என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

VGK-39 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’மாமியார்’
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்  


கதையின்  தலைப்பு :


 VGK-39      மாமியார்   


     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  


 நடுவர் திரு. ஜீவி  


 நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 
  


மற்றவர்களுக்கு: 


      
முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள விமர்சனம் - 1


மாமியார் உறவைப் பற்றி ஆண்டாண்டு காலமாக நம் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பழமையான மோசமான கருத்தை 
மாற்றிப் புது எண்ணத்தைப் புகுத்தும் விதமாகக் கதை 
எழுதியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்!

எந்தக் காலத்திலுமே மாமியார்- மருமகள் என்ற இவ்விரண்டு உறவுகளும் அன்புடன் ஒன்றுபட்டு வாழ முடியாது என்பது நம் சமூகத்தில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. 

1.‘மாமியார் உடைத்தால் மண்சட்டி
மருமகள் உடைத்தால் பொன்சட்டி’

2.‘வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம்
கால் பட்டால் குற்றம்’

3.“மாமியார் மெச்சின மருமகளில்லே
மருமகள் மெச்சின மாமியாரில்லே,”

இவை மாமியார் பற்றி நம் நாட்டில் வழங்கும் பழமொழிகள்!

மாமியார் என்றாலே கெட்டவள், கொடுமைக்காரி, எதற்கெடுத்தாலும் குற்றங்கண்டுபிடிப்பவள்; “மகன் செத்தாலும் பரவாயில்லை
மருமகள் தாலி அறுக்கணும்,” என்ற கொடிய உள்ளம் படைத்தவள்.
போன்ற எண்ணங்கள் காலங்காலமாக நம் பெண்களுக்குக் குழந்தைப்பருவத்திலேயே அடிமனதில் ஆழமாகப் பதிந்து, 
அவர்களை அறியாமலேயே அந்த உறவின் மீது வெறுப்பும் 
கசப்பும் ஏற்பட்டு விடுகிறது. 

ஏற்கெனவே அடிமனதில் இருக்கும் வெறுப்பு, தன் அம்மா மாமியாரிடம் பட்ட அவஸ்தையை சிறுவயதில் நேரில் பார்த்ததினாலோ, தான் பட்ட வேதனைகளை அம்மாவோ, அக்காவோ சொல்லக் கேட்டதினாலோ இன்னும் அதிகமாகிவிடுகிறது.  
.  
அதனால் தற்காலத்தில் திருமணத்துக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே “எனக்கு நாத்தனார், மாமியார் இல்லாத வரனாகப் பாருங்கள்,” என்று இளம் பெண்கள் சிலர், தம் பெற்றோரிடம் சொல்லுமளவுக்கு, இவர்கள் அடிமனதில் வெறுப்பு வேரூன்றிப் போயிருக்கிறது. 

மாமியாரும் உன் அம்மா தான்.  அவர்களிடத்தில் நீ நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கும் அன்னையர் குறைவு. 

“புருஷன் வீட்டுக்குப் போனபிறகு இப்பிடி பொறுப்பில்லாம இருந்தீன்னா  பொண்ணா வளர்த்திருக்கீங்கன்னு கேட்டு 
ஒன் மாமியா என் மூஞ்சில காறித்துப்புவா,” என்பது தான் பெரும்பாலான அம்மாக்கள் அடிக்கடி பேசும் வசனம்,  
எனவே இதைக் கேட்டு வளரும் பெண் என்ன நினைப்பாள்? 

நம் அம்மா வீட்டில் இருந்தது போல், ஜாலியாக மாமியார் வீட்டில் இருக்க முடியாது; அதனால் மாமியார் இல்லாமலிருந்தால் நல்லது என்ற எண்ணம் பெண்களுக்கு  ஏற்படுவது இயற்கைதானே? 

போதாக்குறைக்கு நம் தொலைக்காட்சிகளில் ஒலிப்பரப்பாகும் யதார்த்தத்துக்குப் புறம்பானத் தொடர்கள், இவர்களது வெறுப்பை இன்னும் அதிகமாக்குகிறது.  நாள் முழுக்க மருமகளை வாய்க்கு வந்தபடி ஏசுவதும் கரித்துக் கொட்டுவதுமாகப் படாதபாடு படுத்திவைப்பாள் மாமியார்.  மகனிடமும் அவளைப்பற்றி 
இல்லாததும் பொல்லாததும் சொல்லி அடி வாங்க வைப்பாள்.  
தன் விதியை நொந்து கொண்டு எந்நேரமும் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, அழுத கண்களுடம் சிந்திய மூக்குடனும் 
வாழ்க்கை நடத்துபவளாக அப்பாவி மருமகள்!

தினமும் இது போன்ற தொடர்களைப் பார்த்து மூளை சலவைக்கு உள்ளாகும் பெண் மனதில், மாமியாரைப் பற்றி உயர்வான எண்ணம் எப்படி உருவாகும்?

இப்படி மனதளவில் மாமியார் பற்றிய வெறுப்புடன் திருமணமாகி புகுந்தவீடு செல்லும் எந்தப்பெண்ணுக்குமே மாமியார் சொல்வதெல்லாம் தப்பாகத் தான் தெரியும்;  அவர் சொல்வதில் நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கக்கூடிய மனப்பக்குவமோ, மனமுதிர்ச்சியோ  இருக்காது.  இக்கதையில் வரும் வனஜா பாத்திரமும் இப்படித்தான். 

ஆனால் மாமியாரோ, நமது எண்ணத்துக்கு மாறாக மிகவும் நல்லவர்;  மருமகள் சீவி சிங்காரித்துக்கொண்டு மகனுடன் பீச் ஹோட்டல் 
என்று ஜாலியாகச் சுற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்; 

காலை நீட்டி அமர்ந்து கொண்டு, மருமகள் செய்து போடும் சாப்பாட்டில் உப்பு ஜாஸ்தி, புளிப்பு மட்டு, வாயில் வைக்க சகிக்கவில்லை என்று ஆயிரம் குற்றங்குறைகள் கண்டுபிடித்து நாட்டாண்மை செய்து கொண்டிராமல், மருமகளுக்கு 
வேளாவேளைக்கு ருசியாக சமைத்துப் போட ஆசைப்படுபவர்!

பாட்டி புரோமோஷனுக்கு ஏங்குபவர்;  குடும்ப வாரிசை மடியில் போட்டுத் தாலாட்ட விரும்புபவர்; தம் வார்த்தையை மருமகள் கேட்கமாட்டாள்,  என்று சம்பந்தி வீட்டுக்குச் சென்று தம் பக்கத்து நியாயத்தைச் சொல்லி அவள் அம்மா மூலம் வக்காலத்து வாங்குபவர்!

ஆனால் மருமகள் வனஜாவுக்குத் திருமணமாகி ஆறுமாதங்களாகியும் மாமியாரின் நல்ல குணம் தெரியவில்லை.   சமைக்கவேண்டாம் என்று அவர் சொல்வதன் அடிப்படை நோக்கம் புரியவில்லை.  காரணம் ஏற்கெனவே மாமியார் பற்றி இவள் அடிமனதில் இருக்கும் மோசமான எண்ணம், இவளைச் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. எல்லாவற்றிலும் குற்றங் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது.

'சிறுகதையில்  வார்த்தை  சிக்கனம்  மிக மிக  முக்கியம். எழுதும் ஒவ்வொரு  வரியும்  அந்த சின்னஞ்சிறு  கதையோடு 
இணைந்து போகும் மாயாஜாலம்  இங்கு  நிகழ வேண்டும். சிலந்தி வலை  போல கதையின் மைய வட்டத்தோடு 
ஒவ்வொரு வரி இழையும் இழுத்துக் கட்டி பின்னப் 
பட்டிருக்கவேண்டும்இல்லையென்றால் ஒவ்வொரு  பகுதியும் 
துண்டுதுண்டாகி சிறுகதை தன் கட்டுக்கோப்பை நழுவ 
விட்டுத்தனித்தனியாய்  தொங்கும் உணர்வு வாசகருக்கு 
ஏற்படுவதைத்தவிர்க்க முடியாது போய்விடும்”  

என்று சமீபத்தில் இந்த தளத்திலேயே படித்தது நினைவுக்கு வருகிறது.  

ஏனெனில் இக்கதையில் ஜோஸ்யம், சஷ்டாஷ்டக 
தோஷம் பற்றிய விவரிப்பு, மையக்கருவோடு இணையாமல் 
தனியாய் நிற்கிறது. 


எந்தவொரு சிறுகதைக்கும் முதல்வரி மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள்.  முதல்வரியை வாசித்த மாத்திரத்தில் வாசகனின் கவனத்தைக் கவர்ந்து ஆவலைத் தூண்டி கதையைத் தொடர்ந்து வாசிக்கச்செய்வதாய்  அது இருக்க வேண்டும் 

அது போலவே இக்கதையிலும் முதல்வரியில் அம்மா வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பிய வனஜா வீடு முழுவதும் தேடிவிட்டுத் 
தன் மாமியாரைக் காணாமல் கணவரிடம் கேட்கிறாள்.  “அம்மா எங்குப் போனார்களோ தெரியாது இனி வரவே மாட்டார்கள் 
என்று நினைக்கிறேன்,” என்று கணவர் கடுப்புடன் சொல்லும் 
பதில், நம் கவனத்தைக் கவர்ந்து மாமியார் எங்குப் போயிருப்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலை அதிகப்படுத்திக் கதையைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது. 
.
ஆனால் காணாமல் போன மாமியாரை அம்போ என்று பாதியில் விட்டுவிட்டுக் கதை ஜோசியம், தோஷம் என்று மையக் கதைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத விஷயத்துக்குத் தாவி விடுவதால், 
பட்டென்று விறுவிறுப்பு குறைந்துவிடுகிறது. 

தான் சண்டை போட்டதால் மாமியார் எங்கோ சென்றுவிட்டார்; 
கணவர் கடுப்புடன் இருக்கிறார், என்ற குற்றவுணர்வுடன் வனஜா மாமியாரை எங்கெங்கோ தேடிவிட்டு, அனாதை இல்லத்தில் சேர்ந்திருப்பாரோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்கிற ரீதியில் மனப்போராட்டத்தில் ஈடுபட்டு,  முடிவில் அவள் சற்றும் எதிர்பார்க்காத அவள் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறார் என்று முடித்திருந்தால், கதை கட்டுப்போக்காக அமைந்து, 
இன்னும் சுவை கூடியிருக்கும் என்பது என் கருத்து.  
  
அம்மாவின் பாசத்துக்கும், புதுமனைவி மேலிருக்கும் மோகத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கணவன் கதாபாத்திரம் வெகு யதார்த்தம்.  “அம்மாவிடம் நீ நடந்து கொள்ளும் முறை சரியல்ல,” என்பதை மனைவியிடம் நேருக்கு நேர் சொல்லப் பயந்து, “இனி வரவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்,” என்று கடுப்புடன் சொல்லி, 
தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடம்  அருமை.

உப்பு சப்பில்லாத அல்ப விஷயங்களுக்காக ஏற்படும் சண்டை சமயத்தில் பெரிதாகி குடும்பம் பிரிவதற்குக் காரணமாவிடும்.  எந்தப்பிரச்சினையானாலும் மனம் விட்டுப் பேசினால், சுமுகத்தீர்வு கிடைக்கும் என்கிற நீதியையும் இக்கதை உணர்த்தத் தவறவில்லை. 

சரியான புரிந்துணர்வின் மூலமும், நிபந்தனையற்ற அன்பு 
செலுத்துதல் மூலமும் மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக தாயும் மகளும் போல வாழமுடியும் என்ற நீதி, இக்கதையிலிருந்து பெறப்படுகிறது.  அன்பே சிவம் என்பது தானே 
நம் மதங்களின் அடிப்படை கோட்பாடு? இதை வலியுறுத்தும் 
விதமாகக் இக்கதையைப் படைத்த வை.கோபு சார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

கூட்டுக்குடும்பமுறை சிதைந்து முதியோர் இல்லம் பெருகி வரும் இந்நாளில் மாமியாரின் அருமை பெருமைகளை மருமகள் அறிந்து கொள்ளும் விதமாக கதையை அமைந்திருப்பது இன்னும் சிறப்பு!


இக்கதையை விமர்சனம் செய்ய வாய்ப்புக்கொடுத்தமைக்கு மிக்க 

நன்றி!  இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 
  


 திருமதி. ஞா. கலையரசி  


அவர்கள்.வலைத்தளம்: ஊஞ்சல்

www.unjal.blogspot.com.au

   மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.      


 

     


VGK-37 TO VGK-39 
முதல் பரிசினை முத்தாக வென்றதுடன் 


முதன் முறையாக ஓர் ஹாட்-ட்ரிக் 


அடித்துள்ளார்கள்.
இவருடைய இந்த ஹாட்-ட்ரிக் சாதனையால்

நம் ஒட்டுமொத்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களின்

எண்ணிக்கை ஒரு டஜனாக [12 ஆக] உயர்ந்துள்ளது

என்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். 

மனம் நிறைந்த பாராட்டுகள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.The Hat-Trick Prize Amount will be DOUBLED if

this Madam is able to yield one more Success in VGK-40 also.


Let us Hope for the Best, Madam! 


All the Best !!


- Gopu
     

முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள விமர்சனம் - 2இல்லறமல்லது நல்லறமன்று .. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை.

அன்பும் அறனும் உடைத்தாயின் அதுவே இல்வாழ்க்கை பண்பும் பயனுமாகும் என வான்புகழ் வள்ளுவர் வரையறுத்துக்கூறும் பெருமைபெற்றது..

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல் இல்லம் தோறும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.. அலைகள் ஓய்ந்தபின் கடலில் நீராடலாம் என காத்திருந்தால் நீராடமுடியுமா என்ன?

அழகான கதையை மா மி யா ர் என்கிற தலைப்பில் படைத்து மனதிற்கு இனிமை சேர்த்திருக்கிறார் கதை ஆசிரியர்.  கணவன் மனைவியாகட்டும் மாமியார் மருமகளாகட்டும் புரிந்துணர்விருப்பின் எல்லாம் சுகமே என நிறுவும் இனிமை மனதை மலர்விக்கிறது.

பெண்கள் மாமியாரையும் தன் தாய்போல் நினைத்தால் பிரச்சனையே இல்லை. அதுபோல் மாமியாரும் மருமகளை தன் மகளாகவே நினைக்கவேண்டும். பெண்ளுக்கு தாய்வீட்டிலேயே நல்ல 
பண்புகளைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் புகுந்த வீட்டில் 
பிரச்சனைகள் உருவாகாது என அகலமாகவும் ஆழமாகவும் சிந்தித்து சிறப்புற குடும்பநலனை முன் நிறுத்தி ஆயிரம் காலத்துப்பயிரான திருமணத்தை வேரூன்றவைக்கும் முயற்சி மனதை நெகிழ்விக்கிறது.

ஒருஸ்பூன்  சர்க்கரையைக்கொண்டு கைகொள்ளாத அளவுக்கு பஞ்சுமிட்டாயாக கண்கவரும் வண்ணத்தில் சுடச்சுட சுற்றித்தந்து துள்ளும் குழந்தையாக வாசிப்பவர்களை மாற்றுவதை வியப்புடன் உணர்கிறோம். துளியூண்டு கதையை மனம் கொள்ளும் வகையில் ஊதிப்பெரிதாக்கி கையில் கொடுத்திருக்கும் மாயாஜாலவித்தை  
சிந்தை மயக்குகிறது.. கதாசிரியரின் கைதேர்ந்த அணுகுமுறை சிலாகிக்கவைக்கிறது..

கடுகினும் சிறிய விதை ஆலவிருக்ஷமாக பரிணமிப்பதுபோல சிறிய கதைக்கரு ஆயிரம் காலத்துப்பயிரான திருமணத்தின் சூட்சுமங்களை விளக்கி வியக்கவைத்து வசீகரிக்கிறது..

பாட்டியாகப்பிரமோன் பெற திருமணமாகி ஆறுமாங்கள் கடந்த நிலையில் புதுப்புடவைகட்டி பூவைத்து  குளிர்பிரதேசங்களுக்கு உல்லாசப்பணம் செய்யவும் ஊக்கப்படுத்தும் மாமியார் கிடைத்தது வனஜாவுக்குக்கிடைத்த வரம் .. வரம் தந்த சாமியான மாமியாரின் நல்லமனதை புரிய வைத்த தாயார் மிகுதிக்கண் மிக்கவை செய்யின் இடித்துரைத்து வழிப்படுத்தும். நேர்த்தியான கதை அமைப்பு சிறப்பு சேர்க்கிறது.. பல இடங்களில் மகளுக்கு ஆதரவாகக் கொடிபிடித்து வீட்டை இரண்டாக்கும் உறவுகளே அதிகம்..

வழக்காடுமன்றங்களாக இல்லத்தை மாற்றி நடுவர் பொறுப்பு விரும்பாமலே திணிக்கப்படும் குடும்பத்தலைவர் பாடுதான் நாலாம் பிறைபார்த்தவர் மாதிரி நாய்படாத பாடுபட்டு வீட்டுக்கு வரத் தயங்கி நள்ளிரவெல்லாம் நகர்வலம் வந்து அல்லலுற்று பம்மிப்பதுங்கி வாசற்படி ஏறினால் நாட்டாமை தீர்ப்பை மாற்று என்ற அதிகாரக்குரல் கர்ஜனையாய்  பறந்துவரும் பாத்திரத்தோடு..! 

நீயா நானா என வல்லமை போட்டியைக்கைவிட்டு நீயும் நானும் 
என்னும் ஒற்றுமை உணர்வு இருந்தாலே குடும்ப உறவுகள் மட்டுமல்ல எந்த உற்வுகளும் மேம்படும். எனவே ஆணின் தாயாருக்கும் மணமகளுக்குமே பொருத்தம் பார்க்கவேண்டுமோ என்கிற நிலைதான் காட்சிப்படுகிறது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் ஆகும்..

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழும் வகையறியாது கலங்கும் பலருக்கு என்சைக்ளோபீடியாவாக பொருள்பொதிந்த கருத்துகள் விரவிய நயமான எளிய குடும்பக்கதை


.. ஜோசியக்காரர் கொஞ்ச நாளைக்கு தண்ணியில 

கண்டம்னு சொன்னாராம் 

அதுக்குனு வீட்டுல ஷவர்ல குளிக்கும்போது கூட 

லைஃப் ஜாக்கட் போட்டுகிட்டு 

தான் குளிப்பேன்னு அடம்பிடிக்கிற மாதிரி 

ஜோதிடப்பைத்தியமாக இராமல் 

இருமங்களை இணைக்கும் திருமணத்தில் 

ஜாதகப்பொருத்தம் நட்சத்திரபொருத்தமெல்லாம் 

பார்த்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது..முன்காலத்தில்  ஏறுதழுவுதல், இளவட்டக்கல் தூக்குதல் 

போன்ற வீர விளையாட்டுகள் நிகழ்த்தி 

வெற்றிபெற்றவர்களின் வீரத்தை, திறமையை 

அறிந்து பெண்கொடுத்தனர்..
தாயைத்தண்ணீர்த்துறையில் பார்த்தால் 

பெண்ணை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை.. 

தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை 

என உறவுகளையும் பழக்கவழக்கங்களையும் 

பெரியோர் கண்பார்வையிலேயே 

அனுபவத்தின் வாயிலாகக்கணித்து திருமணங்கள் 

நடத்தியகாலம் மலையேறிவிட்டது..
திருமண மையங்கள் தரும் தகவல்களைக்கொண்டு ஏற்ற 

துணையைத்தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கிறோம்.. 

முன்பின் தெரியாத குடும்பங்கள் - எனவே ஒன்றுக்கு 

இரண்டாக ஜாதகம் , குடும்ப தகவல்கள் 

எல்லாம் சரிபார்த்து , திருமணம் செய்கிறோம். 

அதிலும் வெளிநாட்டு வரனாக 

இருந்தால் ரகசிய விசாரனைகள் செய்துதர , 

அதற்கான கம்பெனிகளிடம் 

பணம் கட்டி அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவரா, 

கொடுத்திருக்கும் வருமானம் வேலை ஆகியவை 

உண்மையானவையா என தீர விசாரித்தறிய 

வேண்டிய நிலை உண்டு.. 

அதைச் செய்யாமல் விட்டுவிட்டு தும்பைவிட்டு 

வாலைப் பிடித்த கதையாக அவசரத்தில் கல்யாணம் செய்து  

சாவகாசமாக சங்கடப்பட்டுப் பிரயோசனமில்லை. 

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் 

திரும்பாதே.! 

மருத்துவப் பரிசோதனையும் பரிந்துரைக்கப்டுகிறது..!திருமணத்திற்கு பத்துப்பொருத்தம் பார்ப்பதோடு பதினோராவது பொருத்தமாக மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப்போகுமா என பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமும் ஆக இருக்கிறது என்பதை நகைச்சுவையாக கதை சொல்லும் நேர்த்தி  வசீகரிக்கிறது.

சஷ்டாஷ்டகப்பொருத்தம் சுபமாக அமைந்ததால் நல்ல வரனை ஜாதகம் காட்டி நழுவ விட மனமில்லாத வனஜாவின் தந்தை இரண்டாவது கருத்துக்காக மற்றொரு ஜோதிடரை நாட, அவரும் வாய்ஜாலத்தால், தன் குடும்பநிலவரமும் அதுவே என உதாரணம் காட்டி மிகபெரிய சம்சாரியான தன் வாழ்வையே காட்சியாக்க,  நூறுக்கு இருநூறாக தட்சிணையும் கிடைப்பது நல்ல நகைச்சுவைக்காட்சி.. !

பகலில் சண்டையும் சச்சரவும் இருந்தாலும் தலையணைமந்திரமும் உடன்படிக்கையுமாக நித்ய கண்டம் பூரண ஆயுசாக ஓடும் குடும்ப வண்டி குடைசாயாமல் வனஜாவின் சாமர்த்தியத்தைப் பறைசாற்றுகிறது.
ஜோதிடரின் வாய்க்கு சர்க்கரைத்தான் போடவேண்டுமென தன் வாழ்வின் போக்கை எண்ணங்களால் நிறைத்துக்கொண்டு வாழும் வனஜா இன்றைய பல பெண்களின் பிரதிநிதியாகவே காட்சிப்படுகிறாள்.

உப்புபொறாத விஷயத்துக்குத்தான் குடும்பங்களில் இக்கதையில் வருவது போல் சிக்கல்கள் ருகின்றனவே அல்லாது உலக விஷயங்களில் எல்லாம் ஒருமித்த கருத்தே எட்டப்படுவது நகைச்சுவையின் உச்சம்..

தான் சீக்கிரம் பாட்டியாக பிரமோன் பெற வேண்டும், அதற்காக மருமகள் மகனுடன் விடுமுறை நாட்களிலாவது உல்லாசமாக 
சுற்றுலா போன்று சென்று மகிழ்ச்சியாக இருக்கணும், புதுப்புடவை அணிந்து பூ , பொட்டுவைத்து கண்ணுக்கு லட்சணமாக கணவனுடன் மகிழ்ந்திருக்கவேண்டும் என தனக்கு மறுக்கப்பட்ட இன்பங்களை 
தன் வாரிசுகள் பெறவேண்டும் என பெரியமனதுடன் வளையவரும் மாமியாரின் அபிலாஷைகளை தன் தாயாரின் வாயிலாகக்கேட்டு மாமியாரின் காலில் விழுந்து பிரச்சினையை முடிவுக்குக்
கொண்டுவரும் கதை இப்படி எல்லாம் வாழ்வில் நடை பெறுமா 
என்று கேட்டுக்கொண்டிராமல் கதையோடு கரைந்துபோய் 
வனஜாவை வாழ்த்துகிறோம்..!

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு - - -

இல்லறத்திற்கு எவ்வாறு மனைவியின் நற்பண்பு மங்கலமாக அமைகிறதோ, அதைப் போலவே, நன்மக்களைப் பெறுதலும் இல்லறத்திற்கு அணிகலன்களாக அமையும்.  மக்கட்பேறு பெற்று மருமகள் சிறக்கவே மாமியார் விரும்புகிறார்..

தாயாரும் வனஜாவுக்கு ஆதரவாகப்பேசி பிரச்சினையை தீயும் தீயும் சேர்ந்து பெருந்தீ ஆன கதையாக ஆக்காமல் தகுந்த அறிவுரை சொல்லி குடும்பத்தில் தென்றல் தவழ ஆவன செய்வது இதமாக இருக்கிறது .. பெரும்பாலான தாய்மார்கள் பெண்ணுக்கு ஆதரவாக முழங்கி பிரச்சினையை பெரிதாக்கி குடும்பத்தை இரண்டுபடுத்தும் செயலைத்தான் செய்கிறார்கள்.

எதிர் துருவங்கள்தான் ஒன்றை ஒன்று காந்தமாய் ஈர்க்கும் . ஒத்த துருவங்கள் காந்தத்தை நிராகரிப்பது போல வாழ்விலும்,  ரசனையில் மாறுபட்டவர்களையே இறைவன் குடும்ப வண்டியில் பிணைத்து வேடிக்கை பார்க்கிறான்..

புனர்பூசத்திற்கும் உத்திராட நட்சத்திற்கும் மித்ர சஷ்டாஷ்டகம் என ஜோதிடர் கூறுவதற்கு ஏற்ப  பல குடும்பங்களில் ஜோதிடபலன் நடைபெறுவதை கண்கூடாகக்கண்டிருக்கிறோம்..

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி ஜாதகம் 
பார்க்காமல் திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்களையும் கண்டிருக்கிறோம்.. உலகம் பலவிதம். வாழ்க்கை வாய்ப்பாடு அல்ல .. எத்தைத்தின்றால் பித்தம் தணியும் என ஜாதமும் கையுமாக 
அலையும் பலரையும் கண்டிருக்கிறோம். இனிய வாழ்க்கைக்கு புரிந்துணர்வும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் பிறர்நலம் பேணலும் அவசியம் .

தாய்வீட்டிலிருந்து  மாமியார் வீடு திரும்பிய வனஜா மாமியாரைக்காணாமல் தேட கணவன் கடுப்படிக்க, மாமியாரோ மருமகள் இல்லாமல் வீடு வெறிச்சோடி இருப்பதாக தவித்து 
வனஜாவின் அம்மா வீட்டுக்கே தேடிச்செல்ல, வனஜாவின் அம்மா விருந்து போட்டு உபசரித்து, தானே சம்பந்தியம்மாவை அழைத்து 
வந்து வீட்டில் விடுவதோடு, மகளுக்கும் தங்கமான மாமியாரின் குணத்தைப் புரியவைப்பதுமான கட்டத்தில், ஒருவரை ஒருவர் 
விஞ்சும் நல்ல செயல்கள் தித்திக்கிறது  ..

வரமாய் வந்தவர் மாமியார் மட்டுமல்ல நம் கதாசிரியரும்தான் என தயங்காமல் தீர்ப்பளிக்கிறோம்..             ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... .....

குடும்ப உணர்வுகளை வானவில்லின் ஜொலிப்புடன் வர்ணஜாலமாய் விகசித்து நவரசங்களுடன், மனம் கவருகிற மாதிரியாக கதாசிரியர் 
கதை சொல்லும் விதம் வசீகரிக்கிறது..

 இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

திருமதி.இராஜராஜேஸ்வரி


அவர்கள்.


வலைத்தளம்: மணிராஜ்

http://jaghamani.blogspot.com/
 
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
      


ஆச்சர்யம் ஆனால் உண்மை!


-oOo-
தங்கத்தாமரையும், தங்கநிறப்பறவையும்

முதன் முதலாக முதல் பரிசினைப் பகிர்ந்து கொண்ட பதிவு

VGK-05 'காதலாவது கத்திரிக்காயாவது’


மகளிர் தினம் நெருங்கும் வேளையில் 

மகளிர் அணியின் மகத்தான சாதனையாக 

அன்று இது கருதப்பட்டது.


  


சரியாக எட்டு மாதங்களுக்குப்பிறகு

இன்று  VGK-39 இல் முதல் பரிசினில்

இவர்கள் மீண்டும் இணைந்துள்ளது

மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது !


இருவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


அன்புடன் கோபு [VGK]      மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுக்கான தொகை இந்த இருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து அளிக்கப்படும்.

      

 இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.இணைப்பு:


http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-03-03-third-prize-winner.htmlhttp://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-02-03-second-prize-winners.htmlகாணத்தவறாதீர்கள் !     


ஓர் முக்கிய அறிவிப்பு

நாளை ஓர் 


’நேயர் கடிதம் ’


வெளியிடப்பட உள்ளது

காணத்தவறாதீர்கள் !என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்


40 கருத்துகள்:

 1. முதல் பரிசினைப்பகிர்ந்து கொள்ளும்
  திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்குப்
  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்!

   நீக்கு
 2. மெய் வருத்தம் பாரார்; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார். :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் ஜீ.வி.சார்! நான் ஹாட் டிரிக் பரிசு பெற வேண்டும் என்று கோபு சார் வலியுறுத்திச் சொன்னார். நானும் எப்படியாவது அவரது ஆசையைப் பூர்த்தி செய்து அப்பரிசு பெற்றவர்களின் எண்ணிக்கையை 12 ஆக ஆக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். எனவே விமர்சனத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தேன். ஆனால் பல காரணங்களால் இறுதிநாளுக்கு முந்தின நாள் வரை என்னால் எழுத இயலவில்லை. எனவே அன்றிரவு பத்துமணிக்கு எழுத உட்கார்ந்து, எழுதி முடித்தேன். நிமிர்ந்து பார்த்தால் இரவு ஒரு மணி! உடனே மெயிலில் அனுப்பி வைத்து விட்டுத் தூங்கச் சென்றேன். அது எனக்கு ஹாட் டிரிக் பரிசுடன் முதல் பரிசையும் பெற்றுத் தந்தது.
   எந்த ஒரு வேலையிலுமே மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், கருமமே கண்ணாய் உழைத்தோம் என்றால் வெற்றிக் கனியை நம்மால் நிச்சயம் சுவைக்க முடியும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்! அது போல ஒருவரின் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றி வாகை சூட கோபு சார் போன்ற கிரியா ஊக்கிகளும் நிச்சயம் தேவை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை!
   உங்களிருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

   நீக்கு
  2. Kalayarassy G October 30, 2014 at 8:43 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அது போல ஒருவரின் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றி வாகை சூட கோபு சார் போன்ற கிரியா ஊக்கிகளும் நிச்சயம் தேவை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை! //

   நல்லதை மட்டுமே நினைத்தோம். நல்லது மட்டுமே நடந்தது. மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   - நன்றியுடன் கோபு

   நீக்கு
 3. \\சரியான புரிந்துணர்வின் மூலமும், நிபந்தனையற்ற அன்பு
  செலுத்துதல் மூலமும் மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக தாயும் மகளும் போல வாழமுடியும் என்ற நீதி, இக்கதையிலிருந்து பெறப்படுகிறது.\\

  கதையிலிருந்து அருமையான நீதியைச் சுட்டிக்காட்டியதுடன் கதையின் விறுவிறுப்பைக் குறைக்கும் விஷயங்களையும் அழகாக சுட்டி தேர்ந்த விமர்சனமெழுதி முதல் பரிசு பெற்றுள்ள கலையரசி அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. \\கணவன் மனைவியாகட்டும் மாமியார் மருமகளாகட்டும் புரிந்துணர்விருப்பின் எல்லாம் சுகமே என நிறுவும் இனிமை மனதை மலர்விக்கிறது.\\

  புரிந்துணர்வுக் கோளாறுதான் இக்கதையின் அடிப்படை என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். நகைச்சுவையும் யதார்த்தமும் இழையும் அழகான விமர்சனத்துக்கும் முதல் பரிசு பெற்றமைக்கும் அகமார்ந்த பாராட்டுகள் மேடம்.

  பதிலளிநீக்கு
 5. முதல் பரிசு பொற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  விமர்சனங்கள் மிக சிறப்பாக இருக்கிறது.

  மீண்டும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்..ஆஹா..அருமை

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி

  பதிலளிநீக்கு
 6. //புரிந்துணர்வுக் கோளாறுதான் இக்கதையின் அடிப்படை என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.//

  ரொம்ப சரி. இந்தப் புரிந்துணர்வு ஏற்படாமலிருப்பதற்கு என்னன்ன காரணிகள் குறுக்கே வந்து தடுத்து நின்று வெற்றியடையாமல் செய்கின்றன என்பதை யாராவது சொல்லுங்களேன். வெற்றியடைந்து விட்டாலோ, பழைய கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி ஒரு சந்தோஷக் கோட்டையை ஸ்தாபித்து மகிழலாம்.

  அல்லது இப்படியான புரிந்துணர்வு கொள்ளாமைகளே தம்பதிகளின் இன்றைய சந்தோஷ வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கின்றனவோ?..

  இதுவும் சரியே, அதுவும் சரியே என்று இரண்டு பக்கமும் சமரசம் மட்டும் செய்யக் கூடாது. அப்படிப்பட்ட சமரசம் எனில்
  இந்த சப்ஜெக்டை கையாளுவதற்கான அர்த்தமே இல்லாது போகும். அதற்காகத் தான் எல்லோருக்கும் தெரிந்த இந்த சமரசம் வேண்டாம்.

  ஒரு பதிவுக்கான சப்ஜெக்ட் இது. ஓரளவு விசு கையாண்ட சப்ஜெக்ட்.

  அதனால் அவர் விட்டு விட்ட அல்லது இப்போது புதிதாக முளைத்திருக்கிற பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான பதிவுகளாய் இந்தக் கதைக்கு வெளியே வந்து பதிவுலகில் இந்த விஷயத்தைக் கையாண்டால் இன்றைய சமூக அமைப்பிற்கு ஆற்றக் கூடிய பெருந்தொண்டாய் அது அமையும்.

  யார் ஆரம்பித்து வைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

  திருமதி கீதா சாம்பசிவம்?.. :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய நடுவர் அவர்களுக்கு

   வணக்கம். தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதில்கள் இவை.   //இந்தப் புரிந்துணர்வு ஏற்படாமலிருப்பதற்கு என்னன்ன காரணிகள் குறுக்கே வந்து தடுத்து நின்று வெற்றியடையாமல் செய்கின்றன என்பதை யாராவது சொல்லுங்களேன். வெற்றியடைந்து விட்டாலோ, பழைய கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி ஒரு சந்தோஷக் கோட்டையை ஸ்தாபித்து மகிழலாம்.//

   புரிந்துணர்வு இல்லாமலிருப்பதன் முக்கிய முதல் காரணம் ஈகோ.

   உலகில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணங்களோடு,குறை, நிறைகளோடுதான் பிறக்கிறோம்; நாம் செய்வது சரி என்ற எண்ணத்திலேயே வாழ்கிறோம்.அடுத்தவரின் எண்ணங்களை, மனத்தின் விருப்பு, வெறுப்புகளை நாம் மதிக்கிறோமா, காது கொடுத்துக் கேட்கிறோமா....ஏன் அது பற்றி யோசிப்பது கூட இல்லை என்பதே கசப்பான உண்மை.

   அடுத்தவரின் குற்றம், குறைகளை பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்கும் நாம், அவர்களின் நிறைவான குணங்களை எண்ணிப் பார்ப்பதுமில்லை; பாராட்டுவதுமில்லை.
   அன்றைய கூட்டுக் குடும்பங்களில் ஒற்றுமை, அன்பு, அன்னியோன்னியம், ஆதரவு, விட்டுக் கொடுத்தல், தம் குறைகளை அடுத்தவர் தவறு என்று சொல்லும்போது மாற்றிக் கொள்ளும் குணம் இவை எல்லாரிடமும் இருந்தது.

   'அப்பாவுக்கு கொஞ்சம் கோபம் அதிகம். ஆனால் அதைப் பெரிது படுத்தக் கூடாது. உள்ளத்தால் ரொம்ப நல்லவர்.'

   'நம்ம மாமியாருக்கு எல்லாம் பெர்பெக்டா இருக்கணும். அதனால கொஞ்சம் கோபத்தில அப்படி, இப்படி பேசுவாங்க. ஆனா அவங்க சொல்ற விஷயங்கள் நம்ம வாழ்க்கையை சரிப் படுத்தும்.'

   'பெரிய மைத்துனருக்கு பசி தாங்காது. சரியான சமயத்துல சாப்பாடு போடணும்.'

   'நாத்தனார் வீட்டில கொஞ்சம் பிடுங்கல். அவளுக்கு அப்பப்ப ஏதாவது சீர் செய்யணும்.'

   அந்த நாளைய கூட்டுக் குடும்பங்களில் இவை சகஜம். வந்த மருமகளும் அந்த வீட்டு மனிதர்களோடு அட்ஜஸ்ட் செய்து கொண்டு அக்குடும்பத்தோடு ஒன்றி விடுவாள்.
   இப்படியெல்லாம் இந்தக் காலத்தில் எதிர்பார்க்க முடியுமா?

   இந்தக்காலப் பெண் ஆணுக்கு சரிநிகர் சமானமாக வாழும் நவநாகரீகப் பெண் ஆச்சே!

   அன்றைய நாளில் சில மாமியார்கள் தான் சொல்கிறபடிதான் எல்லோரும் நடக்க வேண்டும், தனக்கு பிடித்ததைத்தான் எல்லாரும் செய்ய வேண்டும், தன் விருப்பம்தான் அந்த வீட்டில் முதலிடம் பெற வேண்டும் என்று நினைத்ததுதான் அந்நாளைய 'மாமியார் கொடுமை....(வேண்டாம்.. அதிகாரம் என்று வைத்துக் கொள்ளலாமா)'க்கு அஸ்திவாரமாக இருந்தது. அதை அடித்தளமாகக் கொண்டுதான் இன்று பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன!

   continued...

   நீக்கு
  2. இன்றோ வீட்டுக்குள் வரும் ,மருமகள் தனக்குத்தான் எல்லாவற்றிலும் முதல் உரிமை வேண்டும் என்பதை முன்னாலேயே அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுகிறாள். சம்பாதிக்கும் மருமகளாக இருந்தாலோ கேட்கவே வேண்டாம்....அவள் வைத்ததுதான் சட்டம் என்று நடந்து கொள்வதைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

   இதில் பெற்றோரின் தவறும் உள்ளது. கல்யாணமாகிப் போகும் பெண்ணிடம் 'நீ எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யாதே. அப்பறம் உன் வீட்டார் உன்னை வேலைக்காரி ஆக்கி விடுவார்கள்' என்றும், ' உன் கணவரிடம் பேசி சீக்கிரம் தனிக் குடித்தனம் போய்விடு' என்றும், 'நீ சம்பாதிக்கிறாய்.அங்கு உனக்குத்தான் முதல் உரிமை. உன் உரிமையை விட்டுக் கொடுக்காதே' என்றும் சொல்லிக் கொடுக்கும் பெற்றோரும் இன்று நிறைய பேர்.

   'பெரியவர்களிடம் மரியாதையாக இரு. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.அவர்களை அட்ஜஸ்ட் செய்து வாழ்வதுதான் உனக்கு பெருமை. எந்தக் காரணத்துக்காகவும் புகுந்த வீட்டார் மற்றும் கணவரிடம் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வரக் கூடாது' ....இப்படிச் சொல்லும் பெற்றோர் இருக்கிறார்களா? ஹூஹூம்...சந்தேகமே.
   இன்றைய பெண் தன்னுடைய விருப்பங்களுக்கு மட்டுமே வீட்டில் முதலிடம் தேடுகிறாள். வீட்டின் மற்ற மனிதர்களைப் பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. தன் கணவனைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை நாமும் மதிப்போம், அட்லீஸ்ட் மரியாதையாவது கொடுப்போம் என்று நினைக்காமல் 'இவர்களுக்கு நாம் என்ன அடிமையா?' என்று நினைக்கிறாள். அடுத்தவர் மனம் பற்றியோ, அவர்களின் விருப்பு, வெறுப்புகளையோ புரிந்து கொள்ள சிறிதும் நினைக்காதபோது அங்கே புரிந்துணர்வு எங்கிருந்து வரும்?

   தன்னை கணவன் ஒரு வார்த்தை சொல்லி விட்டாலும் அடுத்த நிமிடம் 'தலாக்'தான்! சுய சம்பாத்தியம் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தருவதைவிட சற்று அதிகமான அகந்தையையும், ஆணவத்தையும் தருகிறதோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.

   இன்றைய பெண்கள் திருமணத்திற்கு தயார் என்று சொல்லும்போதே, தங்களின் கண்டிஷன்களையும் பட்டியல் போட்டு சொல்லி விடுவதாக பலர் சொல்கிறார்கள்.பெற்றோர்கள் உடன் இருக்கக் கூடாது, சம்பளப் பணத்தை என் பிறந்த வீட்டுக்குத்தான் கொடுப்பேன், நான் செய்யும் எதையும் சரியில்லை என்று சொல்லக் கூடாது, முக்கியமாக யாரும் அட்வைஸ் பண்ணக் கூடாது!

   continued...

   நீக்கு
  3. 'ஒரே பிள்ளையைப் பெற்று அவனே உலகம் என்று வாழும் நாங்கள் எங்கே போவது?' என்று மனம் கலங்கிய பெற்றோர்களை நான் பார்த்ததுண்டு.

   சில ஸ்மார்ட்டான பெற்றோர்களோ இது மாதிரி கண்டிஷன்களைக் கேட்டு 'அதற்கென்ன? என் பிள்ளை அவளுடன் தனியாகவே இருக்கட்டும். எங்களுக்கு ஒன்றும் ப்ராப்ளம் இல்லை' என்று சொல்லிவிடுவதாக ஒரு பெண்கள் இதழில் படித்தேன்.

   கூட்டுக் குடும்பமானால் இருவரும் வேலைக்குப் போய்விட்டால் தாம்தானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். குழந்தை பிறந்து விட்டாலோ முழு நேர கேர்-டேக்கர் வேலை. இந்த கஷ்டமெல்லாம் இல்லாமல், நம்ம தனியாக இருந்தோமா, ஏதோ சமைத்து சாப்பிட்டோமா, டீவீ பார்த்தோமா, அங்க, இங்க போனோமா என்று சுதந்திரமாக வாழ்வதை விரும்புகிறார்கள். வேலையையும் செய்து விட்டு, அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் யாரும் தயாராக இல்லை.இதை மனதில் வைத்து இந்நாளில் உருவாகும் 'Elder's Home' க் கு இன்று நிறையவே ஆதரவு இருப்பது புரிகிறது.

   எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் மாமியார் காலை முதல் இரவு வரை பேரன், பேத்திகளை அருமையாகப் பார்த்துக் கொள்வார். அவர் குழந்தைகளை வளர்த்தது போதாது என்று வயதான காலத்தில் இந்தப் பொறுப்பு. ஆனால் அவரின் மருமகளோ எல்லார் எதிரிலும் மாமியாரை அதிகாரமாய்ப் பேசும்போது பார்க்கவே பாவமாக இருக்கும். 'என்ன சொன்னா என்ன? நம்ம குழந்தைகள்தான?' என்று அவர் சொன்னாலும் அதனுள் இருக்கும் வலி எவ்வளவு பெரியது என்பதை அவர் முகமே காட்டி விடும். இதில் புரிந்து கொள்ளல் எங்கே இருக்கிறது?


   குழந்தைகள் பெரியவர்களாகி பொறுப்பேற்றதும் அக்காலத்தில் பெரியவர்கள் 'வானப்ரஸ்தம்' செல்வார்களாம். இந்நாளில் அதற்கு பதிலாகத்தான் இந்த Elder's Home' என்று வைத்துக் கொள்ளலாம்.

   இன்றைய காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது, அவர்களை அனுசரித்துப் போக முடியாது என்பதால்தான் தனிக் குடித்தனத்தில் வாழ விரும்பும் இளைஞர்கள், பொறுப்புகள் பெருகும்போது வழிகாட்டுவோர் இல்லாமல், கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு, ஒரு நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்வது அதிகமாகிக் கொண்டு வருகிறது. இது அவர்களின் குழந்தைகளையும் அன்றோ பாதிக்கிறது.

   இதைத்தான் அன்றே சம்சாரம் அது மின்சாரத்தில் காட்டினார் விசு. வீட்டுக்கு லேட்டாக வரும் மருமகளை மாமனாரும், கணவரும் எதுவும் கேட்கக் கூடாது என்று சொன்ன விசுவின் மகளிடம் மனோரமா விவாகரத்து செய்துவிடு என்கிறபோது அவள் தன கணவனோடு சேர்ந்து வாழ விரும்புவதாகக் காண்பிப்பார் விசு.அது 19ம் நூற்றாண்டு!

   இன்றோ யாருடைய ஆலோசனையும் கேட்காமல் 'எனக்கும், என் கணவருக்கும் ஒத்து வரவில்லை. தனியாக வாழ என்னால் முடியும்' என்று வந்து விடுகிறாள் இந்த 20ம் நூற்றாண்டுப் பெண்.

   இது பெண் சுதந்திரத்தின் முன்னேற்றமா....புரியவில்லை.ஆனால் மொத்தத்தில் ஒருவருக்குள்ளும் புரிதல் இல்லை. இனி கூட்டுக் குடும்பங்கள் பெருகவும் வாய்ப்பே இல்லை.

   பெண்களைப் போன்றே ஆண்களுக்கும் இருக்கும் ஈகோதான் பல இளம் தம்பதியினரை விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது. கவுன்சிலிங் என்ற முறையில் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் காது கொடுத்துக் கூட கேட்காமல் பிரிந்து வாழும் தம்பதிகள் பலர்.

   இவர்களால் இவர்களைப் பெற்றவர்களுக்கும் மனக் கஷ்டம்; இவர்கள் பெற்ற குழந்தைகளும் குழம்பிப் போய் நிலை தடுமாறி நிற்கிறார்கள்.

   அல்லது இப்படியான புரிந்துணர்வு கொள்ளாமைகளே தம்பதிகளின் இன்றைய சந்தோஷ வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கின்றனவோ?..

   ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத வாழ்க்கையில் சந்தோஷத்துக்கு இடம் ஏது? ஒருவேளை திருமண பந்தம் இன்றி இருவரும் Living Together என்று வாழ்ந்து விட்டு, உன் விருப்பம் உன்னோடு....என் விருப்பம் என்னோடு என்று என்றைக்கு வேண்டுமானாலும், விருப்பம் குறையும்போதோ, வாழ்க்கை போரடிக்கும்போதோ பை...பை..சொல்லி விட்டுப் போவதிலும் ஒரு சந்தோஷம் இருக்குமோ, என்னவோ? போன தலைமுறையினரால் இவற்றை எண்ணிப் பார்க்கவும் முடியாது;ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

   நம் திருமணங்களில் ஏழு அடிகள் வைத்து சொல்லப்படும் சப்தபதி மந்திரம் இருவரும் ஒருவரை ஒருவர் அன்பினால் பிணைத்து, விட்டுக் கொடுத்து, மனத்தாலும், உடலாலும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை உன்னதமாக உணர்த்துகிறது.சந்தோஷ வாழ்க்கையின் அடித்தளங்கள் இந்த ஏழு அடிகளுக்காக சொல்லப்படும் மந்திரங்களே. அதனைப் புரிந்து கொண்டு அன்புடன் இணைந்து தம்பதிகள் வாழ்ந்தாலே வாழ்வு சீரும், சிறப்பும் பெறும்.


   நீக்கு
  4. அன்புள்ள ராதாபாலு மேடம். அருமையாக எழுதித்தள்ளி விட்டீர்கள். பொறுமையாக நானும் படித்தேன். பலவிஷயங்களில் நானும் உங்களுடன் ஒத்துப்போகிறேன்.

   ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு மனித மனங்களும் ஒவ்வொருவிதமாகவே உள்ளன. இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக அவ்வளவு எளிதாகத் தீர்வு காணவே முடியாது.

   சம்சாரம் அது மின்சாரம் படத்தில், கடைசியில் லக்ஷ்மி பேசுவாளே, அதுதான் உண்மை. சேர்ந்து கூட்டுக்குடும்பமாக இருக்க முடிந்தால் இருக்கலாம், நல்லதே.

   முடியாதுபோனால் பிரிந்துபோவதே அதைவிட நல்லது என்பேன். ஏதாவது ஒரு விழாவின் போது சந்தித்துக்கொண்டு, நீ செளக்யமா? நான் செளக்யமே எனச்சொல்லிச் செல்வதே மேல்.

   வயசான காலத்தில் பேரன் பேத்திகளை எவ்வளவு நாழி பார்த்துக்கொள்ள முடியும்? ஏதோ ஒரு அரை மணி அல்லது ஒரு மணி கொஞ்சலாம், விளையாட்டுக் காட்டலாம். இந்தக்காலக் குழந்தைகளை அதற்கு மேலே பார்த்துக்கொள்வதெல்லாம் நடக்காத காரியமே.

   கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும், காசு சேர்க்க வேண்டும், கார், பங்களா வாங்க வேண்டும் எனப் பேயாக அலைவதுதான் அத்தனைக்கும் மூலகாரணமே. இதை நாம் சொன்னால் யாரும் இன்று காதில் வாங்கிக்கொள்ளப்போவது இல்லை.

   பணம் பணம் பணம் என்று தினமும் அலைந்து அலைந்து அலைந்து கடைசியில் தங்கள் உடலையும், உள்ளத்தையும், நல்ல உறவுகளையும், பிள்ளைப் பாசத்தையும் இழக்கிறார்கள் என்பதே இதில் உள்ள முக்கியமான விஷயம்.

   யாருக்கும் போதும் என்ற மனமே கிடையாது. வரவுக்குள் செலவும் கிடையாது. எல்லா லெவலிலும் பற்றாக்குறை தான்.

   பெண்கள் நன்றாகப்படிக்கட்டும். அந்த தன் படிப்பினை தங்கள் குழந்தைகளுக்கு வாரி வழங்கட்டும்.

   வேலைக்குப் போய் சம்பாதித்துத்தான் ஆக வேண்டுமோ? பிரச்சனைகளின் ஆணி வேரே இங்கு தான் உள்ளது. ஒருசிலருக்கு அவசியமான நிர்பந்தம் இருந்தால் வேலைக்குச் செல்லலாம்.

   குடும்பமா? உத்யோகமா? என்பதை முதலில் அவரவர்கள் தான், தங்களின் மற்ற தேவைகளை உத்தேசித்துத் தீர்மானிக்க வேண்டும்.

   நீக்கு
  5. திரு கோபு சார்...என்னுடைய நீ....ண்ட பதிவைப் படித்து உடன் பதிலும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.'பெண்களுக்கு 'குடும்பமா?உத்தியோகமா?' அடுத்த டாப்பிக்கை ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள்! இரண்டு நாள் வெளியூர் பயணம்....போய்விட்டு வந்து எழுதுகிறேன்!.

   நீக்கு
  6. மதிப்பிற்குரிய ராதா பாலு அவர்களுக்கு,

   இந்த பகுதியில் ஏதோ சிக்கல் இருக்கிறது. பின்னூட்டங்கள் சரிவர ஏற்கப்படுவதில்லை. இருமுறை முயற்சி செய்தும் அதான் நிலை.

   என் 'பூவனம்' தளத்தில் 'குடும்ப நலம்' என்று ஒரு பகுதி ஆரம்பிப்பதாக இருக்கிறேன். அங்கு இந்த மாதிரி விஷயங்களை அலசலாம்.

   தவறாது வருகை தந்து கலந்து கொள்ள வேண்டும்..

   நீக்கு
 7. முதல் பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி கலையரசி மற்றும் திருமதி ராஜராஜேஸ்வரிக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி இராதா! புரிந்துணர்வு ஏற்படாமல் தடுக்கும் காரணிகளைப் பற்றி மிக விரிவாய் எழுதியுள்ளமைக்குப் பாராட்டுக்கள்!

   நீக்கு
 8. முதல் பரிசினை வென்றுள்ள இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. முதல் பரிசு வென்ற
  திருமதி கலையரசி மற்றும்
  திருமதி இராஜ ராஜேஸ்வரி இருவருக்கும்
  வாழ்த்துகள்.
  (இரு தினங்களுக்கு முன்பே பின்னூட்டமிட்டேன்;
  போய் சேரவில்லையோ, தெரியவில்லை???!)

  பதிலளிநீக்கு
 10. திருமதி இராதா பாலு அவர்கள் கூட்டுக் குடும்பம், அதன் நன்மைகள், குறைகள் அனைத்தையும் அலசி, தனது அனுபவத்தையும் எடுத்துக்காட்டாய் இணைத்து விரிவாய் தனது கருத்தை, அழகாய்
  சொன்னார்கள். அருமை!

  பதிலளிநீக்கு
 11. மதிப்பிற்குரிய இராதா பாலு அவர்களுக்கு,

  பொறுமையாய் மிக நீண்ட விளக்கங்களைக் கொடுத்திருப்பது தங்களின் சமூக அக்கறையைக் காட்டுகிறது. நிதானமாக எல்லாவற்றையும் படித்தேன். உண்மை தான். தீர்வு தான் தெரியவில்லை.

  பல குடும்பங்களில் 'ஏதோ நேர்ந்து விட்டது, என்ன செய்வது?'
  என்கிற விதத்தில் பொத்தாம் போக்காய் யாருக்கும் நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை தான் ஓடிக் கொண்டிருக்கும் அளவுக்கு
  இன்றைய வாழ்க்கை முறை அமைந்து போய்விட்டது தான் பரிதாபம். வெறும் ஈகோ தானா இதற்கான காரணம்?.. ஈகோவை விட்டொழிப்பது என்ன அவ்வளவு சிரமமான ஒன்றா?.. அப்படியானால் எந்த ஈகோவையும் விட்டுவிடாமல் தீர்வு காண ஏதானும் வழியுண்டோ?..

  திருமணத்திற்கு முன்பே 'நான் இப்படித் தான் இருப்பேன்; என் விருப்பங்கள் இது இதெல்லாம். உங்களுக்கு இஷ்டமிருந்தால் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்' என்று மணப்பெண்கள் தெளிவாக சம்பந்தம் பேச வந்தவர்களிடம் சொல்லி விட்டால்
  பின்னால் வரக்கூடிய இருவருக்குமான பல சங்கடங்களுக்கு
  தீர்வாய் அமையும் என்று நினைக்கிறேன்.

  முக்கியமாக இந்த வெளிப்படையான பேச்சுக்கு பெண்ணைப் பெற்ற தாய் தான் இடையூறாக இருப்பார்கள் என்று தெரிகிறது. எப்படியானும் பெண் இன்னொரு வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தால் சரி; போய் விட்டாளானால் அவளுக்கு இருக்கும் சாமர்த்தியத்திற்கு அங்கு போய் பார்த்துக் கொள்வாள்' என்று நினைக்கும் போக்கு இல்லாமல் இருந்தால் பின்னால் நேரும் பல மன சங்கடங்களுக்கு தீர்வு காணலாமோ என்று ஒரு நப்பாசை.

  திருமணத்திற்கு முன்பே, ஆண்-பெண் (ஆணைப் பெற்றவர்கள், பெண்ணைப் பெற்றவர்கள் அருகிலிருக்க) இதற்கெல்லாம் ஒரு முன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், வாழ்க்கை ஒப்பந்தம் ஓரளவு ஓ.கே. ஆகலாம் போலிருக்கு.

  ஜாதகம் பார்ப்பதை விட (இருவருக்கும் பொருத்தம் பார்ப்பது தான் ஜாதகம் எனில்) திருமணத்திற்கு முன்பே இதையெல்லாம்
  மனம் விட்டு இரு குடும்ப உறுப்பினர்களும் பேசி முடிவெடுப்பது சாலச் சிறந்ததாகத் தெரிகிறது.

  பல விஷயங்களுக்கு முன் கூட்டியே முடிவெடுப்பது இயலாது தான். இருப்பினும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் அடிப்படை உணர்வுக் கோளாறுகளைப் புரிந்து கொண்டபின்
  நடக்கும் திருமணம் என்பது ஓரளவு எதிர்பார்ப்புகளோடு இருக்கும் இல்லையா?

  குறைந்த பட்சம் திருமணத்திற்குப் பிறகு ஆணோ, பெண்ணோ ஒருவருக்கொருவர் தங்கள் நடவடிக்கைகளால் அதிர்ச்சி தராமல் இருக்கலாம். பெண்ணின், ஆணின் குணநலன்கள் அவர்களைப் பெற்றவர்களுக்கும் தெரிந்து விடுவதால் அவர்களும் பின்னால் தங்கள் ஈகோவைக் காட்டாமலாவது இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
  .
  மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 12. 'பெண்கள் உத்தியோகம் பார்ப்பது தான் பிரச்னையின் ஆணிவேர்' என்று கோபு சார் சொல்வது எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கிறது.

  இன்றைய பொருளாதார கஷ்டத்தில் படித்த பெண்கள் வீட்டில்
  முடங்காமல் தாங்கள் கல்வி கற்றதின் வெளிப்பாடாய் வேலைக்கு போவது மிகச் சிறந்த ஏற்பாடாய் நான் கருதுகிறேன்.

  வேலைக்குப் போவதால் உலகம் பற்றிய விசாலமான பார்வை அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலைக்குப் போய் சம்பாதித்து வரும் பெண்களுக்கு ஒத்தாசையாக இருப்பது மாமியார்-மாமனாரின் கடமை. அவர்கள் தங்களுக்கான இந்தக் கடமையைச் செய்தால் பெண் உள்ளம் குளிர்ந்து தன் அன்பை ஒட்டு மொத்த குடும்பத்தின் மீது வர்ஷிப்பாள். படித்த பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் முடங்குவது தான் இந்த
  ஈகோக்களுக்கான ஆணி வேர் என்று என் எண்ணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்கள் உத்தியோகம் பார்ப்பது தான் பிரச்சினையின் ஆணிவேர் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை.

   வெறும் பொருளாதாரப் பிரச்சினைக்காக மட்டும் பெண்கள் இப்போது வேலைக்குச் செல்வதில்லை. இன்று மிகப் பெரிய கம்பெனிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்கள் தலைவர்களாக அமர்ந்து அவற்றைத் திறம்பட வழிநடத்திச்செல்கிறார்கள்.

   எடுத்துக்காட்டாக இருநூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா என்பவர். நாட்டின் மிகப்பெரும் வங்கியின் சேர்மன் பதவியில் அமர்ந்து வங்கியைத் திறம்பட வழிநடத்திச் செல்கிறார்.

   இவரைப் போல் பெண்கள் பலர் மிக உயரிய பதவிகளில் அமர்ந்து, அவர்கள் சார்ந்த கார்பரேட் நிறுவனங்களுக்கும் நாட்டுக்கும் அளப்பறிய சேவை செய்கிறார்கள். அவர்களை வேலைக்குச் செல்லவிடாமல் தடுத்து வீட்டுக்குள் முடக்கியிருந்தால், அவர்கள் கல்வியும், திறமையும் செயல்திறனும் இந்தச் சமுதாயத்துக்குப் பயன்படாமல் போயிருக்கும்.

   வேலைக்குச் சென்ற பின்னர், பெண்களின் அறிவு விசாலமாயிருக்கிறது; சொந்தக் காலில் நிற்பதால் பிரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்பது என் கருத்து.

   நீக்கு
  2. இந்த சிறுகதையைப் படித்து பாருங்கள்:

   http://jeeveesblog.blogspot.com/2008/02/blog-post.html

   நீக்கு
 13. ஜீவி October 30, 2014 at 12:24 AM

  //வேலைக்குப் போய் சம்பாதித்து வரும் பெண்களுக்கு ஒத்தாசையாக இருப்பது மாமியார்-மாமனாரின் கடமை. //

  கடமையா ???????? ஐயோ பாவம்.

  இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலாது. என்னால் மட்டுமல்ல பெரும்பாலான மாமியார்-மாமனார்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

  அவர்களில் ஒருசிலர் தங்களின் தலையெழுத்தே என வேண்டுமானால் நினைத்துக்கொண்டு செய்யலாம், அதுவும் சரீரத்தில் தெம்பு உள்ள அப்பாவிகள் சிலர் மட்டுமே.

  //அவர்கள் தங்களுக்கான இந்தக் கடமையைச் செய்தால் பெண் உள்ளம் குளிர்ந்து தன் அன்பை ஒட்டு மொத்த குடும்பத்தின் மீது வர்ஷிப்பாள். //

  நன்னா வரிஷிப்பாள். வர்ஷிப்பதுபோல நடிப்பாள். ஐஸாகத் தானும் உருகி, தன் பேச்சுச்சாமர்த்தியத்தால் நைஸாக அனைத்து வேலைகளையும் நன்றாக சக்கையாகப் பிழிந்து வாங்கிக்கொள்வாள்.

  உள்ளூர சம்பளமில்லாத, போக்கிடமில்லாத, பொறுப்பான [கொத்தடிமை போன்ற] வேலையாள் கிடைத்துள்ளனரே என்று அகம் மகிழ்ந்து போவாள்.

  உள்ளம் குளிர்ந்து தன் அன்பை ஒட்டு மொத்த குடும்பத்தின் மீது வர்ஷிப்பதுபோல ஜோராகவே நடிக்கவும் செய்வாள்.

  ஏனெனில் சம்பளத்திற்கு ஆள் வைத்தால் கட்டுப்படியாகாது. அவர்கள் திருப்தியாக வேலையும் செய்ய மாட்டார்கள். சட்டம் பேசுவார்கள். அடிக்கடி லீவு போடுவார்கள். அவர்களில் பலர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் இவர்கள் அதிகாரமெல்லாம் ஓரளவுக்கு மேல் செல்லுபடியாகாது.

  கிழங்கள் தெம்பு இல்லாமல் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையானால், இவள் அவர்கள் மேல் அன்பை வர்ஷிக்கும் வண்டவாளம் நன்றாகவே தெரியவரும்.

  வரவு நல்ல உறவு, குடும்பம் ஒரு கதம்பம் போன்ற விசுவின் அனைத்துப்படங்களையும் தயவுசெய்து அனைவரும் பாருங்கோ.

  பதிலளிநீக்கு
 14. சினிமா வேறு நிதர்சன வாழ்வை எதிர்கொள்ளும் வாழ்க்கை வேறு இல்லையா, கோபு சார்?.
  .
  படித்த பெண்கள் அந்த படிப்பின் பயனாய் வடிகாலாய் வேலைக்குப் போவது குடும்ப ஓட்டத்திற்கே நல்லது தானே கோபு சார்?..

  வீட்டில் முடங்காமல் அலுவலக, வெளிப்பிரச்னைகளை எதிர்கொள்வது, தீர்வு காண்பது, அதனால் அறிவு பெறுவது
  இத்தனையும் அவர்கள் மனசிற்கு முடங்கிப் போகாமல் சந்துஷ்டி அளிக்கும் செயல்கள் இல்லையா, கோபு சார்?..

  வீட்டிற்கே பெரியவர்களாய் இளசுகளுக்கு ஆதரவாய் இருக்க
  வேண்டியவர்கள் மூன்றாம் மனிதர்கள் போல் தாங்களே பொறுப்புகளிலிருந்து விலகுவது அவர்களுக்கிடையான
  அன்பை வளர்க்காதில்லையா?..

  இன்னொரு வீட்டில் வளர்ந்த ஒரு பெண் இந்த அன்பும், அனுசரணையும் இல்லையென்றால் திடீரென்று எப்படித் தான்
  புகுந்த வீட்டில் ஒட்டிப் பழகுவாள் என்று எதிர்பார்ப்பது கோபு சார்?..

  அன்பு என்பது கொடுத்துப் பெறுவது தானே?.. அவளும் யார்?
  பெற்ற மகனின் வாழ்க்கைத் துணைவி தானே?.. வரப்போகும்
  பேரக்குழந்தைகளின் தாய் தானே?..

  வயதான பெரியவர்களுக்கு முடியாது என்றால் சமையல் வேலைகளுக்கு ஆள் வைத்துக் கொள்ளலாமில்லையா?

  அவர்கள் இல்லாத போது, வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கு மட்டும் பெரியவர்கள். அது போதும். வாழ்க்கை பிரமாதமாக இருக்கும்.

  பின்னூட்டங்களில் பேசினால் அது ஏதோ ஒருவருக்கு ஒருவர் பேசுவது போல இருக்கும். பொதுபிரச்னைகளுக்கு அதற்காக தனியே பதிவு போட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால்
  ஒரு சமூக பிரச்னையை கையாண்ட திருப்தி ஏற்படும்.

  இந்த போட்டி விஷயங்கள் நிறைவுறட்டும். அப்புறம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

  அன்புடன்,
  ஜீவி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி October 31, 2014 at 2:33 AM

   //சினிமா வேறு நிதர்சன வாழ்வை எதிர்கொள்ளும் வாழ்க்கை வேறு இல்லையா, கோபு சார்?.//

   நிச்சயமாக இதுவேறு அது வேறு தான். ஒத்துக்கொள்கிறேன்.

   ஆனால் இந்த விசுவின் படமான ‘வரவு நல்ல உறவு’ சொல்லாத விஷயங்களோ, நிதர்சன உண்மைகளோ உலகில் எதுவுமே கிடையாது என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்.

   அந்தப்படத்தினை பலமுறை நான் பார்த்து வியந்துபோய் உள்ளேன். என்னுள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள படம் அது.

   பார்க்காதவர்கள் அவசியமாகப் பார்க்க வேண்டியதோர் மிக அருமையான படம் அது. விசுவின் படங்களில் பெரும்பாலானவை, உலகில் பலவீடுகளில் நடக்கும் மிகச் சாதாரண விஷயங்கள் மட்டுமே என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

   என் அலுவலகத்தில் 10000க்கும் மேல் 15000 ஊழியர்கள் வரை வேலை பார்த்து வந்தனர். ரிடயர்மெண்ட்க்கு ஓராண்டுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களைமட்டும் கூட்டி, ரிடயர்மெண்டை மனதளவில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என மிகப்பெரிய லெக்சர் கொடுப்பார்கள். அந்த மீட்டிங் 2-3 நாட்களுக்கு நடைபெறும். எனக்கும் இதே லெக்சரைக் கொடுத்துள்ளார்கள்.

   அப்போது என்னையும் கருத்தளிக்கச்சொல்லி அதிகாரிகள் அழைத்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன்: ”ஐயா இதுபோல ஓராண்டுக்கு முன்பு மீட்டிங் போட்டு செய்வது நல்லது தான். இருப்பினும் ரிடயர்மெண்டின் போது FINAL SETTLEMENT தொகைகளை ஊழியர்களுக்கு அளிக்கும் முன்பு ’விசு’வின், ’வரவு நல்ல உறவு’ என்ற சினிமாப் படத்தையும் நம் ஊழியர்களுக்குப் போட்டுக்காட்டிவிட்டு, அவர்கள் அதைப்பார்த்தபின் மட்டுமே, FINAL SETTLEMENT பணம் அளிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்துக்கொண்டு, அதை தயவுசெய்து EXECUTIVE DIRECTOR அவர்களிடம் சொல்லி நடைமுறைப் படுத்துங்கள். அப்போது தான் தாங்கள் சொல்ல வந்த விஷயங்கள் மிகச்சரியாக ஊழியர்களின் மனதில் மிகச்சரியான நேரத்தில் பதியக்கூடும்” என்று சொன்னேன்.

   இதையே எழுத்து மூலமாகவும் SUGGESTION SCHEME இல் என் ஆலோசனையாகப் பதிவு செய்து நிர்வாகத்தின் மேல் மட்டத்துக்கும் அன்று அனுப்பி வைத்துள்ளேன்.

   / தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது , மேலும் தங்களின் கேள்விகள் ஒவ்வொன்றுக்காக பதில் அளிப்பேன் ..... இப்போது ‘தொடரும்’ போட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். கண்கள் கோஜா வாங்குகின்றன. இனிமேல்தான் நான் 30ம் தேதிக்கணக்குக்கு தூங்கவே ஆரம்பிக்கப்போறேன்.

   இப்போ மணி IST 3.15 AM of 31.10.2014

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 15. ஜீவி October 31, 2014 at 2:33 AM

  //படித்த பெண்கள் அந்த படிப்பின் பயனாய் வடிகாலாய் வேலைக்குப் போவது குடும்ப ஓட்டத்திற்கே நல்லது தானே கோபு சார்?.. //

  நிச்சயமாக ..... ஆரம்பத்தில் குடும்ப ஓட்டத்திற்கே நல்லதாக இருப்பதுதான் .... நாளடைவில் குடும்பத்தைவிட்டு ஓடுவதற்கும் வழிவகுக்கிறது .... துணிச்சலை அளிக்கிறது.

  நான் எல்லோரையும் பொதுவாகச் சொல்லவில்லை. ஆங்காங்கே நடைபெற்றுள்ள ... என் கண்ணால் கண்டுள்ள, காதால் கேட்டுள்ள, செய்தித்தாள்களில் படித்துள்ள ஒருசில கசப்பான சம்பவங்களால் மனம் கலங்கி வெறுத்துப்போய்ச் சொல்கிறேன்.

  பொதுவாக எல்லோருமே நல்லவர்கள் தான் .... அவர்களில் சிலருக்கு இவ்விதமான அசட்டுத் துணிச்சலைக்கொடுக்க வேலைக்குச்செல்வது என்பது வடிகாலாய் அமைந்து விடுகிறது என்பதே நான் இதில் சற்றே வருத்தத்துடன் சொல்ல வருவதாகும்.

  இதில் அவர்களின் படிப்பறிவு என்பது சரியான முறையில் அவர்களை வழிநடத்தும் படிப்பாக ஒருவேளை இல்லையோ எனவும் எனக்கு நினைக்கத்தோன்றுகிறது.

  //இந்த போட்டி விஷயங்கள் நிறைவுறட்டும். அப்புறம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.//

  தங்களின் மற்ற ஆதங்கமான கேள்விகளுக்கான என் பதில்கள், தங்களின் விருப்பப்படியே, இந்த நம் போட்டிகள் முற்றிலும் முடிந்தபிறகே தொடரும்.

  பிரியமுள்ள கோபு

  >>>>>

  பதிலளிநீக்கு
 16. // கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும், காசு சேர்க்க வேண்டும், கார், பங்களா வாங்க வேண்டும் எனப் பேயாக அலைவதுதான் அத்தனைக்கும் மூலகாரணமே. இதை நாம் சொன்னால் யாரும் இன்று காதில் வாங்கிக்கொள்ளப்போவது இல்லை. //
  நூற்றுக்கு நூறு உண்மை.

  //பணம் பணம் பணம் என்று தினமும் அலைந்து அலைந்து அலைந்து கடைசியில் தங்கள் உடலையும், உள்ளத்தையும், நல்ல உறவுகளையும், பிள்ளைப் பாசத்தையும் இழக்கிறார்கள் என்பதே இதில் உள்ள முக்கியமான விஷயம்.//

  ஆஹா, எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்!

  //யாருக்கும் போதும் என்ற மனமே கிடையாது. வரவுக்குள் செலவும் கிடையாது. எல்லா லெவலிலும் பற்றாக்குறை தான். //

  ஆமாம்.

  //பெண்கள் நன்றாகப்படிக்கட்டும். அந்த தன் படிப்பினை தங்கள் குழந்தைகளுக்கு வாரி வழங்கட்டும். //

  மிகச் சரியே.

  //வேலைக்குப் போய் சம்பாதித்துத்தான் ஆக வேண்டுமோ? பிரச்சனைகளின் ஆணி வேரே இங்கு தான் உள்ளது. ஒருசிலருக்கு அவசியமான நிர்பந்தம் இருந்தால் வேலைக்குச் செல்லலாம். //

  இதுவும் சரியானதே.

  //குடும்பமா? உத்யோகமா? என்பதை முதலில் அவரவர்கள் தான், தங்களின் மற்ற தேவைகளை உத்தேசித்துத் தீர்மானிக்க வேண்டும்.//

  சம்பந்தப்பட்ட கணவனும், மனைவியுமாகப் பேசித் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்கு இவ்வளவு தான். பின்னால் வருகிறேன். இப்போ நேரமில்லை. என் சொந்த அனுபவமே நிறைய இருக்கு இதிலே. எல்லாவற்றையும் சொன்னால் இப்போது வரும் சீரியல்கள் எல்லாம் ஒண்ணுமே இல்லைனு ஆகி விடும். :)))

  பதிலளிநீக்கு
 17. முதல் பரிசு வென்ற
  திருமதி கலையரசி மற்றும்
  திருமதி இராஜ ராஜேஸ்வரி இருவருக்கும்
  என் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. பரிசு வென்ற திருமதிகள் இராஜராஜேஸ்வரி மேடம் கலையரசிக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. முதல் பரிசு வென்ற திருமதி கலையரசி அவர்களுக்கும்,
  திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும்
  என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திருமதி கலயரசி அவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. இப்புடி அக்கு வேற ஆணி வேறயா அலசி தொவச்சு காயப்போட்டபின்னால நான் என்னா சொல்றது. வெற்றிபெற்ற சகோதரியருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. தெள்ளிய விமர்சனம்! வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு