என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

நல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... இந்த நாடே இருக்குது தம்பி !நல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... 
இந்த நாடே இருக்குது தம்பி !


நன்கு படித்த இளைஞர் ஒருவர், ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு மனுச்செய்கிறார்.

முதலில் நடந்த நேர்காணலில் [Personal Interview] தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை, அந்த நிறுவனத்தின் இயக்குனரிடம், இறுதித் தேர்வுக்கும், இறுதி முடிவு செய்யப்படவும் அனுப்பி வைக்கிறார்கள்.

உயர்நிலைப் பள்ளியிலிருந்து ஆரம்பித்து முதுநிலைப்பட்டம் பெற்றுள்ளதுவரை, மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார்; தொடர்ந்து பல சாதனைகளையும் வெற்றிகளையும் அடைந்துள்ளவரே என்பதை இயக்குனர் அவர்களுக்கு, அவரைப்பற்றிய சான்றிதழ்களும், மதிப்பெண் பட்டியல்களுமே, அறிவித்து விட்டன.

“பள்ளியில் படிக்கும்போது ஏதாவது ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்தவரா நீங்கள்?” இயக்குனர் வினவுகிறார்.

”இல்லை. அதுபோல ஏதும் இல்லை, ஐயா”

“அப்படியென்றால் உங்கள் தந்தைதான் முழு படிப்புச்செலவுகளையும் பார்த்துக்கொண்டாரா?”.

”நான், ஒரு வயதுக் குழந்தையாய இருந்த போதே என் தந்தை காலமாகி விட்டாராம். என் படிப்புச்செலவுக்கு பணம் கொடுத்ததெல்லாம் என் தாயார் தான், ஐயா”

”உங்கள் தாயார் எந்த அலுவலகத்தில் என்னவாக வேலை பார்த்தார்கள்?”

”என் தாயார் ’துணிகளை கைகளால் சலவை செய்யும் சலவைத் தொழிலாளியாக வேலை பார்ப்பவர்’,  ஐயா”

“உங்கள் உள்ளங்கைகள் இரண்டையும் விரித்துக் காட்டுங்கள்”

இளைஞர் காட்டினார். இயக்குனர் பார்த்தார்கள். அவை மிகவும் மிருதுவாகவும் சுத்தமாகவுமே இருப்பதை பார்த்துத் தெரிந்துகொண்டார், இயக்குனர்.

”இதுவரை தாங்கள், தங்கள் தாய்க்கு, துணிகளை சலவை செய்யும் அவர்களின் தொழிலில் ஏதாவது உதவிகள் செய்திருக்கிறீர்களா?”

“இல்லை ஐயா. அவர்கள் என்னை அது போன்ற வேலைகளில் உதவிகள் ஏதும் செய்யச்சொல்லி இதுவரை அழைத்தது இல்லை. 


ஒருபோதும் இதைச்செய்ய அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள்.  


’நிறைய புத்தகங்கள் வாங்கி எப்போதும் நிறைய படித்துக்கொண்டே இருக்க வேண்டும் நீ’ என்று தான் சொல்லியிருக்கிறார்கள். 


மேலும் என் தாயால் தான், என்னைவிட வெகு வேகமாகவும் படுசுத்தமாகவும், துணிகளை சலவை செய்திட முடியும்” என்றார் அந்த இளைஞர்.

”உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்! இன்று வீட்டுக்குப்போனதும் உங்கள் தாயாரின் கைகள் இரண்டையும் தாங்கள் முதலில் தண்ணீரால் சுத்தமாகக் கழுவி,  சோப்பு போட்டு தேய்த்து விட்டு, பிறகு ஈரம் போகத் துடைத்து விட்டு, நாளை இதே நேரம் இங்கு வந்து என்னை சந்திக்க வேண்டும்; இப்போது நீங்கள் புறப்படலாம்” என்றார் இயக்குனர் அவர்கள்.

இதைக்கேட்ட அந்த இளைஞருக்கு, தனக்கு இதே அலுவலகத்தில் உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே உணர முடிந்தது.

வீட்டுக்குச் சென்றவர் தன் தாயிடம் விஷயங்களைக்கூறி விட்டு, அவர்களுடைய கைகள் இரண்டையும் மகிழ்ச்சியுடன் தன் கைகளால் பிடித்து,  தண்ணீராலும், சோப்பினாலும் அவற்றைக் கழுவிவிட, தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்.

மிகப்பெரிய வியப்பு ஒருபுறமும், சந்தோஷம் ஒருபுறமுமாக அந்தத்தாய் பலவித உணர்ச்சிகளுடன் தன் பிள்ளையிடம் தன் இரு கைகளையும் நீட்டுகிறாள்.

தன் தாயின் கரங்களை முதன்முதலாகத் தொட்டுப்பார்த்து, மிகவும் மென்மையாக அதைக் தண்ணீரால் கழுவிய மகனுக்கு, அவரை அறியாமலேயே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. 


தன் தாயின் கரங்கள் சுருங்கிப்போயும், தளர்ந்து போயும், ஆங்காங்கே காய்ச்சுப்போய் புண்ணாகியும், பித்துவெடி போல பாளம் பாளமாக வெடித்திருப்பதையும், அப்போது தான் அந்தப்பிள்ளை முதன் முதலாக கவனிக்கிறார். 


அவைகளில் தண்ணீர் பட்டு கழுவிவிடும் போதே அவரின் தாய்க்கு ஏற்படும் வலியையும், ரணத்தையும் அறிகிறார். அந்தத்தாய் வலியைப் பொறுத்துக் கொண்டு கைகளைக் காட்டிக்கொண்டிருந்தாலும் அவர்கள் உடம்பு வலியால் நடுங்கத் தொடங்கியதை மகனும் கவனிக்கலானார்.

இந்தத் தன்தாயின், இந்தக்கரங்களே, துணிகளை வெளுத்ததோடு மட்டுமல்லாமல், தன் படிப்புச்செலவுகளையும் இதுவரை கவனித்து வந்துள்ளன.

தன்னுடைய பள்ளிப்படிப்புக்கு தொகையைக்கொடுத்த இந்தத் தன் தாயின் விரல்கள், இந்தப் புண்கள் என்ற மிகப்பெரிய ரணங்களை விலையேதும் கொடுக்காமல் இலவசமாகவே வாங்கி அனுபவித்து வந்துள்ளன என்பதை முதன்முதலாக தன் வாழ்க்கையில் ஒரு பாடமாகவே கற்றுக்கொள்ள முடிந்தது அந்த இளைஞரால், அன்று.

தன் முதுநிலைப்பட்டப்படிப்புக்கும், தான் இன்று பெற்றுள்ள கல்வி அறிவுக்கும், தன் எதிர்காலத்திற்கும்,   தான் கொடுத்துள்ள மிகப்பெரிய விலை, தன் தாயின் புண்பட்ட கரங்களே, என்பதை உணர்ந்து கொண்டார், அந்த இளைஞர்.

தன் தாயின் கரங்களை ஓரளவு நன்கு கழுவிவிட்டு, சுத்தப்படுத்தி, துடைத்து விட்ட பிறகு, தன் தாய் அன்று சலவை செய்ய வேண்டி வைத்திருக்கும் மீதித்துணிகளை தானே சலவை செய்து உதவினார் அந்த இளைஞர். அன்று இரவு முழுவதும் அந்தத் தாயும் மகனும் தூக்கம் வராமல், ஏதேதோ மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே இருந்தார்கள். 

மறுநாள் அந்த இளைஞர் அந்த அலுவலகத்தில் அந்த இயக்குனரை அவர் ஒதுக்கிக்கொடுத்திருந்த மிகச் சரியான நேரத்தில் போய் சந்திக்கிறார்.

கண்கலங்கியபடி வந்திருந்த இளைஞரைப் பார்த்த அந்த இயக்குனர் “நேற்று நீங்கள் உங்கள் வீட்டில் என்ன செய்தீர்கள்? என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். 

”என் தாயாரின் கரங்களை கழுவி சுத்தப்படுத்தினேன்; அவர்கள் பாதியில் வைத்திருந்த அழுக்குத் துணிகளை நானே சலவை செய்து கொடுத்தேன்” என்றார் இளைஞர்.

”தாங்கள் செய்தவற்றை இப்போது கூறினீர்கள். அது சரி. இதிலிருந்து தாங்கள் என்ன உணர்ந்து கொண்டீர்கள்?”

”No. 1 
புகழ்ச்சி, பாராட்டுக்கள் என்றால் என்னவென்று அறிந்து கொண்டேன். என் தாய் என்பவளின் பாசமும் கடும் உழைப்பும் மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு நான் படித்து வெற்றிபெற்றுள்ளது என்பதே நடந்திருக்காதுஎன்பதை நன்கு தெரிந்து கொண்டேன்.

No. 2 
சேர்ந்து வேலை செய்தல், வேலைகளைப் பகிர்ந்து கொண்டு செய்தல் முதலியவற்றைப்பற்றி என் தாய்க்கு நான் இன்று உதவப்போனதால் மட்டுமே தெரிந்து கொண்டேன். அந்த வேலைகள் எவ்வளவு கடினமானவை என்பதையும், அதை செய்வதில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியது உள்ளன என்பதையும்,   பொதுவாக எந்த ஒரு வேலையானாலும் அதை அழகாகச் செய்து முடிப்பது என்பது சாதாரணதொரு விஷயம் அல்ல என்பதையும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அனுபவமும் தொழில்நுட்பமும், தனித்திறமைகளும் தேவைப்படுகிறது என்பதை மிக நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.  

No. 3 
எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், அதன் மதிப்பு வாய்ந்த சக்தி முதலியன வெகுவாக ரஸித்து மகிழ வேண்டியவை என்பதையும் நன்கு தெரிந்து கொண்டேன், ஐயா” என்றார் அந்த இளைஞர். 

”இதை ... இதை ... இதைத்தான் நான் இங்கு பணியில் அமர்த்தப்போகும் அதிகாரிகளிடம் மிகவும் எதிர்பார்க்கிறேன். 

இங்கு மேலாளராகப்பணியில் அமர்பவர் 

(1) பிறர் செய்யும் சிறந்த பணிகளையும், உபகாரங்களையும் மனதார பாராட்டி உற்சாகப் படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். 

(2) ஒரு வேலையை கீழேயுள்ள ஒருவரிடம் ஒப்படைத்து, அந்த வேலையை அவரைவிட்டுச் செய்யச்சொல்லி, செய்து முடித்த அந்த வேலையை பெற்றிடும் போது, அதற்காக அவர் எவ்வளவு உழைத்துள்ளார், எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்பதை நன்கு அறியக்கூடிய சக்தியுள்ளவராக இருக்க வேண்டும்.

(3) பணம் ஈட்டுவது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளாதவராக இருக்க வேண்டும் 
  
இவை எல்லாமே தங்களிடம் இருப்பதைத் தெரிந்து கொண்டு விட்டதால் உங்களை இந்தப்பணிக்கு இப்போதே நான் நியமித்து உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று சொல்லி இளைஞரின் கரத்தைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்தினார், அந்த நிறுவனத்தின் இயக்குனர்.


இந்த இளைஞரின் பணி நியமிப்புக்குப் பின், அவர் தானும் கடினமாக உழைத்ததுடன், தன் கீழ் பணிபுரிபவர்களையும் அனுசரித்துப்போய், அரவணைத்து, அவர்களின் முழு அன்பினையும் பெற்று மிகச்சிறந்த தங்கமான மனிதர் தங்களுக்கு மேலாளராகக் கிடைத்துள்ளார்கள் என அனைத்து ஊழியர்களின் பாராடடுக்களையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றார். 


பணிகளை மிகவும் திட்டமிட்டு, ஒரே குடும்பம் போல ஒற்றுமையுடன் செயல்பட்டு, குழுக்களாக [Team Work] ஆர்வத்துடன், அனைவரும் பொறுப்புடன் செயல் பட்டதால்,  அந்த நிறுவனம் மிக நல்லதொரு அபார வளர்ச்சியினை எட்டி வெற்றியடைய முடிந்தது.


--o-o-o-o-o-
  நம் சிந்தனைக்கு சில விஷயங்கள்
மிகவும் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் நம் குழந்தைகளுக்கு, அவை எந்தப்பொருட்களை ஆசைப்பட்டு கேட்டாலும் உடனடியாக நாம் அவற்றை வாங்கித்தந்து வழக்கப்படுத்தி விட்டோமானால், அவைகளுக்கு குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்கள் பற்றி ஏதும் அறியாமல் போக நேரிடும். 


பெற்றோர்கள் நமக்காக எவ்வளவு பிரயாசைப்பட்டு ஒவ்வொன்றையும் நம் சந்தோஷத்திற்காக செய்து தருகிறார்கள் என்ற நினைப்பே இல்லாமல் அவை வளரக்கூடும். அது போன்ற குழந்தைகளுக்கு ’மிகுந்த உரிமை எடுத்துக்கொள்ளும் மனோபாவம்’ ஏற்படக்கூடும்.


அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக ஆகி வேலை பார்க்கச் செல்லும் போது, தான் சொல்லுவதைத்தான் மற்ற எல்லோரும் கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடும். 


அது போன்ற குழந்தைகள் ஒரு மேலாளர் பதவிக்கு வரும்போது, தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த வேலைகளைச் செய்வதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கக்கூடும் என்பதைப் பற்றி சிந்திக்கவே தோன்றாது. 


அது போன்று வளர்ந்து விட்ட பிள்ளைகள், பிறரை எப்போதும் எதற்கும் குற்றம் சொல்லி பழி போடுவதிலேயே கவனமாக இருக்கக்கூடும்.


இது போன்றவர்களிடம் ஏட்டுப்படிப்பு மிக நல்ல முறையில் அமைந்திருந்தாலும், ஒரு காலக்கட்டம் வரை வெற்றி அடைவது போலத் தோன்றினாலும், இவர்களால் வாழ்க்கையில் சரியான பலனை அனுபவிக்க இயலாமல் போகக்கூடும். 


இவர்கள் மிகவும் பேராசை கொண்டவர்களாகவும், திருப்தியற்றவர்களாகவும், மேலும் மேலும் சுயநலமாகவே சிந்திப்பவராகவும், அதற்காக மற்றவர்களுடன் ஒத்துப்போகாமல் சண்டை சச்சரவு செய்பவர்களாகவுமே இருப்பார்கள். 


எதற்கெடுத்தாலும் முணுமுணுத்தல், அனாவசியமாகக் கோபப்படுதல், விரோதம் குரோதம் வெறுப்பு முதலியவற்றிற்கு ஆட்படுதல் போன்றவைகள் இவர்களின் சுபாவமாக அமைந்து விடும் ஆபத்தும் உண்டு.


இதுபோன்று குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், நாம் அவர்கள் மேல் உண்மையிலே அன்பு செலுத்துகிறோமா அல்லது அவர்களுக்கு அழிவைத் தேடித்தருகிறோமா என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


உங்களுடைய அன்புக்குழந்தைகளை நல்ல பெரிய வீட்டினில் சுகமாக வாழ வையுங்கள். நல்ல மிகச்சிறந்த உணவளியுங்கள். பியானோ கற்றுக்கொடுங்கள். மிகப்பெரிய திரையுள்ள தொலைகாட்சிப்பெட்டியைப் பார்க்கவும் அனுமதியுங்கள், வேண்டாம் என்றே சொல்லவில்லை.


நீங்கள் வயல்களிலோ தோட்டங்களிலோ வேலை செய்யும் போது, அவர்களுக்கும் அந்த வேலைகளைக் கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்.  அவர்களும் அவற்றைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்.


தினமும் சாப்பிட்ட பிறகு அவரவர்கள் சாப்பிட்ட தட்டு, கிண்ணங்கள் காஃபி டவரா டம்ளர் கோப்பைகள் முதலியவற்றை அவர்களே, தன் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து கொண்டு ஆசையாகக் கழுவி வைக்குமாறு பழக்கப்படுத்துங்கள்.


இதையெல்லாம் கழுவி வைக்க நீங்கள் சுலபமாக ஓர் வேலையாளை நியமித்து விடலாம் தான். அதற்கான பணமும் வசதி வாய்ப்புக்களும் உங்களிடம் அதிகமாகவே உள்ளது தான். ஆனாலும் குழந்தைகளிடம் உங்கள் அன்பை சரியான வழியில் காட்டிட, அது சரியான வழிமுறைகள் ஆகாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 


நீங்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்று தங்கள் குழந்தைகளுக்குத் தங்களின் ஆடம்பர வாழ்க்கை மூலம் தெரிவிப்பது முக்கியமல்ல. 


ஒருநாள் இந்தக்கதையில் வரும் இளைஞனின் தாய் போல நம் குழந்தைகளுக்கும் வயதாகலாம்.  தலை முடியும் நரைத்துப் போகலாம். 


மிக முக்கியமான விஷயம், தங்கள் குழந்தைகளுக்கு பிறரின் உழைப்பும், அதில் உள்ள கஷ்டங்களும், அவற்றின் கசப்பான அனுபவங்களும் தெரிந்திருக்க வேண்டும். 


பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில்,  பாராட்டவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 


மற்றவர்களை அனுசரித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி அவர்களைத் தட்டிக்கொடுத்து, பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி, சுலபமாக சுமுகமாக அவர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை அறியும் திறமைகளை அவர்கள் கற்றுக்கொள்ளுமாறு நாம் குழந்தையிலிருந்தே பழக்கி வளர்க்க வேண்டும்.  


மொத்தத்தில், பிறரிடம் அன்பு செலுத்துதல், பிறரைப் பாராட்டுதல், பிறரிடம் இரக்கம் காட்டுதல், மனிதநேயம் போன்ற நல்ல பண்புகளை குழந்தைகளுக்கு,பெற்றோர்கள், அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே கற்றுத்தந்து விட வேண்டும். இதுபோன்ற நல்ல பண்புகளை அவர்கள் கற்றிட, நாமும் நல்ல பண்புள்ளவர்களாகவே திகழ்ந்து, அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். 
-o-o-o-o-o-o-"STORY OF APPRECIATION" 

என்ற தலைப்பில் நான் ஆங்கிலத்தில் படித்த சிறுகதையின் ’கரு’ இது.

ஆங்காங்கே தேவையான பல மாற்றங்களுடன் 

தமிழாக்கம் மட்டுமே என்னால் செய்யப்பட்டுள்ளது. - vgk


37 கருத்துகள்:

 1. மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.....

  முன்பே ஆங்கிலத்தில் மின்னஞ்சல் மூலம் வந்ததைப் படித்திருக்கிறேன்....

  அதை அழகிய தமிழில் உங்கள் நோக்கில் பார்க்கும் போது மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 2. தன் தாயின் கரங்கள் சுருங்கிப்போயும், தளர்ந்து போயும், ஆங்காங்கே காய்ச்சுப்போய் புண்ணாகியும், பித்துவெடி போல பாளம் பாளமாக வெடித்திருப்பதையும், அப்போது தான் அந்தப்பிள்ளை முதன் முதலாக கவனிக்கிறார்.

  நெகிழ வைத்த இடம்.

  பதிலளிநீக்கு
 3. பாராட்டப்பட வேண்டியவர்களை, பாராட்டப்பட வேண்டிய நேரத்தில், பாராட்டவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

  உண்மை. பாராட்டும் போது கிடைக்கிற மன விசாலம் பின்பு மற்றவர் பாராட்டும்படியான செயல்களைச் செய்ய
  ஆர்வம் தருகிறது.

  பதிலளிநீக்கு
 4. In addition to the lessons imparted in this article, I may add one more: Treat your old parents with care and kindness. I find that in our families, the elders suffer silently, more so, when they fall sick and need the help of their children's or their spouses even for their minimum movement, or eating. At the end of their lives, people realize tht what is left is just illusion - 'mayai'. No affection, no love - all relationships tend to become illusional.

  பதிலளிநீக்கு
 5. D. Chandramouli said...
  //In addition to the lessons imparted in this article, I may add one more: Treat your old parents with care and kindness. I find that in our families, the elders suffer silently, more so, when they fall sick and need the help of their children's or their spouses even for their minimum movement, or eating. At the end of their lives, people realize tht what is left is just illusion - 'mayai'. No affection, no love - all relationships tend to become illusional.//

  தங்களின் அன்பான வருகைக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி, சார்.

  முதியோர்கள் பிரச்சனைகளைப் பற்றியும், அவர்களைப் புரிந்துகொண்டு, இளம் வயதினர் நடந்துகொள்ள வேண்டிய கடமைகள் பற்றியும், நான் என் படைப்புகளில் பலமுறை எழுதியுள்ளேன், சார்.

  சிலவற்றை படித்து ரஸித்து நீங்கள் உள்பட பலரும் கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.

  அவற்றில் சிலவற்றிற்கான இணைப்புகள் இதோ:


  http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4.html வடிகால் [இறுதியில் - நம் சிந்தனைக்கு என்ற பகுதி]

  http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html இனி துயரமில்லை

  http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html சிரிக்கலாம் வாங்க! [உலக்கை அடி]

  http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_05.html முதிர்ந்த பார்வை

  http://gopu1949.blogspot.in/2011/10/15.html நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் [5 பகுதிகள்]

  http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_18.html மாமியார்

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_9351.html நகரப்பேருந்தில் ஓர் கிழவி

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_798.html எல்லோருக்கும் பெய்யும் மழை
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 6. பணிகளை மிகவும் திட்டமிட்டு, ஒரே குடும்பம் போல ஒற்றுமையுடன் செயல்பட்டு, குழுக்களாக [Team Work] ஆர்வத்துடன், அனைவரும் பொறுப்புடன் செயல் பட்டதால், அந்த நிறுவனம் மிக நல்லதொரு அபார வளர்ச்சியினை எட்டி வெற்றியடைய முடிந்தது.

  அற்புதமான பகிர்வுகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 7. To Mr. D. Chandramouli Sir,


  உண்மையாகவே அளவுக்கு அதிகமாகப் பாசம் செலுத்த முடிந்தவள் தாய் ஒருவள் மட்டுமே அதுவும் தன் குழந்தைகளிடம்.

  அதன் பிறகு சொல்லக்கூடியது ஒன்று உண்டென்றால் நல்லதொரு உண்மையான நேர்மையான கணவன் மனைவிக்குள் உள்ள பாசம்.

  மீதி அனைத்து உறவுகளுமே பாசமல்ல. வெறும் வேஷம் மட்டுமே.

  இதைப்பற்றி என்னால் எவ்வளவோ ஆணித்தரமாக பக்கம் பக்கமாக எழுத முடியும். CASE STUDY கொடுத்து நிரூபிக்கவும் முடியும். இதனால் பலரின் வெறுப்புகளுக்கு நான் ஆளாக நேரிடும்.

  ஏனென்றால் உண்மையை உண்மையாகக் கூறும் போது யாராலும் அதை ஏற்றுக்கொள்ள இயலாது.

  மேலும் அவர்களுக்கு இதில் அனுபவமும் பத்தாது.

  அவரவர்கள் இதை ஒரு நாள் உணர்ந்து கொள்ளும் நிலைமை வரலாம்.

  அப்போது மட்டுமே அவர்களால் நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியும்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் வயல்களிலோ தோட்டங்களிலோ வேலை செய்யும் போது, அவர்களுக்கும் அந்த வேலைகளைக் கொஞ்சம் கற்றுக்கொடுங்கள். அவர்களும் அவற்றைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்.


  இதையே தான் மதிப்பிற்குரிய ராஜாஜி சொன்னபோது குலக்கல்வித் திட்டம் என்று வசைபாடி இயங்காமல் செய்தது ஒரு அரசு !

  பதிலளிநீக்கு
 9. கதையைப் போல் கூறிய வழ்வியல் தத்துவம் மிக அருமை

  பதிலளிநீக்கு
 10. தாயின் அருமையை உணரவைத்த நிர்வாகி போற்றத்தக்கவர்

  பதிலளிநீக்கு
 11. பல நல்ல கருத்துக்களை எளிய நடையினில் விளக்கும் தங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. நம் சிந்தனைக்கு என்று நீங்கள் கூறிய விஷயங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
  மெயில் மூலம் இக்கதையை முன்பே வாசித்து இருந்தாலும் உங்கள் கருத்துக்களோடு பகிர்ந்தது மிக அருமை.

  பதிலளிநீக்கு
 13. அருமையான படிப்பவர்கள் அனைவரின்
  மனச் சாட்சியை ஒருமுறை உலுக்கிவிட்டுப்போகும் பதிவுதைய தற்போதைய காலச் சூழலிலஅவசியமான பதிவும் கூட
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 14. ayya!
  nalla unarvu poorvamaana-
  unarchi poorvamaana kathai-
  karuthu !

  ungalukku vaazhththu!

  பதிலளிநீக்கு
 15. தாயின் அருமையை உணரவைத்த நிர்வாகி போற்றத்தக்கவர்

  பதிலளிநீக்கு
 16. இதுவரையில் தந்த பதிவுகள் அனைத்தையுமே மிஞ்சக்கூடிய அற்புதமான பதிவு இது! அருமையான விஷயங்களை ஆணி அடித்தாற்போல சொல்லியிருக்கிறீர்கள்!

  தாய் குழந்தையிடம் காட்டும் பாசமும் கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள‌ அன்பும் தவிர மற்ற பாசங்கள் எல்லாமே வேஷம் தான் என்று சொல்லியிருக்கிறீர்கள்! தந்தை ஒரு குழந்தையிடம் செலுத்தும் பிரியம், குழந்தைகள் பெற்றோரிடம் செலுத்தும் பிரியம் இதெல்லாமுமே வேஷம் என்கிறீர்களா? எல்லா உற‌வுகளிலுமே விதிவிலக்குகள் உண்டு தானே?

  பதிலளிநீக்கு
 17. மனோ சாமிநாதன் said...
  //இதுவரையில் தந்த பதிவுகள் அனைத்தையுமே மிஞ்சக்கூடிய அற்புதமான பதிவு இது! அருமையான விஷயங்களை ஆணி அடித்தாற்போல சொல்லியிருக்கிறீர்கள்!//

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  ==============================

  //தாய் குழந்தையிடம் காட்டும் பாசமும் கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள‌ அன்பும் தவிர மற்ற பாசங்கள் எல்லாமே வேஷம் தான் என்று சொல்லியிருக்கிறீர்கள்!//

  ஆமாம் மேடம். என்னைப் பொருத்தவரை, என் அனுபவத்தில் மற்ற எல்லா உறவுகளுமே வேஷமே தான்.

  அதில் ரத்தபாசமும் கொஞ்சூண்டு கலந்திருக்கும். அதை நான் மறுக்கவில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

  தசை மட்டும் ஆடி என்ன பயன்? எதையுமே ஆக்கபூர்வமாக செயல்படுத்த முடியாதபடி பல காரணிகள் தடுத்துவிடும்.

  வேஷ சக்திகளின் கை ஓங்கும் போது பாச சக்தி வலுவிழந்து தோற்றுப்போகும், என்பதே நடைமுறையில் நான் எங்கும் காண்பது.

  =============================

  //தந்தை ஒரு குழந்தையிடம் செலுத்தும் பிரியம், குழந்தைகள் பெற்றோரிடம் செலுத்தும் பிரியம் இதெல்லாமுமே வேஷம் என்கிறீர்களா?//

  குழ்நதைகள் குழந்தைகளாக இருக்கும் வரை [Say 15 வயது வரை ] பிரச்சனையே இல்லை மேடம். ஒருவொருக்கொருவர் பாசமெல்லாம் அதுவரை மட்டுமே, மேடம்.

  அதன் பிறகு படிப்படியாய் பாசங்களின் சதவீதம் குறைய ஆரம்பித்து வேஷங்களின் சதவீதம் அதிகரிப்பதை நன்றாகவே உணரமுடியும், என்பதே என் கருத்து.

  ’தாயும் பிள்ளையுமே ஆனாலும் வாயும் வயிறும் வேறுவேறு அல்லவா’ என்று சொல்வார்களே! அதில் எவ்வளவு ஒரு உண்மை இருக்கிறது தெரியுமா? மேடம்.

  அவரவர்கள் சாப்பிட்டால் தானே அவரவர்கள் பசி அடங்கும். தாய் சாப்பிட்டால் குழந்தையின் பசியோ, குழந்தை சாப்பிட்டால் தாயின் பசியோ எப்படி அடங்க முடியும்?

  ==============================

  //எல்லா உற‌வுகளிலுமே விதிவிலக்குகள் உண்டு தானே?//

  எல்லா உறவுகளிலுமே விதிவிலக்குகள் இருப்பதாகத் தங்களுக்கு இப்போது தெரியலாம்.

  எல்லாமே கடைசிவரை மகிழ்ச்சியாக போகும் என்று தாங்களும் நம்பலாம்.
  அந்தப் பாஸிடிவ் எண்ணங்களில் தப்பேதும் இல்லை. பலரும் தப்புக்கணக்குப் போட்டு, பலவித எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு நினைத்துக் கொண்டிருக்கும் அடிப்படையான தவறே இந்த பாஸிடிவ் ஆன எண்ணங்களுடன் கூடிய தவறான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளுமே.

  அந்த நினைப்பு தான் கடைசியில் மாயை [ILLUSION] என்று ஆகும்போது நம்மால் தாங்கமுடியாமல் மனது நொறுங்கிப்போய் விடுகிறோம்.

  உடலில் தெம்பும் பொருளாதார வசதிகளும் சேர்ந்து நம்மிடம், நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை, இந்த மாயையை நம்மால் உணரவே முடியாது.

  இந்த இரண்டில் எது ஒன்றை நாம் இழந்தாலும், இந்த மாயையை நாம் மிகச்சுலபமாகவே உணரமுடியும்.

  பாசமெல்லாம் வெறும் வேஷம் என்பதையும் நாம் அன்று தான் முற்றிலும் தெரிந்து கொள்ளமுடியும்.

  இந்த என் மாறுபட்டக் கருத்துக்களை
  தங்களைப்போன்ற பலராலும் இன்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதை நான் நன்கு அறிவேன்.

  நீங்கள் இவற்றை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நான் சொல்வதெல்லாம் மட்டுமே உண்மை, என்பதே என் வாதம்.

  முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள பலரிடம் மனம் விட்டு பேசினால், இந்த மாயை என்பதைப் பற்றி மேலும் பல தகவல்களை அவர்களின் சொந்த அனுபவத்தில் எடுத்துக்கூறி நன்கு புரிய வைப்பார்கள்.

  அவர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் காட்டாத பாசமா? பொருளாதாரத்தில் தான் நலிவுற்ற நிலையில் இருந்தவர்களா?

  எல்லாவற்றையும் ஈவு இரக்கம் கொஞ்சமும் இன்றி பகல் கொள்ளை அடித்து பிடுங்கிக்கொண்டு, நிர்கதியாக விட்டுவிட்டனர் தாங்கள் சொல்லும் பாசம் மிகுந்த வேஷதாரிகள், என்ற வாரிசுகள்.

  மீண்டும் சொல்கிறேன், ஒரு தாய் தன் குழந்தைகளிடம் காட்டிடும் பாசம் மட்டுமே உண்மையானது. அதே போல உண்மையான மற்றும் நேர்மையான கணவன்+மனைவி க்குள் உள்ள பாசம் மட்டுமே உண்மையானது.

  மீதி யார் மீது யார் காட்டும் பாசமும் வெறும் வெளிவேஷம் மட்டுமே. மாயை மட்டுமே. அது 100% உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை, இல்லை, இல்லை என்ப்தை மிகவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  vgk

  பதிலளிநீக்கு
 18. உடனேயே பதில் எழுதியதற்கு இனிய நன்றி!

  வாழ்க்கையில் அனைத்துமே மாயை என்பதை வயது ஏற ஏற அனுபவங்கள் நமக்கு சொல்லிக்கொடுக்கின்றன என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. அதே போல முதியோர் இல்லங்களில் கலந்து பழகிய அனுபவமும் எனக்கிருக்கிறது. அவர்களின் கண்ணீரிலும் கதைகளிலும் மனம் கலங்கியிருக்கிறது. அதே சமயம் ஒவ்வொருத்தர் அனுபவமும் பலவிதமாய் அவர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கிறது. அன்பை மட்டுமே க‌டைசி வரை அனுபவிக்கும் கொடுப்பினை பெற்ற‌வர்களை பார்த்த அனுபவமும், தன் குழந்தைக‌ளையே வெறுக்கும் அன்னையரை சந்தித்த அனுபவமும் இருப்பதனாலேயே என் கருத்தை எழுதியிருந்தேன்.

  மற்ற‌படி இந்த எனது கருத்துக்களை வாதமாகவோ, முரண்பாடாகவோ தவறாக எடுத்துக்கொள்ள‌ மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. நல்ல கருத்துகளைச் சொல்லிய அற்புதமான பகிர்வு. நம் குழந்தைகளுக்கு நாம்தான் முன்னுதாரணமாக நடந்து, வாழ்ந்து காட்ட வேண்டுமென்று நீங்கள் முடி்த்திருக்கும் விதம் அற்புதம்! அந்த இளைஞனின் மூலம் அலுவலக நிர்வாகத்தின் அடிப்படையையும் விளக்கியது அருமை.

  பதிலளிநீக்கு
 20. அருமையான கருத்துக்களை பாங்குற பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி!வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 21. மனதை நெகிழ வைத்த கதை. தாயைப் போல அன்பான உறவை பார்க்க முடியாது....

  சிந்தனைக்கு என்று சொன்ன எல்லா கருத்துக்களுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது. பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 22. இந்த சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அற்புதமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்த என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய

  திருவாளர்கள்:
  ==============

  01. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்

  02. ரிஷ்பன் Sir அவர்கள்

  03. D. சந்த்ரமெளலி Sir அவர்கள்

  04. ரமணி Sir அவர்கள்

  05. பழனி. கந்தசாமி Sir அவர்கள்

  06. சீனி Sir அவர்கள்

  07. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள்

  08. கணேஷ் Sir அவர்கள்

  மற்றும்

  திருமதிகள்:
  ===========

  01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்

  02. சந்திரவம்சம் Madam அவர்கள்

  03. ஆசியா உமர் Madam அவர்கள்

  04. லக்ஷ்மி Madam அவர்கள்

  05. மனோ சுவாமிநாதன் Madam அவர்கள்

  06. ஸாதிகா Madam அவர்கள்

  07. கோவை2தில்லி Madam அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 23. எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், அதன் மதிப்பு வாய்ந்த சக்தி முதலியன வெகுவாக ரஸித்து மகிழ வேண்டியவை என்பதையும் நன்கு தெரிந்து கொண்டேன், ஐயா” என்றார் அந்த இளைஞர்.//

  அருமையான பதில்.

  நல்ல கதை பகிர்வு

  இந்த கால கட்டத்திற்கு ஏற்ற பதிவு.

  நல்ல பிள்ளைகளை இந்த சமுதாயத்திற்கு தருவது பெற்றோர்களின் கடமை.

  நல்ல பிள்ளைகளாய் வளர்ந்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்பது பிள்ளைகளின் கடமை. இதை எடுத்து சொல்லும் பகிர்வு மிக மிக அருமை சார்,

  உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. கோமதி அரசு said...
  //எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், அதன் மதிப்பு வாய்ந்த சக்தி முதலியன வெகுவாக ரஸித்து மகிழ வேண்டியவை என்பதையும் நன்கு தெரிந்து கொண்டேன், ஐயா” என்றார் அந்த இளைஞர்.//

  அருமையான பதில்.

  நல்ல கதை பகிர்வு

  இந்த கால கட்டத்திற்கு ஏற்ற பதிவு.

  நல்ல பிள்ளைகளை இந்த சமுதாயத்திற்கு தருவது பெற்றோர்களின் கடமை.

  நல்ல பிள்ளைகளாய் வளர்ந்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்பது பிள்ளைகளின் கடமை. இதை எடுத்து சொல்லும் பகிர்வு மிக மிக அருமை சார்,

  உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 25. படித்தேன்! நெகிழ வைத்த பதிவு!

  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 26. Seshadri e.s. said...
  படித்தேன்! நெகிழ வைத்த பதிவு!

  காரஞ்சன்(சேஷ்)//


  மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 27. என் முதல் பின்னூட்டத்தில் பொதுவாக "நல்ல வாழ்க்கைப் பாடம்" என்று மட்டும் கிறிப்பிட்டு இருந்தேன். இப்போது இந்தப் பதிவை மீண்டும் படிக்கும்போதுதான் வைகோ எவ்வளவு சிந்தித்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறார் என்று வியந்தேன்.

  பொதுவாக எல்லாப் பெற்றோர்களும் தாம் பட்ட கஷ்டங்களைத் தம் மக்களும் படவேண்டாமே என்றுதான் எண்ணுகிறார்கள். ஆனால் இந்த செயலினால் அவர்கள் தம் மக்களுக்கு எவ்வளவு தீங்கு செய்கிறார்கள் என்று உணர்வதில்லை. அவர்கள் கஷ்டங்கள் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்த பிறகு வாழ்க்கையின் சோதனைகளை எதிர் கொள்ள முடிவதில்லை. இதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 28. மனோ மேடத்துக்கு நீங்கள சொன்ன பதில கருத்துகள் தான் என் கருத்தும்( ஹோம்) ல இருக்கறவங்க சொல்லும் உண்மை நிகழ்ச்சிகள் மனதை கலங்க வைக்கும்

  பதிலளிநீக்கு
 29. ஏற்கனவே மின்னஞ்சலில் படித்திருந்தாலும், இங்கு தமிழாக்கத்தைப் படிக்கும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.

  இதையெல்லாம் என்றோ படிக்காமல் அப்பப்ப படிக்க வேண்டும். சத்சங்கம்ன்னு சொல்லுவா இல்லையா. உங்கள் வலைத்தளம் ஒரு அருமையான சத்சங்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya June 19, 2015 at 5:44 PM

   //ஏற்கனவே மின்னஞ்சலில் படித்திருந்தாலும், இங்கு தமிழாக்கத்தைப் படிக்கும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.//

   :) மிகவும் சந்தோஷம், ஜெ.

   //இதையெல்லாம் என்றோ படிக்காமல் அப்பப்ப படிக்க வேண்டும். சத்சங்கம்ன்னு சொல்லுவா இல்லையா. உங்கள் வலைத்தளம் ஒரு அருமையான சத்சங்கம்.//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா ! :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 30. அந்த மேலதிகாரிக்குதா மொதக பாராட்டு. அவரு சொல்லின பொறவாலதான அந்த பயபுள்ள அம்மியோட கஸ்டம் வெளங்கிகிட மிடிஞ்சிச்சி. எங்கூட்ல கூட எனக்கு விடுப்பு நாளில அம்மிய ஒரு வேலயும் செய்யவுடாம கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுக் வச்சி போடுவேனாக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 20, 2015 at 1:33 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //அந்த மேலதிகாரிக்குதா மொதக பாராட்டு. அவரு சொல்லின பொறவாலதான அந்த பயபுள்ள அம்மியோட கஸ்டம் வெளங்கிகிட மிடிஞ்சிச்சி.//

   ஆமாம்.

   //எங்கூட்ல கூட எனக்கு விடுப்பு நாளில அம்மிய ஒரு வேலயும் செய்யவுடாம கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுக் வச்சி போடுவேனாக்கும்//

   மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. குட் கேர்ள். இருப்பினும் இதை உங்க அம்மி வாயால் என்னிடம் சொன்னால் மட்டும் தான் நான் நம்புவேனாக்கும். :)

   நீக்கு
 31. நல்ல விஷயங்கள்தான் அந்த மேலதிகாரி சொன்ன பிறகாவது தாயாரின் பணி கஷ்டத்தையும் காய்ந்து வெடிப்புகள் விழுந்த கைகளயும் பார்க்க முடிந்தது. சில குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டிகள் அமைவதில்லை. அப்படி அமைந்து விட்டால் அவர்களும் நல்ல பிள்ளைகளாகவே வருவார்கள்.

  பதிலளிநீக்கு
 32. சரி செய்யப்படவேண்டிய விஷயத்தை சரி செய்துவிட்டு தாயாரின் அருமை உணர்த்தி தயார் படுத்தி, வேலைக்கு வைத்தது... அருமை...

  பதிலளிநீக்கு