About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, March 21, 2012

SVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-2 of 2]



சுகமான அனுபவம் 
[பகுதி-2 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

 

திருமதி விசாஹா ஹரி அவர்கள்

 

24.02.2012 வெள்ளிக்கிழமையன்று 
திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி 
வளாகத்தில் உள்ள R V AUDITORIUM
என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்
எடுக்கப்பட்ட புகைப்படம்


அடுத்த இரண்டாவது 20 நிமிடங்களில், திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன மற்றொரு புராணக்கதை:

உலகிலேயே எந்தக்கவலையும் இல்லாமல் எப்போதும் மிகவும் ஜாலியாக சந்தோஷமாக இருப்பவர் யார் ? 


[ஒருவரிடம் நிறைய பணம் இருக்கலாம், சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம், நல்ல மிக உயர்ந்த பதவியில் அவர் இருக்கலாம். மற்ற எல்லோரையுமே வசப்படுத்தி கட்டுப்பட வைக்கும் மிகப்பெரிய அதிகாரம் ஒருவரிடம் குவிந்து இருக்கலாம். 


இவையெல்லாம் இருந்தால் மட்டும் ஒருவன் கவலை இல்லாமல் இருக்க முடியுமா? இவைகளால் சந்தோஷங்களைப் பெற்றிடத்தான் முடியுமா?  


இவைகள் எல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கவலைகள் கூடுமே! சந்தோஷம் குறையுமே!! 
- vgk ]

நல்ல குணங்களுடனும், நல்ல தூய்மையான மனதுடனும், நல்ல செயல்களையே ஒருவன் தொடர்ந்து செய்து வருவானேயானால், அவனுக்கு எந்த பயமும் இருக்காது. அவன் தான் மிகவும் ஜாலியாக இருக்க முடியும். அவனே கடவுளுக்கும் மேலானவன் என்று சொல்லிவிட்டு, ஒரு சிறிய புராணக்கதையும் சொல்ல ஆரம்பித்தார்கள். 

புராண காலத்தில் யாரோ ஒருவர் [கம்சனின் தந்தை என்று சொன்னதாக எனக்கு ஞாபகம்] இந்த உலகிலேயே மிக மகிழ்ச்சியாக இருப்பவர் யார்? என்று தேடுகிறாராம்.

நாரதர் தான் எந்தக்கவலையும் இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரிவதாக எண்ணி, அவரிடமே போய் காரணம் கேட்கிறாராம். 

”எப்படி உம்மால் எப்போதுமே மிகமகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே ஜாலியாக இருக்க முடிகிறது” என்று நாரதரிடம் போய்க் கேட்கிறார்.

அதற்கு நாரதர் சொல்கிறார்: “அது ஒரு பரம ரகசியம். யாரிடமும் சொல்லாதீர்கள். உம் காதைக் கொடுங்கள், உமக்கு மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி காதில் “ நான் எப்போது ஸ்ரீ கிருஷ்ணனையே நினைத்து ஜபித்துக்கொண்டிருக்கிறேன்; அதனால் தான், அவனால் தான், அவனைப்போலவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கூட ஜாலியாக என்னால் இருக்க முடிகிறது; 

ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததே ஓர் சிறைச்சாலையில்; பிறகு அவன் பிறந்த உடனேயே தாய் தந்தையைப் பிரியும் துர்பாக்யம் நேரிடுகிறது; எங்கேயோ கோகுலமாம் .... அங்கு போய் வேறு யாரிடமோ வளர வேண்டியுள்ளது;

அங்கு படிக்கவும் முடியாமல் மாடு மேய்க்கப்போகிறான்; குழந்தையாய் இருக்கும் அவனைக் கொல்வதற்காக பூதனை, சகடாசுரன் போன்ற பல அசுரர்கள் ஏவப்படுகிறார்கள். 

இருப்பினும் எல்லாவற்றையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, எப்போதுமே சந்தோஷமாகவே இருக்கிறார் இந்த ஸ்ரீகிருஷ்ணர்; 

அப்படிப்பட்ட அவர் நாமத்தை நான் எப்போதும் ஜபித்துக்கொண்டே இருப்பதால் நானும் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறேன்” என்று சொல்லி, வந்தவரை ஸ்ரீ கிருஷ்ணனிடம் அனுப்புகிறார் நாரதர்.

ஸ்ரீ கிருஷ்ணனும் வந்தவரிடம், “அது ஒரு பரம ரகசியம்” என்று சொல்லி, காதைப்பிடித்து இழுத்து, “எப்போதும் என் திருநாமத்தையே சொல்லி வரும் ஸ்ரீ நாரதரையே நானும் எப்போதுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனாலேயே என்னால் எப்போதுமே சந்தோஷமாகவே இருக்க முடிகிறது” என்கிறாராம். 

”இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: 

பகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். 


அந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்” 

என்று அழகாகச் சொல்லி முடித்தார்கள்.

கடைசி 20 நிமிடங்கள் 
கேள்வி நேரம்:

பலரிடமும் கைகளில் மைக் கொடுக்கப்பட்டு பலவிதமான கேள்விகளைச் சுருக்கமாகக் கேட்கச் சொன்னார்கள். பலரும் பல கேள்விகள் கேட்டார்கள். திருமதி விசாஹா ஹரி அவர்கள், அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்து வந்தார்கள்.

தியாகப்பிரும்மம் அவர்களின் பக்தி இசையே அவர்களுக்கு சிறுவயது முதல் ஆத்ம உணர்வுகளை தட்டியெழுப்பக் காரணமாக [inspiration ஆக] அமைந்ததாகச் சொன்னார்கள். 

திருமதி விசாஹா ஹரி அவர்களின் மாமனாராகிய ’ஸ்ரீ கிருஷ்ணபிரேமி மஹராஜ் அண்ணா’ அவர்களும் கணவரான ஸ்ரீ ஹரி ஜீ அவர்களும் கூட, பக்தி மார்க்கத்தில் மிகவும் பிரபலமான இசைச் சொற்பொழிவாளர்களாக அமைந்து விட்டதால், தன்னால் தன்னை மேலும் இதில் ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு பிரகாசிக்க, அதுவே வழிவகுத்துக் கொடுத்து விட்டதாகவும் சொன்னார்கள். 

கேள்வி நேரத்தில் ஒரு சிறிய பெண் குழந்தை கேட்டதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் அளித்த பதிலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கேள்வி:

அதாவது நாங்கள் பாடம் படிக்க பள்ளிக்குப் போகிறோம், பாடல் கற்றுக்கொள்ள பாட்டு க்ளாஸுக்குப் போகிறோம். டான்ஸ் கற்றுக்கொள்ள டான்ஸ் க்ளாஸுக்குப் போகிறோம்; புரியாத பாடங்களில் அதிக மதிப்பெண் எடுக்க ட்யூஷன் க்ளாஸுக்குப் போகிறோம்; இது தவிர தையல் வகுப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு என்று ஏதேதோ கற்க போகிறோம்.

உங்களைப்போல நானும் ஹரிகதை சொல்ல ஆசைப்பட்டால், அதை நான் எங்கே போய் படிப்பது? 


இந்த பெண் குழந்தையின் நியாயமான கேள்விக்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் அளித்த பதில்:

”உனக்கு அவ்வாறு ஆசையாக இருந்தால் என்னிடம் வா. 

ஆனால் அதற்கு முன்பு உனக்கு இந்திய மொழிகளில் தமிழ் தவிர, சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி போன்ற ஏதாவது ஒரு நான்கு மொழிகளாவது தெரிந்திருக்க வேண்டும். 

வாய்ப்பாட்டு கற்றுக் கொள்வதிலும் பாடுவதில் ஆர்வம் வேண்டும். 

புராணக்கதைகள் பலவற்றைத் தெரிந்து கொள்வதில் நம்பிக்கையும், ஆசையும் வேண்டும்.  

புரிந்து கொண்டதை பலருக்கும் எடுத்துச்சொல்ல தெளிவாகப் பேசத் தெரிய வேண்டும். 

எந்த இடத்தில் என்ன பேசவேண்டுமோ அதை மட்டும் தங்கு தடையின்றி பேச பயிற்சி வேண்டும்.  

இவைகள் இருந்தால் போதும். என்னிடம் ஓடிவா, நான் மேற்கொண்டு ஹரிகதாகாலட்சேபம் செயய உனக்குச் சொல்லித்தருகிறேன்” என்று வெகு அழகாகச் சொன்னார்கள். 

மொத்தத்தில் இந்த ஒரு மணிநேர நிகழ்ச்சி வெகு அருமையாக இருந்தது. என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

நிகழ்ச்சி முடிவுற்றதும் மேடைக்குப் பின்புறமிருந்து அறையில் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டு, பிறகு காரில் புறப்படத் தயாராகி விட்டார்கள். காரில் அவர்கள் ஏறியதும், காரிலிருந்த சுற்றுப்புற கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு விட்டன. 

அப்போது, ஒரு கல்லூரி மாணவி மட்டும் ஓடிவந்து கெஞ்சோ கெஞ்செனக் கெஞ்சி மன்றாடி, ஆட்டோகிராப் கையெழுத்து வாங்கத்துடித்தார். 

அதற்காக கார் கண்ணாடி சற்றே இறக்கப்பட்டது. அப்போது நான் மிக அருகில் இருந்ததால் அவர்கள் காரில் அமர்ந்த நிலையிலேயே, என் கேமரா மூலம் போட்டோ எடுத்துக் கொண்டேன். 



 



[நிகழ்ச்சி முடிந்ததும் திருமதி விசாஹா ஹரி அவர்கள்
காரில் ஏறி புறப்பட்டு செல்லும் முன், 
 ஆட்டோகிராஃப் கேட்ட கல்லூரி மாணவி ஒருவருக்குக் கையொப்பமிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.]


அதுவும் அந்தக் கல்லூரி படிக்கும் மாணவி கொடுத்த பேனா சரியாக எழுதாததால் என்னிடமிருந்து என் பேனாவை வாங்கி அதை உபயோகித்து கையெழுத்து போடும்படி ஆனதால், அந்த மிகச்சிறிய நேரத்தை நான், எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டு போட்டோக்கள் எடுத்து விட்டேன். 

அன்று என் பேனாவுக்குக் கிடைத்த பெரும் பாக்யமாகவும் இந்த நிகழ்ச்சியை நான் நினைத்துக் கொண்டேன்.  

எவ்வளவு அறிவு, எவ்வளவு அழகான மதுரமான குரல்வளம், எவ்வளவு கீர்த்தனைகள், எவ்வளவு விஷயஞானம், எவ்வளவு ஒரு பக்குவம், எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்! 

சொல்வதை இனிமையாக, மென்மையாக, கேட்பவர்களுக்கும் பக்திப்பரவஸம் ஏற்படுமாறும், எளிதில் மனதில் பதியுமாறு மிக அழகாகச் சொல்கிறர்கள்!! 

சரஸ்வதி தேவியின் கடாக்ஷகத்தை முழுவதுமாகப் பெற்றுள்ளார்களே!!! 

அவர்களின் பொற்கரங்களுக்குப்போய், அவர்களால் அதை உபயோகித்து கையொப்பமிட்ட பிறகு என்னிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட என் பேனாவை, பகவத் பிரஸாதம் போல நினைத்து என் கண்களில் ஒத்திக்கொண்டு, தனியாக பத்திரப்படுத்திக் கொண்டேன்.

-o-o-o-O-o-o-o-


அடுத்த நிகழ்ச்சியான தெருகூத்து 
என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில்  பங்கேற்ற 
”புரிசை கண்ணப்பத் தம்பிரான் 
பரம்பரை தெருக்கூத்து மன்ற” 
கலைஞர்கள்
Co-ordinator: Ms. V R DEVIKA - Anchor


மஹாபாரதத்தில் பாஞ்சாலியை இழுத்து வந்து துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் சபையில் மானபங்கம் செய்ய முயற்சித்தது முதல், பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கிருபையால் அவளுக்கு வஸ்த்ரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது வரை, இந்தக்குழுவினர் மேடையில் நாடகம் போல நடத்திக்காட்டி மகிழ்வித்தனர். இதில் பங்குபெற்ற கலைஞர்கள் ஒவ்வொருவருடைய Make-up சாதனங்களும் வைரம் போல மின்னி கண்ணைப்பறிப்பது போல வெகு அழகாக இருந்தன. நல்லதொரு நகைச்சுவைக் காட்சியாகவும் இருந்தது. அந்தக்குழுவில் ஒருவர் தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக நிகழ்ச்சியில் நான் கண்டு மகிழ்ந்த 
பல சிறப்பு அம்சங்கள்: 




இந்த மாபெரும் கலை நிகழ்ச்சிகளை, மிகவும் அழகாகத் திட்டமிட்டு, குறிப்பிட்டிருந்த நேரங்களில் எந்தவிதமான மாற்றமோ, ஏமாற்றமோ இன்றி வெற்றிகரமாக நடத்திய SVANUBHAVA குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வருகை தந்த அனைவருக்குமே நுழைவுச்சீட்டுகள், கட்டணங்கள் ஏதும் இன்றி அனுமதி இலவசமாகவே வழங்கப்பட்டது.

காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள மிகப்பெரிய இடத்தில் அனைவருக்குமே உட்கார வசதியாக தனித்தனி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

போதுமான அளவுக்குக் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாக அருகில் அமர்ந்திருந்த சிலர் தங்களுக்குள் கூறி மகிழ்ந்ததை நானும் என் காதில் வாங்கிக்கொண்டேன். 


ஆங்காங்கே குடிதண்ணீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 


பல இடங்களில் ஆங்காங்கே மின்விசிறிகள் [Pedestal Fans] வைக்கப்பட்டிருந்தன.

காலையில் 11 மணிக்கும். பிறகு மாலை 4 மணிக்கும் சூடான சுவையான தேநீர் காகிதக் கோப்பைகளில், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே, அதுவும் இலவசமாகவே அளித்து மகிழ்வித்தனர். 

தேநீர் அருந்திய உடன் காகிதக்கோப்பைகளைப் போட ஆங்காங்கே மிகப்பெரிய புத்தம் புதிய குப்பைத்தொட்டிகள், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன. 


தேநீர் அருந்திய பின் காகிதக் கோப்பைகளை ஆங்காங்கே தரையில் தயவுசெய்து விட்டெறிந்து விடாதீர்கள் என மைக்கில் அறிவிப்பும் செய்தார்கள். அனைவரும் அதை அழகாகப் பின்பற்றியது எனக்கே மிகவும் அதிசயமாக இருந்தது. 

மதியம் இடைவேளையில் அங்கேயே தங்கி இருந்து சாப்பிட விரும்பியபவர்கள் அனைவருக்கும் அலுமினிய பேப்பர் டப்பாக்களில் அடைக்கப்பட்ட இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  


[தயிர் சாதம் / புளியோதரை போன்ற ஏதோ ஒன்று வழங்கப்பட்டதைப் பார்த்தேன். நான் அதை வாங்கிக்கொள்ளாததாலும், காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், அவசரமாக வீட்டுக்குக் கிளம்பி செல்ல நேரிட்டதாலும், எனக்கு அதில் என்ன உணவு வழங்கப்பட்டது என்று சரியாகச் சொல்ல இயலவில்லை ] 

பங்குபெற்ற அனைத்துக் கலைஞர்களையும் தனித்தனியே ஒலிபெருக்கி மூலம், பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தினார்கள்.


கலைஞர்களுக்கான நினைவுப்பரிசுகளை மாணவ மாணவிகள் கைகளால் வழங்குமாறு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். 


பங்கு கொண்ட கலைஞர்களை, விழாக்குழுவினர் மிகவும் பாராட்டி உற்சாகப் படுத்தி பேசினார்கள். 


நாங்கள் அனைவரும் கரவொலி எழுப்பி உற்சாகப் படுத்துமாறும் சொன்னார்கள். 

இத்தகைய மிகச்சிறப்புகள் வாய்ந்த SVANUBHAVA குழுவினர், தங்கள் நகரங்களுக்கு வருகை தந்து, இத்தகைய கலை நிகழ்ச்சிகள் நடத்தும் போது தயவுசெய்து, அவற்றை நேரில் கண்டு மகிழத்தவறாதீர்கள். 

நேரில் கலந்து கொண்டு அனைத்துக் கலைஞர்களையும் நீங்களும் உற்சாகப்படுத்துங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மாபெரும் நிகழ்ச்சியொன்று நடைபெற உள்ளது என்ற தகவல்களை சுவரொட்டிகள் மூலமோ, செய்தித்தாள்கள் வாயிலாகவோ, தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் மூலமாகவோ விளம்பரங்கள் ஏதும் செய்யாமல் இருந்து விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். 

இந்த நிகழ்ச்சி இதுபோல திருச்சியில் நடைபெற உள்ளது என்று எனக்கு தக்க நேரத்தில் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து உதவிய என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் ”மணிராஜ் - திருமதி இராஜராஜேஸ்வரி” அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


இந்த நடைபெற்ற நிகழ்ச்சிகளால், சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு நான் படித்த பள்ளி வளாகத்திற்குள் என் மனைவியுடன் நுழையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் ஓர் மகிழ்ச்சி. 

அன்று என் பள்ளியில் எங்கு பார்த்தாலும், அடர்த்தியான மிகப்பெரிய மரங்கள் இருபுறமும் வளர்ந்து நல்ல நிழல் தருபவனவாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாக பசுமை நிறத்துடன் காட்சியளிப்பதுண்டு.

வரிசையாக நின்று கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மரங்களை இன்று அங்கு காணோம். அதற்கு பதில் வின்னை முட்டுவது போல மிகப்பெரிய கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன, இன்றைய தேவை அப்படி ஆகிவிட்டதோ! 

ஒன்றை இழந்து தானே மற்றொன்றைப்பெற வேண்டியதாக உள்ளது! இன்று பள்ளி/கல்லூரி சென்று படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் அல்லவா!! நன்கு வளர்ந்த மரங்களை நீக்கிவிட்டு மிகப்பெரிய கட்டடங்கள், கல்வி கற்பிக்கக் கட்டியுள்ளார்கள் போலும்!!! இதோ அவற்றில் ஓரிரு கட்டடங்கள் தங்கள் பார்வைக்காக:



இதை கவனித்த எனக்கு சமீபத்தில் எங்கேயோ படித்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு தான் நினைவுக்கு வந்தது. தாங்களும் படித்து மகிழுங்கள்:

============================================================
ஒருவர்:

ஏன் இந்த சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை இப்போது வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

மற்றொருவர்:

உனக்கு விஷயமே தெரியாதா? அடுத்த வாரம், அடுத்த ஊரில் நடைபெறவுள்ள மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, அமைச்சர் அவர்கள் இதே பாதையில் தான் வர இருக்கிறார். அவர் வந்துபோகும் சமயம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பாதையை அகலப்படுத்தவே, இங்குள்ள மரங்களை இப்போது வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

============================================================ 

சில தவிர்க்க இயலாத காரணங்களால் முதல் நாள் பிற்பகல் + மறுநாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை என்னால் நேரில் கண்டு களிக்க இயலவில்லை. அதனால் இந்தப்பதிவினை மேலும் என்னால் தொடர முடியவில்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். 


-o-o-o-O-o-o-o- 

அன்புடன்
vgk


-o-o-o-O-o-o-o- 

48 comments:

  1. [ஒருவரிடம் நிறைய பணம் இருக்கலாம், சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம், நல்ல மிக உயர்ந்த பதவியில் அவர் இருக்கலாம். மற்ற எல்லோரையுமே வசப்படுத்தி கட்டுப்பட வைக்கும் மிகப்பெரிய அதிகாரம் ஒருவரிடம் குவிந்து இருக்கலாம்.


    இவையெல்லாம் இருந்தால் மட்டும் ஒருவன் கவலை இல்லாமல் இருக்க முடியுமா? இவைகளால் சந்தோஷங்களைப் பெற்றிடத்தான் முடியுமா? //

    சரியாகச்சொன்னீர்கள்.100%கரெக்ட்.அருமையான பகிர்வு

    ReplyDelete
  2. அவர்களின் பொற்கரங்களுக்குப்போய், அவர்களால் அதை உபயோகித்து கையொப்பமிட்ட பிறகு என்னிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட என் பேனாவை, பகவத் பிரஸாதம் போல நினைத்து என் கண்களில் ஒத்திக்கொண்டு, தனியாக பத்திரப்படுத்திக் கொண்டேன்.//அப்பப்பா..இவரின் சொற்பொழிவில் எவ்வளவு ஆழமாக ஒன்றிப்போய் இருக்கின்றீர்கள் என்பதற்கு இந்த ஒரு வரி போதும்..!:)

    ReplyDelete
  3. திருமதி விசாகா ஹரி நிகழ்த்தியுள்ள சங்கீத உபன்யாசங்கள் டி வி டி எங்கு பார்த்தாலும் வாங்கிவிடுவேன். கதையும் பாடலும் வெகு அருமையாக நிகழ்த்துவார்.

    ReplyDelete
  4. பகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்.


    அந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்”

    தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே !!

    ReplyDelete
  5. இந்த நிகழ்ச்சி இதுபோல திருச்சியில் நடைபெற உள்ளது என்று எனக்கு தக்க நேரத்தில் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து உதவிய என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் ”மணிராஜ் - திருமதி இராஜராஜேஸ்வரி” அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். //

    கண்களில் பட்டதும் திருச்சி என்றவுடன் தங்களுக்கு தகவல் தெரிவித்தேன்..

    நேரில் சென்றிருந்தால் கூட இத்தனை நுணுக்கமாக கவனித்திருக்க வாய்பில்லை..

    அனுபவச்செறிவுடன் பதிவாக்கி நேர்முக வர்ணனை தந்து மகிழ்வித்தற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. தேநீர் அருந்திய உடன் காகிதக்கோப்பைகளைப் போட ஆங்காங்கே மிகப்பெரிய புத்தம் புதிய குப்பைத்தொட்டிகள், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன.

    அருமையான ஏற்பாடுகள் வியக்க வைக்கின்றன..

    கோவில்களிலும் இந்தமாதிரி ஏற்படுத்தினால நெருடல் இல்லாமல் அன்னதானம் செய்யலாம்...

    ReplyDelete
  7. இந்த நடைபெற்ற நிகழ்ச்சிகளால், சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு நான் படித்த பள்ளி வளாகத்திற்குள் என் மனைவியுடன் நுழையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் ஓர் மகிழ்ச்சி.

    அந்தநாள் மலரும் நினைவுகளுடன் மகிழ்ச்சியான தருணங்கள் பகிர்வு நிறைவளிக்கின்றன்..

    ReplyDelete
  8. நல்லதொரு பகிர்வு. அந்த பெண் கேட்ட கேள்விக்கு விசாகா ஹரி அவர்கள் பதில் தந்தது என்று எல்லாமே பிரமாதம்.

    நிகழ்ச்சியில் ஏற்படுத்தி தந்திருந்த வசதிகளும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  9. //என் பேனாவை... தனியாக பத்திரப்படுத்திக் கொண்டேன்.//

    -- இந்த வரிகளைப் படிக்கும் முன் இதைத்தான் சொல்ல நினைத்தேன்.

    இந்த மாதிரி நான்கு பேனாக்கள் நான் வைத்திருக்கிறேன்.

    பேனா வைக்கும் தனிப் பெட்டியில் வைத்து, அததில் அவரவர் பெயர் எழுதி..

    ReplyDelete
  10. நெகிழ்வை ஏற்படுத்திய பகிர்வு சார்.. உங்க மூலமா விசாஹா ஹரி உபன்யாசத்தைக் கேட்டது போல இருந்தது.

    ReplyDelete
  11. நிகழ்ச்சிகளை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. அன்பின் வை.கோ

    அருமையான நிகழவு - அழகான நேர்முக வர்ணனை - புகைப்படங்கள் - தகவல் அளித்தவர்க்கு நன்றி கூறியது - படித்த ப்ள்ளிக்கு மனைவியுடன் சென்றது - ஆட்டோ கிராஃப் - புகைப்படம் எடுத்தது - அனைத்தையும் விளக்கமாக எழுதியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. உங்களது இரு பதிவுகளும் அன்றைய
    SVANUBHAVA நிகழ்சிகளை வீடியோ செய்து பார்ப்பது போல இருந்தது.

    மிக்க மகிழ்ச்சி.

    SVANUBHAVA அமைப்பாளர்கள் இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் மிகவும் வியந்து போவர்கள். மேலும் இது அவர்களுடைய நிகழ்சிகளை தரத்துடன் நடத்தியதற்கு கிடைத்த பரிசாகவே கருதுவார்கள் .

    ReplyDelete
  14. Iru paguthikalaiyum aarvaththodu padiththEn. Pakirvukku nanri

    ReplyDelete
  15. விசாகா ஹரியின் கதைகளை மிகவும் அழகாக ,சுவாரஸ்யம் குறையாமல் சொல்லி இருகிறீர்கள்.
    படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி...so ...அந்த பேனா இப்போது ஒரு பொக்கிஷம் ...அல்லவா...
    விசாகா ஹரியின் கதைகளை DVD இல் தான் கேட்டு இருக்கிறேன்...நேரில் வாய்புக்கிடைத்தால் கேட்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிஉள்ளீர்கள்.

    ReplyDelete
  16. ஸ்ரீ கிருஷ்ணனும் வந்தவரிடம், “அது ஒரு பரம ரகசியம்” என்று சொல்லி, காதைப்பிடித்து இழுத்து, “எப்போதும் என் திருநாமத்தையே சொல்லி வரும் ஸ்ரீ நாரதரையே நானும் எப்போதுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனாலேயே என்னால் எப்போதுமே சந்தோஷமாகவே இருக்க முடிகிறது” என்கிறாராம்.

    ”இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது:

    பகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்.


    அந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்”

    அழகான வார்த்தைகள்.

    ReplyDelete
  17. சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு நான் படித்த பள்ளி வளாகத்திற்குள் என் மனைவியுடன் நுழையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் ஓர் மகிழ்ச்சி.//

    மனைவியுடன் நீங்கள் படித்த பள்ளிக்கு சென்றது அருமை.

    விசாகா ஹரியின் உபன்யாசத்தை கேட்டு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி சார்.
    உங்களுக்கு அந்த பேனா நீங்காத நினைவுகளை எப்போதும் நினைவு படுத்தும்.

    நீங்கள் சொன்ன கதைகள் அருமை.

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு....

    நல்ல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  19. சூப்பர் பதிவு சார்..எவ்வளவு தடவை வேண்டுமானாலும் விசாகா ஹரி கதையை கேட்டுக் கொண்டே இருக்கலாம்..அலுப்பே இருக்காது..தங்கள் பதிவு போல்!

    ReplyDelete
  20. பார்த்தீர்களா,ஆன்மீகப்பதிவுகள் தரும் திருமதி ராஜ ராஜேச்வரி அவர்கள் தக்க சமயத்தில் நிகழ்ச்சியைப் பற்றி தெரிவித்திருப்பதை! "அவர்களுக்கும்" ஒரு நன்றி.

    ReplyDelete
  21. amaithi cchaaral to me
    show details 22:46 (1 hour ago)

    உங்க தளத்துல பின்னூட்ட முடியலை. அதான் மெயிலிட்டேன்.

    நாங்களும் நேர்ல கலந்துக்கிட்ட உணர்வைத்தந்த பதிவு.. அருமை.

    ReplyDelete
  22. தற்பொழுது இருக்கும் காலத்தில் ஒரு குழந்தைக்கு இம்மாதிரி சந்தேகம் கேட்கத் தோன்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
    உபன்யாசக் கதைகளை அழகாக தொகுத்து தந்தமைக்கு தங்களுக்கும் அதற்கு வழி வகுத்துத் தந்த இராஜராஜேஸ்வரி மேடத்திற்கும் மிக்க நன்றிகள்

    தங்கள் பதிவுகளிலேயே என் மனம் கவர்ந்த பதிவாக இதை நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  23. உங்கள் அனுபவத்தினை சுவைபடக் கூறியுள்ளீய்ர்கள். அந்தப் பேனாவினைப் பத்திரப்படுத்தியதின் மூலம் திருமதி விசாகா ஹரி அவர்கள் மீதுள்ள உங்கள் பிரியம் புலப்படுகிறது. பள்ளியின் பழையகால நினைவுகள், மரம் வெட்டும் ஜோக் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  24. நானும் இவரின் கதாகலாட்சேபம் நேரில் கேட்கனும் என்று தான் ஆசை. ஆனால் இதுவரைக்கும் சான்ஸ் கிடைக்கல்லை. என் மாமியாரும், அம்மாவும், மற்றும் என் குரு எல்லாருமே சொல்ல கேட்டிருக்கேன். அவ்வளவு அருமை என்று. நான் அடுத்த தடவை வரும்போது சீடியாவது வாங்கிகேட்கனு. உங்க பதிவு வழி நல்லா நேரில் கேட்பது போல் அவ்வளவு அழகாக எழுதியிருக்கிங்க. நன்றி.

    ReplyDelete
  25. ஒன்றை இழந்து தானே மற்றொன்றைப்பெற வேண்டியதாக உள்ளது!

    உண்மைதான்!

    நேரில் சென்று பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு!

    சிறுமியின் கேள்வியும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலும் மிக அருமை!

    நல்ல பதிவுக்கு நன்றி!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  26. நிகழ்ச்சிகளை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. Than petra inbam evvaiyagam perka....
    Aha nice post sir, Eventhough we were not attented the function, felt like participated. Your writing make us think like that.
    My favourite words:
    தேநீர் அருந்திய உடன் காகிதக்கோப்பைகளைப் போட ஆங்காங்கே மிகப்பெரிய புத்தம் புதிய குப்பைத்தொட்டிகள், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன.


    தேநீர் அருந்திய பின் காகிதக் கோப்பைகளை ஆங்காங்கே தரையில் தயவுசெய்து விட்டெறிந்து விடாதீர்கள் என மைக்கில் அறிவிப்பும் செய்தார்கள். அனைவரும் அதை அழகாகப் பின்பற்றியது எனக்கே மிகவும் அதிசயமாக இருந்தது.
    viji

    ReplyDelete
  28. இந்த SVANUBHAVA பற்றிய என் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து,அழகான பல்வேறு கருத்துக்களைக்கூறி, உற்சாகப் படுத்தியுள்ள

    திருமதிகள்:
    ===========
    01. மனோ சுவாமிநாதன் அவர்கள்
    02. கோவை2தில்லி அவர்கள்
    03. ஸாதிகா அவர்கள்
    04. விஜி அவர்கள்
    05. லக்ஷ்மி அவர்கள்
    06. ஷக்தி ப்ரபா அவர்கள்
    07. சந்திரவம்சம் அவர்கள்
    08. மீரா அவர்கள்
    09. கோமதி அரசு அவர்கள்
    10. இராஜராஜேஸ்வரி அவர்கள்
    11. ஷைலஜா அவர்கள்
    12. சந்திரகெளரி அவர்கள்
    13, உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
    14. ராஜி அவர்கள்
    15. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
    16. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
    17..அமைதிச்சாரல் அவர்கள்
    18. Vijis kitchen creations அவர்கள்

    திருவாளர்கள்:
    =============
    01. ஆனந்த் அவர்கள்
    02. ஜீவி ஐயா அவர்கள்
    03. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்
    04. சென்னை பித்தன் ஐயா அவர்கள்
    05. ரிஷபன் சார் அவர்கள்
    06. வெங்கட் நாகராஜ் அவர்கள்
    07. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
    08. மணக்கால் M J Raman Sir அவர்கள்
    09. ரமணி சார் அவர்கள்
    10. கே.ஜி. கெளதமன் சார் அவர்கள்
    11. அன்பின் சீனா ஐயா அவர்கள்
    12. G கணேஷ் அவர்கள்
    13. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கள்
    14. விச்சு அவர்கள்
    15. ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்
    vgk

    ReplyDelete
  29. "நான் எப்போது ஸ்ரீ கிருஷ்ணனையே நினைத்து ஜபித்துக்கொண்டிருக்கிறேன்; அதனால் தான், அவனால் தான், அவனைப்போலவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கூட ஜாலியாக என்னால் இருக்க முடிகிறது;
    "

    இதைத் தாண்டி என்ன புராணம் இருக்கிறது...அனைத்தையும் விழுங்கிய வரிகள் இவை.

    விசாகா அவர்களுக்கு பணிவான வணக்கம். எழுதிய உங்களுக்கும் மிக்க நன்றி.....

    ReplyDelete
  30. ஆஹா! ஹரிகதை சொல்லவும் அதிலேயே திளைக்கவும் எனக்கும் மிக மிக ஆசை. இப்பிறவியில் குடுப்பினை இல்லையென்றே எண்ணுகிறேன்......

    ReplyDelete
  31. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  32. Rathnavel Natarajan said...
    //அருமையான பதிவு.
    நன்றி ஐயா.//


    தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் மகிழ்வளித்தன. மிக்க நன்றி, ஐயா.

    ReplyDelete
  33. அருமையான புராணக்கதையும், கலைவாணி சரஸ்வதி தேவியார் - யார் என்பதையும் அறிந்தேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் March 14, 2013 at 11:00 PM

      வாருங்கள், வணக்கம்.

      //அருமையான புராணக்கதையும், கலைவாணி சரஸ்வதி தேவியார் - யார் என்பதையும் அறிந்தேன் ஐயா.//..

      தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் மகிழ்வளித்தன. மிக்க நன்றி, சார்.

      Delete
  34. இரண்டு பகுதிகளையும் நிதானமாக படித்தேன் சார். நான் ஒரு சில மாதங்கள் பதிவுலகின் பக்கம் வராமல் இருந்ததால் இந்த பதிவுகளை இப்பொழுதுதான் படித்தேன். அற்புதமாக இருக்கு. ஏகாதசி விரதம் பற்றிய தகவ்ல்கள் அனைத்தும் அருமை.

    திருமதி விசாகா ஹரி அவர்களின் ஹரி கதை காலட்ஷேபம் மிக அருமையாக இருக்கும். சம்யம் கிடைக்கும் போதேல்லாம் நான் கேடு ரசிப்பேன்.

    திருமதி விசாகா ஹரி அவர்களின் சித்தி (அவர் அம்மாவின் தங்கை---திருமதி சித்ரா பில்வம்) அவர்களிடம்தான் என்னுடைய பெரிய பெண் பாட்டு கற்றுக்கொள்கிறாள். அவரும் மிக நன்றாக பாடுவார்.

    மிகவும் அற்புதமான பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. RAMVI March 15, 2013 at 12:06 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இரண்டு பகுதிகளையும் நிதானமாக படித்தேன் சார். நான் ஒரு சில மாதங்கள் பதிவுலகின் பக்கம் வராமல் இருந்ததால் இந்த பதிவுகளை இப்பொழுதுதான் படித்தேன். அற்புதமாக இருக்கு. ஏகாதசி விரதம் பற்றிய தகவ்ல்கள் அனைத்தும் அருமை.//

      மிக்க மகிழ்ச்சி.

      //திருமதி விசாகா ஹரி அவர்களின் ஹரி கதை காலட்ஷேபம் மிக அருமையாக இருக்கும். சம்யம் கிடைக்கும் போதேல்லாம் நான் கேட்டு ரசிப்பேன்.//

      மிகவும் சந்தோஷம்.

      //திருமதி விசாகா ஹரி அவர்களின் சித்தி (அவர் அம்மாவின் தங்கை---திருமதி சித்ரா பில்வம்) அவர்களிடம்தான் என்னுடைய பெரிய பெண் பாட்டு கற்றுக்கொள்கிறாள். அவரும் மிக நன்றாக பாடுவார்.//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //மிகவும் அற்புதமான பதிவுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டதற்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  35. திருமதி விசாகா ஹரி அவர்கள் சொன்ன கதைகள் இரண்டுமே அருமை. வாழ்க்கையின் எந்த நிலையிலும் பணிவும் நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பைத் தக்கவைக்கும் என்று உணர்த்திய கதைகள். தாங்கள் ரசித்தவற்றை நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி வை.கோ.சார். கலைமகள் கைப்பட்ட எழுதுகோல் பற்றி அறியவந்து பல புதிய விஷயங்கள் அறிந்து திரும்புகிறேன். நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. கீதமஞ்சரி April 10, 2013 at 3:38 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //திருமதி விசாகா ஹரி அவர்கள் சொன்ன கதைகள் இரண்டுமே அருமை. வாழ்க்கையின் எந்த நிலையிலும் பணிவும் நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பைத் தக்கவைக்கும் என்று உணர்த்திய கதைகள். தாங்கள் ரசித்தவற்றை நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி வை.கோ.சார்.//

      மிகவும் சந்தோஷம் மேடம்.

      //கலைமகள் கைப்பட்ட எழுதுகோல் பற்றி அறியவந்து பல புதிய விஷயங்கள் அறிந்து திரும்புகிறேன். நன்றி சார்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      Delete
  36. திருமதி விசாகா ஹரியிடம் அந்த சின்னப் பெண் கீட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் ரொம்ப நிறைவா இருந்தது

    ReplyDelete
  37. அந்த மிகச்சிறிய நேரத்தை நான், எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டு போட்டோக்கள் எடுத்து விட்டேன். //

    அதுல நீங்க மன்னராச்சே.

    ReplyDelete
  38. உனக்கு விஷயமே தெரியாதா? அடுத்த வாரம், அடுத்த ஊரில் நடைபெறவுள்ள மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, அமைச்சர் அவர்கள் இதே பாதையில் தான் வர இருக்கிறார். அவர் வந்துபோகும் சமயம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பாதையை அகலப்படுத்தவே, இங்குள்ள மரங்களை இப்போது வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.//

    சிரிக்கவும் வைக்கிறது, சிந்திக்கவும் வைக்கிறது.

    GLOBAL WARMINGக்கு நாம் தானே காரணம்.

    ReplyDelete
  39. அந்த அம்மா மிக பிரபலமானவங்களா இருந்தா காட்டியும் அந்த குட்டி பொட்டபுளாளையும் மதிச்சு பேசினாங்களே. பெரியவங்க எப்பத்திகுமே பெரிவங்கதா

    ReplyDelete
    Replies
    1. :) ஆமாம். குட்டி பொட்டப்புள்ளையாகிய நம் முருகுவும் இதைச் சரியாகப் புரிந்து சொல்லியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி :)

      Delete
    2. நாரதரோ ஸ்ரீகிருஷ்ணரை கைகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணரோ நாரதரையே கைகாட்டுகிறார்.... விசா ஹா ஹரி யிடம் சின்னப்பெண் கேட்ட கேள்வியையும் மதித்து அவர்கள் பதில் சொன்ன விதம் அழகு.

      Delete
  40. நல்ல குணங்களுடனும், நல்ல தூய்மையான மனதுடனும், நல்ல செயல்களையே ஒருவன் தொடர்ந்து செய்து வருவானேயானால், அவனுக்கு எந்த பயமும் இருக்காது. அவன் தான் மிகவும் ஜாலியாக இருக்க முடியும்.// முற்றிலும் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு செய்திதான்!!!

    ReplyDelete
  41. பகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்.


    அந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்” // இதைத்தான் அன்புக்கு நான் அடிமை..என்று வாத்தியார் பாடினாரோ...அன்புக்கு அடிமையாவதிலிருந்து ஆண்டவனாலும் விலகமுடியாது போலும்.

    ReplyDelete