என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

VGK-35 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'பூபாலன்’


 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK-35   


 ’ பூபாலன் ‘ 


 

     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  

நடுவர் திரு. ஜீவி


நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :ஐந்து


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 

  


மற்றவர்களுக்கு: 


    
இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 1

 


கதைனு பார்த்தால் எதுவுமே இல்லை. இரண்டே வரிக்கதை.  ஒரு துப்புரவுத் தொழிலாளி அந்த மாநில அமைச்சரின் பால்ய நண்பன். இதைக் குசேலர், கிருஷ்ணனுடைய நட்புக்கு ஒப்பிடலாம்.  ஏனெனில் துரோணரும், துருபதனும் மாதிரி இருவரும் சண்டை இட்டுக்கொள்ளவில்லை.  சொல்லப் போனால் குசேலரைப் போல் உதவி தேடியும் இந்தக் கதையின் பூபாலன் செல்லவில்லை. துரோணரைப் போல் பாதி ராஜ்யமும் கேட்கவில்லை.  ஏன், எதுவுமே எதிர்பார்க்கவில்லை.  அவன் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்கிறான். தன் நண்பனாக இருந்து கூட விளையாடியவன் இப்போது  ஒரு மந்திரியாக ஆகி இங்கே வந்து சிறப்பான வரவேற்புப் பெறத் தான் ஒரு காரணமாக அமைய வேண்டும் என்றும் நினைக்கவில்லை. தன்னுடைய கடமையைச் சிறப்பாகச் செய்வது ஒன்றே தனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட வரம் என்றே நினைக்கிறானோ! அதிலேயே மன நிறைவும் காண்கிறான். இது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.  


அந்த நண்பன் விழா முடிந்து திரும்பிச் சென்ற பின்னரும்,  நண்பன் தன்னை அடையாளம் கண்டு கொண்டு கௌரவித்ததை நினைத்து நினைத்து மெய்ம்மறந்து போய்த் தன் கடமையை மறக்கவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி ஒரே மாதிரியான மனோநிலையுடன் தன் கடமையே அதாவது கருமமே கண்ணாக இருப்பவன் தான் பூபாலன் என்னும் துப்புரவுத் தொழிலாளி.


இவனுக்கு யாரும் இதை ஒரு உபதேசமாக போதித்திருக்கப் போவதில்லை. இதன் உள்ளார்ந்த பொருளும் புரிந்து நடந்து கொள்பவனும் இல்லை. இவன் இயல்பே இது தான். சொல்லப் போனால் ஸ்திதப் பிரக்ஞன் என்னும் வார்த்தைக்குச் சரியான உதாரணம். நடப்பவை நடக்கட்டும்;  அவை எதுவும் என்னை பாதிக்காது;  என் வேலை இது;  என் கடமை இது எனத் தன் கடமை ஒன்றையே எண்ணுபவன் இந்த பூபாலன் என்னும் யோகி. இல்லை;  இல்லை;  கர்ம யோகி.


அருமையான பெயர் பூபாலன் என்பது.  இந்தக் கதையில் கதாநாயகனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. துப்புரவுத் தொழில் சாமானியமானதல்ல.  நாம் போடும் குப்பைகளையும், கழிவுகளையும் தினம் தினம் நம்மைப் போன்றதொரு மனிதன் சுத்தம் செய்வதென்றால் சும்மாவா?  அதிலும் மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் பாடு மிகச் சிரமம்.  அதே போல் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அதன் கெட்ட வாயு காரணமாக உயிர் விட்ட பூபாலன்கள் எத்தனையோ பேர்! எல்லாவற்றுக்கும் இயந்திரம் கண்டு பிடித்தவர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் இயந்திரத்தை மட்டும் ஏனோ கண்டு பிடிக்கவில்லை! :(


பூபாலன் அந்தக் கிராமத்தின் துப்புரவுத் தொழிலாளிகளில் ஒருவன். கடுமையான வேலை நான்கு நாட்களாக.  ஏனெனில் அரசியல்வாதியும், மந்திரியுமான ஒருவர் அந்த ஊருக்கு விஜயம் செய்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை.  பூபாலனின் பால்ய நண்பரே தான்.  அதே ஊர்க்காரர் தான்.  விதி வசத்தால் அவர் மந்திரியாகவும், பூபாலன் அதே ஊரில் துப்புரவுத் தொழிலைப் பார்ப்பவனாகவும் ஆகிவிட்டனர். ஒரு காலத்தில் மந்திரியின் நண்பன் என்பதால் பூபாலனுக்கு சலுகையா கிட்டும்!  இங்கே ஆசிரியர் மந்திரியைப் பட்டமாகவும், பட்டம் பறக்கவிடப்படும் நூல்கண்டாக பூபாலனையும் குறிப்பிட்டிருக்கிறார். பூபாலனைப் போன்றவர்களால் தான் இந்த மாதிரி அரசியல்வாதிகளின்  பதவியே பெருமை பெறுகிறது  என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார். நூல்கண்டில் பட்டத்துடன் கட்டப்பட்ட கயிறு அறுந்துவிட்டால்?? பட்டம் அந்தரத்தில் பறக்கும். எங்காவது உயரமான மரங்களிலோ, வீட்டுக்கூரையிலோ சிக்கிக் கிழிபடும்.  ஆனால் நூல் கண்டோ! இருந்த இடத்திலேயே இருக்கும். எவ்வித மாற்றமும் இருக்காது. 


மந்திரி வருகைக்குச் செய்யப்படும் ஆடம்பரங்கள் இங்கேயும் குறையவே இல்லை. ஆயிரம் வாலாப் பட்டாசிலிருந்து எல்லாவற்றையும் கதாசிரியர் விடாமல் குறிப்பிடுகிறார். எல்லா ஆடம்பரங்களும் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியும் முடிந்த பின்னர் மந்திரி தன் பேச்சில், தான் வரும் வழி சுத்தமாக இருந்ததை நினைவு கூர்ந்து துப்புரவுத்தொழிலாளிகளைப் பாராட்டவும் செய்கிறார்.  நமக்கு இது முதல் ஆச்சரியம் என்றால் அடுத்த ஆச்சரியம் மந்திரி பூபாலனைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்து கொண்டதோடு இல்லாமல், தங்கமோதிரமும் பரிசளிக்கிறார்.  மேலும் அனைத்துத் துப்பரவுத் தொழிலாளிகளுக்கும் பரிசளித்துப் பாராட்டியதோடு பூபாலனைச் சிறப்பாகப் பாராட்டுகிறார்.


இது அவர் உளமார்ந்த பாராட்டாகச் செய்ததா, அல்லது பத்திரிகைக்காகச் செய்ததா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.  ஏனெனில் பூபாலனைக் கட்டிப் பிடித்த வண்ணம் பத்திரிகைக்காரர்களுக்குப் படம் எடுக்க அனுமதி கொடுக்கிறார். அந்தப் படம் பத்திரிகைகளில் பிரசுரமும் ஆகிறது. படங்களைத் தன்னிடம் காட்டும் ஊர்க்காரர்களிடம் ஒரு சிரிப்போடு அதை ஆமோதிப்பதோடு, அந்தப் பத்திரிகைகளும் ஒரு நாள் குப்பையாக வரப்போவதை முன் கூட்டியே அறிந்தவன் போல் பூபாலன் திரும்பவும் தன் கடமையில் கண்ணாகிறான். 


இது தான் மனிதருக்கு முக்கியமாக வேண்டிய குணம். உயர்வு கிடைக்கும்போதும் சரி, பின்னர் தாழ்வு கிடைக்கும்போதும் சரி ஒரே மாதிரியாக ஏற்கும் மனம் வேண்டும். அதோடு, பாரதி சொன்னாற்போல் 
"சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்."
மேலோர் என்பதற்கு எடுத்துக்காட்டு பூபாலன். 

பூபாலன் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தால் என்ன? தன்னுடைய உயர்ந்த மதியாலும் அன்பினாலும் மேலோரை விட உயர்ந்த மேல் ஜாதிக்காரனாகி விட்டான்.  பூபாலனின் பாத்திரப் படைப்பின் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளின் முக்கியத்துவமும், அவர்களை நாம் எப்படி ஓரம் கட்டுகிறோம் என்பதையும் ஆசிரியர் சொல்வதோடு, அவர்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறார்.  இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்


 வலைத்தளம்: எண்ணங்கள் sivamgss.blogspot.com

     


இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 2

 
விழாக்கோலம் பூண்டு வண்ணவிளக்குகள் ஜொலிக்கும் கிராமத்துக்குள் அழைத்துச்செல்லும் அற்புத அனுபவத்துடன் ஆரவாரமாய் அமர்களமான வர்னைகளுடன்  கதைக்குள் ஆர்வமாக அடி எடுத்து வைக்கும் அனுபவமே கதை ஆசிரியரை வியந்து நோக்கவைக்கிறது..! கதையின் மையக்கரு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்படுகிறது..

அந்த கிராமத்துக்காரர் மந்திரியாகி முதன் முதலில் கிராமத்துக்குள் நுழைந்து நலத்திட்டங்களை வாரி வழங்கும் வள்ளலாக, சுற்றுசூழலை பாதுகாப்பது பற்றி சிறப்புச்சொற்பொழிவும் ஆற்றவரும் அற்புத நேரம் காட்சிப்படும் முரண் நகை விலாவரியாக விவரிக்கப்படுகிறது.. காதுகளைப்பதம் பார்க்கும் அலறலான இ(வ)சைப்பாடல்கள் ஒலிமாசு ஏற்படுத்த, ஆயிரம்வாலா பட்டாசுகள் வெடித்துச்சிதறி அதைத்தயாரித்த தொழிலாளர்கள், சிறார் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வை உணர்த்தும் விதமான ஒலியும் ஒளியுமான துன்ப நாடகக்காட்சி, பலவித வாகனங்கள் புடைசூழ காற்றினை அசுத்தமாக்கும் வாகனப்புகை, என அனைத்தையும்  காட்சியாக்கும் விரிவான வர்ணனை ....   நம்மை அமைச்சரின் மேடைக்கு முன்னே நிறுத்தும் லாவகமான சொக்குப்பொடித்தூவலான எழுத்துநடை கதாசிரியருக்கே கைவந்த கலையாயிற்றே என சிலாகிக்க வைக்கிறது..

அமைச்சர் வருகைக்காக அதிகப்படியாக குனிந்து நிமிர்ந்து கூட்டி பெருக்கி குப்பைகளை அகற்றி துப்புரவு பணிசெய்யும் பூபாலனுக்குத்தான் அதிகப்படியான உடல் நோகும்படியான வேலை என்பதையும் சாமர்த்தியமாக உணர்த்திவிடுகிறார் கதை ஆசிரியர்..! அதிகாலை வேளையில் துப்புறவு செய்யும் படமும், அசுத்தங்களை வண்டியில் ஏற்றும் அருவருப்பான படமும் துப்புறவுத்தொழிலாளிகள் மீது இரக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிது..!

சிறுவயதில் ஒன்றாக விளையாடி, படித்த நண்பர்கள் - பணம் படிப்பு அந்தஸ்து என்பவை  உரே பறக்கும் பட்டமாக அமைச்சர் பதவிக்கு வானத்திற்கு உயரே பறக்கவைக்க, இவை எதுவுமே இல்லாத மற்றொருவர் நூல்கண்டாக தரையிலே, வறுமை நிலையில் தேங்கி துப்புறவு தொழிலாளியாக ....  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளாக நிதர்சனம் மனதில் உறைக்கும்படி உரைக்கிறார் ஆசிரியர்..

குசேலனும் கண்ணனும்  பால்யத்தில் ஒன்றாக கல்வி கற்றாலும் கண்ணன் துவாரகையின் அரனாக, குசேலன் இருபத்தேழு பிள்ளைகளுடன் வறுமையில் வாடியதை படித்திருக்கிறோமே..! சுற்றுப்புறத்தூய்மை பற்றி மேடையில் பேசிவிட்டுத்  தன்  கிராமம் விசேஷப் பொலிவாக துவங்குவதை பாராட்டுவதே அமைச்சரின் பணியாகிப் போகிறது.

துப்புரவுத்தொழிலாளர்களை மேடைக்கு அழைத்துப்பாராட்டியவர்--நீண்ட நாட்களுக்குப்பின் தனது பால்ய நண்பனான பூபாலனைக் கண்ட அமைச்சர், அவனிடம் அன்புடன் நலம் விசாரித்து விட்டு, அவனுக்குத் தன் கையால் ஒரு பொன்னாடையைப் போர்த்திவிட்டு, தங்க மோதிரம் ஒன்று அவன் விரலில் மாட்டிவிட்டு, அவனைக்கட்டிப் பிடித்தவாறு, புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.

அமைச்சர், பதவியினால் 'ர்' விகுதி பெற்றார்! பால்ய நண்பன் பூபாலனோ இன்னும் 'ன்' விகுதியோடே இருக்கிறார்.  சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவு வேறு ஆற்று ஆற்று என ஆற்றுகிறார்!  தன் பால்ய நண்பனான பூபாலனை கட்டித்தழுவி போட்டோவுக்குப்போஸ்கொடுத்து, பொன்னாடை அணிவித்த அந்த XXXX மைச்சர் மோதிரமும் பூபானின் விரலில் போட்டு சுற்றியுள்ள மக்களுக்குக் காட்டிக்கொண்டு, பழசை மறக்காத அமைச்சர் தன் பிறந்த கிராமத்தையும் முன்னேற்றுவார் என எண்ணம் கொடுத்து, பத்திரிகைகளில் முதல்பக்கச்செய்தியாக பதிப்பித்து  என என்ன அழகாக கதையை கொண்டுசெல்கிறார் கதை ஆசிரியர்..

கிராமம் பூராவும் பூபாலனின் படத்தை அவனுக்கே சுட்டிக்காட்டி படிக்கத்தெரியாத அவனை செய்தியாகப்படித்து பெருமிதம் கொள்வது வேடிக்கைதான் .. சங்கோஜத்தில் நெளியும் பூபாலனின் அனுபவம் தரும் செய்திகளே முக்கியத்துவம் பெறுகின்றன.. வாழ்க்கையில் ஆழமாய்ப் பிணைந்திருக்கும் நிலையாமை எனும் தத்துவத்தையும் மிகவும் நுணுக்கமாக விளக்கியிருக்கிறது கதை..

கடமை கண்போன்றதல்லவா. மறுநாள் தன் படங்களைத்தாங்கி வந்த செய்தித்தாள் தன் கைப்படவே  குப்பை ஊர்தியில் ஏற்றப்படும் முதுகொடியும் வேலை இருப்பதை தன் அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கும்  கர்மயோகி பூபாலனின் நிலை நமக்குத்தான் பரிதாபத்தை வரவழைக்கிறது..

பூபாலனோ கடமையைச்செய்கிறான்..! சுற்றுச்சூழலை பாதுகாக்கிறான்.. சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும், துப்புறவுத்தொழிலாளிகள் ம் சகமனிதர்கள்,  அவர்களை மதிக்கவேண்டும், அவர்கள் இல்லாவிட்டால் நாடு நகரம் உலகம் குப்பை மலிந்து நாறும் எனச்சொன்ன  அமைச்சர் - சூடிய மலர்மாலைகள், சுற்றுசூழலை பஞ்சபூதங்களையும் மாசுபடுத்தி..  தூய்மையை பறைசாற்றியவர் போட்ட குப்பைகளையும் சேர்த்து வாரிக்கொட்டுவது ....  மரங்களை வெட்டிவிட்டு மரம் நடுவிழா கொண்டாடுவது போலும், கும்பகோணத்தில் தாய் உணவின்றி நலிய காசியில் மகன் அன்னதானம் செய்வதற்கும் ஒப்பாக முரண்படுவதை கதையோடு பின்னிப்பிணைந்து விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தருகிறார் ஆசிரியர்.. மக்களாவது திருந்துவதாவது..!   

பிறரால் அடையாளம் காணப்பட முடியாத நுண்ணிய உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு' என்னும் உணர்விழையை மிகச் செறிவான சிறுகதையாக்கியிருக்கிறார்.  ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்ச்சிகளையும்  மிகுந்த வியப்பினை அளிக்கும் வகையில் உள்வாங்கியிருப்பது சிறந்த வாசிப்பனுவத்தை அளிக்கிறது..!

 இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

 திருநிறைச்செல்வன் 


அரவிந்த் குமார் 

அவர்கள்.


வலைத்தள முகவரிமனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
    
 


மிகக்கடினமான இந்த வேலையை 

சிரத்தையுடன் பரிசீலனை செய்து 

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள  

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்


சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள 


மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர  


இடைவெளிகளில் 

வெளியிடப்பட்டு வருகின்றன.
காணத்தவறாதீர்கள் !  


    


அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:

VGK-37  


  ’எங்கெங்கும் ... 


எப்போதும் ... 


என்னோடு ... ‘  
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


02.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

17 கருத்துகள்:

 1. சகோதரி கீதா சாம்பசிவம்
  நண்பர் அரவிந்த் குமார் இருவருக்கும்
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இரண்டாம் பரிசை என்னுடன் பகிர்ந்து கொண்ட திரு அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே ஓர் ஆச்சரியம். இரண்டாம் பரிசு கிடைத்ததில் சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 3. கிருஷ்ணன் - குசேலன் மற்றும் துரோணர் - துருபதன் நட்புகளைக் குறிப்பிட்டு எந்த வகையில் அமைச்சர் - பூபாலன் நட்பு மாறுபட்டது என்பதை விமர்சன வரிகளால் காட்டியமையும் பாரதி பாடலை மேற்கோள் காட்டி பூபாலனின் குணத்தை உயர்த்திக்காட்டியதும் சிறப்பு. இரண்டாம் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கீதா மேடம்.

  பதிலளிநீக்கு
 4. \\மரங்களை வெட்டிவிட்டு மரம் நடுவிழா கொண்டாடுவது போலும், கும்பகோணத்தில் தாய் உணவின்றி நலிய காசியில் மகன் அன்னதானம் செய்வதற்கும் ஒப்பாக முரண்படுவதை கதையோடு பின்னிப்பிணைந்து விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தருகிறார் ஆசிரியர்..\\ அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள். இரண்டாம் பரிசு பெற்றமைக்கு இனிய பாராட்டுகள் அரவிந்தன்.

  பதிலளிநீக்கு
 5. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

  இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  LINK: http://sivamgss.blogspot.in/2014/09/35.html

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 6. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு. அர்விந்த் குமார் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. இரண்டாம் பரிசை பகிர்ந்து கொண்ட திரு அரவிந்த் குமார்,

  திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும்,
  இனிய வாழ்த்துகள்.பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 8. //பிறரால் அடையாளம் காணப்பட முடியாத நுண்ணிய உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு' என்னும் உணர்விழையை மிகச் செறிவான சிறுகதையாக்கியிருக்கிறார். ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்ச்சிகளையும் மிகுந்த வியப்பினை அளிக்கும் வகையில் உள்வாங்கியிருப்பது சிறந்த வாசிப்பனுவத்தை அளிக்கிறது..!
  // அருமை! பரிசினை வென்ற திரு அரவிந்த் குமார் அவர்களுக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 9. //பூபாலன் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தால் என்ன? தன்னுடைய உயர்ந்த மதியாலும் அன்பினாலும் மேலோரை விட உயர்ந்த மேல் ஜாதிக்காரனாகி விட்டான். பூபாலனின் பாத்திரப் படைப்பின் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளின் முக்கியத்துவமும், அவர்களை நாம் எப்படி ஓரம் கட்டுகிறோம் என்பதையும் ஆசிரியர் சொல்வதோடு, அவர்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறார்.
  //அருமையாக விமர்சனம் எழுதி பரிசினை வென்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 10. முதல் விமர்சனம் படிக்க ஆரம்பித்ததும் இதை எழுதியவர் கீதாம்மாவாக இருக்க வேண்டும் என்று தோன்றியது! :)

  இரண்டாம் பரிசு பெற்ற இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  பூ பா லன்....!

  கடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும் நடை சிறப்பு.

  புகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 12. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 13. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு. அர்விந்த் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. பரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவம் திரு அரவிந்த குமாரவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. திருமதி கீதாசாம்பசிவம் திரு அரவிந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி கீதாசாம்பசிவம் திரு அரவிந்தகுமார் இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு