என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

VGK 36 - ’எ லி’ ஸபத் டவர்ஸ்
இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 25.09.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 36

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:


’எலி’ஸபத் டவர்ஸ் 

நகைச்சுவை 

சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


ன்று வெள்ளிக்கிழமை. ராமசுப்பு ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவருடைய போன் ஒலித்தது.

“ஹலோ, ராமசுப்பு ஹியர்” என்றார்

“அப்பா.... நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா. நம்ம வீட்டிலும் அந்த சனியன் புகுந்து விட்டது. எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல், படுக்கை அறை கட்டிலின் மீது ஏறி, ஆளுக்கு ஒரு தடிக்குச்சியால் தட்டிக் கொண்டே இருக்கிறோம்.” போனில் பேசினான் அவரின் ஒரே வாரிசு, பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜூ.

ராகு காலம் என்று கூட பார்க்காமல் அரை நாள் லீவும், கால் நாள் பர்மிஷனும் எழுதிக்கொடுத்து விட்டு, உடனே பஸ் பிடித்து கிளம்பி விட்டார் ராமசுப்பு. பஸ்ஸில் பயணிக்கும் போது அவர் மனதிலும் ஒரே படபடப்பு.

சிறு வயது முதற்கொண்டே பல்லி, பாச்சை, கரப்பான் பூச்சி, சுண்டெலி, பெருச்சாளி, தவளை, ஓணான் போன்ற எந்த ஜந்துவைக் கண்டாலும், அவருக்கும், அவருக்கென்று வாய்த்த மனைவிக்கும், அவர்களுக்குப் பிறந்த பையனுக்கும் ஒரு வித அருவருப்பு கலந்த பயம்.

அவர்கள் வசித்து வரும் “எலிஸபத் டவர்ஸ்” என்ற புத்தம் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே முரட்டு எலி ஒன்று அடிக்கடி கண்ணில் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
அந்த எலிஸபத் டவர்ஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளரான ராமசுப்புவை, இந்த எலி விஷயமாக சென்ற வாரம் கூட்டப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில், எல்லோருமாக சேர்ந்து (பல எலிகள் சேர்ந்து கூட்டமாக குடைவது போல) குடைந்ததில் மனுஷன் ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருந்தார். இந்த ஒரு சிறிய எலிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத செயலாளரின் செயலற்ற போக்கிற்கு, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, மன நிறைவு கொண்டு மகிழ்ந்தனர் அந்தக் குடியிருப்பு வாசிகள்.

புதிதாகக் குடி வந்த முதல் மாடி, முதல் வீட்டு முத்துசாமி மேல் அனைவருக்குமே ஒரு சந்தேகம். அவர் குடும்ப உபயோகப் பொருட்கள் என்ற பெயரில் பலவிதமான அடசல்களை லாரியிலிருந்து இறக்கியதைப் பலரும் முகம் சுளித்தவாறு பார்த்திருந்தனர். ஒரு வேளை இந்த சனியன் அவர் மூலம் இந்த அடுக்கு மாடி வளாகத்தினுள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.

வாசலில் நிற்கும் வாட்ச்மேன் இதையெல்லாம் உள்ளே நுழையும் போதே கடுமையான சோதனை செய்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அவன் ஒரு சரியான சோம்பேறி. பல நேரங்களில் நின்று கொண்டே தூங்குபவன்.

மீட்டிங்கில் பலர் சொன்ன பலவிதமான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செயல் வடிவம் கொடுத்துப் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எதுவும் எடுக்காமல், வழக்கம் போல ‘எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது; நமக்கென்ன’ என்பது போல எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார், செயலாளர் ராமசுப்பு.

இப்போது அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தாற்போல இவர்கள் வீட்டுக்குள்ளேயே நுழைந்துள்ளது.

**  


செயலற்ற செயலாளராக இருப்பதாகச் சொல்லி, தன் மீது கண்டனத்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய புண்ணியவான்கள் யாரோ, நம்மீது உள்ள கடுப்பில், வேண்டுமென்றே மூன்றாவது மாடியின் கடைசி வீடான நம் வீட்டுப்பக்கம் அந்தச் சனியனை துரத்தி விட்டிருப்பார்களோ! இது அவர்களில் யாரோ ஒருவரின் சதித்திட்டமாகத் தான் இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் ராமசுப்புவுக்கு வந்தது.

பஸ் இறங்கி வீடு செல்லும் முன்னே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு துடைப்பம் (தென்னங்கீற்றுக் குச்சிகளை வைத்துக் கட்டிய கட்டை விளக்கமாறு) வாங்கிக்கொண்டு, ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார்.

வீட்டின் வெளிப்பக்க கிரில்கேட் திறந்தே இருந்தது. பூட்டிய பூட்டு மட்டும் தனியே தொங்கிக் கொண்டிருந்தது. தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியால் வெளிக்கதவைப் பூட்டி விட்டு உள்ளே போனார். ஹாலில் யாரும் பார்க்காமலேயே, டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. அதை ரிமோட்டால் அணைத்து விட்டு, மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உடனே மீண்டும் ஞாபகமாக அந்தக் கதவை சாத்திவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் தானும் கட்டிலில் ஏறிகொண்டார்.

சமையல் அறைப் பக்கம் தான் நேரில் பார்த்து விட்ட அந்த எலியின் நடமாட்டத்தைப் பற்றி, திகிலுடன் அம்புஜம் விவரித்துக் கூறியதை, ஒரு மர்மக் கதை போல அரண்டு மிரண்டபடியே கேட்டுக்கொண்டார், ராமசுப்பு.

பிறகு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவராக, தன்னிடம் ஓரளவு ஒட்டுதலாகப் பழகும் பக்கத்து வீட்டுப் பட்டாபியை செல்போனில் அழைத்தார், ராமசுப்பு.

அது சமயம் தன் குடும்பத்தாருடன் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்குப் பாலாபிஷேகம் செய்யப் போயிருந்தார் பட்டாபி. தனக்கு நேர்ந்துள்ள விபரீதத்தை பட்டாபியிடம் விளக்கிப் பரிகாரம் கேட்கலானார், ராமசுப்பு.

“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம் அல்லது ஏற்கனவே பூனை வளர்ப்பவர்களிடம் வாடகைக்கோ அல்லது ஓஸியிலோ வாங்கி வரலாம். அவ்வாறு செய்தால் பூனை எலியைப் பிடித்துத் தின்று விடும் என்று ஒரு ஆலோசனையும்; எலி பாஷாணம் என்று கடைகளில் விற்கும். அதை வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து, ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இறந்து போனாலும் போகலாம்” என்ற மற்றொரு ஆலோசனையும் வழங்கி விட்டு, பாலாபிஷேகம் பார்க்க வேண்டிய அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, தொடர்பைத் துண்டித்து விட்டார், பட்டாபி.

“சாமியார் பூனை வளர்த்த கதையாகிவிடும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். சகுனத்தடையாகி விடும். அதைக் கைக்குழந்தை போல பராமரிக்கணும். எல்லா இடங்களிலும் மலம் ஜலம் கழித்து அசிங்கம் செய்து விடும். பூனையிலிருந்து ஏதோ ஒரு வித வைரஸ் நோய் பரவுவதாக சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் படித்தேன்” எனச் சொல்லி அந்தப் பூனை வாங்கும் யோசனையை முளையிலேயே கிள்ளி எறிந்தாள் அவரின் மனைவி அம்புஜம். எலி பாஷாணமும் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதையும் நிராகரித்து விட்டாள்.

“வளவளன்னு நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருக்காமல் சீக்கிரமாக ஏதாவது வழி பண்ணுங்கப்பா .... மத்தியான சாப்பாடே இன்னும் அம்மா தயார் செய்யவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுது” என்றான் ராஜூ.


*** 

ராமசுப்பு, அம்புஜம், ராஜூ மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்த வண்ணம் தாண்டிக் குதித்து, பெட் ரூமை விட்டு மெதுவாக வெளியே வந்து, எட்டி நின்றவாறு மிகவும் உஷாராக சமையல் அறையை ஒரு திகிலுடன் பார்த்து விட்டு, பூட்டிய வீட்டைத் திறந்து வெளியே போய், மீண்டும் வீட்டையும் பூட்டிவிட்டு, ஹோட்டல் ஒன்றுக்குச் சாப்பிடச் சென்றனர்.

திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பும் வழியில் சந்தித்த தன் பால்ய நண்பர் பரந்தாமனிடம், இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதித்ததில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது, நம் ராமசுப்புவுக்கு.

பரந்தாமன் வீடும் பக்கத்திலேயே இருந்ததால், அங்கு போய் அவர் வீட்டுப் பரணையில் (லாஃப்ட்டில்), வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த எலிக்கூடு ஒன்றை வாங்கிக் கொண்டபின், சூடான சுவையான ரோட்டுக்கடை ... மசால் வடை ஒன்றும் வாங்கி, அவரை விட்டே, கைராசி என்ற பெயரில் அதில் பொருத்தித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டார், ராமசுப்பு.

“ஆள் நடமாட்டம் இருந்தால் அந்தப் பக்கம் எலி வரவே வராது, சார். அப்படியே வந்தாலும் நம்மை ஒன்றும் கடித்துக் குதறாது சார். நாம் பயப்படுவது போலவே அதுவும் நம்மைப் பார்த்து பயந்து எங்கேயாவது ஓடி ஒளிந்து விடும்” என்று நம்பிக்கை அளித்து, அந்த எலிக்கூடையும் ஒப்படைத்து “ஆல் தி பெஸ்ட்” சொல்லி அனுப்பி வைத்தார், பரந்தாமன்.

தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல, பரந்தாமன் கொடுத்த நம்பிக்கையில் எலிக்கூட்டுடன் அடுக்கு மாடி வீட்டுக்கு விரைவாகச் செல்ல ஆரம்பித்தனர்.

மூன்றாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட் ஏறியபோது, கூடவே ஒட்டிக்கொண்ட பால்காரர் ஒருவர், “என்ன ஸார் எலிக்கூடு இது? இவ்வளவு அழுக்காக ஒட்டடையுடன் ஒரு வித நாற்றம் அடிப்பதாக உள்ளது. இது போல சுகாதாரமில்லாத எலிக்கூட்டைக் கொண்டுபோய் வைத்தீர்களானால், எலி அந்தப் பக்கமே வராது ஸார். சுத்தமாக சோப்புப் போட்டுக்கழுவி, ஏற்கனவே எலி விழுந்த வாடை எதுவும் இல்லாமல் வைத்தால் தான், டக்குனு வந்து எலி மாட்டிக்கும்” என்று தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

சரியான நேரத்தில், இந்த ஒரு பக்குவத்தை எடுத்துக்கூறிய அந்தப் பால்காரரை நன்றியுடன் நோக்கிய ராமசுப்பு, அந்தப் பால்காரரை விட்டே எலிக்கூட்டிலிருந்து மசால் வடையை மெதுவாக வெளியே எடுத்துக் கொடுத்து உதவுமாறு வேண்டினார், பிறகு அதே மசால் வடை தேவைப்படலாம் என்ற தொலை நோக்குத் திட்டத்தில்.

பால்காரர் எலிக்கூட்டின் உள்ளே தன் முரட்டுக் கையைவிட்டு வடையைப் பிடித்து வேகமாக இழுத்ததில், மிகவும் மிருதுவான அந்த மசால் வடை, தூள் தூளாகி லிஃப்டினுள்ளேயே சிந்திச் சிதறியது.

“எலிக் கூட்டை சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவி விட்டு, வேறு ஒரு புதிய மசால் வடை வாங்கி வைங்க ஸார்” என்றார் மிகவும் அஸால்ட்டாக அந்தப் பால்காரர்.

’பத்து ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.

லிஃப்டினுள் சிந்திச் சிதறிய வடைத்தூள்களை செயலாளரின் மனைவி என்ற முறையில் அவளே சுத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது, அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.

****    


ரு வழியாக லிஃப்டில் சிதறி இருந்த மசால்வடைத் துகள்களை சுத்தப்படுத்தி விட்டு, அவர்கள் மூவரும் வேண்டா வெறுப்பாக தங்கள் வீட்டை நெருங்கினர்.

வீட்டு வாசலில் பூட்டைத் தன் கையால் பிடித்து இழுத்தபடி, மணச்சநல்லூரிலிருந்து வந்துள்ள அம்புஜத்தின் உடன்பிறப்பு கோவிந்தன் நின்று கொண்டிருந்தான்.

“வாடா .... கோவிந்தா, செளக்யமா? எப்போது வந்தாய்? பாவம் ... ரொம்ப நேரமா வாசலிலேயே நிற்கிறாயா?” என்று தன் உடன்பிறந்த தம்பியை கண்டு உவகையுடன் விசாரித்தாள் அம்புஜம்.

ராமசுப்புவைப் பொறுத்தவரை அவர் மச்சினன் (மச்சினன்=மனைவியின் சகோதரன்) கோவிந்தனைக் கண்டாலே அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. முரட்டு மீசை வைத்துக் கொண்டு, கைலியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அகராதித்தனமாக ஏதாவது பேசிக்கொண்டு, வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல், கோவில் மாடு போல சுற்றிக்கொண்டு, எப்பவும் ஒரு பேட்டை ரெளடி போல, அவர் கண்களுக்குத் தெரிபவன். மொத்தத்தில் அவன் ஒரு ஒரு வாய்ச் சவடால் பேர்வழி. அடிக்கடி மணச்சநல்லூரிலிருந்து புறப்பட்டு அக்கா வீட்டுக்கு வந்து டேரா போடுபவன். அவனால் அவருக்கு நேற்றுவரை ஒரு பிரயோசனமும் இல்லை.

ஆனால் இன்று அவரும் அவனை மனதார வரவேற்றார். கோவிந்தனுக்கே அவரின் இந்தச் செயல் ஆச்சர்யமாக இருந்தது.

“கோவிந்தா நீ தான் இதற்கு சரியான ஆளு! நம்ம வீட்டிலே ஒரு எலி புகுந்து அட்டகாசம் பண்ணுது. என்னான்னு கொஞ்சம் பார்த்து விரட்டி விட்டுடு. உன் அக்காளும், மருமானும் ( மருமான் = அக்கா பிள்ளை ) ரொம்பவும் பயந்து நடுங்கிப் போய் இருக்கிறார்கள்” என்று, தான் ரொம்ப தைர்யசாலி போலப் பேசினார்.

“எலி தானே ... அது என்ன புலியா ... ஏன் இந்தக் கிலி உங்களுக்கு?” என்று ஒரு வீர வசனத்தைப் பொழிந்து விட்டு ”கவலையே படாதீங்கோ, இன்று அதை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்” என்று தைர்யம் சொன்னான்.

வீட்டைத் திறந்து நால்வரும் உள்ளே போனதும்
“சூடா ஒரு காஃபி போடு அக்கா ... அப்படியே ஏதாவது பஜ்ஜியும் கெட்டிச் சட்னியும் பண்ணினாக்கூட இந்த மாதிரி நேரத்துக்கு சாப்பிட ஜோராயிருக்கும்” என்றான், கோவிந்தன்.

“நீ முதலில் எலி எங்கே உள்ளதுன்னு கண்டு பிடிச்சு அதை வெளியேற்ற வழியைப் பாரு ... சமையல் ரூமுக்குப் போகவே உங்க அக்கா பயப்படறா” என்றார் ராமசுப்பு.

சமையல் அறைக்குள் புகுந்து ராக்குகளில் இருந்த அனைத்து சாமான்களையும் ஹால் பக்கம் வெளியேற்றினான் கோவிந்தன். பிறகு உயரமான மர ஸ்டூல் ஒன்று போட்டுக்கொண்டு, உயரத்தில் இருந்த லாஃப்ட்களில் உள்ள அனைத்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள் என எல்லாவற்றையும் எடுத்து, தொப்தொப்பென்று கீழே போட ஆரம்பித்தான். சாமான்கள் உடையுமோ, நசுங்குமோ அல்லது தரையில் புதிதாகப் போடப்பட்ட டைல்ஸ் கற்களில் கீறல் விழுமோ என்ற பயத்தில் ராமசுப்புவே அவனுக்கு கூடமாட உதவி செய்யத் தயாரானார்.

“பார்த்து அத்திம்பேர் (அத்திம்பேர்=அக்காவின் கணவர்)! நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. உங்கள் உச்சந்தலையின் மேல் அந்த எலி எகிறிக்குதித்து, உங்கள் உடம்பெல்லாம் ஊடுருவி, உள்ளங்கால் வழியாகப் பிராண்டிட்டுப் போய் விடப் போகிறது” என்று எச்சரித்தான், கோவிந்தன்.

இதைக் கேட்டதும் ராமசுப்புவுக்கு, நிஜமாகவே அது போல நடந்து விட்டது போல ஒரு பிரமை ஏற்பட்டு, அரண்டு மிரண்டு போய், பெட்ரூம் கதவை சாத்தி விட்டு, ஃபேனைத் தட்டிவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்தார்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும், அதில் பல நாட்களாகத் தொங்கிக் கொண்டிருந்த கருத்த தடியான ஒட்டடைக்கற்றை ஒன்று அவர் மேல் தொப்பென்று விழுந்ததில், எலியோ என பயந்து போய், கட்டிலிலிருந்து எழுந்த அவர் ஒரு பரத நாட்டியமே ஆடியதில், அங்கிருந்த டீப்பாய் மேல் இருந்த இருமல் சிரப் மருந்து பாட்டில் கீழே விழுந்து, அது உடைந்து அதிலிருந்து கொட்டிய திரவம் அடிபட்ட எலியின் ரத்த ஆறு போலக் காட்சியளித்தது.

***** 

மையல் அறையின் எல்லாச் சாமான்களையும் கீழே தள்ளி விட்டு போர்க்களம் போல பரப்பிய கோவிந்தன் ஒரு குச்சியால் நெடுக லாஃப்ட் பூராவும் தட்டிப் பார்த்தான். எலி மட்டும் அவன் கண்களுக்குத் தட்டுப்படவே இல்லை.

வெறுத்துப் போன அவன்
“அக்கா, சமையல் ரூமில் அது இல்லை. வேறு எங்கேயாவது தான் இருக்கணும். நீ பஜ்ஜி, சட்னி, காஃபி தயார் பண்ணு. நான் படுக்கை அறையில் பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி ராமசுப்பு இருந்த அறைக்குள் புகுந்தான்.

ராமசுப்பு அப்போது தான் உடைந்த சிரப் பாட்டிலைப் பொறுமையாக திரட்டி ஒத்தி எடுத்து, அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து, துணியால் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தன் கைகளில் க்ளவுஸ் அணிந்து கொண்டு, அங்கிருந்த அட்டாச்டு பாத் ரூமில், தான் இரவல் வாங்கி வந்திருந்த அழுக்கடைந்த எலிக்கூட்டை நன்றாக ஒட்டடைபோகத் துடைத்து, சோப்பு போட்டு நுரை பொங்க தேய்த்து, குழாய் நீருக்கு அடியில் பிடித்த வண்ணம், துணி துவைக்கும் போது சட்டைக் காலர் அழுக்கெடுக்க உபயோகிக்கும் நைலான் ப்ரெஷ் கட்டையால் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்தார். 

அவருடைய கெட்ட நேரமோ என்னவோ, மிகவும் வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், ஒருவித உற்சாகம் அடைந்ததில், பட் ... பட் ... என்று அதிரஸம் போல தனித் தனியாகப் புட்டுக் கொண்டது. கம்பிகள் தனியாகவும், உளுத்துப்போன கட்டைகள் தனியாகவும் உடைந்ததும், நம் ராமசுப்புவுக்கு அழுகையே வந்து விட்டது.

“அத்திம்பேர் .... இந்த உடைந்து போன பாடாவதி எலிக்கூட்டைத் தலையைச் சுற்றி குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு, பெரிய மார்க்கெட்டுக்குப் போய் நல்லதாகப் பார்த்து, புதுசா வேறு எலிக்கூடு வாங்கிட்டு வாங்க” என்று உத்தரவு போட்டான் கோவிந்தன்.

சமையல் அறையில் சிதறிக் கிடந்த சாமான்களை குனிந்து நிமிர்ந்து சரி செய்வதற்குள் இடுப்புப் பிடித்தாற்போல ஆகிவிட்டது, அம்புஜத்திற்கு.

அமர்க்களப்படும் இந்த வீட்டில் இனியும் இருந்தால், நம்மையும் ஏதாவது வேலை ஏவிக்கொண்டே இருப்பார்கள் என்று யூகித்த ராஜூ ட்யூஷன் படிக்கப் போவதாகச் சொல்லி, தன் சைக்கிளில், எங்கேயோ கிளம்பி விட்டான்.

இந்த கோவிந்தன் முகத்திலும், எங்கேயோ ஒளிந்துள்ள அந்த எலி முகத்திலும் மேற்கொண்டு விழிக்கப் பிடிக்காமலும், அமர்க்களப்படும் அந்த வீட்டிலேயே அடைந்து கிடக்கப் பிடிக்காமலும், எலிக்கூடு புதிதாக வாங்கி வரும் சாக்கில், ராமசுப்புவும், எஸ்கேப் ஆகி பெரிய மார்க்கெட்டுக்குப் போகக் கிளம்பி, ஒரு வழியாக பஸ் ஏறி விட்டார்.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்க மார்க்கெட் முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்துக் கடைசியில் எலிக்கூடுகள் விற்கும் கடையொன்றைக் கண்டு பிடித்து விட்டார், ராமசுப்பு.

“நல்லதா ஒரு எலிக்கூடு கொடுப்பா” என்றார்.

“சுண்டெலியா? நடுத்தர எலியா?  பெருச்சாளியா?” என்றான் அந்தக் கடைக்காரன்.

“இதில் இவ்வளவு வகையறாக்கள் உள்ளனவா!” எலியைக் கண்ணால் கூடப் பார்க்காமல் எலிக்கூடு வாங்க புறப்பட்டது எவ்வளவு ஒரு முட்டாள் தனம் என்பதை நினைத்து வருந்தினார், ராமசுப்பு.

****** 

’சுண்டலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?’ பதில் அளிக்க முடியாமல் மிகவும் குழம்பிப் போன ராமசுப்பு, 

“என்னப்பா நீ வெய்யிலில் வந்துள்ள என்னிடம் போய் ’கல்வியா........ செல்வமா... ....... வீரமா.......’ என்ற பாட்டுப் போல ஏதேதோ கேள்வி கேட்கிறாய்? ஏதாவது ஒரு எலிக்கூடு கொடுக்க வேண்டியது தானே! என்றார்.

“நான் ஏதாவது ஒரு கூடு கொடுத்து அதை நீங்கள் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டு, உங்கள் வீட்டுக்கார அம்மா, உங்களை வெய்யிலில் திரும்பவும் அலைய விடக்கூடாது அல்லவா! அதனால் தான் கேட்டேன்” என்று சொல்லி, சுண்டலி பிடிக்கும் கூடு ஒன்றையும், நடுத்தர எலி பிடிக்கும் கூடு ஒன்றையும் கொண்டு வந்து காட்டினான்.

”இந்த மிகச்சிறிய கூட்டுக்குள் கையே நுழையாது போலிருக்கே” என்றார் ராமசுப்பு.

”சுண்டெலிகள் பிடிக்க இது தான் சரியான கூடு சாமி. சின்னக் கைகள் உள்ள யாராவது ஒரு குழந்தையை விட்டு உள்ளே தொங்கும் கம்பியில் ஒரு சின்ன வடையைச் சொருகிவிட்டால் போதும், ஒரே நேரத்தில் அரை டஜன் சுண்டெலிகள் க்ரூப் க்ரூப்பாக வந்து கப்புகப்புன்னு மாட்டிக்கும். பின் புறம் கம்பிகள் நெருக்கமாக உள்ளதால் வெளியே அவற்றால் தப்பிச் செல்லவும் முடியாது” என்றான்.சற்றே பெரியதான மற்றொன்றை எடுத்து நோட்டம் விட்டார் ராமசுப்பு. அதில் தன் கை சுலபமாக உள்ளே நுழையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அவருக்கு.  இருந்தாலும் கையை உள்ளே விட்டுப் பார்க்க பயம் அவருக்கு, உள்ளே ஏற்கனவே ஏதும் எலி இருந்தால்! என ஒரு வித அச்சம்.”கொஞ்சம் பெரிய சைஸ் எலியென்றால் இதை எடுத்துக் கொள்ளுங்க சாமி. வடையைப் பொருத்தி வைக்க சுலபமாக இருக்கும். ஆனால் பின்புறக் கம்பிகள் நெருக்கமாக இல்லாமல் இருப்பதால், இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட்டும் அழகாக சாப்பிட்டு விட்டு, சுலபமாக கொல்லைப்புறம் உள்ள கம்பி இடுக்குகள் வழியாகத் தப்பித்து விடும், சற்று பெரிய எலியாக இருந்தால் “விண்டோ” வழியாக வேடிக்கைமட்டும் பார்க்கும், ஆனால் தப்பித்துச் செல்லவே முடியாது” என்றான்.

“பெருச்சாளின்னு ஏதோ சொன்னாயே, அதற்கென்று ஏதாவது தனிக் கூடு உள்ளதா, அல்லது இதிலேயே அதுவும் மாட்டிக் கொண்டு விடுமா ? என மிகுந்த ஆவலுடன் கேட்டார்.

”பெருச்சாளிக்கென்று இது போல தனியாக எதுவும் கூடு நம்மிடம் கிடையாது சாமி. அது பொதுவாக வீட்டுக்குள் வந்து தொந்தரவு கொடுப்பது கிடையாது. ரோட்டில் ஓடும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போல சாக்கடையில் வேகமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டே இருக்கும்.”பெரிச்சாளிகளை பொதுவாக பெரிய கற்களாலும், கட்டையாலும் அடித்து காலி செய்து விடுவார்கள். அல்லது ஸ்ப்ரிங் ஆக்‌ஷனுடன் கூடிய எலிப்பொறி வைத்துப் பிடிப்பார்கள். அதனுடைய உடம்பு வெயிட் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா போன்ற ஸ்பீடுக்கு, இது போன்ற எலிக்கூடுகளை பெரிச்சாளி பிடிபடும் என்று நினைத்து வைத்தால் அந்தக் கூட்டையே வடையுடன் அலாக்காக தள்ளிக்கொண்டு (தூக்கிக்கொண்டு) போய்விடும்.”இந்தப் பெரிச்சாளிகள் என்பவை கிராமப்புற வீடுகள், கொல்லைப்புறம் போன்றவற்றிலும், நகர்புற சாக்கடைகளிலும் தான் அதிகமாக நடமாடும். ஆள் நடமாட்டமில்லாமல் உள்ள வீடுகளில் தரையில் மண்ணைத் தோண்டி பெரிய பெரிய குழிகள் (எலி வங்குகள்) பறித்து வீட்டையே நாசமாக்கி விடும்;


உங்க வீட்டு எலிகள் சுண்டலியா, நடுத்தர எலியா, பெருச்சாளியா என்று, இதுவரை எதுவும் சொல்லாமலேயே இருக்கிறீர்களே!” என்று மீண்டும் கேட்கலானார் அந்தக் கடைக்காரர்.

தன் ஞானசூன்யத்தைக் காட்டிக் கொள்ள விரும்பாமல் ”சரிப்பா நடுத்தர சைஸ் எலி பிடிக்கும் கூடே கொடுப்பா” என்றார்.

“இது போன்ற சைவக்கூடு போதுமா? அல்லது அசைவக்கூடு கொடுக்கட்டுமா சாமி?” என்ற தன் அடுத்த கேள்வியைக் கேட்டு ராமசுப்புவை மேலும் ஸ்தம்பிக்க வைத்தான். இது என்னடா தொல்லை என்று நினைத்து, அவன் என்ன கேட்கிறான் எனப் புரியாமல் அவனிடமே விளக்கம் கேட்டார் ராமசுப்பு.“இப்போது நான் காட்டிய சைவக்கூடு என்றால் எலிக்கும் எலிக் கூட்டுக்கும் சேதாரம் இல்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சா முறையில் அழகாகப் பிடித்து அதன் பிறகு அவரவர் விருப்பப்படி, தண்ணீர் வாளியில் அமுக்கியோ, ஒரே சுழட்டாக சுழட்டி சதிர்க்காய் போல அடித்தோ, சாக்குப்பை ஒன்றுக்குள் ஓடுமாறு கூட்டைத் மெதுவாகத் திறந்து விட்டு, பிறகு சாக்குப்பையின் வாயை இறுக்கிக் கட்டி, சாக்குப்பையை தரையில் சாத்து சாத்து என்று சாத்தியோ கொன்று விடலாம்.

ஜீவகாருண்யம் மிகுந்தவராக இருந்தால் அதைக் கூட்டோடு எடுத்துச் சென்று வேறு ஏதாவது நமக்கு வேண்டப்படாதவர் குடியிருப்புப் பகுதியில் விட்டுவிட்டு வந்தால், அது அங்கு நல்ல வேலை வாய்ப்பைத் தேடிப் பிழைத்துக் கொள்ளும், நம் நாட்டு இளைஞர்கள் வெளி நாட்டுக்கு வேலை வாய்ப்புத் தேடி செல்வது போல.

ஒரு சிலர் பூனை மீது மட்டும் ஜீவகாருண்யம் கொண்டு, அதன் பார்வை படும்படியாக இந்த எலிக்கூட்டை திறந்து விடுவார்கள். அந்தப் பூனை ஒரே பாய்ச்சலில் எலியைப்பிடித்து கவ்விச் சென்று கபளீகரம் செய்துவிடும்; ஆனால் அசைவக்கூடு என்றால் அப்படி இல்லை”
என்று சற்றே சஸ்பென்ஸ் கொடுத்தார், அந்தக் கடைக்காரர்.

தான் சைவமாக இருந்தாலும், வந்தது வந்தோம் அசைவக்கூடு எப்படியிருக்கும் என்பதைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அதையும் காட்டச் சொல்லி வேண்டினார்.

அவன் காட்டிய அந்த அசைவக்கூட்டைப் பார்த்த ராமசுப்புவுக்கு திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்கு எதிர்புறம் பிரம்மாண்டமாக உள்ள மெயின்கார்ட்கேட் ஆர்ச் வளைவு தான் ஞாபகத்திற்கு  வந்தது.   மேலும் அந்தக்கூடு என்னவோ ஆடை ஆபரணங்கள் ஏதும் இல்லாமல் அம்மணமாக இருப்பது போலத் தோன்றியது. இந்த வெட்ட வெளியான அமைப்பில் எப்படி ஒரு எலி சிக்க முடியும்? என்று யோசித்து சிண்டைப் பிய்த்துக் கொண்டார். 

”இதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும், சாமி. கொஞ்சம் அசந்தாலும் ஸ்பிரிங் ஆக்‌ஷன் நம் கை விரல்களைப் பதம் பார்த்து விடும். ஆனால் இதில் மாட்டிய எலி தப்பிக்கவே முடியாது. ஒரே ... அடி, எலியின் கழுத்தில் சரியாக அடிக்கும்; தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். தலை தனி உடல் தனியாக தொங்க ஆரம்பித்து விடும். க்ளீன் பெளல்ட் ஆகி ரத்தம் கக்கி செத்துவிடும்” என எலிகள் மற்றும் எலிக்கூடுகள் பற்றி பி.எச்.டி. செய்து டாக்டர் பட்டம் வாங்கியவன் போல ஒரு பெரிய பிரசங்கம் செய்தான். அந்தக் கடைக்காரன்.
முடிவாக, ”நடுத்தர சைஸ் எலி விழக்கூடிய சைவக் கூட்டிலேயே இரண்டு கொடுப்பா” என்றார். பரந்தாமனிடம் இரவல் வாங்கிய எலிக்கூட்டுக் கடனை அடைத்து விட பரந்தாமன் வீட்டுக்குப் பயணமானார்.

புதிய கூட்டை ஒப்படைத்து விட்டு, பழையகூட்டுக்கு நேர்ந்த கதியை சுருக்கமாக எடுத்துரைத்தார்.  

“என்ன தான் இது புதிய கூடாக இருந்தாலும், நாங்கள் உங்களிடம் கொடுத்தது பலதலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு. அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே?” என மிகவும் வருத்தத்துடன் கூறினாள், பரந்தாமனின் மனைவி.


******* ரந்தாமனுக்கு தரவேண்டிய எலிக்கூட்டுக் கடனை ஒருவழியாக அடைத்து விட்டோம் என்ற திருப்தியுடன், புத்தம் புதிய மற்றொரு எலிக்கூட்டுடன் பரந்தாமன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தன் வீட்டுக்குச் செல்லும் வழியில், இரண்டு டஜன் மசால் வடைகள் மறக்காமல் வாங்கிக்கொண்டார், ராமசுப்பு. 

சூடாக பஜ்ஜி போட்டுத்தா அக்கா என்று தொடர்ந்து படுத்தி வரும் கோவிந்தனுக்கும் தின்னக் கொடுக்கலாம் என்ற நல்லெண்ணத்தில். 

வழியில் ட்யூஷன் முடிந்து இப்போது தான் வருவதாகச் சொல்லி, ராஜூவும் தன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான். தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டும்,  எலிப் பிரச்சனை விஷயமாக அப்பாவுடன் பேசிக்கொண்டும் வந்த ராஜுவுடன், ராமசுப்பு தன் வீட்டை அடையும் போது இரவு மணி ஏழாகி விட்டது.

“வாங்கோ அத்திம்பேர், வீட்டிலே எலி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் நன்றாக அலசிப் பார்த்து விட்டேன். கவலைப்படாமல் சாப்பிட்டுப் படுங்கோ. நாளைக்குக் காலையிலே அக்காவையும் ராஜூவையும் கூட்டிண்டு மணச்சநல்லூர் போகலாம்னு இருக்கிறேன்” என்றான் கோவிந்தன்.

மோப்ப நாய்கள் சகிதம் வெடி குண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்து விட்டு, வெடி குண்டு எதுவும் இல்லை, வீண் புரளியைத் தான் யாரோ கிளப்பி விட்டுள்ளனர் எனச் சொன்னால் ஏற்படும் மன நிம்மதியைப் போல ஒரு  நிம்மதியை அடைந்தார் ராமசுப்பு.

எதற்கும் இருக்கட்டும் என்று புதிய எலிக்கூட்டை மசால் வடையுடன் தயார் நிலையில் சமையல் அறையின் ஒரு ஓரமாக, கோவிந்தனை விட்டே வைக்கச் சொன்னார்.  அவன் சாப்பிடவும் ஒரு அரை டஜனுக்கு மேல் வடைகள் கொடுத்தார்.

தம்பி கோவிந்தனை பூனைப் படைத் தளபதி போல தன்னருகிலேயே பாதுகாப்புக்காக நிற்க வைத்துக்கொண்டு, எலி பயம் ஏதுமின்றி, இரவு சமையலை ஒரு வழியாக முடித்திருந்தாள், அம்புஜம். 

அனைவரும் சாப்பிட்டு அலுப்புடன் படுத்தனர். ராமசுப்புவுக்கு மட்டும் சரியாகவே தூக்கம் வரவில்லை. ஏதேதோ சொப்பனங்கள் வேறு வந்தன.

முதன் முறையாக தன் உள்ளங்காலில் யாரோ சொரிவது போலத் தோன்றி திடுக்கிட்டு எழுந்தார். பிறகு சீப்பை எடுத்து தானே தன் கையால் நன்றாகவே சொரிந்து கொண்டு படுத்துக்கொண்டார்.

இரண்டாவது முறை தன் தலையணிக்கும், தலையணி உறைக்கும் இடையில் ஏதோ ஊடுருவிச் சென்றது போல ஒரு உணர்வு.  மீண்டும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். 

ராமசுப்புவின் தலை மட்டும் தரையில் இருந்தது, தலையணியைக் காணோம்.  தன் தலையணியை தரதரவென்று எலி இழுத்துப்போய் இருக்குமோ என்று ஒரு திடீர் சந்தேகம் வந்தது அவருக்கு. 


எப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு, தன் தலையாவது தப்பியதே என்று நினைத்து, வலது கையை மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு ஒருக்களித்துப் படுத்து விட்டார். 


அவர் வைத்திருந்த தலையணியை உருவி கோவிந்தன் தன் தொடைக் கிடுக்குகளுக்கு அண்டக் கொடுத்திருந்ததை, இருட்டில் அவரால், சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.

மூன்றாம் முறை, சுவற்றில் ஆணியில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஏதோவொரு மாதக் காலண்டர் ஃபேன் காற்றில் விசிறியடித்து கீழே விழுந்ததில், திடுக்கிட்டு எழுந்தார். 

”அம்புஜம், அம்புஜம் ஏதோ சப்தம் கேட்டதே கவனித்தாயா?” என்றார்.

அசந்து தூங்கிக்கொண்டிருந்த அம்புஜம், இவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. தூக்கத்தில் அவளை எழுப்பினால் என்ன நடக்கும் என்பது அவர் நன்றாகவே அறிந்திருந்ததால் கப் சிப் என்று தானும் சற்று கண்ணை மூடித் தூங்கலானார்.

நான்காவது முறையும் திடுக்கிட்டு எழுந்தார். இப்போது ஏதோவொரு விசித்திர சப்தம் தொடர்ந்து கேட்கலானது.  

நிச்சயமாக எலி தான் எதையோ கடித்துக் குதறிக்கொண்டு இருக்கிறது என்று உறுதியாக நம்பி, எழுந்து, பயந்து கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தார்.   அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.

மறுநாள் சனிக்கிழமையன்று காலை 7 மணிக்கு ராமசுப்பு ஆபீஸுக்குக் கிளம்பும் போதே, மற்ற மூவரும் மணச்சநல்லூருக்குக் கிளம்பினர். அம்புஜமும் ராஜூவும் திரும்பி வர எப்படியும் ஞாயிறு இரவு ஆகிவிடும் என்பது அவருக்கும் தெரியும்.

ராமசுப்புவுக்கு ஆபீஸிலும் வேலை ஓடவில்லை. வீட்டில் எலி ஓடுமோ என்ற கவலை. தன்னை இப்படி தனியாக விட்டுவிட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு கோவிந்தனும் போய் விட்டானே என்ற பயம் வேறு.

பக்கத்து சீட்டுக்காரரிடம் செய்தித்தாள் வாங்கி ராசி பலன் பகுதியை நோட்டம் விட்டார். அவர் ராசிக்கு “சனி வக்ரமாகவும் உக்கிரமாகவும் இருப்பதால் எந்த ரூபத்திலாவது வந்து தொல்லை கொடுப்பார்; (எலி ரூபத்திலோ என்று நினைத்து பயந்து போனார்) இந்த ராசிக்காரர்கள் பலருக்கும் பண விரயம் ஏற்படும். சிலருக்கு மட்டும் எதிர்பாராத வகையில் அண்டை அயலாரின் பாராட்டு மழை பொழியும்” என சம்பந்தா சம்பந்தம் ஏதுமில்லாமல் ஏதேதோ போட்டிருந்தது.

ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ்ஸைப் பிடித்தார். வழியில் மாம்பழச்சாலை அருகே பஸ் நின்றதும், ராமசுப்புவின் கண்களில் பட்டது அந்தக் காட்சி. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் வரை பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய அவரை, அங்கேயே மாம்பழச் சாலையிலேயே இறங்கிக்கொள்ளும் படிச்செய்தது,  அவர் கண்ட அந்த அபூர்வமான அதிஸயக் காட்சி.

தன் மச்சினன் கோவிந்தனைப் போலவே ஒருவன். அவன் பெயர் ரங்கனாம். பெரிய எலி ஒன்றைத் தலைகீழாகத் தொங்க விட்டபடி, தன் கை விரல்களாலேயே அதன் வாலைப் பிடித்தபடி, சிறுவர்கள் பலர் அவனைப் புடை சூழ, குப்பைத்தொட்டியில் போடச்செல்வதைப்பார்த்து, அப்படியே பிரமித்துப் போய், அவனைப் பின் தொடர்ந்து ராமசுப்புவையும் செல்ல வைத்தது.

அந்த ரங்கனுடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒரு அட்வான்ஸ் தொகையையும் அவனுக்கு அளித்து விட்டு, தன் வீட்டு விலாசத்தையும் அவனிடம் குறித்துக் கொடுத்து விட்டு, வீடு திரும்ப எண்ணியவருக்கு ஒரு சிறு சபலம் ஏற்பட்டது.

அம்புஜம் ராஜூ யாரும் இல்லாத இன்றைய இரவு தனிமையில் இனிமை காண வேண்டி, உற்சாக பானம் ஒரு குவார்ட்டர் வாங்கி அடித்து விட்டு, ஹோட்டலில் திருப்தியாக ஸ்பெஷல் ரவாதோசை, ஆனியன் ஊத்தப்பம் என்று டிபனும் வாங்கி சாப்பிட்டு விட்டு, மசாலாப்பால் ஒன்றும் சூடாக அருந்தி விட்டு, ஒரு வழியாக ஒரு ஆட்டோவில் ஏறி வீடு திரும்பினார். 

உண்மையிலேயே அந்த உற்சாக பானம் அன்றிரவு, அவருக்கு பயத்தை நீக்கி தன்னம்பிக்கை அளித்ததுடன், நல்ல நிம்மதியான உறக்கத்தையும் அளித்தது.

******** 

றுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு மாம்பழச்சாலை ரங்கன், தன் வழக்கம்போல பட்டைசாராயத்தை கட்டிங் ஏற்றிக்கொண்டு ஒருவித போதையுடன் ஆனால் மிகவும் ஸ்டெடியாகவே,  கையில் ஒரு  கனத்த  மஞ்சள் பையுடன் ராமசுப்பு குடியிருக்கும் ‘எலிஸபத் டவர்ஸ்’ அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்டில், லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடி போய், ராமசுப்பு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான். 
கதவைத் திறந்த ராமசுப்புவுக்கு, எலி செத்த வாடை, குடலைப் பிரட்டி, குமட்டிக்கொண்டு வர ஆரம்பித்தது. தன் மூக்கை மட்டும் இறுகப் பொத்தியபடி, ஜாஸ்மின் ஃபாரின் செண்ட் பாட்டிலை எடுத்து பன்னீர் தெளிப்பது போல ரங்கன் மீதும், ரங்கன் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையின் மீதும், தன் மீதும் மாற்றி மாற்றித்  தெளித்து தொடர்ந்து ஸ்ப்ரே செய்து கொண்டே இருந்தார்.
பிறகு, “வாப்பா, ரங்கா ….. இப்படி ஓரமாக உட்கார்” என்று சொல்லி விட்டு, வாட்ச்மேனை அவசரமாக அழைத்து, அனைத்து வீடுகளுக்கும் அவசரச் செய்தியொன்று சொல்லி அனுப்பி, அனைவரையும் வெளியே வரவழைத்தார்.
செய்தி கேட்ட அனைவரும், மிகுந்த ஆச்சர்யத்துடன், அவரவர் வீட்டிலிருந்து வெளியே வந்து, குழந்தை குட்டிகளுடன் ஆங்காங்கே ஒவ்வொரு தளத்தின் படிக்கட்டுகளிலும் விரைந்து வந்து கூடி நின்றனர்.
ரங்கன் தன் ஒப்பந்தப்படி மிகச்சரியாக 9 மணிக்கு, தான் கொண்டுவந்திருந்த செத்த எலியை, தன் மஞ்சள் பையிலிருந்து வெளியே எடுத்து தன் கையாலேயே அதன் வால் பகுதியைக் கெட்டியாகப் பிடித்து தலை கீழாக அந்த செத்த எலியைத் தொங்கவிட்டு ராமசுப்புவின் வீட்டிலிருந்து, மிகவும் மெதுவாக அடிமேல் அடி வைத்தபடி, சவ ஊர்வலம் போலப் புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக ஒவ்வொரு மாடிப்படிகளாக மொத்தம் சுமார் 21×3=63 படிகள் இறங்கிச் சென்றான்.
ராமசுப்புவும் அவனைப் பின்தொடர்ந்து,  ஒவ்வொரு குடுத்தனக் காரர்களையும் ஒரு வித பெருமிதத்துடன் பார்த்தவாறே செல்லலானார்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த அனைவரும், தங்கள் குழந்தை குட்டிகள் சகிதம்,  அந்த முரட்டு  எலியின் இறுதி ஊர்வலத்தில் மகிழ்வுடன் கலந்து கொள்ள ராமசுப்புவைப் பின் தொடர்ந்து சென்றனர். 
தூக்கிச் செல்லும் செத்த எலியைப் பார்த்த அனைவருக்கும், அது என்கெளண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் ரெளடியைப் போலக் காட்சியளித்தது.தெருவோரம் இருந்த குப்பைத் தொட்டியொன்றில் அதைப்போட்டு நல்லடக்கம் செய்துவிட்டு, ராமசுப்புவிடம் விடைபெற்று, புறப்படத் தயாரானான், ரங்கன்.  
ரங்கனுக்கு தன் சட்டைப்பையிலிருந்து சர்வ அலட்சியமாக ஒரு ஐம்பது ரூபாய் சலவை தாளை, பலரும் பார்க்கும் வண்ணம் எடுத்து நீட்டினார், ராமசுப்பு.
ஆஹா, நம் அடுக்கு மாடிக் குடியிருப்பில், இதுவரை அட்டகாசம் செய்து வந்த முரட்டு எலியை ‘எலி பிடிக்கும் எக்ஸ்பர்ட்’ ஒருவரை பிரத்யேகமாக வரவழைத்து, மிகவும் லாவகமாகப் பிடித்து, அடித்துக் கொன்று, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த, செயலாளர் ராமசுப்புவை அனைவரும் உளமாறப் பாராட்டினர். 
அன்று அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து, அதை நிறைவேற்றக் காரணமாய் இருந்தவர்கள் கூட, இன்று அவரைக் கைகுலுக்கிப் பாராட்டி, தங்களின் அன்றைய அவசரச் செயலுக்கு மன்னிப்பும் கேட்டனர். அண்டை அயலாரின் பாராட்டு மழையில் நனைந்தவாறே வீட்டுக்குத் திரும்பினார் ராமசுப்பு.
கதவைத் திறந்ததும், டைனிங் டேபிளிலிருந்து இரண்டு மிகச்சிறிய சுண்டலிகள் தாவிச் சென்று அருகே இருந்த ஜன்னல் கம்பிகள் வழியே வெளியில் தப்பியோடியதைத் தன் கண்களாலேயே பார்த்த அவருக்கு தலையைச் சுற்ற ஆரம்பித்தது. 


மிகவும் பயத்துடன், மிகப்பெரிய துணிக் குடையின் கைப்பிடி வளையப் பகுதியை மிகவும் கஷ்டப்பட்டு, டைனிங் டேபிள் அருகே இருந்த ஜன்னல் கைப்பிடியில் நுழைத்து எட்டி நின்றவாறே, ஜன்னல் கதவுகளை இழுத்துப் பளார் என்று சாத்தி விட்டு, வீட்டையும் பூட்டிவிட்டு, தெருவோரமாக வந்து நின்று யோசித்தார்.
அன்று தன் வீட்டுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு முரட்டுப் பெண் எலியாக இருக்குமோ! அதுதான், ஒருவேளை பிரஸவித்து இந்த இரண்டு குட்டிகளைப் போட்டிருக்குமோ! 
அல்லது ஒருவேளை இன்னும் அதிகமான குட்டிகள் போட்டு அவைகளும் ஆங்காங்கே சுற்றித்  திரிகின்றனவோ, என நினைத்து அஞ்சி நடுங்கலானார். 
தன் ’எலிஸபத் டவர்ஸ்’ குடியிருப்புப் பகுதி மீதே ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது அவருக்கு.
’எது எப்படி இருப்பினும், இந்த எலிகள் நடமாடும், எலிஸபத் டவர்ஸ்ஸில் இனியும் நாம் குடியிருப்பது நல்லதில்லை’ என்ற முடிவுக்கு வந்து விட்டார், ராமசுப்பு.
கூடிய சீக்கரம் இந்த அடுக்குமாடி வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு, தன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள செயலாளர் பதவியையும் துச்சமெனக் கருதி, துறந்துவிட்டு, ’எலி வளையானாலும் தனி வளையாக’ வேறு எங்காவது தனி வீடு பார்த்துக் குடியேறுவது’ என்று அதிரடியாக முடிவெடுத்தார், ராமசுப்பு.
அதுவரை எங்கே தங்குவது, எப்படித் தங்குவது என்று குழம்பியவாறே, தானும் தன்னையறியாமலேயே மணச்சநல்லூரில் உள்ள தன் மாமனார் வீட்டுக்குச் செல்லலானார், மைத்துனர் ”திருவாளர் கோவிந்தன்” அவர்களை மீண்டும் கையோடு அழைத்து வந்து, தன்னுடனேயே  நிரந்தரமாகத் தங்க வைத்துக்கொள்ள.


 
இந்த என் நகைச்சுவைக்கதை ஒரு பிரபல தமிழ் வாரப்பத்திரிகையின் 
2007 தீபாவளி மலரில் வெளி வந்தபோது 
அந்தப் பத்திரிகை அலுவலக ஓவியரால் வரையப்பட்டுள்ள படம் இது. 

இந்தக்கதையில் இதுபோன்ற ஒரு காட்சி வராதுபோனாலும் 
அந்த தைர்யமான முரட்டு எலி இவர்கள் மூவரின் கண்களில் தென்பட்டால்,
 இவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்வார்கள் 
என கற்பனையில் வரையப்பட்டுள்ள ஓவியமாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

எலி தைர்யமாக ஹாலில் அமர்ந்திருக்க, 
ராமசுப்பு சோஃபாவின் மேல் ஏறி பரத நாட்டியமே ஆடுகிறார்.

அம்புஜம் கிரைண்டர் பாத்திரத்திற்குள் ஒரு காலை விட்டுக்கொண்டு, 
கலவரமான முகத்துடன் பீரோ மீது ஏறலாமா என மற்றொரு காலைத்தூக்கி முயற்சிக்கிறாள்.

ராஜூ ஏற்கனவே அந்த பீரோ மீதே ஏறி அதன் உச்சியில் அமர்ந்தே விட்டான்.

அந்தப்படத்தினை ஊன்றிப்பார்த்தால் நம்மையறியாமல் புன்னகைக்கத்தான் நேரிடும். 

படம் வரைந்துள்ள ஓவியருக்கு நம் பாராட்டுகள்.

- VGK

   

 

டிப்ஸ்:  இந்த நகைச்சுவை கதைக்கு நகைச்சுவையாகவே விமரிசனம் 

எழுதினால் பரிசு கிடைக்காமலா போகும்?'  


oooooOooooo VGK-34 - பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !


 

 


VGK-34 - பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !

சிறுகதைக்கான விமர்சனப்போட்டி 

முடிவுகள் வழக்கம்போல் 

நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்

முற்றிலுமாக வெளியிடப்படும்.
இந்த VGK-34 போட்டிக்கு வந்திருந்த விமர்சனங்கள் பற்றி 

நடுவர் திரு. ஜீவி அவர்களின் பொதுவான சில கருத்துக்கள் 

23.09.2014 செவ்வாய்க்கிழமையன்று

தனிப்பதிவின் மூலம் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !  
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

35 கருத்துகள்:

 1. எலிஸபத் டவர்ஸ் ..!
  எலி,,!! சிரிக்கவைக்கும் சிறப்பான கதை..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. எலியால் வந்த சோதனைகள். ஒரு வீர ஆண்மகனுக்கு இழிவுப் பெயர் கொடுக்கவந்த இந்த எலியை என்ன செய்யலாம். எதுக்கோ பயந்து வீட்டைக் கொளுத்தினவன் கதை போலவே நகைக்க வைத்தது எலிக்கதையும்.

  பதிலளிநீக்கு
 3. விமரிசன இலக்கியம் வளர்கிறது உங்கள் முயற்சியால்...

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா, எங்க வீட்டில் எலியோட நாங்க குடித்தனமே பண்ணி இருக்கோம். இதெல்லாம் ஜுஜுபி! :)))))

  பதிலளிநீக்கு
 5. இனிய வாழ்த்துகள் அனைவருக்கும்.
  இங்கும் வரலாம். இனிய வரவு.
  http://kovaikkavi.wordpress.com/2014/09/20/32-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

  பதிலளிநீக்கு
 6. http://sivamgss.blogspot.in/2012/07/blog-post_26.html

  //http://sivamgss.blogspot.in/2008/02/p.html

  http://sivamgss.blogspot.in/2007/10/blog-post_12.html

  http://sivamgss.blogspot.in/2007/10/blog-post_02.html

  புலி பக்கத்தில் மானையும், கருடன் பக்கத்தில் கிளியையும் வைக்க வேண்டி இருக்கு. பொம்மையின் அமைப்பு அந்த மாதிரி இருக்கு. ஏதோ ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி வச்சால், ராத்திரி எலி வந்துடுது. இது நிஜ எலி. எலியோட ஒரு என்கவுன்டர் நடத்தி அதைச் சாகடிக்கலாம்னால் அது "எதிரி" படத்திலே மாதவன் தப்பிக்கிற மாதிரி கூட்டத்தோடு கூட்டமா ஓடிப் போயிடுச்சு. ஒரே தலை சுத்தல். அப்புறம் எலியை விஷம் வச்சுத்தான் கொல்லணும்னு முடிவு செஞ்சிருக்கோம். ரகசியமா அதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. //

  எங்களோட எலிமஹாப்புராணத்தின் சில பகுதிகளை இங்கே பகிர்ந்துள்ளேன். ஏற்கெனவே கொடுத்தது போகலைனு நினைக்கிறேன். அதிலே என்ன எழுதினேன்னு இப்போ நினைவில் இல்லை. :)))) எலிகளெல்லாம் துண்டைக்காணோம், துணியைக் காணோம்னு ஓட வைச்சுட்டோமுல்ல!

  பதிலளிநீக்கு
 7. மறுபடியும் காமெடி டச்! கலக்கல் கதை வாத்யாரே! நடத்துங்க! என்றும் அன்புடன் எம்ஜிஆர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI September 21, 2014 at 11:31 PM

   வாங்கோ வாத்யாரே ! என்ன ஆச்சு உமக்கு ?

   //மறுபடியும் காமெடி டச்! கலக்கல் கதை வாத்யாரே! நடத்துங்க! என்றும் அன்புடன் எம்ஜிஆர்! //

   ராமசுப்பு வீட்டு எலியைப் பிடிக்க முடியாதது போலவே உங்களையும் என்னால் பிடிக்கவே முடியாமல் உள்ளது. கடந்த 4-5 வாரங்களாகப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லையே !!!!! ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ?????

   திறமையான எழுத்தாளராகிய தாங்கள் அருமையான சந்தர்ப்பங்களை இப்படி நழுவவிட்டு வருவது நல்லதல்ல என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

   அன்புடன் VGK

   நீக்கு
 8. அன்பின் வை.கோ - நகைச்சுவைக் கதை அருமை - மிக மிக இரசித்துச் சிரித்தேன் - நல்லதொரு நகைச் சுவைக் கதை - ஆனாலும் நாளை அதி காலை 5 மணிக்கு விமான நிலய்ம் சென்று விமானத்தைப் பிடிக்க வேண்டி இருப்பதால் - அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதனால் - இவ்வளவு அருமையான நகைச்சுவைக் கதைக்கு நகைச்சுவையாக விமர்சனம் எழுத இயலவில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நாங்கள் இப்பொழுது அயலகத்தில் இருக்கிறோம் - நாளை அதிகாலை விமான நிலயம் சென்று தாயகத்திற்குச் செல்லும் விமானத்தைப் பிடித்து மறு நாள் 25.09.2014 அன்று அதிகாலை 3 மணீக்கு சென்னை விமான நிலையம் சென்று விடுகிறோம். பிறகு அங்கிருந்து மதுரை செல்ல வேண்டும்.

  ஆக நகைச்சுவைக் கதையின் நகைச்சுவை விமர்சனம் எழுத இயல வில்லை.

  வருந்துகிறேன்
  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) September 23, 2014 at 3:13 PM

   வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம்.

   //ஆக நகைச்சுவைக் கதையின் நகைச்சுவை விமர்சனம் எழுத இயல வில்லை. வருந்துகிறேன்//

   வருந்தாதீங்கோ. நல்லபடியாக இந்தியா .... சென்னைக்கு வந்து மதுரைக்கு வந்து சேருங்கள், ஐயா.

   மதுரையில் நடக்கும் பதிவர் மாநாடு விஷயமாகவும், அடுத்தடுத்து வலைச்சர ஆசிரியர்கள் நியமனம் விஷயமாகவும் உயர்மட்ட ஆலோசனைகள் நடத்த மட்டுமே தாங்கள் லண்டனுக்குப் பயணம் போய் உள்ளீர்கள் என எனக்கு மிக நன்றாகவே தெரியும். :)))))))

   வாழ்த்துகள். VGK-37 முதல் VGK-40 வரையிலான கடைசி 4 கதைகளுக்காவது விமர்சனம் அனுப்பி கலந்து கொள்ளுங்கள் ஐயா. அத்துடன் இந்தத் தொடர் போட்டி நிறைவடைய உள்ளது ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 9. எலித்தொல்லையை இவ்வளவு அழகாய் கதையாக்கிய விதம் அருமை.
  சிரித்து சிரித்து படித்தேன். அசைவ கூடு நல்ல பேர்.

  அசைவ கூடு நாங்கள் வாங்கி இருக்கிறோம். (கத்தி இன்றி இரத்தம் இன்றி என்பது போல் தான்) வடையை இழுக்கும் போது அதன் கழுத்தில் மாலையாக விழுந்து குரல்வளையை நசுக்கி விடும் அவ்வளவுதான், இரத்தம் எல்லாம் வெளியே வராது.
  அசைவ கூட்டிற்கு வடையை விட தேங்காய் சுட்டு வைப்பார்கள்.
  இப்போது எலிமேட் கிடைக்கிறது பசை தடவி ,அதை எலி அடிக்கடி நடமாடும் இடத்தில் கொஞ்சம் உணவு பொருளை போட்டு வைத்து விட்டால் அதில் எலி ஒட்டிக் கொள்ளும் பின் வெளியே அப்படியே போட்டு விடுகிறார்கள். அப்புறம் காக்கா, பூனை பாடு என்று.
  ’சாதுமிரண்டால்’ என்ற படத்தில் அந்த படத்தின் கதாநாயகன் எலிகூட்டை தூக்கி கொண்டு வெகு தூரத்தில் உள்ள விளையாட்டு திடலுக்கு கொண்டு விடுவார்.

  இது போன்ற சிரிப்பு கதைகளை நிறைய எழுதுங்கள். ஓவியம் , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு September 23, 2014 at 3:27 PM

   வாங்கோ, வணக்கம்.

   //எலித்தொல்லையை இவ்வளவு அழகாய் கதையாக்கிய விதம் அருமை. சிரித்து சிரித்து படித்தேன். அசைவ கூடு நல்ல பேர். .......... இது போன்ற சிரிப்பு கதைகளை நிறைய எழுதுங்கள். ஓவியம் , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 10. எலிக்கதையை படித்ததும் இங்க வீட்லயும் எலி ஓடற மாதிரி ஒரு ஃபீலிங்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ezhil September 24, 2014 at 8:14 PM

   வாங்கோ .... வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

   //எலிக்கதையை படித்ததும் இங்க வீட்லயும் எலி ஓடற மாதிரி ஒரு ஃபீலிங்....//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எனக்கும் கூட இப்போது தங்களின் பின்னூட்டத்தைப்படித்ததும் அதே ஃபீலிங் ! :)

   தங்களின் அன்பான வருகைக்கும், நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

   VGK

   நீக்கு
 11. எலிய எலிமினேட் செய்ய முயற்சித்து முடியாம அவரே டிஜெக்ட் ஆகி, வீட்ட விட்டு எஜெக்ட் ஆகவும் முடிவு பண்ணிட்டாரே! அய்யோடா! ஆரம்பிச்சத முடிக்கமுடியாம நான் கடசி நாளுல அப்பீட் ஆனதப்போல! அடுத்தது சென்டிமென்ட்! வர்ரேன் வாத்யாரே! என்றும் அன்புடன்...உங்கள் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
 12. எலியைக் கண்டு பயந்த காலம் போய் இப்போது அனைவரும் எலியைக் (மவுஸ்) கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 13. கதையின் தலைப்பே சிரிக்க வைக்குது. அப்புறம் கதையைப்பற்றி சொல்லவா வேணும்.. நல்ல நகைச்சுவை விருந்து,

  பதிலளிநீக்கு
 14. நல்ல வேளை அந்த டவர்ல நாங்க வீடு வாங்கலை.

  ம்க்கும் எலி விருந்துக்கு வராத வூடு ஏது, வூர் தான் ஏது. இருந்தாலும் இப்ப வலை அடிச்சு (எலி கடிக்க முடியாத இரும்பு வலை) இல்ல உக்காந்திருக்கோம்.

  பதிலளிநீக்கு
 15. எங்கூட்ல லா எலிய தொரத்திகிட்டு பெருச்சாளியே ஓடிகிட்டு இருக்கும் அது பாத்துகிடும்

  பதிலளிநீக்கு
 16. எங்க எப்ப எலியைப்பார்த்தாலும் இந்த நகைச்சுவைக்கதை நினைவில் வந்து சிரிப்பு வந்துடும் அதுமட்டுமில். ஒரு நா பக்கத்து வீட்டு பெண் எங்க வீட்டுக்கு வந்தா. உன் பேரு என்னம்மா என்றேன். எலிசபத்னு சொன்னத கேட்டு நான் ஏன் அப்படி சிரிச்சேன்னு அவங்களுக்கெல்லாம் புரியவே இல்லை. மெண்டல் கேஸோன்னு நெனச்சிருப்பாங்க.

  பதிலளிநீக்கு
 17. இராமசுப்புவின் வீட்டில் எலி நுழைந்தபின் அவர் எப்படியெல்லாம் செயல்படுகிறார் எனக் காட்டியவிதம் அருமை. தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது இதுதானோ? பாவம்! இனியாவது அவர் செல்லுமிடமெல்லாம் எலியில்லா இடமாகி எல்லையில்லா மகிழ்வளிக்கட்டும்!

  மொத்தத்தில் நகைச்சுவை மிளிர சிரிக்க வைத்து, சிந்திக்கவைத்து, எலிகளைப் பற்றியும் எலிப்பொறிகள் பற்றியும் விளக்கப் படங்களுடன், புதுமையான உவமைகளுடன் வெளியாகியுள்ள இந்தக் கதை அருமை. கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல நகைச்சுவை கதைகளைப் படைக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

   //மொத்தத்தில் நகைச்சுவை மிளிர சிரிக்க வைத்து, சிந்திக்கவைத்து, எலிகளைப் பற்றியும் எலிப்பொறிகள் பற்றியும் விளக்கப் படங்களுடன், புதுமையான உவமைகளுடன் வெளியாகியுள்ள இந்தக் கதை அருமை. //

   மிக்க மகிழ்ச்சி :)

   தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 18. இந்தப் போட்டிக்கான கதையினை, முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

  25 + 29 + 35 + 39 + 46 + 59 + 45 + 39 = 317

  அதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-8):

  http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html

  http://gopu1949.blogspot.in/2011/02/2-8.html

  http://gopu1949.blogspot.in/2011/02/3-8.html

  http://gopu1949.blogspot.in/2011/02/4-8_26.html

  http://gopu1949.blogspot.in/2011/02/5-8_28.html

  http://gopu1949.blogspot.in/2011/03/6-8.html

  http://gopu1949.blogspot.in/2011/03/7-8.html

  http://gopu1949.blogspot.in/2011/03/8-8.html

  பதிலளிநீக்கு
 19. கதையை நன்றாக நகைச்சுவை மிளிர எழுதியிருக்கிறீர்கள்.

  "எலி பாஷாணம் என்று கடைகளில் விற்கும். அதை வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து, ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இறந்து போனாலும் போகலாம்" - இதையே elaborate செய்து இன்னொரு எபிசோட் எழுதியிருக்கலாம்.

  "அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ " - இயல்பான இந்த நகைச்சுவை ரொம்பப் பொருந்திப்போகிறது. யாரும் மனதில் நினைப்பதுதானே. எழுத்தைப் படிக்கும்போதே மசால்வடை வாசனை வந்துவிட்டது.

  "வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், ஒருவித உற்சாகம் அடைந்ததில், பட் ... பட் ... என்று அதிரஸம் போல தனித் தனியாகப் புட்டுக் கொண்டது. " - உணவின்மீதுள்ள ஆர்வம்தான் அந்த அந்தப் பகுதி வரும்போது நகைச்சுவையா எழுதத் துணைபுரியுதுன்னு நினைக்கிறேன். இதை எழுதறதுக்கு அதிரசமாவு சரியா இல்லைனா எப்படி பட் பட்டுன்னு பிரிஞ்சுரும்னு தெரியணும்.

  "சூடா ஒரு காஃபி போடு அக்கா ... அப்படியே ஏதாவது பஜ்ஜியும் கெட்டிச் சட்னியும் பண்ணினாக்கூட" - மச்சினன் தொச்சு (கடுகு அகத்தியன் சார் கதைகள்) வகையறா போலிருக்கு. சந்தடி சாக்கில் அவன் காரியத்தில் கண்ணாயிருக்கானே.

  "இது போல சுகாதாரமில்லாத எலிக்கூட்டைக் கொண்டுபோய் வைத்தீர்களானால், எலி அந்தப் பக்கமே வராது ஸார்." - அட இது வேறயா? நல்லவேளை, எலிப்பொறில எலி சென்ட் அடிக்கணும்னு சொல்லலையே.

  “சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?” - அட எலிப்பொறி வாங்கறதிலயும் இத்தனை விஷயம் இருக்கா?

  கடைசில, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளித்தின கதையா முடிச்சிருக்கீங்களே..

  ரசித்துப்படித்தேன். எப்பயும்போல் நல்லா நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் November 30, 2016 at 8:24 PM

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //கதையை நன்றாக நகைச்சுவை மிளிர எழுதியிருக்கிறீர்கள். //

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி !

   **”எலி பாஷாணம் என்று கடைகளில் விற்கும். அதை வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து, ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இறந்து போனாலும் போகலாம்"** - இதையே elaborate செய்து இன்னொரு எபிசோட் எழுதியிருக்கலாம்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சந்தோஷம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

   **"அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்"** - இயல்பான இந்த நகைச்சுவை ரொம்பப் பொருந்திப்போகிறது. யாரும் மனதில் நினைப்பதுதானே. எழுத்தைப் படிக்கும்போதே மசால்வடை வாசனை வந்துவிட்டது.//

   :) ஹைய்யோ ! இப்போது எனக்கும் அப்படியேதான். இப்போ நான் மஸால் வடை வாங்கி வரப் புறப்பட்டு விட்டேன். :)

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

   **"வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், ஒருவித உற்சாகம் அடைந்ததில், பட் ... பட் ... என்று அதிரஸம் போல தனித் தனியாகப் புட்டுக் கொண்டது."** - உணவின்மீதுள்ள ஆர்வம்தான் அந்த அந்தப் பகுதி வரும்போது நகைச்சுவையா எழுதத் துணைபுரியுதுன்னு நினைக்கிறேன்.//

   அதே அதே ..... கல்யாணங்களில் சீர் அதிரஸம் என்று நெய்யில் செய்ததை மிகப்பெரிய சைஸில் (அடை போன்ற சைஸில்) தருவார்கள். அது அப்படியே மிருதுவாக ஜோராக உதிர் உதிராக நெய் மணமாக இருக்கும். கையில் எடுக்கும் போதே புட்டுக்கும். பல் இல்லாத வயதான பெரியவர்களுக்கு இது மிகவும் பிடித்தமானது. எனக்கும் மிகவும் பிடித்தமானது தான்.

   //இதை எழுதறதுக்கு அதிரசமாவு சரியா இல்லைனா எப்படி பட் பட்டுன்னு பிரிஞ்சுரும்னு தெரியணும்.//

   அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு என் சகோதரி போன்ற (கிட்டத்தட்ட சமவயது) பதிவர் ஒருநாள் ஒரு அதிரஸம் கொடுத்துவிட்டுப் போனாள் பாருங்கோ ..... இன்னும் அதன் ருசி என் நாக்கில் அப்படியே உள்ளது.

   Ref Links:

   1) http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html

   2) http://gopu1949.blogspot.in/2014/10/9.html

   அவளிடம்தான் இந்த அதிரஸமாவு பக்குவங்கள் பற்றி விஜாரிக்கணும். இப்போதுகூட சென்ற வாரம் அவள் சென்னையிலிருந்து திருச்சியைத்தாண்டி மதுரைக்கு ஹனிமூன் போய் இருக்கிறாள்.

   இங்கு வந்து என்னிடம் மாட்டினாள் அதிரஸத் தொல்லை இருக்குமே என நினைத்து பயந்து திருச்சியில் அவள் இறங்கவே இல்லை போலிருக்குது. :)

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)

   **"சூடா ஒரு காஃபி போடு அக்கா ... அப்படியே ஏதாவது பஜ்ஜியும் கெட்டிச் சட்னியும் பண்ணினாக்கூட"** - மச்சினன் தொச்சு (கடுகு அகத்தியன் சார் கதைகள்) வகையறா போலிருக்கு. சந்தடி சாக்கில் அவன் காரியத்தில் கண்ணாயிருக்கானே.//

   அவாஅவா கவலை அவாஅவாளுக்கு இருக்கத்தானே செய்யும். :)

   **"இது போல சுகாதாரமில்லாத எலிக்கூட்டைக் கொண்டுபோய் வைத்தீர்களானால், எலி அந்தப் பக்கமே வராது ஸார்."** - அட இது வேறயா? நல்லவேளை, எலிப்பொறில எலி சென்ட் அடிக்கணும்னு சொல்லலையே.//

   :) சென்ட் வாடை, மனிதர்களைப்போல எலிகளுக்குப் பிடிக்காதோ என்னவோ. :)

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5)

   //**“சுண்டெலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா?”** - அட எலிப்பொறி வாங்கறதிலயும் இத்தனை விஷயம் இருக்கா?//

   இருக்குது .... இருக்குது .... இதில் என் சொந்த அனுபவமே இருக்குது. (During the years: 1970 to 1980)

   //கடைசில, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளித்தின கதையா முடிச்சிருக்கீங்களே..//

   எப்படியோ ஒரு வழியா கதையை முடித்தாக வேண்டுமே !

   //ரசித்துப்படித்தேன். எப்பயும்போல் நல்லா நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ரஸித்து ருசித்துப் படித்து எழுதியுள்ள ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  6. In my Comment Reply No. 3 above

   'இங்கு வந்து என்னிடம் மாட்டினாள்' என்பதை
   ’இங்கு வந்து என்னிடம் மாட்டினால்’ என மாற்றிப் படிக்கவும்.

   நீக்கு
 20. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  https://gopu1949.blogspot.in/2014/10/vgk-36-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  https://gopu1949.blogspot.in/2014/10/vgk-36-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-36-03-03-third-prize-winner.html

  பதிலளிநீக்கு
 21. சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  பதிலளிநீக்கு

 22. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 26.06.2021

  எலி என்றால் எல்லோருக்கும் கிலி, தொந்தரவு செய்யும் எலி நம் கண்ணுக்கு புலி, தப்பிக்க விட்டால் எல்லோரும் செய்வர் கேலி, எலியை உயிருடன் பிடித்துவிட்டாலோ ஜாலி.
  துரை. மணிவண்ணன்.

  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS.
  - VGK

  பதிலளிநீக்கு