என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி! [2011 இந்த வருடத்தில் நான் - தொடர்பதிவு]





நான் ஏறி வந்த 
ஏணி தோணி கோணி


 ‘இந்த வருடத்தில் நான் - 2011’ 
[தொடர்பதிவு]


By வை. கோபாலகிருஷ்ணன்


-oOo-





அன்புடையீர்,

வணக்கம்.

இனிய 
புத்தாண்டு 
+
பொங்கல்
நல்வாழ்த்துகள். 











இன்றுடன் 2011 ஆம் ஆண்டு நிறைவு பெற்று, 
நாளை 2012 ஆம் ஆண்டு துவங்கவுள்ளது.

“இந்த வருடத்தில் நான்” என்ற தலைப்பில் என்னை தொடர் பதிவிட வருமாறு *அழைப்புக் கொடுத்துள்ள நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்களுக்கு என் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தப்பதிவினைத் தொடர்கிறேன். 


*அழைப்பைக்காண:  
http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_28.html   


-oOo-


இன்றுடன் முடியும் 2011 ஆம் ஆண்டை என்னால் என்றுமே மறக்க முடியாது. இந்த ஆண்டின் ஆரம்ப நாட்களில் தான், நான் முதன் முதலாக என் வலைப்பூவில் எழுதத்தொடங்கி தொடர்ந்து பல பதிவுகள் தந்துள்ளேன். ஒரு சில சோதனைப் பதிவுகளுக்குப் பிறகு முழுவீச்சில் பதிவிட ஆரம்பித்த நாள் 02.01.2011. 


நான் பதிவிட்ட முதல் சிறுகதை “இனி துயரம் இல்லை”. முதல் பின்னூட்டம் கொடுத்தவர் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் மட்டுமே. அதன் பிறகு வேறு ஒருவர். சமீபத்தில் மற்றொருவர். ஆக மொத்தம் 3 பேர்கள் மட்டுமே. http://gopu1949.blogspot.com/2011/01/blog-post.html




இந்தப்பதிவுடன் 2011 ஆம் ஆண்டின் மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை: 200 என்று காட்டுகிறது.ஒருசில மீள் பதிவுகளை கணக்கிலிருந்து நீக்கிவிட்டாலும் கூட, சுமார் 175 முதல் 180 வரை புதிய பதிவுகளாக நான் தந்துள்ளேன். அதாவது சராசரியாக ஒரு நாள் விட்டு ஒருநாள் வீதம் ஒரு புதிய பதிவு தந்துள்ளேன். அதுவே எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. 

இந்த என் வெற்றிகரமான தொடர் பயணத்திற்கு, மூல காரணமாக நான் நினைப்பது, வாசகர்களும், பதிவர்களுமாகிய நீங்கள் அவ்வப்போது எனக்கு அன்பாக, ஆதரவாக, அசத்தலாக, உற்சாகமாக, உபயோகமாக, உந்துதலாகக் கொடுத்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே. 

பதிவுலகுக்கு நான் வந்த பிறகுதான், என்னைப்போலவே எழுத்தார்வம் கொண்ட பலருடன் என்னால் எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தது. பலரின் அருமைகளையும், பெருமைகளையும், தனித் திறமைகளையும் நன்கு அறிய முடிந்தது. 


இன்று உலகம் பூராவும் பரவியுள்ள தமிழ் எழுத்தாளர்களாகிய பல தோழர்களுடனும், தோழிகளுடனும் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டு, பல ஆரோக்யமான விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

அவர்களில் பலரையும் நான் இதுவரை நேரில் சந்திக்க சந்தர்ப்பம் அமையாத போதிலும், அவர்கள் என்னிடம் மின்னஞ்சல் மூலமும், சுட்டிகள் மூலமும், தொலைபேசி இணைப்புகள் மூலமும் தொடர்பு கொண்டு, நெருங்கிய சொந்தங்களை விட அதிகப் பிரியத்துடன் பழகி வருவது என் நெஞ்சினில் மிகவும் பசுமையாகப் பதிந்து, என்றும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 

என் மனதுக்குப் பிடித்தமானவர்களாகவும்,என் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் ஒத்துப்போகும் நபர்களாகவும், என் நலம் விரும்பிகளாகவும் யாராவது ஓரிருவர், தினமும் என்னுடைய தொடர்பு எல்லைக்குள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்பது, என் மனதுக்கு மிகவும் சந்தோஷமும், ஆறுதலும், தன்னம்பிக்கையும் தரக்கூடிய மகிழ்ச்சிகரமான விஷயமாக உள்ளது!  ;)   


நான் இதுவரை நேரில் சந்திக்காத, அந்த அன்பு உள்ளங்கள் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தப்பகுதியில் இருந்தாலும், அவர்கள் இன்று போல என்றும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன். 

நிஜ வாழ்க்கையைவிட, நான் அடிக்கடி கற்பனை உலகில் சஞ்சரிப்பதில் அதிக மகிழ்ச்சி அடையக்கூடியவன். என்னுடைய கற்பனை உலகம் மிகவும் ரம்யமானது. அழகானது. கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாதது. 


ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே! என சந்தோஷம் மட்டுமே தரக்கூடியது. என் மனதுக்குப் பிடித்தவர்கள் மட்டுமே, என்னைச்சுற்றி அந்த கற்பனை உலகில் என்னுடன் இருக்கவோ, மகிழ்ச்சியுடன் என் உல்லாசத்தில் பங்குகொள்ளவோ அனுமதியுண்டு. 






என் கற்பனை உலகில் அழகழகான நறுமணம் வீசும் புஷ்பச்செடிகளும், பட்டாம்பூச்சிகளும் நிறைய உண்டு. இன்பமாகப் புசிக்க ருசியான பழங்களும், உணவு வகைகளும் அங்கு ஏராளமாகவும் தாராளமாகவும் உண்டு. 



விரோதிகள், எதிரிகள் என்று அங்கு யாருமே கிடையாது. எதைப்பற்றியதோர் பயமோ, கவலையோ, அச்சுறுத்தல்களோ எனக்கு என் கற்பனை உலகில் கிடையவே கிடையாது. 

என் கற்பனை உலகில் நான் நினைக்கும் நேரத்தில், நினைக்குமிடத்திற்கு, நினைக்கும் நபருடன் சுதந்திரப் பறவை போல பறந்து செல்வேன். உல்லாசத்தில் அவர்களுடன் ஊஞ்சலாடி மகிழ்வேன்.



அங்கு தான் எனக்கு மனதில் புதிய வசந்தங்களும், புதுப்புது கற்பனைகளும் தோன்றும்.  அவற்றை என் மனதில் அப்படியே அழகாக படம் பிடித்துக்கொள்வேன். மனக்கண்ணில் படம் பிடிக்கப்பட்ட அவை உடனே என் மூளையில் பதிந்து விடுவதுண்டு. மூளையில் பதிந்த இந்த என் கற்பனை எண்ணங்களை என் கை விரல்கள் மிகச்சுலபமாக கணினியில் தட்டிவிடுவதும் உண்டு.

ஆனாலும் என் கற்பனையில் தோன்றிய அனைத்தையும் [நாகரீகம் கருதி] அப்படியே பதிவிட முடியாதல்லவா! எனவே ஆங்காங்கே மிகவும் வருத்தத்துடன், அதே என் கை விரல்களால் EDIT செய்வதும் உண்டு.  


கடைசியில் ’கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது போல’, என் கற்பனையில் உதித்த பல்வேறு விஷயங்கள், வேறு ஏதோவொரு புதிய சுருக்கப்பட்ட ரூபத்தில், ஏதோவொரு தலைப்பில், சிறுகதைகளாக அவ்வப்போது என் பதிவுகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. 


இதுவே இதுவரை நான் பதிவிட்ட, ”என் கதைகள் பிறந்த கதை” யின் கதைச் சுருக்கமாகும்.

உங்களில் பலருக்கும் இதுபோல பலவித கற்பனை அனுபவங்கள் இருக்கலாம். சிலர் சிலவற்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படலாம். வேறு சிலர், சமுதாயக் கட்டுப்பாடுகள் காரணமாக, வெளியே சொல்லாமல், மனதுக்குள்ளே மறைத்து வைத்துக் கொள்ளப் பிரியப்படலாம். 

உதாரணமாக நம்மில் பலருக்கு, பாதுகாப்புடன் தாளிடப்பட்ட, பாத்ரூமுக்குள் சென்றவுடன், ஒரு சுதந்திர உணர்வு அவர்களைப் பற்றிக்கொள்ளும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக இருப்பார்கள். 


சிலர் விசில் அடிப்பார்கள். சிலரின் வாய் அவர்களை அறியாமலேயே ஏதோவொரு சினிமா பாடலை முணுமுணுக்கும். உடலில் ஆடை இருக்கிறதா இல்லையா என்ற கவலையே இல்லாமல் இருப்பார்கள். சிலர் பாடுவார்கள், சிலர் ஆடுவார்கள், சிலர் இன்னும் ஏதேதோ செய்வார்கள். 


தனிமையில் இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கியமான காரணம். இதைக் கூட அவர்களின் கற்பனை உலகம் என்று சொல்லலாம் தான்.

{ ஆனாலும் ஒருசிலர் மட்டும், சுதந்திரமாக இயங்கக்கூடிய இந்த பாத்ரூம் என்ற இடத்தின் உள்ளே போனாலும் [போகாததால்] மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். தங்களைத் தாங்களே இடுப்பில் குத்திக்கொள்வார்கள். முக்கி முணகி வியர்த்து விறுவிறுத்துப்போய் கஷ்டப்படுவார்கள். 


இவர்கள் இங்கு மட்டுமல்ல எங்குமே தானும் சுகப்படாமல், பிறரையும் சுகப்பட விடாமல், ஒருவித [மூலக்] கடுப்புடன் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம், சந்தோஷம் + கற்பனை என்பதே எப்போதும் எட்டிட வாய்ப்பு இல்லை. அதுபோன்ற மைனாரிடி ஆசாமிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம். }  

என் உள்ளம் அடிக்கடி இப்படிக் கற்பனை உலகில் சஞ்சரித்து வந்தாலும், என் உடல் இந்த நம் யதார்த்த உலகில் மற்றவர்களை அனுசரித்து வாழ வேண்டிய கட்டாயத்திலும், சமூகக் கட்டுப்பாடுகளிலும் தானே, உள்ளது!   


அதனால் நான் கொடுக்கும் என் பதிவுகளிலும், நிறைய கட்டுப்பாடுகள் வைத்துத்தான் எழுத வேண்டியுள்ளது. ஒருசில இடங்களில் நகைச்சுவைக்காக ஒருசில வரம்பு மீறல்களும், நடந்திருக்கலாம். 


அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், எனக்கு நீங்கள் கொடுத்துள்ள பேராதரவு எனக்கு, பெரு மகிழ்ச்சியளிக்கின்றது.

ஏப்ரல் 2011 முதல் செப்டம்பர் 2011 வரையான ஆறு மாத காலத்தில் மட்டும் இன்ட்லியில் இணைக்கப்பட்ட என் பதிவுகளில், சுமார் 50 பதிவுகளுக்கு மேல் இன்ட்லியில் பிரபலப்படுத்தப்பட்டுள்ளதாக எனக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் தகவல் வந்து அவற்றை நான் தனியாக சேமித்து வைத்துள்ளேன். இவ்வாறு என் படைப்புகள் பலவும் இன்ட்லியில் பிரபலப்படுத்தப்பட்டதற்கு, தங்களில் பலர் எனக்கு ஆதரவாக என் படைப்புகளுக்கு இன்ட்லியில் வாக்களித்தது மட்டுமே காரணமாகும். 


[அதன்பிறகு அக்டோபர் 2011 முதல் இன்ட்லியில் வாக்கு அளிப்பதில் ஏதேதோ புதிய மாற்றங்கள் கொண்டு வந்து குழப்பியிருப்பதால், அந்தப் புதிய முறை, பழையமுறை படி சுலபமாக இல்லாததால், நம்மில் பலருக்கும் ஒன்றும் புரியாத நிலை தான் நீடிக்கிறது]

வெவ்வேறு வாரங்களில், வெவ்வேறு வலைச்சர ஆசிரியர்களால், என் பெயரும் என் படைப்புகளும் வலைச்சரத்தில் அடிக்கடி தோன்றுமாறு செய்யப்பட்டுள்ளன.  இதனால் இதுவரை என்னைப்பற்றி அறியாத பலரும் என்னையும் என் படைப்புகளையும் அறிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. 

இதுவரை இந்த 2011 ஆம் ஆண்டின் 52 வாரங்களில், என் பெயர் 26 முறை வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது என்பது எனக்கே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. அதன் விபரம் இதோ இங்கே:




திரு. எல்.கே [கார்த்திக்] அவர்கள் 

திருமதி அன்புடன் மலிக்கா அவர்கள்

பச்சைத்தமிழன் திரு. பாரி தாண்டவமூர்த்தி அவர்கள்

திரு. தமிழ்வாசி - பிரகாஷ் அவர்கள்

திரு. வேடந்தாங்கல் - கருண் அவர்கள்

திருமதி லக்ஷ்மி [குறையொன்றும் இல்லை] அவர்கள்

திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள்

திரு RVS [தீராத விளையாட்டுப்பிள்ளை] அவர்கள்

திரு. மோஹன்ஜி [வானவில் மனிதன்] அவர்கள்

திரு. ரமணி [தீதும் நன்றும் பிறர் தர வாரா] அவர்கள்

திருமதி மனோ சுவாமிநாதன் [முத்துச்சிதறல்] அவர்கள்

திருமதி மனோ சுவாமிநாதன் [முத்துச்சிதறல்] அவர்கள்

மாய உலகம் திரு. ராஜேஷ் அவர்கள்

திரு மகேந்திரன் அவர்கள்

திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்

திருமதி பி.எஸ். ஸ்ரீதர் [ஆச்சி] அவர்கள்

திருமதி ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்கள்

திருமதி ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்கள்

திருமதி ராஜி வெங்கட் [கற்றலும் கேட்டலும்] அவர்கள்

திருமதி சாகம்பரி [மகிழம்பூச்சரம்] அவர்கள்

திருமதி சாகம்பரி [மகிழம்பூச்சரம்] அவர்கள்

திருமதி ரமாரவி [மதுரகவி] அவர்கள்

திருமதி ரமாரவி [மதுரகவி] அவர்கள்

திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்

திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்


26. http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_3674.html
திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்


இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல, ”தமிழ்மணம்” நிர்வாகம் என்னை நட்சத்திரப்பதிவராக ஒரு வாரம் [07.11.11 முதல் 13.11.11 வரை] தேர்ந்தெடுத்து சிறப்பித்ததும் இதே 2011 ஆண்டில் தான். 


அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நான் அந்த வாரம் முழுவதும் 8 புதிய பதிவுகளும், 20மீள் பதிவுகளுமாக ஆக மொத்தம் 28 பதிவுகள் கொடுத்திருந்தேன். 


இதோ இணைப்பு: 
http://www.tamilmanam.net/inc/star_post_list.php?date=2011-11-07

அந்த ஒரே வாரத்தில் தாங்கள் அனைவரும் எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்பும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், ஒவ்வொரு படைப்புக்கும் வந்து குவிந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையும், தமிழ்மணத்தில் தங்களில் பலர் எனக்கு சாதகமாக வாக்களித்ததும், என்னால் என்றும் மறக்க முடியாத ஓர் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும். 


தங்களின் இத்தகைய ஒட்டுமொத்த ஆதரவின் பலனாக தமிழ்மணத்தில் அந்த வார சூடான இடுகைகள் பட்டியலில் [TAMILMANAM'S WEEKLY TOP 20 HOT LIST] இல் எனக்கு முதலிடம் தந்து கெளரவிக்கப்பட்டது. 


அதைப்பற்றி தமிழ்மணத்தில், ஒரே ஒருநாள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்ட செய்தியினை, நான் அன்று பார்க்கத் தவறிய காரணத்தால், அதே வாரம் எட்டாவது இடத்தைப்பிடித்திருந்த சகபதிவர் ஒருவர், அதை சேமித்து வைத்திருந்து, அவரின் பதிவினில் வெளியிட்ட செய்தியினை எனக்கு கீழ்க்கண்ட லிங்க் மூலம் தெரிவித்து உதவினார்.


இணைப்பு இதோ:  http://veeduthirumbal.blogspot.com/2011/11/top-20.html 

ஜூலை 2011 இல் என்னால் வெளியிடப்பட்டு, பலராலும் மிகவும் பாராட்டப்பட்ட என்னுடைய “ஊரைச்சொல்லவா, பேரைச்சொல்லவா” என்ற கட்டுரையைக் கண்டு மகிழ்ந்த மூன்றாம் கோணம் நிர்வாகத்தினர், அதை அவர்கள் மின்இதழில் அவர்களாகவே விருப்பத்துடன் வெளியிட்டுக்கொண்டு என்னையும் வெகுவாகப்பாராட்டி, மின்னஞ்சல் கொடுத்தனர் . 




திருச்சியைப்பற்றிய அந்தக்கட்டுரையைப்படிக்க இதோ இணைப்பு:

தொடர்ந்து மூன்றாம் கோணத்திற்கு தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். 

நானும் அவர்களின் வேண்டுகோளின் படி என்னுடைய 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை மூன்றாம் கோணத்தில் வெளியிட்டேன். பிறகு கடந்த ஓரிரு மாதங்களாக எனக்கு, எதற்குமே நேரமின்மையால், மூன்றாம் கோணத்துடன் எனக்குள்ள தொடர்புகளை, தற்காலிகமாக நானே நிறுத்திக் கொண்டுள்ளேன்.

அதுபோலவே ’வல்லமை’ மின்இதழின் துணை ஆசிரியரும், நம் சக பதிவருமான என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய,  திருமதி அமைதிச்சாரல் அவர்கள் 26.09.2011 அன்று எனக்கு முதன் முதலாக ஓர் மின்னஞ்சல் அனுப்பி என்னை வியப்பில் ஆழ்த்தியிருந்தார்கள். இதோ இங்கே:

வணக்கம் வைகோ ஐயா,

எழுத்துத் துறையில் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கும் நீங்க, வல்லமைக்கும் உங்க படைப்புகளை அனுப்பி வைக்கலாமே. 


தீபாவளிச் சிறப்பிதழும் ரெடியாகிட்டிருக்கு. முடிஞ்சா அதற்கும் தங்களோட பங்களிப்பைக் கொடுத்தீங்கன்னா சந்தோஷம் :-)

உங்க புகைப்படத்தோட சிறு குறிப்பையும் அனுப்பி வெச்சா நல்லது. எடிட்டரோட முகவரிக்கே அனுப்பிடுங்க. 

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்(அமைதிச்சாரல்) 26/09/2011


அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொண்ட நான் இதுவரை என் 11 புதிய படைப்புகளை அவர்களுக்கு அனுப்பி அவை எல்லாமே ”வல்லமை மின்இதழ்” இல் அவ்வப்போது வெளியாகியுள்ளன. 


அதில் ”மனதுக்குள் மத்தாப்பூ” என்ற என் குறுநாவல் வல்லமை தீபாவளி 2011 சிறப்பிதழில் வெளியானது மிகவும் மகிழ்ச்சியளித்தது.  


அதுவும் என் “மனதுக்குள் மத்தாப்பு” என்ற காதல் காவியம் நான் என் கையால் வரைந்து தந்த ஓவியத்துடன் வெளியானது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.







என் ஓவியத்துடன் கூடிய, காதல் காவியத்தையும் படிக்க:


இந்த 2011 என்ற ஒரே ஆண்டில், சக பதிவர்களின் அன்புக்கட்டளைகளுக்கு அடி பணிந்து நான் எழுதியுள்ள தொடர்பதிவுகள் மொத்தம் 7. அவை இதோ:

உணவே வா! உயிரே போ!! [சமையல் பற்றிய நகைச்சுவை] 
முத்துச்சிதறல் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!

”பெயர் காரணம் [நகைச்சுவை]” 
கற்றலும் கேட்டலும்’ திருமதி ராஜி அவர்களுக்காக!

”மூன்று முடிச்சு” 
’மணிராஜ்’ திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக! 

”முன்னுரை என்னும் முகத்திரை” 
’முத்துச்சிதறல்’ திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!

”ஊரைச்சொல்லவா.. பேரைச்சொல்லவா! ” [திருச்சி பற்றிய அலசல்]
’காகிதப்பூக்கள்’ திருமதி ஏஞ்சலின் அவர்களுக்காக!

”மழலைகள் உலகம் மகத்தானது” 
அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்
ஆகிய முப்பெரும் தேவியர்களுக்காக

நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி! [இந்த 2011 வருடத்தில் நான்]
’மணிராஜ்’ திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக!  
[நீங்கள் இப்போது படிக்கும் இந்தப்பதிவு]


நான் இதுவரை வெளியிட்டுள்ள 200 பதிவுகளில், கவிதைகள்=5, மலரும் நினைவுகளான மகிழ்ச்சிப்பகிர்வுகள்=15,  ஆன்மிக கட்டுரைகள்=3,  மூளைக்கு வேலைகள்=5,  தொடர்பதிவுகள்=7 என ஆக மொத்தம் 35 போக மற்றவைகள் யாவும் நகைச்சுவை சிறுகதைகள் மற்றும் சிறுகதைத் தொடர்களாகும்.   

எனக்கு கணினியில் படங்களை எவ்வாறு இணைப்பது என்றே ஆரம்பத்தில் தெரியாததால் என் முதல் 100 பதிவுகளிலும் [ஜனவரி முதல் ஜூன் வரை] எந்தப்படமும் என்னால் இணைக்கப்படவில்லை. 

இதுபோல கவர்ச்சிப்பட விளம்பரங்கள் ஏதும் இல்லாமலேயே என் முதல் நூறு பதிவுகள் பதிவுலகச் சந்தையில் நல்ல வியாபாரம் ஆகி வரவேற்பு பெற்றது என்பதை நினைக்கும் போது, என் எழுத்துக்களின் மீது எனக்கே ஒரு புது காதல் பிறந்தது. 

பிறகு படங்களை இணைப்பது எப்படி என்று என் கைக்குழந்தை [வயது 28], ஒரு நாள் ஊரிலிருந்து இங்கு வந்தபோது, பெரிய மனது பண்ணி, எனக்குச் சொல்லிக்கொடுத்துச் சென்றது. 

அதன் பிறகு அதாவது ஜூலை மாதத்திலிருந்து பெரும்பாலும் என் பதிவுகளைப் படங்களுடன் வெளியிட்டு வருகிறேன்.  பொருத்தமான படங்கள் கிடைக்காவிட்டால், சில சமயம் நானே வரைந்தும் வெளியிட்டுள்ளேன். 


கலர் கலராக ஃபிகர்களைப் பார்ப்பதில் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் தானே! 


அறுபதிலும் ஆசை வரும்’ என்று சும்மாவா சொன்னார்கள்? அது வந்து விட்டதே எனக்கும்! அதனாலேயே ஃபிகர்களை இணைத்துக் கொண்டிருக்கிறேன், அதுவும் எனக்காக அல்ல, உங்களுக்காக மட்டுமே!! ;))))        

எனக்கு இது போன்ற பெருமைகளை இந்த ஒரே ஆண்டில் பெற்றுத்தந்த உங்கள் அனைவருக்கும் நான் வெளியிட்ட   ”HAPPY  இன்று முதல் HAPPY” என்ற என் பதிவினில், தனித்தனியாக நன்றி கூறி எழுதியிருந்தேன்.  


இப்போது மறுபடியும் உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

உங்கள் எல்லோரையும் 


(1) ஆத்மார்த்த நட்புடன் பழகுவோர் 


(2) அலாதிப்பிரியம் கொண்டவர்கள் 


(3) அதீத அன்பு கொண்டவர்கள் 


(4) நல்ல நட்புள்ளம் கொண்டவர்கள் 


என வகைப்படுத்தி தனித்தனியே உங்கள் அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதலாம் என்று தான் முதலில் நான் யோசித்தேன். 


ஆனால் அந்தப்பட்டியல் எங்கள் ஊர் மலைக்கோட்டையைவிட மிகப் பெரியதாக இருப்பதால், மலைத்துப்போய் அந்த என் எண்ணத்தையே கைவிட்டுவிட்டேன். 

இந்த 2011 என்ற ஒரே ஆண்டுக்குள் நான் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்ல “ஏணி” யாகவும்,   இக்கரையில் இருந்த என்னை வெற்றி என்ற அக்கரைக்கு ஏற்றிச் சென்ற “தோணி” யாகவும், சிதறிய குப்பைகள் போல இருந்த என் சிந்தனைகளை, ஒருமுகப்படுத்தி, அன்பென்னும் பின்னூட்டங்களால் அவற்றை அள்ளிக்குவித்து, வெற்றி என்ற இலக்கை நோக்கி மூட்டைகட்டி எடுத்துச்செல்ல ”கோணி” யாகவும் இருந்து உதவிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.   


சமீபத்திய நிலவரப்படி என் வலைப்பூவினைப் பின் தொடர்பவர்கள் [Followers] எண்ணிக்கை 170 ஐத் தாண்டியும், இண்ட்லி மூலம் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 60 ஐத் தாண்டியும் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


என்னுடைய ஒருசில சொந்தக்காரணங்களாலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் மாறுபட்ட குடும்பச் சூழ்நிலைகளாலும், இந்த 2011 ஆம் ஆண்டு போலவே, நாளை துவங்க இருக்கும் 2012 ஆம் ஆண்டிலும், தொடர்ந்து இதே வேகத்தில் என்னால் செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 


அவ்வப்போது எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, பதிவுலகில் என்னுடன் இதுவரைப் பேரன்பு செலுத்தி, ஆத்மார்த்த நட்புடனும், மிகுந்த வாத்சல்யத்தோடும், பழகிவரும் ஒருசிலரை என்றும் என்னால் ..........................
”மறக்க மனம் கூடுதில்லையே”   
http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html


அதனால் என்னால் முடிந்தவரை, முடிந்தபோது, புதிய பதிவுகளுடன் உங்களை சந்திக்கத்தான் நான் முயற்சிகள் மேற்கொள்வேன்.  


”புத்தாண்டு ஆரம்பித்ததும், இன்றுபோல ஸதா சர்வகாலமும் கம்ப்யூட்டரையே கட்டிக்கொண்டு அழுவதை கட்டாயமாகக் குறைத்துக் கொள்கிறேன்” என்று என் மேலிடத்திடம் உறுதிமொழி அளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு சமீபத்தில் ஆளாக நேர்ந்தது, எனக்கு. 


எனக்குள்ள சில பிரத்யேக மனக்கவலைகளை மறக்கத்தான் வலைப்பக்கமே சுற்றிச்சுற்றி வருகிறேன் நான், என்பது தெரியாமல் ஏதேதோ பிரச்சனைகளைக் கிளப்புகிறார்கள் என்னுடன் இங்கு உள்ளவர்கள். 


ஆனாலும் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டாவது கம்ப்யூட்டரில் உட்காரத்தான் முயற்சிப்பேன் நான். ஏனென்றால் ’சொறிபிடித்தவன் கை சும்மாயிருக்காது; அது எப்போதும் சொறிந்து கொண்டே தான் இருக்கும்’ என்று ஒரு பழமொழி சொல்வார்களே!  அதுபோலவே பதிவு எழுதி ருசிகண்டவர் கையும் சும்மா இருக்காது அல்லவா!


மேலும்,நாம் பிறருக்கு அவ்வப்போது கொடுக்கும் எல்லா உறுதிமொழிகளும், அநேகமாக பிரஸவ வைராக்யம், ஸ்மஸான வைராக்யம் போலத்தானே கடைசியில் முடிகிறது! என்ற தைர்யம் ஒருபுறம் உள்ளது.


நான் இதுபோல என் மனதினில் நினைத்துக் கொண்டிருந்தாலும், என் யதார்த்த வாழ்க்கையில் ’நாளை என்ன நடக்கும்’ என்பது எனக்கே தெரியாது. நாம் நல்லதையே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்!! 


பிறகு தெய்வசங்கல்ப்பம் எப்படியோ! அதன்படியே நடக்கட்டும்!! 


இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 
மற்றும் 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



என்றும் அன்புடன் தங்கள்

      
 
  

வை. கோபாலகிருஷ்ணன்
31.12.2011











2012 ஆம் ஆண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் 
நம் மனதை எப்போதும் நாம்
ஜில்லென்று வைத்துக்கொள்ளவே முயற்சிப்போம்









புதன், 28 டிசம்பர், 2011

காவேரிக்கரை இருக்கு! கரைமேலே ____ இருக்கு!!



காவேரிக்கரை இருக்கு! 
கரைமேலே ___ இருக்கு!!



[ கட்டுரை - ஆன்மிகம் ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் 


தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் கடவுள் ”ஸ்ரீமந் நாராயணன்” என்பதை தன் தந்தையாகிய ஹிரண்யகசிபுவுக்கு, தன் பக்தியால் நிரூபித்துக் காட்டியவர் பிரகலாதன். குழந்தையாகிய பிரகலாதனின் தீவிர பக்திக்கும், திட நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டு திருமால் எடுத்த அவதாரமே ’ஸ்ரீ நரஸிம்ஹா அவதாரம்’ என்பது நாம் அனைவரும் அறிந்ததோர் புராணமாகும். 

இந்த ஸ்ரீ நரஸிம்ஹருக்கு பல ஊர்களில் பல பெயர்களில் கோயில்கள் உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மிகப்பிரபலமான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.

இதே திருச்சியில் காவிரி நதியின் தென்கரை ஓரமாக, காவிரி நதியை ஒட்டி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயிலைப்பற்றி இந்தப்பதிவில் பார்ப்போமா! 



கோயிலின் முகப்புத்தோற்றம்






 ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில்

உற்சவர்: ஸ்ரீ பூமிநீளா ஸமேதஸ்ய ஸ்ரீ ரெங்கநாதர்
கருடசேவை லெக்ஷ்மி நரசிம்மர்

ஓடத்துறை, கீழச்சிந்தாமணி, திருச்சி-2

ooooOoooo



வற்றாத ஜீவ நதியாம் காவிரி கரைபுரண்டு ஓடுவதைப்பார்ப்பதே அழகு, இந்த அழகிய ஸ்ரீ நரசிம்ஹரைப் பார்ப்பதும் அழகு. இந்தக் கரைபுரண்டு ஓடும் காவிரியையும் இந்த அழகிய ஸ்ரீ நரசிமஹரையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்த்து மகிழும் ஒரே இடம் தான் இந்த ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில். 


கோயிலின் பின்புறக்கதவைத் திறந்து ஒரு ஐந்து படி இறங்கினால் போதும், பெருமகிழ்ச்சியுடன் பொங்கிப் பெருகிவரும் காவிரியில் நாம் இறங்கிப் புனித நீராடிட முடியும். 


அவ்வளவு ஒரு நெருக்கம் இந்தக்காவிரி ஆற்றுக்கும் இந்தக்கோயிலுக்கும். 




கோயிலின் உள்ளிருந்து பார்த்தாலே காட்சிதரும் காவிரித்தாய்




காவிரி ஆற்றினால் இந்த ஸ்ரீ நரசிம்ஹர் அழகாகத் தெரிகிறாரா அல்லது இந்த நரசிம்ஹரின் அழகினால் காவிரி ஆறு அழகாகத் தோன்றுகிறதா என நினைக்க வைக்கும் விதமாக உள்ளதால், இவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் என்ற திருநாமத்துடன் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. பின்புற வடக்கு வாயிலைத் திறந்தால் காவிரியைக் கண்டு களிக்க முடிகிறது.





நம்பிக்கையுடன் கோயிலின் உள்ளே நுழையும் நம்மை முதலில் வரவேற்பவர்
கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ”தும்பிக்கை ஆழ்வார்” எனப்படும் ’விநாயகர்’ 





அடுத்து, 
சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் எனப்போற்றப்படும் 
ஸ்ரீ ஆண்டாள் சந்நதி 
[அதுவும் கிழக்கு பார்த்தே அமைந்துள்ளது]





சுவர்க்கத்தின் வாசல் போன்ற கோயிலின் 
பிரதான நுழைவாயிலுக்குள் செல்லும் நமக்கு 
இடதுபுறம் கருடனும், வலது புறம் ஹனுமனும் காட்சியளிக்கிறார்கள்.



மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள்
தன் மடியினில் அம்பாளை அமர்த்திக்கொண்டு 
கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.



மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய 
சிங்கப்பெருமாள் சந்நதி
[முழுத்தோற்றம்]



பெருமாளுக்கு எதிர்புறம் 
மேற்கு நோக்கியபடி 
அமர்ந்திருக்கும் கருடாழ்வார்




கருடாழ்வார் 
[சற்றே பெரியதாக]


ஸ்ரீ நம்மாழ்வார், 
பெருமாள் ஸ்ரீ ரங்கநாதர்,  
ஸ்ரீ இராமானுஜர்+மணவாள மாமுனி சந்நதிகள்


பெருமாள் ஸ்ரீ ரங்கநாதர் [தனியே] 


நம்மாழ்வார் [தனியே]

  
ஸ்ரீராமானுஜர் + மணவாள மாமுனி [தனியே]


வரும் 05,01.2012 நடைபெற உள்ள 
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருவிழா பற்றிய அறிவிப்புப் பலகை



ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மூலமந்திரம் + ஸ்தோத்ரம்



கோயிலில் வைத்துள்ள ஓர் யானைப்படம் 





வியாதிகள் போன்ற சத்ருக்களிடமிருந்து 
சுதர்ஸனச் சக்ரத்தால் காத்து 
நம்மை ரக்ஷிக்க வேண்டி 
ஓர் ஸ்லோகம் கோயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள்து. 




ஆஞ்சநேய வைபவம் பற்றி கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்பு



விசேஷ நாட்களில் நடைபெறும் திருமஞ்சனம் 
பற்றிய ஓர் நிரந்தர அறிவிப்பு கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.



மூலவரை பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் பாதையில் பல்வேறு ஊர்களில் உள்ள 
ஸ்ரீ நரசிம்ஹரை பெரிய பெரிய படங்களாக வைத்துள்ளனர்:


சோளிங்கர்


நாமக்கல்


நாமக்கல்


ஓடத்துறை


ஒத்தக்கடை, ஆனைமலை, மதுரை
ஸ்ரீயோக நரசிம்ஹர்


சிங்கிரிக்குடி


ஸ்ரீகாட்டழகிய சிங்கர்


பரிக்கல்



தாடிக்கொம்பு [திண்டுக்கல்]



ஸ்ரீ பிரஹலாத நரசிம்மர் - பெங்களூரூ


ஸ்ரீசுந்தரலக்ஷ்மி நரசிம்ஹர் - ஸ்ரீரங்கம்



ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள்



நெற்றிக்கண் ஆஞ்சநேயர் - ஓடத்துறை



சிறிய கோயிலின் சிறந்த சுற்றுப்பாதை


கோயிலில் வைத்துள்ள வேறுசில படங்கள்





சரணாகதி ஸ்லோகம் 


1. மாதா நிருஸிம்ஹ: பிதா நிருஸிம்ஹ
2. ப்ராதா நிருஸிம்ஹ: ஸகா நிருஸிம்ஹ
3. வித்யா நிருஸிம்ஹ: த்ரவிணம் நிருஸிம்ஹ
4. ஸ்வாமி நிருஸிம்ஹ: ஸகலம் நிருஸிம்ஹ
5. இதோ நிருஸிம்ஹ: பரதோ நிருஸிம்ஹ
6. யதோ யதோ யாஹி; ததோ நிருஸிம்ஹ
7. நிருஸிம்ஹ தேவாத் ந பரஞ்ச கிஞ்சித்
8. தஸ்மான் நிருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே! 


அதன் தமிழாக்கம்.... இதோ இங்கே


1. நரசிம்மனே தாய். நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே செல்வமும் நரசிம்மனே
4. எஜமானும் நரசிம்மனே எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே 
    பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை
8. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்!


அனுதினமும் காலை, மாலை விளக்கேற்றி, 
இந்த திவ்ய சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை பதினாறு முறை படித்துவர மிக்க நற்பலன்கள் உண்டாகும். 
நம் பிரார்த்தனைகள் கட்டாயம் நிறைவேறும் 
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.







’ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’
போன்ற அழகான ஆண்டாள் பாசுரங்களைப் பாடி மகிழ்விக்கும்
திரு. C. அனந்தகிருஷ்ணன் அவர்கள் 


தொடர்புக்கு:


ஸ்ரீ C. அனந்தகிருஷ்ணன் அவர்கள்
அறங்காவலர்
செல்போன்: 98651 42307
ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில்
ஓடத்துறை, 
கீழச்சிந்தாமணி
திருச்சி 620 002


 

Dr. M. SANKARAN 
Retd. HOD [ENGLISH DEPARTMENT] 
NATIONAL COLLEGE, TIRUCHI
இவர் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் 
பரம்பரையில் பிறந்துள்ளவர்.
1975 முதல் தொடர்ச்சியாக 
மேற்படி கோயிலுக்கு தனுர்மாத 
திருப்பள்ளியெழுச்சி உபயபூஜா கைங்கர்யங்கள் 
மிகவும் சிரத்தையுடன் செய்து வருபவர்.
தொடர்புக்கு
2E, SIVASHAKTHI TOWERS
5, NORTH ANDAR STREET
TIRUCHIRAPALLI-620 002
கைபேசி: 8903232796 


இந்தக் கோயிலுக்குச்செல்லும் வழி:


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து
10 நிமிட நடைபயணத்தில் தான் இந்தக் கோயில் உள்ளது.


திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து, 
ஸ்ரீரங்கம் + திருவானைக்கா நோக்கி 
ண்டிகளில் பயணம் செய்வோர், 
காவிரி புதுப்பாலத்தின் மேல் ஏறாமல்
அதற்கு சற்று முன்பே, 
வலதுபுறமாக கீழிறங்கிச் திரும்பிச்செல்லும் 
தனிவழிபாதையில் சென்றால் 
உடனடியாக வரும் 
ரெயில்வே லெவல் கிராஸிங்குக்கு முன்பு 
இந்தக்கோயில் வந்துவிடும்.







-[ சுபம் ]-




2002 முதல் ஒவ்வொரு மார்கழி மாத உத்திராட நக்ஷத்திரத்தன்றும் 
விடியற்காலம் 5 மணிக்கு இந்தக்கோயிலுக்குச்சென்று 
சிறப்புப்பிரார்த்தனைகள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்

அதன்படி நேற்று 26.12.2011 அன்று சென்று வந்தபோது, 
என் தொடர்ச்சியான பெருமாள் தரிஸனத்தின் பத்தாம் ஆண்டு நிறைவுக்காக 
இதுபோன்ற ஒரு பதிவை எழுதி வெளியிட வேண்டும் 
என்று எனக்கு மனதில் தோன்றச்செய்ததும் அந்த 
ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாளே!





ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே!


-oOo-

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
27th December, 2011