About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, May 30, 2014

VGK 20 - முன்னெச்சரிக்கை முகுந்தன்


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 05.06.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 20

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

முன்னெச்சரிக்கை 

முகுந்தன்


நகைச்சுவைச் சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்கு சற்று பருத்த சரீரம்.  நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர் பிரஷருடன் சமீபகாலமாக சற்று ஞாபக மறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலுமே ஒருவித படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.

ஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம் + தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி + அதற்கான கூடு, மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை பாக்குப்பெட்டி சுண்ணாம்பு டப்பியுடன், பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, சின்ன பாக்கெட் நோட்டு, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள் அல்லது செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீஃப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கி வர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்புகள் என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி எல்லா சாமான்களையும் தினமும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட.

ஆபீஸில் அவருக்கு ’முன்னெச்சரிக்கை முகுந்தன்’ என்று ஒரு பட்டப்பெயரே கொடுத்திருந்தனர்.

பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும் இவருக்கு வேஷ்டி-துண்டு எதற்கு என்று நீங்கள் யோசிப்பதும் நியாயமே. அது ஒரு பெரிய கதை. 

ஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறிய அவருக்கு, அன்றொரு நாள் போதாத காலம். இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். அன்று முதல் இன்று வரை, ஒருவித பாதுகாப்புக் காரணங்களுக்காக வேஷ்டியும் துண்டும், இவர் போகுமிடமெல்லாம் கூடவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டன. 

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து காவிரிக்குப்போகும் வழியில் தான் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அமைந்துள்ளது.

அன்று சனிக்கிழமை. அரை நாள் மட்டுமே ஆபீஸுக்குத் தலையைக் காட்டிவிட்டு, சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டார், முகுந்தன்.

மறுநாள் காலை ஆறரை மணிக்கு திருச்சி ஜங்ஷனிலிருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலைப்பிடித்து சென்னைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.

ஞாயிறு மாலை அவர் பிள்ளைக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர ஏற்பாடு. அவரின் மனைவியும் மகனும் ஏற்கனவே சென்னை பெரம்பூரிலுள்ள இவரின் மைத்துனர் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 

முகுந்தனுக்கு வேண்டிய துணிமணிகள், மருந்து மாத்திரைகள், முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் முதலியன அனைத்தும் ஒன்று விடாமல், அவர் மனைவி ஏற்கனவே ஒரு சூட்கேஸில் ரெடி செய்து வைத்திருந்தாள்.

அவற்றையெல்லாம் ஒரு செக்-லிஸ்டு போட்டு, ஒருமுறை சரி பார்த்துவிட்டு,  ஹோட்டலிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு ஜன்னல் ஓரமாகக் கட்டிலில் படுத்தவர், நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிப்போனார்.

ஜன்னல் வழியே மழைச்சாரல் பட்டு, திடீரென்று கண் விழித்த முகுந்தனுக்கு ஒரே அதிர்ச்சி. மணி 5.30 ஆகிவிட்டது. வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மேக மூட்டமாக எங்கும் ஒரே இருட்டு. மின்னலுடன் கூடிய பலத்த இடிகள் வேறு பயமுறுத்தி வருகிறது. மின்வெட்டுக்கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை.     

அவசர அவசரமாக பாத்ரூம் போய்விட்டு , பல் தேய்த்து முகம் கழுவி, துண்டு ஒன்றால் துடைத்துக்கொண்டு, மெயின் ஸ்விட்சை ஞாபகமாக ஆஃப் செய்துவிட்டு, வீட்டைப்பூட்டிக்கொண்டு, பூட்டை நன்கு இழுத்துப்பார்த்து விட்டு, காலில் செருப்பு அணிந்துகொண்டு, ஒரு கையில் சூட்கேஸ், மறு கையில் குடை+டார்ச் லைட்டுடன், லிஃப்ட் வேலை செய்யாத எரிச்சலில் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.

“சரியான மழை ... இன்னும் 48 மணிநேரம் தொடருமாம்” யாரோ இருவர் குடை பிடித்த வண்ணம் பேசிச்சென்றது இவர் காதிலும் விழுந்தது.

கனத்த மழையினால் சாலை முழுவதும் சாக்கடை நீரும் கலந்து ஓடிக் கொண்டிருந்ததால் சேறும் சகதியுமாகக் காலை வைக்கவே மிகவும் அருவருப்பாக இருந்தது. 

அதிகமாக ஜனங்கள் நடமாட்டமோ, வாகனங்கள் தொல்லையோ இல்லை. 

ஏற்கனவே ஒருமுறை இதே போன்ற நல்ல மழையில், நடுரோட்டில் குண்டும் குழியுமாகத் தேங்கியிருந்த, மழை நீருக்கு அடியில் இருந்த மாட்டுச்சாணத்தில் காலை வைத்து, அது அப்படியே இவரை வழிக்கி விட்டு, சறுக்கி விழச்செய்ததில், உடம்பெல்லாம் சேறும் சகதியுமாகி, வலது தோள்பட்டை எலும்பு நழுவி. பலநாட்கள் அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், தற்போது மெதுவாக ஊன்றி, அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, இவர் அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதில் உடனே ஏறிக்கொண்டார்.

மணி இப்போதே 6.10 ஆகிவிட்டது. பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் **பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**, ஊரைச்சுற்றிக்கொண்டு, தில்லைநகர் அல்லது உறையூர் வழியாக திருச்சி ஜங்ஷனுக்குப்போக எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ் வண்டி எப்படியும் திருச்சி ஜங்ஷனை விட்டுப் புறப்பட்டு விடக்கூடும்.   திருச்சி டவுன் ஸ்டேஷனில் இந்த வண்டி நிற்காது. மழை வேறு வலுத்துத் தொல்லை கொடுத்து வருகிறது.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவராய், ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார். நேரம் இருப்பதால் பதட்டம் இல்லாமல், 6.40க்குள் அங்கு போய் செளகர்யமாக 6.50க்குள் வண்டியைப்பிடித்து விடலாம் என்று நல்லதொரு முடிவு எடுத்தார்.

ஆட்டோ 6.30 க்கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அடைந்து விட்டது. முகுந்தனுக்கு ஒரு பெரிய நிம்மதி. சூடான காஃபி ஒன்று வாங்கி மழைக்கு இதமாக அருந்தினார். 6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.

“சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்? இந்த ப்ளாட்ஃபார்ம் தானே!” என அங்கிருந்த ஃபோர்டரிடம் வினவினார்.

“என்ன சாமீ! ஊருக்குப் புதுச்சா நீங்க? சென்னைப் பட்டணத்திற்குப்போக ராத்திரி பத்தரை மணிக்குத்தான் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி இருக்கு. பல்லவனுக்குத்தான் போகணும் என்றால் பேசாமப்போய்ப் படுங்க. நாளைக்குக் காலையிலே 6.50 க்குத்தான் அது வரும்” என்றான்.

அழாக்குறையாக இங்கும் அங்கும் திரும்பிய அவர் கண்களில் பட்டது அந்த ரயில்வே கடிகாரம் 19.00 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டியவாறே.ராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரயமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது. 

கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம்.   எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.

ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?

கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.


 

**பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**

திருச்சி டவுனிலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை 
செல்லும் நேர் வழிப்பாதையில் 
போக்குவரத்து முற்றிலும் அடைக்கப்பட்டிருந்த 
ஓரிரு வருடங்களில், இந்தக்கதை எழுதப்பட்டது. 

இப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற 
போக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.  


oooooOooooo

 

 

 


VGK-18 'ஏமாற்றாதே .... ஏமாறாதே’ 

சிறுகதைக்கான

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

நாளை சனி / ஞாயிறு  / திங்களுக்குள்

வெளியிடப்பட உள்ளன.


காணத்தவறாதீர்கள் !


ஒவ்வொரு வாரப் போட்டிகளிலும் 

கலந்துகொள்ள மறவாதீர்கள் !!என்றும் அன்புடன் தங்கள்

கோபு [VGK]


30 comments:

 1. ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாதே..

  முன் ஜாக்கிரதை உணர்வும் அளவுக்கு அதிகமாகப்போய்
  இப்படிப் பாடாய்ப் படுத்திவிட்டதே...!பாவம்தான்...!

  ReplyDelete
 2. அப்பப்பா பாவமே...
  ரெம்பச் சிரமப் பட்டுட்டாரே!
  கதை நன்றாக உள்ளது...
  விமரிசனகாரர்களிற்கு வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 3. ரொம்பப் பாவம். எவ்வளவு அதி ஜாக்கிரதையாக இருந்தும் இப்படி ஆகிவிட்டதே.இப்படியும் நடக்கக் கூடும். நல்லதொரு கதை.கதையாக இருப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வழுக்கிக் கொண்டு செல்லும் எழுத்து நடையில் அடுத்தது அடுத்தது என்று ஆவலைத் தூண்டி அழைத்துச் சென்றதில்
  கதை ஆரம்பித்ததும் தெரியவில்லை; முடிந்ததும் தெரியவில்லை; அத்தனை விறுவிறுப்பு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ரொம்பவும் முன் எச்சரிக்கைதான்
  இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள்
  நன்றி ஐயா

  ReplyDelete
 6. முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் அளவிற்கு மீறினால்...?

  ReplyDelete
 7. முன் எச்சரிக்கை அருமை

  எல்லா நேரங்களிலும் முன் எச்சரிக்கை பின் நோக்கி சொல்வதற்கு முன் கோபம் தான்

  கதை சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா.....அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

  மதிய தூக்கம் பழக்கமில்லாத எனக்கு எப்போதேனும் அப்படி தூங்கிபோயவிட்டால் சில சமயம் அதிகாலை நேரமாகவே தோன்றும். சாயும் காலம் வெளிச்சத்தை பார்த்துவிட்டு, சட்டென எழுந்து அடடா! இவ்ளோ நேரமா தூங்கிவிட்டோம்?! காபி போடணும், சிற்றுண்டி பண்ணனும், மதிய உணவு தப்ப பண்ணனும் என்று பல்விளக்க செல்லும்போது (அ) பல் விளக்கியடும்தான் ஞாபகம் வரும், அட இது சாயும் காலமாயிற்றே என்று!

  ReplyDelete
 9. ஸார்........ப்ரமாதம் போங்கோ....இந்த மாதிரி நகைச்சுவை ததும்ப சிறுகதை எழுதறுதில உங்கள விட்டா ஆள் கிடையாது

  ReplyDelete
 10. நல்ல வேளையா அப்படி எல்லாம் மெய்ம்மறந்து தூக்கம் வந்தது இல்லை. ராத்திரி கூட! தூக்கமே குறைச்சல் தான் எப்போவுமே! அதிலும் காலை பல்லவன் பிடிக்கணும்னா ரொம்பவே ஜாக்கிரதையா இருப்பேன். :))) மு.ஜா, மு, அக்காவாக்கும் நான்! :)

  ReplyDelete
 11. ஹாஹாஹா! நல்ல முன்னெச்சரிக்கைதான்!

  ReplyDelete
 12. மிகவும் சுவாரசியம் நிறைந்த கதையும் சுறுசுறுப்பான எழுத்துநடையும். வாசிக்கும்போதே காட்சிகளைக் கண்முன் கொணர்கிறது. அருமை கோபு சார்.

  ReplyDelete
 13. சுவாரஸ்யம்...... ரொம்பவே ஜாக்கிரதையா இருந்து கோட்டை விட்டுட்டாரே..... :)

  போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. முன்னெச்சரிக்கையா மனைவி கூடவே ஊருக்குப் போய் இருந்திருக்கலாம்..பாவம்..முன்னெச்சரிக்கையாக பாதி நாள் அலுவலகத்துக்கு டொக்கு போட்டு வீட்டில் பகல் தூக்கம் போட்டு வந்தால் ஸ்ரீரங்கத்தார் சும்மா விடுவாரா.. முகுந்தா ஏன் முகுந்தா இப்பிடி ...சாயங்காலம் பல் தேய்க்கும் போது ஒரு மாதிரியா இல்ல..என்ன முநீச்சரிக்கையோ போங்க..ஒரு அலாரம் கூடவா இல்ல...

  ReplyDelete
 15. Ananthasayanam T June 5, 2014 at 7:30 AM

  வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

  //முன்னெச்சரிக்கையா மனைவி கூடவே ஊருக்குப் போய் இருந்திருக்கலாம்..பாவம்.//

  அதானே ! ;) இவரிடமிருந்து தப்பிக்கவே இவர் மனைவி முன்னெச்சரிக்கையா முன்கூட்டியே ஒருவேளை சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றிருப்பாரோ ? ;)))))

  //முன்னெச்சரிக்கையாக பாதி நாள் அலுவலகத்துக்கு டொக்கு போட்டு வீட்டில் பகல் தூக்கம் போட்டு வந்தால் ஸ்ரீரங்கத்தார் சும்மா விடுவாரா..//

  விடவே மாட்டார். அன்றாடம் அலுவலகத்தில் டொக்கு அடிப்பவர்களை ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள் பெயர்கொண்ட உயர் அதிகாரி கிடிக்கிப்பிடி போட்டு வருவதாக கேள்விப்படுகிறோம். ;)

  //முகுந்தா ஏன் முகுந்தா இப்பிடி ...சாயங்காலம் பல் தேய்க்கும் போது ஒரு மாதிரியா இல்ல..//

  பல்லைப்பராமரிப்பதிலும் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்குமோ ! ;))))) தினமும் பலவேளை பல் தேய்ப்பவராக இருப்பாரோ ! ;)))))

  //என்ன முன்னெச்சரிக்கையோ போங்க..ஒரு அலாரம் கூடவா இல்ல...//

  அதானே ! அலாரம் வைத்திருப்பார் என நினைக்கிறேன். அலாரம் வைத்தோமா இல்லையா என ஓர் சந்தேகம், அது அடிக்குமோ அடிக்காதோ என ஒரு சந்தேகம். அடிக்கும் அலாரத்தை நாம் கேட்டோமோ இல்லையோ என்ற ஒரு சந்தேகம்,.. போன்ற பல சந்தேகங்கள் இவரின் தற்போதைய ஞாபக மறதியால் வந்திருக்கலாம்.

  அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

  என்றும் பிரியமுள்ள VGK

  ReplyDelete
 16. முன்னெச்சரிகை முகுந்தன் இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்து....கோட்டை விட்டுவிட்டார். பாவம் மழையில் நனைந்து, அதற்கு சூடா காப்பி குடித்து விட்டு .......விட்டுக்கு போயிட்டார்.

  கதை விறுவிறுப்பாக...கண்முன் காட்சியாக விரிந்து செல்கிறது. ரசித்து வாசித்தேன் சார். வலைச்சர பணிச்சுமையால்...காலதாமதம் ஆகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri February 8, 2015 at 12:13 AM

   வாங்கோ, வணக்கம்.

   //முன்னெச்சரிகை முகுந்தன் இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்து....கோட்டை விட்டுவிட்டார். பாவம் மழையில் நனைந்து, அதற்கு சூடா காப்பி குடித்து விட்டு .......வீட்டுக்கு போயிட்டார். //

   :)))))

   //கதை விறுவிறுப்பாக...கண்முன் காட்சியாக விரிந்து செல்கிறது. ரசித்து வாசித்தேன் சார்.//

   சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //வலைச்சர பணிச்சுமையால்...காலதாமதம் ஆகி விட்டது.//

   அதனால் என்ன ..... பரவாயில்லை, மேடம். Thank you !

   அன்புடன் VGK

   Delete
 17. நானும் சில சமயங்களில் இந்த மாதிரி பகல் தூக்கம் கலைந்து விழித்த பிறகு எங்கே வெளிச்சத்தைக் காணோம் என்று விழித்தது உண்டு.

  ReplyDelete
 18. கதை நல்ல சுவாரசியமா இருக்கு.

  ReplyDelete
 19. ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருக்கறவங்க எங்கயாவது கோட்டை விட்டுடுவாங்க.

  எனக்கு ஒரு அதிகாரி இருந்தார். அவரை மாதிரி ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவை யாரும் பார்த்திருக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் தன் மடிக் கணினியை கோட்டை விட்டு விட்டார்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya October 15, 2015 at 1:50 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருக்கறவங்க எங்கயாவது கோட்டை விட்டுடுவாங்க. //

   கரெக்ட்டூஊஊஊ ! :)

   //எனக்கு ஒரு அதிகாரி இருந்தார். அவரை மாதிரி ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவை யாரும் பார்த்திருக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் தன் மடிக் கணினியை கோட்டை விட்டு விட்டார்.//

   மடிக் கணினி தன் மடியிலேயே இருப்பது தெரியாமல், கோட்டை விட்டுவிட்டதாக நினைத்து ஒருவேளை நெடுகத் தேடியிருப்பாரோ என்னவோ ?

   ’மடி’க் கணினி போல ’விழுப்பு’க் கணினி என ஏதும் உண்டா ஜெயா ? :)

   இவனுக்கு ‘மடித்து வைத்தால் மடி.... விழுத்துப்போட்டால் விழுப்பு’ என என் அப்பா என்னை என் சிறு வயதில் திட்டியுள்ளார், ஜெ. :))

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
  2. நல்லா ஆளுதா. அதுக்குதா பகல்ல ஒறங்கிட கூடாது. பகல் கனவும் வந்து அமுதா பாட்டி வந்துகிடும் ரயிலயும் மொதக நாளுக்கே போயி காத்திருக்கோணும்.

   Delete
 20. முன்னெச்சரிக்கை முகுந்தன்கள் வீட்டிற்கு ஒருவராவது இருப்பாங்கபோல. நல்ல நகைச்சுவையான கதை.

  ReplyDelete
 21. ரொம்ப முன்னெச்சரிக்கை பேர்வழிகள் சிலர் இப்படித்தான் ஆகிடுறாங்க. சுவாரசியமான கதை.

  ReplyDelete
 22. Even elixir is poison if it is in excess” என்பது எவ்வளவு உண்மையாகிறது. அளவில் மிகுந்தால் அமுதமும் நஞ்சாகும்.ஒரே ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி கதையைப் பின்னி, நகைச்சுவை கலந்து, அளவுக்கு மிஞ்சிய முன்னெச்சரிக்கை அவசியமில்லாதது என்றுணர்த்த முற்பட்ட ஆசிரியருக்கு என் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 23. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 84

  அதற்கான இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html

  ReplyDelete
 24. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 25. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 10.06.2021

  முன்னெச்சரிக்கை இருக்க வேண்டியதுதான் அதற்கென்று முன் முன் எச்சரிக்கையாக இருப்பதாக எண்ணி ஏமாந்த சிலரை அறிவேன்.

  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

  ReplyDelete