இனி துயரம் இல்லை
[சிறுகதை ]
By வை.கோபாலகிருஷ்ணன்
தன்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தன் தாய் மரணப்படுக்கையில் அவஸ்தைப் படுவதைப் பார்க்க சகிக்காமல் மிகவும் வருந்தினான் ராஜேஷ்.
தாயின் கைகளை தன் கைகளால் ஆதரவுடன் பற்றினான். ஏதோ சொல்ல வருகிறாள். தொண்டையிலிருந்து குரல் வெளிவரவில்லை. அருகிலேயே அவன் தந்தை மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்துள்ளார்.
தலையணிக்கு அடியிலிருந்து ஒரு பதிவு செய்த ஒலிநாடாவை எடுத்து ராஜேஷிடம் கொடுத்து, போட்டு கேட்கச் சொல்லுகிறாள், அந்தத் தாய். ஒலி நாடாவில் அவன் தாயின் குரல் மிகத் தெளிவாக ஒலிக்க ஆரம்பிக்கிறது.
அன்புள்ள ராஜேஷ்,
“எரியும் விளக்கில் திரி முந்தியோ அல்லது எண்ணெய் முந்தியோ” என்பது போல உன் அப்பாவுக்கு முன்பாக நான் இந்த உலகை விட்டு இன்னும் சில நாட்களுக்குள் போய் விடுவேன் என்று தோன்றுகிறது. என்னால் இப்போது சுத்தமாகப் பேச முடியவில்லை. இதுபோல ஒரு நாள் என் நிலைமை முற்றிவிடும் என்று எதிர்பார்த்த நான், இதுவரை உன்னிடம் நேரடியாக பேசத்தயங்கிய பல விஷயங்களை, மனம் விட்டுப் பேசி பதிவு செய்திருக்கிறேன்.
நான் சுமங்கலியாக பூவுடனும், பொட்டுடனும் போய்ச் சேர்ந்து விட்டதாக இந்த உலகம் நாளை பேசும். ஆனால் சூதுவாது தெரியாத அப்பாவியான குழந்தை மனம் கொண்ட உன் அப்பாவைத் தவிக்க விட்டுச்செல்கிறேனே என்ற ஒரே கவலை தான் என் மனதை வாட்டி வருகிறது.
எங்களின் ஒரே பிள்ளையான நீ, வயதான எங்களுக்கு எல்லா வித வசதிகளும் செய்து கொடுத்துள்ளாய். நிறைமாத கர்ப்பிணியாகிய உன் மனைவியும் எங்களின் சொந்த மகளைப்போலவே, எங்களிடம் அன்பு செலுத்தி வருகிறாள்.
இருப்பினும், வயதான எங்களிடம் நீ சில சமயங்களில் கடுகடுத்த முகத்துடன், எரிந்து விழுந்து, கோபமாக பேசிவிடுகிறாய். உன் சுபாவம் தெரிந்த நான் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால் அது போன்ற சமயங்களில் உன் அப்பாவின் குழந்தை மனம் உடைந்து நொறுங்கிப் போனது உண்டு. இதை பலமுறை உணர்ந்த நான் அவருடன் ஆறுதலாகப் பேசி சமாதானம் செய்துள்ளேன்.
உன் கடமைகளைச் செவ்வனே செய்துவரும் நீ, உன் அப்பாவின் உண்மையான, நியாயமான எதிர்பார்ப்புகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உனக்கு எடுத்துச் சொல்வதே இந்த ஒலிநாடாவின் நோக்கம்.
செல்போன், கம்ப்யூட்டர், இண்டெர்நெட், வாஷிங் மெஷின், ஏ.ஸி போன்ற நவீன தொழில் நுட்ப சாதனங்களைப் பற்றி புரிந்து கொண்டு இயக்கத் தெரியவில்லை என்று எங்களிடம் கோபப்படுகிறாய். வயதான எங்களுக்குப் புரியும் படியாக விளக்க உனக்குக் கொஞ்சமும் பொறுமை இருப்பதில்லை.
நீ சின்னக் குழந்தையாய் இருந்தபோது உன் அப்பா உன் பாடங்களில் உனக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களை உன் மனதில் பதியும் வரை எவ்வளவு பொறுமையாக, அழகான கதைகள் மூலமும், படங்கள் மூலமும் தகுந்த உதாரணங்களுடன் விளக்கிப் புரிய வைத்தார் என்பது எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
வயதான அவரைப்போய், உங்கள் சாப்பிடும் கைகள் அழுக்காக உள்ளன; சுத்தமான சுகாதாரமான நாகரீக உடைகள் அணிவதில்லை; யாராவது வீட்டுக்கு வந்தால் அமைதியாக இருப்பதோ, நாகரீகமாக ஒரு சில வார்த்தைகளுடன் பேசி முடித்துக் கொள்வதோ இல்லை என்றெல்லாம் குறை கூறுகிறாய்.
உன் குழந்தைப் பருவத்தில், குளிக்க வரவே, அடம் பிடித்த உன்னைத் தாஜா செய்து, பாத் ரூம் அழைத்துப்போய், சோப்புப் போட்டுத் தேய்த்து குளிப்பாட்டி, நீயாகவே எப்படி தினமும் ஆசையாகக் குளிக்க வேண்டும், எப்படி அழகாக உடை அணிய வேண்டும், எப்படி தலைக்கு எண்ணெய் தடவி சீப்பினால் சீவி அலங்கரித்துக்கொள்ள வேண்டும், பிறரிடம் எப்படி நாகரீகமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று உனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தவரே உன் அப்பா தானே! என்பதை மறந்து விட்டு, இன்று அவரின் முடியாத வயோதிக நிலைமையில், அவரை உன் விருப்பதிற்கு கட்டுப்படுத்த முயல்வது எப்படி நியாயமாகும்? அடிக்கும் காற்றில், மரத்திலிருந்து விழப்போகும் பழுத்த இலையைப் பார்த்து, துளிர் விடும் பச்சை இலை கேலி செய்யலாமா?
வயதாக வயதாக ஐம்புலன்களும், உடலும், உள்ளமும் சோர்வடைந்து எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. ஞாபக மறதி ஏற்படுகிறது. காது சரிவர கேட்பதில்லை. கண்களில் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எதையுமே மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஞாபகப் படுத்திக்கொள்ள நீண்ட நேரம் ஆகின்றது. கால்களில் உறுதி குறைந்து நடக்கவே கஷ்டமாக உள்ளது. தடிக்குச்சி ஊன்றி நடக்க வேண்டியுள்ள எங்களை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
நீ, குப்பறித்து நீந்தி, தவழ்ந்து, பிறகு பிடித்துக்கொண்டு நிற்க ஆரம்பித்து, அதன் பின் ஒரு நாள் திடீரென்று தத்தித்தத்தி முதல் அடி எடுத்து வைத்த அந்த பொன்னான நாட்களில், நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் உன்னைக்கீழே விழாமல் தாங்கித் தடுத்திருப்போம். வயதான நாங்களும் இன்று அது போன்ற ஒரு குழந்தையே என்பதை நீ உணர வேண்டும், ராஜேஷ்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வயதான பழமான நாங்களும், மேலும் மேலும் வாழ விரும்புவதில்லை. ஏதோ இறுதி மூச்சை எதிர்பார்த்து, நாட்களைக் கடத்தி வருபவர்களே, நாங்கள்.
எங்களையும் அறியாமல், நாங்களும் தலைமுறை இடைவெளியால் உங்களுடன் ஒத்துப்போக முடியாமல், ஏதாவது தவறாகவே கூட நடந்து கொண்டாலும், நீ என்றும் நன்றாக இருக்க வேண்டும், என்பதே எங்களின் மனப்பூர்வமான விருப்பமும், வேண்டுதலும் ஆகும்.
எங்கள் மரணம் கூட, உன் பார்வையிலேயே, நீ எங்கள் அருகில் இருக்கும் போதே, உன் மடியிலேயே நிகழ வேண்டும் என்பதே எங்களின் ப்ரார்த்தனை.
உனக்கு ஒரு மகனோ அல்லது மகளோ பிறந்த பின்பு தான், அதாவது நீயும் ஒரு அப்பா ஆன பிறகுதான், உனக்கு உன் அப்பா அம்மாவின் அருமையும், பெருமையும், பொறுமையும் விளங்கி புரிய ஆரம்பிக்கும், ராஜேஷ்.
எங்களுக்கு எப்போதும் உன் அன்பு வேண்டும்; உன் ஆதரவு வேண்டும்; உன் கனிவான பேச்சு வேண்டும். எங்களின் ஒரே மகனான உன்னிடம் பேசாமல் நாங்கள் வேறு யாரிடம் பேசி, அந்த உண்மையான அன்பை உரிமையுடன் பெற முடியும்? புரிந்து கொள்.....ராஜேஷ்.
இறுதி வரை புன் சிரிப்புடன் நீ எங்கள் மேல் அன்பு செலுத்தி, எங்களின் மன அமைதியுடன் கூடிய இறுதிப்பயணத்திற்கு உதவி செய். முதலில் நான் புறப்படுகிறேன். உன் அப்பாவாவது தன் பேரனையோ பேத்தியையோ ஆசை தீரக் கொஞ்சி விட்டு வேறு ஒரு நாள், என்னிடம் பத்திரமாக வந்து சேர உதவி செய். செய்வாயா? ............ ராஜேஷ்.”
மகனிடம் பேச வேண்டியதெல்லாம் தயக்கம் இன்றி பேசிவிட்டோம் ‘இனி துயரம் இல்லை’ என்று நினைத்தபடி, அந்தத் தாயின் உயிரும் பிரிந்திருக்கும் அல்லவா?
-o-o-o-o-o-o-o-
முற்றும்