என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 13 ஜூன், 2013

9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.

2
ஸ்ரீராமஜயம்
நம் அப்பாவையும் அம்மாவையும் இறைவனாக நினைக்க வேண்டும். 

இதையே மாற்றி இறைவனையும், இறைவியையும் அப்பா, அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும். 

மனது சுத்தமாவதற்காக, பழைய பாபகர்மங்களைத் தாங்கிக் கொள்வதற்காக,  புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். 

உறுதியான சங்கல்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.

நமக்கு உணவு தருகிறவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும்.

நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும்.

இப்போது நம் ஊரில் யார் ரொம்ப அழுக்குத்துணி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் கோயிலில் உள்ள ஸ்வாமிதான் எனத் தெரிகிறது. 

oooooOooooo

அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!!

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்


சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு  சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவாஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில். ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். 

கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில், பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாதது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. 

விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி, மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். 

எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமும் உணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ”தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். 

அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?” என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனம் தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். 

அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். 

தேவரைப் பார்த்தவுடன், ”வாங்க, எத்தனை நாளா, நான் இப்படி படுக்கையில் இருக்கேன்? கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்” என்றார். 

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில், தன் முகம் கண்ட கண்ணதாசன் ”இதென்ன விபூதி?” என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். 

திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ”எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை ..... ஐயோ” என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். 

“எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப்பாவியிடம் கருணைவைத்த அந்த மஹானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்” என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு; திருவாசகத்தின் உட்கருத்து;  கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்; கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்; எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத்தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல்; தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ! அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மஹானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப்பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.


[இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த சம்பவம் தான். இருப்பினும் இந்த நிகழ்வு, சமீபத்தில் திரு. பட்டாபிராமன் அவர்களால் ‘அமிர்தவர்ஷிணி’யில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.]

oooooOooooo

 மகிழ்ச்சியான தகவல்
மேலும் ஓர் பதிவர் சந்திப்பு


நம் அன்புக்குரிய பதிவர் திரு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் மூத்த பெண் செளபாக்யவதி: வந்தனா ராமமூர்த்தி அவர்களுக்கும் சிரஞ்சீவி: கார்த்திக் நாகராஜன் அவர்களுக்கும், நேற்று 12.06.2013 மிகச்சிறப்பான முறையில், இனிதே திருமணம் நடைபெற்றது. 
நேற்று மாலை ’திருச்சி தாஜ் திருமண மஹால்’ இல் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன்.

என்னுடன் அன்று BHELலில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான சக ஊழியர்களை ஒரே இடத்தினில் சந்தித்தது + நலம் விசாரித்தது, என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

திரு. இராமமூர்த்தி அவர்களின் இரண்டு பெண்களையும், சிறு குழந்தையாக அவர்கள் இருந்தபோது, நான் ஒருசில முறைகள் சந்தித்துள்ளேன். ஆனால் இன்றும் என்னை அவர்கள் நன்கு நினைவில் வைத்துக்கொண்டுள்ளார்கள். 

”அது எப்படி?” என்று நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன்? 

”நாங்கள் இருவரும் வெளிநாட்டில் தற்சமயம் இருப்பினும், உங்களை நாங்கள் தினமும் சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறோம் அங்கிள்” என்றார்கள். 

வலைப்பதிவில் எழுதுவதால் எவ்வளவு நன்மைகள்! என எனக்குள் நினைத்து மகிழ்ந்தேன்.

ஏற்கனவே பலமுறைகள் நான் சந்தித்துள்ள பிரபல பதிவர்களாகிய திரு. ரிஷபன், ஆரண்ய நிவாஸ் திரு. இராமமூர்த்தி, அவரின் தம்பி [பதிவர்] எல்லென் என்கிற திரு. லெக்ஷ்மி நாராயணன், ’கல்கி’ இதழின் பிரபல   சிறுகதை எழுத்தாளர் திரு. கிருஷ்ணா என்கிற பாஸ்கர், திருச்சியைச் சேர்ந்த மிகச்சிறந்த கவிதாயினி *திருமதி தனலெட்சுமி பாஸ்கரன்* + அவரது கணவர் ஆகியோரை அந்தத்திருமண மண்டபத்தில், என்னால் நேற்று  சந்தித்துப்பேச முடிந்தது. 

[* திருமதி தனலெட்சுமி பாஸ்கரன்* அவர்களைப்பற்றி மேலும் அறிய http://nilaamagal.blogspot.in/2013/05/blog-post_23.html http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html மற்றும்  http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/12/blog-post_15.html பார்க்கவும். 

இதுவரை தொலைபேசியில் மட்டுமே பலமுறை பேசியிருந்தும், நேரில் சந்திக்காத பிரபல பதிவர் திரு. சுந்தர்ஜி [கைகள் அள்ளிய நீர்] அவர்களை முதன் முறையாக, நேற்று நேரில் சந்தித்து,  நீண்ட நேரம்  மனம் விட்டுப் பேசமுடிந்தது. 

அவர் என் வருகைக்காகவே நீண்ட நேரம் திருமண மண்டபத்தில் காத்திருந்ததாகச் சொல்லிக் என்னை மிகுந்த வாத்ஸல்யத்துடன் கைகுலுக்கி, தனியே ஒதுக்கிக்கொண்டு சென்று விட்டார். 

போட்டோவில் பார்த்ததைவிட நான் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும், பேரெழுச்சியுடனும் இருப்பதாக ஏதேதோ புகழ்ந்து பேசினார்  திரு. சுந்தர்ஜி அவர்கள். என் எழுத்துக்களில் நான் காட்டிவரும் அசாத்ய பொறுமை + திறமைகளை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். 

[அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30] வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தது. ’வரவர இந்த எழுத்தாளர்கள் தொல்லைத் தாங்க முடியலை  ..... கொசுத்தொல்லைக்கு மேல் உள்ளது’ என மனதில் நினைத்து முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்கும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஓர் இரகசியம். ;))))) ]

ஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என்  நினைவுக்கு வந்தது. 

எழுத்தாளர்கள் + பதிவர்களாகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து உணவருந்தியபிறகு, திரு. சுந்தர்ஜி அவர்களை, திருமண மண்டப வாசலிலிருந்து, ஓர் ஆட்டோவில் ஏற்றி, அவர் செல்ல வேண்டிய ஊருக்குப் பேருந்தில் ஏற்றிவிடும் வரை, நானும் அவருடனேயே கூட இருந்தது, என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

oooooOooooo

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 15.06.2013 சனிக்கிழமை வெளியாகும்]

[இது அடியேனின் 350வது பதிவு]என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்61 கருத்துகள்:

 1. கண்ணதாசன் கவி வரிகள் அருமை...

  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...

  இனிய சந்திப்பு... மகிழ்ச்சியான சந்திப்பு... (ரகசியமும் அருமை... ஹிஹி...) வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. கண்ணதாஸன் கதை படிக்கும்போது கண்ணில் ஜலம் வந்து விட்டது. இவ்வளவு நல்ல காரியங்கள் அவரின் முன்னோர்கள் செய்திருப்பதால் அவருக்கும்,மஹாப் பெரியவாள் மூலமே மனம் திரும்பியது. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுமளவிற்கு பண்பட்டது. நல்ல நீதி.

  பதிலளிநீக்கு
 3. கவிஞரை மாற்றிய அந்த மஹா முனிவர் கண் கண்ட தெய்வம்தான்.. அர்த்தமுள்ள இந்துமதம் படித்து நான் என் நடைமுறை வாழ்க்கையில் நிறைய
  மாற்றங்களை பின் பற்றினேன். மக்கள் அனைவருக்கும் படித்து பயன் பெரும் வகையில் அந்த நூல் வெளிவர காரணம் மஹா பெரியவரையே சேரும். அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 4. அருமையான,அழகான அர்த்தமுள்ள இந்துமதத்தினை கண்ணதாசன் எழுத, தூண்டுதலாக‌ இருந்த மஹாபெரியவரின் சம்பவத்தை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றிகள்.கண்ணதாசனின் கவிவரிக்கு நிகரேதுமில்லை.
  அருமையான அமுத மழை.
  மணமக்களுக்கு வாழ்த்துக்கள். இனிமையான சந்திப்புக்கள் தொடரவாழ்த்துக்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 5. ஒரே கல்லில் ( பதிவில் ) மூன்று மாங்காய்கள் ( மூன்று சுவையான தகவல்கள்).

  // போட்டோவில் பார்த்ததைவிட நான் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும், பேரெழுச்சியுடனும் இருப்பதாக ஏதேதோ புகழ்ந்து பேசினார் திரு. சுந்தர்ஜி அவர்கள். என் எழுத்துக்களில் நான் காட்டிவரும் அசாத்ய பொறுமை + திறமைகளை வெகுவாக மனம் திறந்து பாராட்டினார். //

  நானும் உங்களை முதன் முதல் உங்களைப் பார்க்க வரும் போது திரு. சுந்தர்ஜி போலவே நினைத்தேன். உங்கள் PROFILE போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறையவித்தியாசம்தான் சார்! சுந்தர்ஜி உங்களைப் புகழ்ந்த அன்றே, உங்கள் வீட்டில் உங்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டிருப்பார்கள்! ( சுந்தர்ஜி என்பவர், திருச்சி ராம்ஜி கல்யாண மஹால்காரர்தானே? முன்பு ஒருமுறை, நீங்கள் குறிப்பிட்டதாக நினைவு.)

  பதிலளிநீக்கு
 6. ‘அமிர்தவர்ஷியாய்
  அர்த்தமுள்ள இந்துமதம் தோன்றிய
  நிகழ்வை பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 7. திரு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் திருமகள் திருமணத்திற்கு இனிய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 8. மனம் விட்டுப் பேசமுடிந்த அருமையான
  பதிவர் சந்திப்புக்கு ம்னம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 9. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் பிரந்த கதை இப்போழுதுதான் அறிந்தேன்,இன்னும் இதுவரை படித்ததில்லை...

  மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!!

  சந்திப்பு இனிமையாக மகிழ்ச்சியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஐயா!!

  உங்கள் இளமையின் ரகசியம் என்ன சொல்லுங்களேன் (ஹி..ஹி..)

  பதிலளிநீக்கு
 10. நன்றி எனக்கெதற்க்கு ?

  கல்லை கடவுளென்று
  வணங்குபவர்களை மூடர்கள்
  என்று விமரிசித்த கண்ணதாசனை
  கடவுளை நினைத்து கண்ணீர் விட
  வைத்த அந்த கலவை மகானுக்குதான்
  அந்த நன்றிகள் போய் சேரவேண்டும் .

  பதிலளிநீக்கு
 11. கண்ணதாசனை மாற்றிய அற்புத நிகழ்ச்சி பற்றி அறிய மிகவும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 12. Congrats and Best wishes to the couple...
  To read about Kannadaasan the legend was really nice, the change in him and the thoughts that reflected in his arthamulla hindumatham is magical...
  Thanks for sharing everything with us sir...

  பதிலளிநீக்கு
 13. எனக்குத் தெரியாத இந்த நிகழ்ச்சியை அழகாக விவரித்துள்ளீர்கள்.
  மெய் சிலிர்க்கும் வகையில் இருக்கிறது.
  நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 14. ஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என் நினைவுக்கு வந்தது. //

  நானும் இதையேதான் சொன்னேன்.

  நமக்கு உணவு தருகிறவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும்.

  நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும்.//

  ஆமாம். ஒவ்வொரு கணமும் அந்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். நல்ல விஷயங்கள் நமக்குத் தெரிந்த விஷயங்களாக இருந்தாலும், அதை திரும்பத் திரும்பப் படிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் மனதில் பதிகிறது.

  அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.//

  நமக்காகவே மணம் வீசியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI June 13, 2013 at 7:29 AM

   வாங்கோ “ஜெ” வாங்கோ, வணக்கம்.

   *****ஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என் நினைவுக்கு வந்தது.*****

   //நானும் இதையேதான் சொன்னேன்.//

   இந்தத்தங்களின் வெளிப்படையான வெகுளித்தன்மை தான் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்ததோர் விஷயமே.

   நான் சொல்ல நினைத்த ஆனால் சற்றே சொல்லத் தயங்கிய உங்கள் பெயரை நீங்களே திருஷ்டிப்பூசணிக்காய் உடைப்பது போல, பளார்ன்னு போட்டு உடைத்து விட்டீர்கள். !!!

   மிகவும் சந்தோஷம்மா. ;)))))

   நீக்கு
 15. கண்ணதாசன் பற்றிய தகவல்கள் சிறப்பு. அர்த்தமுள்ள இந்துமதம் படித்திருக்கிறேன். உருவான கதை இன்றே தெரியும். சிறப்பான பகிர்வுகள் நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள..

  இந்தப் பதிவு.

  அற்புதம்.

  அனுபவித்தேன்.

  நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.

  சுந்தர்ஜியுடன் நிகழ்ந்த சந்திப்பு. இனிமை.

  அர்த்தமுள்ள இந்துமதம். கண்ணதாசன் கசிவு.

  மனம் நிறைவு.

  பதிலளிநீக்கு
 17. கண்ணதாசனுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் எனக்குத் தெரியாத ஒன்று.
  புதுமணத் தம்பதிகளுக்கு நெஞ்சு நிறைந்த ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 18. // [இது அடியேனின் 350வது பதிவு] //

  இரண்டாம் முறை படிக்கும்போதுதான் கவனித்தேன். மிகவும் சிறிய எழுத்துக்களில் தன்னடக்கமாக பதிவின் அடியில் எழுதி இருக்கிறீர்கள். தங்களின் 350 – ஆவது பதிவிற்கும், ஆயிரம் கண்டிடவும் எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. அர்த்தமுள்ள இந்துமதம் தோன்றக் காரணமான அற்புதத் தருணத்தை அழகுற விவரித்துள்ளீர்கள். பதிவர் சந்திப்பு குறித்த செய்திகள் சுவாரசியம். உங்கள் கைக்குழந்தையின் உள்ளப்பொருமலையும் ஒட்டுக்கேட்டுப் பகிர்ந்தமை ரசிக்கவைத்தது. மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 20. 350வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 21. I really dontknow this incident. This is the first time I am reading. Really great that HE made Kannadasan to write arthamulla Hindu Madam.
  Meeting friends, thats too via blog is really interesting.
  Happy reading this. Thanks for sharing.
  viji

  பதிலளிநீக்கு
 22. கண்ணதாசனின் இந்த மாற்றம் குறித்து ஏற்கெனவே நிறையத் தரம் படிச்சிருக்கேன்.

  திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் மகளுக்கு இனிய மணவாழ்க்கைக்கான வாழ்த்துகள். அனைவரையும் சந்தித்து அளவளாவியதில் உள்ள உற்சாகம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. வாழ்த்துகள் அனைவருக்குமே.

  பதிலளிநீக்கு
 23. 350 ஆவது பதிவுக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள். விரைவில் ஆயிரமாவது பதிவைக் காணவும் முன்கூட்டிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. 350வது பதிவுகளுக்கு இனியவாழ்த்துக்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 25. 350வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 26. 350 ஆவது பதிவென்பதை மிகச்சிறிய எழுத்திலிருப்பதை இரண்டாவது முறை பதிவைப் படிக்கும்போதுதான் பார்த்தேன். எவ்வளவு ஸந்தோஷமான செய்தி. என்னுடைய வாழ்த்துக்களும்,மனமார்ந்த ஆசீர்வாதங்களும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 27. திருமண தமபதிகளுக்கும் உங்களது 350ஆவது பதிவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. 350 வது பதிவா?

  உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி

  இருந்தாலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  திரு ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் மகளிடம் எங்கள் வாழ்த்துக்களைச் சேர்ப்பித்து விடுங்கள்

  பதிலளிநீக்கு
 29. எங்கட கண்ணதாசனின் அவர்களின் கதை தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. அர்த்தமுள்ள இந்துமதம் பத்துப் பாகமும் படிச்சு, கையோடும் வச்சிருக்கிறேன். அதை திரும்ப திரும்ப படிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
 30. அதுக்குள் 350 பதிவுகளா? நீங்க எங்கேயோ போயிட்டீங்க கோபு அண்ணன்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் பல நூறு பதிவுகள் போட்டு, நோய் நொடி இன்றி நீடூழி வாழ வாழ்த்துக்கள். ... எங்களுக்கு ட்ரீட் இல்லையோ????:)

  பதிலளிநீக்கு
 31. //ஏற்கனவே சென்னையிலுள்ள ஓர் பெண் பதிவர், [என் குரலை மட்டும் தொலைபேசியில் கேட்டுள்ளவர்] நீங்கள் சீனியர் சிடிஸன் என என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது, சார். அதற்குச் சான்ஸே இல்லை. 30 அல்லது 35 வயதுக்காரர் போல மிகவும் உற்சாகமாகப் பேசுகிறீர்கள், என சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னதும், எனக்கு ஏனோ, நேற்று திரு.சுந்தர்ஜி அவர்கள் என்னிடம் நேரில் பேசியபோது, என் நினைவுக்கு வந்தது. //

  இந்தப் பந்தியை நான் படிக்கவே இல்லை:))

  பதிலளிநீக்கு
 32. //[அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30] வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தது. //

  கையில தூக்கிக்கொண்டோ போனனீங்க?:)).. சே..சே..சே.. பிள்ளைகள் வளர்ந்தாலும் பெற்றோர் விடாயினம்.. எழும்பி நடக்க:) எப்பவும் கைக்குழந்தையாகவே இரு என சொல்லிக்கொண்டிருக்கினமே:))).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira June 15, 2013 at 6:49 AM

   *****அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30]வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்தது*****

   //கையில தூக்கிக்கொண்டோ போனீங்க?:)).. சே..சே..சே.. பிள்ளைகள் வளர்ந்தாலும் பெற்றோர் விடாயினம்.. எழும்பி நடக்க:) எப்பவும் கைக்குழந்தையாகவே இரு என சொல்லிக்கொண்டிருக்கினமே:))).//

   இல்லை அதிரா, நான் அவனைத்தூக்கிக் கொண்டு செல்லவில்லை. அவனை என்னால் தூக்கவும் முடியாது. என்னைவிட அவன் வெயிட் கூட.;)

   அந்தத்திருமண விழாவுக்கு நான் வருவது அவனுக்குத்தெரியாது. அவன் வருவதும் எனக்குத்தெரியாது. அங்கு தான் ஒருவரையொருவர் அன்று சந்தித்தோம்.

   ஒன்றாகப்பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர், நகைச்சுவை விஷயங்களில் நெருங்கிப்பழகிய நண்பர், எழுத்துலக வலையுலக நண்பர் + குடும்ப நண்பர் என்ற பல காரணங்களால் என்னை அழைத்திருந்தார் திரு. இராமமூர்த்தி அவர்கள்.

   என் கைக்குழந்தையும் திரு இராமமூர்த்தி அவர்களும் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில் பெரிய அதிகாரிகளாக இன்று சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

   அதனால் என் கைக்குழந்தைக்குத் தனி அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

   இப்போது புரிந்ததா, அதிரா ! ;)

   நீக்கு
 33. திருமணத் தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் இத் தொடரும் ,இனிதே நடந்துகொண்டிருப்பதுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அற்புதம் அய்யா. கண்ணதாசனின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பு முனை, மனதை நெகிழச் செய்து விட்டது அய்யா.அவ்விபத்து நடைபெறாமல் போயிருந்தால், அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் பொக்கிஷம் அல்லவா கிடைக்காமல் போயிருக்கும்.

   மணமக்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா. நன்றி

   நீக்கு
 34. ஐயா... சிறப்பான அர்த்தமுள்ள இந்துமதத்தினை கண்ணதாசன் எழுதுவதற்கு மூலகாரணமாக தூண்டுதலாக‌ இருந்த மஹாபெரியவரின் சம்பவத்தை அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
  இப்பொழுதுதான் இவ்விடயம் உங்கள்வாயிலாக அறிகின்றேன்.
  கண்ணதாசனையே மாற்றிய அரும்பெரும் சக்தியல்லவோ. அருமை!

  உங்களது 350ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 35. முதலில் 350-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

  கண்ணதாசன் அவர்களை அர்த்தமுள்ள இந்துமதம் எழுத வைத்த நிகழ்ச்சி.... மனதைத் தொட்டது.

  பதிவர் சந்திப்புகள் - நான் இல்லையே என வருத்தம் தான்! :(

  பதிலளிநீக்கு
 36. 350-வது பதிவிற்கு வாழ்த்துகள்! இதயம் இளமையாயிருக்க முதுமை என் செய்யும்? நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 37. 350 வது அற்புதமான பதிவுக்கு வாழ்த்துகள் அண்ணா ....

  மீண்டும் வந்து அனைத்தையும் படித்து முடிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 38. அர்த்தமுள்ள இந்து மதம் படித்திருக்கிறேன். அவை தோன்ற காரணமாக இருந்தது காஞ்சி பெரியவரின் அருள் என்பதை மீண்டும் நினைவு படுத்தி சிறப்பித்தமைக்கு நன்றி!
  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
  எழுத்தை நேசிப்பதுதான் உங்கள் சுறு சுறுப்பின் ரகசியம்!
  எப்போதும் இப்படியே இருங்கள்..! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 39. கண்ணதாசனை மாற்றிய அற்புத நிகழ்ச்சி பற்றி அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

  மணமக்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 40. அன்புள்ள கோபு சார், கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியது தெரியும் ஆனால் அதன் பின்னணி உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். பதிவர்களை சந்திப்பதுஅலாதி மகிழ்ச்சிதான். 350-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அடுத்து திருச்சி வர இருக்கிறேன். சந்திக்க ஆவல் .

  பதிலளிநீக்கு
 41. நம் அப்பாவையும் அம்மாவையும் இறைவனாக நினைக்க வேண்டும்.

  இதையே மாற்றி இறைவனையும், இறைவியையும் அப்பா, அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும்.//

  நன்றாக சொன்னீர்கள்.
  கண்ணதாசன் அவர்கள் பற்றிய செய்தி அருமை.
  350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  திருமணவிழாவில் பதிவர் சந்திப்பு , அதை சொல்லியவிதம் உங்கள் கடைகுட்டியின் மனநிலை எல்லாம் அருமை.
  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 42. கண்ணதாசன் அவர்கள் பற்றின நிகழ்வு பிரமிக்க வைக்கின்றது.

  // நான் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும், பேரெழுச்சியுடனும் இருப்பதாக ஏதேதோ புகழ்ந்து பேசினார் //

  //அருகே என் கைக்குழந்தையும் [வயது: 30] வியப்புடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தது. ’வரவர இந்த எழுத்தாளர்கள் தொல்லைத் தாங்க முடியலை ..... கொசுத்தொல்லைக்கு மேல் உள்ளது’ என மனதில் நினைத்து முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்கும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஓர் இரகசியம். ;))))) ]//

  ஹா..ஹா...போனா போது விடுங்க சார் சின்ன பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது

  பதிலளிநீக்கு
 43. கண்ணதாசன் பற்றிய சம்பவத்தை படித்து ஆச்சரியப்பட்டேன்.

  தங்களின் 350வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 44. அன்பின் வை.கோ - அழுக்குடன் ஆண்டவன் - அர்த்தமுள்ள இந்து மதம் - பதிவர் சந்திப்பு என அத்தனையையும் ஒரே பதிவில் போட வேண்டுமா ? அட்லீஸ்ட் பதிவர் சந்திப்பினிஅ மட்டுமாவது தனியாகப் போடக் கூடாதா ? அமுத மழையில் நனைய விரும்பி வந்தால் சிந்தனை வழி தவறுகிறதே -

  பதிலளிநீக்கு
 45. அன்பின் வை.கோ - அழுக்கு உடையில் ஆண்டவன் - தவிர்க்க இயலாத்தாகி விட்டது - பராமரிப்பில்லாத ஆலயங்களீல் ஆண்டவனும் அழுக்காகத்தான் இருக்கிறான்.

  அமுத மழை அருமை. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். என்ன அருள் வாக்கு - அவர் தான் மகாப் பெரியவா -

  //கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?” என திருவாய் மலர்ந்தருளினார். // - முற்றும் துறந்த முனிவருக்குத் தெரியாதது ஒன்றும் கிடையாது -

  //எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத்தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல்; தொழுவோம் வாரீர்! //

  நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் ஆத்தீக வாதியாக மாறி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாவினை போற்றிப் பாடிய கவிதையில் சில வரிகள்.

  அருளாசி வழங்கிய பெரியவர் ஆசி கூறிய போது கூறிய சொற்கள் : அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப்பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது:

  தகவல் பகிர்வினிற்கு நன்றி வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 46. கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய காரணம் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 47. நாத்திகருக்கும் கருணை காட்டிய வள்ளல் அர்த்தமுள்ள இந்துமதம் இதுவரை படிக்க கிடைக்கலியே. படிக்க விருப்பம் இருக்கு கல்யாண வீட்டுக்கு போய் வந்த அநுபவமும் சுவாரசியம்

  பதிலளிநீக்கு
 48. கவிஞரு கண்ணதாசன் பத்தின வெவரம்லா நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 49. 350---வது பதிவுக்கு வாழ்த்துகள் நாத்திகருக்கும் அருள் புரிந்த கருணை. அர்த்தமுள்ள இந்துமதம் ஒவ்வொருவரும் படித்து ரசிக்கவேண்டிய புஸ்தகம்.

  பதிலளிநீக்கு
 50. பதுவுக்குள் பதிவேன அள்ளித் தெளித்துக்கொண்டே செல்கிறீர்கள்..அர்த்தமுள்ள இந்து மதம் - தோன்றிய சூழல் அறிந்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 51. 350--- வது பதிவுக்கு வாழ்த்துகள் பெரிப்பா...நத்தையும்..ஆமையும்..போட்டி போட்டுண்டு " வேக வேக மாக". வந்து கமெண்ட் போட்டுடுத்து..))))
  கண்ணதாசன் அவர்களைப் பற்றிய விஷயங்கள் சூப்பர்.. அர்த்தமுள்ள இந்து மதம் இன்னும் படிக்க கிடைக்கலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy October 24, 2016 at 11:06 AM

   வாம்மா.... ஹாப்பி. மிகவும் ஹாப்பி. :)

   //350--- வது பதிவுக்கு வாழ்த்துகள் பெரிப்பா...//

   தேங்க்யூ.....டா செல்லம்.

   //நத்தையும்..ஆமையும்..போட்டி போட்டுண்டு " வேக வேக மாக". வந்து கமெண்ட் போட்டுடுத்து..))))//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சமத்துக்குட்டி அந்த நத்தையும்...ஆமையுமான .... எங்கட ஹாப்பி. :)

   //கண்ணதாசன் அவர்களைப் பற்றிய விஷயங்கள் சூப்பர்..//

   மிகவும் சந்தோஷம்.

   //அர்த்தமுள்ள இந்து மதம் இன்னும் படிக்க கிடைக்கலை.//

   அதனால் பரவாயில்லை. எப்போதும், எதற்கும், சிரித்த முகத்துடன் ஜொலித்தபடி காட்சிதரும் நீயே அந்த ’அர்த்தமுள்ள இந்து மதம்’தான்.

   நீக்கு
 52. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (02.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/427571634044436?view=permalink&id=1250978655037059

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 53. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (16.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/399843373851696/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 54. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (16.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/399843397185027/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு