என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

அ ழை ப் பு *[சிறுகதை - நிறைவுப்பகுதி 2 of 2 ]*







அழைப்பு

[சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




முன் கதை முடிந்த இடம்:

”வெகு சுவாரஸ்யமாக தொலைகாட்சிப் பெட்டியிலேயே தங்கள் கவனத்தை முழுவதுமாக வைத்துக்கொண்டு, ஏதாவது சீரியல்களிலோ, வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது கிரிக்கெட் மேட்ச்சிலோ மூழ்கி இருப்பவர்கள் தான் பலரும் உண்டு. இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்” என்று இன்று அவர் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தியது எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது.

===========================

”நல்ல தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, தூக்கமும் கலையாமல், போதை ஏற்றியவர் போல, அரைத்தூக்கத்தில் தள்ளாடியவாறே, நம்மைப்பார்த்து தலையை மட்டும் ஆட்டி வரவேற்பவர்களும் உண்டு. இவர்களின் இந்தச் செயல் எதற்காக இங்கு அனாவஸ்யமாக இப்போது, வேகாத வெய்யிலில் நீங்களும் தூங்காமல், எங்களையும் தூங்க விடாமல், வந்துள்ளீர்கள்? என்று நம்மிடம் கேட்காமல் கேட்பது போல நமக்குத் தோன்றும்; 

காலிங் பெல்லை அழுத்தியும், கதவிடுக்கு வழியே வந்து எட்டிப்பார்த்து கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கவே கால் மணி நேரமாவது ஆக்குபவர்களே அதிகம். என்ன செய்வது? அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள்; கசப்பான அனுபவங்கள்; கொலை, கொள்ளை, தீவிரவாதம் என பல்வேறு செய்திகள் வேறு;


அப்படித்தான் நேற்று ஒருவர் வீட்டுக்குச்சென்றிருந்தேன். நான் பார்க்க வேண்டிய நபரே நல்லவேளையாக வீட்டில் சும்மாத்தான் அமர்ந்திருந்தார். ”வாங்க சார்! ஏது இவ்வளவு தூரம்” என்று சொல்லி சிரித்தபடியே அமரச்சொன்னார். எனக்கு ஒரே மகிழ்ச்சி;


அவர் ஒரு காலத்தில் என்னிடம் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தவர் தான்.  பிறகு பல சைடு பிஸினஸ்களில் இறங்கி, அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கம் தொடர்ந்து அடித்ததில், அந்த எங்கள் அலுவலக வேலையையே ராஜிநாமா செய்துவிட்டு, இன்று பெரிய தொழிலதிபராகி பலருக்கும் தானே வேலைவாய்ப்பு அளிக்கும் பாக்யம் பெற்றவராகவும், ஊரில் முக்கியப்புள்ளியாகவும் உள்ளார்; 


சந்தோஷமாக பேச ஆரம்பித்தேன். ஒரிரு வார்த்தைகள் நான் பேசுவதற்குள், அவர் மேஜை மேல் இருந்த 4 கைபேசிகளும், 2 லேண்ட்லைன் போன்களும் மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பிக்க, அவரும் யார் யாருடனோ என்னென்னவோ பிஸினஸ் விஷயமாகப் பேச ஆரம்பித்து விட்டார். 


நான் ஒருவன் அவரைப்பார்த்துப் பேச நேரில் வந்திருக்கிறேன் என்பதையே அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏதோ கோவில் கும்பாபிஷேகத்திற்கு டொனேஷன் கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது;


பொறுமை இழந்த நான், கடைசியில் பத்திரிகையை அவர் கையில் ஒருவழியாகத் திணித்து விட்டு புறப்படத்தயாரானேன்.  அவரும் போனில் பேசுவதை சற்றும் நிறுத்தாமல், தலையை மட்டும் ஒரே ஆட்டாக ஆட்டி டாட்டா சொல்லி அனுப்பி விட்டார்;


நான் கொடுத்த பத்திரிகையின் மேல், சூட்டோடு சூடாக அவர், ஏதேதோ போனில் வரும் தகவல்களைக் கிறுக்கவும் ஆரம்பித்தது தான், என்னை என்னவோ மிகவும் சங்கடப்படுத்தியது; 


அன்று அப்படித்தான், ஒரு பத்து பேர்களை சந்திக்கச் சென்றதில் நான்கு வீடுகள் பூட்டியிருந்தன. ஒருவர் வீட்டில் வேலைக்காரர்கள் மட்டுமே. மற்றொருவர் வீட்டில் தோட்டக்காரர் மட்டுமே. வேறொருவர் வீட்டில் முன்பின் பார்த்த ஞாபகமே இல்லாத யாரோ ஒருத்தி மட்டும், சற்றே மாநிறமாகத் தென் பட்டாள்; 


அந்த வீட்டில் இருக்க வேண்டிய, நான் தேடி வந்த நபர் ஒரு முருக பக்தர். சற்றே வில்லங்கமான ஆசாமி தான். அவருக்கு வள்ளி தெய்வானை போல இரண்டு மனைவிகள்; அதுவும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். மூத்த சம்சாரம் சற்று குண்டாகவும் கருப்பாகவும், இளைய சம்சாரம் நல்ல ஒல்லியாகவும் சிகப்பாகவும் இருப்பார்கள்; 


ஒரே வீட்டில் அதுவும் இரண்டு சம்சாரங்களுடன் என்பதில் எனக்குப் பல நாட்களாக ஒரே வியப்பாகவே இருந்து வந்தது. அவரிடமே இதுபற்றி ஒருமுறை கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே “எல்லாம் அந்த முருகன் செயல், சாமி; அவன் ஆட்டுவித்தலுக்கு தகுந்தபடி நாம் ஆடுகிறோம்” என்று சொல்லி மழுப்பி விட்டார்.  நன்கு அறிமுகம் உள்ள அந்த வீட்டுக்காரர் எங்கே? என்று நான் கேட்டதும் வெளியூர் பயணம் சென்றிருப்பதாகச் சொல்லி, இந்த மாநிறமாக உள்ள புதிய பெண்மணி என்னிடம் ஏதோ சமாளிப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது; 


வீட்டில் உள்ள இவள் அவரின் மூத்த சம்சாரமோ அல்லது இளைய சம்சாரமோ இல்லை என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. அப்படியென்றால் புதுமுகமான இவள் யார்? ஆசை நாயகியா, கொழுந்தியாளா, அல்லது வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ள ஏதாவது உறவினரா என ஒன்றுமே புரியாமல், கேட்கவும் முடியாமல், நான் விடை பெற்று வரவேண்டியதானது;

நான்கு மணி நேரம் செலவழித்து, ஆட்டோவுக்கு சுளையாக ஐநூறு ரூபாய் தந்தது தான் மிச்சம். வெட்டி அலைச்சல். பேசாமல் தொலைபேசி மூலம் பேசி, விலாசம் வாங்கி, அஞ்சலில் அனுப்பியிருந்தால் கூட நூறு ரூபாய் செலவுடன் முடிந்திருக்கும்; 


என்ன செய்வது, மகன் கல்யாணம் என்பது, நீண்ட நாட்களுக்குப்பின் எனக்கு ஏற்படும் சந்தோஷமான ’முதல் அனுபவம்’ அல்லவா” என்று சொல்லி அவரின் ’அழைப்பு’ அனுபவங்கள் அத்தனையும், என்னுடன் கோயிலில் அன்றாடம் பகிர்ந்து கொண்டு மிகவும் ஜாலியாக உற்சாகமாகவே இருந்து வந்தார். 


கடந்த ஒரு மாதமாக இதுபோல அவரின் சுவையுடன் கூடிய அன்றாட அனுபவச் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டியே, நான் அந்தக் கோயிலின், தனிமைப் பகுதியில் உள்ள சிறிய திண்ணைக்கு முன்கூட்டியே சென்று அவருக்கும் சேர்த்து இடம் போட்டு விடுவதுண்டு.  

அழைப்பிதழ் கொடுப்பதில் இவ்வளவு தொல்லைகள் இருப்பினும் நேரில் சென்று பலரையும் சந்தித்து, நேரில் அழைப்பிதழ் கொடுப்பது போல வருமா? என்று நினைத்துக் கொண்டவர், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக தொடர்ந்து பயணப்பட்டு, பலருக்கும் அழைப்பிதழ்கள் வைக்க ஆவலுடன் சென்று வரலானார். 


தன்னுடன் வேலை பார்த்து தன்னைப்போலவே பணி ஓய்வு பெற்ற சக வயது நண்பர்களைச் சந்திப்பதிலும், அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வதிலும், அவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி இருக்கும் தானே!

திருமண நாளும் வந்தது. என்னை முதல் நாள் சாயங்காலமே நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு முதலியவற்றிற்கே வந்து விடச் சொல்லியிருந்தார். முதல் நாள், வேறு ஒரு திருமண வைபவத்தில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், மறுநாள் காலையில், இவர் அழைத்தத் திருமண மண்டபத்தில் ஆஜராகி விட்டேன்.

திருமண மண்டபத்தில் ஒரே கூட்டம். அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற அனைவரும் வந்திருந்தனர். வரவேற்பாளர்கள் நீட்டிய கல்கண்டு, சந்தனம், சர்க்கரை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். நானும் நுழைந்தேன். உள்ளே நுழையுமிடத்தில் பன்னீர் தெளித்ததோடு அல்லாமல், அருமையான ரோஜாப்பூக்கள் நறுமணத்துடன் கூடிய, சுகந்தமான காற்று நம் மீது சுழன்று அடிப்பதுபோல, செண்ட் ஸ்ப்ரேயர் அமைந்திருந்தது என் மனதை மயக்கியது.


உள்ளே மண்டபம் முழுவதுமே குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டிருந்தது.   இருப்பினும் அங்கு கூடியுள்ள கும்பலால் மின்விசிறிக் காற்றும் தேவைபட்டது. என்னுடன் வந்தவர்கள் பலரும் சற்று நேரம் சுழலும் மின் விசிறிகளுக்குக் கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். நானும் அமர்ந்தேன். 

பிறகு பலரும் விருந்து பரிமாறப்படுவது எங்கே எனக்கேட்டு அங்கு போய் வந்து கொண்டிருந்தனர். விருந்துண்டவர்களில் சிலர், தாங்கள் வந்த காரியம் அத்துடன் முடிந்து விட்டதாக நினைத்து, அவர்களுக்குள்ள அடுத்த அவசரக் காரியங்கள் காரணமாக மேடை ஏறினர். போட்டோ வீடியோக்களில் தங்களின் வரவைப் பதிவு செய்து கொண்டனர். ஏதேதோ அன்பளிப்புகள், மொய்ப்பணங்கள் என்று சிலர், புதுமண ஜோடியை சந்தித்து கொடுத்தால் நேரமாகிவிடும் என்று கணக்குப்போட்டு, வேறு யாரிடமோ பொறுப்பாக ஒப்படைத்துக் கொண்டிருந்தனர். 

புதுமணத் தம்பதியையோ, மற்ற உறவினர்களையோ வந்தவர்களுக்கு அதிக அறிமுகம் இல்லை. அவர்களுக்குள்ளேயே சிறுசிறு கும்பலாக அமர்ந்துகொண்டு, ஏதேதோ சிரித்துக்கொண்டும், ஊர் வம்புகள், அரசியல் முதலியன பேசிக்கொண்டும் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். 


பெரும்பாலான பெண்களின் பேச்சுக்கள் பொதுவாக அவர்களின் பட்டுப்புடவைகள், மேட்ச் ப்ளெளஸ், மின்னும் வைரத்தோடு மூக்குத்திகள், மற்ற நகைகள், நெக்லஸ்,  மற்றும் டி.வி. சீரியல்கள் பற்றியே இருந்து வந்தன. 


என்னை ஏதோ மிகவும் தெரிந்தது போல புதிதாக வருகை புரியும் ஒருசிலர், வணக்கம் கூறிச்சென்று கொண்டிருந்தனர்.  நானும் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். 

இருப்பினும், ஒரு மரியாதை நிமித்தமாக, பத்திரிகை அளித்து அழைத்த, அந்தப்பெரியவரை சந்திக்கவும், கை குலுக்கவும், “கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா? புதுமருமகள் வந்தாளா?” என விசாரித்து விட்டுக் கிளம்பவும் பெரும்பாலான ஆண்களின் கண்கள் அந்தப் பெரியவரையே தேடிக்கொண்டிருந்தன.

நானும் வந்ததிலிருந்து அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆளைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. மேடையில் இருப்பார் என்று பார்த்தேன். சம்பந்திகள் அறைகளில் இருப்பார் என்று பார்த்தேன். விருந்து உபசாரம் செய்யும் இடத்தில் இருப்பார் என்று பார்த்தேன். பாத்ரூம் பக்கம் எங்காவது போய் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை அவர் என் கண்ணிலேயே படாதது எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது.


பொறுமை இழந்த நான் மெதுவாக மேடைக்குச்சென்று, என் நண்பரின் மனைவியிடம் போய், ”சார் எங்கே” என்றேன்.


”வாங்கோ, வாங்கோ, நல்ல நேரத்தில் தான் வந்திருக்கிறீங்க! இங்கே  மேடைக்குப்பின்னால் உள்ள மணமகன் அறையில் தான் இருக்கிறார். எங்க பிறந்தாத்து மனுஷ்யாளைக் கண்டாலே, உங்க சாருக்கு ரொம்பவும் இளக்காரமாகத்தான் உள்ளது; 


எனக்கு பிறந்தாத்து (பிறந்தாத்து = பிறந்தவீட்டு)  மனுஷான்னு இன்னித்தேதியிலே இருப்பது கருவேப்பிலை கொத்து போல ஒரே ஒரு அண்ணா, மன்னி (மன்னி = அண்ணி).  இருவருமே எங்க ஆத்துக்காரரை விட வயதில் பெரியவர்கள். ஊர் பூராவும் போய் அழைத்தாரே மனுஷன். எங்க அண்ணா மன்னியை நேரில் போய் அழைக்கணும்னு தோனலையே, இந்த மனுஷனுக்கு;


’எட்டாக்கையிலே இருக்கா, அதுனாலே தபாலிலே அழைப்பிதழ் அனுப்பி வைக்கிறேன், நீயும் நானும் போன் செய்து பேசிவிடுவோம்னு’ சொன்னார்;


எங்க அண்ணாவுக்கும் இவருக்கும் எப்போதுமே, எதிலேயுமே ஒத்துப்போகாது என்பதனால் நானும் சரியென்று தலையை ஆட்டிவிட்டேன். இப்போ எங்க அண்ணா நேரில் புறப்பட்டு வந்து கத்தோ கத்துன்னு கத்தறான்.


இரண்டு பேருக்கும் விடியற்காலையிலிருந்து ஒரே வாக்கு வாதம். தயவுசெய்து நீங்க போய் கொஞ்சம் சமாதானப்படுத்திக் கூட்டிண்டு வாங்கோ சீக்கரமா. எனக்கு இங்கே மேடையிலே பல காரியங்கள் அடுத்தடுத்து இருக்கு. சாஸ்திரிகள் வேறு காசி யாத்திரைக்கு நேரம் ஆச்சுன்னு பறக்க அடிக்கிறார், ஊஞ்சலுக்கு பச்சப்பொடி சுத்தணும், பாலும் பழமும் கொடுக்கணும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் பார்க்கணும். எனக்கு இப்போக் கையும் ஓடலே காலும் ஓடலே”  என்றாள் அந்த அம்மா.


நேராக நான் மணமகன் வீட்டாருக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த மேடை அருகே இருந்த ரூமுக்குள் போனேன். 


”என்ன ஸ்வாமி உம்மை எங்கேயுமே காணுமேன்னு தேடிண்டு இருக்கேன். இங்க என்ன பண்றேள்? ஆமாம் இந்த ஸார் யாரு?” என்றேன்.


”இந்த ஸார் தான், என் மச்சினர். மும்பையிலிருந்து என்னுடன் சண்டை போட மட்டுமே, ப்ளேன் பிடித்து வந்திருக்கிறார்; 


நீரே நியாயத்தைச் சொல்லும்;  நானும், இவர் தங்கையும் இப்போது இருக்கும் உடம்பு நிலையில், மும்பைக்கு நேரில் இவர் வீட்டுக்குப்போய் பத்திரிகை கொடுத்து அழைத்து வர முடியுமா?  


சொன்னால் புரிந்து கொள்ளாமல் மிகவும் கோபமாக இருக்கிறார். சுபகார்யங்கள் நல்லபடியாக அடுத்தடுத்து நடக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு” என்றார்.


அவரின் மச்சினர் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு சுவற்றைப் பார்த்தபடி, எங்கள் பக்கம் முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தார். கோபத்தின் உச்சக்கட்டம் போலிருக்கு. அதுவும் நன்மைக்கே என்று நினைத்த நான், என் நண்பரைப் பார்த்து, கண்ணடித்து விட்டு பேசலானேன்.


“என்ன இருந்தாலும் சொந்த மச்சினர். மனைவியோடு கூடப்பிறந்த அண்ணா. உம்ம பையனுக்கு, ஊஞ்சலுக்கு மாலை எடுத்துத் தரவேண்டிய சொந்தத் தாய் மாமா; அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு? 


இங்கே இருக்கிற மும்பைக்குப் போய் நேரில் அழைக்காமல் விட்டது நீர் செய்த மிகவும் பெரிய தப்பு ஸ்வாமி. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீரும். நீர் செய்தது மிகவும் அயோக்யத்தனம்; 


மனசு இருந்தால் நீங்களும் மாமியும் ப்ளேன் பிடித்துப்போய் ஒரே நாளில் அழைத்து விட்டுத் திரும்பியிருக்கலாம். மும்பை என்ன, வெளிநாடா! பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கணுமேன்னு கவலைப்படுவதற்கு. ப்ளேன் ஏறினால் இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உங்களுடன் மும்பை வரை துணைக்கு கூட வந்திருப்பேன்; 


நான் மட்டும் உங்கள் மச்சினராக, இந்த ஸாரோட நிலைமையில் இருந்திருந்தால், நடக்கிறதே வேறு;  நேரில் வந்து அழைக்காத இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்;   ஏதோ இருந்து இருந்து இருப்பதே ஒரே ஒரு மறுமான் (மறுமான்=சகோதரியின் பிள்ளை) அவனுக்குக் கல்யாணம்; நாம் போய் கலந்து கொள்ளாவிட்டால் நன்றாக இருக்காது, என்று பெரிய மனசு பண்ணி, ஸார் வந்திருக்கிறார், தெரியுமா?” என்று சற்றே உரத்த குரலில் கூறினேன்.


இதைக்கேட்டதும், சுவற்றைப்பார்த்து உட்கார்ந்திருந்தவர் எழுந்து என்னை நோக்கினார். என்னிடம் வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.


உடனே நான் அவரிடம் “ஸார், உங்கள் தங்கைக்கும், இவருக்கும் முன்பு போல உடல்நிலை தெம்பாக இல்லை. டாக்டர் ஃபுல் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லியிருக்கிறார். மற்றபடி நேரில் வந்து “அழைப்பு” தரக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இவர்களுக்கு இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அவர்களை எனக்காகவாவது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து விட்டேன்.  இதுபோன்ற நெருக்கடிகளில், டோட்டல் சரணாகதி ஒன்றுதான் கைகொடுக்கும் என்பது என்னுடைய அனுபவம்.


மனிதன் உடனே கோபம் தணிந்து, மனமிறங்கிப் போய் என்னை அப்படியே தூக்கி நிறுத்தி கட்டித் தழுவிக் கொண்டார். சரணாகதி அடைந்த விபீஷணனை ஸ்ரீராமர் கட்டித்தழுவிக்கொண்டார் என்பார்களே, அது போலத்தான் இதுவும். 


“போயும் போயும் இந்த என் தங்கை வீட்டுக்காரருக்கு நீங்கள் நண்பராக இருப்பினும், நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க! எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுருக்கு ஸார்; அவருக்காக இல்லாவிட்டாலும், உங்களுக்காக மட்டுமே, நான் என்னை நேரில் வந்து அழைக்காததை, இந்த நிமிஷத்திலிருந்து பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. நான் இப்போது என்ன செய்யணும்னு சொல்லுங்கோ?” என்றார். 


”காசியாத்திரைக்கு கிளம்பப் பையனுக்கு பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு இருக்கார் சாஸ்திரிகள். சீக்கரம் வாங்கோ, தாய்மாமாவாகிய நீங்கள் தான் மாப்பிள்ளைப் பையனுக்கு, உங்கள் கையால் முதல் மாலைபோட்டு ஜம்முனு அலங்காரமெல்லாம் செய்து, குடை, தடி, விசிறி, புஸ்தக ஸஹிதம் அவனைக் கிளப்பிக் கூட்டிண்டு போய், அவன் நேராக காசிக்கே போய் விடாமல் தடுத்துக் கூட்டிவந்து, மாப்பிள்ளையும் பெண்ணும் மாலை மாற்றிக்கொள்ள மாலை எடுத்துக்கொடுத்து, பிறகு உங்கள் தோள் மேல் அவனை உட்கார வைத்துக் கொண்டு, குதித்து கும்மாளம் அடிக்கணும் ஸ்வாமி, உடனே என்னுடன் புறப்பட்டு வாரும்” என்றேன். 


இதைக்கேட்ட, என் நண்பரும், அவர் மச்சினரும் சிரித்த முகத்துடன், பசுவும் கன்றும் போல துள்ளிக்குதித்து,  ரூமை விட்டு,  என்னுடன் உடனே வெளியேறினர்.  இதைப்பார்த்த என் நண்பரின் மனைவிக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார்கள்.


கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. தன் மறுமானையும், அவன் பொண்டாட்டியையும், தேன் நிலவுக்கு மும்பைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார், என் நண்பரின் மைத்துனர். 


”அவர்கள் மட்டுமா நாங்களும் வருவோம்” என்றார் என் நண்பர். 


”அவசியம் வாங்கோ, ஆனா இப்போ வேண்டாம்; சின்னச்சிறுசுகள் தனியே தேன் நிலவுக்கு இப்போது வந்துட்டுப் போகட்டும்;


நீங்க ரெண்டு பேரும் ஒரு ஆறு மாதம் கழித்து வளைகாப்பு - ஸீமந்தம்ன்னு அழைப்பு கொடுக்க பத்திரிகையுடன் நேரிலே வாங்கோ, வரும்போது மறக்காம உங்க நண்பரையும் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்றார். 


எது எப்படியோ மீண்டும் என் நண்பருக்கு “அழைப்பு” என்ற பிரச்சனை தொடரத்தான் போகிறது என்று நினைத்து என் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். அவரின் ‘அழைப்பு’ தொடர்ந்தால் தானே எனக்கும் சுவாரஸ்யமான அனுபவக்கதைகள் கேட்க முடியும். 


நான் ஏதோ நடுவில் புகுந்து பஞ்சாயத்து பண்ணப்போய், மனஸ்தாபங்களை வளர்த்துக்கொண்டிருந்த இரு குடும்பங்களை சேர்த்து வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.




-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-

திங்கள், 12 செப்டம்பர், 2011

அ ழை ப் பு [சிறுகதை - பகுதி 1 of 2 ]






அழைப்பு

[சிறுகதை - பகுதி 1 of 2 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது. 


இருப்பினும் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவற்றை விநியோகிப்பது என்பது மட்டும், இன்றும் சற்று சிரமமான காரியமாகவே இருப்பதாகத் தெரிகிறது.  இது சம்பந்தமாக என் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவக் கதையை இப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


என்னுடைய அருமை நண்பரான அவர் அறுபதைத் தாண்டியவர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். எதையுமே அழகாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்று விரும்புபவர். சமீபத்திய உடல் உபாதைகளால், உட்கார்ந்த நிலையில் திட்டமிட மட்டுமே முடிகிறதே தவிர, முன்பு போல சுறுசுறுப்பாக செயலாற்ற முடிவதில்லை, என்று கோயிலில் தினமும் என்னை சந்திக்கும் போது கூறுவார்.

பணம் செலவழிப்பதைப்பற்றி அதிகம் கவலையில்லையாம் அவருக்கு. எதுவும் நிறைவாக விரைவாக, மனதில் கற்பனை செய்தபடி, நல்லமுறையில் நிறைவேற வேண்டுமாம்.

அவர் மகனுக்கு இன்னும் நான்கே மாதங்களில் திருமணம் என்று நிச்சயமாகி விட்டதாம். அவரால் அழகாக அழைப்பிதழ்கள் எழுதப்பட்டு, மாதிரி அச்சாகிவந்து, அவரால் அது பலமுறை சரிபார்க்கப்பட்டு, ஒருசில பிழைகள் திருத்தப்பட்டு, ஓரிரு மாதங்கள் முன்பாகவே வெகு அழகாகத் தயாராகி, ஓரங்களில் ஈர மஞ்சள்தூள் தீட்டப்பட்ட உறைகளில் திணிக்கப்பட்டு, அவரால் தயார் நிலையில் பூஜை அறையில் வைக்கப்பட்டு விட்டனவாம்.

வெளியூரிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் தபால் விலாசங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உறையின் மீது அழகாக எழுதி, நேரில் வந்து அழைத்ததாக பாவித்துக் கொள்ளுமாறு அச்சிடப்பட்ட ஒரு துண்டுக்கடிதம் இணைத்து, தபால் தலைகள் ஒட்டி, தபால் பெட்டியில் அவ்வப்போது சேர்த்துவிட்டு, அனுப்பிய தேதியை சிவப்பு மையால் குறித்தும் வருவதாகச் சொன்னார்.

வெளியூர்காரர்களுக்கு மட்டும் சரியாக ஒண்ணரை மாதம் முன்பே தபாலில் அவரால் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டனவாம். அப்போது தான் அவர்கள் கல்யாணத்திற்கு வந்து போக திட்டமிடவும், ரயில் பயண முன்பதிவுகள் செய்து கொள்ளவும், செளகர்யமாக இருக்கும் என்பதையும், நன்கு திட்டமிட்டே என்னிடம் விளக்கமாக எடுத்துக்கூறினார்.


உள்ளூர்காரர்களுக்கு நேரில் சென்று அழைக்க வேண்டிய அழைப்பிதழ்களை எட்டு திசைகள் வாரியாக தனித்தனியே பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துக்கொண்டாராம். தினமும் ஓர் திசையில் ஆட்டோவில் சென்று முடிந்தவரை ஒரு பத்து பேர்களுக்காவது அழைப்பிதழ் கொடுத்து, நேரில் அழைத்து விட்டு வரணும் என்பது அவரின் விருப்பமாம்.


பளபளக்கும் பட்டுப்புடவையுடன், கைகளிலும் கழுத்திலும் நிறைய நகைகள் அணிந்து, சீவி முடித்து சிங்காரித்து, கொண்டையைச்சுற்றி பூச்சூடி,வெள்ளிக் குங்குமச்சிமிழைக் கையிலேந்தி, தன்னுடன் தன் மனைவியையும், பல உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சூறாவளிச் சுற்றுப்பயணமாக அழைத்துப்போகணும் என்பது தான் அவரின் ஆசை என்று சொன்னார்.


ஆனால் அடிக்கும் வெய்யில், அசந்து போயிருக்கும் தன் மனைவியின் உடல்நிலை, அவள் உள்ளத்தில் அவ்வப்போது ஏற்பட்டு மறையும் உற்சாகம் மற்றும் அலுப்பு, அன்றைய தொலைக் காட்சித்தொடர் நாடகங்களின் விறுவிறுப்பான போக்கு முதலியவற்றை ஆராய்ந்து, அன்றைய சிற்றுண்டி, சாப்பாடு, காஃபி, முதலியவற்றை ஓரளவு முடித்துக்கொண்டு, ’அத்திப்பூக்கள்’ முடிந்த கையோடு இவர் தார்க்குச்சி போட ஆரம்பித்தால், எப்படியும் ஒரு வழியாகப்புறப்பட மூணு மணிக்கு மேல் நாலு மணி கூட ஆகிவிடுகிறது, என்று சொல்லி அலுத்துக்கொண்டார்.    


ஆட்டோவில் ஏறி அமர்ந்து, ஒரு நாலு வீடுகள் அழைப்பதற்குள் நாக்குத் தள்ளிப் போய்விடுகிறதாம். ஆட்டோக்காரரின் அவசரம், போக்குவரத்து நெரிசலில் ஆமை அல்லது நத்தை வேகத்தில் நகரும் வண்டிகள், டிராஃபிக் ஜாம் ஆகி சுத்தமாக நகரவே முடியாத வண்டிகள், ஒன்வே ட்ராஃபிக், சிக்னலில் நிற்பது என்னும் பல தொல்லைகள் மட்டுமல்ல. போகும் இடத்திலெல்லாம் அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்ற படுத்தல்கள். லிஃப்ட் உள்ள இடங்கள், லிஃப்ட் இல்லாத இடங்கள், லிஃப்ட் இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காது என்ற அறிவிப்பு போன்ற நிலைமைகள், பற்றி மிகவும் நகைச்சுவையாகத் தெரிவிப்பார்.


”ஒரே பெயரில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். உதாரணமாக “பாரத் வில்லா”,  ”பாரத் எம்பயர்”, ”பாரத் வெஸ்ட் அவென்யூ”, ”பாரத் ஈஸ்ட் அவென்யூ”, “பாரத் கார்டன்ஸ்” என்று பலவிதமான கட்டடப் பெயர்களால் வந்திடும் குழப்பங்கள்; 


சுப்ரமணியன் என்றாலோ பாலசுப்ரமணியன் என்றாலோ எல்லா அடுக்கு மாடிகளிலும் யாராவது ஒருத்தர் அதே பெயரில் ஆனால் ஆள் மாறாட்டமாக இருந்து வரும் துரதிஷ்டம்; 


ஆங்காங்கே உள்ள வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள், திறந்திருந்தாலும் உள்ளே தாளிட்டு லேசில் வந்து கதவைத் திறக்காத நபர்கள், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றோ அல்லது ஷாப்பிங் போயோ வீடு திரும்பாமல் இருத்தல் என பல்வேறு சோதனைகள்;

முட்டிக்கால் வலியுடன், ஆயிண்மெண்ட் தடவியபடியே, மகன் கல்யாணம் என்ற மன மகிழ்ச்சியிலும், உடலுக்கு ஒரு தேகப்பயிற்சி தானே என்ற சமாதானத்துடனும், மூச்சு வாங்கியபடி, மாடி மாடியாக ஏறி இறங்கியதில் தினமும் முட்டி வலியும் முழங்கால் வலியும் அதிகமாகி, வீக்கம் கண்டது தான் மிச்சம்” என்றும் நேற்று என்னிடம் கூறினார்.


”வேலை மெனக்கட்டு, பத்திரிக்கை அடித்து, வீடு தேடி வந்து அதை உரியவரிடம் சேர்த்தாலும், மங்கள அக்ஷதைகள் தரையில் சிந்தி யார் கால்களிலாவது குத்தி விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில், முதல் வேலையாக நமக்குத்தெரியாமல் அதனை, நேராகச்சென்று, டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு,  பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;


பிறகு வீட்டில் வைத்த பத்திரிகையை பல இடங்களில் தேடியும் அது கிடைத்தால் அதைப்படிக்க மூக்குக்கண்ணாடி கிடைக்காமலும், மூக்குக்கண்ணாடி கிடைத்தால் பத்திரிகை கிடைக்காமலும், அலுத்துப்போய், முஹூர்த்த தேதியையும் மறந்து விட்டு, பேசாமல் விட்டு விடுபவர்களும் உண்டு;


’தன் திருமணமாகாத பெண் அல்லது பிள்ளைக்கு பொருத்தமான இடமாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ’ என ஜாதகத்தை ஒரு பிரதி எடுத்துத் தருபவர்களும் உண்டு. ஆட்டோ வெயிட்டிங் என்று சொன்ன பிறகு தான், அரை மனதுடன் ஆளை விடுபவர்கள், இந்த மகானுபாவர்கள்;


வீடு தேடி வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, “வாங்க! உட்காருங்க!! ஜில்லுனு தண்ணீர் குடியுங்க!!! என்று சொல்லி மின்விசிறியை சுழலவிட்டு, டிபன், காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால், ஜூஸ் எல்லாமே உள்ளது, எது சாப்பிடுவீங்க? என்ன கொண்டு வரலாம்? என்று அன்புடன் கேட்டு உபசரிப்பவர்கள், ஒரு ஐந்து சதவீதம் மட்டுமே;   


வெகு சுவாரஸ்யமாக தொலைகாட்சிப் பெட்டியிலேயே தங்கள் கவனத்தை முழுவதுமாக வைத்துக்கொண்டு, ஏதாவது சீரியல்களிலோ, வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது கிரிக்கெட் மேட்ச்சிலோ மூழ்கி இருப்பவர்கள் தான் பலரும் உண்டு; 


இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்” என்று இன்று அவர் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தியது எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது.



அழைப்பு 
அனுபவம் 
தொடரும் ...






[இந்தச் சிறுகதையின் நிறைவுப்பகுதி வரும் 15.09.2011 வியாழன் அன்று வெளியிடப்படும்.]

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

உண்மை சற்றே வெண்மை ! [சிறுகதை - நிறைவுப்பகுதி 2 of 2]









உண்மை சற்றே வெண்மை

[சிறுகதை - பகுதி 2 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.


===============================


ஏதோ சிகிச்சைக்காக மாட்டு வைத்தியரிடம் கூட்டிச்செல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சிகிச்சை முடிந்து வந்த அது பரம ஸாதுவாகி விட்டது. அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும் குடிகொண்டிருந்தது. இப்போதெல்லாம் அது இரவில் கத்துவதே இல்லை. 

மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். அந்தப் பசுமாட்டைப் பார்த்த எனக்கு, ஏதோ புரிந்தும் புரியாததுமாகவே இருந்து வந்தது.

சென்ற வாரம் என் அப்பாவைத்தேடி ஆறுமுகக்கோனார் என்பவர் வந்திருந்தார். அவருடன் ஒரு பெரிய பசுமாடும், கன்றுக்குட்டியும் வந்திருந்தன. “காராம் பசு” என்று பேசிக்கொண்டனர். உடம்பு பூராவும் ஆங்காங்கே நல்ல கருப்பு கலராகவும், இடைஇடையே திட்டுத்திட்டாக வெள்ளைக்கலராகவும், பார்க்கவே வெகு அழகாக, அவைகள் இரண்டும் தோற்றமளித்தன.










அவைகளைப்பார்த்த என் அப்பாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டன. அம்மாவிடம் போய் ஏதோ ஆலோசனை செய்தார். நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்தக்காராம்பசுவும் கன்றுக்குட்டியும் அப்பாவுக்கு சொந்தமாகி விடுமாம்.


“நாற்பதாயிரம் ரூபாயா?” மிகவும் விலை ஜாஸ்தியாக உள்ளதே, என்று என் அம்மா வியந்து போனாள்.

“ஒரு வேளைக்கு பத்து லிட்டருக்குக் குறையாமல் பால் கறக்குமாம்; நாலு அல்லது ஐந்து மாதங்களில் போட்ட பணத்தை எடுத்து விடலாம்; காராம் பசு என்றால் சும்மாவா? அதன் உடம்பில் உள்ள இரட்டைக்கலருக்கே மதிப்பு அதிகம் தான்” என்று அப்பா அம்மாவிடம் சொல்வது, என் காதிலும் விழுந்து தொலைத்தது.

இப்போது இந்த மாட்டை ஆசைப்பட்டு, இவ்வளவு பணம் போட்டு வாங்கிவிட்டால், திடீரென என் கல்யாணம் குதிர்ந்து வந்தால், பணத்திற்கு என்ன செய்வது என்றும் யோசித்தனர் என் பெற்றோர்கள். கல்யாணச் செலவுகளைத்தவிர, நகைநட்டு, பாத்திரம் பண்டமெல்லாம் எப்பவோ சேகரித்து வைத்து விட்டாள், மிகவும் கெட்டிக்காரியான என் தாய்.

என்னைப்போலவே தளதளவென்று இருக்கும் இந்தக் காராம்பசுவுக்கு உடம்பிலும், மடியிலும் வெவ்வேறு இரண்டு கலர்கள் இருப்பதால் மார்க்கெட்டில் மெளசு ஜாஸ்தியாக உள்ளது. 


ஆனால் அதே போல எனக்கும், என் உடம்பின் அதே பகுதியில், சற்றே ஒரு ரூபாய் நாணயமளவுக்கு, வெண்மையாக உள்ளது. அதுவே எனக்கு சுத்தமாக மார்க்கெட்டே இல்லாமல் செய்து, என் திருமணத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது.


இந்தக் காராம்பசு, தன் இயற்கை நிறத்தை ஆடை ஏதும் போட்டு மறைத்துக் கொள்ளாமல், உண்மையை உண்மையாக வெளிப்படுத்தும் பாக்யம் பெற்றுள்ளதால், அதற்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உள்ளது. 


நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து என் உடலையும், அந்தக்குறையையும் நான் மறைக்க வேண்டியுள்ளது. என்னுடைய பொதுவான, மேலெழுந்தவாரியான, உருவ அழகைப்பார்த்து, மிகுந்த ஆர்வமுடன் பெண் கேட்டு வந்து போகும், பிள்ளையைப்பெற்ற மகராசிகளிடம், மிகுந்த கூச்சத்துடன் இந்த ஒரு சிறிய விஷயத்தை உள்ளது உள்ளபடி உண்மையாக கூற வேண்டியுள்ள, சங்கடமான துர்பாக்கிய நிலையில் இன்று நாங்கள் உள்ளோம். 


உண்மையை இப்போது மறைத்துவிட்டு, பிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால், என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்.


”ஆனால் ஒன்று; என்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் இனி பிறந்து வரப்போவதில்லை;   ஏற்கனவே எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும்; அவனை நமக்கு அந்த பகவான் தான் சீக்கரமாக அடையாளம் காட்ட வேண்டும்”, என்று என் அம்மா தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தானும் ஆறுதல் அடைந்து, என்னையும் ஆறுதல் படுத்துவதாக நினைத்து வருகிறாள். 


அந்தக்காளை இந்தக் காராம்பசுவை விரும்பி ஏற்றுக்கொள்ள பிராப்தம் வருவதற்குள், பட்டதாரியான எனக்கு, “முதிர்க்கன்னி” என்ற முதுகலைப் பட்டமளிப்பு விழா நடந்தாலும் நடந்து விடலாம்.


நான் என்ன செய்வது? காராம்பசுவாகப் பிறக்காமல், கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே!




-o-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-o-o-o-




குறையில்லாதவர் என்று இந்த உலகில் எவருமே இல்லை! 


இன்று நம்மிடையே காண இயலாத, சில குறைகள், 
நாளை திருமணத்திற்குப் பிறகு கூட திடீரென்று 
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஏற்படலாம் அல்லவா!

எனவே ஒருவரின் கவர்ச்சியான வெளித் தோற்றத்தைவிட 
அவரின் அழகிய அன்பான மனதை நேசிப்போம்!!

-oOo-

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உண்மை சற்றே வெண்மை ! [சிறுகதை - பகுதி 1 of 2]











உண்மை சற்றே வெண்மை

[சிறுகதை - பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


என் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் எப்போதும் குறைந்தபக்ஷம் ஒரு பசு மாடாவது கன்றுக்குட்டியுடன் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்களும், இரண்டு மூன்று கன்றுக்குட்டிகளும் கூட இருப்பதுண்டு.

என் அப்பாவும், அம்மாவும் பசு மாட்டை தினமும் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அதன் நெற்றியிலும், முதுகுப்பகுதியிலும், வால் பகுதியிலும் மஞ்சள் குங்குமம் இட்டு, தெய்வமாக அவற்றைச் சுற்றி வந்து கும்பிடுவார்கள். 

மாட்டுத்தொழுவத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருவார்கள்.  அகத்திக்கீரை, தவிடு, கடலைப்புண்ணாக்கு, வைக்கோல், அரிசி களைந்த கழுநீர், பருத்திக்கொட்டை, மாட்டுத்தீவனங்கள் என அரோக்கியமான சத்துணவுகள் அளித்து, போஷாக்காக வளர்த்து வருவார்கள். 

வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் மாட்டுக்கொட்டகையில் சாம்பிராணி புகை மணம் கமழும். பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.  

கன்றுக்குட்டிகளுக்கு போக மீதி எஞ்சும் பசும்பால் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பசு மாட்டு சாணத்தில் தயாராகும் விராட்டி என அனைத்துப் பொருட்களும், எங்கள் குடும்பத் தேவைக்குப்போக விற்பனையும் செய்வதுண்டு.

என் பெற்றோருக்கு, மிகவும் அழகு தேவதையாகப் பிறந்துள்ள ஒரே பெண்ணான என்னை, நன்கு செல்லமாக வளர்த்து படிக்கவும் வைத்து விட்டனர். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்க இருந்த எனக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர்.  




கல்லூரிப் படிப்பு முடிந்து வந்த எனக்கு இதுவரை மாப்பிள்ளை மட்டும் சரிவர அமையவில்லை. இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.

இப்போது மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் போட்டு, பால் வியாபாரமும் சக்கைபோடு போட்டு வருகிறது. எனக்கு இன்னும் மாப்பிள்ளை தான் சரியாக அமையவில்லை.

பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. ”ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!

இப்போதெல்லாம் ஒருசில பசுக்கள் இரவில் ஒரு மாதிரியாகக் கத்தும் போது, என் பெற்றோருக்கு, என்னைப்பற்றிய கவலை மிகவும் அதிகரிக்கிறது. நல்ல வரனாக இவளுக்கு சீக்கரம் அமையாமல் உள்ளதே என மிகவும் சங்கப்பட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால் வாயில்லாப் பிராணிகள் எனப்படும், அந்தப் பசுக்களைப்போல (என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டி) எனக்கு வாய் இருந்தும் நான் ஒன்றும் கத்துவதில்லை.

என்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.


தொடரும்






[இதன் தொடர்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 09.09.2011 அன்று வெளியாகும்]

திங்கள், 5 செப்டம்பர், 2011

முதிர்ந்த பார்வை [சிறுகதை - இறுதிப்பகுதி - பகுதி 2 of 2]








முதிர்ந்த பார்வை


[சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


இப்படியாக மணிகண்டனும் கல்யாணியும் தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவர்கள் இருவரும்,அந்த வயதான பெரியவர்களுக்குப் பிடித்தமான பலகாரங்களுடன், முதியோர் இல்லம் சென்று, அவர்களுடன் நெடுநேரம் பேசிவிட்டு,விடைபெறும் முன் அவர்களை நமஸ்கரித்து ஆசி வாங்கிவரத் தவறுவதில்லை. 


இசைப்பிரியரான மணிகண்டனின் தாய், அடுத்தமுறை தன்னைப்பார்க்க வரும்போது, தன் வீட்டிலுள்ள பழைய வீணையை மட்டும் தன்னிடம் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள்.  


ஏதோ வேறு வழி தெரியாமல் புறப்பட்டு வந்து விட்டார்களே தவிர, குடும்பத்தை விட்டு, முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகமாகவே தோன்றியது.  ”மணிகண்டன் என்ன செய்கிறானோ, எப்படி இருக்கிறானோ; பாவம் கல்யாணி வீட்டில் தனியாக இருந்து, எல்லா வேலைகளையும் ஒண்டியாகவே செய்து  என்ன கஷ்டப்படுகிறாளோ” என்ற நினைவுடனே இருந்து வந்தனர்.


நேரம் தவறாமல் வாய்க்கு ருசியாக சமையல் செய்துபோட்டு வந்த தங்கள் மருமகள் கல்யாணியை நினைத்து அவ்வப்போது கண் கலங்கி வந்தனர். 


ஏதோ ஒரு ஆத்ம திருப்திக்கு, அந்தத்தாய்க்கு, தான் என்றோ கற்ற வீணை இப்போது தேவைப்படுகிறது. வீணாக இங்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வீணையையாவது மீட்டு, மனச்சாந்தி அடையலாமோ! என்ற ஒரு சிறு ஏக்கம், அந்த அம்மாளுக்கு. 



இது இவ்வாறு இருக்க, அக்கம் பக்கத்தில் உள்ள பெண்மணிகள், ஜாடைமாடையாக “இருந்தால் நம் கல்யாணி மாதிரி அதிர்ஷ்டமாக இருக்கணும்; வந்து நாலே வருஷத்தில், அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாண்டானாக இருந்த மணிகண்டனை அடியோடு மாற்றி, அவர்கள் இருவரையும் பேயோட்டுவது போல, வீட்டைவிட்டுத் துரத்தி விட்டு, ஜாலியாக இருக்கிறாள், பாரு; நம்ம எல்லோருக்கும் இதுபோல ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமா என்ன? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பிணை வேண்டுமோல்யோ!” என்று பேசிக்கொள்வதைக் கேட்க கல்யாணிக்கு மனம் வேதனைப்பட்டு வந்தது. ஊர் வாயை மூடமுடியுமா என்ன? எல்லாம் நம் தலையெழுத்து என்று பேசாமலேயே இருந்து விட்டாள்.

ஒண்டியாகவே வீட்டுக்காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்து வந்த கல்யாணியின் உடம்பு சற்று இளைப்பாகவும், களைப்பாகவும் மாறத்தொடங்கியது. தலை சுற்றல், வாந்தி என அவதிப்பட்டவளை, மணிகண்டன் டாக்டரம்மாவிடம் கூட்டிச்சென்றான். 


எல்லாவித டெஸ்ட்களும் செய்த டாக்டரம்மா, அவள் கருவுற்றிருப்பதாகவும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாகவும், அடுத்த மாத டெஸ்ட்டுக்கு வரும்போது அதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்து விட்டு, கல்யாணியின் உடம்பை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறிவிட்டு, ஒருசில மாத்திரைகளும், டானிக்கும் வாங்கி சாப்பிடும்படி சீட்டு எழுதிக்கொடுத்தார்கள்.   

டாக்டர் சொன்னதைக்கேட்ட மணிகண்டன் கல்யாணியைக் கூட்டிக்கொண்டு, நேராக முதியோர் இல்லத்திற்குச் சென்று, தன் தாய் தந்தையரிடம், டாக்டரம்மா சொன்ன விஷயங்களைத் தெரிவித்து விட்டு, இந்த நேரத்தில் அவளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்? அவளுக்கு உதவிகள் செய்ய தன் மாமியாரையோ அல்லது மச்சினியையோ வரவழைக்க வேண்டுமா? என பல்வேறு சந்தேகங்களைத் தன் தாயிடம் கேட்கலானான். 

தங்களுக்கு பேரன்களோ, பேத்திகளோ அல்லது இரண்டுமோ பிறக்க இருக்கும் இனிப்பான சமாசாரத்தைக் கேள்விப்பட்ட, அந்த வயதான இருவரும், மிகவும் சந்தோஷப்பட்டு, வாழ்த்தினர்.

“இந்த சந்தோஷமான நேரத்தில் வயதான நீங்கள் இருவரும் வீட்டில் இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! ஜோஸ்யர் சொன்ன ஒரு வருடத்திற்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கின்றதே; அதற்குள் பிரஸவ நேரமும் நெருங்கி விடலாம்; அல்லது பிரஸவமே கூட நிகழ்ந்து விடலாம்! யார் தான் வந்து எங்களுக்கு உதவப்போகிறார்களோ” என்று கணவன் மனைவி இருவரும் கண் கலங்கியபடி கூறினார்கள்.

மணிகண்டனின் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். பிறகு அவர்களுக்குள் தனியாகப்பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

“டேய் ... மணிகண்டா, வருவது வரட்டும்டா, நீ போய் ஒரு டாக்ஸி கூட்டிக்கொண்டு வா. நாங்கள் இருவரும் இப்போதே உங்களுடன் வீட்டுக்கு வந்து விடுகிறோம்; இதுபோன்ற நேரத்தில் கல்யாணிக்கு போஷாக்கான ஆகாரங்கள் நிறைய கொடுத்து, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கச்சொல்லி கவனமாகப் பார்த்துக்கொள்ளணும்” என்றார் மணிகண்டனின் தந்தை. கல்யாணியின் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டே மணிகண்டனின் தாயும் அதை அப்படியே ஆமோதித்தாள்.

“ஜோஸ்யர் சொன்னபடி, குருப்பெயர்ச்சி முடியும் முன்பு, நாம் எல்லோரும் சேர்ந்திருந்தால், ஒரு வேளை யாருக்காவது ஏதாவது ஆபத்து வருமோ?” என்று கவலையுடன் வினவினான், மணிகண்டன்.

“அதுபோல எதுவும் ஏற்படாதுடா; அதற்கும் ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார் அந்த ஜோஸ்யர்” என்றார் மணிகண்டனின் தந்தை.

“அப்படியா! அது என்னப்பா .... பரிகாரம்; நீங்க எங்களிடம் சொல்லவே இல்லையே” ஆச்சர்யத்துடன் கேட்டனர், மணிகண்டனும் கல்யாணியும். 

“குருப்பெயர்ச்சி முடிந்த ஒரு மூன்று மாதத்திற்குள், பேரனையோ அல்லது பேத்தியையோ அழைத்துக்கொண்டு, குருவாயூரப்பன் கோயிலுக்குப்போய் துலாபாரம் கொடுக்கணுமாம்;  அது தான் அந்தப்பரிகாரம்;

நமக்குத்தான் பேரனோ அல்லது பேத்தியோ இதுவரை கடந்த நாலு வருஷமாகப் பிறக்காமலேயே உள்ளதே; எப்படி அந்த ஜோஸ்யர் சொன்னப் பரிகாரத்தை நம்மால் செய்ய முடியும் என்று தான், நாங்கள் முதியோர் இல்லம் போவதென்று முடிவெடுத்தோம்;

இப்போது தான் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கப்போவதாக டாக்டரம்மாவே சொல்லி விட்டார்களே; குழந்தைகளை அழைத்துப்போய் துலாபாரம் கொடுத்து விட்டால் போச்சு! எல்லாம் அந்த குருவாயூரப்பன் செயல்!; அந்த குருவாயூரப்பன் மேலேயே பாரத்தைப்போட்டு விட்டு, நாம் வீட்டுக்குப்போய் ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றனர் மணிகண்டனின் அப்பாவும், அம்மாவும்.








திருமணம் ஆகி, நான்கு வருடங்கள் ஆகியும், இதுவரை தங்கள் மருமகளுக்கு தாய்மை அடையும் பாக்யம் இல்லாமல் தட்டிப்போய் வருகிறதே! தன் மகன் கட்டியுள்ள சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டில், கணவனும் மனைவியும் தனிமையில் சந்தோஷமாக இருந்தால் தான் தங்களுக்குப் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கக்கூடும். அதற்கு தாங்கள் எந்தவிதத்திலும் ஒரு இடையூறாக இருக்கவே கூடாது, என்று நினைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகமே, நடுவில் குருவாயூரிலிருந்து ஜோஸ்யர் ஒருவர் வந்து போனது என்ற கற்பனைக்கதை.

ஆனாலும் இந்த உண்மையான கதை, அந்த இரு வயதானவர்களையும், அந்த குருவாயூரப்பனையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.




[ஆனால் இப்போது உங்கள் எல்லோருக்குமே 
இந்த விஷயம் தெரிந்து விட்டதே ..... ! அடடா !!

ஹே! குருவாயூரப்பா நீ தான் என்னைக் காத்தருள வேண்டும்!!]  


   
   



-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

சனி, 3 செப்டம்பர், 2011

முதிர்ந்த பார்வை [சிறுகதை பகுதி 1 of 2]





முதிர்ந்த பார்வை

[சிறுகதை - பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




அந்த முதியோர் இல்லத்தில் தன் தாய் தந்தையரை ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மணிகண்டனுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. அவன் மனைவி கல்யாணி அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

“என்னங்க இது. நடுரோட்டில் இப்படி ஒரு ஆம்பளை அழலாமா? கண்ணைத் துடையுங்க முன்னாடி” என்று டவலை நீட்டினாள்.

மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை.  

கல்யாணியும் மிகவும் நல்லவள் தான். கல்யாணம் ஆகி வந்த கடந்த நாலு வருடங்களில், மாமியார், மாமனார் இருவரையும் தன் சொந்தத் தாய் தந்தையைப் போலவே மிகவும் அன்புடனும், அனுசரணையாகவும், மரியாதையாகவும் தான் கவனித்துக்கொண்டு வருகிறாள் என்பதும் மணிகண்டனுக்குத் தெரியாதது அல்ல.

வீட்டுக்கு அன்று ஒரு நாள், ஜோஸ்யம் சொல்ல கேரள மந்திரவாதி போல ஒருவன் வந்தானாம். ”கூட்டுக் குடும்பமாக இருந்தால் உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. எவ்வளவு சீக்கரம் பிரிந்து செல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது”, என்று சொன்னானாம்.

ஜோஸ்யன் வந்து போன சமயம் மணிகண்டனும் வீட்டில் இல்லை. ரேஷன் கடைக்குப்போய் கும்பலில் நின்று பொருட்கள் வாங்கி வந்த அவன் மனைவி கல்யாணியும் வீட்டில் இருக்க முடியாமல் போய் விட்டது.

அந்த ஜோஸ்யன் எவனோ சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட, தன் பெற்றொர்கள் இப்படிப் பிடிவாதமாக வீட்டை விட்டு, முதியோர் இல்லத்தில் தங்களைச் சேர்க்கச் சொல்லி வற்புறுத்துவார்கள், என்று கனவிலும் நினைக்காத மணிகண்டனுக்கு, வேறு எந்த வழியும் தெரியவில்லை.

பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளையாகப் பிறந்து விட்டதால், அவனை விட்டு அவர்களை வேறு எங்கு தான் அனுப்ப முடியும் அவனால். மற்ற இந்தக்கால பிள்ளைகள் போலன்றி, மணிகண்டன் தன் தாய் தந்தை மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ளவன்.

அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதிலோ, வசதிகள் செய்து கொடுப்பதிலோ மிகவும் கவனமாக அவர்கள் மனது கோணாமல் இருந்து வருபவன்.

“இவனைப் பெற்றெடுக்க இவன் தந்தை என்ன நோன்பு நோற்றானோ” என மற்றவர்கள் பொறாமை கொள்வது போல நேற்று வரை போய்க்கொண்டிருந்த கூட்டுக்குடும்பம் அது. அவனுக்கு வாய்த்த மனைவி கல்யாணியும் நேற்று வரை அவ்வாறே மிகவும் நல்லவளாக எல்லோரையும் அனுசரித்துத்தான் இருந்து வந்திருக்கிறாள். இப்போது யார் கண்ணு பட்டதோ, இந்த தேவையில்லாத பிரிவு.

மணிகண்டன் தன் வருமானத்திற்குத் தகுந்தபடி அழகாகத் திட்டமிட்டு செலவுகள் செய்து, யாருக்கும் எந்த ஒரு குறையும் இன்றி குடும்பம் நடத்தி வருபவன். தன்னுடைய சிறுசேமிப்புக்களுடன், வங்கியொன்றில் லோன் வாங்கி சிறியதாக ஒரு வீடும் கட்டி, சிறப்பாக வாழ்ந்து வருபவன். 

தன் தந்தையின் சொற்ப ஓய்வூதியத்தையும் கூட, அவர் பெயரிலேயே வங்கியில் மாதாந்திர சேமிப்பாக இருக்கட்டும்; ஏதாவது எதிர்பாராத செலவுகள் வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்திருப்பவன்.   

அழகிய வாட்டர் ஹீட்டருடன் கூடிய, வெஸ்டேர்ன் பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில், இரண்டு கட்டில்கள் போட்டு, ஏ.ஸீ. வசதிகள் செய்து கொடுத்து, பொழுதுபோக்குக்கு டீ.வி, பக்திப்பாடல் கேஸட்டுக்கள் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் எல்லாமே கொடுத்து, வெய்யிலோ, மழையோ, பனியோ, காற்றோ எந்தப்பருவ காலங்களிலும், தன் தாய் தந்தையர் உடல் நிலைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவன் தான்.


ஜோஸ்யர் யாரோ ஒருவர் வந்து திருஷ்டிப்பட்டது போல ஏதேதோ சொல்லி குருவிக்கூட்டைக் கலைத்து விட்டதில், மணிகண்டனுக்கு மிகவும் வருத்தம்.


யார் அந்த ஜோஸ்யர், அவர் பெயர் என்ன, அவருக்கு வீடு எங்கே உள்ளது, அவரின் விலாசம் என்ன என்று கேட்டால் வயதான இவர்கள் இருவருக்கும் சொல்லத்தெரியவில்லை. அவர் ஏதோ கேரளாவிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகச் செல்பவர் என்றும், குருவாயூரப்பன் சொப்பனத்தில் வந்து சொன்னபடி நம் வீடு தேடி வந்து, வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு, நமக்கு நல்லது தான் செய்து விட்டுப்போய் இருக்கிறார், என்றும் திருப்பித்திருப்பி சொல்லி வருகின்றனர்.


இன்னும் ஒரு வருடத்திற்கு குருப்பெயர்ச்சி முடியும் வரை தான் இந்தப் பிரச்சனையாம். பிறகு பழையபடி கூட்டுக் குடும்பமாகவே வாழலாம் என்றும் அந்த ஜோஸ்யர் சொல்லியிருப்பதாகச் சொன்னதனால், மனது சற்றே சமாதானம் ஆனது மணிகண்டனுக்கு.


நடந்த கதைகளையெல்லாம் கேள்விப்பட்ட கல்யாணியின் பெற்றோர்களுக்கும், கல்யாணி மேல் ரொம்பவும் கோபமாக வந்தது. வயதான காலத்தில், நல்ல நடமாட்டத்துடன், தங்களால் முடிந்த சரீர ஒத்தாசைகள் செய்துகொண்டு, தன் மகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்து வந்த தம்பதியை, சின்னஞ்சிறுசாகிய தன் மகள், இவ்வாறு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளதை கேள்விப்பட்ட அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. 


கல்யாணி இங்கு நடந்த விஷயங்களைத் தனக்குத் தெரிந்தவரை விபரமாக எடுத்துக்கூறியும், தான் எந்தத்தவறும் செய்யவில்லை என்று சமாதானம் சொல்லியும், சம்பந்தி மேல் உள்ள அன்பினாலும், அவர்கள் இது நாள் வரை தங்களிடம் நடந்து கொண்ட பண்பினாலும், தங்கள் மகள் கல்யாணி சொல்வது எதையுமே நம்பாமலும், ஏற்றுக்கொள்ளாமலும் மறுத்து விட்டனர்.    


மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர்.








தொடரும் 



வியாழன், 1 செப்டம்பர், 2011

காலம் மாறிப்போச்சு ! சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2


அனைவருக்கும் இனிய 
”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”



காலம் மாறிப்போச்சு!

சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2

By வை. கோபாலகிருஷ்ணன்



ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு, என் மகன் அழைப்பின் பேரில் துபாய் சென்று ஒண்ணரை மாதங்கள் தங்கும்படி நேர்ந்தது. அதனிடையில் விநாயக சதுர்த்தி பண்டிகையும் வந்தது. ”நம் ஊராக இருந்தால் களிமண்ணில் பிள்ளையார் செய்துகொண்டு ஒரே அமர்க்களப்படும்” என்று என் மகனிடம் முதல் நாள் சாயங்காலம் கூறினேன். 

”இங்கேயும் பிள்ளையார் கிடைக்கும் அப்பா”, என்று சொல்லி உடனே யாருக்கோ போன் செய்து பேசினான். 

”அப்படியா, ஓ.கே. என்ன விலையானாலும் பரவாயில்லை. அந்த ஒரே ஒரு பிள்ளையாரை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, என்னையும் அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டான்.

நீண்ட பயணத்திற்குப்பின் கார் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிச்சுற்றி வருவது போல எனக்குத்தோன்றியது. பிறகு தான் புரிந்தது, கார் பார்க் செய்ய இடமில்லாமல் என் மகன் கஷ்டப்படுகிறான் என்று.

ஒருவழியாகக் காரை ஓர் இடத்தில் பார்க் செய்துவிட்டு, அங்குள்ள மிஷினில் பணம் போட்டு, அதற்கான டோக்கன் ஒன்றை காரின் முன்புறக்கண்ணாடியில், வெளியிலிருந்து பார்த்தால் தெரிவது போல வைத்துவிட்டு, ரிமோட் மூலம், கார் கண்ணாடிகளையும், கதவுகளையும் தானாகவே மூடச்செய்துவிட்டு, ஒரு சந்தின் குறுக்கே நுழைந்து அந்தக் கடைக்குக் கூட்டிச்சென்றான்.

”பெருமாள் பிள்ளை பூக்கடை” என்று தூய தமிழில் எழுதியிருந்தது, என்னை வியப்பில் ஆழ்த்தியது.   அருகிலேயே ஒரு சிவன் கோயில். அர்ச்சனை சாமான்கள் முதல் அனைத்து பூஜை சாமான்களும் விற்கப்படும் அருமையான கடை அது. அந்தக்கடையில் உள்ள அனைவரும் தமிழில் பேசினர். தமிழ்நாட்டுக்கே வந்து விட்டது போல மிகவும் சந்தோஷப்பட்டேன்.

கடைக்காரர் வரவேற்றதும் என் மகன் தான் புக் செய்திருந்த பிள்ளையாரைக் கேட்டான். ”பலபேர் வேண்டி விரும்பிக்கேட்டும் ஸ்டாக் தீர்ந்துவிட்டது என்று சொல்லி உங்களுக்காகவே ரிசர்வ் செய்து வைத்துவிட்டேன்” என்று சொல்லி அந்த மிகச்சிறிய களிமண் பிள்ளையாரை எடுத்துக்காட்டி பேக் செய்து கொடுத்தார். 

“என்ன விலை” என்று என் மகனிடம் கேட்டேன். 

”இருபது திர்ஹாம் மட்டுமே” என்று சொன்னான். 

நம்மூர் மதிப்புக்கு 250 ரூபாய் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டேன். மற்ற தேங்காய், வாழைப்பழம், பூக்கள் முதலிய பூஜைக்குத் தேவைப்படும் எல்லா சாமான்களையும் அங்கேயே வாங்கிக்கொண்டு, சிவன் கோயிலுக்குப்போய் சிவனையும் தரிஸித்து விட்டு, காரில் வீடு வந்து சேர இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. 

நம்மூரில் ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்தக்களிமண் பிள்ளையார் இங்கு இவ்வளவு விலை விற்கிறது. அதுவும் அதை வாங்கிவர காருக்குப்பெட்ரோல் முதல் கணக்குப்போட்டால் .... அப்பாடா” என்றேன்.

“அப்பா, நீ முதன் முதலாக எங்கள் துபாய்க்கு வந்திருக்கிறாய். நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;

காசு கொடுத்தாலும், நமக்கு வேண்டிய எந்தப்பொருளும் கிடைக்கிறதே! அதுவே மிகப்பெரிய விஷயம் அல்லவா! மேலும் நம் நாட்டிலிருந்து துபாய் வரை, ஆகாய விமானத்தில் பறந்து வந்துள்ள பிள்ளையார் அல்லவா இது! அதையெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால், நாம் இந்தப் பிள்ளையாருக்காகக் கொடுத்துள்ளது மிகவும் சொற்பத்தொகையாகும்” என்றான். 

இவனின் இந்தப் பேச்சைக் கேட்க, நல்ல வேளையாக என் தகப்பனாரும் இல்லை, என் மாமனாரும் இல்லை.

மறுநாள் பூஜையில் வைத்த களிமண் பிள்ளையாருக்கு, லேசாக பத்து உத்தரணி அபிஷேகம், அலங்காரம், மலர்களால் அர்ச்சனை, நைவேத்யம் எல்லாம் செய்து என் பேரனிடம் காட்டி மகிழ்ந்தேன். ”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்னிடம் தருகிறேன்; நீ விளையாடலாம்” என்றேன்.    

“நோ ... தாத்தா ..... ஐ டோண்ட் வாண்ட் திஸ்; ஐ ஹாவ் ப்ளெண்டி ஆஃப் ந்யூ டாய்ஸ் வித் மீ” என்று சொல்லி தன்னுடைய விளையாட்டு சாமான்கள் வைத்திருக்கும் தனி அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றான்.

பல்வேறு வகையான கார்கள், விமானங்கள், கீ கொடுத்தால் ஓடும் பொம்மைகள், ஆடும் பொம்மைகள், விளக்கு எரியும் பொம்மைகள், ஒலி எழுப்பும் மிருக பொம்மைகள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பலவிதமான விசித்திரமான பொம்மைகள் என ஏராளமானவற்றைக்காட்டி என்னை பிரமிக்க வைத்து விட்டான்,




புதிதாக அப்பா நேற்று வாங்கி வந்தது என்று சொல்லி, ஒரு பெரிய பார்ஸலைப் பிரித்தான். உள்ளே ஒரு ரோபோ பொம்மை - பலவிதமான வேலைகள் செய்யுமாம். அதன் அட்டைப்பெட்டியில் போட்டிருந்த விலையைப்பார்த்தேன். எழுநூறு திர்ஹாம் என ஒட்டப்பட்டிருந்தது. நம்மூர் விலைக்கு ஒரு 8000 அல்லது 9000 ரூபாய் இருக்கலாம். 

என்னுடைய பேரனின் தற்போதைய வயதாகிய இதே ஏழு வயதில், நான் ஒரே ஒரு கலர் பிள்ளையார் பொம்மைக்கு ஆசைப்பட்டு, அதுவும் கிடைக்காமல் நிராசையானதை நினைத்துக்கொண்டேன். என் பேரன் விளையாடும் பொம்மைகளைப் பார்த்து எனக்கு மிகவும் பிரமிப்பு ஏற்பட்டது. அவனுடனும், அந்த அழகழகான பொம்மைகளுடனும் விளையாடிய நானும் அன்று ஒரு சிறு குழந்தையாகவே மாறிப்போனேன். இந்தப்பேரனிடம் போய் களிமண் பிள்ளையாரை விளையாடத்தருவதாகச் சொன்னோமே என மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன்.  

காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.  மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!




காலம் மாறிப்போச்சு!

இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!!
  
-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-