என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

VGK-36 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - 'எலி’ஸபத் டவர்ஸ்


 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :

 VGK-36   


 ’ எலிஸபத் டவர்ஸ் ‘  


 

  


இணைப்பு:
     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  
 நடுவர் திரு. ஜீவி 
நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 

  


மற்றவர்களுக்கு: 

    முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம் - 1


ஒரு முழுநீள நகைச்சுவைக் கதையைப் படைக்க நம் கதாசிரியருக்கு ஒரு பொறி, எலியின் மூலம் உண்டானதை எண்ணி வியப்படைய வேண்டி உள்ளது. நகைச்சுவை உணர்வு குன்றாமல், காட்சிகள் கோர்வையாய் அமைக்கப்பட்ட விதம் அருமை!

ஓட்டு வீடுகளிலும், கூரை வீடுகளிலும் வாழும்/வாழ்ந்த அனைவரும் எலியின் தொல்லையை அனுபவித்திருப்பார்கள். ஓட்டு வீடுகளில் ஒளிந்து அட்டகாசம் செய்து வந்த எலிகளுக்கும் மனிதர்களைப்போல் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிபுக ஆசை வராதா என்ன?.

அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏதோ ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு எலி குடிபுகுந்து விடுகிறது. முதல் வீட்டுக்குக் குடிவந்த முத்துசாமி கொண்டுவந்த அடசல்கள் உள்ளே ஒளிந்து வந்த தீவிரவாதியாய் அந்த எலி வந்திருக்கலாம் எனப் பலரும் சந்தேகப்படும் நிலை ஏற்படுகிறது. எனக்கென்னவோ அந்த குடியிருப்பின் பெயரில் “எலி” இருந்ததாலேயே, அந்த எலி உரிமை கொண்டாடி உட்புகுந்ததாகத் தோன்றுகிறது. கதாசிரியரும் கதைக்கான பெயரை எலியில் தொடங்கி வைக்கிறார்.

எலிக்குப் பயந்தவர்கள், பயப்படாதவர்கள் என வகைப்படுத்தப்பட்ட பாத்திரப் படைப்புகள் அருமை. இந்த எலி வந்த நேரம் பலருக்கும் கிலி உண்டாகி, அதற்குத் தீர்வு காண முடியாத நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பின் செயலர் இராமசுப்புவுக்கு “செயல்படாத செயலர்” எனப் பட்டம் வாங்கிக் கொடுத்து விடுகிறது.

எங்கிருந்தோ ஒரு எலி வந்தது! அது எந்த வீட்டாரின் சதியோ? என அவர் வேதனைப்படும் நிலைக்கு அவரை ஆளாக்கும் வகையில் வெள்ளிக்கிழமை அவர் அலுவலகத்திற்கு இராகுகால வேளையில் வீட்டிலிருந்து வந்த போன்கால் அமைகிறது.

வீட்டிற்குள் புகுந்த எலியால் கிலியடைந்த மகன் ராஜூவும், மனைவி அம்புஜமும் போட்டது போட்டபடி போட்டுவிட்டு கட்டில் மேல் ஏறி நின்றுகொண்டு கால் செய்து அழைத்ததில் அதிர்ந்த இராமசுப்பு கால்நாள் அனுமதி / அரைநாள் விடுப்பின்பேரில் வீட்டுக்கு விரைவதாகக் காண்பித்த விதம் அருமை.
  
மற்றவர்கள் வீட்டில் தென்பட்ட அந்த எலியைப்பற்றிக் கவலைப்படாதவர் தன் வீட்டில் நுழைந்தவுடன் விரைந்து தீர்வு காண விழைந்து வீட்டிற்குள் வீரன்போல் துடைப்பத்துடன் நுழைகிறார். அக்காட்சியை விவரிக்கும் இடத்தில் வெளிப்பக்க கிரில்கேட் திறந்திருந்ததாகக் காண்பிப்பதும், ஹாலில் யாரும் பார்க்காமல் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்ததாகக் காண்பிப்பதும் காட்சிக்கு வலு சேர்த்துவிடுகின்றன. ஓடிப்போய் இந்த வீரனும் கட்டில்மேல் ஒட்டி நிற்பது இன்னும் நகைச்சுவை.

எலிநுழைந்த பின் ஏற்பட்ட பிரச்சனைகள்/மாற்றங்கள் எத்தனை? எத்தனை? அத்தனையும் எடுத்துரைத்த விதமோ அருமை!

1.   மூஷிக வாகனனுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் சென்றிருந்த பக்கத்து வீட்டுப் பட்டாபியை, எலி ஒழிப்பிற்கான ஆலோசனைகளைச் சொல்லும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறார் இராமசுப்பு. நல்லவேளை! பட்டாபி வெளியில் வந்து மூஷிகத்தின் காதில் விழாதவாறு பேசினாரே! அது ஏற்புடைத்தல்ல என மனைவி இயம்பிட அடுத்தவழி தேடல்!

2.   சமையலறைக்குள் புகப் பயந்ததால் குடும்பத்துடன், வெளியில் சென்று பசியாறிவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில், பரந்தாமன் தந்த பழைய எலிக்கூண்டு ராமசுப்புவின் வயிற்றில் பால்வார்ப்பதாக அமைகிறது. பத்து ரூபாய்க்கு வடை வாங்கி அவர் கையாலேயே அதைப் பொருத்தித் தருமாறு வாங்கிக் கொண்டு வரும்வேளை, லிப்டில் சந்தித்த பால்காரரின் ஆலோசனையால் பங்கஜம் “வடைபோச்சே!”என வருந்தும் நிலைக்கு ஆளாகியதோடு மட்டுமின்றி சிந்திய வடைச்சிதறல்களை வாரிக்கொட்ட நேர்ந்து வருத்தம் கொள்கிறார். பரந்தாமன் யோசனையும் பலனளிக்காமற் போனது!

3.   அகராதித்தனமானவன், வாய்ச்சவடால் பேர்வழி என அவரிடம் பேரெடுத்த மச்சினன் கோவிந்தனை அன்று அகமகிழ்வுடன் வரவேற்கும் நிலைக்கு ஆளாகிறார் இராமசுப்பு. “சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பார்கள். எப்படியாவது எலியை ஒழிக்க கோவிந்தன் உதவமாட்டானா என்ற எண்ணமே இதற்குக் காரணம். பூனைப்படையாய் அவன் நிற்க பங்கஜம் சமையல் செய்ததாகக் காட்டியது அருமை!

4.   “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதற்கேற்ப மேலே விழுந்த தடித்த ஒட்டடைகூட எலியாய்த் தெரிய அந்த பயத்தில் இருமல் சிரப்பை கீழேதள்ளி உடைந்ததில் அதுவும் இரத்தம்போல் தோன்ற மிரண்டவிதம் நகைச்சுவை மிளிர்கிறது. கையுறை அணிந்து பரந்தாமன் தந்த எலிக்கூண்டை பால்காரரின் ஆலோசனையால் சோப்புப் போடுக்கழுவ முனைகையில் அது கழன்று தனித்தனியாகி அவரைக் கடனாளியாக்கி விடுகிறது. “வேணாம்! அழுதிடுவேன்!” எனும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது!

5.   எலிக்கான சோதனை என்ற பெயரில் கோவிந்தன் ஒழித்துப்போட்ட பொருட்களை சீராக்குவதிலிருந்து தப்பிக்க எண்ணி புது எலிக்கூண்டு வாங்கப் புறப்படும் நிலைக்கு ஆளாகிறார் இராமசுப்பு. இதிலும் “எஸ்கேப்….தானா?

6.   கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்க இரண்டு கொடுமை ஆடி நின்றது போல்  எலிப்பொறி வாங்குமிடத்தில் வியாபாரியின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிபிதுங்கி “எலிகளில் இத்தனை வகைகளா? எலிப் பொறியிலும் சைவம், அசைவமா? என வியந்து, தன் அறியாமையை வெளிக்காட்டாமல் சமாளிக்க முயல்வது எதார்த்தம். அசைவ கூண்டுக்கு ஆர்ச்கேட் உதாரணமா? கலக்கிவிட்டார் ஆசிரியர். இனி எங்கு ஆர்ச்கேட் என்றாலும் ஆசிரியர் வர்ணித்த அசைவக்கூண்டுதான் ஞாபகம் வரும். வாங்கிய இரண்டில், ஒரு கூண்டை பரந்தாமனிடம் ஒப்படைத்தபோது ஆகிவந்த கூண்டு அழிந்துபோனதாக அவர் மனைவி வருந்தியது ஆனாலும் ரொம்ப ஓவர் சார்!.

7.   சித்தமெல்லாம் எனக்கு எலி/கிலி மயமே! என்று புலம்பும் அளவுக்குச் சென்ற இராமசுவுக்கு உறங்கும் வேளையிலும் எலி தன்னைப் பிராண்டுவதுபோலவும், தலையணையை இழுத்துச் செல்வதுபோலவும், மச்சினரின் குறட்டை கூட எலியின் ஒலியாய் தோன்றியதிலும் வியப்பில்லை.

8.   அந்தரங்கம் யாவும் அந்த ரங்கனே அறிவான்!                   சனிக்கிழமை பயணத்தில் பக்கத்து சீட்டுக்காரரிடம் கடன் வாங்கிப் படித்த பேப்பரில் இருந்த இராசிபலன் பலித்ததாகவே தோன்றுகிறது. கோவிந்தனும், பரந்தாமனும் பலனளிக்காமல் போனாலும் அந்த அரங்கன் இரங்கி ரங்கனாக வீதியில் வந்ததாகத் தோன்றியது இராமசுப்புவுக்கு. மாம்பழச்சாலை அருகில் கையில் தலைகீழாகத் தொங்கவிட்ட இறந்த எலியுடன் சிறுவர்கள் புடைசூழ சென்ற ரங்கனை எலியாரை அடித்தழிக்கும் வலியாராக  எண்ணி, அவனிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் அளவுக்கு அமைகிறது. குடும்பத்தார் ஊருக்குச் சென்றுவிட உற்சாகபானம் அன்றிரவு  எலி பயத்தை நீக்கி நல்ல உறக்கத்தை அருளிவிடுகிறது. 

9.   மறுநாள் ஞாயிறு மஞ்சள் பையுடன் ஒப்பந்தப்படி ரங்கன் ஆஜராகி, என்கவுண்டரில் வீழ்த்தப்பட்ட ரௌடியைப்போல், எடுத்துவந்த எலியை இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்ல இறங்கிய படிகள் 63. அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைவரும் பார்க்க எலியின் நல்லடக்கம் இனிதே நடந்ததாகக் காட்டியதும் நல்ல நகைச்சுவை. ஒப்பந்தத்தில் ஒரிரு மணிக்குமுன் இறந்த எலியைக் கொண்டுவர வேண்டும் என இல்லாமற்போனதால் வாசனை சென்ட்டிற்கு அதிக செலவோ?

10. தன் தந்திரமான செயலால், இழந்த பெயரை மீட்டெடுத்தாலும், பின்னும் இரண்டு சுண்டெலிகள் அவர் கண்ணில் பட, எலிவாழும் இடத்தில் இனியும் தான் இருக்கக்கூடாது என எண்ணி தன் வீட்டையே விற்க முனைவது நகைச்சுவையின் உச்சகட்டம். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதைதானோ? அதற்கும் ஒருபடி மேலே சென்று செயலர் பதவியைத் துச்சமென எண்ணித் துறக்கத் துணியுமிடம் கதையில் ஹைலைட்.

11. இந்நிலையிலும் “எலிவளையானலும் தனி வளை” என எண்ணும் அளவிற்கா அவர் எண்ணத்தில் எலி குடிபுகவேண்டும்? எப்படியோ புரட்டாசியில் வெளிவந்த இக்கதையின் பாத்திரமான கோவிந்தன் பலனடைந்தார்.

இராமசுப்புவின் வீட்டில் எலி நுழைந்தபின் அவர் எப்படியெல்லாம் செயல்படுகிறார் எனக் காட்டியவிதம் அருமை. தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது இதுதானோ? பாவம்! இனியாவது அவர் செல்லுமிடமெல்லாம் எலியில்லா இடமாகி எல்லையில்லா மகிழ்வளிக்கட்டும்!

மொத்தத்தில் நகைச்சுவை மிளிர சிரிக்க வைத்து, சிந்திக்கவைத்து, எலிகளைப் பற்றியும் எலிப்பொறிகள் பற்றியும் விளக்கப் படங்களுடன், புதுமையான உவமைகளுடன் வெளியாகியுள்ள இந்தக் கதை அருமை. கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல நகைச்சுவை கதைகளைப் படைக்க வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 திரு. E. S. SESHADRI  


அவர்கள்.


 

 வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்) esseshadri.blogspot.com


  
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.      


 

 


முதல் பரிசினை  முத்தாக வென்றதுடன் 


மூன்றாம் முறையாகத் தான் பெற்ற   


 ஹாட்-ட்ரிக் வெற்றியினை 


இறுதிச் சுற்றான ஆறாம் சுற்றுவரை 


தக்க வைத்துக்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.


திரு. E.S. SESHADRI அவர்கள் 

 VGK-31 TO VGK-36   
      
**************************************


 

AN ACHIEVEMENT !
RECORD BREAK !!
12th TIME CONTINUOUS SUCCESS !!!
FROM VGK-25 TO VGK-36 


My Heartiest Congratulations to you 
My Dear Seshadri :)
- VGK

**************************************மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
     
முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம் - 2

“என்னடீ தனக்குத்தானே சிரிச்சுக்கறே?”

“அதுவா? அந்த ராமசுப்பு நம்மளைப் பார்த்து பின்னங்கால் பிடரியில் பட அலறியடிச்சிட்டு  ஓடினாரே, அதை நினைச்சுதான் சிரிக்கிறேன்.”

“அதை விடு. நம்ம ரெண்டுபேரும் புருஷன் பொஞ்சாதின்னு தெரியாமல், ஒரு பெரிய முரட்டுப் பெண் எலி போட்ட குட்டிகள்னு நினைச்சாரே மனுஷன்… அதை நினைச்சா எனக்கு சிரிப்பு தாங்கலை.”

“போகிற அவசரத்திலும் நாம மறுபடியும் வராமலிருக்க ஜன்னலை இழுத்து மூடிட்டுப் போயிருக்காரே… என்னவோ நமக்கு அந்த ஒரு வழி மட்டுந்தான்கிற நினைப்புல..”

“அதைச்சொல்லு. அந்த மனுஷருக்கு நம்மளைப் பத்தி என்ன தெரியும்? எலிக்கூடு வாங்கப்போன எடத்துல அந்த கடைக்காரன் கேக்கறான் சுண்டெலியா, நடுத்தர எலியா பெருச்சாளியான்னு? இவர் திருதிருன்னு முழிக்கறார். அதைப் பாக்கணுமே நீ..”

“பின்னாலேயே போனீங்களாக்கும்?”

“சும்மா வார்த்தைக்கு வார்த்தை நம்மளை சனியன் சனியன்னு சொல்லிட்டிருந்தால் கோவம் வராதா? சனியனுடைய வேலையக் காட்டவேணாமா?  ராசிபலன் வாசிக்கையில் கூட சனி எந்த ரூபத்திலும் வரலாம்னு இருக்கையில் இவர் நம்மளத்தானே நினைச்சார். அப்புறம் எப்படி சும்மா விடறது? இவரோட திட்டம் என்னன்னு தெரிஞ்சாதானே அதைத் தவிடுபொடி பண்ண நாம என்ன திட்டம் போடலாம்னு யோசிக்கமுடியும். அதனால் அவர் போற இடமெல்லாம் ஃபாலோ பண்ணிப் போனேனே..”

“நல்ல காரியம் செஞ்சீங்க.”

“நம்ம எலிகள் மகாத்மியத்தை அந்த எலிக்கூடு விக்கிற ஆசாமி வாயால கேக்கும்போது எவ்வளவு பெருமையா சந்தோஷமா இருந்துது தெரியுமா? அதிலயும் நம்ம இனத்திலயே பெரிய பெருச்சாளிகளோட பெருமைகளை ஒவ்வொண்ணா அவர் அடுக்கும்போது, கேட்டுக்கிட்டிருந்த எனக்கு காதில் தேன்வந்து பாயுற மாதிரி இருந்தது.”

“ஐயோ.. நானில்லையே அதையெல்லாம் கேக்க.. என்னையும் அழைச்சிட்டுப் போயிருக்கலாமில்லே..?”

“நல்லவேளை, உன்னை அழைச்சிட்டுப் போகாதது. ஏன் தெரியுமா? அவரே தொடர்ந்து எலிகளை எப்படியெல்லாம் ஈவு இரக்கம் இல்லாம கொல்லலாம்னு பாடம் எடுத்தப்போ என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துனாப்போல இருந்தது. இப்படியா மனுஷங்க கொஞ்சங்கூட எலியபிமானம் இல்லாம இருப்பாங்க? மத்த மிருகங்கள் பறவைகளுக்கு ப்ளூ க்ராஸ் இருக்கு. நமக்கு ஒரு க்ராஸையும் காணோம். சைவக்கூடு, அசைவக்கூடுன்னு  விதவிதமா நம்மளைக் கொல்றதுக்கு ஆயுதம்தான் இருக்கு.”

“என்னதான் சொல்லுங்க. இந்த மனுஷர்  கொஞ்சம் இரக்கசுபாவிதான். இல்லைன்னா… அசைவக் கூட்டை விட்டுட்டு சைவக்கூட்டை வாங்கிட்டு வந்திருப்பாரா?”

“இரக்கம்னா சொல்றே… அவர் அந்த அசைவக்கூட்டைப் பார்த்துட்டு ஒரு நம்பிக்கையில்லாமத்தான் இந்த சைவக்கூட்டை வாங்கினார்னு தோணுது எனக்கு.”  

“சரி, அதை எதுக்கு ஒரு நமட்டு சிரிப்போட சொல்றீங்க?”

“அந்த அசைவக்கூட்டைப் பார்த்துட்டு ஆடை ஆபரணம் இல்லாம அம்மணமா நிக்கறமாதிரி இருக்குன்னு மனசுக்குள்ள நினைச்சாரே.. அதை நினைச்சுகிட்டேன்.”

“ஓ.. அவரோட மைண்ட்வாய்ஸையும் புடிச்சிட்டீங்களா?”

“இல்லையா பின்னே? எத்தனை வருஷமா இந்த மனுஷங்களோட வாழ்ந்திட்டிருக்கோம். அவங்க மைண்ட்வாய்ஸைப் புரிஞ்சிக்க முடியலன்னா நம்மளால அவங்களை ஏய்த்து வாழ முடியுமா? இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டித்தான் பொழைப்பு நடத்த முடியுமா?”

“அவரோட நண்பர் பரந்தாமன்கிட்டயிருந்து ஒரு கூடு வாங்கிட்டு வந்திருந்தாரே.. அதைக் கழுவும்போது அந்த குளியலறை ஓரமா நின்னு நான் வேடிக்கை பார்த்திட்டிருந்தேன். அந்த எலிக்கூடு நம்முடைய மூதாதைகள் எவ்வளவு பேரை உயிரோடு காவுவாங்கியிருக்கும். என் கண்ணெதிரிலேயே அது அக்கக்கா கழண்டு போனதையும் அதைப்பார்த்து ராமசுப்பு பதறி அலங்கமலங்க விழிச்சிட்டு நின்னதையும் இப்போ நினைச்சாலும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. நீங்க இல்லையே அப்போ என் பக்கத்தில் அந்தக் காட்சியை ரசிக்க…”

“அப்போ இல்லைன்னா என்ன? அதுக்கப்புறம் அவர் தூங்கும்போது நம்மளை நினைச்சி பயத்துல விழிப்பு வந்து வந்து எழுந்து உட்கார்ந்திட்டிருந்தாரே, அதைப் பார்த்து பார்த்து ரசிச்சிட்டிருந்தேனே. நீ பார்க்கலையா? எனக்கு சிரிச்சி சிரிச்சி வயித்து வலியே வந்துடுச்சி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கறா மாதிரி கிலி பிடிச்சவனோட கண்ணுக்கு மட்டுமில்லே… தலைக்கு காதுக்கு காலுக்குன்னு எல்லாமே எலியாத்தான் தெரியறது.”

“இவருக்கு பல்லி பாச்சை கரப்பு இப்படி எந்த ஜந்துவைக் கண்டாலும் ஆகாதுன்னு தெரியும். இருந்தாலும் அதுங்களோடு குடித்தனம் நடத்தலையா? வீட்டை வித்துட்டு வேற வீடு போகவா  நினைச்சார்? எதுக்கு நம்மகிட்ட மட்டும் இத்தனைப் பகை? நாம என்ன இவர் சொத்திலயா பங்கு கேக்கறோம். சோத்துலதானே.. அதுவும் அவரையோ அவர் சம்சாரத்தையோ ஏதாவது தொல்லை பண்றோமா? நாம உண்டு நம்ம வயித்துப் பொழைப்பு உண்டுன்னுதானே இருக்கோம். சண்டியராட்டம் வீம்பு பேசிட்டு இப்ப மச்சானை அழைச்சிட்டு வந்து வச்சிக்கப் போயிருக்கார். மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தினானாம் ஒருத்தன். இவர் என்னடான்னா.. சுண்டெலிகளான  நமக்கு பயந்து வீட்டையே விக்க நினைக்கிறாரே.”

“விட்டுத்தள்ளு.. அந்த மனுஷனே முழி பிதுங்கிப் போய்க் கிடக்கறார். இப்பதான் நம்மகிட்ட எந்த பாச்சாவும் பலிக்காதுன்னு புரிஞ்சுகிட்டாரே.”

“அதோடு ஒதுங்கினாதான் பரவாயில்லையே.. கடைசி முயற்சியா மச்சானை சரணாகதி அடைஞ்சிருக்காரே.. அந்த கோவிந்தனோட உருட்டுமுழியைப் பார்த்தாலே பயமா இருக்கு. கையில ஒரு பெரிய உருட்டுக்கட்டையை வச்சு என்னிக்கு நம்ம தலையில ஒரே போடா போடப்போறானோன்னு பக்குனு இருக்கு.”

“அட நீ வேற, அவனாவது நம்மளைக் கொல்றதாவது. எல்லாம் பம்மாத்து.”

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமா, அந்த கோவிந்தன் நம்மளைக் கண்டாலும் காட்டிக் கொடுக்க மாட்டான். அப்படியே நம்மளை யாராவது காட்டினாலும் இதோ அதோன்னு வூடு கட்டுவானே தவிர ஒருக்காலும் நம்மளைப் பிடிக்கவோ அடிக்கவோ மாட்டான். நாம இருக்கறவரைக்கும்தான் அக்கா வீடுன்னு அவனுக்குத் தெரியாதா என்ன? நம்மளைக் காலி பண்ணிட்டா அவனுக்கு இங்க வேறென்ன வேலை? ராமசுப்பு எப்போ எப்போன்னு அவனைக் காலிபண்ணிட மாட்டாரா? அப்புறம் எப்படி வேளா வேளைக்கு அக்கா கையால பஜ்ஜி, பலகாரம்னு வெளுத்துக் கட்டறது? அதனால் அவன் நம்மளைப் பாத்தாலும் விரட்டுற மாதிரி அடிக்கிற மாதிரி பூச்சாண்டி காட்டுவானே தவிர ஒருநாளும் நம்மளை அடிச்சித் தொரத்த மாட்டான்.”

“அப்படின்னா கோவிந்தனைக் கூட்டி வரது நமக்கு சாதகம்தான்னு சொல்றீங்களா?”

“நமக்கு சாதகம். ஆனா ராமசுப்புவுக்கு… மகா பாதகம். வேலியில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதை கேள்விப்பட்டிருக்கியா?”

“ஆமாமா.. ஏற்கனவே அவன் நம்மளத் தேடுறதா சொல்லிட்டு ராக்கையில, பரண்ல இருந்து சாமானையெல்லாம் இறக்கிப்போட்டு, யானை புகுந்த வெங்கலக்கடை மாதிரி வீட்டையே அதகளம் பண்ணி வச்சிருந்தான்.  இன்னும் என்னென்ன அட்டகாசம் பண்ணப் போறானோ?”

“இந்த ராமசுப்பு இருக்காரே, அவர் இந்த குடியிருப்போட செயலாளர் பதவியை ஒழுங்கா வகிக்கலேங்கறது எல்லாருக்குமே தெரிஞ்ச சேதி. இதில் நம்ம பங்கும் சேர்ந்துடுச்சா மனுஷர் முகத்தில் ஈயாடலை. நம்மளைக் கொல்றதுக்கு என்னென்ன திட்டம் போடறார்?”

“இதில் பாவம் முதல் வீட்டு முத்துசாமி மேல வேற சந்தேகம். இவருக்கு வேண்டாதவங்க யாரோதான் நம்மளை இவர் வீட்டுப் பக்கம் அனுப்பிவச்சிருப்பாங்கங்கிற நினைப்பு வேற! நமக்கே வழி தெரியாதா என்ன?”

“கொடுத்த பதவியை ஒழுங்கா பார்த்திருந்தால் அவருக்கேன் இந்த பதைப்பு வருது? இப்ப கூட பாரு, தன் பதவியை நியாயமா தக்கவைக்கத் துப்பில்லாம மாம்பழச்சாலையிலிருந்து எலிவால் பிடிச்ச ரங்கனைக் கொண்டுவந்து பித்தலாட்டம் ஆடிப் பெயரைப் பாதுகாத்துக்கிறார். அவருக்குத் தெரியலை அவன் கதை புலிவால் பிடிச்ச கதையாகப் போவுதுன்னு.”

“என்னங்க சொல்றீங்க?”

“அந்த ரங்கனோ பாக்கறதுக்கு பேட்டை தாதா மாதிரி இருக்கான். அன்னிக்கு அவன் வரும்போது பட்டைசாராயம் நாத்தம் வேற தாங்கலை. இவர் இந்த எலிசபெத் டவர்ஸோட செயலாளர் பதவியில இருக்கறதையும் தெரிஞ்சுகிட்டான். இனி பணத்தட்டுப்பாடு வரும்போதெல்லாம் மறக்காம ராமசுப்புவைத் தேடிவந்து தலையைச் சொறிஞ்சிட்டு நிக்கப்போறான். எங்கே அவன் உண்மையை சொல்லிடுவானோன்னு இவர் கிடந்து அல்லாடப் போறார்.”

“எப்படியோ போகட்டும். நம்ம வழிக்கு வராமலிருந்தால் சரி.”

“இனியும் வருவாரா என்ன? கவலையை விடு. சீக்கிரமே நமக்குப் பிள்ளைகள் பிறக்கப் போறாங்க. நம்முடைய சாம்ராஜ்யம் விரிவடையப் போகுது. அக்கம்பக்கத்து எலிப்பட்டாளத்தையெல்லாம் அழைச்சி விமரிசையா அதைக் கொண்டாடணும்னு நினைச்சிருக்கேன்.”

“நம்மளை ஒழிக்க கங்கணம் கட்டிட்டிருந்த அந்த ராமசுப்புவோட அத்தனை பிரயாசையையும் முறியடிச்சி மனுஷரை கதிகலங்கடிச்சிருக்கோமே… அதுக்காகவே இன்னிக்கு இந்த எலிசபெத் டவர்ஸ்ல நம்முடைய நண்பர்களையெல்லாம் அழைச்சி ஒரு பெரிய விருந்து வச்சிடணும்.”

“ஆஹா.. பேஷா வச்சிடலாமே… இந்த எலிஸபெத் டவர்ஸூம் அதன் செயலாளராய் ராமசுப்புவும் இருக்கையில் நமக்கென்ன கவலை?”

 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியவர் : 

திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம்: கீதமஞ்சரி  
geethamanjari.blogspot.in  


   
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.      மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.இணைப்புகள் இதோ:


http://gopu1949.blogspot.in/2014/10/vgk-36-03-03-third-prize-winner.html


http://gopu1949.blogspot.in/2014/10/vgk-36-02-03-second-prize-winners.htmlகாணத்தவறாதீர்கள் !    அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo
நினைவூட்டுகிறோம்இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு: VGK-38 ’ மலரே .... குறிஞ்சி .... மலரே ! ’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


09.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.ஓர் முக்கிய அறிவிப்பு


நாளை மாலை முதல் இந்த வாரம் மட்டும்மூன்று நேயர் கடிதங்கள் வெளியிடப்பட உள்ளன.


மூவருமே முப்பெருந்தேவிகளாக 


பெண்மணிகளே என்பதும் குறிப்பிடத்தக்கது.காணத்தவறாதீர்கள் !என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்20 கருத்துகள்:

 1. அழகாய் விமரிசனம் எழுதி முதல் பரிசை வென்ற திரு சேஷாத்ரிக்கும், திருமதி கீதா மதிவாணனுக்கும் வாழ்த்துகள். சேஷாத்ரி ஒவ்வொன்றாக ரசித்து எழுதி இருக்கிறார் என்றால் கீதா மதிவாணன் எலிகளே பேசிக்கிறாப்போல் எழுதி அசத்திவிட்டார். இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கும்
  சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத்
  தெரிவித்து மகிழ்கின்றேன்

  பதிலளிநீக்கு
 3. கலகலப்பாக விமர்சனம் எழுதி ,
  முதல் பரிசை முத்தாக வென்ற திரு சேஷாத்ரிக்கும்,
  திருமதி கீதா மதிவாணனுக்கும்
  இனிய வாழ்த்துகள்.பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. முதல்பரிசினை வென்ற திரு சேஷாத்திரி அவர்களுக்கும், எப்பவும் போல் இப்பவும் முதல் பரிசைத்தட்டி சென்றுள்ள திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. முதல் பரிசு கிடைத்தது மகிழ்வளிக்கிறது! வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றி! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 6. முதல் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அளவிலா மகிழ்ச்சி. நடுவர் ஜீவி சார் அவர்களுக்கும் வாய்ப்பினை வழங்கிய கோபு சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  முதல் பரிசை திரு. சேஷாத்ரி அவர்களோடு பகிர்ந்துகொள்வதிலும் பெருமகிழ்ச்சி. பாயிண்ட் போட்டு பக்காவாக எழுதியிருக்கும் விமர்சனமும் நகைச்சுவை ஊட்டும் வரிகளும் அருமை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றி. வாய்ப்பினை வழங்கிய கோபு சாருக்கு மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 8. திரு சேஷாத்திரி
  மற்றும்
  திருமதி கீதா மதிவாணன்
  இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. எலிகளின் உரையாடல் அருமை! நேற்றே இன்னுமொரு பின்னூட்டம் இட்டிருந்தேன்! முதல் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 10. முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள். தொடர் வெற்றிக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. முற்றிய இந்தக் 'கலி'யில் 'எலி' பிடிக்க முடியாமல் 'கிலி' பிடித்து வீட்டையே 'பலி' கொடுக்க முற்பட்ட ஒரு மனிதரின் 'வலி'யை சங்'கிலி' போன்ற ஒரு சற்றே நீண்ட கதையால் தனக்கே உரிய நகைச்சுவை பொதிந்த நடையில் சொல்லியது விகிகே வாத்தியாரின் சிறப்பு! சில காரணங்களால் கடந்த சில கதைகளுக்கும் என்னால் 'எலி' பிடித்து விமர்சனம் எழுதமுடியாமல் போனது!விமர்சனங்களும் நன்று! வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள்! அன்புடன் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
 12. முற்றிய இந்தக் 'கலி'யில் 'எலி' பிடிக்க முடியாமல் 'கிலி' பிடித்து வீட்டையே 'பலி' கொடுக்க முற்பட்ட ஒரு மனிதரின் 'வலி'யை சங்'கிலி' போன்ற ஒரு சற்றே நீண்ட கதையால் தனக்கே உரிய நகைச்சுவை பொதிந்த நடையில் சொல்லியது விகிகே வாத்தியாரின் சிறப்பு! சில காரணங்களால் கடந்த சில கதைகளுக்கும் என்னால் 'எலி' பிடித்து விமர்சனம் எழுதமுடியாமல் போனது!விமர்சனங்களும் நன்று! வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள்! அன்புடன் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
 13. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

  அதற்கான இணைப்பு:

  http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

  அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 14. முதல் பரிசை வென்ற திரு சேஷாத்ரிக்கும்,
  திருமதி கீதா மதிவாணனுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 15. பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. முதல் பரிசை வென்ற திரு சேஷாத்ரிக்கும்,திருமதி கீதா மதிவாணனுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. திருமதி கீத்மதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. வெற்றியாளார்களுக்கு எலியவனின் - மன்னிக்க எளியவனின் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. முதல் பரிசு கிடைத்தது மகிழ்வளிக்கிறது! வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றி! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு