About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, October 11, 2014

VGK-37 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’ எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... ‘




 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-37   


 ’ எங்கெங்கும்... 


எப்போதும்... 


என்னோடு... ‘  


 


 


  

இணைப்பு:



     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  




 நடுவர் திரு. ஜீவி  






இந்தக் கதைக்கான நடுவரின் சிறப்பு விமர்சனம்

13-10-2014 திங்கட்கிழமையன்று 

தனிப்பதிவாக வெளியிடப்பட உள்ளது.

படிக்கத் தவறாதீர்கள்.







நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 




  


மற்றவர்களுக்கு: 





    

இனிப்பான இரண்டாம் பரிசினை
வென்றுள்ள விமர்சனம் - 1


மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் எடையைக் குறைக்க எண்ணி நடை பயிலும் மூத்தகுடிமகன் ஒருவரின் அனுபவங்கள் நகைச்சுவை இழையோடச் சொல்லப்பட்டு, இறுதியில் சோகத்தால் மனதைப் பாரமாக்கும் கதை. 

முடிவில் துன்பம் நேர்ந்தாலும், கதாநாயகனுக்குத் தொடர்ந்து நடக்க மட்டுமின்றி, கதையை நேர்மறையாக முடிக்கவும் ஆசிரியருக்கு உதவுகிறது முதியவரின் ஊன்றுகோல்!

நொறுக்குத்தீனிகளுடன் கரமுராவென்று உறவாடுவது, ‘வேகமாக நடக்க ஒட்டடை குச்சியோ ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா?’, ‘நடக்கச் சொல்கிறார், நடக்கற காரியமா அது?’ போன்றவை ஆசிரியரின் நகைச்சுவை உணர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்!  
  
வாழ்க்கைப் பயணத்தில் சிலரைப் பார்த்த மாத்திரத்தில் நமக்குப் பிடித்துவிடும்.  காலங்காலமாய்ப் பழகியது போன்ற அந்நியோன்யம் ஏற்படும்.  அது போல் வேறு சிலரைக் கண்டால், முதல் சந்திப்பிலேயே அவரை வெறுப்போம்.  “என்னன்னு தெரியலை; அவரைப் பார்த்தாலே எனக்குப் புடிக்கல,” என்போம்.  இதற்கு அறிவியல் ரீதியான காரணம் சொல்ல முடியாது. உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம்.

இக்கதையிலும் அப்படித்தான், முதல் சந்திப்பிலேயே 88 வயது முதியவருக்கும் 61 வயது நாயகனுக்கும் நட்பு ஏற்பட்டு இருவருமே நீண்ட நாட்கள் பழகியவர் போல் உரையாடி மகிழ்கின்றனர்.   இரயில் சிநேகம் போலன்றி, தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்ற ஆவல், இருவருக்குள்ளும் ஏற்படுகின்றது.

மற்ற நாட்களில் நடைபயிற்சி செய்யாமல் நொண்டிக் காரணம் சொல்லிவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் கதாநாயகன், முதியவரின் இறுதி ஊர்வலம் நடக்கும் நாளில்,  சரியான நேரத்தில் எதிரே செல்ல என்ன காரணம்?  இது யதேச்சையாக நடந்ததா?  அல்லது அவரது உள்ளுணர்வு அவரைச்  சந்திக்க உந்திற்றா?  நிஜ வாழ்விலும் இது போன்ற உள்ளுணர்வு சம்பவங்கள், சில சமயம் எதிர்பாராமல் நிகழ்ந்து, நம்மை வியக்க வைப்பதுண்டு.

தள்ளாத வயதிலும் நாளிதழ்கள் வாசித்து நாட்டுநடப்பை விரல் நுனியில் வைத்திருக்கும் முதியவர், கதை நாயகனை மட்டுமல்ல, வாசகராகிய நம்மையும் கவர்ந்திழுப்பதில் வியப்பொன்றுமில்லை. மரணத்தையும் அமைதியாக சிரித்த முகத்துடன் எதிர் கொள்கிறார்!

88 வயதிலும் தம் வாழ்வின் இறுதிநாள் பற்றி எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால், சாகப்போகும் தறுவாயில் வேலைப்பாடுள்ள அழகிய புது கைத்தடியை விலை கொடுத்து வாங்கியிருப்பார்? அவரின் அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான், அவரது ஊன்றுகோல் மூலம் சோம்பேறியான நம் கதாநாயகனுக்கும் நடக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்து தொடர்ந்து நடக்க வைக்கிறது. எங்கேயும், எப்போதும் அவருடன் தொடர்ந்து பயணம் செய்து புத்துணர்வு அளிக்கிறது.

அக்காலத்திலிருந்த திண்ணையில் வழிப்போக்கர்கள் அமர்ந்து ஓய்வெடுத்ததையும், சுமைதூக்குவோர் சுமையை இறக்கிவைத்து இளைப்பாறியதையும், இக்காலத்தில் தெருவில் நடைபயிலுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோடு ஒப்பிட்டு, அந்நாளைய மனித நேயமும் பொதுநலமும் குறைந்து கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார் ஆசிரியர்.

முதியவர்களின் உடல்+மனம் சார்ந்த பிரச்சினைகளைக் கோடிட்டுக் காட்டுவதோடு,   எந்த வயதிலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு, தளர்ச்சி உடலுக்குத் தானே தவிர மனதுக்கில்லை, மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்கிற உண்மையை இக்கதையின் மூலம் வாசகர் மனதில் பதிய வைத்து, தன்னம்பிக்கையளித்துப் புத்துணர்வு ஊட்டுவதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்..  

வை.கோபு சார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

 

இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 திருமதி. 



ஞா. கலையரசி 


அவர்கள்.



வலைத்தளம்: ஊஞ்சல் 

www.unjal.blogspot.com.au



  
  




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



    



இனிப்பான இரண்டாம் பரிசினை
வென்றுள்ள விமர்சனம் - 2


ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது – இது நியூட்டனின் முதல் இயக்க விதி. கதையின் நாயகன் மட்டும் விதிவிலக்கா என்ன? உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்ற திடீர் உத்வேகம் எதனாலோ ஏற்பட்டுவிட்டது.

மருத்துவரிடம் என் எடையைக் குறைப்பதற்கு உங்களுக்கு எதற்கு கன்சல்டிங் பீஸ் தரவேண்டும் என்று கேட்ட கேள்வியிலிருந்து இந்த அறுபது வயது வரையிலும் 96 கிலோ எடையுள்ள ஒருவருக்கு உடல்எடையைக் குறைப்பதைப் பற்றிய ஞானோதயமே இல்லாதிருந்திருக்கிறார் என்பது புரிகிறது. ஆனால் திடீரென்று எதற்கு இப்போது உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்ற ஆவல்? ஆசை? ஏதாவது காரணம் இருக்கவேண்டுமே.கதையில் அதைச் சொல்லவே இல்லையே கதாசிரியர். யோசிப்போம்.

கூடுதல் எடை காரணமாக ஏதாவது உடல் உபாதையோ அசௌகரியமோ உண்டாகியிருக்கவேண்டும். அல்லது சர்க்கரை, இரத்தக்கொதிப்பு போன்ற வியாதி ஏதாவது இருப்பதாக அறியப்பட்டிருக்கவேண்டும். அல்லது உடல் பருமனைக் காட்டி யாராவது அவரைக் கேலி செய்தோ அவமானப்படுத்தியோ அவரை இந்த முடிவுக்கு வரச்செய்திருக்கவேண்டும். காரணம் இன்னதென்று நமக்குத் தெளிவுபடுத்தப்படாவிட்டாலும் ஏதோவொரு காரணம் இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அது என்ன  காரணம் என்பது இப்போது நமக்குத் தேவையில்லாத ஒன்று. காரியமும் அதைத் தொடர்ந்த விளைவுகளும் மட்டுமே கதையில் காட்டப்பட்டிருப்பதால் அவற்றைப் பார்ப்போம் இப்போது.

நம் கதாநாயகனின் பின்புலமும் அவ்வளவாக சொல்லப்படவில்லை. அறுபது வயதான ஒரு பிராமணர் என்பதும் மனைவி, மாமனார், மாமியார் உள்ளனர் என்பதும்தான் நமக்கு அவரைப் பற்றித் தெரியும் விவரங்கள். மேலும் நமக்குத் தெரியவருவது அவர் ஒரு நொறுக்குத்தீனி மற்றும் பலகாரப்பிரியர் என்பதும் உணவை ரசித்து ருசித்து உண்பவர் என்பதும் தெரியவருகிறது. அதனாலேயே அவரது உடல் எடை கன்னாபின்னாவென்று கூடிப்போயிருக்கும் சாத்தியக்கூறு உள்ளது. இந்நிலையில் உடல் எடையைக் கட்டுப்படுத்த மருத்துவரை நாடியிருப்பது ஒரு நல்ல ஆரம்ப அறிகுறி என்றே தோன்றுகிறது.

ஆனால் இந்த மருத்துவரைப் பாருங்கள், கொஞ்சம் நம் கதாநாயகனிடம் கருணை காட்டியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு எடுத்தவுடனேயே நாய் துரத்துவதாய்க் கற்பனை செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக தினமும் தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு வேகநடைப்பயிற்சி செய்யச் சொல்கிறார். இப்படிப்பட்ட ஆசாமிகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதே அதிசயம். அவர்களை மிரளவைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயிற்சியைக் கூட்டவேண்டுமே தவிர ஒரே நாளில் இப்படியா பயமுறுத்துவது? பாருங்க, இவரும் ஒரு நாள் போனார், நான்குநாள் ஓய்வெடுத்துக்கொண்டார்.

ஐந்தாவது நாளும் ஓய்வெடுத்திருப்பார், ஆனால் முதல் நாள் அறிமுகமான பெரியவரின் பரிச்சயமும், பழகிய விதமும் ஈர்க்க, அவரைப் பார்க்கவாவது கிளம்பிவிட்டார். ஒரு நாள் ஒரு பொழுது ஒருவரைப் பார்த்து கொஞ்சநேரம் மனம் விட்டுப் பேசியதே ஒருவரது வாழ்க்கையில் பெரிய சம்பவமாக இருக்கமுடியுமா? முடியும் என்கிறாரே கதாசிரியர். அந்த அளவுக்கு அந்தப் பெரியவரின் குணாதிசயம் ஈர்த்திருக்கிறது நம் கதையின் நாயகனை.

பெரும்பாலும் குடும்பத்திலும் சமூகத்திலும் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு யாராவது ஒற்றை வார்த்தை ஆறுதலாய் சொன்னாலும் போதும், அப்படியே நெக்குருகிப் போவார்கள். பொதுவாகவே வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, அதனால் உண்டாகும் உளச்சோர்வுதான் உணவில் அதீதமான நாட்டம் ஏற்படுத்தி உடற்பருமனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு நம் கதாநாயகனுக்கும் இப்படி ஏதாவதொரு உளவியல் சார்ந்த பின்னணி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

நம் கதாநாயகனுக்குக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படவில்லை. குடும்பத்தில் யாரும் அனுசரணையான உறவைப் பராமரிக்கத் தவறியிருக்கலாம். அல்லது இவரே தன் உடற்பருமன் காரணமாக தாழ்வு மனப்பான்மையில் சிக்கித்தவித்திருக்கலாம். அத்தனைப் பிரச்சனைகளுக்கும் ஓர் உளவியல் தீர்வாக அந்தப் பெரியவரின் அறிமுகம் அமைந்திருக்கிறது. அவர் இவருடன் பேசியது அரைமணி நேரம் என்றாலும் இவர் மனத்தில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார்.

வேற்று ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வேற்றுமை பாராமல் ஒருவருக்கொருவர் நல்ல நட்பின் ஆரம்பமாக மனம் விட்டுப் பேசியது ஒரு நல்ல அனுபவத்தைத் தந்திருக்கலாம். அப்படியிருந்தால் அவர் மறுநாளும் போய் பெரியவரை சந்தித்திருக்க வேண்டுமே. ஆனால் பெரியவரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் மீறி அவருடைய உடல் வலியும் சோம்பலும் வெளிப்பட்டு அவரை நடக்கவிடாமல் தடுத்துவிட்டன போலும். 

எண்பத்தெட்டு வயதிலும் கைத்தடியை ஊன்றிக்கொண்டாவது நடக்கும் பெரியவர் அறுபது வயதுக்கு ஒரு முன்னோடியாக ஒரு முன்னுதாரணமாக இருப்பதில் ஆச்சர்யமில்லைதானே? 

இப்போது பெரியவரின் பின்னணியைப்பார்ப்போம். இந்த வயதில் அவர் முட்டி வலியோடு கைத்தடியை ஊன்றிக்கொண்டு நடைப்பயிற்சி செய்யவேண்டியதன் அவசியம்தான் என்ன? பெண்ணையும் மாப்பிள்ளையையும் சார்ந்து வாழும் அவருக்கு தனக்காக இல்லாவிடினும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவாவது உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டியது அவசியம் அல்லவா?

ஆனால் நம் கதாநாயகனுக்கு மகிழ்வு கொடுத்த பெரியவரின் பரிச்சயம் ஒரே நாளோடு முடிவுக்கு வந்துவிட்டதுதான் நமக்கு வருத்தமான விஷயம். இப்படி இவரை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு வந்த வேகத்தில் மறைந்திருக்கவேண்டாம். அவர் இன்னும் சில நாள் இருந்திருக்கலாம் என்று கதையை வாசிக்கும் நமக்கும் தோன்றுகிறது. ஒருவேளை கதாசிரியர் அப்படிக் குறிப்பிட்டிருந்தால் இருவரது நட்பின் ஆழம் வாசகரால் இன்னும் அழகாய் புரிந்துகொள்ளப்படும் என்றும் தோன்றுகிறது.

ஆனால் கதையில் ஏதாவதொரு திருப்பம் வேண்டுமே. அதனால்தான் மூன்று காலில் நடந்துவரவேண்டிய முதியவர் நான்கு சக்கர ஊர்தியில் இறுதி யாத்திரைக்குப் போவதாக காட்டப்பட்டுள்ளது. இதை எதிர்பார்க்காத கதாநாயகனைப் போலவே நமக்கும் சொரேர் என்கிறது.

நாம் எதிர்பார்ப்பதெல்லாமேவா நடந்துவிடுகிறது? பெரியவரின் இறுதி ஊர்வலத்தையாவது இவர் பார்க்க நேர்ந்ததே… அந்த வகையில் நிறைவுதான். இல்லையென்றால் நித்தமும் வந்து அந்த காலித்திண்ணையைப் பார்த்துப் பார்த்து குழம்பியிருந்திருப்பார்.

பெரியவர் இல்லாவிட்டால் என்ன? அவர் விட்டுச்சென்ற கைத்தடி இனி இவரை வழிநடத்தும். விரைவிலேயே உடல் எடையைக் குறைத்து நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவார் என்று நம்புவோம். 


 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 திருமதி. 


கீதா மதிவாணன்



அவர்கள்.



வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in


  




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      


 

 திருமதி. 



கீதா மதிவாணன் 

அவர்கள்
   
VGK-35 To VGK-37

  

AN ACHIEVEMENT !
5th TIME HAT-TRICK WINNING !!





மனம் நிறைந்த பாராட்டுகள்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்

[ The hat-trick Prize amount will be fixed later according to their 
Further Continuous Success in VGK-38, VGK-39 and VGK-40 ]

      



மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது.



      

 



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !



    



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo


நினைவூட்டுகிறோம்



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-39 


 மா மி யா ர்   



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


16.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.





 


போட்டிகளில் கலந்துகொள்ள
இன்னும் தங்களுக்கு 
இரண்டே இரண்டு
வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
என்பது நினைவிருக்கட்டும் !! 



என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

21 comments:

  1. உள்ளுணர்வின் உந்தலைக் குறிப்பிட்டு முதியவர்கள் இருவருக்குமான சிநேகத்தின் ஆழத்தை வெளிப்படுத்திய அழகான விமர்சனம். பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி கீதா! பரிசை உன்னுட்ன் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. ஐந்தாவது முறையாக ஹாட் டிரிக் பரிசு வென்றிருக்கும் உனக்குப் பாராட்டுக்கள்!

      Delete
  2. இரண்டாம் பரிசுக்குரியதாய் என் விமர்சனமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதோடு கலையரசி அக்கா அவர்களோடு பகிர்ந்துகொள்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பளித்த கோபு சார் அவர்களுக்கும் தெரிவு செய்த நடுவர் ஜீவி சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நிஜ வாழ்விலும் இது போன்ற உள்ளுணர்வு சம்பவங்கள், சில சமயம் எதிர்பாராமல் நிகழ்ந்து, நம்மை வியக்க வைப்பதுண்டு/

    சிறப்பான வரிகள்.
    இரண்டாம் பரிசு பெற்ற
    திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்! தாங்கள் மூன்றாம் பரிசு வென்றமைக்கும், தொடர்ச்சியாக ஹாட் டிரிக் பரிசு வென்று சாதனை படைப்பதற்கும் பாராட்டுக்கள்!

      Delete
  4. அத்தனைப் பிரச்சனைகளுக்கும் ஓர் உளவியல் தீர்வாக அந்தப் பெரியவரின் அறிமுகம் அமைந்திருக்கிறது. அவர் இவருடன் பேசியது அரைமணி நேரம் என்றாலும் இவர் மனத்தில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார்.
    சிறப்பிடம் பெற்ற அழகான வரிகள்..!

    பரிசு வென்ற திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  5. வாய்ப்பளித்த கோபு சார் அவர்களுக்கும் இரண்டாம் பரிசுக்குத் தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  6. தொடர்ந்து ஹாற்றிக்காய் அடித்துக் கொண்டு வரும் திருமதி கீதா மதிவானைன் விமரிசனம் மிக அருமை. பெரியவரின் நடைப் பயிற்சிக்கு என்ன காரணம் தீர ஆராய்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள் கீதா !
    இவருடன் பரிசினைப் பகிர்ந்துக் கொண்டிருக்கும் திருமதி கலையரசிக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. சகோதரி கீதா மதிவாணன்
    சகோதரி கலையரசி
    இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. திருமதி கலையரசி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அதிலும் கீதா மதிவாணனே இரண்டாம் பரிசு தான் பெற்றிருக்கிறார் எனில் முதல் பரிசுக் கட்டுரை இதைவிடச் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் தொடர்ந்து பரிசுகளைப் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. //அக்காலத்திலிருந்த திண்ணையில் வழிப்போக்கர்கள் அமர்ந்து ஓய்வெடுத்ததையும், சுமைதூக்குவோர் சுமையை இறக்கிவைத்து இளைப்பாறியதையும், இக்காலத்தில் தெருவில் நடைபயிலுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோடு ஒப்பிட்டு, அந்நாளைய மனித நேயமும் பொதுநலமும் குறைந்து கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார் ஆசிரியர்.//
    திருமதி கலையரசி அவர்களின் விமர்சனம் அருமை! அவருக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. //பெரும்பாலும் குடும்பத்திலும் சமூகத்திலும் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு யாராவது ஒற்றை வார்த்தை ஆறுதலாய் சொன்னாலும் போதும், அப்படியே நெக்குருகிப் போவார்கள். பொதுவாகவே வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, அதனால் உண்டாகும் உளச்சோர்வுதான் உணவில் அதீதமான நாட்டம் ஏற்படுத்தி உடற்பருமனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு நம் கதாநாயகனுக்கும் இப்படி ஏதாவதொரு உளவியல் சார்ந்த பின்னணி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.//
    வித்யாசமான பார்வை! வழக்கம்போல் முத்திரை பதிக்கும் விமர்சனம்! பரிசுபெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. மனதை இளமையாக வைத்திருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்கிற உண்மையை இக்கதையின் மூலம் வாசகர் மனதில் பதிய வைத்து, தன்னம்பிக்கையளித்துப் புத்துணர்வு ஊட்டுவதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்.. //

    உண்மை.
    அழகாய் விமர்சனம் செய்த கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //தனக்காக இல்லாவிடினும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவாவது உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டியது அவசியம் அல்லவா?//

    உண்மை கீதா, கடைசிவரை யாருக்கும் தொந்திரவு கொடுக்க கூடாது என்றே முதியவர்களின் எண்ணமே உடலை பாதுகாத்துக் கொள்ள வைக்கும் உந்து சகதி.
    அருமையான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
  13. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'
    ’VGK-37 எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு’

    இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://www.unjal.blogspot.com.au/2014/11/blog-post_7.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  14. திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு
    என் பாராட்டுகள்.!

    ReplyDelete
  15. திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  16. திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், திருமதி கலையரசி
    அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. திருமதி கீதாமதிவாணன் திருமதி கலயரசிஅவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. திருமதி கீதாமதிவாணன் திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. //பெரியவர் இல்லாவிட்டால் என்ன? அவர் விட்டுச்சென்ற கைத்தடி இனி இவரை வழிநடத்தும். விரைவிலேயே உடல் எடையைக் குறைத்து நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவார் என்று நம்புவோம். // WALKING STRICT - WITH THE - WALKING STICK..நடக்கட்டும்.

    ReplyDelete