என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

சகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான் ! [By நடுவர்]

சகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான்

-- நடுவர்


  


'சகுனம்' கதைக்கு வந்த விமரிசனங்கள் கொஞ்சம் குறைச்சல் என்றாலும் 36 தேறியிருந்தது.   குறைந்தபட்ச விமரிசன அளவான A4 சைஸ் ஒரு பக்கத்திற்கு குறைவாயிருந்த 12 விமரிசனங்களை நீக்கி விட்டால் 24 தேர்வுக்கு எடுத்துக் கொள்வதாக இருந்தன.  24-ல் 5 பரிசுக்குத் தேர்வனாதும்,  பின்னர் தேர்வு பெற்றவர்கள் யார் என்று தெரிந்ததையும் தாண்டி---

யார் யாருக்கு எந்தந்த பரிசு என்பது முக்கியமில்லை.  கோபு சாரின் 'சகுனம்' கதையைப் படித்ததினால் கதையின் போக்கில் என்னில் விளைந்த எண்ண சஞ்சாரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பகிர்தல் கூட நீங்கள் விமரிசனம் எழுதுகையில் ஏதாவது ஒரு விதத்தில் உங்களுக்கு உதவலாம் என்பதற்காகத்தான்.

தங்களின் எத்தனையோ வேலைகளுக்கிடையே இந்த விமரிசனப் போட்டிக்கு நேரம் ஒதுக்கி தவறாமல் தங்கள் விமரிசனங்களை அனுப்பி வைக்கும் அன்பர்களுக்கு முதலில் என் அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அன்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்களை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.


 

கதையைப் படித்ததினால் தனக்கேற்பட்ட எண்ணங்களை consolidate பண்ணி கீதா மதிவாணன் அவர்கள் எழுதியிருந்தார்.  அவருக்கு பிடித்த மாதிரி ஆரம்ப வரியைத் தேர்ந்து எழுதி விடுகிறார்.  இந்த ஆரம்ப வரிக்குத் தான் யோசிப்பார் போல; அப்புறம் நூல்கண்டிலிருந்து நூலைப் பிரித்து இழுக்கிற மாதிரி நேர்த்தியாய் ஒவ்வொரு விஷயமாய் நினைவு படுத்திச் சொல்கிற மாதிரி விமரிசனம் எழுதற இந்த முறை அவருக்கு அழகாய் வந்து விடுகிறது.  எடுத்த எடுப்பில் நேரடியாய் கதைக்குள் நுழைவதில்லை. கதைக்கேற்ற எல்லாருக்கும் தெரிந்த பொதுவான விஷயம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதை போல இந்தக் கதையில்  என்று தொடர்ந்து நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறார். கதாசிரியர் நினைத்துப் பார்த்து எழுதாததற்கும் ஒரு அர்த்தம் கொடுத்து ஆழ்ந்து நோக்குகிறார். பாட்டியின் இறப்பிற்குப்  பிறகு சிவராமனின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்த்து தொடர்ந்து வேறு பார்வையில் அலசியிருக்கலாம்.  (சங்கீத வித்வான்கள் வேறு வேறு ஆலாபனைகளில் முயற்சிக்கிற மாதிரி) ஏனோ பாட்டியின் இரண்டாவது மகன் இவரது தொடர் சிந்தனையை டிஸ்டர்ப் பண்ணியதால் ஆழ்ந்த அலசலின் தீட்சண்யம் ஒரு மாற்று  குறைந்து விட்டது போலும்.  தேர்ந்த பிசிறில்லாத எண்ணக் கோர்வையுள்ள எழுத்து இவரது..  இந்தப் போட்டியின் தொடர்ந்த தேர்வுகள் அவருக்கென்று ஒரு பாணியை வார்த்தெடுத்திருப்பது நன்றாகத் தெரிகிறது. அந்த பாணியின் வெவ்வேறு பரிமாணங்களுக்கும் சென்று இன்னும் விரிவாக எழுதி தன் எழுத்தை தானே ரசிக்கிற அற்புத நிலையை இவர் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

அப்பாதுரை சார் தன் எழுத்துக்களில் தன்னைக் காண விழைபவர்.  இது தான் அவரின் அபாரமான சிந்தனைத் திரட்சி..  தானும் தன் ரசனையும் முன்னிலைப்  படுவதால் எழுத எடுத்துக் கொள்ளும் விஷயம் இரண்டாம் பட்சமாகி  தன் விருப்பமே முன்னிலைப்படுவது இயல்பாகிப் போகிறது. இந்தக் கதையில் கூட முற்போக்கும் பிற்போக்கும் தன்னை வைத்தே முன்னிலைப் படுத்தப்படுகிறது.  அறிவியலுக்கு ஒத்து வருபவை எல்லாம் முற்போக்கு என சகட்டு மேனிக்கு அவசர முடிவுக்கு வந்தால் தான் எடுத்துக் கொள்ளும் விஷயம் அறிவியலோடு எந்த அளவுக்கு உறவு கொண்டுள்ளது என்பதையும் ஆராய்ந்து இந்தக் கதைக்கு சம்பந்தமான சகுனம், வாசல் தெளித்தல் போன்றவை-- குறித்து சரியான கருதுகோள் கொள்ள வேண்டும்.   இத்தகைய படிப்பிற்கும் வளர்ச்சிக்கும் இப்படியான கருதுகோள்களே Base ஆக இருக்கலாம். வேறு தளத்திற்கான கருத்துக்கள் இவை என்றாலும் அருமை அப்பாதுரை சாரின் பிர்மாண்ட வாசிப்பு ஆர்வத்திற்கு இவையெல்லாம் தீனியாகலாம் என்பதற்காக பரிந்துரைக்க ஆசைப்படுகிறேன்.  (சிபாரிசு: விக்ரவாண்டி ரவிச்சந்திரனின் நூல்கள்). அப்பாதுரை சாரின் அலாதியான எழுத்து லாகவம் எழுத்தை ரசித்துப் படிக்கும் ரசனையாளர்களுக்கு தெரிந்த ஒன்று.  தனக்கு சரியெனப்படும் கருத்துக்களை முன்வைப்பதில் பிரமிப்பு காட்டுவதிலும், ஒத்துவராதவைகளையும் ஓர்ந்து பார்த்து படிக்க முன்வருவதும், சிலவற்றை ஏற்றுக்கொள்வதில் கூட திறந்த மனத்துடன் அணுகுவதில் கொண்டுள்ள பாசாங்கற்ற தன்மையும்--  இந்த அவரது விமரிசனம் நெடுகப்  பார்க்கலாம். இன்னும் முழு form-ல் அவர் வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.  

கீதா சாம்பசிவம் அவர்கள் தன் பிலாக்கிலேயே 'நான் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்க விரும்புகிறேன்'  என்று டிக்ளேர் செய்தவர். இருந்தாலும் இவரில் மாறுதல்களைக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்வேன்.  அப்படி ஓரிரண்டை பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் சொன்னது ஒன்று பிடித்து அதை ஏற்றுக்கொண்டால் மிகுந்த நாகரிகத்துடன் அதை ஒப்புக்கொள்ளும் மாண்பு உண்டு. பதிவுலகில் பிரமிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு தன் தடத்தைப் பதித்தவர்.  எல்லா சப்ஜெக்ட்டுகளையும் தொட்டு எழுதும் ஆற்றல் படைத்தவர்.  ஆழ்ந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்.   இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவாவது போடவில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது என்கிற அளவில் நீண்ட காலமாக பதிவுகள் எழுதுவதில் பழக்கப்பட்டவர்கள் ஆதலால் எதை எழுதினாலும் பதிவுகள் எழுதும் பாணியே இவருக்கு வழக்கப்பட்ட ஒன்றாக 'இவர் பாணி' என்றாகியிருக்கிறது.  விமர்சனத்திற்கான கதையை தானும் மறுபடியும் சொல்லி ஊடே ஊடே தன் கருத்தை பதிவது தான் இவர் வழக்கம்.  (நம் எல்லோருக்கும் தெரிந்த நரி, காக்கை, வடை கதையை இவர் பாணியில் இவருக்கு சொல்லி விமரிசிக்க வேண்டுமென்பது எனது நெடு நாளைய ஆசை!)  'சகுனம்'  கதை விமரிசனத்திலும் கூட இவருக்கென்றே பழக்கப்பட்டுப் போன முத்திரை பதிப்பைக் காணலாம்.  எது எப்படியிருந்தாலும் சரளமாக, ரொம்ப சகஜமாக கருத்து, மாற்றுக் கருத்து என்று ஒரு கதையைப் படித்தவுடன் தனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் மடமடவென்று வடித்துக் கொடுத்து விடுவதாகத் தோன்றும்.  தன் எண்ணங்களை 'வைண்ட்-அப்' பண்ணி சொல்வது போல சொல்லும் நேர்த்தி இவர் எழுத்துக்கு உண்டு என்பது இவர் தள வாசகர்களுக்கு தெரிந்த ஒன்று.


தினம் ஒரு பதிவை கலர்க்கலரான படங்களுடன் தேர்ந்த விவர சேகரிப்புடன் பதிவிடுபவர் இராஜராஜேஸ்வரி  அவர்கள். கோயில், திருவிழாக்கள், பண்டிகை, ஆன்மீகக் குறிப்புகள் என்று எல்லாவற்றிற்குமான ஒரு நடமாடும் விவரக் களஞ்சியம் இவர்.  நான் இவரது நெடுங்கால விசிறி என்பதில் எனக்கு பெருமை உண்டு. எப்படியோ அத்தனை தனது பணிச்சுமைகளுக்கும் இடையேயும் நேரம் ஒதுக்கி ஆரம்பத்திலிருந்து இந்த விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு, போட்டிக்கான கதை  வெளியானதுமே கதை பற்றி தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிற விதமாய் பின்னூட்டமிட்டு பரிசு அறிவிப்பின் போது பரிசு பெற்றவர்களை  வாழ்த்தி எல்லா விதங்களிலும் சிறப்பிக்கும் இவர் முயற்சி வியப்பளிக்கும் ஒன்று.  நிறைய பரிசுகளையும் இவர் பெற்றிருந்தாலும் ஒரே மாதிரியாக இவர் விமரிசனங்கள் தோற்றமளிக்கும்.  கதையைப் படிக்கும் பொழுதே விமரிசனம் எழுத வேண்டிய வரிகளைக் குறித்துக் கொள்வார் போலிருக்கு.  பின் அப்படிக் குறித்துக் கொண்ட ஒவ்வொரு வரிக்கும் தன் கருத்தை+தனக்குத் தெரிந்த அந்த கருத்து பற்றிய மேல் விவரங்களை ரொம்ப  சுருக்கமாக இரு வரிகளில் அடக்கி எழுதுவதாக இவர் விமரிசனங்கள் அமைகின்றன.  அதனால் விமரிசனத்தின் ஒட்டு மொத்த பார்வையைத் தெரிந்து கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் வரி வரிகளாய் வாசிக்கும் உணர்வு  ஏற்படுகிறது. கடுமையான உழைப்பில் மலர்ந்த மிக நீண்ட விமரிசனங்கள் இவரது.  இரண்டு அல்லது மூன்று வரிச் செய்திகளாக அதுவும் எதையும் விட்டு விடாமல் எழுதுவதை மாற்றிக் கொண்டு பாரா பாராவாக கதையின் உள்வாங்கலை ஆத்மார்த்தமாக விவரமாக விவரித்து இவர் எழுதினால் அது அற்புத அனுபவமாக அமையும்.  நெடுநாட்களாக இந்த என் உணர்வைச் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன்.  இப்பொழுது நேரம் வந்ததிருக்கிறது. சொல்லிவிட்டேன். என் ஆக்கபூர்வமான பகிர்தல் இது என்று  எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

தான் உள்நோக்கிப் பார்த்த கதையின்  சாரத்தை சிந்தாமல் சிதறாமல் ஒரு பரந்துபட்ட நோக்கில் வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவர் சேஷாத்திரி அவர்கள்.   இந்த விமர்சனத்தில் கூட பாருங்கள், சகுனம் என்பதற்கு தான் அறிய வந்த விளக்கங்களைக் கொடுத்து விட்டு தாழ்மையான என் கருத்து என்று ஆணி அடித்தாற் போல் தன் கருத்தையும் பிசிறில்லாமல் பதிந்திருக்கிறார்.  தன் கருத்தாகவே விமரிசனம் பூராவும் அமைந்து விடாமல் தான் முக்கியமாகக் கருதும் கதை நிகழ்வை தன் செட்டான வரிகளில் சொல்லி அந்த வரிகள் விளைவிக்கும் தன் எண்ணத்தை அடுத்தடுத்து அழகாகச் சொல்கிறார். கதை நிகழ்வை தான் பார்க்கும் பார்வைக்கு தோதாக வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையையும் பதிகிறார். தனக்கு மிகவும் பிடித்த கதை வரி ஒன்றை நடுவில் நுழைத்து இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமான தத்துவார்த்த இழையாக அதைப் பொருத்திப்  பார்க்கிறார். மிகமிக முக்கியமான ஸ்ரீமதி பாட்டியின் ஆசியையும் மறக்காமல் சொல்லி சிவராமனை வாழ்த்தி விமரிசனத்தை ஜொலிக்கச் செய்கிறார்.வெவ்வேறு தொனியிலான இத்தனை விமரிசனங்களையும் படித்த கிறக்கத்தில் பால்கனி பக்கம் கிடந்த நாற்காலியில் நான் விழுந்த பொழுது போது இரவு பன்னிரண்டரை ஆகிவிட்டது என்று  டிஜிட்டல் கடியார ரேடிய பூச்சு உபயத்தில் தெரியவந்தது.   என்ன முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. நினைவு படித்த விமர்சனங்களை சுற்றியே வட்டம் போட்டது.  இந்தக் கதைக்குச் சொந்தமான ஸ்ரீமதி பாட்டி போலவே எனக்குத் தெரிந்த வசுமதி பாட்டி என் நினைவில் பளிச்சென்று பிரகாசித்து மறைந்தார்கள்.. எல்லா உயிர்களிடத்தும் நேசம் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாத அந்தக் காலத்தின்  பிரதிநிதிகள்.

ஸ்ரீமதி பாட்டி போலவே என்று நினைவு நீண்டதும் மங்கிய விடி விளக்கின் குறைந்து பட்ட ஒளிப் பின்னணியில் லேசாகத் தவழ்ந்து வந்த காற்று கொடுத்த சுகத்தில் 35 வயசு மதிக்கத்தக்க ஆணின் நிழல் நினைவில் தட்டிய மாதிரி இருந்தது.... ஓ, சிவராமனோ?..

சிவராமனிடம் பேச எனக்கு நிறைய இருந்தது. "யாரு, சிவராமனா?" என்றேன்.

அவரிடம் ஒரு புன்முறுவல்.  

"உங்க கதை.. ஸாரி.. சகுனம் பத்தி உங்க கிட்டே கேக்கணும். சகுனத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா, சார்?"  அந்தக் கதையை படித்ததிலிருந்து மனசை அரித்துக் கொண்டே இருந்த கேள்வி இது. கிடைச்ச சான்ஸை விடக் கூடாதென்று கேட்டே விட்டேன்.

"இல்லே.  ஆனா சகுனம் பாக்கறவங்களுக்கு நான் ஒரு சகுனத்தடையா இருந்திடக்கூடாதுன்னு இருந்தது..  அதனால் தான் வெளியே கிளம்பினாலே ஸ்வாமி ஸ்லோகம்ல்லாம் முணுமுணுத்தபடியே வெளிக்கிளம்புவேன்.."

"எதுக்கு ஸ்வாமி ஸ்லோகம்லாம்?"

"ஸ்லோகம் சொன்னா சகுனத்தடையெல்லாம் இன் எபெக்டிவ் ஆயிடும்.  'சக்தி விகட'னோ, 'பக்தி'யோ எதிலோ படிச்சேன்.  அதிலேந்து இந்தப் பழக்கம்".

"ஓ.." என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். "சகுனத்தில் நம்பிக்கை கிடையாது.  ஆனா சகுனத்தடை பிறருக்கு நேரிட்டு விடாதவாறு தடுப்பதில் நம்பிக்கை.  ஆச்சரியம் தான்" என்றேன்.

"நமக்கு சுயமா சில எண்ணங்கள் இருக்கலாம்.  இருந்தாலும் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல்ன்னு ஒண்ணு இருக்கோல்யோ?"  என்று சிவராமன்  கேட்டது, ஆக்ரோஷ அருவி நீர் வீச்சு படீரென்று முகத்தில் அறைந்தது போலிருந்தது எனக்கு.  ஆழமான ஆசாமி தான் என்று நினைத்துக் கொண்டேன்.  

"ஆனா.." என்ற சிவராமன் ஏதோ சொல்லத் தயங்குவது போலிருந்தது. மிடறு விழுங்குகிற மாதிரித் தடுமாறி, "ஆனா, ஸ்ரீமதி பாட்டி போனதும்.."

"போனதும்?.." லேசான பரபரப்பு என்னைத் தொற்றிக் கொண்டது.  அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "போனதும் சகுனத்தில் நம்பிக்கை வந்து விட்டதாக்கும்?" என்று ரொம்ப இயல்பாக நிறுத்தி நிதானித்து வார்த்தைகளை வெளிப்படுத்தினேன்.

"எஸ்.. ஸ்ரீமதி பாட்டி போனது எனக்கு ஒரு அடி.  ஆடிப்போயிட்டேன். பாட்டி காவேரிக்கரைலே தடுக்கி விழுந்துட்டானாலும் அந்த தடுக்கி விழுந்ததுக்கு அதிகாலை நேரத்து நான் அவருக்கு நேர்ப்பட்டது தான் காரணமாகி  அவா போய்ச்சேரத்துக்கு ஒரு சாக்கு போல ஆயிடுத்தோன்னு ஒரு தயக்கம் என்னுள்.. பாட்டிக்கு என்னாலான அத்தனை உபகாரமும் செஞ்சு எப்படினாலும் பாட்டியை படுக்கைலேந்து எழுப்பி உக்கார வைச்சிடணும்ன்ன்னு ஒரு வைராக்கியம்மே மனசைப் பற்றி ஆட்டித்து.."

"ஆங்!.." எனக்கே சிலிர்ப்பாய் இருந்தது.  சிவராமனின் வாயைக் கிளறி  தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், "சொல்லுங்கோ.." என்றேன்.

"ஆனா பாட்டி போனதும் அந்த வைராக்கியமும் பாட்டியோடையே போயிடுத்து.. அதோடப் போயிருந்தாலும் பரவாயில்லை.."

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. என் காதுகள் சிவராமனின் ஒரு வார்த்தையைக் கூட மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு தீட்சண்யமானது.

"என்னோட அபசகுனம் பாட்டி போனதுக்குக் காரணம்ன்னா, பாட்டியைப் பாத்த அபசகுனம் என்னை.."

"சகுனம்-அபசகுனம் இதெல்லாம் இல்லேனுட்டு, இப்போ என்ன இது, அசட்டு பிசட்டுன்னு.."

"அசட்டுப் பிசட்டுன்னு நெனைச்சதெல்லாம் அர்த்தம் உள்ளதா ஆயிடுத்து.. நான் சொல்ல வந்ததுன்னு.." எதையோ சிவராமன் யோசிக்கிற மாதிரி இருந்தது.   "இதெல்லாம் அரித்மேத்திக் தானே?  ஈக்குவல் ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ்..  ஒண்ணு இல்லேங்கறது நம்ம முடிவுன்னா அந்த ஒண்ணின் இல்லாததுக்கு எதிரான இருப்பும் இருக்க வேண்டுமல்லவா?" என்று திடும்மென்று தீர்ப்பைச் சொல்கிற மாதிரி சொன்னார். "இருட்டு இல்லேனா, வெளிச்சம் இருக்கு;  வெளிச்சம் இல்லேனா இருட்டு இருக்குங்கற மாதிரி. இன்னொண்ணு.  சகுனம்ன்னு ஒரு வார்த்தை புழக்கத்தில் இருப்பதற்கே அப்படி ஒண்ணு இருக்கறது தானே காரணமா இருக்க முடியும்?"


லாஜிக்கான அவர் வாதம் என்னைக் கட்டிப் போட்டது.. "கரெக்ட்.." என்னையறிமால் பதில் மட்டும் வார்த்தையாய் வெளி வந்தது.

"பாட்டி- நான் -  இரண்டு பேருக்குமான ஒருத்தருக்கு ஒருத்தர் ஈக்குவலான சகுனத்தடை.  இப்படி நினைச்சுப் பாருங்கோ.  நான் சொல்ல வந்தது புரியும்.."

நான் யாரோட பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதில் திடீரென்று சந்தேகம் வந்து லேசா வியர்த்தது.  மேலண்ணத்தோடு ஒட்டிக்  கொண்ட மாதிரி நா வரண்டது..  மெதுவாக சமாளித்துக் கொண்டு "அப்படியா சொல்றேள்?" என்று மிடறு விழுங்கினேன்.

"பின்னே எப்படி?  நீங்களே சொல்லுங்கோ.."

என்ன சொல்வது என்று தெரியவில்லை... "அப்புறம்?" என்று பொத்தாம் போக்கில் இழுத்து வைத்தேன்.

"எனக்கு ஒருவழிலே ஸ்ரீமதி பாட்டி சொந்தம் தான்.  ரொம்ப  நல்லவா.. இன்னொருத்தருக்கு ஒரு கஷ்டம்ன்னா... அதுவும் அது தன்னாலேனா துடிச்சுப் போயிடுவா.. அதான் என்னோட ஒரே நம்பிக்கை.."

ஏதோ நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விடுகிற மாதிரி இருந்தது.. "சொல்லுங்கோ.." என்று நான் முனகியது எனக்கே கேட்கவில்லை.

"பாட்டி தான் சரண்னு தீர்மானிச்சிட்டேன்.. பத்தரை மணி வாக்கிலே விஷயம் தெரிஞ்சதும் ஸ்வாமி ரூம்லே இருந்த கங்கை சொம்பை எடுத்திண்டு ஓடினேன்.. கூட மாட சக்கரமா சுழண்டது பெரிசில்லை; நெஞ்சிலே கல்லை கட்டின மாதிரி சுமக்க முடியாம பாரம்.. அந்த பாரத்தோடையே தான் எல்லாம்... இருந்தாலும் பாட்டி காப்பாத்திடுவார்ன்னு  உறுதியா நம்பினேன்.  என்னாலே முடிஞ்ச பிராயச்சித்தம் அத்தனையும் செஞ்சிடணும்னு  ஒரு ஆவேசம்.."

நான் பதிலே பேசலே. பேசறதுக்கும் எது ஒண்ணும் இருக்கறதா எனக்குத் தெரிலே.  சிவராமனோட நிலை இப்படித்தான் இருந்திருக்கும்ன்னு என்னால் எப்படி நினைச்சுப் பார்க்க முடிஞ்சதுங்கற ஆச்சரியம் மட்டுமே என்னை ஆக்கிரமிச்சிண்டு இருந்தது.

"பாட்டியோட அகம்  ரொம்ப சின்னது.. இலை போட வசதிப் படாது.. எங்காம் கொஞ்சம் பெரிசு.. பாட்டியும் எங்க சொந்தம் தானே? கல்யாணம் மாதிரி வேறே.. அதனாலே தீர்மானிச்சிட்டேன்.. காவேரிலே குளிச்சிட்டு எல்லாரும் வந்ததும் எங்காத்திலேயே எலையைப் போட்டுடலாம்ன்னு.."

"சொல்லுங்கோ.."

"ஒருவழியா எல்லாரும் சாப்பிட்டு முடிஞ்சதும் லேசா மனசிலே இருந்த பாரம் இறங்கின மாதிரி இருந்தது..  எங்காத்து கூடத்துக்கு வெளிப்பக்க ஜன்னல் பக்கம் லேசா தலை சாய்ச்சிருந்தேன்.   நான் என்ன நெனைச்சிருந்தேனோ, அதையே தான் அந்த தடிப்பிரம்மச்சாரி சொன்னான்.. ஏற்கனவே துக்கிரி..  நேரம் வேறே இப்போ சரியில்லை.  நான் நெனைச்சதே அவன் வாய்லேருந்து வந்ததும் பதறிப் போய்ட்டேன்..  'ஹே, கிருஷ்ணா...'ன்னு கேவினேன்.. அத்தனையையும் இழந்து போயிட்ட மாதிரி மனசு வெலவெலத்துப் போய்ட்டது..."

"ம்.. "

"கிருஷ்ணன் தான் பாட்டி ரூபத்லே வந்திருப்பார் போலிருக்கு..  ஸ்ரீமதி பாட்டி.. லேசா முட்டாக்கு  சரிஞ்ச நார்மடி, வீபூதி கீற்று, கனிவானபார்வை... 'பாட்டி! அபயம்'ன்னு  நெடுஞ்சாண்கிடையா மனசு தடால்னு பாட்டி கால்லே விழுந்துடுத்து...."

"ம்.."

"பாட்டிகிட்டே எதுவும் சொல்லவோ கேக்கவோ எனக்குத் தோணலே. நான்  எதுவும் கேக்காமலே பாட்டிக்கு புரிஞ்சிடுத்து போலிருக்கு. அபய ஹஸ்தம் மாதிரி பாட்டி கை கண்ணுக்குத் தட்டுப்பட்டது..  ’சிவராமா! ஒனக்கு ஒரு குறையும் இல்லேடா..  நீ மகராஜனாஇருப்பேடா’ன்னு பாட்டி ஆசிர்வாதம் பண்ணினது தீர்க்கமா காதுலே விழுந்தது.."

"......................................."

"படக்குனு எழுந்திருந்தேன்.  மகராஜனா இருன்னு பாட்டி ஆசிர்வாதம் கிடைச்சிடுத்து.. பாட்டியே ஆசிர்வதிச்சு உயிர் கொடுத்துட்டா.. இனிமே எனக்கு ஒண்ணுமில்லேன்னு மனசு பரபரத்தது..  புதுசா உயிர் கீற்று ஒடம்புலே புகுந்திண்ட மாதிரி இருந்தது.. குபுகுபுன்னு உள்ளங்காலேருந்து உச்சந்தலை வரை,  உச்சந்தலைலேந்து உள்ளங்கால் வரைன்னு புது ரத்தம் பாஞ்ச மாதிரி ஜிவுஜிவுன்னு இருந்தது.."

”யாராரோ சளசளத்துக்கொண்டு என்னைக்  கடந்து போகும் உணர்வு. வயசானவா போலிருக்கு. ’பாவம், சிவராமன்!  அலஞ்ச அலுப்புலே அடிச்சுப் போட்ட மாதிரி எப்படித் தூங்கறான், பார்!  ஸ்ரீமதி பாட்டின்னா அவனுக்கு உயிர்.. பாட்டி பெத்த பிள்ளைகளை விட இவனுக்குத் தான் பாட்டின்னா  அத்தனை பாசம்.. இவனுக்கு எல்லாம் நன்னாத்தான் நடக்கும்; பாரு!’ன்னு யாரோ சொல்லிண்டு போறது காதுலே கேட்டது. "ஹே, கிருஷ்ணா! என்னே உன் கருணை’ன்னு மனசார மனசுக்குள்ளேயே வேண்டிண்டேன்" என்று சொல்லும் பொழுது சிவராமன் குரல் தழுதழுத்தது.

"அப்போ..." என்று இழுத்தேன்..  "சகுனம்.." என்று நான் ஏதோ கேட்பதற்குள் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து சிவராமன் எழுந்து விட்ட மாதிரி உணர்ந்தேன்..

'கிருஷ்ணா, முகுந்தா, முராரே....ஜெயகிருஷ்ணா, முகுந்தா, முராரே..."ன்னு யாராத்து டிவிலேந்தோ கேட்ட பாகவதரின் குரலுக்கு இழைஞ்சு சிவராமனும் லேசா 'ஹம்'  பண்ணின மாதிரி இருந்தது. சில்லென்று வீசிப் போன காற்றில் காலண்டர் ஷீட் படபடத்தது.. காலண்டரில் வண்ண ஓவியமாய் மயிலிறகு சூடின சுருள் முடியுடன் கிருஷ்ணனின் குமிழ்ச்சிரிப்பு மனசைக் கொள்ளை கொண்டது. 

"பன்னிரண்டா, பன்னிரண்டரையா?.. நாளைக்கு ஆபீஸுக்கு லீவுன்னா இப்படியா கொட்ட கொட்ட முழிச்சிண்டு எழுதிண்டிருப்பா... இன்னும் தூக்கம் வரலியா?" என்று உள்பக்கமிருந்து மனைவியின் குரல்..

"எழுதலே;  எதையோ நினைச்சிண்டு உக்காந்திருந்தேன்.." என்று எழுந்திருந்தேன்.  சிவராமனைப் பற்றி சகதர்மிணியிடம் அந்த நேரத்தில் சொல்ல வேண்டும் போலிருந்தது.  ’பேசாமல் தூங்குங்கள்.. காலையில் கேட்டுக் கொண்டால் போயிற்று..’ என்று தான் சொல்லுவாள் என்று எதுவும் பேசாமல் படுக்கைக்குப் போனேன்.

சிலதுக்கு கொடுப்பினை வேண்டும்.  ஆழ்ந்த தூக்கமும் அதில் ஒன்றுதான்.


 

விமர்சகர்களின்  விமரிசனங்கள் மீதான நடுவரின்  குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  நடுவரின் குறிப்புகளின்  மீது  பயனுள்ள விவாதங்கள் ஏதேனும் நடத்த வேண்டும் என்றாலும் அதை வரவேற்பதாக நடுவர் எனக்கு ஒரு குறிப்பும் கொடுத்துள்ளார். அதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். விமர்சகர்கள், வாசகர்கள் பேதம் இல்லாமல் எவரும்  கேள்விகளாக 'விமரிசனங்கள்' என்கிற தலைப்பில் தமிழில் விமரிசனங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தோ, சந்தேகங்களைக் கேட்டோ விவாத மேடைகளை விழாக்கோலம் பூணச் செய்யலாம்..  என்  மெயில்  ஐடிக்கு (valambal@gmail.com) தங்கள் கருத்துக்களை கேள்விகளாக அனுப்பி வைக்க வேண்டுகிறேன். இத்தகைய இலக்கிய சர்ச்சைகளினால் நமது இந்த விமரிசனப் போட்டி மென்மேலும் சிறப்படைந்தால் எனக்கு மென்மேலும்  மகிழ்ச்சியே..

oooOooo
                                                   

எனது  'சகுனம்' சிறுகதையின் கதாபாத்திரமான  சிவராமனுடன் தன் நினைவலைகளில் சுவாரஸ்யமான ஒரு உரையாடலையும் நடத்திக் காட்டியிருக்கும் நடுவர் அவர்களுக்கு என் நன்றி.  கதைப் போக்கிலேயே நம் யோசனைகளையும் கலந்து விட்டால் நம் ரசனை எவ்வளவு மேம்படுகிறது என்பதையும்  தெரிந்து  கொண்டேன்.

ப்ரியமுள்ள கோபு [VGK]
’சகுனம்’ சிறுகதைக்கான இணைப்பு: 
இந்த வார சிறுகதை 
விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:


 VGK-34  

 ’ பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் ’  


   
 
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 


11.09.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்
21 கருத்துகள்:

 1. //நம் எல்லோருக்கும் தெரிந்த நரி, காக்கை, வடை கதையை இவர் பாணியில் இவருக்கு சொல்லி விமரிசிக்க வேண்டுமென்பது எனது நெடு நாளைய ஆசை!) 'சகுனம்' கதை விமரிசனத்திலும் கூட இவருக்கென்றே பழக்கப்பட்டுப் போன முத்திரை பதிப்பைக் காணலாம்.//

  காக்கா, நரிக்கதையா, வேண்டாம் சார், அழுதுடுவேன், வேறே ஏதாவது கதையைச் சொல்லி விமரிசியுங்க! :)))))) ஏற்கெனவே ஆறு வருஷம் முன்னாடி முத்தமிழ்க் குழுமத்திலே இருந்தப்போ என் பாணியில் இந்தக் காக்கா, நரிக்கதையை விமரிசனம் பண்ணியாச்சு! :)))))

  பதிலளிநீக்கு
 2. //இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவாவது போடவில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது.//

  ஹிஹிஹி, அப்படியெல்லாம் இல்லை. மனசிலே பதிவு போடவேண்டாம்னு தோணினாப் போடாமல் இருப்பேன். :))))

  பதிலளிநீக்கு
 3. பாரா பாராவாக கதையின் உள்வாங்கலை ஆத்மார்த்தமாக விவரமாக விவரித்து இவர் எழுதினால் அது அற்புத அனுபவமாக அமையும்//

  சிறப்பான வழிகாட்டலுக்கு நடுவருக்கு நிறைந்த நன்றிகள்..

  கதை படிக்கும்போதே வரிக்கு வரி விமர்சனம் உருவாகிவிடுவதால் வருவதான அமைப்பு காரணமாக இருக்கலாம்....

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீமதி பாட்டி , வசுமதிப்பாட்டி ,, சிவராமன் போன்ற கதாபாத்திரங்கள் நடமாட்டம் ரசிக்கவைக்கும் , வாழ்வியல் உண்மைகளை விவரிக்கும் பாங்கு கதை எந்த அளவு நுணுக்கமாக உள்வாங்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்துகிறது..!

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொருவரைப் பற்றியுமான விவரக்குறிப்புகள் அருமை.

  பதிலளிநீக்கு
 6. நடுவர் அவர்களின் பார்வையில் ஐவருடைய விமர்சனங்களைப் பற்றிய குறிப்புகள் ஒரு அழகான வழிகாட்டி என்பதில் ஐயமில்லை. நடுவர் அவர்கள் அவ்வப்போது குறீப்புகளாக வழங்கிய கருத்துகள் எனக்குப் பேருதவியாக இருந்தது. அதன் பின்னர் சில மாற்றங்களுடன் விமர்சனம் எழுத ஆரம்பித்தேன். தொடர் வெற்றி பெறுவதற்கு அதுவே ஏதுவாக அமைந்தது. நடுவர் அவர்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். மனமார்ந்த நன்றிகள். தன் ஒவ்வொரு படைப்பிலும் வாழ்வியல் சார்ந்த ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து, கோர்வையாக, நகைச்சுவை கலந்து கதையாகப் படைப்பதில் கதாசிரியரின் திறமை வெளிப்படுகிறது. வாய்ப்பளித்து எங்களின் திறமை மேம்பட உதவிவரும் சாதனையாளர் திரு வைகோ சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 7. சிவராமன் பாத்திரத்துடன் நடுவரின் உரையாடல் அருமை!
  சிந்திக்க வைத்தது!

  பதிலளிநீக்கு
 8. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவருக்கும் வாழ்த்துகள். நடுவரின் விமரிசனமு அனைவரின் பதில்களும் வெகு சுவாரஸ்யம். இது போல எண்ணங்களைப் பதிய தனி பயிற்சி எடுக்கணும். நடுவர் யார் என்று 13 ஆம்தேதி தெரிந்துவிடும். மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 9. விமர்சகர்களைப் பற்றியும், கதையைப் பற்றியும் நடுவர் அவர்களின் கருத்துக்கள் சுவையாக இருந்தன.

  பதிலளிநீக்கு
 10. விமர்சனம் செய்த அனைவரையும் பற்றிய நடுவர் அவர்களின் கருத்து வெகு அருமை.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. Congratulations to all the winners.

  Gopu sir, thank you so much for coming regularly to my blog and posting comments. Sir idli i served along with coconut chutney. so please do visit once more and enjoy a plate with chutney :-)

  பதிலளிநீக்கு
 12. ஒவ்வொருவிமர்சனதாரரின் குறை நிறைகளைத் தெளிவாக அலசி அழகாக விமர்சித்துள்ள நடுவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என் விமர்சனப் பாணியைப் பற்றி அவர் பகிர்ந்துள்ள கருத்துக்களை முழு மனத்துடன் ஏற்கிறேன். எழுத்தில் மேலும் ஏற்றம் ஏற்படுத்தும் சிறப்பான ஆலோசனைகளை மனத்தில் பதித்துக் கொண்டு மேலும் திறம்பட எழுத விழைகிறேன். இப்படியொரு அற்புதமான வாய்ப்பினை வழங்கிய கோபு சார் அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி.

  பதிலளிநீக்கு
 13. நடுவர் யாருனு தெரியாம தலை வெடிச்சுரும் போலிருக்கே? அவருனு நினைச்சேன். இல்லை. நடுவர் எழுதினதைப் படிச்சதும் இவருனு நினைச்சேன். இவரும் இல்லையா? முதல் நெடிலா? கடை குறிலா? அட அழகய்யா!

  யாராயிருந்தாலும் சில்லுனு ரெண்டு வரி எழுதினதுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நடுவரின் கருத்துகள் சிந்திக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
 15. நடுவர் அவர்களின் கருத்துகள் சிறப்பாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. அப்பப்பா, மலைப்பாக இருக்கிறது. நடுவரின் கருத்துகள் அருமை.

  பதிலளிநீக்கு
 17. சகுனம் கதையின் நாயகரான சிவராமனுடனேயே தன நினைவலைகளில் ஒரு உரையாடலை நடத்தி காட்டிய விதம் நல்ல சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
 18. பயனுள்ள அலசல். நடுவர் தான் ஒரு ஜித்தர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.

  பதிலளிநீக்கு