என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-8

நிறைவுப் பகுதி

^புதுப்பித்தலுக்குப் பிறகு
04.04.1997 அன்று கும்பாபிஷேக நடைபெற்ற, 
மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி 
அவர்களின் சமாதி
நமணசமுத்திரம் - புதுக்கோட்டை மாவட்டம்^ 



திருச்சி அரியமங்கலம் என்ற பகுதியில், மிகவும் புகழ்பெற்ற, பழமையான சேஷசாயீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்விக்கூடம் உள்ளது. அங்கு சமீபத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திரு. சுந்தரம், திரு அனந்த நரசிம்மாச்சார் போன்ற பேரறிஞர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும், முதல்வர்களாகவும் இருந்து வந்தனர். 

அதில் சுந்தரம் சற்றே வயதில் மூத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் திருச்சி மாவட்ட PRODUCTIVITY COUNCIL இல் உறுப்பினராகவும், தலைவராகவும்கூட இருந்தவர். 

இந்த சுந்தரம் என்பவரை, சில சமயங்களில், சில வகுப்புகள் எடுக்கவும், Special Lectures கொடுக்கவும், எங்கள் நிறுவனமான  BHEL Training Centre மூலம் அழைக்கப்படும் வழக்கம் உண்டு. 

ஒருதடவை 1985-86 என்று ஞாபகம் .... ’Production and Productivity’ பற்றி அவர் எடுத்த வகுப்புக்கு, நானும் என் இலாகா மூலம் அனுப்பப்பட்டிருந்தேன். அப்போது அவர் ’உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன்’ பற்றி விளக்கும்போது, ஓர் மிகச்சிறிய கதை சொன்னார். அதாவது, வீட்டில் வளர்க்கப்படும் ஓர் பசுமாடு, அதற்கான தீனிகளான வைக்கோல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, குடிநீர், அதனைத் தினமும் குளிப்பாட்டி நிழலில், காற்றோட்டமாகப் பராமரித்தல் + தேவைப்படும்போது அதற்கான  மருத்துவச் செலவுகள்  என தினமும் ரூ. 500 செலவாகிறது. அதன் மூலம் உற்பத்தியாகும் பால், சாணம் முதலியவற்றின் மூலம் தினசரி ரூ. 350 மட்டுமே, வருமானம் கிடைக்கிறது. அப்படியானால் இதில் உற்பத்தி என்பது உள்ளது; எனினும் உற்பத்தித்திறன் என்பது சுத்தமாக இல்லை என்றும்,  PRODUCTIVITY என்றால் MORE OUTPUT WITH LESS INPUT  என ஒரு பசுமாட்டை ஒப்பிட்டு அவர் அன்று சொல்லித்தந்த உதாரணம், இன்றும் என் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்துள்ளது.

அவர், அந்தத் தன் வகுப்பில், திடீரென்று எங்களையெல்லாம் பார்த்து, ”இந்த நிறுவனத்தில் Dr. VGK என்று ஓர் அதிகாரி உள்ளாரே, அவரை உங்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? தெரிந்தவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்” என்றார். அந்த வகுப்பில் நான் உள்பட பாதிபேர்கள் கையைத் தூக்கினோம். 

“பொதுவாக மனிதர்களாகிய நமக்கு தலையில் மட்டுமே ஓர் சிறுபகுதியில் மூளை என்று ஒன்று இருக்கிறது. ஆனால் உங்கள் நிறுவனத்தின் அந்த அதிகாரி Dr. VGK அவர்களுக்கு, எனக்குத் தெரிந்து உடம்பு பூராவுமே மூளை உள்ளது. அவர் மஹா கெட்டிக்காரர்” எனப் பாராட்டிப் பேசினார். அவர் சொன்ன அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

எனக்கிருந்த ஏதோவொரு தயக்கம் மற்றும் சங்கோஜத்தால், நான் இந்த சம்பவத்தை, அன்று Dr. VGK அவர்களிடம் போய் நேரில் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. இங்கு இந்தப் பதிவினில் எனக்கோர் வாய்ப்புக்கிடைத்துள்ளதால் இப்போது பகிர்ந்து கொண்டுள்ளேன். 

 

பக்கம் எண்: 269 to 277 இல் ’5.5 ஆங்கிலேயர் ஆட்சியின் நன்மைகளும் தீமைகளும்’  என்ற தலைப்பினில் Dr. VGK அவர்கள் தனது நூலில் எழுதியிருப்பவை சிந்திக்கத்தகுந்த மிகவும் சிறப்பானவைகளாக உள்ளன.

பக்கம் எண்: 278 to 301 இல் உள்ள மூன்று பகுதிகளும் படித்து முடிக்கும் போது என் கண்கள் கலங்கின. எப்பேர்ப்பட்டதொரு உயர்ந்த மஹானின் வழித்தோன்றலாக நம் Dr. VGK அவர்கள் இன்றும் திகழ்ந்து, மிகக் கடுமையாக உழைத்து வருகிறார் என்பதை நினைத்துப் பார்த்து வியந்து மகிழ்கிறேன். 

பன்னிரண்டு குழந்தைகள் பெற்று, அபார சம்சாரியாக வாழ்ந்து, பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என பலரையும் பார்த்து, சதாபிஷேகம் உள்பட செய்துகொண்டு மிகச்சிறப்பான இல்வாழ்க்கை வாழ்ந்துள்ள மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்கள்,  தன் இறப்புக்கு சில நாட்கள் முன்னதாக ஆபத்சந்நியாசம் வாங்கிக்கொண்டவர். அவர் தனது பிற்கால வாரிசுகளில் ’குலபூஷணம் கோபாலகிருஷ்ணன்’ என்று ஒருவன் மஹா அறிஞனானப் புகழ்பெற்றுத் திகழ்வான், எனச் சொல்லியுள்ளதும், அதன்படியே Dr. VGK அவர்கள் தோன்றி இந்த நூல் வெளியீடு உள்பட பல்வேறு சாதனைகள் செய்துவருவதும் பற்றி நினைக்க மிகவும் பெருமையாக உள்ளது.  

Dr. VGK அவர்களால் வெளியிடப்பட்டுள்ள  ‘காவிரிக்கரையில் வாழ்ந்த மகான்களும், மன்னர்களும்’  என்ற தலைப்பிலான இந்த நூல் ஒரு நூற்றாண்டைப்பற்றிய சரித்திரத்தைக்கூறும் மாபெரும் சமுத்திரமாக விளங்குகிறது.  வரலாற்று நூல் என்ற அலுப்பு ஏதும் வாசகர்களுக்கு எற்படாத வண்ணம், மிகவும் கவனமாக, ஓர் சிறுகதைத் தொகுப்பு நூல் போல அழகாக, சிறுசிறு பகுதிகளாக பிரித்து வெவ்வேறு தகவல்களைத் திரட்டி,  மிகவும் சுவையாக எழுதியுள்ளார்கள்

இந்த நூலை நான் முழுவதுமாக, ரஸித்து, ருசித்துப் படித்து முடித்து விட்டிருப்பினும், நான் தங்களுடன் இந்த நூலைப்பற்றி சிலாகித்துப் பகிர்ந்துகொண்டுள்ள விஷயங்கள் JUST ONE PERCENT க்கும் குறைவாக மட்டுமே இருக்கக்கூடும்.  இது Dr. VGK அவர்களால் வெளியிடப்பட்டுள்ள முதல் தமிழ் நூல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதற்காக அவரை அடியேன் மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன்.   


சற்றே கொஞ்சம் எழுத்துத் திறமை வாய்க்கப்பெற்ற ஓர் எழுத்தாளருக்கு, உடனே ஒரிரு நூல்கள் வெளியிட வேண்டும் என்ற ஒரு ஆவல், மனதில் ஏற்படுவது மிகவும் இயற்கையே. அவர் ஒருவேளை சும்மா இருந்தாலும்கூட, கூடவே உள்ள எழுத்தாளர்கள் அவரைத் தூண்டிவிட்டு, நூல் வெளியிட வைப்பதும் உண்டு. ’யாம் பெற்ற இன்பம் அல்லது துன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நல்லதொரு சிந்தனையே இதற்கான முக்கியமான காரணமாகும்.  :)

பொதுவாக, பெரும்பாலான எழுத்தாளர்கள், இந்தத் தங்கள், நூல் வெளியிடும் முயற்சியால், தங்கள் கைப்பணத்தில் பெருமளவு நஷ்டம் ஆகும் என நன்கு தெரிந்திருந்தும்கூட, ஏதோவொரு பெருமைக்காக, விடா முயற்சிகளுடன் தொடர்ந்து, இந்த நூல் வெளியீடுகளில் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே இலாபம் : ‘ஆத்ம திருப்தி’ என்பது மட்டுமே. சிலருக்கு ‘புத்திக்கொள்முதல்’ என்பதும் போனஸாகக் கிடைக்கக்கூடும். இவை யாவும் என்னுடைய சொந்தக்கருத்துக்கள் மட்டுமே.

Dr. VGK அவர்களும் தனது நூலில், இந்த நூல் வெளியீடுகளில் அவருக்கு இதுவரை ஏற்பட்டுள்ள சொந்த அனுபவங்களைத் துளியும் ஒளிக்காமல், மனம் திறந்து, வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். படித்ததும் நானே மிகவும் வியந்து போனேன். 

தன் வாழ்நாள் முடிவதற்குள், மேலும் ஒருசில ஸத்கார்யங்களையாவது செய்ய வேண்டி, தனக்குள் சங்கல்பித்துக்கொண்டுள்ளார்கள் Dr. VGK அவர்கள். அவைகள் யாவும் வெற்றிகரமாக நிகழ்ந்து, அவர் மேலும் பல்லாண்டுகள் இதே எழுச்சியுடனும், தேக ஆரோக்யத்துடனும், புகழுடனும் வாழ, எல்லாம்வல்ல  இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.
     


நூல் வாசிப்பு அனுபவமும், இதுபோன்ற மகான்கள் பற்றிய சரித்திரங்களில் ஆர்வமும், ருசியும் உள்ள அனைவரும், இந்தப் பொக்கிஷமான நூலை வாங்கிப் படித்து மகிழலாம். மிகவும் மலிவான சலுகை விலையில், நமக்கு மட்டுமே இப்போது கிடைக்க இருக்கும்,  இந்த விலைமதிப்பில்லாத நூலை, நாம் விலைக்கு வாங்கி பிறருக்கு அன்பளிப்பாகவும் வழங்கலாம்.     

இந்த நூலை, இந்தியாவுக்குள், பதிவுத்தபால் மூலம்,  பெற விருப்பமுள்ளவர்கள், பிரதி ஒன்றுக்கு ரூ. 250 வீதம் கணக்கிட்டு கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும். 

NAME OF ACCOUNT HOLDER:    R. LALITHA

ACCOUNT NUMBER:                        8 3 0 6 0 3 5 8 3

NAME OF BANK :                              INDIAN BANK

BRANCH NAME:                                 THILLAINAGAR, TIRUCHIRAPALLI

IFS CODE:                                            I D I B 0 0 0 T 0 1 7 

Remarks:                                                GOPU-BLOG

பணம் அனுப்பியபின், மின்னஞ்சல் மூலம் கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

AMOUNT SENT Rs. ______

DATE OF REMITTANCE: _____________

NAME in CAPITAL letters: _____________________

COMPLETE POSTAL ADDRESS (WITHIN INDIA)
WITH PIN CODE NUMBER:  

MOBILE NUMBER: 

NUMBER OF TAMIL BOOKS REQUIRED:      ______

NUMBER OF ENGLISH BOOKS REQUIRED: ______

To 
Mr. VIVEKANANDAN - Mobile: 98424 83034
MAIL ID :  vivekbanu@gmail.com

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
Copy of mail may please be forwarded to 
1) gopalakrishnan.vgk@gmail.com
2) valambal@gmail.com
also for follow-up and quick dispatch

[The books will be dispatched by “Registered Book Parcel”
The postal charges will be borne by the publisher for Indian buyers.]

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


வாசகர்களாகிய உங்கள் காட்டில் இனி நல்ல மழைதான்


  

இத்துடன் இந்தத் தொடர் இனிதே நிறைவடைகிறது.

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]



வெள்ளி, 13 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7




Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் 
3.1 ஷாஜியின் அரசாட்சி, 
3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், 
3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்கிறார், 
3.4 ஸ்ரீதர வெங்கடேசரின் கடைசி நாட்கள், 
3.5 அபிராமி பட்டருடன் சரபோஜியின் சந்திப்பு,  
3.6 தாயுமான ஸ்வாமியும் ராணி மீனாக்ஷியும், 
3.7 நாயக்க ராஜ்யத்தின் முடிவு. 
இதன் கொசுறுப் பகுதி: ’வெங்கட்ராமனும் நானும்’.

நூலின் நான்காம் பாகத்தில் 
4.1 ஆற்காடு ஹைதராபாத் அரியணைகள், 
4.2 தொண்டைமானும் இரண்டு மகான்களும், 
4.3 சதாசிவர் சம்பந்தப்பட்ட கோயில்கள், 
4.4  விட்டுப்போன மகான்கள், 
4.5  சாஸ்திரியின் குழப்பமும் முடிவும், 
4.6 அக்காலத்திய இசை மேதைகள், 
4.7 அக்காலத்திய இலக்கிய வளர்ச்சி. 
இதன் கொசுறுப் பகுதி: சாஸ்திரியின் அதிஷ்டானம் (சமாதி) புதுப்பிக்கப்பட்டது.

நூலின் ஐந்தாம் பாகத்தில் 
5.1 சதாசிவ பிரம்மேந்திரரின் மகா சமாதி, 
5.2 சாஸ்திரியின் புதிய அவதாரம், 
5.3 மைசூரின் எழுச்சி, 
5.4 திருவாங்கூர் ஒரு புதிய அரசின் உதயம், 
5.5 ஆங்கிலேயர் ஆட்சியின் நன்மைகளும் தீமைகளும், 
5.6 சாப்தீக சிந்தாமணி எனும் புதிய மஹா பாஷ்யம், 
5.7 சாஸ்திரியின் மகா சமாதி. 
இதன் கொசுறுப் பகுதி ‘பழைய படைப்புகள் - புதிய வாழ்க்கை’

’5.2 சாஸ்திரியின் புதிய அவதாரம்’ என்ற பகுதியில் புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்கள், மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்களை, தனது ராஜகுருவாக ஏற்று, மிகவும் வற்புறுத்தி, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு வரவழைத்துக்கொள்கிறார். இதற்கு மூல காரணமாக இருந்தது, ’சதாசிவ பிரம்மேந்திராள்’ அவர்கள் அந்த அரசருக்கு, தன்னுடன் படித்த மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்களின் அருமை பெருமைகள் மற்றும் பாண்டித்யம் பற்றி  எடுத்துச் சொன்ன அறிவுரைகள் மட்டுமே ஆகும். 

ஒரு மஹானின் பாண்டித்யம் + சிறப்புகள், ஒரு நல்ல மன்னரால், எவ்வாறெல்லாம் சிறப்பித்து கெளரவிக்கப்பட்டன என்பதை Dr. VGK அவர்களின் இந்த நூலில் படிக்கும்போதே, மிகவும் சந்தோஷமாக உணர முடிகிறது. 

Dr. VGK அவர்கள், அவரின் இந்த நூலில், தன் முடிவுரையாக எழுதியுள்ளதை  அப்படியே முழுவதுமாக இங்கு கொடுக்க நினைக்கிறேன்.

வரலாற்றுக்கென்றும் முடிவில்லை. ஆனால் வரலாற்று நூலுக்கு ஒரு முடிவு தேவை. கோபாலகிருஷ்ண சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன், ஸ்ரீதர வெங்கடேசன் ஆகியோரின் பிறப்புடன் துவங்கிய  இந்நூலை அவர்களின் இறப்புடன் முடிப்பது ஒரு வகையில் பொருத்தமே. ஆனால் இந்நூலை முடிப்பதற்கு முன் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

(உதாரணம்) ”தமிழ்நாடு இந்த மன்னர்களையும், மகான்களையும் இன்னும் நினைவில் வைத்திருக்கிறதா, அல்லது எப்போதோ மறந்து விட்டதா? தமிழ்நாட்டின் வரலாற்று நூல்களில் இவர்களுக்கு ஒரு முக்கிய நிரந்தர இடம் உண்டா?”

இதற்கு தெளிவான பதில் ... “இல்லை, இல்லை” என்பதுதான்.  நமது வரலாற்று நூல்களில் கிளைவ் போன்ற சில வெளிநாட்டுப் போக்கிரிகளுக்குக் கிடைக்கும் கவனம், பல உள்நாட்டு அரசர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், மகான்கள் ஆகியோருக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு வருந்தத்தக்க உண்மை. ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

பள்ளி மாணவர்கள் பயிலும் வரலாற்று நூல்களில், இன்னமும் சந்தாசாகிப், முகமது அலி, ராபர்ட் க்ளைவ், டூப்ளே ஆகியோர் பற்றிய விபரங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் ஷாஜி, சொக்கநாத நாயக்கர், ராணி மீனாக்ஷி ஆகியோர் பற்றிய விபரங்களைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்.

கட்டபொம்மனுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது. அவரைப் பிடித்துக்கொடுத்த தொண்டைமான் துரோகியாகக் காட்டப்படுகிறார். ஆனால் சந்தாசாகிப் ராணி மீனாக்ஷிக்கு செய்த கொடுமை பற்றி பேசுவார் இல்லை. அரசர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படும்போது, அவர்களின் கீழ் பணிபுரிந்த ஸ்ரீதரன், தாயுமானவர், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு வரலாற்றில் இடம் ஏது?

சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மகான்களைப்பற்றி மதசார்பற்ற நாட்டின் நூல்களில் குறிப்பிட முடியாது. குறைந்தது திருவிசைநல்லூர் திட்டம் பற்றி ஏதாவது சொல்லலாம். ஆனால் அதுவும் புறக்கணிக்கப்பட்ட ஒன்று. நம்முடைய மகான்களை நாம் ஏன் இன்னும் புறக்கணிக்கிறோம்? நம்மை இன்னும் விடாத அடிமை வாழ்வின் தாக்கமா அல்லது இந்து மதம் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையா?

கடந்த கால மன்னர்களையும் மகான்களையும் பற்றி பொதுமக்களுக்கு எப்படி நினைவுறுத்தலாம்? தஞ்சாவூர் அரண்மனை, செஞ்சிக்கோட்டை போன்ற சில வரலாற்றுச் சின்னங்கள் நம் கடந்த காலத்தின் அடையாளங்கள். அவை இன்னும் அப்படியே உள்ளன. எனினும் அவைகள் தமிழ்நாட்டின் தலை சிறந்த சுற்றுலா ஸ்தலங்கள் வரிசையில் வருவதில்லை.  அதாவது அதிக மக்கள் அவைகளைச் சென்று பார்ப்பதில்லை.

மகான்களைப் பொறுத்தவரை அவர்களது சமாதிகளே, மக்களுக்கு அவர்களை நினைவூட்டுகின்றன. நெரூரில் உள்ள சதாசிவர் சமாதி, கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரர் சமாதி,  நமண சமுத்திரத்தில் உள்ள கோபாலகிருஷ்ணர் சமாதி, ராமநாதபுரத்தில் உள்ள தாயுமானவர் சமாதி, திருப்பூந்துருத்தியில் உள்ள நாராயண தீர்த்தர் சமாதி ஆகியன இன்னும் பக்தர்களை ஈர்க்கின்றன. திருவிசை நல்லூரில் உள்ள ஸ்ரீதரனின் வீடும், பாஸ்கர ராயர் கட்டியுள்ள கோயில்களும் இநத வரிசையில் சேரும். 

இந்தப்பட்டியலில் அபிராமி பட்டர் மட்டுமே இல்லை.  இறக்கும் வரை அவர் இல்லறத்தில் இருந்தபடியால், அவரது உடல் தீயிலிடப்பட்டு விட்டது. ஒரு சமாதியில் அடக்கம் செய்யப்படவில்லை. கோயில்களையோ அல்லது நினைவுச் சின்னங்களையோ கட்டும் அளவுக்கு அவர் பணக்காரரும் இல்லை. இருப்பினும் திருக்கடையூர் கோயிலும், அபிராமி அந்தாதியும் அவரை நமக்கு என்றும் நினைவுப் படுத்துகின்றன.

தாயுமானவரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனி இடத்தை வகிக்கின்றன. மற்றவர்களின் படைப்புகள் சமஸ்கிருதத்தில் உள்ளதால் அவற்றை சிலரால் மட்டுமே படிக்க முடிகிறது.

சில காலமாக மேலை நாட்டுக் கல்வியாளர்களின் கவனத்தை பாணினி கவர்ந்துள்ளார். ஆனால் அந்தக் கவனம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி வரை வரவில்லை. நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) போன்ற இன்றைய மொழியியலாளர்கள் (Linguists), ஆக்கவியல் இலக்கணத்திற்குப் (Generative Grammer) பாணினியே தந்தை எனக் கருதுகிறார்கள். கணினி அறிவியலுக்கு (Computer Science) அது மிகவும் தேவையான ஒன்று. ஆனால் நோம் சோம்ஸ்கி சொல்லித்தான் பாணினியின் பெருமை நமக்குத் தெரிய வேண்டி இருப்பது நம் தலைவிதி. இந்தியாவில் சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்குக் கணினி பற்றித் தெரியாது. கணினி அறிவியலாளர்களுக்குச் சமஸ்கிருதம் தெரியாது. 

பாணினி, “மறுசுழற்சி” (Recursion), "உருவ மாற்றம்” (Transformation), "மெட்டா விதிகள்” (Meta Rules) உள்ளிட்ட பல "முறைசார் நுட்பங்களை" (Formal Techniques),  தனது நூலில் பயன் படுத்தியுள்ளார்.   ஒரு புதிய கண்டுபிடிப்பிற்குப் “பாணினியின் தேற்றம்” (Panini's Theorem) என்று மேலை நாட்டவர் பெயரிட்டுள்ளனர்.

பிற மொழிகளுக்கான பாணினி வகை இலக்கணங்களை உருவாக்கும் முயற்சிகளும் நடைமுறையில் உள்ளன. கணினி அறிவியலைச் சேர்ந்த “ஃபார்மல் லாங்குவேஜஸ் அண்ட் ஆட்டோமேடா” (Formal Languages and Automata) என்ற துறையிலும் "செயற்கை அறிவு"  (Artificial Intelligence) என்ற துறையின் கீழ்வரும் “உருவமைப்பு” (Knowledge Representation) என்ற துறையிலும், பாணினியின் பங்களிப்புகள் ஏராளம். “கணினி அறிவியலுக்கு உபயோகமான பல அரிய கருத்துகள் அஷ்டாத்யாயியில் புதைந்து கிடக்கின்றன என்கிறார் பேராசிரியர் ஃபியூரியோ ஹோன்செல் (Prof. Furio Honsell). கணினி அறிவியலின் நவீன கம்பைலகர்கள் (Compilers) பாணினி சொன்ன யுக்திகளை ஒட்டி உள்ளன.    

”அஷ்டாத்யாயி”யை இந்தியர்கள் ஆழ்ந்து படித்து, அதன் பொக்கிஷங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்குமுன், பட்டோஜி தீக்ஷிதரும், கோபாலகிருஷ்ண சாஸ்திரியும் எழுதிய அதன் உரைகளை, ஒரு மறு ஆய்வு செய்வது அவசியமாகும். அஷ்டாத்யாயின் சில சூத்திரங்களில் மட்டுமே தங்கள் கவனத்தை இவர்கள் ஏன் செலுத்தினர் என்பது இன்றுவரை விளக்கப்படாத புதிராக உள்ளது. ஒருவேளை, மீதமுள்ள சூத்திரங்களைவிட அவை “ஃபார்மல் லாங்குவேஜஸ்” படிப்பிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்குமோ? நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும். 

எனவே பட்டோஜி தீக்ஷிதரும், கோபாலகிருஷ்ண சாஸ்திரியும் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.


oooooooooOooooooooo  


தொடரும் ...
   
[இதற்கு அடுத்த பகுதியான பகுதி-8 உடன் எனது இந்த சிறிய தொடர் நிறைவடைய உள்ளது]



என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

புதன், 11 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6



Dr. VGK அவர்களின் இந்த ஒப்பற்ற நூல் ஐந்து பெரிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. பாகம்-1 இல் 1.1 பிக்ஷாண்டார் கோயில், 1.2 திருவானைக் கோயில், 1.3 ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வந்தவர், 1.4 கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வந்தவர், 1.5 மகாராஷ்ட்ரத்திலிருந்து தமிழ்நாடு வந்தவர், 1.6 கண்டர மாணிக்கத்து ராமபத்ர தீக்ஷிதர், 1.7 கோபாலனின் திருவிசைநல்லூர் பயணம், என ஏழு தலைப்புகளில் உப பிரிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. ‘பாட்டி சொன்ன பழங்கதைகள்’ என்ற தலைப்பில் கொசுறாக சில செய்திகளும் இறுதியில் தனியொரு பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  அது என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

பாகம்-1 உட்பிரிவு-1.1 இல், எடுத்தவுடன் பிக்ஷாண்டார் கோயில் கிராமம் பற்றி ஆரம்பித்துள்ளது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தி மகிழ்வித்து விட்டது. அதனாலேயே, சோம்பேறியான நான், மிகவும் சுறுசுறுப்புடன், ஒருவித எழுச்சியுடன் இந்த நூலை உடனடியாகப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.  

01-05-1972 அன்று, முதன் முதலாக நான் பிக்ஷாண்டார் கோயில் கிராமத்திற்குச் செல்ல நேர்ந்தது. அன்று நான் சென்று வந்த புத்தம்புதிய அம்பாஸீடர் காரின் பதிவு எண்:  MDG 1034. அங்கு அதே நாளில்தான் முதன் முதலாக என்னவளுடன், எனக்கு பெண் பார்க்கும் படலம் இனிதே நடைபெற்று முடிந்தது. அப்போது எனக்கு வயது: 22+, அவளுக்கு வயது: 18+ 
      

அதிலிருந்து ஆரம்பித்து 14.11.1995 வரை பிக்ஷாண்டார்கோயில் கிராமத்துடனான எனது உறவு மிகவும் வலுவாகவே இருந்து வந்தது. இப்போதும் அங்கு போனால், என்னை வரவேற்று, ஊஞ்சலில் அமரச்செய்து, தாகத்திற்கு ஒரு சொம்பு தீர்த்தமாவது கொடுத்து உபசரிக்க, ஒருசில உறவுகள் இன்னும் பெயரளவில் ஒட்டிக்கொண்டுதான் உள்ளனர். 

அப்போது அந்தக்காலக்கட்டத்தில் இருந்த, மிக அமைதியான பிக்ஷாண்டார் கோயில் கிராமத்திற்கும், இன்றைய அதி நவீனமான அதே கிராமத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள வித்யாசங்கள் ஏராளம். அப்படியொரு கிராமம் அடியில் இருப்பதே சுத்தமாகத் தெரியாதபடிக்கு புதிய மேம்பாலம் போட்டுள்ளார்கள். அக்ரஹாரம் செல்லும் வழியில் இருபுறமும் பச்சைப்பசேல் என்று இருந்த நெல் வயல்கள், இப்போது கான்கிரீட் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள் என அடியோடு மாறிப்போய் உள்ளன. 

எனக்கு 03.07.1972 இல் திருமணம் நடைபெற்றதும், இதே பிக்ஷாண்டார்கோயில் கிராம அக்ரஹாரத்தில்தான். ஒரு வீட்டின் வாசலில், பெரிய பந்தல் போடப்பட்டு, மிகவும் எளிமையாக, சாஸ்திர சம்ப்ரதாயங்களின்படி, நான்கு நாட்கள் ஒளபாஸனத்துடன் எங்கள் திருமணம் இனிதே நடைபெற்றது.


    
 

மாலை மாற்றிடும் முதல் படத்தில் எங்கள் இருவருக்கும் இடையே, சிரித்த முகத்துடன் தோன்றுபவர், எனது மனைவியின் சொந்த தாய் மாமாவும், எனது சொந்த அத்தை பிள்ளையும், ஆன ‘ஆங்கரை பெரியவா’ என அன்புடன் அழைக்கப்பட்ட ஓர் மிகப்பெரிய மஹான் ஆவார். அவருக்கான அதிஷ்டானம், திருச்சி கரூர் மார்க்கத்தில் காவிரிக்கரையின் அருகே பழூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இவரைப்பற்றி 20 சிறுபகுதிகள் கொண்ட ஓர் தொடர் எனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது நினைவில் இருக்கலாம். பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_14.html   

Link to listen my Audio speech in you-tube about this Great Swamigal: https://youtu.be/OoMeuzmdC-k   



அதே பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹாரத்தில் என் மாமியார், மாமனார் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற தைர்யத்தில், 1980-ம் ஆண்டு வாக்கில், 16 அடி அகலம், 200 அடி நீளம் உள்ள, அக்ரஹார பழைய வீட்டை (மேற்கூரை முழுவதும் ஓடுகளால் வேய்ந்த மிகவும் பழமையான வீடு - வீட்டின் ஒருபக்க சுவர் மட்டுமே நமக்குச் சொந்தமாகும்), நான் வாழ்க்கையில் முதன்முதலாக, அசையாச் சொத்தாக வாங்கினேன். மாதம் ரூ. 125 க்கு அதனை வாடகைக்கு விட்டிருந்தேன். வீட்டில் நுழைந்து சுமார் நூறடி தாண்டியதும், அதன் கொல்லைப்புறம் ஆரம்பித்துவிடும். அங்கு வளர்ந்திருந்த 4-5 தென்னை மரங்களிலிருந்து வெகு ஸ்வீட் ஆன இளநீர் கிடைத்துக் கொண்டு இருந்தது. உண்மையிலேயே மிகவும் இனிமையான நாட்கள் அவை.

 

பிறகு என் மாமனார் காலமாகி, மாமியாரும் காலம் ஆவதற்குள், இனி, நான் வாங்கியிருந்த இந்த வீட்டுக்கு Care Taker and Co-ordinator ஆக யாரும் இருக்கப்போவது இல்லை என்ற அச்சத்தினால், 1994-ம் ஆண்டு அந்த வீட்டினை நான் விற்று விட்டேன். 

1980-இல், சுமார் 3200 சதுர அடிகள் கொண்ட அந்த வீட்டை, நான் வாங்கிய விலை ரூ. 35,000 மட்டுமே. 1994 இல் அந்த வீட்டை நான் விற்றவிலை ரூ. 70,000 மட்டுமே.  இன்றைக்கு அதன் தரை மதிப்பு (GROUND VALUE) மட்டுமே ரூ. 70,00,000 (எழுபது லக்ஷங்கள்) ஆகும்.  எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அது எனக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். எல்லாம் நன்மைக்கே. இன்றும் பகவத் க்ருபையால் எனக்குக் குறையொன்றும் இல்லை என்பதை அறிய இதோ சில இணைப்புகள்: 






தர்ம சிந்தனை + பக்தி சிரத்தையுள்ள வெள்ளந்தியான மனிதர்கள் பலர் வாழ்ந்துவந்த மிக அருமையான கிராமம் பிக்ஷாண்டார்கோயில். அங்கு அந்த அக்ரஹாரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் பஜனைகளும், சிவன் கோயிலில் அன்றாட பூஜைகளும் மிகச் சிறப்பாக நடந்து வந்தன. 

திருச்சி, ஆல் இந்தியா ரேடியோவில், தனி ஆவர்த்தனமாக, காளிங்க நர்த்தன இசைச் சொற்பொழிவு நிகழ்த்திய, புகழ் பெற்ற பாலசுப்ரமணிய பாகவதர்; ஜானகிராம பாகவதர், நாராயண பாகவதர், எனது மாமனாரும் தனுர்மாத அதிகாலை உஞ்சவ்ருத்தி பஜனையை தலைமை ஏற்று செய்துவந்தவருமான, வைத்யனாத பாகவதர் போன்ற, பக்திமான்கள் வாழ்ந்து வந்த நல்ல கிராமம் அது. 

’ஈஸம்பலத்தி அம்மன்’ என்பது அங்குள்ள மிகவும் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த கிராம தேவதை ஆகும். கிராம தேவதைக்கான சித்திரைத் தேர் மற்றும் திருநாள் நேரங்களில் ஆண்டுதோறும் ஒருமுறை, இப்போதும் நாங்கள் அங்கு போய் வருவது உண்டு. ஓராண்டு இந்த அம்மனின் திருநாள் சமயம் இந்தக்கோயிலில் வேண்டிக்கொண்டு, பூப்பந்தல் போட்டுவிட்டு வந்தோம்.

பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹார சிவன் கோயில் குருக்களை ஒருநாள் நான் சந்தித்தபோது, ”இந்தக் கோயிலுக்கு அடியேன் ஏதேனும் பொருள் வாங்கித்தரலாமா, அவ்வாறாயின் எந்தப்பொருள் உபயோகமாக இருக்கும்?” என விஜாரித்தேன். கோயிலில் நித்யப்படி பூஜைக்கான மணி, மிகவும் தேய்ந்துவிட்டதாகவும், அதனை வாங்கிக்கொடுத்தால் நல்லது என்றும் என்னிடம் சொன்னார். உடனடியாக திருச்சி மங்கள் அண்ட் மங்கள் கடைக்குப்போய், நல்ல இனிய நாதம் ஒலிக்கும், பெரிய வெங்கல மணி ஒன்று வாங்கி, நித்யப்படி பூஜைக்கு அளிக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தது. 

துர்க்கை அம்மன் இல்லாமல் இருந்த அந்த சிவன் கோயிலில் பிறகு (1990 என ஞாபகம்) ஓர் துர்க்கையை பிரதிஷ்டை செய்தார்கள். அப்போது அந்த ஊர் பெரியவர் ஸ்ரீ ஹாலாஸ்யம் ஐயர் அவர்கள் எனக்கு இட்ட அன்புக் கட்டளைப்படி, அடியேன் காஞ்சீபுரம் சென்று, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் பிரார்த்தித்து, அவர்கள் கையால் தொட்டு ஆசீர்வதித்துக்கொடுத்த ஓர் செம்பு யந்திரத் தகடு வாங்கிவந்து கொடுக்கும் பாக்யமும் எனக்குக் கிடைத்தது. அந்த யந்திரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து அதனைக் கீழே பதித்து அதன் மேல், அந்த சிவன் கோயிலில், துர்க்கையம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். 

பிக்ஷாண்டார் கோயில் அக்ரஹாரத்தில் என் மாமனார்-மாமியார் வீட்டுக்கு அருகே சற்றே நான்கு வீடுகள் முன்பாக, சுமார்  நூறு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஸ்ரீ ஹாலாஸ்யம் ஐயர் + ஜெயலக்ஷ்மி மாமி, என்னால் என்றுமே மறக்க முடியாத, உத்தம தம்பதியினர் ஆகும். அதில் அந்த ஜெயலக்ஷ்மி மாமி (தன் 95 வயதுக்கு மேல் - மூக்குக் கண்ணாடி ஏதும் அணியாமலேயே) என் சிறுகதைத் தொகுப்பு நூல்களை ரசித்துப்படித்து போஸ்ட் கார்ட் மூலம், அவர்கள் கையால் விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தார்கள். For more details, please Refer my Post:  http://gopu1949.blogspot.com/2013/03/3.html

  

பிக்ஷாண்டார்கோயில், திருச்சி நகரத்தை ஒட்டியதோர் அழகிய கிராமம். திருச்சி No. 1 டோல்கேட்க்கு மிக அருகில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. ’உத்தமர் கோயில் இரயில்வே ஸ்டேஷன்’ என்பது, பிக்ஷாண்டார் கோயில் கிராம அக்ரஹாரத்திற்கு வெகு அருகிலேயே உள்ளது. ஏராளமான நகரப் பேருந்து வசதிகளும் உள்ளன.  முக்கொம்பிலிருந்து மூன்றாகப் பிரியும் காவிரி ஆறு, அய்யன் வாய்க்கால் என்ற பெயரில் இந்த கிராமத்தை ஒட்டி ஓடுகிறது. சகல வசதிகளும் நிறைந்த மிகச் செழிப்பானதொரு கிராமம். இங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பினால் 10-15 நிமிடங்களில், ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், திருச்சி டவுன் ஆகிய இடங்களை அடைந்து விடலாம். 

வைணவ 108 திவ்யதேச திருத்தலங்களில் ஒன்றும், மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் சந்நதிகள் உள்ள கோயில் என்ற பெருமையுமுடைய, 'உத்தமர்கோயில்' என்ற திவ்யதேசக் கோயில் இந்த பிக்ஷாண்டார்கோயில் கிராமத்தையொட்டி நடந்துசெல்லும் தூரத்தில் உள்ளது. 108 திவ்ய க்ஷேத்திரங்களில் முதல் ஐந்தான ஸ்ரீரங்கம், உறையூர், உத்தமர்கோயில், திருவெள்ளறை, அன்பில் ஆகிய ஐந்துமே திருச்சி அருகிலேயே உள்ளன என்பது தனிச்சிறப்பாகும். 




திருச்சியிலிருந்து, திருச்சி-சென்னை மார்க்கத்தில், இரயிலில் கிளம்பினால் ஸ்ரீரங்கம் தாண்டியதும், உத்தமர்கோயில் இரயில் நிலையம் உடனே வந்துவிடும். ஸ்ரீரங்கத்திற்கும் உத்தமர் கோயிலுக்கும் இடையே உள்ளது கொள்ளிடம் ஆற்றுப் பாலம் மட்டுமே.


 
  
இந்த உத்தமர்கோயில் இரயில் நிலையத்தில் இறங்கினால், ஐந்தே நிமிடங்களில், நடந்து பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹாரத்தை நாம் அடைந்து விடலாம்.

உத்தமர் கோயில் இரயில் நிலையம் தாண்டிய பிறகு, பிக்ஷாண்டார்கோயில் என்றே ஒரு இரயில் நிலையம் உள்ளது. பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹாரம் போக வேண்டியவர்கள் தப்பித்தவறி கூட அங்கு பிக்ஷாண்டார்கோயில் இரயில் நிலையம் போய் இறங்கிவிடக் கூடாது. அங்கிருந்து இங்கு திரும்பி அக்ரஹாரத்திற்கு வருவது மிகவும் கஷ்டமாகிவிடும். இரயில்வே ஸ்டேஷனுக்கு பெயர் வைப்பதில், அந்தக் காலத்திலேயே, இவ்வாறு ஒரு குழப்பம் ஏற்படுத்தியுள்ளார்கள். Uttamarkoil Railway Station is only the nearest one to Bikshandarkoil Village. Bikshandarkoil Railway Station is situated nearby another Village called Kooththoor. மிகவும் கூத்தாக உள்ளது அல்லவா !

Dr. VGK அவர்கள், இந்தத் தனது நூலில் பிக்ஷாண்டார்கோயிலை ஏன் ஆரம்பத்திலேயே, முதன் முதலாகக் கொண்டு வரவேண்டும் என்ற கேள்விக்கு உடனடியாக விடை கிடைத்தது எனக்கு.  Dr. VGK அவர்களின் மூதாதையர் ஆன மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்களைப் பற்றிய இவரின் பல்வேறு ஆராய்ச்சி + தேடல்களினால் மட்டுமே, இந்த அருமையான நூல் நமக்குக் கிடைத்துள்ளது. மேலும் அந்த மகான் பிறந்து வளர்ந்த  பிக்ஷாண்டார்கோயில் கிராமமும், இதனால் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதாவது 17-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், பிக்ஷாண்டார்கோயில் கிராமத்தில், ஸ்ரீவத்ச கோத்ரத்தைச் சார்ந்த, யஜுர்வேத பண்டிதர் ஒருவர், ’வைத்தியநாத சாஸ்திரி’ என்ற பெயரில் வாழ்ந்துள்ளார்.  அடுத்த தலைமுறையினர்களால் அவர் இன்னும் நினைக்கப்படுவதற்குக் காரணம், அவரது புகழ்பெற்ற மகன் ‘மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி’ என்பவரே. இவர் 1673 வாக்கில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.  அப்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ’கோபாலன்’ என்பது மட்டுமே.  

கோபாலனுக்கு ஐந்து வயதிலேயே அக்ஷராப்யாசம் நடந்து, தன் தந்தையிடமே தமிழ், சமஸ்கிருதம், எண் கணிதம் போன்றவற்றை வீட்டிலேயே கற்கிறார். அதன்பின் எட்டு வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டு, பூணூல் அணிந்துகொண்டு, காயத்ரி மந்திரம் ஜெபித்து வந்துள்ளார்.  இவையெல்லாம் பிக்ஷாண்டார்கோயில் கிராமத்திலேயே நடந்துள்ளன. 

பிறகு திருவானைக்கோயிலில் உள்ள வேத பாடசாலைக்கு வேதம் கற்க, அங்கிருந்த மஹா பண்டிதரான அப்பு சாஸ்திரி என்பவரிடம் அனுப்பி வைக்கப்படுகிறார் கோபாலன். அக்ஷராப்யாசம், உபநயனம், வேதம் கற்றல் போன்ற பல்வேறு சடங்குகள் பற்றி Dr. VGK அவர்கள் தனது நூலில் மிகவும் விஸ்தாரமாகவும், தெளிவாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும், தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்கள்.

-=-=-=-

நூலின் இரண்டாம் பகுதியில் 2.1 கோபாலனுக்குக் கிடைத்த ஆருயிர் நண்பன், 2.2 சிவராமன் சதாசிவ பிரம்மேந்திரர் ஆகிறார், 2.3 போதேந்திரரின் முடிவு, 2.4 கிணற்றில் வந்த கங்கை, 2.5 சுப்ரமணிய கர்ண அமிர்தம், 2.6 சதாசிவர் ஆச்ரமத்தை விட்டு நீங்கினார், 2.7 கோபாலனுக்கு குரு இட்ட பணிகள் ஆகியவை பற்றி விஸ்தாரமாக எழுதப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு கொசுறாக நூலாசிரியர் Dr. VGK அவர்கள் பல்வேறு மகான்களின் சமாதிகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்து ஆராய்ந்தது பற்றிய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அவரின் கடின உழைப்புக்கு நாம் தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.

-=-=-=-

நூலின் மற்ற பகுதிகள் பற்றிய விஷயங்களை மேலும் நாம் தொடர்ந்து பேசுவோம். 



 



தொடரும் ...




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


திங்கள், 9 டிசம்பர், 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-5







Dr. VGK அவர்கள் வெளியிட்டுள்ள இந்த நூலில், அந்தக்காலக் கட்டத்தில் இங்கு தமிழ்நாட்டின் காவிரிக்கரையில் வாழ்ந்த பல்வேறு மகான்கள் பற்றியும், அவர்களை ஆதரித்து, ஆலோசகர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் பக்தி செலுத்தி, இறை நம்பிக்கையுடன், தர்ம சிந்தனைகளுடன், மிகவும் நல்லாட்சி புரிந்த ஒருசில மன்னர்கள் பற்றியும் நிறைய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

மகான்களின் மதிப்புத் தெரியாமல், அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த பல்வேறு மன்னர்கள் / அரசிகள் பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளன. 

மன்னர்களின் பலம், பலகீனம், அடிக்கடி இவர்களுக்குள் ஏற்பட்டு வந்த போர்கள், அதன் வெற்றிகள், தோல்விகள், மன்னர்கள் ஆண்டுவந்த காலக் கட்டம், அவர்களின் இல்வாழ்க்கை, வாரிசுகள், வாரிசுகள் இல்லாத மன்னர்கள், அவர்களில் பலருக்கும் ஏற்பட்ட இறுதி முடிவுகள் என பலவற்றையும், சுவைபட அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார் Dr. VGK. 

பொதுவாக கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில், 1675 முதல் 1752 வரை, தமிழ் நாட்டின் காவிரிக்கரையோரம் வாழ்ந்துள்ள  மன்னர்கள் மற்றும் மகான்கள் பற்றிய பல்வேறு செய்திகள் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

மகான்களில் குறிப்பாக (1) சதாசிவ பிரும்மேந்திராள் [1670-1752]; (2) மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி [1673-1762]; (3) ஸ்ரீதர வெங்கடேசர் அய்யர்வாள் [1635-1720]; (4) போதேந்திர சரஸ்வதி (1610-1692]; (5) நாராயண தீர்த்தர் (1675-1745]; (6) தாயுமானவர் (1707-1742]; (7) அபிராமி பட்டர் [1680-1750;  (8) பாஸ்கர ராயர் [1690-1785] ஆகியோர் பற்றி, மிக விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.

அதுபோல அப்போது ஆண்டுவந்த மன்னர்களில் மேற்படி மகான்கள் சிலருடன் தொடர்பில் இருந்த (1) சொக்கநாத நாயக்கர் (2) ராணி மீனாக்ஷி (3) மதுரை ராணி மங்கம்மாள், (4) ஷாஜி-2 (5) சரபோஜி, (6) விஜயரகுநாத தொண்டைமான் ஆகியோர் பற்றிய பல்வேறு செய்திகளை அறியமுடிகிறது.


 
^மதுரை ராணி மங்கம்மாள்^
^ஷாஜி-II தஞ்சாவூர்^

 கெம்ப கெளடா-1
 பெங்களூர்

தஞ்சை, திருச்சி, மதுரை, ஆற்காடு, செஞ்சி, பெங்களூர், புதுக்கோட்டை, ராமனாதபுரம், சிவகங்கை முதலிய பகுதிகளை ஆண்ட அரசர்களும், மராட்டியர், முகலாயர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் சக்திகளாக அப்போது இருந்துள்ளனர்.

மேற்படி மகான்களைத் தவிர குமரகுருபரர் போன்ற சைவ மட மகான்கள் பலரும், வைணவ, பெளத்த, சமணமதப் பண்டிதர்களும், வீரமா முனிவர் (கிறிஸ்தவர்), இரட்டை மஸ்தான் (இஸ்லாமியர்) போன்ற மகான்களும் அதே காலக்கட்டத்தில் இருந்திருக்கக்கூடும் என அறியப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதரவாளர்களாக பலரும் இருந்துள்ளனர்.  தமிழ்மொழி அப்போது பிரபந்த அளவிலேயே சிற்றிலக்கியமாக இருந்துள்ளது. கம்பர் அல்லது திருவள்ளுவரோடு ஒப்பிடும் அளவுக்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார் நம் நூல் ஆசிரியர் Dr, VGK.

ரகுநாத சேதுபதி-II என்னும் ’கிழவன் சேதுபதி’, மதுரை நாயக்கரின் கீழ், ராமனாதபுரத்தை ஆண்ட [1671-1710] ஒரு குறுநில மன்னன். மறவ மன்னர்களிலேயே சிறந்தவராக இவர் கருதப்படுகிறார். 1616-1682 வாழ்ந்த சொக்கநாத நாயக்கர் இவருக்கு ’பரராஜ கேசரி’ (அன்னிய அரசர்களுக்கு சிங்கம்போல விளங்குபவர்) என்ற பட்டத்தை வழங்கினார். ‘கிழவன் சேதுபதி’ 1707-இல் தன்னை ஒரு சுதந்திர மன்னனாக அறிவித்துக் கொண்டார். 1725-இல் மீண்டும் அது குறுநில நாடாக ஆக்கப்பட்டது. அதனால் சிவகங்கை ஓர் புதிய நாடாக அறிமுகமானது. 

 கிழவன் சேதுபதி

சிறந்த பக்திமானும், திருவாடனை, காளையார் கோயில் போன்றவற்றிற்கு நிறைய நிலங்களைக் கொடையாக அளித்தவரும், ராமநாதபுரத்தில் ஓர் கோட்டையையும், வைகையில் ஓர் அணையையும் கட்டியவரும், கிறிஸ்தவப் பாதிரிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான  ‘கிழவன் சேதுபதி’க்கு மொத்தம் 45 மனைவிகள் இருந்ததாகவும், அதுதவிர ’கதலி’ என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகள் Dr. VGK அவர்களின் நூலின் மூலம் அறிய முடிகிறது. ’கதலி’யின் சகோதரரான ரகுநாதனை புதுக்கோட்டைக்கு மன்னராக்கி ‘தொண்டைமான்’ என்ற பட்டத்தையும் அளித்தார். இவ்வாறு ஒரு புதிய வம்சம் புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ளது. 

’கிழவன் சேதுபதி’ இறந்தபோது அவருடைய 45 மனைவிகளும் உடன்கட்டை ஏறியுள்ளனர் என்கிறார் Dr. VGK. கிழவனின் தத்துப்பிள்ளையான விஜயரகுநாத சேதுபதி (1710-1723) அதன்பின் அரசராகியுள்ளார் என்கிறது இந்த நூல்.

இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பக்கம் பக்கமாக அள்ளித்தந்துள்ளார், Dr. VGK அவர்கள். இயல்பான பேச்சுத்தமிழில், ஆங்காங்கே சிற்சில நகைச்சுவை வரிகளையும் சேர்த்து, ஒரு வரலாற்று நூலைப்படிக்கிறோம் என்ற அலுப்பேதும் ஏற்படாத வண்ணம், அழகாக ஓர் கதை போலச் சொல்லிச் செல்வது, படித்து மகிழ பேரின்பம் தருவதாக உள்ளது.

தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சாம்பாருக்கு ‘சாம்பார்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பக்கம் எண்: 136 இன் இறுதியில் சுட்டிக் காட்டியுள்ளது, இந்த நூலை வாசிக்கும் வாசகர்களை புன்னகை புரிய வைப்பதாக உள்ளது.


தொடரும் ....


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]