தில் என்னை மகிழ்வித்து வந்தத் தாங்கள், இன்று சின்னூண்டு காய்ந்த திராக்ஷைப்பழம் போன்ற ஒரேயொரு பின்னூட்டம் மட்டும் இட்டுள்ளது சற்றே ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் எனக்கு அளித்தது.

   இருப்பினும் உடல்நிலை காரணமாக வெகு நாட்களாக வருகை தராமல் இருந்துவந்த தங்களின் மூலம் இந்த மிகச்சிறிய காய்ந்த திராக்ஷைப்பழம் போன்ற பிரஸாதமாவது இன்று இங்கே எனக்குக் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தேன்.

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

   நீக்கு
 22. ரொம்பதா குறும்பு ஒங்களுக்கு. பாண்ட் நளுவாம இருக்க அருணாகவிரு காப்பாதிச்சுனுலா சொல்லி கிசு கிசு மூட்டிட்டீக. நல்ல சாப்பாடு பத்தி சொல்லினிங்க. அந்த பாயாசம் கன்டலன்ஸ் மில்க் பாயாசமோ???????

  பதிலளிநீக்கு
 23. நகைச்சுவை தூக்கலாக ஒவ்வொரு பகிர்வும் படிக்கும்போதே சிரித்து மகிழ முடிகிறது.

  பதிலளிநீக்கு
 24. //அவசரத்தில் பெல்ட் போடக்கூட மறந்துவிட்டேன். நல்லவேளையாக இடுப்பிலிருந்து பேண்ட் நழுவாமல், புத்தம் புதிய அரணாக்கயிறு காப்பாற்றியதில் கொஞ்சம் நிம்மதியே. :)//இதுலகூட உங்களோட பஞ்ச்..ரசிக்கவைக்கிறது..

  பதிலளிநீக்கு
 25. நீங்க கொடுத்த லிங்க் க்ளிக்பண்ணி இந்த பதிவும் படிச்சாச்சி.. . சந்தோஷ தருணங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... September 27, 2016 at 10:27 AM

   //நீங்க கொடுத்த லிங்க் க்ளிக்பண்ணி இந்த பதிவும் படிச்சாச்சி.. . சந்தோஷ தருணங்கள்..//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு