என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 6 நவம்பர், 2013

76 ] பசுவும் தாயும் !

2
ஸ்ரீராமஜயம்
”கறவை நின்றுபோன பிறகு பசுவை தீனிபோட்டு பாதுகாத்து என்ன பயன்?” என்கிற எண்ணத்தில் அதை இறைச்சிக் கூடத்திற்கு அனுப்புவது என்பது, நம்மைப்பெற்ற தாய் வயதாகி வேலை செய்ய முடியாமல் ஆனவுடன், அவளைக் கொலை செய்தால் எப்படியோ அப்படித்தான். 

’கோ’ மாமிசம் தாய் மாமிசத்திற்கு சமானமே.

உணவில் ஒரே ஒரு ருசி மட்டும் இருந்தால் திகட்டி விடும். வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டி விடும்.

அதனால் தான் அழுகை, சிரிப்பு, வெற்றி, தோல்வி, மான அவமானம் எல்லாம் சேர்ந்து வருகின்றன.

பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.


oooooOooooo

திருப்பதி முருகன் ஸ்தலமா? 

திருமாலின் ஸ்தலமா?


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா 
கி.வா.ஜ.விடம் கேட்ட கேள்வி.

 

‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’

‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர்.

‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். 

பாலனாக இருப்பவன் முருகன் தான். 

அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. 

மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. 

அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ. 

‘சரி ! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ – என்று கேட்டார் பெரியவர்.

”பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் இருந்திருக்க வேண்டும். 

திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.

ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா?

‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். 

ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி. 

அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது !
திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். 
முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். 
ஆனால், சக்திக்கு வாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. 
தொண்டை மண்டலத்தில், சக்தி க்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். 

ஒரு காலத்தில் திருப்பதி, தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. 

பின், அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. 

இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அது இருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்வது பொருந்துகிறது’ என்றார்.

பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்று பணித்தார். 

அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். 

அதை கி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். 

கி.வா.ஜ.வுக்கோ ஒரே பரவசம்.

ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின் பெரியவருக்கும் சாத்தப்பட்டது. 

இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதை அவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?

கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். 

சரியாக முப்பத்தி ஆறு முழங்கள் இருந்தது. 

இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். 

இதற்கென்றே நெசவாள கிராமம் ஒன்று உள்ளது. 

அவர்களுக்கும் காலம் காலமாக முப்பத்தாறு முழம்தான் கணக்கு. 

கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம் இருப்பதைக் கூறினார். 

உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். 

இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்தி ஆறு தானே?’ என்று கேட்டார். 

அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும் கணக்கில்… 


 


சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகே புரிந்தது. 

அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாக பெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி ஸ்தலமாக தொடரவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. 

பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:

‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாக மாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. 

கௌமார சக்திக்கு முருகனையும், வைஷ்ணவிக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். 

இதில் இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. 

அவ்வகையில் மாமனே பெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம். இது ஒரு கோணம்.

அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது வழக்கு. 

சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன். அவனுக்குள் எல்லாமே அடக்கம். 

அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல் உள்ள ஆலயம்! அதனால் அவரை ’ஏழுமலையான்’ எனச்சொல்வதும் உண்டு.

அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன் அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
கட்டுரையாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
நன்றி: தீபம் இதழ் + பால ஹனுமான்.

[ Thanks to Sage of Kanchi 16 10 2013 ]
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

41 கருத்துகள்:

 1. wow! nice info about Thirupathi, Gopu Sir. Thank for sharing. Regarding animals sent to slaughter house, I happened to see a very very pathetic sight of unloading goats and few other animals near a slaughter house druing a journey.... they were not actually unloaded but pushed from the truck and they fall from that heigh with a thud on the ground..... poor animals... had a very pathetic treatment before they got killed. Humans don't even treat them respectfully while they are on the way to slaughter house.

  பதிலளிநீக்கு
 2. இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருந்தால்
  ஆயுஸ் முடிந்துவிடும்

  அதனால்தான் ஆதி சங்கரர் start chanting
  பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்றார்

  பாமரர்களாகிய நமக்கு
  இந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு.?

  அவன் கெளமாரியாக இருந்தால் என்ன?
  கருமாரியாக இருந்தால் என்ன?
  கணத்துக்கு கணம் மாறிகொண்டிருக்கும்
  மனதை உடைய நம் போன்ற
  கேப்மாரிகளுக்கு அவன் பாதங்களை
  விடுத்து வேறு எது கதி?

  யார் என்னாவேண்டுமானாலும் சொல்லட்டும்
  நினைக்கட்டும் அதைப்பற்றி
  நாம் ஏன் கவலைப்படவேண்டும்?

  நமக்கு அவன் ஏழுமலையான்
  ஏழேழு பிறவியிலும் நம்முடன்
  துணை வருவான்
  தூணிலும் துரும்பிலும்
  இருக்கும் நரசிங்கபெருமான்.

  நம்பியவர்களை காக்கும் நாரசிம்மா
  நம்பிக்கையோடு சொல்லி வந்தால்
  நன்மையையும் செல்வமும் நாளும்
  அளிக்கும் ஆத்மராமா
  ஆபத்பாந்தவன், அனாத ரட்சகன்
  ஆதி பரம்பொருள் கோவிந்தன்

  குறையொன்றுமில்லாத கோவிந்தன்
  கண்டாலும் காணாவிட்டாலும்
  நம் மீது குறை காணாதவன்
  நம் குறைகளை தீர்ப்பவன்.

  பதிலளிநீக்கு
 3. அமுத மழையில் - அர்த்தம் பொதிந்த அருளுரை.. அழகான படங்கள்.. சிறப்பான பதிவு!..

  பதிலளிநீக்கு
 4. ”கறவை நின்றுபோன பிறகு பசுவை தீனிபோட்டு பாதுகாத்து என்ன பயன்?” என்கிற எண்ணத்தில் அதை இறைச்சிக் கூடத்திற்கு அனுப்புவது என்பது, நம்மைப்பெற்ற தாய் வயதாகி வேலை செய்ய முடியாமல் ஆனவுடன், அவளைக் கொலை செய்தால் எப்படியோ அப்படித்தான்.

  மனதில் அறைகிற வார்த்தைகள்

  பதிலளிநீக்கு
 5. பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ...
  அடக்கம் என்னும் வெகுமதி.

  அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 6. தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
  சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
  திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
  இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

  திருவேங்கடமுடையானை அம்பாளுடனும் , விஷ்ணுவுடனும் ,
  சிவனுடனும் , முருகனுடனும் எப்படி வேண்டுமானலும் பொருத்திக்கொள்ளலாம்..அதி அற்புதமான க்ஷேத்திரம் ...!

  பதிலளிநீக்கு
 7. வயதானவர்கள், கறவை நின்றுபோன பசுமாட்டைவிட கேவலமாக
  மதிக்கப்படுவது ஸரியான ஸமயத்தில் ஸரியான உதாரணம்.
  வைஷ்ணவியாக யிருந்தால் என்ன கௌமாரியாக ிருந்தால் என்ன , இரண்டு தாத்பரியங்களும் அடங்கியது திருப்பதி.
  அறியாத எவ்வளவு ஸ,மாசாரங்கள் அறிந்து கொள்ள முடிந்தது,.
  மிக்க விஷயங்கள் அடங்கிய பதிவு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. கோமாதா எங்கள்குலமாதா சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு பசுமாடு மட்டும் அல்ல காளை மாடுகளும் அடி மாடுகளாக லாரியில் அடைத்துக்கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அதற்கு போலிஸ் மாமுல் வாங்குவதையும்
  பார்த்தால் மனசுக்கு தாங்கொணா கஷ்டமாக இருக்கும் என்ன செய்யமுடியும் கலியுககஷ்டங்கள்

  பதிலளிநீக்கு
 9. vதிருப்பதி பெருமாள்விஷ்ணுவாக இருந்தாலும் முருகனாக இருந்தாலும் ஒன்றே அதனால்தான் அருணகிரினாதர் திருப்புகழில் முருகனை பெருமாளே என்று பாடுகிறார் இருவரும் அழகு தெய்வங்கள் மஹாபெரியவாளின் ஆய்வு ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது

  பதிலளிநீக்கு
 10. //உணவில் ஒரே ஒரு ருசி மட்டும் இருந்தால் திகட்டி விடும். வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டி விடும்.

  அதனால் தான் அழுகை, சிரிப்பு, வெற்றி, தோல்வி, மான அவமானம் எல்லாம் சேர்ந்து வருகின்றன.

  பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.//

  மிக அருமை!!

  பதிலளிநீக்கு
 11. பொன்மொழிகளும் ஏழுமலையான் குறித்த பெரியவரின் தீர்க்கமான பார்வையும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 12. அற்புதமான அருள்மொழிகள்.....

  ஏழுமலையான் விளக்கம் அருமை!

  பதிலளிநீக்கு
 13. ஆஹா திருப்தி பர்த்தி கேள்விபடாத விஷயம்.
  மிக மிக அருமை.
  விஜி

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் அய்யா.
  ஏழுமலையான் குறித்த செய்திகளும், பசுவை அறுவைக்கு அனுப்புவது குறித்த பெரியாவாளின் கருத்து கண்ணத்தில் அறைந்தது உணர்வை ஏற்படுத்துகிறது. பெரியாவாளின் பொன் மொழிகள் அனைத்தும் நமக்கு பொக்கிசங்கள். அமுதமழையில் நனைய வைத்தமைக்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 15. திருப்பதி பற்றிய செய்திகள் எத்தனை எத்தனை! அத்தனையும் அழகாய் வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்
  கோபு சார். நன்றி பல தெரியாத செய்திகள் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 16. பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.//அற்புதம்! திருப்பதி குறித்து மஹாபெரியவாளின் கருத்து வியப்பில் ஆழ்த்தியது! மிக்க நன்றி ஐயா!


  பதிலளிநீக்கு
 17. அன்பின் வை.கோ

  பசுவும் தாயும் - பதிவு அருமை - பசுவினையும் தாயினையும் ஓப்பு நோக்கி பதிவாக எழுதியமை நன்று.

  கோ மாமிசம் தாய் மாமிசத்திற்குச் சமம். - அருமையான சிந்தனை.

  வாழ்க்கை திகட்டாமல் இருப்பதற்காகத்தான் பல்வேறு உணர்ச்சிகள்

  நன்று நன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ம்காப் பெரியவாளின் அறவுரை நன்று

  திருப்பதி முருகனுடையதா பெருமாளுடயதா

  பெரியவாளின் விள்க்கம் - கி வா ஜவுடனான உரையாடல் - அருமை அருமை.

  எவ்வளவு தரவுடன் கூடிய விளக்கங்கள் - பெரியவா பெரியவா தான்

  நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 18. ”கறவை நின்றுபோன பிறகு பசுவை தீனிபோட்டு பாதுகாத்து என்ன பயன்?” என்கிற எண்ணத்தில் அதை இறைச்சிக் கூடத்திற்கு அனுப்புவது என்பது, நம்மைப்பெற்ற தாய் வயதாகி வேலை செய்ய முடியாமல் ஆனவுடன், அவளைக் கொலை செய்தால் எப்படியோ அப்படித்தான்.

  ’கோ’ மாமிசம் தாய் மாமிசத்திற்கு சமானமே.//
  நன்றாக சொன்னார்கள் குரு.


  பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.//
  அருமையான் அமுதமொழி .
  நல்லவைகளை படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 19. எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியதை இங்கு உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 20. கறவைமாடு மனதைதொடும் விளக்கம்.

  அமுதமழையில் நனைகின்றோம்.

  பதிலளிநீக்கு
 21. அடடா.. படித்துக் களைப்பாகிட்டேன்ன்ன்.. எதைச் சொல்ல எதை விட.. கிளிக்குச் சொல்லுங்கோ மீ பிரெசண்ட்டாம் என:)... முல்லைக் கொடி முத்துச்சரத்துக்கு வருகிறேன்ன்ன்..

  பதிலளிநீக்கு
 22. பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 23. அருளுரைகள், மனித அகம்பாவம் என்று பலவற்றைத் தொட்டுச் சென்றது பதிவு.
  சிறப்பு. இனிய பாராட்டுகள்
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 24. வயதான பசுக்களை ரக்ஷிக்கவேண்டும் எனப் பெரியவா பல்லாண்டுகளாகச் சொல்லி வருகிறார். ஆனால் பல பசுக்களும் கேரளா போவதாகவும் சொல்கின்றனர். :((

  திருப்பதி குறித்த இந்தக் கட்டுரையை தீபம் இதழில் படித்தேன் . பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. கறவை மாடு விளக்கம் மனதை தொட்டது..

  ஆஹா அற்புதமான விளக்கம்..

  பதிலளிநீக்கு
 26. திருப்பதியின் தெய்வம் யார் என்பது குறித்து ஒரு காலத்தில் நிலவிய சர்ச்சைகளை என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். விவரமாகக் கூறியதற்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 27. திருப்பதி பற்றிய இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது. நம்மைக் காப்பாற்றும் கடவுளை எப்படி அழைத்தால் என்ன?
  கி.வா.ஜ. மற்றும் பெரியவாளின் உரையாடல் மிகவும் சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 28. நல்ல விவரங்கள். கிவாஜ வும் பெரியவாளும் பேசினால் கருத்துகளுக்கு பஞ்சம் ஏது?

  பதிலளிநீக்கு
 29. திருப்பதி பற்றிய விவாதம் தொடர்கதை போலதான் போல இருக்கு. நாம தான் எந்த சாமின்னாலும் கும்பிட ரெடியா இருக்கோமே.

  பதிலளிநீக்கு
 30. //’கோ’ மாமிசம் தாய் மாமிசத்திற்கு சமானமே.//

  இறைவனுக்கு அனந்த கோடி நமஸ்காரம். சைவ குடும்பத்தில் பிறக்க வைத்ததற்கு. அத்துடன் இன்று வரை அதை கடைபிடிக்கும் வாய்ப்பையும் கொடுத்ததற்கு.

  பதிலளிநீக்கு
 31. ஞாயிற்றுக்கிழமை 13.09.2015 திருப்பதிக்கு ஒரு திடீர் பயணம் நானும், அவரும் சென்று வந்தோம்.

  திருப்பதியில் இருப்பது முருகன் சிலை. உள்ளே இருப்பது யார் என்ற சர்ச்சை எழுந்த போது இரவு கோவிலின் கதவை பூட்டி விட்டார்களாம். நடுநிசியில் ஒரு வைணவர் பாம்பாக உருமாறி உள்ளே சென்று சிலைக்கு நாமம் போட்டு விட்டாராம். அதனால் மறுநாள் காலை கதவைத் திறந்த போது உள்ளே இருப்பது திருமால் என்று முடிவு கட்டி விட்டார்களாம். இது நான் எங்கோ படித்தது.

  இதெல்லாம் உண்மையா, பொய்யா அந்த திருமாலுக்கும் அவன் மருமகனுக்குமே வெளிச்சம்.

  என்னைப் பொறுத்த வரை மாமனோ, மருமகனோ யாராய் இருந்தாலும் கும்பிட தயார்.

  ஹரியும், சிவனும் ஒண்ணு, அதை
  அறியாதவன் வாயில மண்ணு.
  இதுதான் என் கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //ஞாயிற்றுக்கிழமை 13.09.2015 திருப்பதிக்கு ஒரு திடீர் பயணம் நானும், அவரும் சென்று வந்தோம். //

   ஆஹா, சூடான சுவையான முரட்டு ’திருப்பதி லாடு’ போன்ற இனிமையான தகவல்.

   எனக்கு லாடு கிடையாதா? :(

   தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 32. கோமாதா எங்கள் குலமாதா. பசுக்களை ரட்சிப்பது நமது கடமை. அது தரும் பாலைக்குடித்துவிட்டு நன்றிகெட்டதனமா நடந்துக்கலாமா. அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு. எல்லா சாமிகளையும் வணங்கத்தானே செய்யறோம்.

  பதிலளிநீக்கு
 33. பாரங்களிலேயே மிகப்பெரிய பாரம் அகம்பாவம்தான், தற்பெருமைதான். அதை இறக்கினாலே வெகுமானம் ... அடக்கம் என்னும் வெகுமதி.// சிலருக்காகவே சொல்லப்பட்டதுபோல தோன்றுகிறது...அருமையான கருத்துப் பரிமாற்றம்.

  பதிலளிநீக்கு