என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

VGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு .... !இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 02.10.2014

வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 

valambal@gmail.com REFERENCE NUMBER:  VGK 37

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

    எங்கெங்கும் ....
  எப்போதும் .......
   என்னோடு ....  

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-நேற்றுடன் அறுபது வயது முடிந்து இன்று முதல் மூத்த குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளேன்.  என்னுடைய உடல் எடை மிகவும் அதிகம் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். என்ன செய்வது; சூதுவாது இல்லாதவன் நான். யாரையும் வருத்தப்பட வைக்க மாட்டேன்.  நானும் என் உடம்பை எதற்கும் வருத்திக்கொள்ள மாட்டேன். ரொம்பவும் மசமசப்பான பேர்வழி நான் என்று என் காது படவே என் மனைவி முதல் மாமனார் மாமியார் வரை எல்லோருமே சொல்லி வந்தது எனக்கும் தெரியாதது அல்ல.


நான் அதிகமாக வாரி வளைத்து சாப்பிடக்கூடியவனும் கிடையாது. காய்கறிகளில் பலவற்றைப் பிடிக்காது என்று தவிர்த்து விடுபவன். திரும்பத் திரும்ப  சாம்பார் சாதம், குழம்பு சாதம், ரஸம் சாதம், மோர் சாதம் என்று கை நனைத்து பிசைந்து சாப்பிட சோம்பலாகி விடுகிறது எனக்கு. 


கையில் ஒட்டாத டிபன் அயிட்டங்களான காரசாரமான அடை, முறுகலான தோசை, பூப்போன்ற மிருதுவான இட்லி, பூரி மஸால், ஒட்டலுடன் கூடிய காரசாரமான குழம்புமா(வு) உப்புமா, மோர்மிளகாய் போட்டு, நிறைய எண்ணெயைத் தாராளமாக விட்டுச் செய்த அல்வாத்துண்டு போன்ற மோர்களி, சேவைநாழியில் கையால் பிழிந்த சேவை (இடியாப்பம்) முதலியன என்றால் ஒரு பிடி பிடித்து விடுவதுண்டு.  
வடை, பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, வெங்காய பக்கோடா, சிப்ஸ், தட்டை (எள்ளடை), முறுக்கு என்றால் ஒரு பிரியமும், அவற்றுடன் ஒரு தனி ஆவர்த்தனமும் செய்வது உண்டு.  படுக்கை பக்கத்தில் எப்போதும் ஸ்டாக் வைத்துக்கொண்டு, நேரம் காலம் இல்லாமல் இத்தகைய நொறுக்குத் தீனிகளுடன் கரமுராவென்று உரையாடி, உறவாடி வருவேன். 


உடலின் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆவலில் டாக்டர் ஒருவரை சந்தித்தேன்.  

”உங்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம் .... ஆனால் நீங்க 96 கிலோ எடை உள்ளீர்கள் .... 21 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்” என்று சொன்னார், அந்த டாக்டர். 


“சரி ..... அப்படியானால் உடனடியாகக் குறையுங்கோ ..... டாக்டர்” என்றேன் அப்பாவியாக நானும். 


”நான் குறைப்பதா ! நீங்கள் தான் உங்கள் எடையைக்குறைக்க வேண்டும்”  என்றார் அந்த டாக்டர்.


”என் எடையை நானே குறைப்பதற்கு உங்களுக்கு கன்சல்டிங் ஃபீஸ் நான் தரவேண்டுமா?” என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன்.


“சரி ..... டாக்டர் ..... என் எடையை நானே குறைக்க .... நான் என்ன செய்ய வேண்டும்” என வினவினேன்.


தினமும் நாய் ஒன்று துரத்தி வருவதாக நினைத்துக்கொண்டு, எங்கும் நில்லாமல், ஓட்டமும் நடையுமாக தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு வேகமாக வாக்கிங் செல்ல வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லி, ஏதோ ஒருசில மருந்து மாத்திரைகளும் எழுதிக் கொடுத்து விட்டார். 

வீட்டை விட்டுச் சென்றால் தெருவில் நாய் துரத்தக்கூடும் என்ற கவலையில் தான், நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் அதிகமாக நடந்து செல்வது இல்லை.  ஒரு கிலோ மீட்டர் தூரம் போகணும் என்றாலும் ஆட்டோவில் தான் போய் வருவேன்.  

அடுக்குமாடி கட்டடத்தின்  இரண்டாவது தளத்தில் உள்ள என் வீட்டிலிருந்து புறப்பட்டு லிஃப்ட் மூலம் இறங்கி, தெருவில் சற்று தூரம் நடந்து ஆட்டோவில் ஏறி அமர்வதற்குள் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கி பெருமூச்சு விடும் ஆள் நான்.  என் உடல்வாகு அப்படி.  என் தாத்தா, அப்பா என்று பரம்பரை ஜீன்ஸ் அப்படி.  அது புரியாமல் அந்த டாக்டர், என்னைப் போய் நடக்கச் சொல்கிறார்.  நடக்கற ......... காரியமா அது!

இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் வாக்கிங் செல்ல முடிவெடுத்து இன்று முதன் முதலாக கிளம்பி விட்டேன். ஒரு அரை கிலோ மீட்டர் போவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு. அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஜில்லென்று ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் குடித்து விட்டு, அங்கிருந்த டீக்கடை பெஞ்ச் ஒன்றில் ஒரு கால் மணி நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டு, என் நடை பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன், ஒரு நடைப் பிணம் போல.

மேலும் ஒரு கால் கிலோ மீட்டர் தான் சென்றிருப்பேன்.  ஒரேயடியாக கால் விண்விண்ணென்று கெஞ்சுகிறது.  ஏந்தினாற்போல உட்கார ஒரு இடமும் இல்லை.  முட்டிக்கால் சுளிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு.   சுற்றும் முற்றும் பார்த்தேன்.  ரோட்டோரமாக சூடாக வடை, பஜ்ஜி போட்டு விற்கும் கைவண்டிக்கடை கண்ணில் பட்டது.  பையில் எப்போதும் பணம் நிறையவே வைத்திருப்பேன்.  ஆமை வேகத்தில் நடந்து, அந்தக்கடையை நெருங்கினேன்.   ஆமவடை வாசனை மூக்கைத் துளைத்தது.  ஆறஅமர உட்கார்ந்து ஆமவடை சாப்பிட அவ்விடம் வசதியில்லாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது. 


இருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட நாலுவடைகளும், நாலு பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன்.  

உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சூடாகவும் சுவையாகவும் இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.  

மீண்டும் தள்ளாடியவாறு என் நடைபயணத்தை மேற்கொண்டேன். அந்த மலையைச் சுற்றியுள்ள 4 வீதிகளில் நான் நடந்தாலே போதும், மொத்தம் 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும், என் நடையின் வேகத்திற்கு. 

பெளர்ணமியன்று இதே மலையை அரை மணி நேரத்தில் 3 சுற்று சுற்றி வருபவர்களும் உண்டு.  நான் என்ன செய்வது?  அவ்வாறு வேகவேகமாகச் சுற்றி வருபவர்களைப் பார்த்தாலே எனக்கு கால் வலிப்பது போலத் தோன்றும். ந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள், அவரவர் வீடு கட்டும்போது, வாசலில் பெரிய பெரிய திண்ணைகள் திண்டுடன் கட்டி வைப்பார்கள். வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது.  

ஆனால் நான் நடந்து செல்லும் இந்த நகரத்தின் மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், மனிதன் நடந்து செல்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது. கொஞ்சம் அசந்தால் நம் முழங்கையை ஒரு சைக்கிள்காரர் பெயர்த்துச் சென்று விடுவார்.  சற்று நம் நடையில் வேகம் காட்டினால் போச்சு - காலின் மேல் ஆட்டோவின் பின் சக்கரத்தை ஏற்றி விடுவார் ஒரு ஆட்டோக்காரர்.  இவர்களுக்காக சற்றே ஒதுங்கினால் நம் கால், ஆங்காங்கே தெருவில் வெட்டப்பட்டு, மூடப்படாமல் உள்ள சாக்கடைக் குழிக்குள் நம்மை இறக்கிவிடும்.  

இந்த லட்சணத்தில் கால் வீசி வேக வேகமாக நடக்க நான் என்ன ஒட்டடைக்குச்சியோ அல்லது ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா என்ன! 

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பேன்.  மெயின் ரோட்டுக்கு குறுக்கே ஒரு சிறிய சந்து.  சந்து பொந்துகளுக்கெல்லாம் பஞ்சமில்லாத ஊரு எங்களுடையது.  சிறிய அந்த சந்தின் வலது பக்க முதல் வீடு பூட்டப்பட்டிருந்தது.  வாசலுக்கு இருபுறமும் இரண்டு மிகச்சிறிய தாழ்வான திண்ணைகள். என்னைப்போல உருவம் உள்ளவர்கள் திண்ணைக்கு ஒருவர் வீதம் மொத்தம் இருவர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு அமரலாம்.  

சந்துக்கு உள்ளடங்கிய திண்ணையில் என் உருவத்தில் முக்கால் வாசியானவரும் சற்றே குள்ளமான கறுப்பான ஒரு பெரியவர், கையில் செய்தித்தாளுடன், அருகே ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.  கால் கடுத்துப் போன நான் அவர் அருகில் உள்ள மற்றொரு திண்ணையில் கஷ்டப்பட்டு குனிந்து உட்காரலாமா என யோசித்து என் கைக்குட்டையால் ஒரு தட்டுத் தட்டினேன். 

“வாங்கய்யா!  வணக்கம்.  உட்காருங்க!” என்றார் மிகுந்த உற்சாகத்துடன். 

“ஐயாவுக்கு எந்த ஊரு?  வீடு எங்கே?”  கனிவுடன் விசாரித்தார் அந்தப் பெரியவர்.   ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம்.

“நீங்கள் பிராமணர் தானே?” என்றார் மிகச்சரியாக என்னைப் பார்த்த மாத்திரத்தில்.

“ஜாதிகள் இல்லையடிப் பாப்பா” என்று முண்டாசுக் கவிஞர் சொன்னதை நினைவூட்டினேன்.  

“முண்டாசுக் கவிஞர் அந்தக் காலத்தில் சொன்னதை யாரு இப்போ பின்பற்றுகிறார்கள்?  நம் முண்டாசுப் பிரதமர் தான் ஜாதி அடிப்படையில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யணும் என்று சொல்லி விட்டாரே” என்றார். [இது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  என்னால் எழுதப்பட்ட கதை என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்]

அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போல இருந்தது எனக்கு.  உலகச் செய்திகள், நாட்டுநடப்பு எல்லாவற்றையும் செய்தித்தாள் படிப்பதன் மூலம் விரல் நுனியில் வைத்திருந்தார் அந்தப் பெரியவர்.  88 வயதிலும் தெளிவான அனுபவம் மிக்க அறிவு பூர்வமான அவரின் பேச்சு என்னைக் கவர்ந்தது.

“நீங்கள் பிராமணர் தானே”  என்றார் மீண்டும் மறக்காமல்.

“அப்படித்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்” என்றேன்.

“அப்போ நீங்க பிராமணர் ஜாதி இல்லீங்களா?”  என்றார்.

“ஜெயா டி.வி.  யில் “எங்கே பிராமணன்” பார்த்து வந்ததால் எனக்கே இதில் இப்போது ஒரு பெரிய சந்தேகம் ” என்றேன். 

புரிந்து கொண்டவர் சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜாதியைக் கூறினார், நான் கேட்காமலேயே.   பிரபல ஜவுளிக்கடைகளில் முன்னொரு காலத்தில் விற்பனையாளராக இருந்தவராம்.   அவருக்கு ஒரே ஒரு பெண் மட்டுமாம். அவளின் கணவருக்கும் ஜவுளிக்கடையில் தான் வேலையாம். ஒரு பேத்தியும், ஒரு பேரனுமாம்.  குடியிருப்பது வாடகை வீடுதானாம். அதே சின்ன சந்தின் கடைசிக்குப் போய் வலது பக்கம் திரும்பினால் ஒரு பத்தடி தூரத்தில் அவரின் வீடு உள்ளதாம்.   பெண், மாப்பிள்ளை பேரன் பேத்தியுடன் சேர்ந்தே இவரும் இருக்கிறாராம். நான் அவருடன் அமர்ந்திருந்த அரை மணி நேரத்தில் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஒருவருக்கொருவர் நீண்ட காலம் பழகிய நண்பர்கள் போலவே இருவருமே உணர்ந்து மகிழ்ந்தோம்.

அவருக்கும் முழங்காலில் முட்டி வலியாம்.  குச்சி ஊன்றி நடப்பதாக தன் கைத்தடியை எடுத்துக் காண்பித்துச் சொன்னார்.    அந்தக் கைத்தடி பளபளவென்று அழகாக உறுதியாக நல்ல வேலைப்பாடுகளுடன் புதியதாக வாங்கப்பட்டதாகத் தெரிந்தது.  61 வயதாகும் முன்பே நடக்கக் கஷ்டப்படும் நான், 88 வயதாகும் அவரை எண்ணி வியந்து போனேன்.

மாலை வெய்யில் குறையும் நேரமாக இருந்தது.  அருகில் சைக்கிளைத் தள்ளியபடியே,  கையில் அரிவாளுடன் ஒருவரைக் கண்டேன்.  அவரின் சைக்கிள் கம்பிகளில் நிறைய இளநீர் தொங்கிக்கொண்டிருந்தன. 
எனக்கும் அந்தப் பெரியவருக்கும் இரண்டு இளநீர், நல்ல வழுக்கையாக, பெரியதாக, சுவையான நீர் நிறைந்ததாகச் சீவச் சொன்னேன்.    இளநீர் குடித்துப் புத்துணர்ச்சி அடைந்த அந்தப் பெரியவர் என்னை ஒருவித வாஞ்சையுடன் பார்த்து கண்களால் நன்றி கூறினார்.

7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்.   அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது.    நான் இன்று இந்தப் பெரியவரை சந்தித்து நட்புடன் உறவாடி உரையாடியதில் அவருக்கும் சந்தோஷம் எனக்கும் ஏதோவொரு மனத் திருப்தி கிடைத்தது.

“உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி; அடிக்கடி இந்தப் பக்கம் மாலை வேளையில் 5 மணி சுமாருக்கு வரும் போதெல்லாம் நான் இந்தத் திண்ணையில் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு, கொஞ்சம் நேரம் பேசிவிட்டுப் போங்க” என்றார்.

அவரிடம் பிரியா விடை பெற்று நான் எழுந்துகொள்ள முயன்றேன்.  


தாழ்வான அந்தத் திண்ணையிலிருந்து எழும் போதே என்னைத் தள்ளி விடுவது போல உணர்ந்தேன்.  இனிமேலும் நடந்தால் சரிப்பட்டு வராது என்று அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். 

ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு, என் குடியிருப்பை நோக்கி நடக்க நினைக்கையில், டாக்டர் எதிரில் தென்பட்டார்.  வணக்கம் தெரிவித்தேன்.  

“என்ன....இன்னிக்கு வாக்கிங் போனீங்களா?” என்று கேட்டார்.  

”இப்போது வாக்கிங் போய் விட்டுத் தான் திரும்ப வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன்.   

”வெரி குட் - கீப் இட் அப்” என்று சொல்லி விட்டுப்போனார்.

பழக்கமே இல்லாமல் இன்று ரொம்ப தூரம் நடந்து விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைப்பிலேயே, இரவு பலகாரம் சாப்பிட்டு விட்டு, இரண்டு கால்களுக்கும் ஆயிண்மெண்ட் தடவிகொண்டு, படுத்தவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.  

அடுத்த இரண்டு நாட்களுக்கு வாக்கிங் போக வேண்டாம் என்று முடிவு எடுக்குமாறு, சற்றே மழை பெய்து உதவியது.  அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் ஏதோ சோம்பலில் வாக்கிங் போக நான் விரும்பவில்லை.  

மறுநாள் ஆங்கில முதல் தேதியாக இருந்ததால், நாளை முதல் தொடர்ச்சியாக வாக்கிங் போக வேண்டும் என்று எனக்குள் சங்கல்பித்துக் கொண்டேன். 


மறுநாள் மழை இல்லை.  வெய்யிலும் மிதமாகவே இருந்தது. எனக்குள் என்னவோ அந்தப் பெரியவரை மீண்டும் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  

நடந்து போக மிகவும் சோம்பலாக இருந்ததால், போகும் போது ஆட்டோவில் சென்று விட்டு, திரும்ப வரும் போது நடந்தே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோவில் ஏறினேன்.  அந்தச் சந்தின் அருகே இறங்கிக் கொண்டேன்.  

அந்த முதல் வீட்டுத் திண்ணைக்கு இன்னும் அந்தப் பெரியவர் வந்து சேரவில்லை.  கொஞ்சம் நேரம் வெயிட் செய்து பார்ப்போம், பிறகு அவர் வீட்டுக்கே சென்று அழைத்து வந்து விடலாம் என்ற யோசனையுடன் நான் மட்டும் அந்தக் குட்டைத் திண்ணையில் குனிந்து அமர்ந்தேன். 

சற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.      
னால் அந்தப்பெரியவர் தானே நடந்து வரவில்லை.   மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில் வந்துகொண்டிருந்தார்.  சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.    


இதைக்கண்ட எனக்கு ஏனோ என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.  வண்டியைச் சற்று நிறுத்தி அந்தப் பெரியவரின் முகத்தை நன்றாக ஒரு முறை உற்று நோக்கிவிட்டு, அவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன்.  

“வாங்கய்யா .. வாங்க, வணக்கம், உட்காருங்க” என்று வாய் நிறைய  அன்று  என்னை வரவேற்றவர், இன்று பேரமைதியுடன் ஆனால் சிரித்த முகத்துடன் படுத்திருப்பது  என் மனதைப் பிசைவதாக இருந்தது.

முன்னால் தீச்சட்டியை தூக்கிச்சென்ற நபர் அந்தப் பெரியவரின் மாப்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும். என்னை, யார் நீங்கள்?” என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.  பெரியவரின் உடலுக்கு அருகே அவர் உபயோகித்த கைத்தடியும் இருந்தது.
“அந்தக் கைத்தடியை பெரியவரின் ஞாபகார்த்தமாக நான் வைத்துக் கொள்கிறேனே” என்ற என் கோரிக்கை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்தக் கைத்தடி என் கைக்கு உடனடியாக மாறியது. அதை ஊன்றியபடியே, பெரியவரின் இறுதி ஊர்வலத்தில் நானும் நடந்தே சென்று கலந்து கொண்டேன்.

ஆற்றில் குளித்து விட்டு அவரின் வீடு இருக்கும் சந்து வரை மீண்டும் நடந்தே வந்தேன். 

அன்று வந்த இளநீர் வியாபாரி இன்றும் என்னிடம் வந்தார்.  இரண்டு இளநீர் சீவச் சொன்னேன்.  சீவிய ஒன்றை பெரியவர் அன்று அமர்ந்திருந்த திண்ணையில் படையலாக வைத்தேன்.  மற்றொன்றை நான் குடித்தேன்.  

இன்றைக்கு நான் குடித்த இளநீர் அன்று போல இனிப்பாகவே இல்லை. மனதில் எதையோ பறிகொடுத்தது போல எனக்குத்தோன்றியது.  என் வீடு நோக்கி மீண்டும் நடக்கலானேன்.

’எங்கெங்கும்... எப்போதும்...  என்னோடு...’ பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது.  தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன். 

கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது. 
oooooOooooo

VGK-35 - பூபாலன் 


 

VGK-35 - பூபாலன் 

சிறுகதைக்கான விமர்சனப்போட்டி 

முடிவுகள் வழக்கம்போல் 

நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்

முற்றிலுமாக வெளியிடப்படும்.
காணத்தவறாதீர்கள் !  
என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

21 கருத்துகள்:

 1. நவராத்திரி வெள்ளிகிழமையும் அதுவுமாக
  நல்ல வாக்கிங் போனீங்க ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி September 26, 2014 at 7:36 AM

   வாங்கோ, வணக்கம். முதல் வருகைக்கு மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி ! :)

   //நவராத்திரி வெள்ளிகிழமையும் அதுவுமாக நல்ல வாக்கிங் போனீங்க ..!//

   :) கதாசிரியரும், இந்தக்கதையில் வரும் கதாநாயகனும் [கதை சொல்லியும்] ஒன்றே என நினைத்து விட்டீர்கள் ! போலிருக்கு :)

   எல்லா விஷயங்களிலும் கிட்டத்தட்ட அப்படியே தான் என்றும்கூட நாம் வைத்துக்கொள்ளலாம்தான்.

   இருப்பினும் இன்னும் கைத்தடி ஊன்றித்தான் நடக்க வேண்டும் என்ற நிலைக்கு மட்டும் கதாசிரியர் வரவில்லை. :)))))

   அதுபோன்றதோர் நிலை வராமல் இறைவன் அருள் புரிவாராக !

   - VGK

   நீக்கு
 2. கதையை மீண்டும் படிக்கும் வாய்ப்பு. என்னைப் கவர்ந்த உங்களது சிறுகதைகளில் இதுவும் ஒன்று என்பதால் (இது மூன்றாவது முறை என்று எண்ணுகிறேன்) மீண்டும் படித்தேன்.
  கதையின் சஸ்பென்ஸ் ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், புதிய கதை படிப்பது போன்றே இருந்தது.

  வாக்கிங் போன பெரியவரோடு நானும் நடந்தேன். வழி நெடுக எனக்கு நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திருச்சி வடக்கு ஆண்டார் வீதி ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் வழி நெடுக வீட்டுக்கு வீடு திண்ணைகள். அவற்றின் நடுவில் தாழ்வாரத்தை தாங்கிய மரத் தூண்கள். திண்ணைகளில் விசிறியைக் கொண்டு விசிறிக் கொண்டு இருக்கும் பெரியவர்கள். இப்போது அவைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன. பெரும்பாலும் இப்போது அவற்றில் கடைகள்தான்.

  எனக்கும் கால் மூட்டுக்கள் வலிப்பது போன்ற உணர்வு. கதையில் ஒன்றி விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ September 26, 2014 at 3:55 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மலரும் நினைவுகளுக்கும், அவற்றை இனிமையாக இங்கு என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

   அன்புடனும் நன்றியுடனும் தங்கள்,
   VGK

   நீக்கு
 3. மிகவும் அருமையான கதை ஐயா...
  முடிவு கலக்கல்...

  பதிலளிநீக்கு
 4. நகைச்சுவையாக ஆரம்பித்த கதை மனை கனக்க வைத்து விட்டது.

  7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். //

  உண்மை தான்.


  பதிலளிநீக்கு
 5. இப்போது நடைபயிற்சி செய்ய அமைதியான பெரிய பிரகாரம் உள்ள கோவில் அல்லது நல்ல காற்றோட்டமான சந்தடி கூட்டம் இல்லாத பூங்கா தான்.ரோட்டில் நடை பயிற்சி செய்ய முடியாது.

  பதிலளிநீக்கு
 6. ஓரே ஒரு நாள் சந்தித்து மனம் கவர்ந்த பெரியவர் வழியில் கதை நாயகனும் நடந்து நீண்ட நாள் வாழ்ட்டும்.

  பதிலளிநீக்கு
 7. மனதைத் தொட்ட கதை. முன்னரே இரண்டு முறை படித்திருந்தாலும், மீண்டும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. நாலு வடை நாலு பஜ்ஜி போதாமல் இன்னும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்ததே?

  பதிலளிநீக்கு
 9. ஏற்கனவே இந்தக்கதை படிச்ச நினைவு இருக்கு. இப்பவும் அதே ரசனையுடன் படித்து ரசிக்கமுடியுது.

  பதிலளிநீக்கு
 10. நல்ல ஆரஞ்சு கலரில், பொம்மென்று உப்பலாக இருக்கும் பஜ்ஜியைப் பார்த்துட்டு சாப்பிடாமக் கூட இருக்க முடியுமா? வடை, போண்டா, சமோசா எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முதல் இடத்தைப் பிடிக்கும் ‘பஜ்ஜின்னா பஜ்ஜிதான்’.

  எத்தனை முறை படித்தாலும் அலுக்காத எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 11. வாக்கிங் போகுதே பஜ்ஜி திங்கதானே.

  பதிலளிநீக்கு
 12. நல்ல கதை ரசித்து ருசித்து எழுதியிருக்கும் சவாரசியமான கதை. நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 13. //”உங்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம் .... ஆனால் நீங்க 96 கிலோ எடை உள்ளீர்கள் .... 21 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்” என்று சொன்னார், அந்த டாக்டர்.

  “சரி ..... அப்படியானால் உடனடியாகக் குறையுங்கோ ..... டாக்டர்” என்றேன் அப்பாவியாக நானும்.

  ”நான் குறைப்பதா ! நீங்கள் தான் உங்கள் எடையைக்குறைக்க வேண்டும்” என்றார் அந்த டாக்டர்.

  ”என் எடையை நானே குறைப்பதற்கு உங்களுக்கு கன்சல்டிங் ஃபீஸ் நான் தரவேண்டுமா?” என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன்.// செம குசும்பு..மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 14. இந்தக் கதையைப் படித்தநாள் முதல் நானும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ளத் தலைப்பட்டுள்ளேன்.

  எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்

  திண்ணி யராகப் பெறின்

  என்பது உண்மையன்றோ?

  நல்லதொரு தன்னம்பிக்கையை வளர்க்கும் கதையைப் படைத்த நம் கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

   தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 15. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

  53 + 35 + 40 = 128

  அதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-3):

  http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html

  http://gopu1949.blogspot.in/2011/05/2-of-3.html

  http://gopu1949.blogspot.in/2011/05/3-of-3.html

  பதிலளிநீக்கு
 16. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-37-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-37-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-37-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  பதிலளிநீக்கு
 17. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 29.06.2021

  ஒரு நாள் நட்புதான் என்றாலும் நட்பு நட்புதான், ஒரே ஒரு நாள் ஏற்பட்ட நட்பாயினும் அவரைப்பொறுத்தவரை வாழ்நாள் நட்பு, மீ்ண்டும் பார்க்க, பேச தூண்டும் உன்னத நட்பு. நண்பரின் கைத்தடி உதவியுடன் அவரின் நினைவுகளை கனத்த இதயத்தோடு அசைபோட்டு செல்வது உண்மையான அஞ்சலி, அவர் ஆத்மா சாந்தியடையந்திருக்கும்.   துரை.மணிவண்ணன்.
  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. 
  - VGK 

  பதிலளிநீக்கு