About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, October 13, 2014

இப்பொழுது திருப்தியா கோபு சார்?..


 VGK-37  
 சிறப்பு விமர்சனம்   

எங்கெங்கும்... 
எப்போதும்... 
என்னோடு... !

கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/09/vgk-37.html

விமர்சனதாரர்கள் யாருடனும் 
போட்டி போடாததோர் விமர்சனம் !

விலைமதிப்பிட முடியாத 
அரிய பெரிய பொக்கிஷங்களை 
PRICELESS எனச்சொல்வார்கள்.

அதுபோல இந்த அழகிய 
விமர்சனத்தை
PRIZELESS  
என நாமும் சொல்வோமா ?

அன்புடன் கோபு [VGK]






இப்பொழுது திருப்தியா கோபு சார்?..


ரு வரிக் கதையை ஊதிப் பெரிதாக்குவது என்பது  கதாசிரியருக்கு கைவந்த கலை.

பல கதைகளில் அந்த ஒரு வரி ஒப்பற்ற வரியாக இருக்கும்.  இருந்தாலும் ஊதிப் பெரிதாக்கும் இடிபாடுகளுக்கிடையே அந்த ஒரு வரி சிக்கி அமுங்கிக் கிடக்கும்.  கதையை வாசிக்கும் வாக்கில் அந்த வைர வரியை லேசில் கண்டு கொள்ள முடியாது. ஆனால் அது எப்படியோ தெரியவில்லை, கதையில் இவராகச் சொல்லித் தெரிய வைக்க மாட்டாரே தவிர அந்த அவசியமில்லாமலேயே கதையின் முடிவில் கதையின் ஜீவனான அந்த வைர வரியை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  இது தான் கதைகள் எழுதுவதில் இவரின் சாமர்த்தியம்.   


இந்தக் கதையிலும் அப்படித்தான்.  


கதைக்கான ஆரம்ப வரியை இங்கே ஆரம்பிக்கலாம் என்று குத்து மதிப்பாக ஓரிடத்தில் கதையை ஆரம்பித்து விடுகிறார்.  அவ்வளவு தான்; லகான் இழந்த குதிரை போல எழுதுவதெல்லாம் எழுத எடுத்துக் கொண்ட கதையில் நுழைந்து கொண்டு மனம் போன  போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.
   

இந்தக் கதையில் கூட அப்படித்தான்; கதையின் நாயகனாக தன்னை வரித்துக் கொண்ட கதாசிரியரின் 'தன்னை'ப் பற்றிய வர்ணனைகளே கதையின்  ஆரம்பப் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விடுகிறது.   மருத்துவரின்  பரிந்துரைப்படி நடைப்பயிற்சிக்கான காரணம், தன் உடல் எடை மிகவும் அதிகம் என்று சொல்ல ஆரம்பித்தவர், அரிசி சாத சாப்பாட்டை விட  டிபன் ஐட்டங்களிலும் நொறுக்குத் தீனியிலும் தனக்கு விருப்பம்  அதிகம் என்று சொல்ல வந்ததோடு விட்டிருக்கலாம். என்னன்ன தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அடுக்க ஆரம்பித்து ஒவ்வொன்றாக பட்டியலிடும்  பொழுது--- சேவை (இடியாப்பம்) தட்டை (எள்ளடை) என்று அடைப்புக்குறிக்குள் அடைத்து வேறே--  இவரது பட்டியலுக்கும் இந்த கதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைப்பு நீடித்தால் ஏமாந்து போக வேண்டியது தான்.   கதாசிரியருக்கும் வாசிப்போருக்கு இந்தப் பட்டியலைத் தெரிவிப்பது தான் கதையை ஆரம்பித்த ஜோரில் கதையம்சத்தை விட முக்கியமாகிப் போவது தான் கதை பிதுங்கக் காரணமாகிறது.

'சிறுகதையில் வார்த்தை சிக்கனம் மிக மிக  முக்கியம்.  எழுதும் ஒவ்வொரு வரியும் அந்த சின்னஞ்சிறு கதையோடு இணைந்து போகும் மாயாஜாலம் இங்கு நிகழ வேண்டும்.  சிலந்தி வலை போல கதையின் மைய வட்டத்தோடு ஒவ்வொரு வரி இழையும் இழுத்துக் கட்டி பின்னப் பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாகி சிறுகதை தன் கட்டுக்கோப்பை நழுவ விட்டுத் தனித்தனியாய்  தொங்கும் உணர்வு வாசகருக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது போய்விடும்'--   என்று இளம் வயதிலிருந்தே கதைகள் எழுதப் பழக நேர்ந்ததினால் கிடைத்த பாடங்கள் இப்பொழுது சரியான நேரத்தில் நினைவுக்கு வருகின்றன..

இப்படியான போக்கில் போகும் கதை இவர் 'வாக்கிங்' என்கிற பெயரில் நடக்க ஆரம்பித்ததும்  தானும் லேசாக நகர ஆரம்பிக்கிறது.  பூட்டிய ஒரு வீட்டுத் திண்ணையில் கைத்தடியுடன் உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவரை இவர் பார்த்தவுடன் இந்தச் சிறுகதையும் இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கக்கிறதோ என்கிற உணர்வையும் ஏற்படுத்துகிறது.  

இவரும் அந்த வீட்டு ஒட்டுத் திண்ணையில் பெரியவரின் பக்கத்தில் கைக்குட்டையால் ஒரு தட்டு தட்டி விட்டு உட்கார்ந்தவுடனேயே கதாசிரியருக்கே வாய்த்த அவரின் யதார்த்த இயல்பான எழுத்து நடை புது ரத்த பாய்ச்சலுடனான துள்ளலில் மிளிர்கிறது.  "நீங்க  பிராமணர் தானே?" என்று அந்த பெரியவர் கேட்க, பாரதியாரின் 'ஜாதிகள் இல்லையடி  பாப்பா'வை இவர் நினைவு கூர்ந்து பெரியவருக்குச் சொல்ல, ஒரு விவகாரக் கதை ஆரம்பித்த ஜோரில் கதை நாணில் பூட்டிய அம்பாகிறது..  

அந்த இடுக்கிலும் இவர் கேட்காமலேயே அந்த 88 வயது பெரியவர் தன் ஜாதியைப்  பற்றிச் சொன்னதாக பட்டும் படாமலும் வரும் ஒரு வரி. அடுத்த நாலைந்து வரிகளுக்குள் இந்த 'பிராமணரா' சொற்பிரயோகமே திரும்பத் திரும்ப வெவ்வேறு விதங்களில் புரண்டு வரும் பொழுது பாரதியாரின் வரிகளைத் தொடர்ந்து வைத்த குறி உற்சாகமூட்டினாலும் கதையம்சத்தை சரியாகக் கொண்டு போக வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பும் கலையம்சமும் அதில் இருக்க வேண்டுமே என்கிற ஆவலும் கிளர்ந்தெழுந்து மனசும் கதையும் ஒன்றில் ஒன்றாகப் படிகின்றன.

மிகச் சரியாக வாய்த்த இந்த சந்தர்ப்பத்தில் தான்  பெரியவர் யார் என்று இவர் தெரிந்து கொள்வதின் மூலமாக அந்தப்  பெரியவரை, பெரியவரின் குடும்ப சூழ்நிலையை  நமக்கும் அறிமுகப்படுத்துகிறார்.  ரோடில் சைக்கிள் ஃப்ரேமில் இளநீர் கட்டிச் செல்லும் வியாபாரியை அழைத்து பெரியவருக்கும் தனக்கும் இளநீர் வெட்டச் சொல்லி வாங்கிய இளநீரை பெரியவர் அருந்துகையில் மனம் மகிழ்கிறார்.  இளநீர் அருந்திய புத்துர்ச்சியில் தன்னை வாஞ்சையுடன் பார்த்த பெரியவரின் கண்களில் தவழ்ந்த நன்றியை மெளன பாஷையாய் சொன்னது அற்புதம்.  இந்த ஒரு காட்சியை இந்தக் கதை முடிந்ததும் நினைத்துப் பார்க்கையில் கண்கள் கலங்குகின்றன. 

வாழ நேர்ந்த வாழ்க்கையில் எதெது எதற்காக நடக்கிறது என்பதே தெரியவில்லை.  தருபவர் யார் பெறுபவர் யார் என்பதே தெரியாத பொழுது எதற்காக பெறுவதும் தருவதும் நிகழ்கின்றன என்பது கூட அவற்றுடனான நமது நேரடி சம்பந்தத்திற்கான தாத்பரியத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியாதபடி நடக்கின்றன.  ஒருகால் பின்னால் நடக்கும் நடப்புகளின் பின்புலமாய் நம்மால் நடந்தவற்றை பொருத்திப் பார்க்கும் சிந்தனை வாய்க்கும் பொழுது அயர்ந்து போய் நெகிழ வேண்டியிருக்கிறது. 

ஒவ்வொன்றும் நடக்க நடக்க உந்தித் தள்ளிய வேகத்தில் அதில் நாம் பங்கு கொள்கிறோம் அல்லது அசட்டையாய் பங்கு  கொள்ளாமல் போகிறோம் என்பதே நமக்கு விதிக்கப்பட்ட வேலையாகிப் போகிறதோ என்கிற எண்ணமே மிஞ்சும் பொழுது யார் யாருக்கெல்லாம் எப்படி எப்படி சந்தர்ப்பங்கள் அமைகின்றன, அவற்றை எந்தளவுக்கு நாம் உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் கொள்ளாமைக்கும் கூட காரணம் இருக்கலாம் என்கிற ரீதியில் சிந்தனை ஓடினால்  அது இதையும் விட பெரும் புதிர்.

இந்தக் கதையில் அந்தப் பெரியவருக்கு இவர் இளநீர் வாங்கி அருந்தக் கொடுத்தது இந்தக் கதையைப் பொருத்த மட்டில் பெரிய விஷயம். ரொம்ப இயல்பாய் அந்தக் காரியம் நடப்பது போலத் தோன்றினாலும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த மனசின் உயர்வைச் சொல்ல வேண்டும். எந்தக் காரணத்திற்காக இந்தக் காரியம் நடந்தது என்கிற நினைப்பைத் தாண்டி நடந்த அந்த காரியம் மிகப்  பெரும் வீச்சை இந்தக் கதையில் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அது நடக்காது போயிருந்தால், அடுத்து வந்த சில நாட்களில் இவர் நினைத்திருந்திருந்தாலும் அப்படி ஒரு காரியம் நிகழ்ந்து இவரும் மகிழ கொடுத்து வைத்திருக்க மாட்டார் என்பதை கொஞ்சமே எண்ணிப் பார்க்க மனம்  துணுக்குறுகிறது.

அடுத்தடுத்து வரும் கதைக்காட்சிகள் கதை நிகழ்வுகளாய் ஊர்ந்த ஒரு மெளன ஊர்வலம்.   வார்த்தைகள் நகர்வில் கதாசிரியரின் நெகிழ்ச்சி நம்மையும் பற்றிக் கொள்கிறது.

பெரியவரின் கைத்தடி இவருக்கு வந்து சேர்ந்த விதம் ரொம்பவும் அர்த்த பூர்வமானது.  நேரடியாக அவரிடமிருந்து இவருக்கு என்று நிகழ்வதற்கு வாய்ப்பு அற்றுப் போகும் போதும் கூட நண்பரின்  நினைவுப் பரிசாக வந்து சேர்கிறது.  இவர் கேட்டு வாங்கியது தான்;  இருப்பினும் அதைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற எண்ணம் அந்த சூழ்நிலையில் மனசில் தோன்றி அந்தப் பெரியவரே கொடுத்த மாதிரி அது வந்து சேர்கிறது என்பது தான் ஆச்சரியம். பெரியவரின் உள்ளங்கை பதிந்த அந்த கைத்தடி இவர் உள்ளங்கை பற்ற. பெரியவரின்  நினைவில் அவரும் தன் கூட நடந்து வருகிறார் என்கிற தோழமை உணர்வில் இவரின் நடைப்பயிற்சிக்கு உந்து சக்தியாக.

யார் வீட்டுத் திண்ணையோ அது!   இந்த இருவரின் முதலும் கடைசியுமான சந்திப்பு அந்த வீட்டுத் திண்ணையில் தான் நிகழ்ந்தது என்பதை வைத்து அர்த்தமுள்ள நிலைக்களனாக அந்தத் திண்ணை இவருக்கும் ஆகிறது.  ஒரு நாளின் சில மணி நேரம் ரொம்பவும் குறைச்சலான நேரம் தான்.  இரண்டு மனம் நெருங்கிக் குதூகலிக்க அந்த குறைந்த நேரமே போதும் போலிருக்கு.   அன்றி ஜென்ம பரியந்த உறவொன்றின் தொடர்புப் பிணைப்போ?.. 88 வயது வரை பார்க்காது திடும்மெனப் பார்த்துப் பேசிக் களித்த சந்தோஷத்தில் இந்த ஒரு சந்திப்புக்காகவே காத்திருந்து அது நிறைவேறிய நிறைவுடன் இந்தப் பிறவி பந்தம் பூர்த்தியாகிப் போய்ச் சேர்ந்த உயிரோ அது?...


இந்த மாதிரியான நினைப்புகள்  கூட ஒரு லெளகீக வாழ்க்கையில் சுவடுகள் பதிக்கலாம்.  நண்பரின் அருகாமையை  மறக்க முடியாமல் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இவர் நண்பரின் வீட்டுக்குச் சென்று நிகழ்வுலகில் அவர் நினைவுகளை மீட்டெடுப்பதாகக் காட்டியிருக்கலாம்; அப்படியான ஒரு தருணத்தில் அந்தப்  பெரியவரின் பேரக் குழந்தைகள் கைத்தடியுடன் இவர் வீட்டு வாசல்புறம்  நிற்பதைப்  பார்த்து, "ஐ, தாத்தா வந்தாச்சு!" என்று மகிழ்வதாகக் காட்டியிருக்கலாம். இவருக்கும் தாத்தா வயசு தான்.  நண்பரின் பேரக்குழந்தைகளுக்கும் தாத்தாவாவது, குழந்தைகளுக்காவது அந்தத் தாத்தாவின் இடத்தை இந்த தாத்தா இட்டு நிரப்புவது, மஹாகவியின் அந்தக் கவிதையை நடைமுறை வாழ்க்கையில் அனுபவித்து மகிழ்ந்த மாதிரியும் இருந்திருக்கும்.


இப்பொழுது இந்தக் கதை எதற்காக எழுதப்பட்டிருக்கலாம் என்பதைப் பார்க்கலாம்..

1. நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தைச் சொல்வதற்கா?

2. பாரதியாரின் கவிதை வரிகளை பிரதானமாக எடுத்துக் கொண்டு அதை நிலைநாட்ட கதையுருவில் மேற்கொண்ட முயற்சியா?

3. முதன் முதலாக சந்தித்து மனம் விட்டுப்  பழகிய நண்பரை அடுத்து வந்த நான்கு நாட்களுக்குள் பறிகொடுத்த அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டதா?

4. வெகு சாதாரணமான பார்வையில் இளநீர் கொடுத்து கைத்தடி பெற்ற கதையா?.


எனக்கென்னவோ அந்த இரண்டாம் கருத்தை விரித்துச் சொல்ல நினைத்தது தான் கதை ரூபம் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது.  'ஜாதிகள் இல்லையடி பாப்பா'   என்கிற பாரதியின்  ஒப்பற்ற வரிகள் இந்தக் கதையில் வந்தது வெறும் பேச்சு சுவாரஸ்யத்திற்காக என்று குறைத்து மதிப்பீடு கொள்ளலாகாது. பாரதியின் இந்த வரிகளைத் தொடர்ந்த இருவரின் கருத்துப் பகிர்தல்கள் இருவரிடையேயான ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட ஆழ்ந்த உணர்வு கலந்த நட்பாக மலர்ந்திருக்கிறது.   இது தான் இந்தக் கதையின் விசேஷம்.  சந்தித்துக் கொண்ட இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவரவர் புரிந்தலுக்கு விட்டு விட்டு கதையில் அவர்கள் பேசிக் களித்ததை ஒளித்து வைத்தது இந்தக் கதையின் உன்னதமான எழுத்துச் சிறப்பு. 

எழுத்தாளனுக்கும் அந்த எழுத்தை அனுபவித்து வாசிக்கும் வாசகனுக்கும் இடையே அந்த எழுத்து விளைவிக்கும் ஸ்தூலமான உறவு சம்பந்தப்பட்ட பிணைப்பொன்று உண்டு.   நேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலவே இங்கும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எழுத்து இணைப்புப் பாலமாக இருந்து வாசகனின் எண்ணங்களோடு  எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கலக்கும்  அற்புத நிகழ்வு ஒன்று இங்கே நிகழ்தலாகிறது. எழுத்தும் வாசிப்பும் என்பது இரு மனம் கலக்கும் வித்தைக் களம்.  இருவர் எண்ணங்களும் மாறுபடும் பொழுது மெளனமாக இங்கு ஒரு யுத்தமும் நிகழலாம். 

எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான்.  இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும்.  வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப்  ப்ரியத்தை தன் எழுத்துக்குப்  பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும்.  எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.


இந்த பரவசம் அல்லது யுத்தம்  தன்னில் விளைந்த நேர்த்தியை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்வதே விமரிசனம் என்று கூடச் சொல்லலாம்.

  
ஜாதியைப் பற்றிச் சொல்லும் பொழுது, 'ஆதியில் இருந்ததல்ல அது, பாதியில் வந்தது' என்பார்கள் பெரியோர்.  கோபு சாரின் இந்த முழுக் கதையையும் படித்து முடிக்கும் பொழுது  பாதியில் வந்ததாயினும் பேராசான் திருவள்ளுவரின் குறள் நெறி நிழலில் அந்த நீதியும் பளிச்சிடும் பொழுது வாழ்க்கையே ரொம்பவும் அர்த்த பூர்வமாகிறது.

அந்தணர் என்போர் அறவோர் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை  பூண்டு ஒழுகலான்.

ஆஹா!  எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு  ஒழுகும் அறவோர் எல்லோருமே அந்தணர் என்று எவ்வளவு விசாலமான விளக்கம்?...

ஓ!  சமூக பழக்க வழக்கங்களின் பின்னணியில் பிராமணர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் அந்தணரான கதையிதுவோ?....


இந்த மாதிரி மன உணர்வுகள் விகசிக்கும் கதைகளுக்கு ஜனரஞ்சகமான சினிமா பாட்டு சாயலில் தலைப்புகளை வைக்காமல் ஆழமான அர்த்தம் ஊடாடிய தலைப்பொன்றை வைத்திருத்திருக்கலாம் என்று நினைப்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.





  



 

    


ரொம்ப  நாட்களாக 'என் கதை ஒன்றிற்கு நீங்களும் விமரிசனம் எழுதித் தர வேண்டும்' என்று கோபு சார் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தார்.


நடுவர் யாரென்று நண்பர்களுக்குத்  தெரியட்டும், அப்புறம்  பார்க்கலாம் என்று நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்.  இப்பொழுது நடுவர் இவரென்று தெரிந்து விட்ட பிறகு மறுபடியும் அந்தக் கோரிக்கை மறக்காமல் அவரிடமிருந்து வெளிப்பட்டது. 

விமர்சனப்  போட்டிக்கான கதை தான் இது.  இருப்பினும் விமரிசகர்கள் மத்தியில் நடுவரின் பார்வையில் இந்தக் கதையை வைப்பதில் தவறில்லை என்கிற காரணத்தினால் கோபு சாரின்  ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.  இந்த மாதிரியான வேறுபட்ட விமரிசனப் பார்வைகள் விமரிசகர்களுக்கும் எவ்விதத்திலாவது உதவியாய் இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.                                                                                          

--- நடுவர்

=============================

    


Respected Dear Sir,

நமஸ்காரங்கள். வணக்கம்.


வழக்கமாக விமர்சகர்களின் விமர்சனங்களைத் தான் நான் தங்களுக்கு அனுப்புவது வழக்கம். இந்தத் தடவை அவற்றை நான் அனுப்பும் முன்பே உங்கள் விமர்சனத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தது மகிழ்ச்சியில் என்னைத் திக்கு முக்காட வைத்தது.

தங்களின் விமர்சனத்தை ரஸித்துப்படித்து மகிழ்ந்து இன்புற்றேன். தன்யனானேன். 

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

நேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலவே இங்கும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எழுத்து இணைப்புப் பாலமாக இருந்து வாசகனின் எண்ணங்களோடு  எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கலக்கும்  அற்புத நிகழ்வு ஒன்று இங்கே நிகழ்தலாகிறது.



எழுத்தும் வாசிப்பும் என்பது இரு மனம் கலக்கும் வித்தைக் களம். இருவர் எண்ணங்களும் மாறுபடும் பொழுது மெளனமாக இங்கு ஒரு யுத்தமும் நிகழலாம். 



எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். 


இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. 


இந்தப் பரவசத்தை வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும்.  வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும்.



 EXACTLY !  :)


இந்த பரவசம் அல்லது யுத்தம்  தன்னில் விளைந்த நேர்த்தியை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்வதே விமரிசனம் என்று கூடச் சொல்லலாம்.


 EXCELLENT NARRATION, Sir !! 

 SIMPLY SUPERB !!!  :) 


குறைகள் + நிறைகள் + மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் என அனைத்தையுமே, கதாசிரியருக்கும், வாசகர்களுக்கும், விமர்சனதாரர்களுக்கும் மனதில் பசுமரத்தாணிபோல பதியுமாறு வெகு அழகோ அழகாகத் தங்களுக்கே உரிய தனிப்பாணியில் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

பிரியமுள்ள கோபு



     


நினைவூட்டுகிறோம்

இந்த வார விமர்சனப்போட்டிக்கான சிறுகதை


’VGK-39 ... மாமியார்’

இணைப்பு:


சிறுகதைக்கான விமர்சனங்கள்
வந்து சேரவேண்டிய இறுதி நாள்

16.10.2014

வரும் வியாழக்கிழமை

இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள் மட்டுமே !

 


போட்டிகளில் கலந்துகொள்ள
இன்னும் தங்களுக்கு 
இரண்டே இரண்டு
வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
என்பது நினைவிருக்கட்டும் !! 


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

38 comments:

  1. /எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். //அருமையாகச் சொல்லியுள்ளார் நடுவர் ஐயா! அவருடைய விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. October 13, 2014 at 7:24 AM

      வாங்கோ .... வணக்கம்.

      //அருமையாகச் சொல்லியுள்ளார் நடுவர் ஐயா! அவருடைய விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது! நன்றி!//

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. - vgk

      Delete
  2. Replies
    1. மன உணர்வுகள் விகசிக்கும் கதைக்கு
      விலைமதிப்பிட முடியாத அரிய பெரிய பொக்கிஷமான விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது! நன்றி!

      Delete
    2. இராஜராஜேஸ்வரி October 13, 2014 at 7:52 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மன உணர்வுகள் விகசிக்கும் கதைக்கு
      விலைமதிப்பிட முடியாத அரிய பெரிய பொக்கிஷமான விமர்சனத்தைப் படிக்கும் பாக்யம் கிடைத்தது மகிழ்வளிக்கிறது! நன்றி!//

      மன உணர்வுகள் விகசிக்கும் கதைக்கு / விமர்சனத்திற்கு
      விலைமதிப்பிட முடியாத அரிய பெரிய பொக்கிஷமான
      கருத்துக்கள் அதிக அளவில் தங்களிடமிருந்து வரும் என நானும் எதிர்பார்த்தேன்.

      VGK

      Delete
  3. ஜீவி சாரின் விமரிசனத்தோடு எல்லாம் ஒப்பிட்டே பார்க்க முடியாது. அருமையாக அனுபவித்து ஒவ்வொரு வார்த்தையையும் எழுதி இருக்கிறார். அதிலும் கதைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்ததும், இது தான் காரணமாக இருக்குமென்று சொன்னதும் மிக நேர்த்தி. நானும் இதைச் சொல்லத் தான் மறைமுகமாக ஜாதியைக் குறித்தும், பாரதியைக் குறித்தும் சொல்கிறார் என்பதை ஊகித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam October 13, 2014 at 9:54 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஜீவி சாரின் விமரிசனத்தோடு எல்லாம் ஒப்பிட்டே பார்க்க முடியாது. அருமையாக அனுபவித்து ஒவ்வொரு வார்த்தையையும் எழுதி இருக்கிறார்.//

      அதானே !

      //அதிலும் கதைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்ததும், இது தான் காரணமாக இருக்குமென்று சொன்னதும் மிக நேர்த்தி.//

      தங்களின் இந்தக்கருத்தும் மிக நேர்த்தியாகவே ........

      //நானும் இதைச் சொல்லத் தான் மறைமுகமாக ஜாதியைக் குறித்தும், பாரதியைக் குறித்தும் சொல்கிறார் என்பதை ஊகித்தேன்.//

      ’நடுவர் யார் ? யூகியுங்கள்’ போட்டியிலேயே, நடுவரையே மிகச்சரியாக யூகித்துப் பரிசுக்குத்தேர்வானவராயிற்றே! இதை யூகித்தது எந்த மூலைக்கு :)))))

      அன்புடன் கோபு

      Delete
  4. எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப் ப்ரியத்தை தன் எழுத்துக்குப் பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும். எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.// நடுவர் பதவிக்கு மிகச் சரியான ... பொருத்தமான .. அற்புதமான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். !

    ReplyDelete
    Replies
    1. ரிஷபன் October 13, 2014 at 1:02 PM

      வாங்கோ, வணக்கம். என் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தங்களின் இன்றைய அபூர்வ வருகை எனக்கு மிக மிக ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

      *****எழுதுகிறவன் தன் அனுபவ எண்ண அதிர்வுகளை எழுத்தாக்கி வாசகர் மனசில் ஊடுருவுகிறான். இருவரின் அனுபவமும் ஒன்றாய் இருக்கும் பொழுது அல்லது வாசகன் அனுபவ பூர்வமாக அந்த எழுத்தை ரசிக்கும் பேறு வாய்க்கும் பொழுது பரவசம் கொள்கிறான்.. இந்த பரவசத்தையோ யுத்தத்தையோ வாசகனிடத்து ஏற்படுத்துகிற சக்தி எழுத்தாளனின் எழுத்துக்கும் இருக்க வேண்டும். வாசகனும் இந்த பரவசத்தைத் துய்க்க ஏங்க வேண்டும். யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். பரவசத்தைத் தொடர்ந்த பேரின்பமோ, யுத்தத்தைத் தொடர்ந்த வசீகர ஆக்கிரமிப்போ எதுவாக இருந்தாலும் அதை விளைவித்த எழுத்தாளனின் எழுத்தின் மீதான ப்ரியமாக மலரும். வாசகனின் இந்தப் ப்ரியத்தை தன் எழுத்துக்குப் பெறுவது தான் எழுத்தாளனின் இலட்சியமாகும். எழுதுவது என்பதே அந்த ப்ரியத்தை வென்று எடுப்பதற்கான போராட்டம் தான்.***** - ஜீவி.

      // நடுவர் பதவிக்கு மிகச் சரியான ... பொருத்தமான .. அற்புதமான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். ! // - ரிஷபன்.

      இதை.... இதை.... இதைத்தான் நான் தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். :)

      இதை இன்று இப்போது இங்கு சுருக்கமாகச் சுவையாக ஒரே வரியில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள்.

      திடீர் நண்பர் ஒருவர் அன்புடன் வாங்கித்தந்த இளநீரைச் சாப்பிட்டு, தன் கண்களாலேயே அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, தான் இந்த உலகுக்கு வந்த காரியம் நிறைவடைந்து முடிந்துவிட்டதாக நினைத்து விடைபெற்றுச்சென்ற .... இந்தக்கதையில் வரும் முதியவர் போன்றே .... எனக்கும் இந்தத்தங்களின் அசத்தலான பின்னூட்டத்தை படித்த மகிழ்ச்சியில் வலையுலகிலிருந்து நன்றிகூறி, இத்துடன் ஒருவழியாக விடை பெற்றுக்கொள்ளலாமா என எண்ணத்தோன்றுகிறது.

      அவ்வளவு ஒரு நிறைவு .... தங்களின் இந்த மிகச்சிறிய, ஆனால் மிக வலிமை வாய்ந்த பின்னூட்டம், எனக்குள் என்னை மகிழ வைத்து, என் மனதில் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      தாங்கள் எதையும் ஒருமுறை சொன்னால் அது எனக்கு நூறு முறை சொன்னதற்கு சமமாகவே எப்போதும் நினைப்பவன் நான். அதுபோலவே தங்களின் இந்த ஒரு பின்னூட்டமே நூறு பேர்கள் இங்கு வந்து பின்னூட்டமிட்டதற்கு சமமாக நான் நினைத்து மகிழ்கிறேன்.

      மிகவும் நியாயமாக எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வெற்றிகரமாக, இதுவரை நடைபெற்று, முடியும் தருவாயில் உள்ள இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் நடுவர் திரு. ஜீவி அவர்களில் பங்கு மிகவும் மகத்தானதாகும். அவரை நான் அடையாளம் கண்டு கொண்டதோ, அவரிடம் இது சம்பந்தமாக நான் என் வேண்டுகோளை விடுத்ததோ, தங்களைப்போலவே அவருக்கும் என் மீதுள்ள தனிபிரியத்தினால், அவர் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டதோ, நான் செய்த மிகப்பெரிய பாக்யமாக நினைக்கிறேன்.

      அதைத்தாங்களே இங்கு வந்து தங்களின் எழுத்துக்களின் மூலம் சொல்லியுள்ளது தான், வைர வரிகளாக ஜொலித்து, இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிக்கே ஒரு I S O தரச் சான்றிதழ் கிடைத்ததாக எண்ணி மகிழ வைத்துள்ளது ...... இன்று என்னை.

      சமீபத்தில் நாம் நேரில் சந்தித்தபோதுகூட, நடுவர் யார்? எனத் தெரிந்து கொள்வதில் தங்களுக்கு ஓர் ஆர்வம் இருந்ததை என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் என் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தங்களுக்கே கூட, நானாகவே முன்வந்து சொல்லியிருக்க வேண்டிய இந்த மிக முக்கியமான விஷயத்தை, சொல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலைக் கைதியாக அன்று நான் இருந்து விட்டேன். அதற்காக என்னைத் தாங்கள் மன்னிப்பீர்களாக !

      ’நன்றி’ என்ற ஒரு சொல் மட்டும் போதாது. இருப்பினும் அதனைச் சொல்லாமலும் இருக்க முடியாது. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      தங்களின் பேரன்புக்குரிய தங்கள்,
      வீ....................................................ஜீ !

      Delete
  5. //கதை பிதுங்க//

    ஹா...ஹா....ஹா..


    ஜீவி ஸார் ஒவ்வோர் படைப்பையும் மனதில் வாங்கிப் படித்து வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லை, எழுத்துகளுக்குள்ளும் நுழைந்து யோசிப்பவர்.

    சில சமயம் வார்த்தைகளை முன்பின் மாற்றிப் போட்டால் வரும் கூடுதல் பொருளை எனக்கு உணர்த்தி இருக்கிறார்.

    இரண்டு முறை ஒரே பொருள் திரும்ப வரும் இடங்களையும் இதை இந்த இடத்தில் குறைத்திருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

    அவரது வழக்கமான பாணியில் ஷொட்டு - குட்டு கலந்து வந்துள்ள விமர்சனம் ரசிக்க வைக்கிறது. சில சமயங்களில் இதுமாதிரி விமர்சனங்களிலிருந்து புதிய முடிச்சு ஒன்று கிடைக்கும் வாய்ப்பும் நிறைய சமயம் எனக்குத் தோன்றி இருக்கிறது!



    ReplyDelete
    Replies
    1. அட?? எனக்கெல்லாம் ஒண்ணுமே தோணறதில்லை. சுத்தம். காலி, மேல் மாடி காலி! :)

      Delete
    2. இந்தப் பதிவிலிருந்து ஒரு முடிச்சு தோன்றியது! அது அப்படி அவ்வப்போது தோன்றும். அதனை உருக்கொள்ள வைக்கத்தான் நேரம், மூட் கிடைக்க வேண்டும்!!!! :)))

      //எனக்கெல்லாம் ஒண்ணுமே தோணறதில்லை. சுத்தம்.//

      தன்னடக்கம்! சும்மா சொல்லாதீங்க கீதா மேடம்... பார்க்கும், படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் பதிவு எழுதுபவர் நீங்கள். :)))

      Delete
    3. ஸ்ரீராம்.October 13, 2014 at 2:02 PM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //ஜீவி ஸார் ஒவ்வோர் படைப்பையும் மனதில் வாங்கிப் படித்து வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லை, எழுத்துகளுக்குள்ளும் நுழைந்து யோசிப்பவர்.//

      ஆம். மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

      //அவரது வழக்கமான பாணியில் ஷொட்டு - குட்டு கலந்து வந்துள்ள விமர்சனம் ரசிக்க வைக்கிறது.//

      :))))) நடு மண்டையில் ஆழமாக அழுத்தமாகக் குட்டியுள்ள இடம் .....

      //இவரது பட்டியலுக்கும் இந்த கதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைப்பு நீடித்தால் ஏமாந்து போக வேண்டியது தான். கதாசிரியருக்கும் வாசிப்போருக்கு இந்தப் பட்டியலைத் தெரிவிப்பது தான் கதையை ஆரம்பித்த ஜோரில் கதையம்சத்தை விட முக்கியமாகிப் போவது தான் கதை பிதுங்கக் காரணமாகிறது.//

      :))))) மிகவும் வலிக்கிறது :)))))

      >>>>>

      Delete
    4. To ஸ்ரீராம் [2]

      குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் அதுவும் வைர மோதிரக்கையால் குட்டுப்பட்டதில் எனக்கு ஓர் தனி இன்பமாகத்தான் உள்ளது, ஸ்ரீராம்.

      குட்டிய வலி மறக்க நிறைய ஆயின்மெண்ட் தந்துள்ளாரே ! அதுவரை சந்தோஷமே ! :)

      -=-=-=-=-

      //ஒரு வரிக் கதையை ஊதிப் பெரிதாக்குவது என்பது கதாசிரியருக்கு கைவந்த கலை.//

      //கதையில் இவராகச் சொல்லித் தெரிய வைக்க மாட்டாரே தவிர அந்த அவசியமில்லாமலேயே கதையின் முடிவில் கதையின் ஜீவனான அந்த வைர வரியை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இது தான் கதைகள் எழுதுவதில் இவரின் சாமர்த்தியம். //

      //இவரும் அந்த வீட்டு ஒட்டுத் திண்ணையில் பெரியவரின் பக்கத்தில் கைக்குட்டையால் ஒரு தட்டு தட்டி விட்டு உட்கார்ந்தவுடனேயே கதாசிரியருக்கே வாய்த்த அவரின் யதார்த்த இயல்பான எழுத்து நடை புது ரத்த பாய்ச்சலுடனான துள்ளலில் மிளிர்கிறது.//

      // "நீங்க பிராமணர் தானே?" என்று அந்த பெரியவர் கேட்க, பாரதியாரின் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'வை இவர் நினைவு கூர்ந்து பெரியவருக்குச் சொல்ல, ஒரு விவகாரக் கதை ஆரம்பித்த ஜோரில் கதை நாணில் பூட்டிய அம்பாகிறது.. //

      // இளநீர் அருந்திய புத்துணர்ச்சியில் தன்னை வாஞ்சையுடன் பார்த்த பெரியவரின் கண்களில் தவழ்ந்த நன்றியை மெளன பாஷையாய் சொன்னது அற்புதம்.//

      //இந்த ஒரு காட்சியை இந்தக் கதை முடிந்ததும் நினைத்துப் பார்க்கையில் கண்கள் கலங்குகின்றன. //

      //இந்தக் கதையில் அந்தப் பெரியவருக்கு இவர் இளநீர் வாங்கி அருந்தக் கொடுத்தது இந்தக் கதையைப் பொருத்த மட்டில் பெரிய விஷயம். ரொம்ப இயல்பாய் அந்தக் காரியம் நடப்பது போலத் தோன்றினாலும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த மனசின் உயர்வைச் சொல்ல வேண்டும். எந்தக் காரணத்திற்காக இந்தக் காரியம் நடந்தது என்கிற நினைப்பைத் தாண்டி நடந்த அந்த காரியம் மிகப் பெரும் வீச்சை இந்தக் கதையில் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அது நடக்காது போயிருந்தால், அடுத்து வந்த சில நாட்களில் இவர் நினைத்திருந்திருந்தாலும் அப்படி ஒரு காரியம் நிகழ்ந்து இவரும் மகிழ கொடுத்து வைத்திருக்க மாட்டார் என்பதை கொஞ்சமே எண்ணிப் பார்க்க மனம் துணுக்குறுகிறது.//

      //அடுத்தடுத்து வரும் கதைக்காட்சிகள் கதை நிகழ்வுகளாய் ஊர்ந்த ஒரு மெளன ஊர்வலம். வார்த்தைகள் நகர்வில் கதாசிரியரின் நெகிழ்ச்சி நம்மையும் பற்றிக் கொள்கிறது.//

      //இருப்பினும் அதைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற எண்ணம் அந்த சூழ்நிலையில் மனசில் தோன்றி அந்தப் பெரியவரே கொடுத்த மாதிரி அது வந்து சேர்கிறது என்பது தான் ஆச்சரியம். பெரியவரின் உள்ளங்கை பதிந்த அந்த கைத்தடி இவர் உள்ளங்கை பற்ற. பெரியவரின் நினைவில் அவரும் தன் கூட நடந்து வருகிறார் என்கிற தோழமை உணர்வில் இவரின் நடைப்பயிற்சிக்கு உந்து சக்தியாக.//

      //ஒரு நாளின் சில மணி நேரம் ரொம்பவும் குறைச்சலான நேரம் தான். இரண்டு மனம் நெருங்கிக் குதூகலிக்க அந்த குறைந்த நேரமே போதும் போலிருக்கு. அன்றி ஜென்ம பரியந்த உறவொன்றின் தொடர்புப் பிணைப்போ?.. 88 வயது வரை பார்க்காது திடும்மெனப் பார்த்துப் பேசிக் களித்த சந்தோஷத்தில் இந்த ஒரு சந்திப்புக்காகவே காத்திருந்து அது நிறைவேறிய நிறைவுடன் இந்தப் பிறவி பந்தம் பூர்த்தியாகிப் போய்ச் சேர்ந்த உயிரோ அது?...//

      //பாரதியின் இந்த வரிகளைத் தொடர்ந்த இருவரின் கருத்துப் பகிர்தல்கள் இருவரிடையேயான ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட ஆழ்ந்த உணர்வு கலந்த நட்பாக மலர்ந்திருக்கிறது. இது தான் இந்தக் கதையின் விசேஷம். //

      //சந்தித்துக் கொண்ட இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவரவர் புரிந்தலுக்கு விட்டு விட்டு கதையில் அவர்கள் பேசிக் களித்ததை ஒளித்து வைத்தது இந்தக் கதையின் உன்னதமான எழுத்துச் சிறப்பு. //

      -=-=-=-=-

      இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் அதிகமாகக் கலந்து கொள்பவர்களைவிட, கலந்து கொள்ளாத தங்களைப்போன்ற சிலரின் அழகான கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பாராட்டத்தக்கவைகளாகவும் உள்ளன.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ... ஸ்ரீராம்

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  6. கண்ணதாசனின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது

    ” நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
    தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால்
    அமைதி என்றுமில்லை “

    என்று தொடங்கும் பாடல்தான். (படம்: நெஞ்சில் ஓர் ஆலயம் ) நீங்கள் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் ” எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... !” என்ற இந்த கதையும் ஒன்று. காரணம் இந்த பாடலில் வரும்

    ” எங்கே வாழ்க்கை தொடங்கும்
    அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம்
    என்பது யாருக்கும் தெரியாது”

    என்ற வரிகளுக்கு இந்தக் கதை முழு வடிவம் கொடுப்பதாக எடுத்துக் கொள்ளலாம். நமது நடுவர் சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

    ReplyDelete
  7. தி.தமிழ் இளங்கோ October 13, 2014 at 10:46 PM

    வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

    //நீங்கள் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் ” எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... !” என்ற இந்த கதையும் ஒன்று. காரணம் இந்த பாடலில் வரும் ..........//

    எனக்கும் பிடித்தமான அந்தக் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுடன் இந்த என் கதையைப்பற்றி தாங்கள் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளது எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    //நமது நடுவர் சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் விமர்சனம் செய்துள்ளார்.//

    இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் அதிகமாகக் கலந்து கொள்பவர்களைவிட, கலந்து கொள்ளாத தங்களைப்போன்ற சிலரின் அழகான கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பாராட்டத்தக்கவைகளாகவும் உள்ளன.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
  8. சுவாரசியமான விமரிசனம். ஸ்தூல உறவு வரியில் சுத்திச் சுத்தி வந்தேன். class!

    விமரிசனம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் புரிபடும் படைப்பு - கதையும் அப்படித்தான் என்றாலும், விமரிசனம் என்பது வாசிப்பவரின் உணர்வுகளைத் தொட்ட மட்டில் கொஞ்சம் களங்கமோ மெருகோ சேர்ந்து தனக்கென ஒரு உருவை எடுக்கும் சாத்தியம் கொண்டது. இதுவரை படித்த விமரிசனங்கள் பலவற்றில் பிஎச் டி தீஸிசுக்கான பரவலும் ஆழமும் இருந்தது ஆச்சரியமும் அலுப்பும் தந்தது. கதையையே காணோமே என்று (கதையைப் படித்து அப்படி வியந்தது போதாதென்று) விமரிசனங்களைப் படித்து வியந்ததும் உண்டு. ஆனாலும் விமரிசனம் எழுதியவரின் உழைப்பு கதாசிரியரின் உழைப்பிலும் மேம்பட்டு நிற்கும் பொழுது வியக்காமல் இருக்க முடிவதில்லை - அப்படியும் சில விமரிசனங்கள் இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை October 14, 2014 at 12:19 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சுவாரசியமான விமரிசனம். ஸ்தூல உறவு வரியில் சுத்திச் சுத்தி வந்தேன்.//

      ஓ ..... அதனால் தான் தங்கள் வருகையில் சற்றே தாமதமாகி விட்டதோ?

      // class!//

      First Class தானே ? :)

      //விமரிசனம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் புரிபடும் படைப்பு - //

      கரெக்ட் சார். மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

      //கதையும் அப்படித்தான் என்றாலும், விமரிசனம் என்பது வாசிப்பவரின் உணர்வுகளைத் தொட்ட மட்டில் கொஞ்சம் களங்கமோ மெருகோ சேர்ந்து தனக்கென ஒரு உருவை எடுக்கும் சாத்தியம் கொண்டது.//

      நிச்சயமாக ! என்னைப்பொறுத்தவரை அது இப்படித்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதோ, சொல்வதோகூட தவறு என நினைப்பவன்தான் நான்.

      // இதுவரை படித்த விமரிசனங்கள் பலவற்றில் பிஎச் டி தீஸிசுக்கான பரவலும் ஆழமும் இருந்தது ஆச்சரியமும் அலுப்பும் தந்தது.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! தாங்கள் மனம் திறந்து பேசியுள்ளது அருமை மற்றும் உண்மை. :)

      //கதையையே காணோமே என்று (கதையைப் படித்து அப்படி வியந்தது போதாதென்று) விமரிசனங்களைப் படித்து வியந்ததும் உண்டு//

      வியப்பளிக்கும் சொற்களை .... வியப்பளிக்கும் விதமாகவே .... வியப்புடன் இங்கு சொல்லியுள்ளது ..... விகல்பமில்லாமல் ..... விமர்சனம் போலவே ... என்னையும் வியப்பளிக்க வைக்கிறது. :)

      //ஆனாலும் விமரிசனம் எழுதியவரின் உழைப்பு கதாசிரியரின் உழைப்பிலும் மேம்பட்டு நிற்கும் பொழுது வியக்காமல் இருக்க முடிவதில்லை - அப்படியும் சில விமரிசனங்கள் இருந்தன.//

      ஒருசில கடும் உழைப்பாளிகளைக் காண முடிந்ததுதான் இதில் உள்ள தனிச்சிறப்பு !

      தங்களின் அன்பான வருகைக்கும் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எடுத்துச்சொன்னதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  9. அருமையான விமர்சனம் ஐயா

    ReplyDelete
  10. சில இடங்களில் செய்து காட்டுவதை விடவும் செய்முறையைச் சொல்லி வழிகாட்டுவது பலனளிக்கும்.சொல்லப்பட்ட செய்முறை தவறான புரிதலோடு பலமுறை முயலப்பட்டு, வீண்பயனைத் தருமிடங்களில் சரியானதொன்றை ஒரே ஒரு முறை செய்து காட்டுவது பெரும் பலனளிக்கும். அப்படித்தான் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் வாசகர் மனத்தை ஆட்கொள்கிறது ஜீவி சார் அவர்களுடைய விமர்சனம்.

    எப்படியெப்படியெல்லாம் வரிகளுக்கிடையிலும் வாசித்துக் கதையை விமர்சிக்கிறார் என்ற வியப்பு ஆரம்பம் முதல் இறுதிவரை மாறவே இல்லை. பல நல்ல தகவல்களோடு உபயோகமான பல டிப்ஸ்களை விமர்சகர்களுக்கும் கதாசிரியர்க்கும் அள்ளித்தந்துள்ளார். மிகவும் நன்றி ஜீவி சார்.

    நடுவரையும் விமர்சனப்போட்டியில் பங்கெடுக்க வைத்ததன் மூலம் புதியதொரு விமர்சனக் களத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்காக கோபு சார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி October 14, 2014 at 10:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சில இடங்களில் செய்து காட்டுவதை விடவும் செய்முறையைச் சொல்லி வழிகாட்டுவது பலனளிக்கும்.

      சொல்லப்பட்ட செய்முறை தவறான புரிதலோடு பலமுறை முயலப்பட்டு, வீண்பயனைத் தருமிடங்களில் சரியானதொன்றை ஒரே ஒரு முறை செய்து காட்டுவது பெரும் பலனளிக்கும்.

      அப்படித்தான் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் வாசகர் மனத்தை ஆட்கொள்கிறது ஜீவி சார் அவர்களுடைய விமர்சனம். //

      அர்த்தபுஷ்டியுடன் கூடிய தங்களின் இந்தக்கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன.

      //நடுவரையும் விமர்சனப்போட்டியில் பங்கெடுக்க வைத்ததன் மூலம் புதியதொரு விமர்சனக் களத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்காக கோபு சார் அவர்களுக்கு மிக்க நன்றி.//

      இது நான், பலநாட்களாக செய்த முயற்சி. இறுதிக்கட்டத்தில் இல்லாமல் முன்னாலேயே இது கிடைத்திருந்தால் மேலும் பலருக்கும் இதனால் பலன் கிடைத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

      தங்களைப்போன்ற ஒருசிலருக்காவது, அடுத்த இரண்டு கதைகளுக்கான விமர்சனங்கள் எழுத, இது ஏதாவது ஒரு வழியில் கொஞ்சம் பயன்படுமானால், மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  11. தாளாலே தான் உண்ட நீரை தலையாலே தான் தரும்
    தென்னை போல , இளநீர் உபசாரமும் , படையலும் ஏற்ற பெரியவர் , செத்தும் கொத்த சீதக்காதி வள்ளல் போல்
    தன் கைத்தடி வழங்குகிறார்..

    தென்னை மரத்தில் தேள் கொட்ட ,
    பனை மரத்தில் நெறிகட்டின கதையாக கொஞ்ச தூரம்
    நடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு , காடுவரை
    நடந்து சென்று ஆற்றுக்குளியல் ஏற்கும் வரை
    நடக்கும் உணர்வு வரவில்லை

    சிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..

    பிறகு நண்பரின் நினைவான
    கைத்தடி அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாற்
    போல் உணரவைக்கிறது .விமர்சனக் களம்!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 14, 2014 at 3:25 PM

      வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //சிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..//

      ஓஹோ ! அப்படியா? :) அப்படியானால் சரியே.

      VGK

      Delete
  12. தாளாலே தான் உண்ட நீரை தலையாலே தான் தரும்
    தென்னை போல , இளநீர் உபசாரமும் , படையலும் ஏற்ற பெரியவர் , செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளல் போல்
    தன் கைத்தடி வழங்குகிறார்..

    தென்னை மரத்தில் தேள் கொட்ட ,
    பனை மரத்தில் நெறிகட்டின கதையாக கொஞ்ச தூரம்
    நடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு , காடுவரை
    நடந்து சென்று ஆற்றுக்குளியல் ஏற்கும் வரை
    நடக்கும் உணர்வு வரவில்லை

    சிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..

    பிறகு நண்பரின் நினைவான
    கைத்தடி அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாற்
    போல் உணரவைக்கிறது .விமர்சனக் களம்!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 14, 2014 at 3:27 PM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      //தாளாலே தான் உண்ட நீரை தலையாலே தான் தரும்
      தென்னை போல, இளநீர் உபசாரமும் , படையலும் ஏற்ற பெரியவர், செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளல் போல்
      தன் கைத்தடி வழங்குகிறார்..

      தென்னை மரத்தில் தேள் கொட்ட ,
      பனை மரத்தில் நெறிகட்டின கதையாக கொஞ்ச தூரம்
      நடந்தாலே மூச்சு வாங்கும் அவருக்கு , காடுவரை
      நடந்து சென்று ஆற்றுக்குளியல் ஏற்கும் வரை
      நடக்கும் உணர்வு வரவில்லை

      சிந்தனை நண்பரைச்சுற்றி இருந்ததால் நடைசிரமம் உணரப்படவில்லை..

      பிறகு நண்பரின் நினைவான
      கைத்தடி அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாற்
      போல் உணரவைக்கிறது .விமர்சனக் களம்!//

      *இப்பொழுது திருப்தியா கோபு சார்?..*

      திருப்தி ...... பரம திருப்தி. :)

      VGK

      Delete
  13. விமரிசனத்தைப் படிக்கும்போது எழுதியவர் யார் என்று யோசித்துக் கொண்டே வாசித்தேன். கதையின் ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் கொண்டு விளையாட்டுபோல் விரித்து, பிரித்து மேய்ந்து விட்டார் விமரிசனம் எழுதிய நடுவர் அவர்கள்!

    கதைத் தலைப்பையும் யோசித்து, மாற்றி வைத்திருக்கலாம் என்ற கருத்தையும் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 14, 2014 at 9:03 PM

      //விமரிசனத்தைப் படிக்கும்போது எழுதியவர் யார் என்று யோசித்துக் கொண்டே வாசித்தேன். கதையின் ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் கொண்டு விளையாட்டுபோல் விரித்து, பிரித்து மேய்ந்து விட்டார் விமரிசனம் எழுதிய நடுவர் அவர்கள்!

      கதைத் தலைப்பையும் யோசித்து, மாற்றி வைத்திருக்கலாம் என்ற கருத்தையும் ஆமோதிக்கிறேன்.//

      வாருங்கள் எனது அருமை நண்பரே ! வணக்கம்.

      தங்களை வெகுநாட்களாக என் பக்கம் காணுமே எனக் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். நலம் தானே ?

      அவ்வப்போது ஏதோ ஒரு 13 போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு போட்டிகளில் பரிசும் பெற்றதாக எனக்கு ஒரு
      ஸ்வப்ன ஞாபகம். சரியா? VGK-06 and VGK-07 முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் எனவும் ஞாபகம் உள்ளன. எல்லாம் சரியாகத்தான் இருக்கும். அதன் பிறகு ஏனோ தாங்கள் போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டதுபோல........

      இறைநாட்டம் ஏதோ தங்களை இந்தப்பதிவினையாவது இன்று பார்க்க வைத்துள்ளதில் எனக்கும் ஓர் மகிழ்ச்சியே.

      இன்னும் 2 போட்டிகள் மட்டுமே பாக்கியுள்ளன. இறைநாட்டம் சாதகமாக இருப்பின் தாங்களும் கலந்து கொள்ளலாம்.

      இங்கு இன்று அன்புடன் வருகை தந்து நடுவர் அவர்களின் விமர்சனத்தைப்பற்றி அழகான கருத்துக்கள் கூறியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  14. கம்பீர அமைதி காத்த நடுவர் ஐயா அவர்களின் விமர்சனம்! உண்மையிலேயே ஒரு தளத்திற்கு மேலே இருக்கிறது! வார்த்தைப்பிரவாகம், பவர் ஸ்டியரிங்போல அவர்கையாளும் விதம், அடேங்கப்பா! கணையாழி எழுத்தாளர்களின் ராஜச நடை! நான் - அம்பேல்! இந்தக் கதைக்கு நான் எழுதத்துவங்கி முடிக்கமுடியாமல் வெளியூர் சென்றுவிட்டதால் முற்றுப் பெறாத என் -விமர்சனம் :
    //எங்கெங்கும்… எப்போதும்… என்னோடு! யார் அல்லது எது?
    கேள்விக்குறியோடு கதைக்குள்ளே எட்டிப் பார்த்தால் டாக்டரிடம் உடல் எடையைக்குறைக்க வேண்டி ஆலோசனைக்கு சென்ற கதாநாயகரின் காட்சி! உண்மையில் அந்த உரைநடை கோலிசோடாவை ஓபன் பண்ணியதுபோல குபீரென்று சிரிப்பை பீறிட்டு வரவழைத்துவிட்டது! அதற்கு முன்பான சுய அறிமுகமும் அதே ரகம்தான்! அவ்வளவாக சாப்பிடப்பிடிக்காது ஆனால் விரும்பிச்சாப்பிடும் உணவு வகைகளின் பட்டியலோ மார்நீளத்திற்கு ஒருலிஸ்ட்.! பிறகு எடைக்கு சொல்லவா வேண்டும்?! குறையவேண்டும் எடை என்றால் வேண்டியதோ துரித நடை! அதெல்லாம் ‘நடக்குற’ காரியமா என்ற கேள்வியுடன் நடையை துவங்கும் ‘கதாநாயகரி’ன் நகைச்சுவை உணர்வினை எடுத்துச் சொல்வதாகவே இது அமைந்துவிடுகிறது! அவரு நடைப்பயிற்சிக்குப் போனாரா அல்லது கடையவே திங்கப்போனாரான்னு கேள்விஎழுப்புறமாதிரி முக்கால் கிலோமீட்டர் நடக்குறதுக்குள்ளாரயே ரெண்டு பன்னீர் சோடா, நாலு பஜ்ஜி, நாலு வடை என்று பின்னி எடுத்துவிடுகிறார்! நிஜவாழ்க்கையிலும் வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று சப்பயா பொயிட்டு தொப்பையா திரும்பிவர்ற ஆளுங்களயே ஞாபகப்படுத்துறாரு நம்ப கதைசொல்லி! அதானே நாட்டு ‘நடப்பா’ இருக்கு! அப்படியே நடந்து சென்று அப்பாடா என்று உக்கார இடம் தேடி கண்டுபுடிச்சி உக்காந்தா சித்தர் மாதிரி ஒரு 88 வயது மு(பு)தியவர் கைத்தடியோட உக்காந்துகுட்டு வாங்கையா என்று வரவேற்கும் காட்சி! இடையே ஜாதியப்பத்தி கீற்றாக ஒரு உரையாடல்! சீனியர் சிட்டிசன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது காந்தி அடிகளைப்போல மூக்குக் கண்ணாடியும் கைத்தடியும்தான்! அந்த கைத்தடியையே முக்கியமான மூன்றே கதாபாத்திரங்களில் ஒன்றாக்கி கதையை நகர்த்திச்சென்றிருப்பது அருமை!// என்றும் அன்புடன் எம்ஜிஆர்

    மு(பு)திய நண்பர் கையில் வைத்திருந்தது வெறும் கைத்தடி அல்ல மூட்டுவலி இருந்தாலும் விடாது இறுதிவரை நடமாட வேண்டும் என்ற வைராக்கியம்தான்! தன்னம்பிக்கைதான்!
    பெயர் தெரியாமலே நட்பாகி ஒரே சந்திப்பில் மிகவும் நெருங்கியும்விட்ட அந்த 88 வயது பெரிய மனிதர் கொடுத்துச் சென்றது வெறும் கைத்தடியல்ல வாழ்க்கைப்பாதையில் இறுதிவரை விடாது பீடுநடை போடவேண்டும் என்ற சிம்பாலிக்கான செய்தியும்தான்!

    ReplyDelete
  15. RAVIJI RAVI October 15, 2014 at 10:05 PM

    வாருங்கள் நண்பர் திரு. ரவிஜி அவர்களே, வணக்கம்.

    //கம்பீர அமைதி காத்த நடுவர் ஐயா அவர்களின் விமர்சனம்! உண்மையிலேயே ஒரு தளத்திற்கு மேலே இருக்கிறது! வார்த்தைப்பிரவாகம், பவர் ஸ்டியரிங்போல அவர்கையாளும் விதம், அடேங்கப்பா! கணையாழி எழுத்தாளர்களின் ராஜ நடை! //

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான தங்களுக்கே உரித்தான ஜாலி டைப் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

    ReplyDelete
  16. நேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலவே இங்கும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எழுத்து இணைப்புப் பாலமாக இருந்து வாசகனின் எண்ணங்களோடு எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கலக்கும் அற்புத நிகழ்வு ஒன்று இங்கே நிகழ்தலாகிறது. //

    அற்புதமான விமர்சனம் ஜீவி சார் விமர்சனம்.

    உடனுக்கு உடன் படிக்க முடியாமல் என் பயணங்கள் அமைந்து காலதாமதமாய் கருத்துக்களை சொல்ல வேண்டி இருப்பது வருத்தமாய் இருக்கிறது.

    ReplyDelete
  17. கோமதி அரசு October 19, 2014 at 9:59 PM

    வாங்கோ, வணக்கம்.

    //அற்புதமான விமர்சனம் ஜீவி சார் விமர்சனம்.//

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

    //உடனுக்கு உடன் படிக்க முடியாமல் என் பயணங்கள் அமைந்து காலதாமதமாய் கருத்துக்களை சொல்ல வேண்டி இருப்பது வருத்தமாய் இருக்கிறது.//

    அதனால் பரவாயில்லை. விட்டுப்போன பதிவுகளை இப்போது நேரம் கிடைத்தால் பாருங்கோ. முடிந்தால் கருத்துக்களையும் சொல்லுங்கோ.

    முக்கியமாக http://gopu1949.blogspot.in/2014/10/5.html கீதமஞ்சரி திருமதி கீதா மதிவாணன் http://gopu1949.blogspot.in/2014/10/7.html திருமதி ராதாபாலு ஆகியோர்களது ’நேயர் கடிதங்கள்’ போன்றவை படிக்க சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  18. சிறுகதையின் இலக்கணங்களை ஆழமாக அலசியிருக்கிறார் இந்த கட்டுரையின் ஆசிரியர்.

    ReplyDelete
  19. கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கு.

    ReplyDelete
  20. // விமர்சனப் போட்டிக்கான கதை தான் இது. இருப்பினும் விமரிசகர்கள் மத்தியில் நடுவரின் பார்வையில் இந்தக் கதையை வைப்பதில் தவறில்லை என்கிற காரணத்தினால் கோபு சாரின் ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறேன். இந்த மாதிரியான வேறுபட்ட விமரிசனப் பார்வைகள் விமரிசகர்களுக்கும் எவ்விதத்திலாவது உதவியாய் இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.//

    அருமை! அருமையோ அருமை.

    ReplyDelete
  21. கதய விட விமரிசனம் பெரிசாவும் சுவாரசியமவும்இருக்கு. வரிக்கு வரி ரசிச்சு எளுதிருக்காக. கதய மீலோட்டமா படிச்சிகிட்டீ போனோமுனா அந்த கதயோட முக்கியத்துவமே புரிஞ்சுக்க ஏலாது

    ReplyDelete
  22. விமரிசனப் பார்வை கருத்துகள் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டுத்தான் இருக்கும். .

    ReplyDelete
  23. நாதஸ்வர வித்வானும் தவுல் வித்வானும் 'சின்க்'ஆனா கச்சேரி களைகட்டும் பாருங்க...இதுவும் அதேமாதிரிதான் இருக்கு. அருமை.

    ReplyDelete