About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, June 19, 2013

12] ஆச்சார்யன் யார்?

2
ஸ்ரீராமஜயம்


மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் “ஆச்சாரியன்” என்று வைத்தார்கள்.

ஒன்று: சாஸ்த்ர சித்தாந்தத்தை நன்றாக தெரிந்து கொண்டிருக்க  வேண்டும். 

இரண்டு: தெரிந்ததை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் ஆச்சார சீலராக இருக்க வேண்டும்.

மூன்று: இப்படித் தனக்குத் தெரிந்து கடைப்பிடிக்கும் சாஸ்த்ரத்தைப் பிறருக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் நெறியாக வாழ்க்கையில் நிலை நாட்ட வேண்டும். 

மாணாக்கன் சுத்தனாகவும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். 

சொல்லிக்கொடுப்பதை நன்றாக புரிந்து ஏற்றுக்கொள்வதே 'க்ரஹண சக்தி'.

அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வதே 'தாரணசக்தி'.

ooooooOoooooo

அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10  ..... தங்கள் நினைவுக்காக :  

பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சித்ரா பெளர்ணமி தினம். திருவடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி கோயிலில், மஹன்யாச ருத்ர ஜபத்துடன்  ஓர் அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. 

11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர் திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி என்பவர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்து ருத்ராபிஷேகம் மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது. 

காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரஸாதத்தைப் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் சேர்த்து விடவேண்டும்' என்று தீர்மானித்தார்.

ருத்ராபிஷேகப் பிரஸாதத்தை பயபக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப்பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக்கொண்டார். 

அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை-சென்னை பாஸிஞ்சர் ரயிலில் ஏறினார், மிராசுதார். 

விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி பஸ் பிடித்து காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார் நாராயணஸ்வாமி ஐயர். 

அன்று மடத்தில் ஏகக்கூட்டம். ஸ்நானம் இத்யாதிகளை முடித்துக்கொண்டு, பெரியவா தரிஸனத்திற்காக பிரஸாதத்துடன் காத்திருந்தார் மிராசுதாரர்.

நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜையை முடித்து விட்டு வந்து உட்கார்ந்தார் மஹாஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. 

மிராசுதாரரால் ஸ்வாமிகளை நெருங்கவே முடியவில்லை. 

உடனே மிராசுதார், “எல்லோரும் கொஞ்சம் நகருங்கோ, நகருங்கோ,  நா பெரியவாளுக்காக திருவிடைமருதூர், மஹாலிங்க ஸ்வாமியின் ருத்ராபிஷேகப் பிரஸாதம் கொண்டு வந்திருக்கேன். அதை அவாகிட்ட சமர்ப்பிக்கணும்” என்று பிரஸாத மூட்டையைக்காட்டிக் கெஞ்சினார்.


[பகுதி 2 of 10]


ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரரின் பதற்றத்தையும் தவிப்பையும் பார்த்த, மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக்கொடுத்து, நாராயணஸ்வாமி ஐயரை பெரியவாளுக்கு அருகே அழைத்துச்சென்றார். 


பெரியவாளைப் பார்த்ததும் மிராசுதாரருக்கு கையும் காலும் ஓடலை. தொபுக்கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மஹா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார். ’என்ன விஷயம்?’ என்பதைப் போலப் புருவங்களை உயர்த்தினார்.


உடனே மிராசுதார் கைகள் உதற “பிரஸாதம் .. பிரஸாதம் .. பெரியவா” என்று குழறினார். 

மீண்டும் பெரியவர், “என்ன பிரஸாதம்?” என்று கேட்டு அவரைப்பார்த்தார். 





அதற்குள் மூட்டையைப்பிரித்து, பிரஸாதத்தை எடுத்து அங்குள்ள மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாக சமர்ப்பித்தார் மிராசுதார். அதில் ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.


மஹாஸ்வாமிகள், “இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரஸாதம்?” என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப்பார்த்தார்.    


மிராசுதார் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, மிகவும் விநயமாக, “பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூரிலே மஹாலிங்க ஸ்வாமிக்கு, ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப்பிரஸாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்!” என்று சொல்லி முடித்தார். 

உடனே பெரியவா அந்தப்பிரஸாத மூங்கில்த்தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக்கேட்டார், *****“நாராயணஸ்வாமி! நீ பெரிய மிராசு தான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் வேறு யாரையாவது கூட்டு சேர்த்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினயோ?” *****


“இல்லே பெரியவா! நானே என் சொந்தச்செலவிலே பண்ணினேன்” என்று அந்த நானேவுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். 

பெரியவாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அத்துடன் விடவில்லை. ”லோக க்ஷேமார்த்ததிற்கு [உலக நன்மைக்கு] மத்யார்ஜுன க்ஷேத்ரத்திலே [திருவிடைமருதூரில்] ருத்ராபிஷேகம் பண்ணினையாக்கும்?” என்று கேட்டார். 


உடனே மிராசுதார் ஆதங்கத்துடன் , “இல்லே பெரியவா! ரெண்டு மூணு வருஷமாவே வயல்கள்லே சரியான விளைச்சல் கிடையாது.  சில வயல்கள் தரிஸாகவே கெடக்கு. 

திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப்பார்த்தேன். அவர்தான் “சித்ரா பெளர்ணமி அன்னிக்கு, மஹாலிங்க ஸ்வாமிக்கு, மஹந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து; அமோக விளைச்சல் கொடுக்கும்”ன்னு சொன்னார். அத நம்பித்தான் பண்ணினேன் பெரியவா!“ என்று குழைந்தார்.

தொடரும்

ooooooOoooooo

*****
இந்த இடத்தில் எனக்கு ஒருசில நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு, நிறைய தங்க வில்வ இதழ்களால் கனகாபிஷேகம் செய்வித்து, அதன் பின் அதே தங்கத்தால் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் கருவறை விமானத்தை [தங்கத்தால்] ஜொலிக்கச்செய்வது என திட்டமிட்டு ஊருக்கு ஊர் கமிட்டி அமைத்தார்கள். 


 



இதற்கு ஒப்புதல் அளித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா ஒருசில கண்டிஷன்ஸ் சொல்லியிருந்தார். 

அதாவது இதற்கான வசூல்தொகை மிகச்சிறியதாகினும், [ஒரே ஒரு ரூபாய் மட்டுமே ஆனாலும்] அது பல ஏழை மக்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும் எனச் சொல்லியிருந்தார்கள்.  

அதாவது இந்த புண்ணியத்தின் பலன் ஏழைகள் உள்பட எல்லா ஜனங்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமும், விருப்பமுமாக இருந்தது. 

[அவர்கள்  மட்டும் நினைத்திருந்தால் ஒரேநாளில், தரிஸனத்திற்கு வரும் எவ்வளவோ கோடீஸ்வரர்களிடம், ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு வேண்டிய தங்கத்தை வெகு சுலபமாக திரட்டி இருக்க முடியும்.] 

திருச்சி BHEL வளாகத்தில், திரு. சங்கர் என்கிற பொது மேலாளரிடம் [General Manager] இந்த வசூல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

நான் ஒருசில பொருளாதார சிரமங்களுக்கு இடையில் அன்று இருந்தேன் என்றாலும்,  கிடைத்துள்ள வாய்ப்பினை நழுவ விடக்கூடாது, என்ற நோக்கத்தில்,  GENERAL MANAGER Mr. SHANKAR அவர்களிடம் அன்றைய ஒரு பவுனுக்கு சமமான தொகையான ரூ. 2500ஐக் கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டேன். 

அதன் பிறகு ஸ்ரீமடத்திலிருந்து எனக்கு ரூ.10, ரூ.25, ரூ.50 என சில ரசீது புத்தகங்கள் அனுப்பபட்டு, பக்தகோடிகள் பலரிடமும் ஒர் பவுனுக்கான தொகையையாவது வசூல் செய்து, உடனே அனுப்பி வைக்குமாறு, ஸ்ரீமடத்திலிருந்த ஒருவரிடமிருந்து ஓர் வேண்டுகோள் வந்தது. 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் பக்தி ஸ்ரத்தையுள்ள குடும்பத்தினர் சிலரிடம் மட்டுமே நான் வசூல் செய்தேன். 

ஒரு அரை பவுனுக்கு மட்டுமே என்னால் மொத்தமாக வசூலிக்க முடிந்தது. மீதி அரைப்பவுனுக்கான தொகையை என் பெரிய அக்கா, மிகவும் சந்தோஷத்துடன் தானே ஏகதேசமாகக் கொடுத்து உதவி விட்டாள். 

மொத்தப் பணத்திற்கும் DD வாங்கி, அனுப்பச்சொன்னவருக்கு கொரியரில் அனுப்பி விட்டேன்.

அதே போல மற்றொரு நிகழ்ச்சியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஸித்தியடைந்த பிறகு, சமீபத்தில் நடந்தது. [2001ம் வருஷம் என்று ஞாபகம்]

ஒரு நாள் இரவு சொப்பணத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா எனக்குக்காட்சி அளிக்கிறார். கோயிலில் உ ள்ள கற்தூண் போன்ற ஏதோ ஒன்றில் சாய்ந்து நின்று காட்சியளிக்கிறார். 

மறுநாள் காலையில் தபாலில் எனக்கு சென்னையிலிருந்து, ’சிம்சன் வைத்தா’ என்பவரிடமிருந்து ஓர் கடிதம் வருகிறது.

”ஓரிக்கை என்ற இடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு நினைவு மணிமண்டபம் எழுப்ப கமிட்டி அமைத்துள்ளோம். அதற்கு நீ மட்டும் ரூ. 11000/- [பதினோரு ஆயிரம் ரூபாய்] அனுப்பி வைக்கணும். மொத்தம் கட்டப்பட உள்ள 100 தூண்களில், ஒரு தூணுக்கான செலவு உன்னுடையதாக இருக்கட்டும் என நினைத்துக்கேட்டுள்ளேன். உடனே அனுப்பி வை” என்று எழுதியிருந்தார். 

அப்போது நான் பணக்கஷ்டம் அதிகம் ஏதும் இல்லாமல் இருந்ததால், உடனடியாக ரூ. 11000/- க்கு ஓர் DD வாங்கி ’சிம்சன் வைத்தா’ என்கிற ஸ்ரீ வைத்யனாத ஐயர்  அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். [இவர் இன்னும், இன்றும் சென்னையில் தான் இருக்கிறார். ]

முதல் நாள் இரவு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஓர் கல் தூணில் சாய்ந்தபடி காட்சியளிக்கிறார். மறுநாள் இதுபோல ஒரு கல்தூணுக்கான சிறிய பொருளுதவி செய்யும்  பாக்யம் எனக்குக் கிடைக்கப்பெற்றேன். 
*****


ooooooOoooooo





மீண்டும் ஓர் சந்திப்பு

16.06.2013 ஞாயிறு மதியம் 
என் இல்லத்திற்கு திடீர் விஜயம் செய்த 
’மின்னல் வரிகள்’ + ‘மேய்ச்சல் மைதானம்’ 
வலைத்தளங்களின் பதிவர் 
திரு. பாலகணேஷ் அவர்களின் வருகை.




நினைவுப்பரிசாக என் கையொப்பமிட்ட
”எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு”
 சிறுகதைத் தொகுப்பு நூல் வழங்கப்பட்டது


வருகை தந்து சந்தித்துச்சென்ற 
திரு. பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி.


அவருடன் என் இல்லத்துக்கு 
அன்புடன் வருகை தந்து சிறப்பித்து
புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய 
’என் எழுத்துலக மானஸீக குருநாதர்’
திரு ரிஷபன் அவர்களுக்கு 
என் மனமார்ந்த இனிய நன்றிகள் 

ooooooOoooooo


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

48 comments:

  1. இரண்டு இளைஞர்களின் சந்திப்பு - பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது! -- கற்றூண் கட்ட நீங்கள் செய்த உதவியும், கனவில் வந்த பெரியவரின் அருட்செயலும் வியப்பைத் தருகிறது.

    ReplyDelete
  2. பொக்கிஷப்பகிர்வு..

    அத்தனையையும் வாசித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  3. சரியான இடத்தில் சஸ்பென்ஸோடு விடுகிறீர்களே?!
    உங்கள் கனவில் வந்ததும் நிகழ்ந்ததும் அதிசயமே.

    ReplyDelete
  4. அகந்தை பிடித்தவர்
    மறைவில் போடும் ஆட்டம்
    ஆயிரம் பேர் முன்னே
    அம்பலத்தில் போடப்பட்டு
    உடைக்கப்படும் என்பதற்கு
    இந்த சம்பவமே சாட்சி.

    அனைத்தும் அவன் செய்ய
    நாம் அகந்தை கொண்டு என்ன செய்ய !

    ReplyDelete
  5. உலகத்திலுள்ளவர்கள் க்ஷேமத்தைக் கோர எல்லோருடைய சிரிய பங்கையாகிலும் வாங்கிக் கொண்டு செய்தால், நான் செய்தேன் என்ற எண்ணம் வராதிருக்கும். நான் செய்தேன் எனக்கு நன்மை
    வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் எந்த நன்மையும் பயக்காது.யார் அரிந்தார்களோ இல்லையோ நாமெல்லாம் அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும் இப்பதிவு.
    ஓரிக்கை கற்றூண் உபயம் மிகவும் ஆச்சரியமான ஸம்பவம்தான்.
    அன்பும்,ஆசிகளும்.

    ReplyDelete
  6. ஊர் கூடித் தேர் இழுப்பது போல் பகவத் கைங்கர்யங்களில் எல்லோர் பங்கும் இருக்க வேண்டுமென்பது புலனாகிறது. எல்லாவற்றையும் எளிமையாக புரிய வைத்து விடுவதே 'அவர்' திறன்!

    உங்க கொடைகளும் காலத்தால் அழிக்க முடியாதனவாய்!

    ReplyDelete
  7. Santhoshamana Santhippu, pugaipadangal arumai. The three illakanam and explanation are fantastic. But you have stopped the post in avery interesting place sir... Your dreams are amazing...
    Thank you very much for sharing sir...

    ReplyDelete
  8. இலக்கணங்களும் அதன் விளக்கங்களும் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு...

    உங்கள் கனவு வியப்பளிக்கிறது ஐயா.

    மிராசுதாரரின் கதையை சஸ்பென்சோடு ஒவ்வொரு இடத்திலயும் முடித்திவிட்டீர்கள்..

    ReplyDelete
  9. ஆச்சாரிய தத்துவம் அருமை. நல்ல பகிர்வு ஐயா!

    அதிசய நிகழ்வு தொடருடன் தொடருகிறேன்...

    கற்றூண் கட்ட நீங்களும் பவுணுக்காக உங்கள் சகோதரி செய்த உதவியும் நல்ல சற்காரியமே. பணமிருந்தாலும் எல்லோருக்கும் செய்ய மனமிருக்க வேண்டுமே...

    சகோதரர் பாலகணேஷ் அவர்களுடனான சந்திப்பும் அருமை. படப்பகிர்தலுக்கும் நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  10. கனவும் கற்றூணும் அற்புத நிகழ்வு.

    படித்து மகிழ வருகின்றோம்............

    ReplyDelete
  11. பல அதிசயங்கள் வியப்பாக இருக்கிறது... விரைவில் உங்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் எழுகிறது... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  12. ஆசார்யன் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்ற மஹாபெரியவாளின் அருளமுதம் எல்லோருக்கும் சிறந்த அமுதம்.

    மிராசுதாரின் அனுபவங்கள் எப்படி இருக்கும்- தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.
    திரு பாலகணேஷ் அவர்களின் வருகையையும் அவர்களை நீங்கள் உபசரித்த விதமும் அருமை.

    ReplyDelete
  13. மனதால் இளையவர்கள் இருவர் சந்தித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. முதல் நாள் இரவு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஓர் கல் தூணில் சாய்ந்தபடி காட்சியளிக்கிறார். மறுநாள் இதுபோல ஒரு கல்தூணுக்கான சிறிய பொருளுதவி செய்யும் பாக்யம் எனக்குக் கிடைக்கப்பெற்றேன்.

    கல்தூணாய் மனதில் தங்கும் அருமையான பகிர்வுகள்..

    ReplyDelete
  15. மூன்று இலக்கணங்கள் பற்றி இன்றே தெரிந்து கொண்டேன். சந்திப்பு சிறப்பு.

    ReplyDelete
  16. கணேஷண்ணாவுடனானசந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.கூடவே உங்கள் பாணியில் சந்திப்பினைபற்றிய ஒரு பதிவையும் எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
  17. கனவும் கற்தூணும் யாருக்கும் கிட்டாத அற்புத நிகழ்வு அய்யா.

    ReplyDelete
  18. மகா பெரியவர் பற்றி நீங்கள் கூறிய பல விஷயங்கள் இப்ப‌ோதும் மனதில் வட்டமிட்டபடியே உள்ளன. அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் உங்களின் தேர்ந்த எழுத்து நடையில். மகா பெரியவரைப் பற்றிச் சொல்லிய கையோடு இந்த மகா சிறியவனைப் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். ரிஷபன் அண்ணா, தாங்கள் போன்றோரின் அன்பும் நட்பும் கிடைத்தது என் பாக்கியம் என்றுதான் நான் சொல்வேன்!

    ReplyDelete
  19. என்ன இது போன பதிவோடு அத்தொடர் முடிஞ்சுதென நினைச்சேனே.. இன்னும் தொடருதோ?.. தொடருங்கோ தொடருங்கோ.. நல்லபடி தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. ஆச்சார்யார் பற்றி அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீங்க... அதிசயம் ஆனால் உண்மை அருமை.

    ReplyDelete
  21. நோஓஓஓஓ நேக்கு உங்கட வீட்ட வரப் பயமாக்கிடக்கு:) படம் புடிச்சு பப்ளிக்கில போட்டிடுவீங்க:))..

    ச்ச்ச்சும்மா சொன்னேன்ன்.. கேட்டுத்தான் செய்வீங்களெனத் தெரியும்... பாலகணேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. போன தொடருக்கு 101 சாட்டுச் சொல்லி பின்னூட்டத்துக்குப் பதில் போடாமல் தப்பிட்டீங்க.. இம்முறை அது நடக்க விடமாட்டோம்ம்..:))

    இப்படிக்கு,
    போன தொடரில்ல்..
    அதிக பின்னூட்டங்கள் போட்டு...,
    எதிர்ப்பாலாரை வென்ற...:)
    எம்பாலார்ர்:)).

    ReplyDelete
  23. சஸ்பென்ஸ் தொடர்ந்துகிட்டே இருக்கு... சுவாரஸ்யம்!
    என்ன உங்க வீட்டு ஜன்னல் பக்கம் நிறைய காற்றடிக்குது.. ? ஒரே சந்திப்பு மயமாக இருக்கிறது... மகிழ்ச்சி!

    ReplyDelete
  24. மஹா பெரியாவா பற்றி அருமையான விளக்கம் குடுத்திருக்கிங்க. நன்றாக இருக்கு. நன்றி. நல்ல சந்திப்புகள் தொடரட்டும். மகிழ்ச்சி.

    ReplyDelete
  25. மிராசுதார் பற்றித் தொடரும் போட்டு விட்டீர்களே!
    மகாபெரியவரின் அற்புதங்களைப் படிக்க படிக்க தெவிட்டாது .
    பால்கனேஷ் சாரை நீங்கள் உபசரித்த விதம் அருமை.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  26. Aha what a fartune for you Sir. You are able to PERIYAVA in dreams.
    I like to read further and further Sir. Kindly write.
    Seen the get together.
    Like to see you in person at your home and enjoy your jennal soon.
    viji

    ReplyDelete
  27. ” மின்னல் வரிகள்” பாலகணேஷ் தங்களது இல்லம் வருவது தெரிந்து இருந்தால் நானும் வந்திருப்பேன்.
    தங்களது ஆன்மீக அனுபவங்கள் தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இளங்கோ சார்... நீங்கள் திருச்சியில்தான் வசிக்கிறீர்கள் என்பது அப்போது எனக்குத் தெரியாது தெரிந்திருந்தால் தகவல் தந்திருபபேன் நிச்சயம். அடுத்த மாதம் வருகையில் அவசியம் நாம் சந்திக்கலாம். உங்களைச் சந்திக்கும் ஆசை எனக்கு நிறைய நிறைய உண்டு!

      Delete
  28. தங்க வில்வ இதழ்களால் கனகாபிஷேகம் செய்விபிப்தலில் பங்கு கொண்டது மகிழ்ச்சி.

    //முதல் நாள் இரவு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஓர் கல் தூணில் சாய்ந்தபடி காட்சியளிக்கிறார். மறுநாள் இதுபோல ஒரு கல்தூணுக்கான சிறிய பொருளுதவி செய்யும் பாக்யம் எனக்குக் கிடைக்கப்பெற்றேன்.//
    சிறந்த குரு பகதியுடைவரிடமிருந்து பொருளுதவி பெற்றது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    மின்னல் வரிகள் பாலகணேஷ் அவர்கள் சந்திப்பு, படங்கள் பகிர்வு அருமை.

    ReplyDelete
  29. Interesting life experiences. Waiting to read your next post :-)....

    Glad to know about the meet. So you both had a great time!

    ReplyDelete
  30. “இல்லே பெரியவா! நானே என் சொந்தச்செலவிலே பண்ணினேன்” என்று அந்த “நானே”வுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். //

    கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன் காரிலும், வண்டிகளலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர். ஒரு ஆடு மேய்ப்பவனுக்குப் புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பு இல்லாதவன், சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான். தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது. கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர் சபையில் இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே ! உங்களில் யார் சொர்க்கத்திற்குப் போகப் போகிறீர்கள் ?” என்று கேட்டார். ஒருவராலும் பதில் சொல்லவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும், நான் போனால் போவேன் என்று கூறினான். சபையில் இருந்த மற்றவர்கள், மெத்தப் படித்தவர்கள் அவனைப் பார்த்து கேலியாக சிரித்தனர். பெரியவர் விளக்கம் அளக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்” என்ற அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!

    மகா பெரியவாள் கனவில் வந்ததும் மறு நாள் தூண் செய்ய உதவி செய்ததும் உங்கள் நல் எண்ணம் போல் நடந்தது.

    ReplyDelete
  31. “இல்லே பெரியவா! நானே என் சொந்தச்செலவிலே பண்ணினேன்” என்று அந்த “நானே”வுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார்.


    கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன் காரிலும், வண்டிகளலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர். ஒரு ஆடு மேய்ப்பவனுக்குப் புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பும், இல்லாதவன், சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான். தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது. கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர் சபையில் இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே ! உங்களல் யார் சொர்க்கத்திற்குப் போகிறீர்கள் ?” என்று கேட்டார். ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும், நான் போனால் போவேன் என்று கூறினான். சபை ஆச்சரியப்பட்டது. பெரியவர் விளக்கம் அளக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்” என்ற அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!

    மகா பெரியவாள் உங்கள் கனவில் வந்ததும், மறு நாளே தூண் செய்ய நீங்கள் பணம் அனுப்ப வாய்ப்பு கிடைத்ததும் உங்களுக்குக் கிடைத்த பரிசு.

    வாழ்த்துக்களுடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  32. \\நாராயணஸ்வாமி! நீ பெரிய மிராசு தான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் வேறு யாரையாவது கூட்டு சேர்த்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினயோ?”\\

    மிராசுதாரரிடம் மகாபெரியவர் கேட்ட அந்தக் கேள்வியின் நோக்கம் அடுத்து வந்த பதிவில் புலப்பட்டுவிட்டது.

    \\ இதற்கான வசூல்தொகை மிகச்சிறியதாகினும், [ஒரே ஒரு ரூபாய் மட்டுமே ஆனாலும்] அது பல ஏழை மக்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும் எனச் சொல்லியிருந்தார்கள்.

    அதாவது இந்த புண்ணியத்தின் பலன் ஏழைகள் உள்பட எல்லா ஜனங்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமும், விருப்பமுமாக இருந்தது.\\

    தொடர்ந்துவந்த தங்கள் அனுபவமும் மெய்சிலிர்க்க வைத்தது.

    கணேஷ் அவர்களுடனான சந்திப்பும் புகைப்படங்களும் அசத்தல். பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  33. இது படிச்சிருக்கேன், அதாவது மிராசுதார் ருத்ர ஜபம் குறித்தது. இருந்தாலும் மீண்டும் உங்கள் மூலம் படிப்பதில் மகிழ்ச்சி. திரு பாலகணேஷ் அவர்கள் வரவுக்கும், உங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துகள். படம் எடுத்த ரிஷபனுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. மகா பெரியவாள் தங்கள் கனவில் வந்ததும்,அடுத்தநாளே தூண் செய்ய பணம் அனுப்பும் வாய்ப்பு கிடைத்ததும் தங்களின் மிகப் பெரிய பாக்கியமே எனக் கருதுகிறேன்! நன்றி ஐயா!

    ReplyDelete
  35. மிராசுதாரின் கதை அடுத்த பகுதி படிக்குமாவலைத்தூண்டுகிறது. ஸ்ரீமகா பெரியவாளிடம் அதீத நம்பிக்கை இருப்பதாலும்,அவரின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு என்பதையேதான் கனவு காட்டுகிறது.
    ஆச்சார்யன் யார் எனும் அமுத‌மழை அருமை. நன்றி.

    ReplyDelete
  36. நல்ல கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு எனது நன்றி.

    கணேஷ் உடன் ஆன சந்திப்பு பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  37. நாம் கற்றதை பிறருக்கு சொல்லித்தருவதும் ,புரியவைப்பதும் ஆனந்தமே .

    நம் பதிலாலே நமக்கே புரியவைப்பது தனி கலை.அதையே பெரியவர் செய்துள்ளார்.

    கனவும் தூணும் ஆச்சர்யமான விசயம்தான்.

    பாலகணேஷ் சாரும் வந்தாரா ,நல்லது சந்தோசம் .

    ReplyDelete
  38. அமுத மொழிகளையும், கனவு சம்பவத்தையும் படித்து உணர்ந்தேன்.

    பதிவர் சந்திப்புகள் தொடரட்டும்.

    ReplyDelete
  39. அன்பின் வை.கோ - ஆச்சார்யன் யார் - விளக்கம் அருமை - மிராசுதார் பற்றி ஏற்கனவே படித்து மறுமொழி இட்டாயிற்று - பதிவர் சந்திப்பு தனிப் பதிவாகப் போடலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  40. அனுபவங்கள் ஆனந்தமே. கல்தூணுக்கு பெரியவரே ஆசீர்வாதம் செய்திருக்கிறார்.

    ReplyDelete
  41. அநுபவங்கள் உங்களுக்கு அமர்க்களமாக கிடைக்கிறது அதையும் சந்தோஷமாக எல்லாருடனும் பகிர்ந்து கொண்டு எங்களையும் சந்தோஷபடுத்துரீங்க.

    ReplyDelete
  42. யாரோ ஒரு பக்தரு குருசாமிய பாக்க வந்து பேசிகிட்டு இருக்காகன்னு வெளங்குது வெசயம் இன்னாது உஙகூட்டுக்கு நெறய பதிவர்கலாம் வாராகளே

    ReplyDelete
  43. மிராசுதார் வாயிலிருந்து எத்தனை நானே நானே வரது. இதிலிருந்தே அவரின் குணம் ஓரளவு வெளிப்பட்டு விடுகிறதே.

    ReplyDelete
  44. தொடரிலும் சுவாரசியம் ஏற்படுத்தும் - தொடரும்...பால கணேஷ் கொடுத்து வச்சவரு!!!

    ReplyDelete
  45. அந்த மிராசுதார் லோகநாதன் ஷேமத்துக்காக பூஜைகள் பண்ணலையே தன் சுயநல லாபத்துக்காகன்னா பண்ணியிருக்கார் பெரியவா இதை எப்படி ஏத்துப்பா . நிறய சுவாரசியமான விஷயங்கள் தெரிஞ்க்க கிடைக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. happy October 28, 2016 at 8:33 AM

      வாம்மா ... ஹாப்பி, வணக்கம். தீபாவளி லேகியம் + ஸ்வீட்ஸ், காரங்கள் போன்ற பக்ஷணங்களெல்லாம் செய்து முடித்து விட்டாயா? இரண்டு நாளா உன்னை இங்கு காணாததில் நேக்கு அழுகையே வந்துடுச்சு . தெரியுமோ? இன்று உன்னைப்பார்த்ததும் மீண்டும் கண்ணீர் ... ஆனால் இது ஆனந்தக்கண்ணீர். :)

      //அந்த மிராசுதார் லோகத்து மக்களின் க்ஷேத்துக்காக பூஜைகள் பண்ணலையே தன் சுயநல லாபத்துக்காகன்னா பண்ணியிருக்கார். பெரியவா இதை எப்படி ஏத்துப்பா.//

      அதானே !

      //நிறைய சுவாரசியமான விஷயங்கள் தெரிஞ்சுக்கக் கிடைக்கிறது..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஹாப்பி.

      Delete
  46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (18.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=400619987107368

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete