என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

கதைக்கு வெளியே வந்து ...... நடுவர் திரு. ஜீவி [VGK-34 பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !]VGK-34 பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !
http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34.htmlகதைக்கு வெளியே வந்து ......


மனிதனின் கண்டுபிடிப்புகளில் அவனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை கூடவே வருவது இரண்டு தான்.

ஒன்று, காலத்தை மணி, நாள், மாதம், வருடம் என்று பிரித்தது.  இந்த 'காலண்டர்' முறை நினைத்து நினைத்து வியக்க வேண்டியது நம் நினைப்பைத் தாண்டி  பல விஷயங்களுக்கு ஆதாரமாக இருப்பது. 

மற்றொன்று, பணம்.

ஆரம்பத்தில் பண்டமாற்று முறை  தான் இருந்திருக்கிறது.  ஒரு பொருளைக் கொடுத்து விட்டு அதற்கு மாற்றாக இன்னொன்றை வாங்கிக் கொள்வது. தோல், சோழி போன்றவைகளெல்லாம் பணமாக உருக்கொண்டிருக்கின்றன. சங்ககாலத்தில் நாணயங்களை வார்த்தெடுத்த நாணயச்சாலைகளைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.  பின்பு தான்  எளிதாக எங்கும் எடுத்துச்  செல்ல வாகான இன்றைய கரன்ஸி. இன்றைய கால கட்டத்தில் கரன்ஸி இடத்தில் பிளாஸ்டிக் அட்டைகள். நெட், மொபைல் மூலமாக பரிவர்த்தனை என்றெல்லாம் காலப் போக்கில் கொண்டுள்ள மாற்றங்கள் மேலும் பல மாற்றங்களைக் கொள்ளலாம்.

பெரும் வியாபார நிறுவனங்களுக்கு கரன்ஸி என்பது வெறும் எண்கள் தாம் என்பது யோசித்துப் பார்த்தால் தெரியும். அவர்களின் பேலன்ஸ் ஷீட்டில் எண்களை கட்டங்களில் போட்டு அவற்றின் தலைமாட்டில் 'in crores' என்று  சின்னஞ்சிறு எழுத்துக்களில் எழுதியிருப்பார்கள்.

இந்தக் கதையில் ஒரு கதைக்காக ஒரு பாங்க் மேனேஜரும், பங்குச் சந்தையில் சில லட்சங்களை அவர் இழந்து விட்டதாக ஒரு வரியும் வருகிறது.  அவ்வளவு தான். நம் விமரிசகர்களில் பலர் கதைக்கு வெளியே போய் வங்கிகளையும் பங்கு சந்தையையும் பிடிபிடி என்று பிடித்து விட்டார்கள்.. அவர்கள் கருத்துக்களுக்காகத் தான் இதையெல்லாம் எழுத நேரிட்டது.

பணம் என்பது செலாவணி என்பதை தன்னுள் தானே கொண்டது. அதற்காகத் தான் அதுவே பிறப்பெடுத்திருக்கிறது. 'உருண்டோடிடும் பணம் காசு என்று உருவமான பொருளே' என்று வெகுகாலத்திற்கு முன்பே சினிமா பாட்டு எழுதி விட்டார்கள்.  பத்து ரூபாய் கொடுத்து  ஒரு பொருளை வாங்கினோம் என்றால் அந்த பத்து ரூபா அந்த பொருளாக மாறி விட்டது என்று அர்த்தம். பணத்தை சேமிக்கலாம்;  ஆனால் செலவு செய்வதற்காகத் தான் அந்த சேமிப்பே. எந்த செலவு எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாததினால் எதிர்காலத்தில் வரும் செலவை எதிர்கொள்வதற்காக மக்கள் சேமிக்கத் தலைப்பட்டார்கள்.  அத்யாவசிய தேவைகளுக்குக்  கூட செலவுகள் அதிகரிக்கும் பொழுது சேமிப்பிற்கான எல்லையும் அதிகமாகிறது.  எதிர்பாராமல் வரும் மருத்துவ செலவுகளும் இந்த அத்யாவசிய தேவைகளில் அடக்கம். (ஹார்ட், கிட்னி போன்ற பழுதுபடும் அயிட்டங்களை நேர்படுத்துவதையும், நேரிட்டால் எங்கே போவோம் என்று அதற்காக சேமிப்பதையும் அத்யாவசிய தேவைகளுக்காக சேமிப்பதில் தானே அடக்க வேண்டும்?)

செலவுகளும் சேமிப்பும் நேர்விகித சமன்பாட்டில் இயங்குகின்றன. குறைந்த செலவுக்கு குறைந்த சேமிப்பு;   அதிக  செலவுக்கு அதிக சேமிப்பு.   எவ்வளவு தான் கட்டுப்பாடாக இருந்தாலும் யார் யாருக்கு எதெது அதிகரிக்கும்,  எதெது குறையும் என்று சொல்ல முடியாது. அதனாலே தான் போதும் சேமிப்பு என்பதற்கு எல்லைக் கோடு போடமுடியாமல் போகிறது.  ஆக விலைவாசி எகிற எகிற நமது சேமிப்பும் எகிற வேண்டியிருக்கிறது. சேமிப்பும் வருமானமும் கூட நேர்விகிதம் தான்.  


வருமானம் செலவு சேமிப்பு 
என்கிற சூத்திரத்தில் ஒன்றிற்கொன்று இரையாகிப் போகிற செயல் தான் வாழ்க்கை பூராவும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை சுருக்கமாக இன்றைய வாழ்க்கையே இது தான் என்று சொல்லலாம்.  அதனால் பகவத்கீதை காலத்திற்கு நம்மால் போகமுடியாமலிருப்பதற்கு பகவான் கிருஷ்ணன் தான் நம்மை மன்னிக்க வேண்டும். விலைவாசிகள் கட்டுக்குள் அடங்க அவரும் அருள்வாராக!

சேமிப்பை வைத்துக்  கொள்ள ஒரு பாதுகாப்பான இடம் தேவைப்பட்டதால் வங்கிகள் உருவெடுத்தன.  வங்கிகளும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வந்த பணத்தை அப்படியே வைத்துக் கொள்ள முடியாது.  பணம் உருவாகியதின் நோக்கமான புழக்கத்திற்கு அதை விட வேண்டும்.  இப்பொழுது ஒருவரின் தேவைக்கில்லாத பணத்தை இன்னொருவரின் தேவைக்குக் கொடுத்து, இவரின் தேவையின் பொழுது அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பாதுகாத்து வைத்துக்கொள்வதற்கு கொடுத்தவருக்கு ஓரளவு வட்டியும் (நன்றியாக ஒரு பரிசுத் தொகை என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இதே பணத்தை இன்னொருவரின் தேவைக்குக் கொடுக்கும் பொழுது அவரிடம் இவருக்குக்  கொடுத்த வட்டிக்கு கொஞ்சம் மேலாக (say 2%) ஒரு தொகையை வட்டியாக வாங்கிக் கொள்ளும் வழக்கமாயிற்று.  இந்த 2% தான் இந்த பரிவர்த்தனைக்காக வங்கிக்கு கிடைக்கும் தொகை. இந்த மாதிரி பலவித பரிவர்த்தனைகளுக்காக வங்கிக்குக் கிடைக்கும் தொகை வங்கியின் செயல்பாட்டிற்கும் நாட்டு நலனுக்கும் உபயோகமாகிறது.   இதில் நாட்டு நலன் எங்கிருந்து வந்தது?.. அதற்குப் பிறகு வருகிறேன்.

பணத்தின் உண்மையான மதிப்பு அவற்றின் செலாவணித் திறனுக்கு ஏற்ப மாறுபடும்.  ஒரு பீரோவை இன்று ரூ.5000/- ரூபாய்க்கு வாங்கினோம் என்றால் அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து அதே பீரோவின் விலை ரூ.6000/- என்றால் காலப்போக்கின் இடையில் ஒரே பொருளுக்கு நாம் கொடுக்கும் அதிகத் தொகையான இந்த ரூ.1000/- தான் அந்த நேரத்தில் அந்த ரு.5000/-த்தின் உண்மையான மதிப்பு இழப்பு.  இந்த மதிப்பு இழப்பை பணத்தின் வீழ்ச்சி என்பார்கள். பணத்தின் வீழ்ச்சியை சரிகட்ட வங்கிகள் அளிக்கும் வட்டி ஓரளவாவது உதவும்.

தனியார் கையில் சிக்குண்டு கிடந்த 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட தினம்  இந்த தேசத்திற்கு  திருநாள்.  இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த பொழுது எடுக்கப்பட்ட ஒப்பற்ற நடவடிக்கை. பொதுத்துறையின்  கீழ்வந்த இந்த மாதிரியான தேசிய வங்கிகள் இந்த தேசத்தின் முதுகெலும்பு. எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு இவையே நம்பிக்கை நட்சத்திரம்.  இன்றைய காலகட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு உதவ ஆரம்பித்து எளிய மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

எல்லா பொதுத்துறை  நிறுவனங்களும் தேச நலனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது போலவே பொதுத்துறையின் கீழ் வந்த இப்படியான வங்கிகளும் தேச நலனுக்கே செயல்படுகின்றன. இந்த தேசத்தின் பெருந்திரளான சாதாரண மக்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இவை உருவெடுத்தன. செயல்பாடுகளில் சிற்சில குறைபாடுகள் இருப்பினும் நோக்கம் புனிதமானது.  அதனால் தான் நமது புரிந்து கொள்ளல்களும் இன்னும் அவசியமாகின்றன.

பங்குச் சந்தை?..  நிறைய சொல்ல வேண்டும். ஒருவர் சொல்லித் தெரிவதை விட தானே முயன்று தெரிந்து கொண்டால் இன்றைய தகவல் உலகில் அது அவருக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்றாக மாறும். ஆகவே இது பற்றி இப்போது வேண்டாம்.


 
--ஜீவி

    

இந்த சிறுகதை விமர்சனப்போட்டி மூலம்
தங்களுக்குள் முகிழ்ந்த எண்ணங்களை
எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதற்கு
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

 பிரியமுள்ள 
கோபு [VGK]
    


அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:

VGK-36  


  ’எலி’ஸபத் டவர்ஸ்  
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை 


25.09.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.

என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்


37 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் சந்தோஷப் பகிர்வுக்கும் நன்றி, குமார் அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. இரண்டே வார்த்தைகள் தாம். இருந்தும் அந்த அருமையில் தங்கள் மனத்திருப்தி தெரிகிறது. நன்றி கரந்தையாரே!

   நீக்கு
 3. திரு ஜீவி அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் வங்கிகளின் பங்கு பற்றி நன்றாகவே சொன்னார். அவை பொதுத்துறையாக இருப்பதால்தான் இன்றும் நிறையபேருக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் ஏழை எளியோருக்கு சுலபமான கடன் வசதி கிடைக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் நாட்டில் இரட்டைக்குதிரை சவாரி. கலப்புப் பொருளாதாரம். இந்த சவாரியில் எந்தக் குதிரையும் முன்னே விரைந்து இன்னொன்றை தடுமாறச்செய்து தரையில் புரட்டி விடலாகாது. எளிய மக்களின் நலன் எப்பாடுபட்டேனும் காப்பாற்றபட்டே ஆகவேண்டும்.
   அதற்கேற்ப நம் இலக்கியங்களும் எழுத்துக்களும் அமைய வேண்டும். அந்த திசையில் நியாயமான காரணங்களைச் சொன்ன தங்கள் பின்னூட்டம் உற்சாகத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி, தோழரே!

   நீக்கு
 4. அருமையான தகவல்கள் தாங்கிய ..பதிவு....
  பகிர்விற்கு நன்றிகள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் புரிதலாகி கொண்டாட்டமாகட்டும். நன்றிகள் கூட பகிர்தல் பொருட்டு தான். தங்கள் அன்புக்கு நன்றி, நண்பரே!

   நீக்கு
 5. செயல்பாடுகளில் சிற்சில குறைபாடுகள் இருப்பினும் நோக்கம் புனிதமானது. அதனால் தான் நமது புரிந்து கொள்ளல்களும் இன்னும் அவசியமாகின்றன//

  ஆதியோடந்தமாக வங்கிகளின் வரலாறு விவரணம் .. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த நிகழ்வும் எளிய மக்களுக்கு சொந்தமாகையில் தான் அதற்கென்றேயான உயிர்ப்பு சக்தி அவற்றுள் ஊடுருவி அந்த கூட்டு மலர்ச்சியில் அவை உண்மையான வரலாறு என்கிற அந்தஸ்தைப் பெறுகின்றன. காலம் நெடுக இந்தக் கதை தான். தங்கள் பகிர்தலுக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 6. வெகு நாட்களுக்குப் பின் திரு. ஜீவியின் எழுத்தைப் படிக்கிறேன் டிபிகல் ஜீவி ஸ்டைல்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'வெகு நாட்களுக்குப் பின்' என்று சொல்லியிருக்கிற அர்த்தமும் புரிந்தது; இந்த ஸ்டைலை அங்கே போட்டு
   சுவாரஸ்யப்படுத்தியதையும் பார்த்தேன். அங்கே வந்து அதற்கான என் ரசனையையும் சொல்கிறேன்.

   சிந்தனைகள் என்றில்லாவிட்டாலும் மனதிற்குப் பிடித்த கருத்துக்களின் சுகத்தை சேர்ந்து உணரும் பொழுது அவற்றின் சுவை கூடத்தான் செய்கிறது.

   கெழுதகை நண்பர் கோபு சாரின் தளத்தில் வேற்று மனுஷ உணர்வு இல்லாமல் எழுத முடிந்ததும் அவரின் உயர்ந்த பண்பால் தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஓர் அளவில் தான் வட்டாட வேண்டும் என்பதும் நமக்கு நாமே விதித்துக்கொள்ள வேண்டிய நியதி அல்லவா? தங்கள் ரசனைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
  2. எனக்கு இதான் தோன்றியது - ஸ்டைலு.
   கெழுதகையா? அப்படி என்றால்?

   நீக்கு
 7. பதில்கள்
  1. 'இனி'யில் இனி தொடரலாம், சுரேஷ் சார்! அந்தப்பக்கமும்
   முன்பு சொன்னது போல இனி வருகை தாருங்கள்.

   நீக்கு
 8. 'பணம்'
  - இந்த வார்த்தையின் வரைவிலக்கணம் இந்தப் பதிவு!
  நன்றி ஜீவி சார்!

  பதிலளிநீக்கு
 9. 'வரைவிலக்கணம்' என்று சொல்லுகிற அளவுக்கு முற்றாக முடிவுற்ற கட்டுரை அல்ல இது என்பதே உண்மை.

  இந்தக் கதையில் வரும் வங்கி மேலாளர், அந்த பஜ்ஜிக்கடை முதலாளியிடம் 'லோன் வேண்டுமா?' என்று கேட்கிறார்.
  பகல் 1 மணிக்கு ஆரம்பிக்கும் பஜ்ஜி வியாபாரம். இரவு 10 மணி வரை ஜேஜே என்று கூட்டம். பஜ்ஜிக்கடைக்காரரின் லாபத்தைக் கணக்கிட்டு, தினப்படி சேமிக்கிற மாதிரி ஒரு சேமிப்பு கணக்கு
  (R.D.A/C) ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டிருக்க வேண்டும். இப்படியான கேள்வி வந்திருந்த ஒரு விமரிசனத்தில் கூட இல்லை. அந்த உந்துதலே இந்தக் கட்டுரை.

  வாரம் பூரா சம்பாதிப்பதை வார இறுதியில் மகிழ்ச்சிக்காக செலவிடுவது என்பது மேல் நாட்டு வழக்கம். இந்த பழக்கம் நம் நாட்டிலும் தன் கிளைகளைப் பரப்பி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

  கிராம வீடுகளில் நெல் குதிர்களைக் கொண்டவர்கள் நாம். சேமிப்பு என்பது நம் வழிவழி வந்த வழக்கமாகிப் போனது.
  அந்த மனப்பான்மை அருகி வருகிறதோ என்கிற ஆதங்கத்தோடு கட்டுரையை முடித்துக் கொண்டு விட்டேன்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நண்பரே!

  பதிலளிநீக்கு
 10. சேமிப்புக் கணக்கு என்பதை விட கடன் கொடுத்தால் இன்னமும் நல்லது என அந்த வங்கி அலுவலர் நினைச்சிருக்கலாம். ஆனால் பெரியவர் தான் ஏற்கெனவே சேமித்துத் தானே வீடெல்லாம் கட்டி இருக்கார். ஆகவே சேமிக்கிறீர்களா என்ற கேள்வி தேவை இல்லை என்றே நான் நினைத்தது.

  வங்கி கடன் கொடுத்தாலும் அதை உண்மையாகவே எதற்காகக் கடன் வாங்கினார்களோ அதற்காகச் செலவிடுபவர்கள் நூற்றில் இரண்டு பேர் இருந்தால் அதிசயம்! :(

  ஜீவி சாரின் பொருளாதாரக் கருத்துகள் அருமையாக இருக்கின்றன. ஆனால் இந்தப் பங்குச் சந்தை குறித்து அறியும் அளவுக்கு எனக்கு அதில் விருப்பம் இல்லை. :)))))

  பதிலளிநீக்கு
 11. //ஆகவே சேமிக்கிறீர்களா என்ற கேள்வி தேவை இல்லை என்றே நான் நினைத்தது. //

  தேவை இல்லை என்று நீங்கள் நினைப்பதற்கான தேவைகள் கதையிலேயே இருக்கின்றன.

  சில கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
  வீட்டின் மேற்பகுதியில் எழுப்பப்பட்ட பில்லர்கள் அப்படியே துருத்திக் கொண்டு நிற்கும். வசதி வரும் பொழுது கட்டிடத்தை மேலும் உயர்த்துவதற்கான வசதி அது.

  சொல்லியது பாதி; சொல்லாதது மீதி நிறைய விஷயங்களை கதையை நீட்டுவதற்காக கதையின் உள்ளேயே அடக்கி வசதி பண்ணி வை.கோ. சார் வைத்திருக்கிறார்.

  அவற்றை உங்களை மாதிரி கதைக்கு வெளியே போய் விமர்சிக்கும் விமர்சகர்கள் மேலும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம்.

  கதைக்கு உள்ளே வந்தால்---

  கதை ஒரு சிறுகதை ப்ரேமுக்குள் அடங்காமல் பிதுங்கி இருப்பதைப் பார்க்கலாம்., அவ்வளவு அழகாக பார்த்து பார்த்து ஜோடனை செய்து ஆரம்பித்த கதை, அந்த பஜ்ஜிக்கடை முதலாளி சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்ததும் ஒரு கதைக்கான கதை அம்ச பொலிவை இழக்கிறது. இது விமர்சகர்கள் யாருமே அனுபவித்திராத விஷயம்.

  விமர்சகர்கள் கருத்து, கருத்து என்று என்ன கிடைக்கும் என்று தேடும் பொழுது கதை எழுதுதல் என்கிற நேர்த்தியை காணத் தவறி விடுகிறார்கள். இல்லை, அது பற்றி தெரியாதவர்களாய் இருக்கிறார்கள். ஒரு கதையை விமர்சனம் செய்யும் பொழுது
  விமர்சகரும் கதாசிரியராய் மாற வேண்டும். அந்தக் கதையை தான் எழுதினால் எப்படி எழுதுவோம் என்று யோசிக்க வேண்டும். எழுதுவதின் நேர்த்தி பற்றி அக்கறை இல்லையெனில் இந்த மாதிரி செய்திகளைப் பற்றித் தெரியாதார்களாய் போய்விடுவோம். ஒரு கதையை விமர்சிப்பதின் அடிப்படை தகுதிச் சிறப்பு பற்றியது இது என்பதால் உன்னிப்பாக இதிலெல்லாம் கவனம் கொள்ள வேண்டும்.

  சிறுகதைகளுக்கு முடிவு முக்கியம். அதற்காகத் தான் மொத்த கதையுமே. முடிவு நோக்கி விரையும் பொழுது எழுதுகிறவர்களுக்கும் ரொம்ப ரொம்ப பொறுமை வேண்டும்.
  நின்று நிதானித்து அனுபவித்து முடிக்க வேண்டும்.

  ஒரு கதையின் முடிவு என்பது வாசகரின் அனுபவமாக வேண்டும். அதை கதாசிரியர் எழுதிச் சொல்ல வேண்டும்
  என்கிற அவசியம் கூட இல்லை. எழுதுபவர் தன் எண்ணத்திலோ எழுத்திலோ அந்தக் கதையை முடிக்காமல் இத்தனை வரிகளில் எழுதிய அந்தக் கதையின் முடிவை வாசகர்களின் முடிவுக்கு விடுகிற மாதிரி, வாசகர்கள் தங்கள் வாசிப்பின் அனுபவத்தில் அந்தக் கதைக்கு ஒரு முடிவைக் கொள்கிற மாதிரி எழுதுவது மிகச் சிறந்த எழுத்துத் திறன்.

  கு.ப.ரா. எழுதிய 'விடியுமா' என்கிற கதையை இணையத்தில் தேடிப் படித்துப் பாருங்கள். கதாசிரியர் முடிவைச் சொல்லாமல் விட்ட அற்புத கதை இது. இன்றைக்கும் கு.ப.ரா.வின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிற கதை அது.

  எழுதுவது என்பது தோண்ட தோண்ட நிறைய விஷயங்கள் கிடைக்கும் அற்புத சுரங்கம்.
  பதிலளிநீக்கு
 12. //வங்கி கடன் கொடுத்தாலும் அதை உண்மையாகவே எதற்காகக் கடன் வாங்கினார்களோ அதற்காகச் செலவிடுபவர்கள் நூற்றில் இரண்டு பேர் இருந்தால் அதிசயம்! :( //

  இது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கருத்து. தேவை இருப்பதால் தானே கடன் வாங்குகிறார்கள்?.. பணம் அது படைக்கப்பட்ட காரணமான புழக்கத்திற்கு வந்து சுற்றி சுழல ஏதுவாகிறதே?..அதான் பெரிய விஷயம்.  பதிலளிநீக்கு
 13. // எனக்கு அதில் விருப்பம் இல்லை. :))))) //

  எது பற்றியும் அறிந்து கொள்வதை விருப்பமாக்கிக் கொள்ள வேண்டிய காலம் இது.

  பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பெண்களின் சுதந்திரம் இல்லை. இந்த பொருளாதார சுதந்திரம் இல்லை எனில் பெண்களின் சுதந்திரமும் பூர்த்தியாகாது. இதற்காகத் தான் என் 'பார்வை' தொடரில் பொருளாதார சுதந்திர வேட்கையுள்ள பெண்களைப் படைத்து அவர்களே ஒன்று சேர்ந்து தம் சொந்த கால்களில் நின்று பொருளீட்ட வழிகளையும் காட்டியிருக்கேன்.

  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த தகுதிச் சிறப்புடன்
  உயர்ந்த பதவிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் மாதர் திலகங்களிடமிருந்து எனக்குக் கிடைத்த இன்ஸ்பிரேஷன் இது.

  இன்றைய காலகட்ட பொருளாதார இடர்பாடுகளிலிருந்து கொஞ்சமே மீண்டு வந்து மூச்சு விட குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவரவர்களுக்கு சாத்தியப்பட்ட வகையில் உழைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலும் அவசியமாகிப் போகிறது.

  பதிலளிநீக்கு
 14. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது பொன்னாளா? கம்யூனிச கருத்து போல் படுகிறதே?

  தேசியமயமான வங்கிகளால் நாட்டு மக்களுக்கு கிடைத்த பலன்களைவிட அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த பலன் அதிகம். இந்திய வணிகம் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணம் வங்கிகள் தேசியமயமானதாகும். அதே சிவப்பு சிந்தனையுடன் செயல்பட்ட சைனா ஏறக்குறைய அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை விட மோசமாக இருந்து சடசடவென்று மேலோங்கியது (தேசியமய வங்கிகள் அங்கேயும்) வைத்துப் பார்க்கையில் இந்திய தேசிய வங்கிகளின் அசல் வண்டவாளம் புரியத் தொடங்குகிறது.

  பதிலளிநீக்கு
 15. //இந்திய வணிகம் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணம் வங்கிகள் தேசியமயமானதாகும். //

  தங்கள் கருத்து தவறு அப்பாதுரை சார். அன்று போட்ட விதை இன்று மரமாகி பூத்துக் குலுங்குகிறது என்பதே உண்மை. சாதாரண எளிய மக்களை திரளாக உள்ளடக்கிய நாடு இது.
  இந்த நாட்டுக்கு இதுவே சரிப்பட்ட முறை. இந்த பதிவுக்கு வரும் பதிவர்களில் வங்கி ஊழியர் (வலைச்சரம் சீனா சார் போல) இருந்தால் இந்த கருத்தை எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி நிலை நாட்ட முடியும்.

  பதிலளிநீக்கு
 16. My Dear Mr Appadurai Sir,

  நீங்கள் முதல் பரிசு பெற்ற கட்டுரையில் உங்கள் வரவுக்கும் பதிலுக்கும் அழைப்பு விடுத்திருந்தேனே! பார்த்தீர்களா?
  http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34-01-03-first-prize-winners.html

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 17. நல்ல விளக்கங்களுடன் கூடிய ஒரு பதிவு!

  பதிலளிநீக்கு
 18. வங்கி பற்றிய நல்ல விளக்கங்கள்.. பங்குச் சந்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அருமை கோபால் சார் :)

  பதிலளிநீக்கு
 19. எந்த செலவு எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாததினால் எதிர்காலத்தில் வரும் செலவை எதிர்கொள்வதற்காக மக்கள் சேமிக்கத் தலைப்பட்டார்கள். //

  உண்மை.
  பூவண்ணன் எழுதிய ஆலம் விழுது என்ற கதையில் சேமிப்பை அழகாய் சொல்வார் குழந்தைகளிடம். ’நம்ம குழந்தைகள்’ என்று சினிமாவாக எடுத்தார்கள். சேமிப்பின் அவசியத்தை எப்போதும் எடுத்து சொல்வது அவசியம்.

  மிக அருமையாக அலசல் செய்து இருக்கிறார் ஜீவி சார்.

  பதிலளிநீக்கு
 20. பணத்தின் உண்மையான நோக்கத்தை நன்கு விவரித்திருக்கிறார் ஜீவி அவர்கள்.

  பதிலளிநீக்கு
 21. வங்கி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். சேமிப்பு எவ்வள்ளவு முக்கியம் என்பதையும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
 22. அருமையான பகிர்வு. என் பணி நடுவராக இருப்பது மட்டுமே என்று எண்ணாமல், நல்ல கருத்துக்களைப் பகிர்ந்த திரு ஜீவி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 23. நல்ல பகிர்வு நெறயா வெவரம் தெரிஞ்சுக்க கெடச்சிச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 24. ஜி. வி. சார் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருப்பது நல்ல விஷயம். நிறைய விஷறங்கள் தெளிவு படுத்தியிருக்காங்க. நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 25. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜீவி சார். நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டங்களும் சுவாரசியம். பணத்தின் வீழ்ச்சியைப் பற்றியும், வங்கிகளை தேசியமயமாக்கியது பற்றியும் நல்லா எழுதியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் December 1, 2016 at 5:14 PM

   //ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜீவி சார். நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டங்களும் சுவாரசியம். பணத்தின் வீழ்ச்சியைப் பற்றியும், வங்கிகளை தேசியமயமாக்கியது பற்றியும் நல்லா எழுதியிருக்கீங்க.//

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் இந்தப் பின்னூட்டம் என்னால் உயர்திரு. ஜீவி ஸார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது. நன்றியுடன் கோபு. 01.12.2016

   நீக்கு
 26. கோபு சார் தெரியப்படுத்தியமையால் தான் தெரிந்தது. ஏறத்தாழ் ஒரு வருடத்திர்குப் பிறகு கூட தெரிந்து கொள்வதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு கோபு சாருக்கு முதல் நன்றி.

  நெல்லைத் தமிழர் மட்டுமா?.. கோமதி அரசு, பெரியவர் பழனி கந்தசாமி, பூந்தளிர், ஜெயந்தி ஜெயா, mru, சரணாகதி, ரவிஜி ரவி, ஷேஷாத்ரி, அன்பு நெல்லைத் தமிழர் அத்தனை பேருக்கும் வாசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு