என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 30 அக்டோபர், 2014

VGK 40 / 03 / 03 - THIRD PRIZE WINNERS - மனசுக்குள் மத்தாப்பூ




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்



  
  

  
  





கதையின்  தலைப்பு :


 VGK-40 



     மனசுக்குள் மத்தாப்பூ   


கதைக்கான இணைப்புகள்:



பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
பகுதி-2 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html
பகுதி-3 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-3-of-4.html
பகுதி-4 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-4-of-4.html



     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  






 நடுவர் திரு. ஜீவி  


 நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



* ஆறு *


*வழக்கமான ஐவருடன் மூன்றாம் பரிசு மட்டும் 


உபரியாக ஒருவருக்கு அளிக்கப்படுகிறது.*


*உயர்திரு நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

மூன்றாம் பரிசுக்கான தொகை மட்டும் 

இருவருக்குமே முழுமையாகவே அளிக்கப்பட உள்ளது *

[NOT SHARING]









இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஆறு நபர்களுக்கும் 

நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 




  
      




முத்தான  மூன்றாம் பரிசினை


வென்றுள்ள விமர்சனம் - 1








இந்தக் கதையைக் கொஞ்சம் புதுமாதிரியாக எழுதி உள்ளார் ஆசிரியர். கதாநாயகன் காணும் கனவுகளே கதையின் அடித்தளம். கதாநாயகன் ஒரு மனநல மருத்துவர். அப்படி இருந்தும் அவருக்கும் கனவுகள், அதன் தொடர்பான நிகழ்வுகள் என வருகின்றன.  இது என்ன தான் படித்தாலும், அறிவு வேலை செய்தாலும் சில உணர்வு பூர்வமான விஷயங்களில் அதிலும் காதல் விஷயத்தில் மனிதன் மாறுவதே இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கெனக் காரண, காரியங்களை விளக்குவதும் கடினம்.   கதையை நான்கு பாகங்களாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். நான்குமே வெவ்வேறு நிகழ்வுகளைச் சுட்டுகிறது.  

முதல் பகுதியில் படித்தால் உண்மையான கணவன், மனைவியின் உரையாடலாகவே காட்சி தருகிறது.  நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியிடமும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையிடமும் அளவற்ற பாசம் வைத்திருக்கும் கணவனாகக் காட்சி தருகிறான் கதாநாயகன் மனோ.  சில இடங்களில் அவன் நடத்தை மிகையாகவே தோன்றினாலும் இப்படியும் சிலர் இருப்பார்கள்; அல்லது இருக்கின்றனர் என மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.  ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் பித்துக்குளித் தனமாகவே தெரிகிறது. ஏதடா, மனைவிக்குப் பிரசவத்திற்கான நாட்கள் நெருங்குகிறதே, அவளுக்குத் தொந்திரவு கொடுக்காமல் இருப்போம்னு இல்லாமல், கொஞ்சுகிறேன் பேர்வழினு ரொம்பவே வழிகிறாரோனு தோணுது.  அந்த அனுவும் கண்டிச்சுப் பார்த்துட்டு ஒண்ணும் முடியலைனு விட்டுடறாங்க போல! அல்லது அவங்களுக்கும் இதெல்லாம் ரசனையாக இருந்திருக்கலாம்.  இந்தக் காலத்தில் பல்வேறு தொலைககாட்சித் தொடர்கள், திரைப்படங்கள்னு பார்த்துட்டு எல்லோருமே அதிலே வரும் நாயக, நாயகியர் மாதிரி தான் வாழ்க்கையும் என்ற கனவில் இருக்கிறார்களோ என்னமோ!  யதார்த்தம் வேறே என்னும் உண்மை புரியலை என்றே நினைக்கிறேன். இப்படி எல்லாம் மனைவியைத் தொந்திரவு செய்யும் கணவன் அவளுக்குப் பிரசவ வலி என்றதும் பதறுகிறான்.

ஆனால்!!!!!!!!  இந்த ஆனாலில் தான் கோபு சார் கதையில் முடிச்சுப் போடுவதில் வல்லவர்னு நிரூபிக்கிறார். சரியாக இந்த நேரத்தில் விழிப்பு வருகிறது மனோவுக்கு.  ஆம்! மேலே சொன்ன அத்தனையும் கதாநாயகன் மனோ கண்ட கனவாம்! கனவில் இப்படி எல்லாம் வருமா என்றால் வருமே என்கிறான் இந்தக் கதாநாயகன்.  இளைஞனான மனோ மனநல மருத்துவமனையின் இளம் பயிற்சியாளராகச் சேர்ந்திருக்கும் மருத்துவர் என்றும் கதாநாயகி அனுவின் வீட்டு மாடியில் குடி இருப்பவன் என்றும் தெரிய வருகிறது.  அதோடு கதாநாயகன் இந்த அனு என்னும் இளம்பெண் தினம் தினம் வாசலில் கோலம் போடுவதை மாடியில் இருந்து பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதும், அவளை நன்றாக நெருக்கத்தில் பார்த்து ரசிப்பதற்காக ஒரு பைனாகுலர் வேறு வாங்கி வைத்திருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது. உள்ளூர அனுவின் கோலத் திறமையையும் கண்டு ரசிப்பதோடு வியப்பாகவும் இருக்கிறது அவனுக்கு.  இவளுக்குக் கோலப் பைத்தியமோ என அவன் நினைக்கும் அளவுக்கு அவள் கோலத்தில் ஈடுபாடு காட்டுகிறாள்.

ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் பார்ப்பது, ரசிப்பது குற்றம் என்றே சொல்ல வேண்டும்.  அதிலும் பைனாகுலர் வைத்துக் கொண்டு அணு அணுவாகப் பார்த்து ரசிப்பது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆண்களின் சுபாவமே இது தான் என்று ஆகிவிடாதோ! அதிலும் இது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்தால் அவள் மனம் புண்படுமே!  துடித்துப் போய்விடுவாள். என்னதான் காதல் என்றாலும் இவ்வளவு படித்து மனோதத்துவ மருத்துவராகப் பல்வேறு மனநல நோயாளிகளை தினம் தினம் சந்திக்கும் மனோவுக்கு ஒரு இளம் பெண்ணின் மனோநிலையும் புரிந்திருக்கணும். அவளை ரகசியமாய்ப் பார்த்து ரசிப்பது சரியல்ல என்றும் தோன்றி இருக்கணும். ஆனால் நாம் தான் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும்  நிறையப் படித்தவர்களே மிக மோசமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். இங்கே விபரீதமாக ஒன்றும் நடக்கவில்லை எனத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியது தான். என்றாலும் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இது போகட்டும்!  மனோவோ தன்னையும் அறியாமல் அனுவைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அதே போல் அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்றே அவள் நடவடிக்கைகள் மூலம் மனோவுக்குத் தோன்றுகிறது.

இங்கே தான் ஆசிரியர் அடுத்த முடிச்சை வைத்திருக்கிறார். இத்தனை அழகும், திறமையும் வாய்ந்த அனுவுக்கு வாய் பேச முடியாது என்பதை அவள் தாயின் மூலம் அறிந்து கொள்ளும் மனோவுக்கு இந்தக் குறையின் காரணமாக அவள் மேல் அதிக ஈடுபாடே தோன்றுகிறது. இதற்காகவெல்லாம் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாது என்பதையும் அவன் உணர்கிறான். அப்போது தான் அனுவின் தாய் அங்கே வந்து அனுவுக்குச் செய்திருக்கும் கல்யாண ஏற்பாடுகளையும், மறுநாள் பிள்ளைவீட்டார் வரும்போது மனோ வந்து உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து மனோவின் ஆசையின் மேல் குண்டைத் தூக்கிப் போட்டு விடுகிறாள்.  என்றாலும் தன் காதலி அனு வாழ்க்கைப்பட்டுப் போகும் இடம் நல்ல இடம் தானா என அவள் தாய் விசாரித்தாளா என அந்த நிலையிலும் அவனுக்குக் கவலை.  அதை விசாரித்துத் தெரிந்து கொள்கிறான். நல்ல இடம் தான் என அவள் தாய் சொன்னாலும் இரவில் அவனுக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவித்து வெகுநேரம் கழித்துத் தூங்குபவன் காலை எழுந்தவன் தன் தினசரி வழக்கப்படிக் கோலம் போடும் அனுவைப் பார்க்கிறான்.

இன்னொருத்தன் சொத்தாகப் போகும் அனுவைக் கோலம் போடும்போது வருத்தத்துடனேயே பார்த்து ரசிக்கும் மனோவுக்குச் சற்று தூரத்தில் இருந்த புதரில் இருந்து வந்த ஒரு கருநாகம் அனுவின் முதுகின் பின்னால் படமெடுத்து ஆடிக் கொண்டு கொத்தத் தயாராக இருப்பது தெரியவர மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கீழிறங்கிப் போய் அனுவைத் தூக்கி நகர்த்துகிறான். திடீரென மாடியில் குடி இருக்கும் வாலிபன் தன்னைத் தொட்டுத் தூக்கியதோடு இல்லாமல் தன்னெதிரே அவனால் சுட்டிக்காட்டப்பட்டக்  கருநாகத்தையும் கண்ட அனு அதிர்ச்சியில் வாய் திறந்து "அம்மா" என்று கத்த மனோவுக்கு அவள் பேச ஆரம்பித்ததைக் கண்டு ஆச்சரியம் ஏற்பட அவனும் கத்தி விடுகிறான். இருவரின் சத்தத்தில் ஊர் கூட, நடந்தது அறியாத ஊர் மக்கள் அனுவை மனோ தொட்டுத் தூக்கியதைத் தப்பு எனப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்களாம். இந்த இடம் தான் புரியலை எனக்கு!  அவர்களுக்கு அனுவோ, மனோவோ சொல்லாமல் அனுவை அவன் தொட்டுத் தூக்கியது எப்படித் தெரிய வந்தது?  அது தான் போகட்டும் என்றால் இக்கட்டான நிலையில் தூக்கியதைத் தப்பு என எப்படிச் சொல்ல முடியும்?


ஒன்று மனோவாவது வாய்விட்டு இந்த மாதிரி நிலைமை எனச் சொல்லி இருக்கணும்;  அல்லது அனுவாவது தன்னைக் கருநாகம் கொத்த வந்ததையும் மனோ காப்பாற்றியதையும் அந்த அதிர்ச்சியில் தனக்குப் பேச்சு வந்ததையும் தெளிவாக அவள் தாயிடமாவது சொல்லி இருக்கணும்.  அனுவால் பேசமுடியாத சூழ்நிலை எனக் கதாசிரியர் சொல்லி இருந்தாலும் என்னால் அதை ஏற்க முடியவில்லை. என்ன காரணம்னு தெரியாமல் அவளும் வாய் மூடி மௌனியாக இருக்க, மனோவும் மௌனம் காக்க, பஞ்சாயத்தில் மனோவுக்கு அடி, உதை எனத் தீர்ப்பு வர மனோ மனம் நொந்து போகிறான்.  ஆனால்

ஹிஹிஹி, இங்கே தான் அடுத்த கடைசி முடிச்சு.  அதுவும் உடனடியாக அவிழ்க்கப்படுகிறது. பாம்பு அனுவைக் கொத்தத் தயாராக இருந்த காட்சியை மனோ தன் கனவில் கண்டானாம். அது மட்டுமா? மனோ காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலிக்குமாம்.  முதலில் மனோவுக்கு மனோதத்துவ மருத்துவம் பார்க்கணுமோனு தோணுது! :) ஆனால் மனோவின் தாய். தந்தையர் மரணம், அவன் நெருங்கிய நண்பனின் படிப்பு போன்ற விஷயங்களில் மனோவின் கனவு பலித்திருக்கவே இதுவும் பலிக்குமோ என்னும் எண்ணத்தில் தீர்மானமாக இருந்த மனோ அனுவைப் பெண் பார்க்க வருபவர்களைப் பார்த்துப் பேசவும், அனுவின் தாய்க்கு உதவிக்குச் செல்லவும் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். சற்று நேரத்தில் பிள்ளை வீட்டார் அனுவைப் பார்க்க வருகிறார்கள்.

வந்தவனோ ஏற்கெனவே மனோவுக்கு அறிமுகம் ஆன சமூக விரோதி ஒருவன். சென்னையைச் சேர்ந்த நாகப்பா என்னும் பெயருள்ள அவன் ஏற்கெனவே இரு முறை திருமணம் ஆனவன் என்பதும் மனோ அறிந்திருந்தான். உடனடியாக அனுவின் அம்மாவைத் தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திவிடுகிறான். வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்ப, இந்த நாகப்பா வரப் போவதைத் தான் சூசகமாகத் தன் கனவில் கருநாகமாகத் தான் கண்டிருப்பதாகவும், நல்ல சமயத்தில் அனுவை இந்தப் பொல்லாத திருமண பந்தத்தில் இருந்து காப்பாற்றிய தான் முயற்சி செய்தால் அனுவைக் கூடிய சீக்கிரம் பேச வைக்கலாம் என்றும் இனி அவளைத் தான் மணக்கத் தடை ஏதும் இராது எனவும் எண்ணிய மனோ மனது மகிழ்ச்சியில் தீபாவளி மத்தாப்புப் போல் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது.  மேலும் அனுவைக் குறித்துத் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலிக்கப் போகிறது என்றும் புரிந்து கொண்டான். அதாவது அனுவைக் கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைத்தாச்சியான அவளுடன் தான் கழித்த இனிமையான நினைவுகளைக் கொண்ட கனவு உட்பட உண்மையாகப்  போவதை எண்ணி சந்தோஷம் அடைகிறான்.  அதற்கேற்றாற்போல் மறுநாள் அனு இதயவடிவக் கோலம் போட்டு அவனுக்கு நன்றியும் தீபாவளி வாழ்த்தும் சொல்லி இருந்தாள். அனுவின் மனம் அந்தக் கோலத்தின் வழியே தனக்குத் தெரிந்துவிட்டதை எண்ணிக் குதூகலிக்கிறான் மனோ. 

இனி என்ன?  டும் டும் டும் தான்.  மேளம் கொட்டி, நாதஸ்வரம் ஊதத் தாலி கட்ட வேண்டியது தான். பொதுவாகப் பார்த்தால் வெகு சாதாரணக் கதையாக இருக்கிறது.  ஆனால் மனோவை ஒரு மனநல வைத்தியராகக் காட்டியதன் மூலம் மன நல மருத்தவரானாலும் அவருக்கும் மனம் சொந்தக் கட்டுப்பாட்டில் இயங்காது; அவருடைய உணர்வுகளுக்கும், சாமானியர்களின் உணர்வுகளுக்கும் வித்தியாசம் இல்லை  என நிரூபிக்கிறாரோ? காதல் என்பது பொதுவான ஒன்று!  ஆகவே மனோ காதல் கொண்டதில் தப்பில்லை;  காதல் பலிக்கும் என்று  உறுதி கொண்டதிலும் தப்பில்லை.  ஆனால் தான் கண்ட கனவுகள் பலிக்கின்றன என்று சொல்வது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. கனவுகளைக் குறித்து மனநல மருத்துவர்கள் ஆய்வுகள் பல செய்திருக்கின்றனர். ஆகவே  மனநல மருத்துவன் ஆன மனோ தன் உள் மனதின் ஆழத்தை இன்னொரு அனுபவசாலியான மனநல மருத்துவர் உதவியுடன் கண்டறிந்திருக்க வேண்டுமோ?   ஒரு மனநல மருத்துவருக்கே உரிய நிதானமும், விவேகமும் மனோவிடம் காண முடியவில்லை என்றே தோன்றுகிறது. 

கதையின் முடிவை நம் யூகத்திற்கே ஆசிரியர் விட்டிருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒரு குறை அல்லது நெருடல் தென்படுகிறது. என்ன என்று தான் புரியவில்லை.  சம்பவச் சேர்க்கைகள் கொஞ்சம் செயற்கையாக இருப்பது போலும் தெரிகிறது.  இயல்பாகக் கண்ணெதிரே பார்க்கும் சம்பவங்களைக் கோர்த்துக் கதை பின்னுபவர் இந்தக் கதையைக் கற்பனை உலகில் சஞ்சரித்த வண்ணம் எழுதி இருக்க வேண்டும். ஆனால் கனவுகளையும் உண்மையையும் வேறுபடுத்திக் காட்டி இருப்பதும் கதாசிரியரின் திறமை என்றே சொல்லவேண்டும். 




 







இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 



  



 திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்.



வலைத்தளம்: எண்ணங்கள்

sivamgss.blogspot.in

  



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      



முத்தான  மூன்றாம் பரிசினை


வென்றுள்ள விமர்சனம் - 2





தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்ட சிறுகதைக்குப் பொருத்தமான தலைப்பு “மனசுக்குள் மத்தாப்பூ”. இந்த சிறுகதைப் போட்டியை நிறைவு செய்து வைக்கும் கதையும் இதுவே என்பதில் இன்னும் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.

நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட கதையில்தான் எத்தனை விறுவிறுப்பு!. முதல் பகுதியில் இடைவிடாத(!?) சிந்தனையுடன் இருக்கும் மனநல மருத்துவமனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ , பிரசவத்திற்காகப் பிரிந்து செல்லும் தன் மனைவியைக் கொஞ்சுவதாய்க் கதையைத் துவங்கி, பிரசவ வலி வந்ததாய்க் காண்பித்து கதையை நிறுத்தி, நமக்குள் விறுவிறுப்பைக் கூட்டி அடுத்த பகுதிக்குச் செல்கையில் அது வெறும் கனவு எனக் காண்பிக்கையில் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்தது என்ன? எனும் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.

அனுவின் வீட்டு மாடிப் போர்ஷனில் மனநலமருத்துவர் மனோ (என்ன பெயர்ப் பொருத்தம்!) வாடகைக்குத் தங்கியுள்ள விவரம் அதன்பிறகுதான் நமக்குப் புரிகிறது.

கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மனவெளிப்பாடாகும்கனவு காணாத மனிதனே இல்லை என்னும்அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இது இருந்துவருகிறது
வாழ்வில் பின்னர் நிகழப்போவதைக் குறிப்பால்உணர்த்தும் ஒன்றாகக் கனவு நம்பப்படுகிறதுஉளவியல் அறிஞர்சிக்மண்ட் ஃபிராய்டின் ஆய்வுகள் கனவுகளையே அடிப்படையாகக் கொண்டவை.
மனோ காணும் கனவு பிராதிதம் (ஆசைப்பட்டவற்றைக் காணுதல்) எனும் வகையோ என எண்ணத்தோன்றுகிறது.

குடியிருக்கும் வீட்டில் உள்ள அனு, அவனின் மனம் கவர்ந்த பெண்ணாகி, மார்கழிப் பனியும் அவனின் நடைப்பயிற்சிக்குத் தடை போட, எண்ணத்தில் நிறைந்தவளைக் கண்டு இரசிக்க நவீன பைனாகுலர் சகிதம் ஜன்னலோரம் நித்தம் ஆஜராகிவிடுகிறான் மனோ.

அவனுடைய பார்வையில் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு விஷயத்தில் பைத்தியம்தான் என விவரிக்கும் இடத்தில் விரியும் பட்டியலைப் படிக்கையில் நமக்கும் பைத்தியம் பிடித்துவிடும் போல் உள்ளது. மனிதரில் இத்தனை வகை பைத்தியங்களா? என வியக்க வைக்கிறது.

“கோலப்பைத்தியம்” என அனுவை நினைத்த மனோவும் அவள் கோலத்தை இரசிக்கும் பைத்தியமாகிவிடுகிறான். அவளின் கோலம் அவன் மனதுள் அழியாக் கோலமாகிவிடுகிறது. அன்புக்கோலமாகிவிடுகிறது.

கதையின் நாயகி அனுவைப் பற்றி வர்ணிக்கும் இடத்திலும், காட்சிகளைக் கண்முன் நிறுத்துவதிலும் கற்பனை வளமும் கவிதை நயமும் கதாசிரியருக்குக் கைவந்த கலைகளாகிவிடுகின்றன.


அழகிய இளம் பெண் அனுவுக்கு வாய் பேசமுடியாமல் உள்ளது என்று தற்செயலாகக் கோயிலில் சந்தித்த அனுவின் தாயார் மூலம் கேள்விப்பட்டதும் மனோவுக்கு அதிர்ச்சியாகிப் போனது. நமக்கும் இப்படி விறுவிறுப்பாகச் சென்ற கதையில் இது ஒரு அதிர்ச்சி தரும் திருப்பமாகிறது.


இதன் பின்னர் மனோவின் மனதில் அனுவின் மீதான பற்று அதிகரித்துவிடுகிறது. அடுத்து வந்த சனிக்கிழமை இன்னொரு திருப்பத்தை ஏற்படுத்தி கதையின் விறுவிறுப்பைக் கூட்டிவிடுகிறது.


மாக்கோலம் போட்டு மனம் கவர்ந்த அனுவைப் பெண்பார்க்க யாரோ ஒருவர் வரப்போவதாகவும், அந்த சமயத்தில் மனோ வந்து தங்கள் வீட்டிலிருந்து தரகர் மூலம் வந்த அந்த வரன் குறித்து தீர விசாரித்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், அனுவின் அப்பா மறைந்த பின் ஆண்துணை இல்லா நிலையில் அவதியுறும் அனுவின் அம்மா வெள்ளியன்று வேண்டுகோள் வைத்ததும், மறுக்க மனமின்றி அவசியம் உதவி செய்வதாய் வாக்களித்து வழியனுப்புகிறான் மனோ.

அதன் பின் உறக்கம் எப்படி வரும் அவனுக்கு? நமக்குள்ளும் அடுத்து என்ன என ஒரு வினா எழுந்துவிடுகிறது. மணவாழ்வை எதிர்நோக்கி, அனுவுக்கு மங்கல நிகழ்வு நடைபெற உள்ள நிலையிலும் இனி இந்த வாய்ப்பு தனக்கு இனி கிடைக்காதே என எண்ணி மனோ மறுபடியும் அடுத்த நாள் காலையில் பைனாகுலர் சகிதம் ஆஜராவதாகக் காண்பித்ததும் நமக்குள் ஒரு நெருடல்! பைனாகுலர் வழியாகப் பார்க்கையில் ஆறடி நீள கருநாகம் அவளுக்குப் பின்னால் படமெடுத்தாடுவதைப் பார்த்ததும் அதிர்ந்து, பைனாகுலரை எறிந்துவிட்டு, அவளைக் காப்பாற்ற விரைந்து, அவளைக் கட்டியணைத்துத் தூக்கிக் காப்பாற்றி அந்த நாகத்தைக் காண்பித்ததும் அவள் “அம்மா” என்று அலறியதைக் கேட்டு ஆச்சர்யத்தில் மகிழ்ந்து, நமக்குள்ளும் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடுகிறான் மனோ.

அதன் பின் அதைப் பார்த்த பால்காரப் பையன் சாட்சியாகி, பஞ்சாயத்தில் வழங்கிய தீர்ப்பால் அதிர்ந்த மனோவை அலார மணிச் சத்தம் எழுப்பிவிட, அத்தனையும் கனவு என அறிந்ததும் நமக்கும் மீண்டும் இவையாவும் கனவுதானா? என்ற எண்ணம் ஏற்பட்டு எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.


கதை முடிவை நோக்கி பயணிக்கத் துவங்குவதை உணர்த்தும் வண்ணம் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலித்ததை மனோ நினைவுகூர்வதாக அமைத்தது புலப்படுத்திவிடுகிறது.


அப்படியானால் கடிக்காமல் விட்ட கருநாகம் குறித்த கனவு எனும் கேள்வி நம்முள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதற்கு விடை கொடுக்கும் வண்ணம் அனுவைப் பெண்பார்க்க வரும் நபரின் பெயர் “நாகப்பா” என்பதும், நல்ல நடத்தை இல்லாதவன் என்பதும், அவனைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த மனோ அங்கு இருந்ததால், பக்குவமாக அனுவின் அம்மாவிடம் அதைப் பற்றி உரைத்து, அனுவைப் அவனுடைய சூழ்ச்சி வலையில் வீழாமல் காப்பாற்ற முடிந்ததாகக் காண்பித்த காட்சிகள் அமைந்துவிடுகிறது.


நான்காம் யாமத்தில் கண்ட கனவு 10 நாட்களுக்குள் பலிக்கும் என்பார்கள். அனு பேசும் திறன் பெற்றதாகவும், மனைவியாகி, தாய்மை அடைந்ததாகவும் அவன் கண்ட கனவுகளும் பலித்துவிடும் என்பதில் இனி ஐயமில்லை. இப்போது கதையின் முதல் பகுதியை மீண்டும் படித்து கதையை நிறைவு செய்வோம்!


இனியென்ன! “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?, “கண்ணெதிரே தோன்றினாள்!” என்றும் “உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே!” என மனோ இடைவிடாமல் பாடி மகிழ வாழ்த்துவோம்! அடுத்த தீபாவளி அவர்களுக்குத் தலை தீபாவளியாகட்டும்!


திருப்பங்கள் நிறைந்த காதல் கதையைப் படைத்த கதாசிரியரும் இனி இதுபோன்று பல கதைகள் பிரசவிக்க மன்னிக்கவும் பிரசுரிக்க வாழ்த்துவோம் வாரீர்!  நன்றி! =====சுபம்!====






 







இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 






 திரு. E S SESHADRI அவர்கள்.



வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்)

esseshadri.blogspot.com






 

 



  


VGK-37 TO VGK-40



நாலாவது ஹாட்-ட்ரிக் வெற்றியினை

நாலாம் சுற்றுவரை 

தக்க வைத்துக்கொண்டுள்ளார்.



   



   



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      





மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






      

 



இந்த இறுதிப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட உள்ளன.





காணத்தவறாதீர்கள் !



    







என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்



16 கருத்துகள்:

 1. மூன்றாம் பரிசினை வென்ற
  இருவருக்கும்
  இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  முதலில் அளித்த கருத்துரை காணவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 30, 2014 at 7:28 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மூன்றாம் பரிசினை வென்ற இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.. //

   மிகவும் சந்தோஷம்.

   //முதலில் அளித்த கருத்துரை காணவில்லை..//

   சத்தியமாக அது எனக்கு வந்துசேரவில்லை. நானும் நெடுக SPAM போன்ற எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டேன். எனினும் தாங்கள் இவ்வளவு நேரம் கழித்துக்கொடுத்துள்ள இந்தத்தங்களின் பின்னூட்டமே இப்போதும் முதல் பின்னூட்டமாக அமைந்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

   பரிசு கிடைத்தவர்களே இன்னும் கண்டுகொள்ளாதபோது தாங்களாவது வந்துள்ளது, மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

   எல்லாம் தான் முடிஞ்சு போச்சே ...... எல்லோருக்கும் அலுத்துப்போய் இருக்கும் ...... சலித்துப்போய் இருக்கும்.

   [நான் நடைபெற்று முடிந்துள்ள என் மெகா சீரியல் போன்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளைப்பற்றி மட்டுமே சொல்லியுள்ளேன். வேறு எதுவும் தவறாக தயவுசெய்து தாங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம்]

   நீக்கு
 2. //கனவுகளையும் உண்மையையும் வேறுபடுத்திக் காட்டி இருப்பதும் கதாசிரியரின் திறமை என்றே சொல்லவேண்டும்.//

  வித்யாசமாக அலசி விமர்சனம் எழுதி பரிசு பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பாராடுகள்!

  பதிலளிநீக்கு
 3. எனது விமர்சனம் பரிசுக்குத் தெரிவானதில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள். நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி! மிகவும் சிறப்பான முறையில் 40 கதைகளை வெலியிட்டு, விமர்சனங்களை நன்கு ஆய்ந்து, பரிசுக்குத் தெரிவு செய்து, அவற்றை முறையாக அறிவித்து, பரிசுத் தொகையினைக் கணக்கிட்டு உடனுக்குடன் அனுப்பிய விதம் வியப்படையச் செய்கிறது. மீண்டும் ஒருமுறை திரு வைகோ சார் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும். நடுவர் அவர்களின் சிரமத்தை நன்கு அறியமுடிந்தது. அவருடைய சேவைக்கும் என் இதயங்கனிந்த நன்றியும் பாராட்டுகளும். சற்று தாமதமான கருத்துரைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 4. தொலைக்காட்சி திரைப்படங்களின் பாதிப்பு கதாபாத்திரப் படைப்புகளில் காணப்படுவதை அழகாக சுட்டி சிறப்பானதொரு விமர்சனம் எழுதி பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீதா மேடத்துக்கு அன்பான வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. கனவு பற்றிய அலசலோடு கதையை அழகாக அலசி விமர்சித்து பரிசு பெற்றுள்ள திரு.சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. அட, மூன்றாம் பரிசு எனக்குக் கிடைச்சிருக்கா? அதிலும் பங்கு இல்லாமல் முழுமையாக??? பரிசு கிடைச்சிருப்பது ஆச்சரியமான ஒன்றே, திரு சேஷாத்ரி அவர்கள் விமரிசனத்துக்கு மூன்றாம் பரிசு தான் கிடைத்திருப்பது அதை விட ஆச்சரியம், அவருக்கு என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. //பரிசு கிடைத்தவர்களே இன்னும் கண்டுகொள்ளாதபோது தாங்களாவது வந்துள்ளது, மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. //

  நீங்கள் இதை வெளியிட்ட நாட்களில் படுபயங்கரமாக பிசி. இணையத்துக்கே வர முடியவில்லை. காரணம் உங்களுக்குத் தெரிந்தது தான். :))) இப்போதும் ஏதோ கொஞ்ச நேரம் தான் வர முடிகிறது மற்றபடி வீடு மாற்றலில் வேலை நெட்டி வாங்குகிறது. இன்னமும் பல வேலைகள் முடிக்கப்படாமல் இருக்கின்றன. :( உதவிக்கும் யாரும் இல்லை என்பதால் கொஞ்சம் சிரமமாகவே தெரிகிறது. :))

  //எல்லாம் தான் முடிஞ்சு போச்சே ...... எல்லோருக்கும் அலுத்துப்போய் இருக்கும் ...... சலித்துப்போய் இருக்கும்.//

  முடிஞ்சு போச்சுங்கற எண்ணம் வந்தது என்னமோ உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால் அது ஏன் என்றால் திங்கட்கிழமை வந்தாலே உங்களிடமிருந்து நினைவூட்டல் கடிதம் ஒன்று வரும். செவ்வாயன்று தொடரும். அந்த இரு நாட்களில் தான் அவசரம் அவசரமாக ஏதோ எழுதுவேன். புதன்கிழமைக்குள்ளாக அனுப்பணுமே என எழுதிட்டுப் பல சமயங்களிலும் திரும்பப் படிக்காமல் அனுப்பி வைப்பேன். திரும்பப் படித்துத் திருத்திய விமரிசனங்கள் எதுவும் பரிசு வாங்கவில்லை என்பது கூடுதல் செய்தி! :))))

  இப்போது தான் கொஞ்சம் நிதானமா வந்து உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். இன்னிக்கு இதோட சரி. மற்றவை நாளை நேரம் கிடைச்சால்! :)

  பதிலளிநீக்கு
 8. திரு சேஷாத்ரி அவர்களுக்கு முதல் இரண்டு இடங்கள் இல்லாமல் மூன்றாம் பரிசு கிடைத்திருப்பது அதிசயத்திலும் அதிசயமாக உள்ளது. அருமையாக எழுதி இருக்கார். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. http://sivamgss.blogspot.in/2014/11/blog-post_3.html
  திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

  இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 10. மூன்றாவதாக வந்துள்ள திரு சேஷாத்ரி அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதா அல்லது ஆறுதல் தெரிவிப்பதா என்று குழம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. மூன்றாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. மூன்றாம் பரிசினை முனைப்புடன் விமர்சனம் எழுதி வென்ற இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு