About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, September 14, 2014

VGK-33 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’எல்லோருக்கும் பெய்யும் மழை’


 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-33  


 ’ எல்லோருக்கும் 


பெய்யும் மழை ‘  



இணைப்பு:


  

 



 




மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.


  


 நடுவர் திரு. ஜீவி 





நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :


ஐந்து






இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






    





இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 1



இதுவும் சகஜமாக எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு நிகழ்வே. அதிலும் வங்கியில் வேலைபார்ப்பவர்களில், காசாளராக வேலை பார்ப்பவர்கள் படும் கஷ்டத்தை எங்க வீட்டிலேயே பார்த்திருக்கேன். என் பெரியப்பா, அண்ணாக்கள்னு வங்கியில் காசாளர்களாக இருந்தவர்கள் நிறையவே உண்டு. அன்றாட வரவு, செலவுக் கணக்குச் சரியாகும் வரையில் வங்கியிலேயே இருந்து சரி பார்த்துவிட்டுப் பின்னர் வீட்டுக்குச் செல்லும் வங்கி அலுவலர்களே அதிகம். 

இந்தக் கதையின் நாயகியும் அப்படி ஒரு காசாளரே.  அதிலும் கணவன் இறந்ததால் கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைத்து வந்து ஓராண்டே பூர்த்தி ஆகியுள்ளது.  பல முறைகள் அன்றாடக் கணக்குச் சரி பார்க்கையில் வசந்திக்குக் கடந்து போன ஓராண்டில் பலமுறைகள் கையை விட்டுப் பணம் கட்டும்படி ஆகியுள்ளது இதிலிருந்து அலுவலக வேலையைக் கூட ஒருமித்த மனதோடு செய்யும்படி வசந்தியின் நிலைமை இல்லை எனப் புரிந்து கொள்ளலாம்.   திருமணமான ஒரே வருடத்தில் கணவனை இழந்து, மாமியார் மாமனாரிடம் பேச்சுக்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டு, ஒரு வருட மணவாழ்க்கைக்குப் பரிசாக அவன் கொடுத்த பெண் குழந்தையையும் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் அவள். மிகச் சிறிய வயதில் பெரிய பொறுப்புத் தான். துணைக்கும் யாருமில்லை.  கணவன் இறந்ததுமே தாய் வீடு வந்தவளை மாமியார் மாமனார் திரும்பிப் பார்க்கவில்லை.  தாயார் மட்டும் கூட இருப்பதால் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் பிரச்னை இல்லை.  ஆனால் அந்தக் குழந்தைக்கும் வலக்கைச் சுண்டுவிரல் அருகே ஆறாவது விரல் ஒன்று காணப்பட வசந்திக்கு மன உளைச்சல்.  அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாமா, அப்படியே இருக்கட்டுமா என்ற குழப்பம். இந்தச் சின்ன வயசில் இப்படி ஒரு கஷ்டமா என்னும் பரிதாப உணர்ச்சி மேலோங்குகிறது. 

ஆக மொத்தம் இத்தகைய பிரச்னைகளால் எப்போதும் பற்பல சிந்தனைகளில் மனதை ஓடவிட்டு வசந்தி பணத்தைக் கூடுதலாகக் கொடுத்து விடுகிறாள் என்றே தோன்றுகிறது. தலைமைக் காசாளரும் கண்டித்துவிட்டார். அப்படியும் வசந்தியின் மனம் வேலையில் பதியவில்லை என்றே தோன்றுகிறது.  சம்பவ தினத்தன்றும் நானூறு ரூபாய் யாருக்கோ அதிகம் கொடுத்திருக்கிறாள். அதைக் கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கிறாள் வசந்தி. ஒவ்வொரு முறை அவள் இப்படிப் பணத்தைக் கவனமின்றிக் கையாளும்போதெல்லாம் அவள் சம்பளத்திலிருந்து முன் பணம் கொடுத்ததாகக் கூறிப் பணத்தை எடுத்துக் கொண்டு அதைச் சமன் செய்வார்கள் வங்கி நிர்வாகத்தினர். அவர்கள் எண்ணம் அவள் மாசக் கடைசியைச் சரிக்கட்டப் பணத்தை எடுக்கிறாள் என்பது. இங்கே வசந்தியைத் தவறாக நிர்வாகம் நினைக்கிறது. ஏனெனில் பணத்தைக்கையாளுவது அவள் தானே! ஆனால் வசந்தி!!!!!!!!!!!!!!!

பணத்தைக் கட்டுக் கட்டாக எண்ணும்போது தற்காலங்களில் இருப்பது போன்ற வசதிகள் வசந்தி வேலை பார்த்த அந்தக் காலத்தில் இல்லை என்று கதாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.  இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  பணத்தை ஸ்பாஞ்ச் டப்பாவில் நீர் விட்டுத் தொட்டுத் தொட்டு ஒவ்வொன்றாகவே எண்ணியாகவேண்டும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார். ஆக இது நடந்த காலம் கதை எழுதப்பட்ட காலத்தில் இருந்து குறைந்தது 20, 25 வருடங்கள் முன்னர் இருக்கலாம்.  வசந்தியின் பார்வையில் பின்னோக்கிப் பார்த்து எழுதப்பட்டதாய்க் கொள்ளவேண்டும்.  ஏன் இதைச் சொல்கிறேன் எனில், காரணம் இருக்கு! :)

நானூறு ருபாயை எங்கே விட்டோம் என யோசித்த வசந்திக்கு அந்த வங்கியில் கடைநிலை ஊழியரான அஞ்சலை எடுத்திருப்பாளோ என்னும் சந்தேகம் வருகிறது.  அவளை விட ஏழ்மையான அஞ்சலைக்குக் குடிகாரக் கணவன் மட்டுமின்றி அடுத்தடுத்து நான்கு குழந்தைகளும் கூட.  அதோடு அவ்வப்போது வசந்தியிடம் ஐந்து, பத்து எனக் கைம்மாற்றாகவும் வாங்குவாள். மேலும் அன்று காலை வசந்தியிடம் அவசரமாக 200 ரூபாய் வேண்டும் என்று வேறே கேட்டிருந்தாள்.  வறுமை தாங்காமல் அஞ்சலை எடுத்திருப்பாளோ என நினைக்கும் வசந்திக்குப் பணத்தைத் தேட தன்னோடு அஞ்சலையும் சேர்ந்து வந்து உதவியதை நினைத்துக் குழப்பமாகவும் இருந்தது. வங்கி நிர்வாகம் வசந்தியைத் திருடியதாக நினைக்க வசந்தி அஞ்சலையை நினைக்கிறாள்.  நாம் ஒருவருக்குச் செய்யும் கெடுதல் பலமடங்கு ஆற்றலோடு நமக்கே திரும்பி வரும் என்பதை வசந்தி இங்கே புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் திரும்பத் திரும்ப யோசிக்க, யோசிக்க அஞ்சலை தான் குற்றவாளியோ என்னும் எண்ணம் அவளுக்குள் பலமாக ஏற்பட்டது. அதற்கேற்றாற்போல் பணம் தொலைந்த மறுநாள் காலை வசந்தியின் வீட்டுக்கே வந்து அஞ்சலை  தான் வசந்தியிடம் வாங்கிய கடன் சிறுகச் சிறுக நானூறு ரூபாய் ஆகி இருப்பதாகச் சொல்லி அவளிடம் நானூறு ரூபாயை நீட்டி, இதைத் தொலைந்த பணத்துக்கு ஈடாக வைத்துக் கொண்டு வங்கிக்குப் பணத்தைத் திருப்பச் சொல்கிறாள். , வசந்திக்குத் திகைப்பு ஏற்படுகிறது!  நமக்கும் திகைப்புத் தான்!! ஆனால் வசந்தியின் கஷ்டமான நிலைமை அஞ்சலைக்குப் புரிகிறது.  ஆகவே எப்படியேனும் அவளுக்கு உதவ நினைக்கிறாள். 

அஞ்சலையிடம் பணம் கிடைத்த விபரத்தை விசாரிக்கிறாள் வசந்தி. தன் தாலியை அடகு வைத்துப் பணம் புரட்டியதாகச் சொல்கிறாள் அஞ்சலை. அதோடு அதில் கிடைத்த 2,000 ரூபாயில் தன் குடும்பம் முதல்நாள் தான் வயிறாரச் சாப்பிட்டதாகவும் சொல்கிறாள். பொல்லாத கணவனைப் படைத்த அஞ்சலையை அவள் கணவன் அடித்து நொறுக்கப்போகிறான் எனக் கவலைப்படும் வசந்தியிடம் தாலி தன் தாய் வாங்கியதாகவும் தன்னைக் கணவன் அப்படி அடித்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தான் புகார் செய்து அவனைச் சிறைக்குத் தள்ளிவிட நினைப்பதாகவும் சொல்கிறாள் அஞ்சலை.. ஆனால் 20, 25 வருடங்கள் முன்னர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் வந்து விட்டதா? இல்லை என்றே நினைக்கிறேன்.  இங்கே ஆசிரியர் கொஞ்சம் சறுக்கிவிட்டார். அஞ்சலை தன் கணவனைக் குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்து விடுவதாகச் சொன்னதாக மட்டும் சொல்லி இருக்கலாம். அந்தக் காலகட்டத்தில் வன்கொடுமைத்தடுப்புச் சட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் வந்தும் என்ன பயன்? இதோ இப்போது கூட சில ஆண்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணைக் கொடுமைப் படுத்தியதில் அவள் நடக்க முடியாமல் நடந்து வருகிறாள் என்பதைத் தொலைக்காட்சியில் காட்டுகின்றனர். ஆகவே வசந்தி காசாளராக இருந்த அந்தக்காலம் இன்னமும் மோசமாகவே இருந்திருக்கும்.  காவல் துறையிடம் புகார் செய்தால் கூட எடுபடாது. சமாதானமாகவே போகச் சொல்லி இருப்பார்கள்.  சரி, இதை இத்தோடு விடுவோம். 

ஆனாலும் வசந்தி அஞ்சலைக்குப் பணம் கிடைத்த விதத்தை நம்பவில்லை.  எப்படியோ அஞ்சலைக்குத் தான் இனாம் என நினைத்துக் கொடுத்த பணம் இப்படியானும் திரும்பியதே என நினைத்த வண்ணம் வங்கிக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிராமத்துப் பெரியவர் ஒருத்தர் அவள் வங்கிக்குச் சென்றதுமே அவளை வந்து பார்க்கிறார். விவசாய வேலைகளுக்காக முதல் நாள் வாங்கிச் சென்ற 25,000/- ரூபாயில்  500 ரூபாய்த் தாள் 41 உம், 100 ரூபாய்த் தாள் 49 உம் கொடுத்ததாகவும், 100 ரூபாய்த் தாள் 50 கொடுப்பதற்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டைத் தவறுதலாகக் கொடுத்திருப்பதாகவும், அன்று காலை தான் அதைப் பார்த்ததாகவும் கூறி அவளிடம் பணத்தை நீட்டுகிறார். மேலும் பெரியவர் அவள் சரியாகக் கொடுத்திருப்பாள் என நினைத்து நேற்றே சரிபார்க்காமல் தான் சென்றதற்கு வருத்தமும் தெரிவிக்கிறார். அதோடு இல்லாமல் இந்த வங்கியில் வேலை செய்யும் அஞ்சலை தனக்கு உறவு என்றும், நல்ல பெண் என்றும் சின்ன வயசிலே இருந்து இப்போ வரைக் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் சொல்லுகிறார். 

பெரியவர் பணத்தை நீட்டியதுமே வசந்திக்குத் தான் அஞ்சலையைத் தப்பாக நினைத்துவிட்டோம் என்பது புரிய, பண்டம் ஓரிடம், பழி ஓரிடமாகப் போய் விட்டதே என வருந்துகிறாள். ஆளைப் பார்த்து எதுவும் முடிவு கட்டக் கூடாது.  வறுமையிலும் செம்மையாக இருப்பவர்கள் உண்டு என்பது இப்போது வசந்திக்குப் புரிந்திருக்கும்.  அஞ்சலை மாதிரியும், கிராமத்துப் பெரியவர் மாதிரியும் நேர்மையான மனிதர்கள் இருப்பதாலேயே இன்றைக்கும் ஏதோ கொஞ்சமானும் மழை பெய்து கொண்டிருக்கிறது என ஆசிரியர் சொல்லாமல் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மையே!

ஆனாலும் அஞ்சலையிடம் அவள் மன்னிப்புக் கேட்க வில்லை.  இதற்கு அவள் அகங்காரம் இடம் கொடுத்திருக்காது.  போகட்டும்,  இனியாவது அவளையும் தன்னைப் போல் ஒரு மனுஷியாக நடத்துவாள் என எதிர்பார்க்கலாம்.. மிகச் சிறியதொரு கதைக்கரு.  அதையே வசந்தியின் நினைவுகளாகக் கொண்டு போய்க் கதையைச் சாமர்த்தியமாக நகர்த்தி, மனிதரிலே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை வெறும் பார்வையாலேயோ அவர்கள் தோற்றத்தாலேயோ அல்லது ஏழ்மை நிலையாலேயோ நிர்ணயிக்க முடியாது  என்பதை ஆசிரியர் உணர்த்திவிடுகிறார். 
 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்


 வலைத்தளம்: எண்ணங்கள் sivamgss.blogspot.com







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




     







 

இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றதுடன் 


இந்தப்போட்டிகளில்



முதன் முறையாக 


 ஓர் ஹாட்-ட்ரிக் அடித்துள்ளார்கள்

திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் 


VGK-31 to VGK-33



  



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


Hat-Trick Prize Amount will be fixed later 

according to their further 

Continuous Success in VGK-34, VGK-35 and VGK-36


 




     





இனிப்பான இரண்டாம் பரிசினை 



வென்றுள்ள விமர்சனம் - 2






நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை....இது வள்ளுவர் வாக்கு.


அக்குறளில் பாதியை தலைப்பாகக் கொண்டு நம் கதாசிரியர் எழுதிய சிறு கதையில் நல்லவரை அடையாளம் காட்டும் பாங்கு மிக அருமை.



இளம் வயதில் விதவையாவது மிக கொடுமை என்றால் திருமணமான ஓராண்டிற்குள் கணவரை இழப்பது என்பது மனதாலும் நினைக்க முடியாத மகா கொடுமை. 



பாவம் அந்த காசாளர் வசந்தி... பெயரில் இருக்கும் வசந்தத்தை தன் வாழ்வில் தொலைத்து விட்டு, தன்  பெண் குழந்தையின் ஆறாவது விரலில் அதிர்ஷ்டத்தைத் தேடிக் கொண்டிருக்கும் பேதைப் பெண்.


நம் நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு அளவில்லாததுபோல அதைப் பின்பற்றுபவர்களுக்கும் குறைவில்லை. 



இவளது துரதிர்ஷ்டம்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்ற புகுந்த வீட்டாரின் எண்ணம் ஒருவேளை வசந்தியின் குழந்தை வளர்ந்த பின்பு மாறி அவளையும், குழந்தையையும் ஏற்றுக் கொண்டால் அதுதான் அந்த ஆறாம் விரலின் அதிர்ஷ்டம் எனலாம்.



நல்லவேளையாக அவள் கணவரின் வேலையும், அவளைக் காப்பாற்ற அவளுடைய ஒன்டிக்கட்டைத் தாயையும் அளித்த இறைவனின் கருணையை நினைக்க வேண்டும். 



தாய்க்குப்  பிள்ளையும், பிள்ளைக்குத் தாயுமாக அவர்கள் மூவரும் ஓரளவு பணக் கஷ்டம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தது புரிகிறது.



வீட்டில் இருந்தால் வேதனையை மறைக்க அலுவலகம் வரும் வசந்திக்கு, காசாளர் பணி அவ்வப்போது சோதனையைக் கொடுத்து விடுகிறதே? பாவம்...கணக்கு டாலி (tally) ஆகாதபோது அவள் கையை விட்டுப் பணம் கட்ட வேண்டும் என்பது வங்கி விதி ஆயிற்றே? 



அனுபவசாலிகளையே காலை வாரி விட்டுவிடும் பணி காசாளர் பணி என்பதை நம் ஆசிரியர் சொல்வது மிகப் பொருத்தமானதே!!



வசந்திக்கு என்று இல்லை, மிகவும் பொறுப்பான, திறமையான காசாளர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது ஒரு வங்கி மேனேஜரின் மனைவியான நான் அறிந்ததே. ஒரு ஐம்பது ரூபாய் குறைந்தாலும் 'அது எப்படி, எங்கே போயிற்று' என்று காசாளரும், மேனேஜரும் மண்டையை உடைத்துக் கொண்டு தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு வர ஒவ்வொரு சமயம் நள்ளிரவாகிவிடும். 'ஒரு ஐம்பது ரூபாய்க்கு இந்த பாடா...நீங்களே  சரி பண்ணுவதுதான?' என்று கூட நான் கேட்டதுண்டு. அது ஐம்பதோ, ஐயாயிரமோ சட்டம் ஒன்றுதானே? 



அது கிடைக்காவிட்டாலோ ... பாவம் கேஷியரின் பர்சிலிருந்துதான் தர வேண்டும். அதனாலேயே கேஷியர் வேலையில் சேர பலரும் தயங்குவதுண்டு.  



வசந்திக்கு வாழ்வாதாரமான காசாளர் வேலையில் 400 ரூபாய் என்பது அந்த நாளில் பெரும் தொகை ஆச்சே? அவள் சம்பளத்தில் அம்மாதம் அந்தத் தொகை குறைந்தால் அவளுக்கு  என்னென்ன செலவுகளைக் குறைக்க வேண்டுமோ என்ற கவலை.



மேலதிகாரிகளுக்கோ எப்பொழுதும் போல் மாதக் கடைசி என்று தானே வசந்தி எடுத்துக் கொண்டு நாடகமாடுகிறாளோ  என்ற சந்தேகம்..



வசந்திக்கோ அவளுக்கு கீழே வேலை செய்யும் அஞ்சலையின் பேரில் சந்தேகம். அதுவும் அவள் இரண்டு நாட்களுக்கு முன் 200 ரூபாய் பணம் கேட்டபோது தான் இல்லை என்று சொன்னதால் எடுத்திருப்பாளோ என்ற ஐயம்.



வசதிக் குறைவானவர்களைப் பார்த்து பணம் அதிகம் இருப்பவர்களுக்கு வரும் இயல்பான சந்தேகம் இது என்பதை அழகாகச் சொல்கிறார் ஆசிரியர்.



இதுதான் மனித மனத்தின் இயல்பு. வசந்திக்கு அஞ்சலை மேல் வந்த அதே சந்தேகம், மேலதிகாரிகளுக்கு வசந்தியின் மேல். 


நம் வீட்டில் ஏதாவது காணாமற்போனால் நமக்கு முதலில் சந்தேகம் வருவது நம் வீட்டு வேலைக்காரர்கள் மீதுதானே? பின்பு அந்தப் பொருளை வேறு எங்காவது நாமே மறந்து வைத்து விட்டுக் கிடைக்கும்போது சுலபமாக அவர்களிடம் 'ஸாரி' என்று சொல்லி விடுகிறோம். 



ஆனால் நம்மால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட அந்த மனிதர்களின் மனநிலையையும், வருத்தத்தையும் நாம் உணர்வதில்லையே? அது பற்றி யோசிக்கிறோமா என்பது கூட சந்தேகம்தான்.


அஞ்சலையின் ஏழ்மை நிலை வசந்திக்கு அவளைப் பற்றி தவறாக எண்ணத் தோன்றியதுடன், அவள் வசந்திக்கு தொலைந்த பணத்தைத் தேட உதவியது கூட நாடகமோ என்றே நினைத்தாள்.

அந்த அஞ்சலையின் உயர்ந்த குணத்தை அவள் மறுநாளே உணர்ந்து கொண்டாளே. அவள் தன் தாலியை விற்று கிடைத்த பணத்தில் கொண்டு வந்தேன் என்றபோது கூட அதை நம்ப மறுத்தது வசந்தியின் மனம். அஞ்சலை ஏழையானாலும் வசந்தி அவ்வப்போது கொடுத்து உதவிய பணத்தை அவளிடம் திருப்பித் தரும்படி கேட்காதபோதும், அவளின் இக்கட்டை உணர்ந்து அந்தப் பணத்தைக் கொடுத்த அவளின் பெருந்தன்மைக்கு முன் காசாளர் வசந்தி செல்லாக் காசாகி விட்டாளே.

கட்டிய கணவனே சரியில்லாதபோது அவன் கட்டிய தாலி மட்டும் எதற்கு என்று அதனை விற்றுக் காசாக்கியது அஞ்சலையின் தைரியம். அதற்கு பதிலாக ஒரு மஞ்சளைக் கயிற்றில் கட்டி அணிந்து கொண்டது அவளின் பாதுகாப்பிற்காக. இனி அவன் என்னிடம் வம்புக்கு வந்தால் அவனை போலீசில் புகார் கொடுத்து உள்ள தள்ளிப்புடுவேன் என்று சொன்னது அவளின் கோபமும், வெறுப்பும்.

அலுவலகம் சென்ற வசந்தியின் இருப்பிடம் வந்த பெரியவரை, அச்சு அசலான கிராமத்துக் 'குடையாளி'யாக நம் கண்முன் காட்டுகிறார் ஆசிரியர்!



முதல் நாள் தான் வாங்கிப் போன 25000 ரூபாயில் 400 அதிகமாக இருந்ததை சுட்டிக் காட்டிய அக்கிராமப் பெரியவரின் நியாயமும், நேர்மையும் நம்மை வியக்க வைக்கிறது. கிராம மக்களின் இயல்பான பயத்தால், பணத்தை எண்ணாமல் அப்படியே எடுத்துக் கொண்டு சென்றதைத் தன் தவறாகவும் சொல்லி மன்னிப்பு கேட்ட அவரல்லவோ மனிதர்?



தன் நஷ்டத்தை எண்ணி மனம் கலங்கிக் கொண்டிருந்த வசந்தியின் வயிற்றில் பாலை வார்த்த அப்பெரியவருக்கு நன்றி சொல்லி தேநீர் கொடுத்ததும் பொருத்தம்தானே!


அத்துடன் அப்பெரியவர் அஞ்சலையின் நல்ல குணத்தை எடுத்துச் சொல்லி பாராட்டியபோது அஞ்சலையைத்  தானும் தவறாக எண்ணி விட்டதை வசந்தி உர்ந்து கொண்டாள்.

பொதுவாக நாம் ஒரு தவறு செய்யும்போது அதை நம்முடைய தவறாக இருக்குமோ என்று யோசிப்பது கூட இல்லை. சுற்றி இருப்பவர்கள் மேல்தான் அந்தத் தவறை சுமத்துகிறோம். 



அதுபோல வசந்தியும் தான் தவறு செய்திருப்போமோ என்று சிறிதும் நினைக்காமல், ஏழை அஞ்சலை  மேல்தானே சந்தேகப் பட்டாள்? ஆனால் இந்தத் தவறுக்குக் காரணம் பணத்தை சரியாக எண்ணாமல் கொடுத்த வசந்திதானே?


ஆனால் வெள்ளை மனம் கொண்ட அஞ்சலையோ தன் தாலியை விற்று வசந்தியின் இக்கட்டைத் தீர்க்க உதவி செய்தாள். அப்பொழுதும் அவள் மேல் சந்தேகம் ஏற்பட்டது வசந்திக்கு. 



அந்த கிராமத்துப் பெரியவர் ஒருவேளை பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்திருந்தால் வசந்தி அஞ்சலையை தவறானவளாகத்தானே எப்போதும் நினைத்திருந்திருப்பாள். 

நேர்மைக்கு இலக்கணமாக வாழும் கிராமத்துப்  பெரியவரும், வறுமையிலும் சிறந்த குணவதியாக வாழும் அஞ்சலையும், வாராவாரம் பரிசுப் பணத்தை அள்ளித் தந்து எங்களை உற்சாகப் படுத்தும் நம் கதாசிரியரும்  இருக்கும்  நம் நாட்டில் மழை பெய்யெனப் பெய்வதோடு வளத்தையும் அள்ளித் தரும்!
 

இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 

திருமதி. ராதாபாலு அவர்கள்.



வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/









மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




     



 




மிகக்கடினமான இந்த வேலையை 

சிரத்தையுடன் பரிசீலனை செய்து 



நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள  

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 


இரண்டாம் பரிசுக்கான தொகை

இவர்கள் இருவருக்கும் சரிசமமாக பிரித்து அளிக்கப்பட உள்ளது.







இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள 


மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர  


இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !





    


அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:




VGK-35  


 ’ பூ பா ல ன் ’ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:




வரும் வியாழக்கிழமை 


18.09.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

18 comments:

  1. என்னுடன் பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி ராதா பாலுவுக்கு வாழ்த்துகள். பரிசு கிடைத்ததே அதிசயம் என்றால் இரண்டாம் பரிசு அதுவும் ஹாட் ட்ரிக்காகக் கிடைத்தது மேலும் அதிசயமே! இனி முதல் பரிசு பெறப் போகும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கமென்ட் போச்சா, இல்லையானு தெரியலையே! 2 தரம் கொடுத்தேன். :))) பார்க்கலாம்.

    ReplyDelete
  3. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்ற
    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் ,
    திருமதி. ராதாபாலு அவர்கள்.
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  4. அழகிய விமர்சனங்களால் இரண்டாம் பரிசு பெற்றுள்ள திருச்சி பதிவர்கள் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களையும் திருமதி ராதாபாலு அவர்களையும் இனிதே வாழ்த்துகிறேன். ஹாட்ரிக் பரிசு பெற்றுள்ள கீதா மேடத்துக்கு அன்பான பாராட்டுகள்.

    ReplyDelete
  5. ஜீவி ஐயா மூலமாக அறிந்து வந்தேன். கதை விமர்சனத்துக்குப் போட்டியா ? வாசகர் தரம், திறன் உயர்த்த நல்ல வழி. தொடரட்டும் தங்கள் இலக்கிய பணி.
    கீதா மேடம் ஹாட்ரிக்கா? இப்படியே விட்டா எல்லா பரிசையைும் அவரே அள்ளிக் கிட்டு பாேய் விடுவார். சீக்கிரம் அப்பர் லிமிட் பாேட ணும். வெற்றி பெற்றவர்களுக்கும் பெறப் பாேவாேருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே கபீரன்பன். அது வேறே கீதா. கீதா மதிவாணன். அவங்க தான் தொடர்ந்து எல்லாப் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள்.

      இது ஏதோ புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பதைப் போல என் காட்டிலும் சிறு தூறல்! :)))))

      Delete
    2. KABEER ANBAN September 14, 2014 at 11:25 PM

      வாருங்கள் அன்பரே ! வணக்கம். இங்கு என் தளத்தினில் தங்களின் முதல் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஜீவி ஐயா மூலமாக அறிந்து வந்தேன்.//

      அப்படியா ! மிகவும் சந்தோஷம். வாங்கோ !!

      //கதை விமர்சனத்துக்குப் போட்டியா ? வாசகர் தரம், திறன் உயர்த்த நல்ல வழி. தொடரட்டும் தங்கள் இலக்கிய பணி. //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. ஏதோ என்னாலான ஒரு சிறு முயற்சி. முதல் முயற்சி. முதல் அனுபவம். :)

      //கீதா மேடம் ஹாட்ரிக்கா? இப்படியே விட்டா எல்லா பரிசையைும் அவரே அள்ளிக் கிட்டு பாேய் விடுவார். //

      அப்படியா சொல்கிறீர்கள் ! பெருங்’கை’ + பெறும் கை அவர்களுக்கு ;) அள்ளிக்கிட்டுப்போகட்டும். அதனால் என்ன ? எங்கள் ஊராம் திருச்சியில் இப்போது ஸ்ரீரங்கம் அம்மாமண்டபக்கரையில் வசிப்பவர்கள். சீனியர் மோஸ்ட் எழுத்தாளர். இதுவரை சுமார் 2000 பதிவுகள் எழுதித்தள்ளி மாபெரும் சாதனை படைத்து வருபவர்கள்.

      தாங்கள் சொன்னதும் தான் பார்த்தேன் ... இதுவரை ஒன் தேர்டு போட்டிகளில் பரிசுகள் இவர்களே தட்டிச் சென்றுள்ளார்கள். அதாவது இதுவரை வெளியிடப்பட்டுள்ள 33 போட்டிகளில் 11 போட்டிகளில் பரிசுகளை வென்று குவித்துள்ளார்கள். அவர்களின் திறமைக்கும், ஆர்வத்திற்கும், விடாமுயற்சிக்கும் இது மிகவும் கம்மிதான்.

      இந்தக்கடைசி VGK-31 To VGK-33 ஆகிய மூன்று கதைகளுக்கான விமர்சனங்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடி ஓர் ஹாட்-ட்ரிக்கே அடிச்சு அசத்திட்டாங்கோ.

      //சீக்கிரம் அப்பர் லிமிட் பாேடணும்.//

      இன்னும் VGK-35 to VGK-40 என்ற ஆறு போட்டிகளே பாக்கியுள்ளன. அவைகள் அனைத்திலும் அவர்களே வென்றுவிடணும் எனக் கங்கணம் கட்டியுள்ளார்கள். :)

      எழுத்துலகில் இது மிகவும் ஆரோக்யமான வரவேற்கத்தக்க சபதம் தான். அதனால் அப்பர் லிமிட் ஏதும் நாம் இப்போது போடுவது நன்னாயிருக்காது.

      //வெற்றி பெற்றவர்களுக்கும் பெறப் பாேவாேருக்கும் வாழ்த்துகள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், திருமதி கீதாசாம்பசிவம் மேடத்தை உசிப்பிவிட்டு உற்சாகப் ப-டு-த்-தி யுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  6. http://sivamgss.blogspot.in/2014/09/blog-post_15.html
    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

    ’எல்லோருக்கும் பெய்த மழை எனக்கும் பெய்தது!' என்ற தலைப்பினில் இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  7. //ஆளைப் பார்த்து எதுவும் முடிவு கட்டக் கூடாது. வறுமையிலும் செம்மையாக இருப்பவர்கள் உண்டு என்பது இப்போது வசந்திக்குப் புரிந்திருக்கும். அஞ்சலை மாதிரியும், கிராமத்துப் பெரியவர் மாதிரியும் நேர்மையான மனிதர்கள் இருப்பதாலேயே இன்றைக்கும் ஏதோ கொஞ்சமானும் மழை பெய்து கொண்டிருக்கிறது என ஆசிரியர் சொல்லாமல் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மையே!// அருமை. இனிப்பான இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    ReplyDelete
  8. //நம் வீட்டில் ஏதாவது காணாமற்போனால் நமக்கு முதலில் சந்தேகம் வருவது நம் வீட்டு வேலைக்காரர்கள் மீதுதானே? பின்பு அந்தப் பொருளை வேறு எங்காவது நாமே மறந்து வைத்து விட்டுக் கிடைக்கும்போது சுலபமாக அவர்களிடம் 'ஸாரி' என்று சொல்லி விடுகிறோம்.



    ஆனால் நம்மால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட அந்த மனிதர்களின் மனநிலையையும், வருத்தத்தையும் நாம் உணர்வதில்லையே? அது பற்றி யோசிக்கிறோமா என்பது கூட சந்தேகம்தான்.// யதார்த்தமான வரிகள்! இனிப்பான இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

    ReplyDelete
  9. பெய்யெனப் பெய்யும் மழையில், சில தூறல்கள் போல் என் விமரிசனத்தை இரண்டாம் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும்,போட்டியை நடத்தி பதிவர்களை ஊக்கப் படுத்தும் கதாசிரியருக்கும் நன்றிகள் பல!

    மிக அருமையாக விமரிசனம் எழுதி இரண்டாம் பரிசை என்னுடன் பகிர்ந்து கொண்ட திருமதி கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    என்னைப் பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  10. திருமதி ராதாபாலு அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    Link: http://enmanaoonjalil.blogspot.com/2014/09/blog-post.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  11. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திருமதி. ராதாபாலு அவர்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  12. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திருமதி. ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி. ராதாபாலு அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவம் திருமதி ராதாபாலு அவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. திருமதி கீதாசாம்பசிவம் மேடம் திருமதி ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. பரிசு வென்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி. ராதாபாலு அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete