என் உயிர்த்தோழி
[படக்கதை]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
01.10.2006 தேதியிட்ட தினமலர் வாரமலரில் பக்கம் எண் 29 இல் மேலே உள்ள படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப்படத்திற்கு தகுந்தபடி ஒரு சிறுகதை எழுதி அனுப்ப வேண்டும் என்பது “படக்கதைப்போட்டி” யின் அறிவிப்பு.
போட்டியின் நிபந்தனைகள்:
உங்கள் கற்பனைக்கு ஒரு சவால்
கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு தகுந்த சிறுகதை ஒன்றை எழுதி அனுப்புங்கள்
படத்தில் உள்ள காட்சி சிறுகதையின் மையக்கருவாக இருக்க வேண்டும்
சிறுகதை A4 அளவுள்ள தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
தாளின் பின்புறம் உங்களின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடுதல் அவசியம்.
படத்தில் உள்ள நட்சத்திரங்களின் பெயரையே கதாபாத்திரங்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
கதைகள் வரும் 05.10.2006 வியாழக்கிழமைக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதை வாரமலர் இதழில் பிரசுரமாகும்.
பரிசு ரூ.1000 [ஒருவருக்கு மட்டுமே]
அனுப்ப வேண்டிய முகவரி:
படக்கதைப் போட்டி, தினமலர்-வாரமலர், த.பெ.எண்: 7225 சென்னை - 600 008
மேற்படி படக்கதைப் போட்டியில் கலந்து கொண்டதில் என் சிறுகதைக்கு பரிசளிக்கப்பட்டது:
அந்தக்கதை இதோ உங்கள் பார்வைக்கு:
என் உயிர்த்தோழி
கல்யாணம் ஆகி கணவருடன் சிங்கப்பூர் சென்ற உஷா, ஒரு வருடம் சென்ற பின் இப்போது தான், கிராமத்திலுள்ள தன் பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறாள். உள்ளே நுழைந்ததும் அவள் கண்கள் எதையோ பரபரப்பாகத் தேடியது.
வருடக்கணக்காகக் காத்திருந்தும் கிட்டே நெருங்கி விட்ட சந்தோஷத்தில் ஒரு நொடியைக்கூட மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் தவித்தது.
நேராக சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே யாரும் இல்லை. பாத் ரூம் கதவு திறந்து கிடந்தது. கொல்லைப்புறத்துக்கு ஓடினாள். அங்கே கிணற்றடியில் பாட்டி குனிந்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள். சத்தம் போடாமல் பின்புறமாக பூனை போல் பதுங்கிச்சென்று, பாட்டியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
முதலில் திடுக்கிட்டாலும், ஒரு நொடிக்குள் யாரென்று யூகித்து விட்டாள் பாட்டி. ஐந்து நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் அப்படியே அணைத்துக் கொண்டாள். பிரிவின் சோகம் பெரு மூச்சாய் வெளிப்பட்டது.
உஷாவுக்கு தன் அப்பா வழிப்பாட்டி என்றால் ரொம்பப்பிரியம். பாட்டி ரொம்பவும் கெட்டிக்காரி. யார் மனசையும் நோகவிட மாட்டா. சுருக்குன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டா. தவிர தன் பேத்தி உஷா மேல் கட்டுக்கடங்காத பாசம்.
பாட்டிக்கு வயசாகிவிட்டதே தவிர வீட்டில் ஓய்வு ஒழிச்சல் கிடையாது. தாத்தா காலையிலே எழுந்து, ஸ்நானம் பண்ணி, பஞ்சக்கச்சம் கட்டி பூஜை முடித்து, பலகாரம் சாப்பிட்டு, கட்டிலில் போய் காலை நீட்டிப்படுக்கும் வரை, பாட்டி அந்த வீட்டினுள் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரிவாள். பார்த்துப்பார்த்து பணிவிடைகள் செய்வாள்.
பாட்டியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியொரு அழகு. பறங்கிப்பழச்சிவப்பில் கட்டையா குட்டையா மடிசார் புடவையில் ஜொலிப்பாள்.
தாத்தாவின் பூஜை முடியும் முன் நான் பாட்டி அருகே போனால் “எம்மேலே பட்டுடாதேடீ; போய் ஸ்நானம் பண்ணிட்டு வாடீ” என்று தாத்தா காதுக்கு கேட்கும்படி பலமாக உரக்கக் கத்துவாள்.
பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்.
தாத்தா பாட்டியின் இளமைப்பருவம், அவர்களின் கல்யாணம், தாம்பத்யம், அவர்கள் அந்தக்காலத்தில் பார்த்த சினிமா, டிராமாக்கள், கிராமத்துப் பெரிய வீட்டில் தன் மாமியார், மாமனார், கொழுந்தன்கள், நாத்தனார்கள் மட்டுமின்றி கொல்லைப்புறத்தில் அடிக்கடி வந்து போகும் குரங்குகள், காக்கைகள் தொந்தரவுடன் கோட்டை அடுப்பில் தேங்காய் மட்டைகளை வைத்து எரித்து தான் சமையல் செய்தது என தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் கதைபோல வெகுஅழகாகச் சொல்லுவாள்.
அடிக்கடி அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப் பேசுவாள். உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்.
உஷாவின் சின்ன வயதில், மொட்டை மாடியில் பாட்டி வடாம் பிழிந்து கொண்டிருந்த போது, காக்கை வந்து கொத்தாமல் உஷாவைக் காவலுக்கு வைத்துவிட்டு, பாட்டி கீழே இறங்கி பாத் ரூம் போய்விட்டு வருவதற்குள், உஷா காரசாரமான வடாத்து மாவை விரல்களால் எடுத்து, நக்கித் தின்பதைப் பார்த்துவிட்ட பாட்டிக்கு வந்ததே கோபம்! காக்கையை விரட்ட வைத்திருந்த குச்சியை எடுத்து உஷாவைப் பாட்டி துரத்தி அடிக்க வர, உஷா இங்குமங்கும் ஓடி கடைசியில் பிழிந்திருந்த வடாத்திலேயே காலை வைத்து வழிக்கிவிழ, பாட்டி கண்கலங்கிப்போனாளே! தன்னைத்தூக்கிப்போய் நன்றாகத் தேய்த்து வடாத்துமாவு போகக் குளிப்பாட்டினாளே!! அது நினைவுக்கு வரும்போதெல்லாம் உஷாவுக்கு இன்றும் சிரிப்புத்தான் வருகிறது.
தாத்தா பாட்டியின் இளமைப்பருவம், அவர்களின் கல்யாணம், தாம்பத்யம், அவர்கள் அந்தக்காலத்தில் பார்த்த சினிமா, டிராமாக்கள், கிராமத்துப் பெரிய வீட்டில் தன் மாமியார், மாமனார், கொழுந்தன்கள், நாத்தனார்கள் மட்டுமின்றி கொல்லைப்புறத்தில் அடிக்கடி வந்து போகும் குரங்குகள், காக்கைகள் தொந்தரவுடன் கோட்டை அடுப்பில் தேங்காய் மட்டைகளை வைத்து எரித்து தான் சமையல் செய்தது என தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் கதைபோல வெகுஅழகாகச் சொல்லுவாள்.
அடிக்கடி அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப் பேசுவாள். உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்.
உஷாவின் சின்ன வயதில், மொட்டை மாடியில் பாட்டி வடாம் பிழிந்து கொண்டிருந்த போது, காக்கை வந்து கொத்தாமல் உஷாவைக் காவலுக்கு வைத்துவிட்டு, பாட்டி கீழே இறங்கி பாத் ரூம் போய்விட்டு வருவதற்குள், உஷா காரசாரமான வடாத்து மாவை விரல்களால் எடுத்து, நக்கித் தின்பதைப் பார்த்துவிட்ட பாட்டிக்கு வந்ததே கோபம்! காக்கையை விரட்ட வைத்திருந்த குச்சியை எடுத்து உஷாவைப் பாட்டி துரத்தி அடிக்க வர, உஷா இங்குமங்கும் ஓடி கடைசியில் பிழிந்திருந்த வடாத்திலேயே காலை வைத்து வழிக்கிவிழ, பாட்டி கண்கலங்கிப்போனாளே! தன்னைத்தூக்கிப்போய் நன்றாகத் தேய்த்து வடாத்துமாவு போகக் குளிப்பாட்டினாளே!! அது நினைவுக்கு வரும்போதெல்லாம் உஷாவுக்கு இன்றும் சிரிப்புத்தான் வருகிறது.
சிங்கப்பூரிலிருந்து திடீர்னு வந்து தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும், பேத்தியின் அன்பில் திக்கு முக்காடிப் போய்விட்டாள், பாட்டி.
பாட்டி இப்போது ரொம்பத்தான் மாறிப்போய் இருந்தாள். தாத்தாவுக்கு மிகவும் வயதாகி முடியாத்தனம் வந்து விட்டதால், பூஜை ஏதும் செய்கிறேன் என்று தன்னைத்தானே படுத்திக்கொண்டு பாட்டியையும் படுத்தாமல், எப்போதும் கட்டிலே கதி என்று ஓய்வெடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார். பாட்டியும் மடி ஆசாரம் என்று எதுவும் இப்போது தன்னைத்தானே வருத்திக்கொள்வது இல்லையாம்.
தன் இஷ்டப்படி ஏதோ புடவையைச் சுற்றிக்கொண்டு சதா டீ.வி.யைப் பார்த்துக்கொண்டு, ரிமோட்டும் கையுமாகவே இருக்கிறாள், பாட்டி இப்போது.
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பேரன் பேத்திகளுடன் செல் போனில் பேசுவதும், வெய்யிலுக்கு கூலிங் க்ளாஸ், ஏ.ஸி. ரூம் என்று ஜாலியாகவே பொழுதைப்போக்கி வருகிறாள்.
பாவம், இளமை காலத்தில் குடும்பத்திற்காகப் பாடுபட்டவள். முதுமையிலாவது சுகப்பட கொடுத்து வைத்திருக்கிறாள். உஷாவுக்குப் பாட்டியை இப்போது பார்க்கும் போதும், பழையவற்றையெல்லாம் நினைக்கும் போதும் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது.
“என்ன பாட்டி, உன் மடிசார் புடவையெல்லாம் என்ன ஆச்சு? எங்கே போச்சு?” பாட்டியைச் சீண்டினாள் உஷா.
“போதும்டீ, அதையெல்லாம் நனைச்சு, அலசி, பிழிஞ்சு, ஒனத்தி (உலர்த்தி) காயவச்சு, மடிச்சு (மடித்து) கட்டறதுக்குள் (உடம்பில் அணிவதற்குள்) பிராணன் போயிடுது போ;
அவசரமா பாத்ரூம் போய் வருவதற்குள்ள தலைப்புக் கச்சமெல்லாம் கசங்கி, அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிண்டு வருதுடீ” என்று சொல்லி பாட்டி அலுத்துக்கொண்டதைக் கேட்டதும் உஷாவுக்குச் சிரிப்பு தாங்க முடியலே.
பாட்டிக்குன்னு ஆசையாத் தான் வாங்கி வந்த இரண்டு ஜோடி வளையல்களை, பாட்டி கையில் போட்டுவிட்டு அழகு பார்த்தாள். புது நைட்டி ஒன்றை எடுத்து பாட்டிக்கு மாட்டி விட்டாள். பாட்டியின் முகம் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் சிவந்து போனது.
நாற்காலியில் பாட்டியை உட்கார வைத்து தன் கேமராவால் விதவிதமான போட்டோக்களாக எடுத்துத்தள்ளினாள்.
”தாத்தாவைக் கூட்டிவந்து காட்டட்டுமா?” என்று உஷா கேட்க பாட்டியின் முகம் வெட்கத்தில் சிவந்து நெளிந்தபோதும், கொள்ளை அழகாகவே தோன்றினாள்.
“சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பாட்டிகளும் இதுபோலத்தான் காத்தாட, அவரவர் விருப்பப்படி டிரஸ் போட்டுண்டு, காரில் ஏறி ஊரைச் சுற்றி வராங்க பாட்டி” என்றாள் உஷா.
“சட்டுப்புட்டுனு, நீயும் புள்ளையாண்டு இருக்கேன்னு நல்ல சேதி சொல்லுடீ. எனக்கும் தாத்தாவுக்கும் பாஸ்போர்ட் விசா எல்லாம் இப்போதே ஏற்பாடு பண்ணுடீ. நானும் தாத்தாவும் சிங்கப்பூருக்கு வந்துடறோம். உனக்கு பிரஸவ டயத்துலே கூடமாட ஒத்தாசையா இருந்துட்டு, அப்படியே சிங்கப்பூரையும் சுத்திப்பார்த்துட்டா போதும்டீ, அதன் பிறகு நானும் உன் தாத்தாவும் சேர்ந்தே டிக்கெட் வாங்கிண்டு இந்த உலகத்தை விட்டே கிளம்பிடுவோம்” என்றாள் பாட்டி.
இதுபோல அவ்வப்போது சொல்லிச்சொல்லியே இதுவரை பதினாறு முறை கொள்ளுப்பேரன் பேத்தி என ஆசைதீரப் பார்த்து விட்டவள்.
இந்தத்தள்ளாத வயதிலும் பாட்டியின் பேச்சினில் இருக்கும் உற்சாகமும், ஆசையும், தைர்யமும் உஷாவை வியப்படைய வைத்தன.
பாட்டியின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்த உஷா, பாட்டி நீட்டிய காலை தன் கைகளால் மெதுவாகப் பிடித்து அமுக்கி விட்டுக்கொண்டிருந்தாள்.
பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
[இந்தச் சிறுகதை வெளியான இதழின் அட்டைப்படம்]
இந்தச்சிறுகதை தினமலர் வாரமலர் நடத்திய
“படக்கதைப்போட்டி” யில்
கலந்து கொண்டு பரிசு பெற்றது..
22.10.2006 அன்று தினமலர் வாரமலரில்
பக்கம் எண் 30+31 இல் வெளியானது..
பக்கம் எண் 30+31 இல் வெளியானது..
அன்புடன்
vgk
vgk