About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, November 13, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை  

[நெடுங்கதை By வை. கோபாலகிருஷ்ணன்]


உடம்பெல்லாம் உப்புச்சீடை[1]
மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது. தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும். வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம். குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி. 


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். 

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.

தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.

புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள். 

“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும். 

[2]
”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.

பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?[4]

”யோவ் .. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்ய காசிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச் சாப்பிடக் கூடாது.

நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதீங்க; ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில், முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப் படறோம்.

வேறு எங்காவது ஒத்தை சீட்டு இருந்தா, நீர், டீ.டீ.ஆர். இடம் சொல்லி மாத்திண்டு போய்ட்டாக் கூட உமக்குப் புண்ணியமாப் போகும்” என்று பட்டாஸ் கட்டைப் பற்ற வைத்தது போல வெடிக்க ஆரம்பித்தார், பட்டாபி.

இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.

வெகு நேரம் ஆகியும், அந்த ஆசாமியைக் காணாததால், சற்று நிம்மதி அடைந்திருந்தனர், பட்டாபியின் குடும்பத்தினர்.

“ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில், அந்த மனுஷன் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?” பங்கஜம் தன் கணவனிடம் சிரித்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இருக்காது; அவனைப் பார்த்தால், நீ சொல்வது போல ஓடும் ரயிலிலிருந்து குதித்து உயிரை விடும் அளவுக்கு மானஸ்தனாகத் தெரியவில்லை. பரதேசிப்பயல் ... இங்கு எங்காவது தான் கழிவறைக்குப் போய் இருப்பான். வந்துடுவான்” என்றார் பட்டாபி.

“இப்போது சாப்பாட்டு மூட்டையைப் அவிழ்த்தால், உடனே அவன் வந்து, அது என்ன? இது என்ன? என்று கேட்டுக் கேட்டே கழுத்தை அறுத்து நம்மைச் சாப்பிட விடாமல் சங்கடப் படுத்தி விடுவான். என்ன பண்ணித் தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைந்தானோ? நாம் பண்ணின பாபம் நம்மைக் காசி வரை துரத்தி வருகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல், நிற்க ஆயத்தமாகி, இஞ்ஜின் பெருமூச்சு வாங்குவது போல சத்தம் கேட்டது.

அந்த ஆசாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தார். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, ”தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா” என்பது போல, இவர்களை ஒரு பார்வை பார்த்தார். அவர்கள் அவரைக் கொஞ்சமும் கவனிக்காதது போலவும், வேறு எங்கோ பார்ப்பது போலவும், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு, “தம்பீ .... நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?” என்றார். கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்தார். பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு அவர் அந்தப் பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக ரயில் பயணத்தை அனுபவியுங்கள். நீ எனக்கான லோயர் பெர்த்தில் படுத்துக்கோ; நான் உனக்கான அப்பர் பெர்த்தில் போய் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய எல்லா சாமான்களுடனும், குடிபெயர்ந்து மேலே ஏறி விட்டார் அந்த ஆசாமி.

கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.

இதுதான் நல்ல சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து, இரவு சாப்பாட்டை திருப்தியுடன் முடித்துக் கொண்டது, பட்டாபி கோஷ்டி.

“நாளைய ஒரு நாள் முழுவதும், நாம் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காமல், மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று இவர்களுக்குள் நினைத்துக் கொண்டனர்.


[5]

அதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.

நாக்பூரில் மட்டும், அப்பர் பெர்த்தில் அமர்ந்தபடியே அவர், மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல, கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழங்கள் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்த அவரின் ’கேரி பேக்’ ஒன்று இப்போது, மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பரிதாபமாக காட்சியளித்தது.

அவர் இரண்டொரு முறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி கவனித்திருந்தார். மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு மணி 10.45 க்கு, ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். அந்த ஆசாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தை [இப்போது போல செல்போன் பிரபலமாகாத காலம் அது] சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். பட்டாபி கோஷ்டி விடியற்காலம் 4.50 க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும்.


குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

மறு நாள் அதிகாலை, அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி, அதை மேலும் தொடர்ந்து அடிக்க விடாமல், அதன் தலையில் ஒரு குட்டு குட்டி, அதை ஊமையாக்கினார்.

லைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் தூக்கம் கலைந்து எழுந்து விடக்கூடும் என்ற பயத்திலும், காலை வேளையில் அதன் முகத்தில் மீண்டும் முழிக்க விருப்பமின்றியும், மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்திலேயே, தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா+  பங்கஜம் உதவியுடன், ரயில் பெட்டியிலிருந்து இறங்க வேண்டிய கதவுப் பகுதி அருகில், அவர்கள் தாமதமின்றி உடனே இறங்குவதற்கு வசதியாக வைத்துக் கொண்டார். விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார், பட்டாபி.

குழந்தைகள் ரவியையும், கமலாவையும் மெதுவாக எழுப்பி, அவர்கள் முகத்தை வாஷ் பேசினில் அலம்பித் துடைக்கவும், வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.

மூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து, ஒருவழியாக டாக்ஸியில் ஏறி அமர்ந்தது அந்தக் குடும்பம்.


[6]


சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.


சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவதுஅதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” 


VARANASI  ஸ்நான கட்டம் - காசி கங்கைக்கரை


கங்கா யமுனா சரஸ்வதி நதிகள் கலக்கும் 
 திரிவேணி சங்கமம் அருகே - அலஹாபாத்


g


G H A Y A
கயா ஸ்ரார்த்தம் செய்து காசியாத்திரை முடிக்குமிடம்ஸ்ரீ காசி விஸ்வநாதர். ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ விசாலாக்ஷி 


ஸ்ரீ காசி விஸ்வநாதர் - சிவலிங்கம்


காசி மாநகரைக்காக்கும் 
காவல் தெய்வம் காலபைரவர்.
கையில் ரக்ஷையாகக் கட்டும் காசிக்கயிறுகள் 
மந்திரம் சொல்லி கொடுக்கப்படும் கோயில்.புனித கங்கா ஜலம் உள்ள 
கங்கைச்சொம்பு


காசி கங்கைக்கரையின் பல்வேறு ஸ்நான கட்டங்கள்என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.  அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும், பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.


சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.


அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.


கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.


குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.


பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.


கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.


இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.


எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.


எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.


[7]

தன் நித்யப்படி பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சங்கரமடத்து சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல பட்டாபியும், பங்கஜமும் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.சங்கர மடத்து வாசலில் புல்வெளிகளில் படுத்திருந்த பசுமாடுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரவி + கமலா வின், கவனம் தங்கள் அருகில், படபடவென்ற சப்தத்துடன் வந்து நின்ற ஆட்டோ பக்கம் திரும்பியது.


“கோன் ஐஸ் வாங்கித் தந்த, ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’ த் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” எனக் கத்திக்கொண்டே, ரவியும் கமலாவும், சங்கர மடத்தின் உள்பக்கம் இருந்த விமலாவிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தனர்.“வாங்கோ, வாங்கோ, வரணும்! தங்கள் வரவு நல்வரவு ஆகணும்., உட்காருங்கோ! என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி விட்டு, தன் மேல் அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு, மிகவும் பெளவ்யமாக, வந்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.வந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிராணி) தான். அவர் கையில் அஸ்திக்கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல், இருந்தது. இதைப் பார்த்த பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்னே! அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது! 

அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு. 
“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு, நீங்கள் எல்லோரும் அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாத ரக்ஷைகளை (செருப்புகளை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது.


உங்களுடையாகத் தான் இருக்கும்; இங்கு எங்காவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன்.நான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து, நானும் அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன்.

நல்லவேளையாக உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார். 


கைகள் நடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி. 


அட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதை சங்கர மடத்து சாஸ்திரிகள் மூலம் கேள்விப்பட்ட அந்தப் பெரியவர், அதைத் தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்கு விரைந்தார். அதற்குள், அந்தப் பெரியவரின் அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள், பட்டாபி தம்பதிக்கு விளக்க ஆரம்பித்தார். 


“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர்.


அவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.அவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கம், காவேரிக்கரை ஓரம் ஏதோ ஒரு கிராமம். ஏழு தலைமுறைகளா வேதம் படித்து வரும் குடும்பம். வேதத்தை ரக்ஷிக்கும் பரம்பரையில் வந்தவா !சங்கர மடத்து ஆச்சார்யாள், ஜகத்குரு மஹாபெரியவா ஆக்ஞைப்படி, கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார்கள். இந்த கங்கைக் கரைப் பக்கம், இவாளைத் தெரியாதவாளே கிடையாது. 
வேதம் படிச்சு முடிச்சவாளுக்கெல்லாம் “வித்வத் சதஸ்” ன்னு, ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி உட்கார்ந்து, தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவா !ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார்கள். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும் எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதுமே பிரார்த்திப்பவர்கள். 


இந்த மஹான் உங்களுடன் ஒரே ரயிலில், ஒரே கம்பார்ட்மெண்டில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது நீங்கள் செய்த ஒரு பெரிய பாக்யம்தான்னு சொல்லணும். நீங்களோ அல்லது உங்களின் அப்பாவோ செய்த புண்ணியம் தான், நீங்கள் ரயிலில் தவற விட்ட உங்க அப்பாவின் அஸ்திக்கலசத்தை, இந்த வேதவித்தாகிய ஒரு பெரிய மஹான், தன் கைப்படவே தூக்கி வரும்படி நேர்ந்துள்ளது. கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ !

அந்த அட்டைப்பெட்டியில் உள்ளே உள்ளது என்ன ஏது என்றே தெரியாமல், பத்திரமாக உங்களிடம் சேர்த்திருக்கிறா பாருங்கோ! ; எல்லாம் பகவத் சங்கல்ப்பம்.

நீங்கள் மிகவும் ஸ்ரத்தையாக காசிக்கு வந்து கங்கையில் உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கணும்னு வந்த காரியம் வீண் போகவில்லை, பாருங்கோ !நான் அவாள்ட்ட வேதம் படிக்கும் போது, மிகவும் தேஜஸுடன் அழகாக மினுமினுப்பாக இருந்தவர் தான் இந்த என் குருநாதராகிய மஹான்” எனச் சொல்லி, தான் அவரிடம் பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப் பட்ட (கருப்பு வெள்ளை) க்ரூப் போட்டோ ஒன்றைக் காட்டினார்.“ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது” என மிகவும் வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.சங்கர மடத்து சாஸ்திரிகள் வாயால், ரயிலில் தன்னுடன் கூடவே பயணித்தவரின் மஹிமைகள் பற்றிச் சொல்லுவதை உன்னிப்பாகக் கேட்டதும், யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி. 

[8]

சமையல் கட்டுக்குள் நுழைந்த சங்கர மடத்து சாஸ்திரிகள், தன் தர்ம பத்னியிடம் “என் குருஜி - பாடசாலை வாத்யார் - பெரியவர் வந்திருக்கார். ஸ்நானம் பண்ண கொல்லைப்பக்கம் கிணற்றடிக்குப் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.அவர் வந்ததும் சாப்பிட சூடா கோக்ஷீரம் (பசும்பால்) பனங்கல்கண்டு போட்டு,  வெள்ளி டவரா டம்ளரில் கொடுத்துடு.

பிறகு நம் ஆத்திலேயே சாப்பிடச்சொல்லி அவாளை நாம் வேண்டிக் கேட்டுக்கொள்வோம். பாயஸம் பச்சிடியோட சாப்பாடு தயார் செய்துடு. நுனி இலை நேத்திக்கு வாங்கி வந்ததே இருக்கும்னு நினைக்கிறேன்; முடிஞ்சாக் கொத்துமல்லித் தொகையல் கொஞ்சம் அரைச்சுடு. அதுனா அவா கொஞ்சம் இஷ்டமாச் சாப்பிடுவான்னு எனக்கு ஏற்கனவே நன்னாத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், ரவி. 


அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த, பட்டாபி பங்கஜம் தம்பதியின் கண்ணீர் அவரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருந்தது. 


“மாமா ... என்னை நீங்கள் தயவு செய்து க்ஷமித்துக் கொள்ளணும் (மன்னித்துக் கொள்ளணும்).


ரயிலிலே வரும்போது, தாங்கள் யார், தங்கள் மஹத்துவம் என்ன என்று தெரியாமல், அடியேன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டேன்.


பாவத்தைப் போக்க வந்த இடத்தில், பல்வேறு பாபங்களை மேலும் சம்பாதித்து விட்டேன். இப்பொது நான் மஹாபாவியாகி விட்டேன்.

தயவுசெய்து இந்த மிகச்சிறிய தொகையான இருபதாயிரம் ரூபாயை தங்களுக்கு நான் தரும் வித்வத் ஸம்பாவனையாக தாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்களை மனப்பூர்வமாக மன்னித்து ஆசீர்வதிக்கணும். அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் கொஞ்சமாவது சற்று ஸாந்தி அடையும். தயவு செய்து மறுக்காமல் ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி ஒரு தட்டில் வெற்றிலை பாக்குப் பழங்களுடன், அந்தப் பணம் ரூ. 20000 த்தையும் அவர் முன்பாக வைத்து சமர்ப்பித்து விட்டு, பிறகு தன் இரு கன்னங்களிலும், தன் கைகளால், நல்ல வலி ஏற்படும்படி பளார் பளாரென்று, அறைந்து கொண்டார், கண்ணீருடன் பட்டாபி. 


இதைக் கேட்ட அந்தப் பெரியவர் ஒரு குழந்தை போல சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்:

“நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.

கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.

ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.
கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.

அந்த ஞானம் என்பதும் பகவத் க்ருபை இருந்தால் மட்டுமே ஏற்படுவது. தொடர்ந்து பக்தி செய்யச்செய்ய அந்த மனப் பக்குவம் தங்களுக்கும் சீக்கரமாகவே ஏற்பட்டுவிடும்.

அடுத்த க்ஷணம் யாருக்கு என்ன நடக்கும் என்பது, நம் பூர்வ ஜன்மத்து பாவ புண்ணியச் செயல்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

அதனால் நீங்கள் என்னை ரயிலில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகச் சொல்லுவதோ, நான் அதற்காக வருத்தப்பட்டதாக தாங்கள் நினைத்துக்கொண்டு வருந்துவதோ முற்றிலும் தவறான ஒரு அபிப்ராயமே.

நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.

உங்களிடம் உண்மையாகவே கோபப்பட்டவனாக நான் இருந்திருந்தால், நீங்கள் மறந்து போய் ரயிலில் விட்டுச்சென்ற இந்தப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் உங்களை சந்திக்க விரும்பியிருக்குமா என் மனஸு?

எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.

நமது வேத சாஸ்திரங்கள் படித்தவாளுக்குத் தான் இந்த உண்மைகள் ஓரளவுக்குத் தெரிந்து, அந்த மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும்.

அது போன்ற மனப் பக்குவம் வந்து விட்டால், எந்த வயதை எட்டினாலும், நாமும் தங்கள் குழந்தை ரவி போல, கள்ளங்கபட மில்லாத, எதற்கும் பயம் என்பதே இல்லாத, தெளிவான மன நிலையை அடைந்து, பிரகலாதன் போல மாறி, நடப்பதெல்லாம் அந்த நாராயணன் செயல் என்பதை சுலபமாக உணர்ந்து விட முடியும்.

நீங்கள் எனக்கு ஸம்பாவனையாகக் கொடுக்க நினைக்கும் இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதை எடுத்து முதலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கோ!

அதற்கு பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப் பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ!

இங்கு பக்கத்திலேயே ஒரு வேத பாடசாலையில் சுமார் அறுபது வித்யார்த்திகள் (வேதம் பயின்று வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்), குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ;


தங்கள் குழந்தை ரவி கையால் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டோ, சாக்லேட்களோ அல்லது பழங்களோ விநியோகம் செய்யச் சொல்லுங்கோ. நம் ரவிப்பயல் போலவே அந்தக் குழந்தைகளும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

நாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தால், எல்லா பாபமும் விலகி விடும். உங்களுக்கு சகல க்ஷேமமும் ஏற்படும்” என மனதார வாழ்த்தி கை தூக்கி ஆசீர்வதித்தார், அந்த வேத வித்தான பெரியவர்.

அந்தப் பெரியவரை உற்று நோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில் “நடமாடும் தெய்வமாய், கருணைக் கடலாய் இன்றும் நம்மில் பலரின் உணர்வுகளில் வாழும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்” ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.அழகிய உடலோ
அருவருப்பான உடலோ

உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய, 
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய   
பொருளாகி விடுகிறது.

அதை எரிக்க வேண்டிய 
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும் 
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்

அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!


பெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது, பட்டாபிக்கு.-oooooooooo-
முற்றும்   
-oooooooooo-


ஓர் முக்கிய அறிவிப்பு


இறுதிப்பதிவாக HAPPY இன்று முதல் HAPPY என்ற தலைப்பில்

நான் என்னுடைய மகிழ்ச்சிகளை உங்கள் எல்லோருடனும் 

பகிர்ந்து  கொள்ள இருக்கிறேன். 

அந்தப்பதிவு இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும்.


காணத்தவறாதீர்கள்.

அன்புடன்


vgk27. ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:- 
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 
[கருணாகரவல்லி அம்மன்] 

இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 
(40கி.மீசென்று, அங்கிருந்து வேறு 
பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை 
(21 கி.மீ.,செல்ல வேண்டும். 


இங்கிருந்து 5 கி.மீ., தூரத்திலுள்ள 
காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.


27/27


என்னை இந்த வாரம் 07.11.2011 திங்கள் முதல் 13.11.2011 ஞாயிறு வரை தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக அறிமுகப்படுத்தி கெளரவித்த, தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, விடைபெறுகிறேன். 

எனக்கு இதில் ஊக்கம் கொடுத்து ஒத்துழைப்பு அளித்த மற்ற அனைவரையும் இன்று இரவு வெளியிட இருக்கும் என் அடுத்த பதிவினில் சந்திக்க இருக்கிறேன். அனைவருக்கும் நன்றிகள். வணக்கம். 
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
vgk ]
gopu1949.blogspot.com


-o- சுபம் -o-

48 comments:

 1. தங்கள் பதிவுகளிலேயே நான் மிகவும் மனம் நெகிழ்ந்து படித்த, என் மனதில் முதல் இடம் பிடித்த பதிவு இதுதான்.இதனை மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 2. மேலே இருக்கும் ஓவியப் படங்கள் தாங்கள் வரைந்ததா? அதிலும் முதலில் இருக்கும் முதியவரின் படம் கதைக்கு சரியாகப் பொருந்தியுள்ளதே!

  ReplyDelete
 3. //சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
  என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!//
  இயற்கையிலிருந்து வந்தது இயற்கைக்கே திரும்ப செல்ல வேண்டும் என்ற நியதிதான் இது. 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்று சொல்லும் மிக நல்ல கதை சார்.

  ReplyDelete
 4. // raji said...
  மேலே இருக்கும் ஓவியப் படங்கள் தாங்கள் வரைந்ததா? அதிலும் முதலில் இருக்கும் முதியவரின் படம் கதைக்கு சரியாகப் பொருந்தியுள்ளதே!//

  நான் வரைந்தது அல்ல.

  (ஆனாலும் அதைப்பார்த்து என்னாலும் அப்படியே தத்ரூபமாக இன்றும் வரைய முடியும் - Happy mood without disturbances இருந்தால் போதும்)

  இந்தக்கதை மார்ச் 2006 மங்கையர் மலரில் [திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் அதன் ஆசிரியராக இருந்த போது]பக்கம் எண் 98 to 112 இல், என் மனைவி “வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

  மங்கையர் மலர் பத்திரிகையைச் சேர்ந்த ஓவியர் ஒருவரால் வரையப்பட்டது. அதை போட்டோ எடுத்து கம்ப்யூட்டரில் ஏற்றி, நான் என் பதிவில் கொண்டு வந்துள்ளேன்.

  உங்களுக்குப் பிடித்த கதை என்பதாலும், உங்கள் பிறந்த நக்ஷத்திரமாக இருக்கலாம் என்று நான் ஊகித்ததாலும், அப்போதைய மங்கையர் மலர் பத்திரிகை ஆசிரியர் அவர்களின் பெயர் “ரேவதி” என்பதாலும், இன்று ரேவதி நக்ஷத்திரக்கதையாக இதைக் கொண்டு வந்துள்ளேன். vgk

  ReplyDelete
 5. என் உண்ர்வுகளை வார்த்தைகளில் அணையிட முடியாது. உங்கள் கதை படித்த போது நான் கண் கலங்கினேன். இக்கதையை பகிர்ந்ததற்கு நன்றி.

  //லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்//

  நிறைய இடங்களில் நகைச்சுவை தெளித்திருக்கிறீர்கள். ரசித்தேன்.

  ReplyDelete
 6. ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்./

  வெல்லசீடையாக தித்திக்கும் அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. உங்களின் சிறந்த 10 கதைகள் என்று கொண்டு வந்தால் அதில் இந்தக் கதை நிச்சயம் உண்டு..

  ReplyDelete
 8. ரேவதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்:- அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் [கருணாகரவல்லி அம்மன்] /

  பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. இளங்கன்று பயம் அறியாது என்பது போல, மெதுவாக அந்தப் பெரியவரின் வலது கைவிரலில் இருந்த ஒரு கொப்பளத்தைத் தொட்டுத் திருகிப் பார்த்தான், ரவி.
  இதைப் பார்த்த பங்கஜத்திற்கும், பட்டாபிக்கும் ரத்தக் கொதிப்பு அதிகமானது. /

  அப்படித்தானே உணர்ந்திருப்பார்கள்!

  ReplyDelete
 10. திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி அருமையாய் கதையில் கொண்டுவந்து அழகாய் கோர்த்த சாமர்த்தியத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. மீள்பதிவாயினும் கூட படித்தவர்களை அவசியம்
  மீண்டும் ஒருமுறை படிக்கத் தூண்டும் அற்புதப் பதிவு
  மீண்டும்,ஒருமுறை முழுவதும் படித்து ரசித்தேன் நன்றி
  இரவு ஒன்பது மணிப் பதிவை ஆவலுடன் எதிர்பாத்திருக்கிறோம்
  த.ம 5

  ReplyDelete
 12. எனக்கும் இந்த கதை மிகவும் பிடித்தது .உருவம் கண்டு எள்ளல் கூடாது .
  என்பதை அறிவுறுத்தும் சம்பவம் .மீண்டும் பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
 13. அழகிய உடலோ
  அருவருப்பான உடலோ
  உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
  அழுகக்கூடிய,
  நாறக்கூடிய
  அப்புறப் படுத்த வேண்டிய
  பொருளாகி விடுகிறது.
  அதை எரிக்க வேண்டிய
  அவசரமும், அவசியமும், நிர்பந்தமும்
  ஏற்படுகிறது.
  எரிந்த அதன் சாம்பலில்
  அழகும் இல்லை
  அருவருப்பும் இல்லை.
  சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
  என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!//
  Dear Mr. Gopalakrishnan
  You couldn't have summarized your story any better. "எரிந்த அதன் சாம்பலில் அழகும் இல்லை
  அருவருப்பும் இல்லை". Every word is worth a ton of gold. I wish you long life, good health and happiness.

  ReplyDelete
 14. Too good sir, As I was reading tears welled up in my eyes. I have never been to Allahabad or Varanasi. I do not know the various rituals. But you made me part of those rituals through your narration.

  The story makes the reader feel very good about life and its twists and turns.

  ReplyDelete
 15. நான் பதிவுலகுக்கு வந்த புதிதில், இந்த நெடுங்கதையை எட்டு சிறிய பகுதிகளாகப் பிரித்து 2011 ஜனவரி + பிப்ரவரி மாதங்களில் வெளியிட்டிருந்தேன்.

  அந்த பழைய வெளியீடுகளின் முதல் மற்றும் இறுதிப் பகுதிகளின் இணைப்புகள் இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/01/1-of-8.html பகுதி 1/8
  http://gopu1949.blogspot.in/2011/02/8-8.html பகுதி 8/8

  இப்போது இங்கு, அந்த எட்டு சிறுசிறு பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே பகுதியாக மாற்றி மீள் பதிவாக வெளியிட்டேன்.

  முன்பு வெளியிட்டபோதும், இப்போது மீள் பதிவாக வெளியிட்டபோதும் அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி, வெகுவாகப்பாராட்டி, மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்பிற்குரிய அனைத்துத் தோழர்களுக்கும் தோழிகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  ReplyDelete
 16. “ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது”

  எப்போது என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாத புதிரான வாழ்க்கையில் , தத்துவ விசாரணையோடு ஒரு நல்ல கதை.

  ReplyDelete
 17. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ, ஐயா, வாங்க, வணக்கம்.

  ஆம் ஐயா, எப்போது என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாத புதிரான வாழ்க்கையாகத்தான் உள்ளது. புரிந்து கொண்டு எழுதியுள்ள தங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன. மிக்க நன்றி.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 18. படிக்கும் போதே இதயம் நெகிழ்ந்து கண்கள் பனித்தன! அற்புதமான கதை! வாழ்க்கைத் தத்துவங்கள் பல்வேறு பாத்திரங்கள் மூலம் உணர்த்தப்பட்ட விதம் அருமை ஐயா! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Dear Mr E S Seshadri Sir, Welcome to you!

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இன்று 02 10 2012 வலைச்சரத்தின் மூலம் http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html இங்கு வருகை தந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.

   அன்புடன்
   VGK

   Delete
 19. வை.கோ சார் கதை மிக அருமை...இந்த கதையை படித்த பின்பு அத்தனை கதைகளையும் வாசிக்க மிக ஆவல்..

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள Ms. Asiya Omar Madam,

   வாருங்கள். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

   //வை.கோ சார் கதை மிக அருமை...// மிக்க நன்றி.

   தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்.

   //இந்த கதையை படித்த பின்பு அத்தனை கதைகளையும் வாசிக்க மிக ஆவல்..//

   சந்தோஷம் மேடம். இன்றைய 02 10 2012 வலைச்சரத்தில் நம் அன்புச்சகோதரி மஞ்சு அவர்கள், என் கதைகளின் நிறைய இணைப்புகளைக் கொடுத்துள்ளார்கள். அதைப்பயன் படுத்தி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாக, மெதுவாகப்படித்து கருத்துக்கூறுங்கள், மேடம்.

   நிறைய இணைப்புகள் தரப்பட்டுள்ள வலைச்சர இணைப்பு:
   http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

   அன்புடன் தங்கள்,
   VGK

   Delete
 20. மனதைத் தொட்டது இந்தச் சிறுகதை. நான் இதைப் படித்து ரசிக்கக் காரணமாயிருந்த வலைச்சர ஆசிரியர் மஞ்சுவுக்கு என் நன்றியும். அருமையான படைப்பினைத் தந்த உங்களின் வித்தக விரல்களுக்கு என் முத்தமும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த பாராட்டும் வாழ்த்துக்களும் ஐயா,

  ReplyDelete
 21. பால கணேஷ் October 2, 2012 10:45 PM
  மனதைத் தொட்டது இந்தச் சிறுகதை. நான் இதைப் படித்து ரசிக்கக் காரணமாயிருந்த வலைச்சர ஆசிரியர் மஞ்சுவுக்கு என் நன்றியும். அருமையான படைப்பினைத் தந்த உங்களின் வித்தக விரல்களுக்கு என் முத்தமும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த பாராட்டும் வாழ்த்துக்களும் ஐயா,//

  ஐயா, தங்கள் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது. என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் அன்பு வருகைக்குக் காரணமாக இருந்த என் அன்புத்தங்கை [அன்புத் த ங் க ம்] மஞ்சுவிக்கும் என் மனமார்ந்த நன்றிகளை நானும் இங்குக் கூறிக்கொள்கிறேன்.

  மிகவும் சந்தோஷம், Mr. பால கணேஷ் Sir.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 22. கதை மிக அருமை ஐயா,வலைச்சரத்தின் மூலம் இந்த பதிவை படிக்க நேரிட்டது,நன்றி!!

  ReplyDelete
 23. //S.Menaga October 30, 2012 9:34 AM
  கதை மிக அருமை ஐயா,வலைச்சரத்தின் மூலம் இந்த பதிவை படிக்க நேரிட்டது,நன்றி!!//

  வாருங்கள் WELCOME !

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  இந்தக்கதையினை மீண்டும் இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ள “எங்கள் ப்ளாக் - கே.ஜி. கெளதமன் சார்” அவர்களுக்கும் என் நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 24. வலைச்சரம் அறிமுகத்தால் (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) இந்த பதிவை படிக்க முடிந்தது...

  இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் November 27, 2012 6:21 PM
   //வலைச்சரம் அறிமுகத்தால் (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) இந்த பதிவை படிக்க முடிந்தது...

   இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...//

   தங்களின் முதல் தகவலுக்கு மிக்க நன்றி, நண்பரே.
   இது போன்ற தங்களின் சேவை மகத்தானது. பாராட்டுக்கள்.

   அன்புடன் VGK

   Delete
 25. அடடா! இது தெரிந்திருந்தால் முதலிலேயே இங்கு வந்து எல்லா பகுதிகளையும் ஒன்றாக படித்திருப்பேனே.

  அது சரி! கதைக்கு மிகவும் பொருத்தமான அந்த முதல் மூன்று படங்களை எங்கிருந்து பிடித்தீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. JAYANTHI RAMANI February 4, 2013 at 3:00 AM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //அடடா! இது தெரிந்திருந்தால் முதலிலேயே இங்கு வந்து எல்லா பகுதிகளையும் ஒன்றாக படித்திருப்பேனே.//

   ஆஹா, அப்படியெல்லாம் சொல்லக்கூடாதூஊஊஊ. தெரியாமல் இருந்ததால் தான் இதே கதைக்கு 8+1=9 பின்னூட்டங்கள் உங்களிடமிருந்து எனக்குக்கிடைக்கும் பாக்யம் கிடைத்துள்ளது,

   மேலும் நீங்கள் என்னிடம் கொடுத்துள்ள வாக்குறுதிப்படி, என்னுடைய அத்தனைப் பதிவுகளிலும் உங்கள் கருத்துக்கள் இடம் பெற வேண்டும் அல்லவா?

   அதனால் மீள் பதிவானாலும் நீங்கள் ஏதாவது கருத்துக்கள் சொல்லியே ஆகவேண்டுமாக்கும்.

   //அது சரி! கதைக்கு மிகவும் பொருத்தமான அந்த முதல் மூன்று படங்களை எங்கிருந்து பிடித்தீர்கள்.//

   மார்ச் 2006 மங்கையர் மலரில் இந்த்க்கதை வெளி வந்துள்ளது அல்லவா! மங்கையர் மலர் ஆர்டிஸ்ட் வரைந்த படம் இது. அதைப்பார்த்து போட்டோ பிடித்து, இங்கு பதிவுக்குக் கொண்டு வந்துள்ளேன் நான் .... அதுவும் என் கதைகளின் தீவிர ரஸிகையான உங்களுக்காகவே.

   Delete
 26. மனதை நெகிழ வைக்கும் கதை! பெரியவர் சொல்லாமல் சொன்ன வார்த்தைகள் அருமையான வாழ்க்கை நெறி!

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு February 6, 2013 at 2:03 AM
   மனதை நெகிழ வைக்கும் கதை! பெரியவர் சொல்லாமல் சொன்ன வார்த்தைகள் அருமையான வாழ்க்கை நெறி!//

   வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 27. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை.மிக்க நன்றி.

  ReplyDelete
 28. //Asiya Omar June 18, 2013 at 8:48 PM

  வாங்கோ, வணக்கம்.

  //http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை.மிக்க நன்றி.//

  மிக்க நன்றி, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  ReplyDelete
 29. அழகான அர்த்தமுள்ள சிறுகதை ஐயா,ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. டினேஷ் சுந்தர் July 25, 2013 at 8:42 AM

   வாருங்கள், வணக்கம்.

   //அழகான அர்த்தமுள்ள சிறுகதை ஐயா,ரசித்தேன்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கும், ரசிப்புக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 30. உன்னதமான உயர்ந்தவாளின் உணர்ச்சிபூர்வமான கதை. வெகு அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  //இளங்கன்று பயம் அறியாது என்பது போல, மெதுவாக அந்தப் பெரியவரின் வலது கைவிரலில் இருந்த ஒரு கொப்பளத்தைத் தொட்டுத் திருகிப் பார்த்தான், ரவி//

  குழந்தை மனசு வெள்ளை மனசு. வெகுளி பையன்.


  //“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர்.
  அவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.//

  ஆகா இவருக்கும் குழந்தை மனசு.


  //கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.
  ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.
  கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.//

  உண்மை. பக்குவபட்ட பெரிய மனிதர்கள் மனதால் குழந்தைகளே. அவர்கள் உயர்வானவர்கள் உன்னதமானவர்கள்.

  நல்ல பதிவு. மீண்டும் வாழ்த்துகள்!!! நன்றி ஐயா!!!

  ReplyDelete
 31. வேல் September 21, 2013 at 12:41 PM

  வாருங்கள், வணக்கம்.

  *****இளங்கன்று பயம் அறியாது என்பது போல, மெதுவாக அந்தப் பெரியவரின் வலது கைவிரலில் இருந்த ஒரு கொப்பளத்தைத் தொட்டுத் திருகிப் பார்த்தான், ரவி*****

  //குழந்தை மனசு வெள்ளை மனசு. வெகுளி பையன்.//

  *****“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர். அவா ளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.*****

  //ஆகா இவருக்கும் குழந்தை மனசு. //


  *****கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும். ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும். கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.*****

  //உண்மை. பக்குவபட்ட பெரிய மனிதர்கள் மனதால் குழந்தைகளே. அவர்கள் uயர்வானவர்கள் உன்னதமானவர்கள்.//

  //உன்னதமான உயர்ந்தவாளின் உணர்ச்சிபூர்வமான கதை. வெகு அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.//

  //நல்ல பதிவு. மீண்டும் வாழ்த்துகள்!!! நன்றி ஐயா!!!//

  தங்களின் அன்பான வருகைக்கும், இந்தக் கதையினை ரஸித்துப்படித்து மகிழ்ந்து, தங்களுக்குப் பிடித்தமான இடங்களையும் சுட்டிக்காட்டி, அழகான கருத்துக்களை எடுத்துரைத்து பாராட்டி வாழ்த்தியுள்ளீர்கள். அதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 32. மேல் தோலைப் பார்த்து மயங்குபவர்கள்தான் இன்றைய உலகில் அநேகம். உள்ளே இருக்கும் குண நலன்களைப் பார்க்கும் அளவிற்குப் பொறுமை இல்லை.

  ReplyDelete
 33. உருவத்தைப்பார்த்து ஆளை எடை போடுவது எவ்வளவு தவறு என்று மண்டையில் நறுக்கென்று குட்டி சொன்ன கதை.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 20, 2015 at 6:41 PM

   //உருவத்தைப்பார்த்து ஆளை எடை போடுவது எவ்வளவு தவறு என்று மண்டையில் நறுக்கென்று ’குட்டி’ச்சொன்ன கதை.//

   இவ்வளவு பெரிய கதைக்கு ’குட்டி’யூண்டு பின்னூட்டம் .... அதுவும் ..... ஓர் பெண்’குட்டி’யிடமிருந்து :)

   இதே பழைய அந்தக்கால (2013) பூந்தளிராக இருந்தால் இந்தக்கதையைவிட பெரிய பின்னூட்டமாகக்கொடுத்து அசத்தி இருப்பாள். :)

   எனினும் மிக்க நன்றி. ’குட்டி’யூண்டு நொங்கு தான், பெரிய நொங்கினைவிட மிகவும் ருசியாக இருக்கும். Short & Sweet.

   Thanks a Lot !

   குட்டியது மிகவும் வலிக்குதோ? If so, Very Sorry ம்மா !

   Delete
 34. உருவம் அப்படி அமஞ்சது அந்தாளோட தப்பா. கண்ணு முன்னால தெரியுத பாத்துதானே மத்தவங்க நெனக்குராங்க.

  ReplyDelete
 35. இந்தக்கதையும் முழுவதுமாக படித்து ரசித்து கமெண்ட்ஸும் போட்டிருக்கேன். இப்ப படிக்கும்போதும் அதே ஈடுபாடுடன் படித்து ரசிக்க முடிகிறது.

  ReplyDelete
 36. மீண்டும் ஒரு காசி யாத்திரை போன உணர்வு...மீண்டும் படித்து ரசித்தேன்...

  ReplyDelete
 37. அருமையான பகிர்வு ஐயா,

  நாம் எப்பவும் இப்படி தானே, புறத்தோற்றம் அதன் அழகு இவைகள் தரும் மகிழ்ச்சியின் மாயத்தில் இருக்கிறோம்.

  நல்ல அறிவுரைகள்,, மனம் நெகிழும் பதிவு இது,
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran December 11, 2015 at 1:20 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான பகிர்வு ஐயா, நாம் எப்பவும் இப்படி தானே, புறத்தோற்றம் அதன் அழகு இவைகள் தரும் மகிழ்ச்சியின் மாயத்தில் இருக்கிறோம். நல்ல அறிவுரைகள்,, மனம் நெகிழும் பதிவு இது,
   தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :) - VGK

   Delete
 38. மறக்கமுடியாத கதை! மீண்டும் படித்தேன்!

  ReplyDelete