என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் Accounts Clerk-cum-Typist ஆக வேலை பார்த்து வந்தேன். 

அந்த நிறுவனம் லாரி பஸ் போன்ற வாகனங்களுக்கு வேண்டிய உதிரி பாகங்கள் அனைத்தும் வாங்கி விற்கக்கூடிய சற்றே பெரிய வியாபார ஸ்தாபனம். 

ஃபர்கோ, லேய்லண்ட், பென்ஸ் போன்ற பல கனரக வாகனங்களுக்கு ENGINE + CHASSIS PARTS  அனைத்தும் அங்கு கொள்முதலும் வியாபாரமும் நடைபெறும். 

பஸ் பாடிகட்டப் பயன்படும் அலுமினிய தகடுகள், பஸ் லாரிக்குத்தேவைப்படும் பேட்டரிகள், அதிர்ச்சியைத் தாங்கிடும் [டூ வீலரில் உள்ள ஷாக் அப்சார்பருக்கு பதிலான] கனமான சற்றே வளைவான ஸ்பிரிங் பட்டைகள், பால்பேரிங்ஸ், கிராங் ஷாப்ட், சிலிண்டர் ஹெட், ஆயில் பிஸ்டன்ஸ் என ஏராளமான ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் வாங்கி விற்கப்படும் ஸ்தாபனம் அது. 


அது தவிர அவர்களுக்கே சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க், தேங்காய் மட்டைகளிலிருந்து நார் எடுத்து,மெத்தைகள் செய்வதும், தாம்புக் கயிறுகள் தயாரிப்பதுமாக ஒரு ஃபாக்டரி போன்ற பல துணைத்தொழில்களும் நடைபெற்று வந்தன. 
 .
அங்கு ஏற்கனவே பணியாற்றியவர்களில் 'ஜான்பேட்டா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஒருவர் உண்டு. அவரது உண்மைப்பெயர் R. பெரியண்ணன் என்பதே. இந்த ஜான்பேட்டா என்ற பெயர் எப்படி அவருக்கு வந்தது என்றே என்னால் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியவில்லை.  நான் அவரை முதன்முதலாக சந்திக்கும் போதே அவருக்கு சுமாராக ஒரு 45 வயது இருக்கும். 


'ஜான்பேட்டா' என்றாலே அந்தத் தெருவிலுள்ள கைவண்டிக்காரர்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் மற்றும் தெருக்குழந்தைகள் உள்பட அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும். பெரியண்ணன் என்று யாராவது அழைத்தாலும், ஜான்பேட்டாவாகிய பெரியண்ணனே கூட திரும்பிப் பார்க்க மாட்டார். 


அந்த அளவுக்கு இந்த ’ஜான்பேட்டா’ என்ற பெயர் பிரபலமாக இருந்தது. எங்கள் கம்பெனி மேனேஜர் மட்டும், ‘ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு. 


ஜான்பேட்டா அவர்களின் தோற்றம்:


சுமார்  ஆறு அடி உயரம். 


நல்ல கருத்த நிறம். 


ஒல்லியான நரம்புகள் தெரியும் தேகம். 


கம்பீரமான முரட்டு மீசை. 


பெரிச்சாளி போன்ற பார்வை. 


நெற்றியில் காலை நேரங்களில் மட்டும் ஒரு பெரிய குங்குமப்பொட்டு. 


அழுக்கான ஒரு நாலு முழம் வேஷ்டி. 


முழுக்கையை அரைக்கையாக மடித்து விட்ட ஒரு காக்கி சட்டை. 


சடைகள் போல வளர்ந்த அடர்த்தியான பரட்டைத் தலைமுடி, 


தலையில் வெள்ளைக்கலர் துண்டு ஒன்றால் முண்டாசுக்கட்டு. 


கால்களில் போட் [Boat] போல வளைந்த டயர் செருப்பு. 


நடை உடை பாவனையில் ஒரு தெனாவெட்டு. 


எல்லாவற்றிலுமே ஒரு அலட்சியம். 


எதற்குமே பயப்படாத ஓர் ஆசாமி.


கிட்டத்தட்ட, சமீபத்தியப் பிரபலமான சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்ற தோற்றமுடையவராக இருந்தார், அன்றே இந்த எங்கள் ’ஜான்பேட்டா’. 


R. பெரியண்ணன் என்று சம்பள நாட்களில் மட்டும், ஒட்டப்பட்ட ரெவின்யூ ஸ்டாம்பின் மேல் கையெழுத்துப் போட மட்டுமே அவருக்குத் தெரியும். அதுவும் அவர் முழுவதுமாக கையெழுத்துப் போட்டு முடிக்க ஒரு 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பேனாவை அடிக்கடி உதறிக்கொண்டே இருப்பார். தரையெல்லாம் ’இங்க்’ தெளிக்கப்படும். அவர் பல்லைக்கடித்துக்கொண்டு கையொப்பம் இட்ட பிறகு அந்த பேனாவின் நிப் சற்றே வளைந்திருக்கும். [அது பால்பாய்ண்ட் பேனா வராத காலம் - ஃபெளண்டைன் பேனாவில் மை ஊற்றி எழுதிய காலம்]. மற்றபடி ஜான்பேட்டாவுக்கு எழுதப்படிக்க ஏதும் தெரியாது. ஆனாலும் அவருக்கு உலக அனுபவ அறிவு அதிகம்.


கையெழுத்து மட்டும் போடுவாரே தவிர ஒரு மாதமாவது சம்பளத்தை அவர் சம்பள நாளில் வாங்கி நான் பார்த்ததே இல்லை. அவ்வப்போது நாலு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஆகவே தேவைப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்வார். 


கோபாலன் என்று ஒரு கேஷியர் அங்கு பணியாற்றி வந்தார். அவருக்கு சுத்தமாக காது கேட்காது. பலக்கக் கத்தினால் மட்டுமே ஏதோ கொஞ்சம் அவருக்குப் புரிய வரும். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். எதிலுமே பட்டுக்கொள்ள மாட்டார். அவரிடம் அவ்வப்போது போய் பணம் வேண்டி தலையைச் சொறிவார் இந்த ஜான்பேட்டா. 


ஒரு கையை குவித்துக்காட்டினால் ஐந்து ரூபாய் தேவையென்றும், இரண்டு கைகளையும் பல்ப் ஹாரன் அடிப்பதுபோல காட்டினால் பத்து ரூபாய் என்று புரிந்து கொண்டு, அந்த கேஷியர் கோபாலனே, மாதத்தில் ஒரு முறையோ இரு முறையோ, ஒரு நோட்டில் தேதி போட்டுக் குறித்துக்கொண்டு பணம் தந்து விடுவார். 


மறுமுறை அதே மாதத்தில் ஜான்பேட்டா பணம் கேட்க வரும்போது, ”மேனேஜரிடம் போய்க்கேள்” என கையைக்காட்டி விடுவார், அந்தக் கேஷியர். மாதம் ஓரிரு முறை மேனேஜரும் ஜான்பேட்டா மேல் சற்றே இரக்கப்பட்டோ அல்லது ஒருவித பயத்தினாலோ பணம் தரச்சொல்லுவார். 


அதன் பிறகு கேட்கும் போது மேனேஜரும், ”முதலாளியைப்பார்” என்று சொல்லி விட்டு ஒதுங்கிவிடுவது வழக்கம். முதலாளி தினமும் மாலை சுமார் 5 மணிக்கு கம்பெனிக்கு காரில் வந்து இறங்குவார். ஒரு மணி நேரம் மட்டுமே அங்கு கம்பெனியில் இருப்பார். பெரும்பாலான நேரங்களில் கம்பெனிக்கு வெளிப்புறமே இருக்கும் ஜான்பேட்டா, முதலாளி அவர்கள் காரை விட்டு இறங்கும் போதே, அவரைத் துரத்திக்கொண்டே கம்பெனிக்குள் உள்ளே வருவது வழக்கம். 


முதலாளியைத் துரத்திக்கொண்டே ஜான்பேட்டாவும் வருவதைப் பார்க்கும் கேஷியர், ஒரு நிமிஷம் பதட்டமாகி, பிறகு உடனே சுதாரித்துக்கொண்டு, ஜான்பேட்டா இதுவரை இந்த மாதம் எவ்வளவு முறை பணம் அட்வான்ஸ் ஆக வாங்கியுள்ளார், மொத்தம் எவ்வளவு தொகை வாங்கியுள்ளார், இன்னும் சம்பளம் போட எவ்வளவு நாட்கள் உள்ளன, அதற்குள் மீண்டும் இவர் எவ்வளவு முறை பணம் கேட்டுத் தொல்லை கொடுப்பார் போன்ற புள்ளிவிபரங்களுடன், முதலாளியிடம் தானும் செல்வார்.


முதலாளியும் ஜான் பேட்டா மேல் இரக்க சுபாவம் உடையவர் தான். “என்னப்பா நீ அடிக்கடி இப்படிப் பணம் கேட்டுத் தொல்லை கொடுக்கிறாய்; ஒருவழியாக ஒண்ணாம் தேதி முழுச்சம்பளமாக வாங்கிக்கொள்ள மாட்டாயா” என்று லேசாகக் கடிந்து கொள்வார். அதற்கு ஜான்பேட்டா சிரித்தபடியே தலையைச் சொரிந்து கொள்வார். 


கடைசியில் ”அவன் கேட்பதைக்கொடுப்பா” என்று முதலாளி ஸ்பெஷல் சாங்ஷன் ஆர்டரை, கைஜாடையாகவே அளித்து விடுவார். 


ஜான்பேட்டா கேஷியரை ஒரு அலட்சியப்பார்வை பார்த்துவிட்டு, அவர் தரும் பணத்தை வெகு அலட்சியமாக வாங்கிக்கொண்டு ஒருவித வெற்றிப்புன்னகையுடன் வெளியேறி விடுவார்.  இது மாதாமாதம் அவ்வப்போது நடக்கும் ஒரு மிகச்சாதாரண நிகழ்ச்சியே.


பணம் கைக்குக்கிடைத்ததும் ஜான்பேட்டா நேராக அங்குள்ள பெட்டிக்கடையில் ஒரு கட்டு பீடியை வாங்கிகொண்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு, அந்த காலக்கட்டத்தில் அங்கிருந்த நாயர் டீக்கடைக்கு, ஸ்பெஷல் டீ ஆர்டர் செய்யச் சென்றிடுவார். இந்த டீக்கடை நாயரைப்பற்றி தனியே ஒரு கேரக்டர் பதிவே எழுதலாம். அவ்வளவு சுவாரஸ்யமான ஆசாமி தான் என்னைப்பொருத்தவரை அவரும்.


இந்த ’ஜான்பேட்டா’வுக்கு வீடோ வாசலோ, பெற்றோர்களோ, மனைவியோ, குழந்தைகுட்டிகளோ, உறவினர்களோ இருந்ததாக எங்கள் யாருக்குமே ஒன்றுமே தெரியாது. வருஷத்தின் 365 நாட்களும், இரவு நேரங்களிலும், ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் அவர் தங்குவது எங்கள் கம்பெனியை ஒட்டியுள்ள ஒரு பகுதியில் தான். அந்தப்பகுதியின் மேலே தகரக்கூரை வேயப்பட்டிருக்கும்.. 


அந்த தகர ஷெட்டிலேயே தான் கம்பெனியில் விற்கப்படும் பேட்டரிகள், ஆஸிட் ஜாடிகள், அலுமினிய தகடுகள், ஸ்ப்ரிங் பட்டைகள் என என்னவெல்லாமோ அடசல்கள் பூராவும் அடுக்கப்பட்டிருக்கும். அதன் நடுவே, ஒரு இத்துப்போன கயிற்றுக்கட்டில், ஒரு விசிறி, ஒரு அழுக்குத் தலையணி, ஒரு கருப்புக் கம்பளி போர்வை இதனுடனேயே ஜான்பேட்டா இரவில் படுத்திருப்பார். 


ஆடையோ கோடையோ, குளிரோ, மழையோ, பனியோ எதையும் பொருட்படுத்தாத சரீரம் அவருக்கு. வாசலில் பெயருக்கு ஒரு தகர கேட் இருக்கும். அதை ஒரு ஒப்புக்காக, ஒரு நாய்க்கழுத்து இரும்புச் சங்கிலியுடன் கூடிய ஒரு மிகச்சிறிய பூட்டைப் போட்டு பூட்டி விட்டு தான், எங்காவது வெளியே புறப்படுவார்.


அவருக்கு என்ன தான் அந்தக்கம்பெனியில் வேலை என்கிறீர்களா? அது ஒன்றும் சரியாகப் பட்டியலிடவே முடியாதது. ஒரு வேலையும் செய்யாதவர் போலத்தான் பகல் நேரங்களில்  அருகிலுள்ள பீடிக்கடையிலும், டீக்கடையிலும் நின்று கொண்டிருப்பார்.  ஆனால் அவருக்கான வேலைகள் ஏராளமாகவே உண்டு.


கம்பெனியை கூட்டிப் பெருக்குவதிலிருந்து, பானையில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதிலிருந்து, கம்பெனிக்குள் சுற்றும் எலி, பெருச்சாளி, மரப்பல்லி, கரப்பான்பூச்சிகளை அடித்து வெளியேற்றுவதிலிருந்து, ஒட்டடை அடிப்பதிலிருந்து எல்லாமே அவர் வேலைகளே. அந்தக்கம்பெனிக்கு வாட்ச்மேனும் அவரே. வெளி வேலைகளுக்குச் செல்வதும் அவரே. மொத்தத்தில் ஆல்-இன்-ஆல் அழகிரி ஜான்பேட்டாவே. ஒரேயடியாக ஓர் எடுபிடி ஆசாமி என்றும் அவரைச் சொல்லிவிட முடியாது. 


அங்கு கம்பெனிக்குச் சற்றே தள்ளி அமைந்திருந்த டீக்கடை வாசலில் தான் பீடியும் கையுமாக எப்போது நின்றிருப்பார். “ஜான்பேட்டா உன்னை மேனேஜர் கூப்பிடுகிறார்” என்று நாங்கள் யாராவது போய் வெற்றிலை பாக்கு வைத்து, சமயத்தில் அழைத்து வரும்படியாகவும் இருக்கும். 


அலட்சியமாக பீடியை ஒரு இழுப்பு இழுத்து புகை விட்டுக்கொண்டே “போப்பா ..... வரேன்னு சொல்லு” என்பார். ஆனால் லேசில் வரவும் மாட்டார். 


தொடரும்

33 கருத்துகள்:

 1. அருமையான பகிர்வு. அந்த காலத்தில் ஆனந்தவிகடனில் சாவி எழுதிய “கேரக்டர்” தொடர் நினைவுக்கு வந்தது. அன்புடன் எம்.ஜே.ராமன்.

  பதிலளிநீக்கு
 2. ஜான் பேட்டா - கேரக்டர் தொடரில் முதல் பகுதி.... நல்லா இருக்கு! நீங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றி உங்கள் கண்ணோட்டத்தில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 3. ஜான் பேட்டா வை கண் முன் நிறுத்தி விட்டர்கள்...
  Excellent character sketch.

  பதிலளிநீக்கு
 4. ஜான் பேட்டாவை அப்படியே கற்பனை செய்து பார்த்தேன் அருமை,

  அவருடைய நடை, உடை, பாவனைகள் வருணிப்பு அருமை.

  பதிலளிநீக்கு
 5. சுவாரஸ்யமான ஒரு மனிதர் பற்றி சுவாரஸ்யம் குன்றாமல் விவரித்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பதிவின் மூலம், ரொம்ப நாளைக்குப் பிறகு Character Study கட்டுரை ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த டீக்கடை நாயரைப் பற்றியும் சொல்லுங்கள்.. பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலைப ரசித்துப் படித்த ஞாபகம் வருகிறது.

  பதிலளிநீக்கு
 7. nlla ponathai ippadi
  niruthideengale !
  nalla suvaraasyam naalaikke thodaravum....!

  பதிலளிநீக்கு
 8. //ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு.//

  //இரண்டு கைகளையும் பல்ப் ஹாரன் அடிப்பதுபோல காட்டினால் பத்து ரூபாய் என்று புரிந்து கொண்டு..//


  //ஆடையோ கோடையோ, குளிரோ, மழையோ, பனியோ எதையும் பொருட்படுத்தாத சரீரம் அவருக்கு//

  //கம்பெனியை கூட்டிப் பெருக்குவதிலிருந்து, பானையில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதிலிருந்து, கம்பெனிக்குள் சுற்றும் எலி, பெருச்சாளி, மரப்பல்லி, கரப்பான்பூச்சிகளை அடித்து வெளியேற்றுவதிலிருந்து, ஒட்டடை அடிப்பதிலிருந்து எல்லாமே அவர் வேலைகளே. அந்தக்கம்பெனிக்கு வாட்ச்மேனும் அவரே. வெளி வேலைகளுக்குச் செல்வதும் அவரே. மொத்தத்தில் ஆல்-இன்-ஆல் அழகிரி ஜான்பேட்டாவே.//

  -- ஜான் பேட்டாவை இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டி இவ்வளவு டேட்டாஸ் கொடுத்தும் படிப்பவர்கள் அவரை வேறு ஏதானும் மாதிரி நினைத்து விடுவார்களோ என்று பயந்து இதுவரை விவரித்ததில் திருப்திபடாமல் கட்டக் கடைசியாக,

  //ஒரேயடியாக ஓர் எடுபிடி ஆசாமி என்றும் அவரைச் சொல்லிவிட முடியாது.//

  - என்று சொல்லியிருக்கிறீர்களே, இந்த வரிகளே, அடுத்த பகுதிக்கு அச்சாரம் மட்டுமில்லை, அட்சர லட்சம் பெறும்!

  ஜான் பேட்டாவின் சகலகலாவல்லமைகள் சொல்லி முடிந்ததும், அடுத்தாப்லே,

  அந்த டீக்கடை நாயர்! சரியா?..

  பதிலளிநீக்கு
 9. //பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலைப ரசித்துப் படித்த..//

  ரொம்ப நாளைக்கு முன்னாடியே எஸ்.வி.வி.யின் நகைச்சிறப்பை கோபால்ஜியில் பார்த்து மனம் மகிழ்ந்து சொல்லி விட்டேன்! இப்பொழுது, திரு. இளங்கோ அவர்களும் அவரையே நினைவு கொண்ட பொழுது மகிழ்ச்சி பிடிபடவில்லை.

  ஆனந்தவிகடன் தாத்தா இருகரம் நீட்டி வரவேற்க காத்திருப்பதாக நினைவில் பிரமை! கேட்டுக் கொண்டீர்களா, கோபால்ஜி! (புனைப்பெயர் கூட ரெடி)

  பதிலளிநீக்கு
 10. பெருச்சாளிப் பார்வை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை! :)))

  உங்கள் பார்வை ஆராய்ச்சியில் டீக்கடை நாயரும் கேரக்டராகத் தெரிந்ததில் வியப்பில்லை. அவர் பற்றியும் அப்புறம் ஒரு பதிவு வருமோ...

  ஒரு கோட்டோவியம் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணெதிரே வளைந்து வளர்ந்து ஒரு வடிவம் பெறுவது போல ஜான் பேட்டா தோற்றம், குணா நலன்கள் உருப் பெற்று அறிமுகமாகியிருக்கிறார்...!

  பதிலளிநீக்கு
 11. பெயரில் மட்டும் இல்லை
  சொல்லிச் சொல்லும் விதத்திலும்
  அதிக சுவாரஸ்யம்
  அடுத்த பதிவுக்கு ஆவலாக உள்ளோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. சகலகலாவல்ல ஜான் பேட்டா அருமையான கவ்னிப்புத்திறமைக்குச் சான்று பகர்கிறது.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 13. நுணுக்கமான குண்ச்சித்திர வர்ணனை பிரமிக்கவைக்கிறது,,

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் பதினெட்டு வயதில் சந்தித்த ஜான்பேட்டாவை எங்கள் கண்மௌன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள் வெகு சுவாரஸ்யத்துடன்.

  உங்களுக்கு அறிமுகமானவர்களை இப்படி சுவராஸ்யம் பட அறிமுகப்ப்டுத்துங்களேன்:)

  பதிலளிநீக்கு
 15. ஜான் பேட்டா பெயரே வித்தியாசமாக இருக்கிறது.

  பாத்திரத்தின் வர்ணனைகளுடன் கதையின் நடை நன்றாகவே செல்கிறது.
  சீக்கிரம் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 16. அட, ஜான் பேட்டா ஆவலைக் கிளப்பறார் ஐயா! சூப்பர் காரக்டர்!

  பதிலளிநீக்கு
 17. ஒரு கேரக்டரைப்பற்றி இவ்வளவு சுவராஸ்யமாக விவரித்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 18. அன்பின் வை.கோ - ஜான் பேட்டா - மனதில் வரைந்து பார்த்தேன் - இரசித்தேன் - அவரது குணமும்- எளிமையும் - முதலாளிக்கே பிடித்த அவரின் பலமும் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 19. சுவாரஸ்யமான ஒரு மனிதர் பற்றி சுவாரஸ்யம் குன்றாமல் விவரித்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 20. ஸ்ரீ கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் பற்றிய கட்டுரை மிக சுவாரஸ்யம். பழைய விஷயங்களை திடீரென்று படித்தால் ரொம்ப சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 21. ஜீவி said...
  *****ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு*****

  *****இரண்டு கைகளையும் பல்ப் ஹாரன் அடிப்பதுபோல காட்டினால் பத்து ரூபாய் என்று புரிந்து கொண்டு..*****


  *****ஆடையோ கோடையோ, குளிரோ, மழையோ, பனியோ எதையும் பொருட்படுத்தாத சரீரம் அவருக்கு*****

  *****கம்பெனியை கூட்டிப் பெருக்குவதிலிருந்து, பானையில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதிலிருந்து, கம்பெனிக்குள் சுற்றும் எலி, பெருச்சாளி, மரப்பல்லி, கரப்பான்பூச்சிகளை அடித்து வெளியேற்றுவதிலிருந்து, ஒட்டடை அடிப்பதிலிருந்து எல்லாமே அவர் வேலைகளே. அந்தக்கம்பெனிக்கு வாட்ச்மேனும் அவரே. வெளி வேலைகளுக்குச் செல்வதும் அவரே. மொத்தத்தில் ஆல்-இன்-ஆல் அழகிரி ஜான்பேட்டாவே.*****

  //ஜான் பேட்டாவை இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டி இவ்வளவு டேட்டாஸ் கொடுத்தும் படிப்பவர்கள் அவரை வேறு ஏதானும் மாதிரி நினைத்து விடுவார்களோ என்று பயந்து இதுவரை விவரித்ததில் திருப்திபடாமல் கட்டக் கடைசியாக,

  *****ஒரேயடியாக ஓர் எடுபிடி ஆசாமி என்றும் அவரைச் சொல்லிவிட முடியாது.*****

  - என்று சொல்லியிருக்கிறீர்களே, இந்த வரிகளே, அடுத்த பகுதிக்கு அச்சாரம் மட்டுமில்லை, அட்சர லட்சம் பெறும்!//

  ஜான் பேட்டாவின் சகலகலாவல்லமைகள் சொல்லி முடிந்ததும், அடுத்தாப்லே,

  அந்த டீக்கடை நாயர்! சரியா?..
  April 5, 2012 4:58 PM

  திரு ஜீவி ஐயா அவர்களுக்கு அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

  தங்களின் அன்பான வருகையும், சிரத்தையாகப் படித்து ரஸித்துக் கூறியுள்ள கருத்துக்களுமே அக்ஷர லக்ஷம் பெறக்கூடியவை எனக்கு.

  எல்லாம் உங்களைப் போன்றோர்களின் மனமார்ந்த ஆசீர்வாதங்களே என்னை இதுபோல எழுத வைத்துள்ளது.


  ஜீவி said...
  //பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலைப ரசித்துப் படித்த..

  ரொம்ப நாளைக்கு முன்னாடியே எஸ்.வி.வி.யின் நகைச்சிறப்பை கோபால்ஜியில் பார்த்து மனம் மகிழ்ந்து சொல்லி விட்டேன்! இப்பொழுது, திரு. இளங்கோ அவர்களும் அவரையே நினைவு கொண்ட பொழுது மகிழ்ச்சி பிடிபடவில்லை.

  ஆனந்தவிகடன் தாத்தா இருகரம் நீட்டி வரவேற்க காத்திருப்பதாக நினைவில் பிரமை! கேட்டுக் கொண்டீர்களா, கோபால்ஜி! (புனைப்பெயர் கூட ரெடி)//

  தாங்கள் இதுபோலச் சொல்வதே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

  நான் சந்தித்த ப்ல்வேறு விசித்திர மனிதர்களையே என் பல கதைகளில் ஆங்காங்கே கதா பாத்திரங்களாகக் கொண்டு வந்துள்ளேன். இன்னும் வலைப்பூவில் வெளியிடப்படாத கதைகளும் நிறைய உள்ளன.

  கேரக்டர் பதிவு எழுதுங்களேன் என என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு ரிஷபன் அவர்கள் சமீபத்திய [கீழ்க்கண்ட இணைப்பில்] பின்னூட்டம் ஒன்றில் எனக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

  http://gopu1949.blogspot.in/2012/03/6.html

  அதனால் இந்த ஜான்பேட்டாவை முதல் முதலாக நான் எடுத்துக்கொண்டேன். தங்களின் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளன.

  பழைய எழுத்தாளர் எஸ் வி வி அவர்களைப்பற்றி கேள்விப் பட்டுள்ளேனே தவிர அவரின் நூல்கள் எழுத்துக்கள் எதுவும் நான் இதுவரைப் படித்ததே இல்லை.

  என்றும் தங்கள் ஆசிகளை எதிர்பார்க்கும் அன்புள்ள vgk

  பதிலளிநீக்கு
 22. இந்த என் புது முயற்சியான கேரக்டர் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய கருத்துக்கள் கூறி பாராட்டி மகிழ்வித்துள்ள

  திருவாளர்கள்:
  --------------

  01 மணக்கால் ஜே.ராமன் Sir அவர்கள்

  02. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்

  03. சென்னை பித்தன் Sir அவர்கள்

  04. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள்

  05. சீனி Sir அவர்கள்

  06. ஜீவி Sir அவர்கள்

  07. ஸ்ரீராம் Sir அவர்கள்

  08. ரமணி Sir அவர்கள்

  09. கே.பி. ஜனா Sir அவர்கள்

  10. விச்சு Sir அவர்கள்

  11. அன்பின் சீனா Sir அவர்கள்

  12. G. கணேஷ் அவர்கள்

  மற்றும்

  திருமதிகள்:
  -----------

  01. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்

  02. கோமதி அரசு Madam அவர்கள்

  03. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்

  04. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்

  05. ஸாதிகா Madam அவர்கள்

  06. ராஜி Madam அவர்கள்

  07. லக்ஷ்மி Madam அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 23. ஜான்பேட்டாவை பற்றி நீங்க எழுதியதிலிருந்தே அவரை ஏறக்குறைய கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருக்கு.

  சுவாரசியமாக செல்கிறது. நானும் வருகிறேன் சார்.

  பதிலளிநீக்கு
 24. கோவை2தில்லி said...
  //ஜான்பேட்டாவை பற்றி நீங்க எழுதியதிலிருந்தே அவரை ஏறக்குறைய கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருக்கு.

  சுவாரசியமாக செல்கிறது. நானும் வருகிறேன் சார்.//

  தங்களின் அன்பான வருகை+கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 25. அபூர்வமான ஆசாமிதான். இந்த மாதிரி ஆட்களையும் ஏதோ தேவை கருதித்தான் கம்பெனிகள் வேலைக்கு எடுக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 26. சுவாரசியமான பதிவு.

  ஜான்பேட்டாவை கற்பனை செய்து பார்த்தேன். கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

  நீங்க எழுதறது ஒண்ணொண்ணுமே அப்படியே படிக்கும் போதே கண் எதிரே நடக்கற மாதிரியே இருக்கு.

  HATS OFF TO YOU

  பதிலளிநீக்கு
 27. உங்களுக்கு அபார ஞாபக சக்திதான். 18- வயதில் நீங்க சந்தித்த ஜான் பேட்டாவை எங்க கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திட்டீங்க.வர்ணனைகளுடன் கதையை கொண்டு போகும் விதம் நன்கு ரசிக்க முடிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் July 24, 2015 at 3:53 PM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா. நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //உங்களுக்கு அபார ஞாபக சக்திதான். 18- வயதில் நீங்க சந்தித்த ஜான் பேட்டாவை எங்க கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திட்டீங்க.வர்ணனைகளுடன் கதையை கொண்டு போகும் விதம் நன்கு ரசிக்க முடிகிறது.//

   மிக்க மகிழ்ச்சி. இது கதை அல்ல. வாழ்க்கையில் மறக்க முடியாத சில அபூர்வ மனிதர்களுடன் எனக்கு ஏற்பட்ட உண்மைச்சம்பவங்கள் மட்டுமே. அதனால் அதில் உள்ள வர்ணனைகளை தங்களால் நன்கு ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 28. ஜான்பேட்டா உங்க தோஸ்தா.அல்லா வேலயும் ஆபீசுல பண்ணுராகளே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 20, 2015 at 1:39 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //ஜான்பேட்டா உங்க தோஸ்தா. அல்லா வேலயும் ஆபீசுல பண்ணுராகளே.//

   தோஸ்து என்று சொல்ல முடியாது. அப்போதே என்னை விட 25 வயது பெரியவர். ஓரிரண்டு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலைசெய்ய நேர்ந்தது. எங்கள் எல்லோரையும்விட அவர் மிகவும் சீனியர். ஏட்டுப்படிப்பு இல்லாவிட்டாலும், உலக அனுபவம் நிறைய அவருக்கு உண்டு. அவரையும் நான் குருஜியாக ஏற்று சிலவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேன்.

   நீக்கு
 29. நீங்கள் யாரை சந்தித்தாலும் அவர்களிடம் கற்றுக்கொள்ள நல்ல விஷயங்கள் ஏத்வது இருக்கானு எக்ஸ்ரே கண்களால் கவனிப்பீர்கள் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 30. ஜான் பேட்டா...சுவாரசியமான காரக்டர்தான்...அதன் பிறகு எங்கேனும் சந்தித்தீர்களா??

  பதிலளிநீக்கு
 31. //அவர் பல்லைக்கடித்துக்கொண்டு கையொப்பம் இட்ட பிறகு அந்த பேனாவின் நிப் சற்றே வளைந்திருக்கும். [அது பால்பாய்ண்ட் பேனா வராத காலம் - ஃபெளண்டைன் பேனாவில் மை ஊற்றி எழுதிய காலம்]. மற்றபடி ஜான்பேட்டாவுக்கு எழுதப்படிக்க ஏதும் தெரியாது. ஆனாலும் அவருக்கு உலக அனுபவ அறிவு அதிகம்.//
  கண்முன் நிறுத்துகிறீர்கள்! சுவாரஸ்யமான பாத்திரம்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு